தலையங்கம்: வாளாவிருக்கிறோமே, ஏன்?
First Published : 17 Jun 2009 02:23:00 AM IST
Last Updated : 17 Jun 2009 02:29:19 AM IST
உலகமயமாக்கலின் பயனை இப்போதுதான் இந்தியா மெல்ல மெல்ல அனுபவிக்கத் தொடங்கி இருக்கிறது. இத்தனை காலமும் பன்னாட்டு நிறுவனங்களால் இந்தியா சுரண்டப்பட்டது போக, இப்போதுதான் இந்திய நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களாக மாறி, உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி இருக்கின்றன. இந்தியாவின் நியாயமான வளர்ச்சிக்கு என்னவெல்லாம் தடைகளை ஏற்படுத்த முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருக்கின்றன ஏனைய வளர்ச்சி அடைந்த நாடுகள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், சீனா ஒரு கீழ்த்தரமான சதியில் இறங்கி இருக்கிறது என்பதைப் பார்த்தால், எந்த அளவுக்கு நம்மை மறைமுக எதிர்ப்பும், சதியும் சூழ்ந்து கொண்டிருக்கிறது என்று தெரிகிறது. ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் இந்தியாவைத் தனிமைப்படுத்தவும், சிறுமைப் படுத்தவும் சீனா தயாராக இருக்கிறது என்பது இப்போது தெளிவாகி இருக்கிறது.
சமீபகாலமாக, இந்தியா மருந்து உற்பத்தியில் உலக அரங்கில் தடம் பதித்து வருகிறது. குறிப்பாக, பல ஆப்பிரிக்க நாடுகள் இந்தியாவிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்கின்றன. முன்பு அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் சந்தையாக இருந்த ஆப்பிரிக்கா கண்டத்தில், இப்போது இந்திய மருந்துகளுக்குத்தான் முன்னுரிமை தருகிறார்கள். குறிப்பாக, ஆப்பிரிக்காவிலுள்ள பல அரசுகள் பொது மருத்துவமனைகளுக்கான மருந்துகளை இந்தியாவிடமிருந்துதான் வாங்குகின்றன.
நைஜீரியாவில் விற்பனைக்காக இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளை சுங்க இலாகாவினர் சோதனையிட்டபோது அவை அத்தனையும் போலி மருந்துகள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மருந்துகளில் "இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை' என்று அச்சிடவும் பட்டிருந்தன. இந்தியாவிலிருந்து போலி மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்கிற சந்தேகம் எழுந்ததில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?
சோதனைக்குப் பிறகு தெரியவந்த அதிர்ச்சி தரும் விஷயம் என்ன தெரியுமா? அந்த மருந்துகள் அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டு, சீனாவிலிருந்து நைஜீரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. வேண்டுமென்றே அந்தப் போலி மருந்துகளில் "இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை' என்கிற வாசகத்தையும் அச்சிட்டிருக்கிறார்கள். சீனா ஒரு சுதந்திர நாடல்ல. அந்த அரசாங்கத்தின் பார்வையில் இருந்து சிறு துரும்புகூடத் தப்பிக்க முடியாது என்பது உலகறிந்த ரகசியம். வேண்டுமென்றே, இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதற்காகவே, சீன அரசின் அனுமதியுடன் இப்படிப் போலி மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று நம்புவதற்கு இடமுண்டு.
நல்லவேளையாக, சுங்க அதிகாரிகளின் பார்வையில் இந்தப் போலி மருந்துகள் பட்டதால் ஒரு மிகப்பெரிய பேராபத்து தவிர்க்கப்பட்டது எனலாம். சுமார் 6,42,000 பேருக்கு விநியோகம் செய்யப்பட இருந்த மலேரியா தடுப்பு மருந்துதான் போலி என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக நடந்த விசாரணையில் இன்னொரு அதிர்ச்சியும் வெளியாகி இருக்கிறது. நைஜீரியாவில் விற்பனையாகும் மருந்துகளில் மூன்றில் ஒன்று போலி என்பதும், அவை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை என்பதும், அந்த மருந்துகளில் "இந்தியாவில் தயாரிக்கப்பட்டது' என்கிற முத்திரை அச்சிடப் பட்டிருக்கிறது என்பதும்தான்.
நைஜீரியாவில் போலி மருந்துகள் பிடிக்கப்பட்டிருக்கின்றன. ஏனைய ஆப்பிரிக்க நாடுகளில் இதுபோன்று எத்தனை காலமாக, எத்தனை கோடி மருந்துகள் சீனாவால் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதை யாரறிவார்? நல்லவேளையாக, சீனாவின் இந்தக் கபட நாடகம் வெளிப்பட்டுவிட்டது. இல்லையென்றால், போலி மருந்துகளால் ஏற்படும் ஆபத்துக்கு இந்தியாவைப் பொறுப்பாக்கி உலக அரங்கில் இந்திய மருந்துகள் என்றாலே போலி மருந்துகள் என்று அவப் பெயர் ஏற்பட்டிருக்குமே!
இத்தனை நடந்திருக்கிறது, நமது வணிக அமைச்சகமோ, வெளியுறவுத் துறையோ எதுவும் பேசக் காணோமே! சீனாவுக்கு எதிராக இந்த ஒரு விஷயத்தை வைத்தே நாம் உலகச் சந்தையில் பிரசாரத்தை முடுக்கி விட்டிருக்க வேண்டாமா? குறைந்தபட்சம், சீனாவுக்குக் கண்டனம் தெரிவிக்கலாமே. ஐக்கிய நாடுகள் சபையில் நியாயம் கேட்கலாமே.
ஒருபுறம், அருணாசலப் பிரதேசம் எங்களுடையது என்கிறது சீனா. இன்னொரு புறம், இலங்கையுடன் கைகோர்த்து இந்துமகா சமுத்திரத்தில் இந்தியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. இதெல்லாம் போதாதென்று, நேபாளத்தில் தனது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ள ஆவன செய்கிறது. உலக அரங்கில், எந்தத் துறையை எடுத்தாலும் இந்தியாவுக்கு மிகப்பெரிய போட்டியாக எதிரே நிற்பது சீனாதான்.
"இந்தி-சீனி பாய் பாய்...' கோஷம் எங்கே கொண்டு வந்து நிறுத்தியது என்பது நமக்குத் தெரியும். சரித்திரத்திலிருந்து பாடம் படிக்காதவர்களை என்னவென்று சொல்வது? நாம் சீனாவுக்குப் பயப்படுகிறோமா, அடிபணிகிறோமா? இந்தியாவுக்குக் களங்கம் கற்பிக்கும் முயற்சி நடக்கிறது. இதை நமது அரசும் வேடிக்கை பார்க்கிறது. அதுதான் ஏன் என்று புரியவில்லை!
Copyright(c) Dinamani.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment