Wednesday, 25 March 2009

பாகிஸ்தான் பற்றிய தொடர் (23)

****************
29 March 2009
****************
தொடங்கியது திருவிழா!

பேசாமல் சண்டைக்காரன் காலில் விழுந்துவிட வேண்டியது தான். தீவிர யோசனைக்குப் பிறகு முடிவெடுத்துவிட்டார் முஷ்ரப். எதிர்ப் பதற்கே பிறப்பெடுத்த கட்சிகள் எல்லாம் ஒருங்கிணைந்து நிற்கின்றன. அவர்களைப் பகைத்துக்கொண்டு சாதிக்கப்போவது ஒன்றுமில்லை. மாறாகக் கொஞ்சம் இறங்கிவந்து அடங்கிப் போகலாம். ஒரு கல் விட்டுப்பார்க்கலாம் என்று நினைத்தார்.

'முட்டாஹிடா மஜிலிஸ் இ அமல்' என்ற எதிர்க்கட்சிகள் கூட்டமைப்புத்தான் முஷ்ரப்புக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தது. அந்த அமைப்பின் முக்கியஸ்தர்களிடம் பேசினார் முஷ்ரப்.

'அய்யா, எனக்கும் இரண்டு பதவிகளில் இருப்பது சிரமமாகத்தான் இருக்கிறது. விரைவில் ராணுவ உடைகளைக் கழற்றி விடவே ஆசைப்படுகிறேன். அதற்குக் கொஞ்சம் கால அவகாசம் தேவை. அதிகமில்லை. வரும் 2004-ல் கண்டிப்பாக ராணுவப் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன். அதிபர் என்ற ஒற்றைப் பதவியில் மட்டுமே நீடிக்க விரும்புகிறேன். என்ன ஒன்று... அதிகாரபூர்வமான அதிபராகச் செயல்பட விரும்புகிறேன். அதற்கு நீங்கள் எல்லோரும் ஒத்துழைத்தால் நன்றாக இருக்கும்!'

ஆனானப்பட்ட அதிபரே அடங்கி ஒடுங்கிக் கேட்கும்போது, அலட்சியம் செய்யமுடியுமா? தலையசைத்துவிட்டனர். எதிர்க்கட்சிகளுடன் நயமாகப் பேசி, நாசூக்காகப் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் அது. ஜென்டில்மேன் அக்ரிமென்ட் என்று சொல்லலாம். நாளைக்கே முஷ்ரப் மனம் மாறிவிட்டால், ஒருவரும் வாய் திறந்து கேட்க முடியாது. எதிர்க்கட்சிகளின் பரிபூரண சம்மதம் முஷ்ரப்புக்குக் கிடைத்தது.

உடனடியாகத் தேர்தலை அறிவித்தார். அதிபர் பதவிக்கான தேர்தல். எலக்டோரல் காலேஜ் வாக்குகள் என்று சொல்லப்படும் மொத்தமுள்ள 1,170 வாக்குகளில் 658 வாக்குகள் முஷ்ரப்புக்குக் கிடைத்தன. வெற்றி. அபாரமான வெற்றி. இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு என்னை யாரும் தொட்டுக் கூடப் பார்க்க முடியாது. துள்ளிக் குதிக்கவேண்டும் போலஇருந்தது.

உற்சாகத்தை அடக்கியபடியே அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்தார். ஆம், தன்னுடைய கண்ணசைவுக்கு ஏற்ப பிரதமராகப் பணியாற்றிக்கொண்டிருந்த ஜஃபருல்லா கான் ஜமாலிக்கு பதிலாக, சௌகத் அஜீஸ் பிரதமரானார். சந்தேக புத்தி என்பது முஷ்ரப்பின் பூர்வகுணம். கையில் ரேகைகள் இருக்கிறதா இல்லையா என்பதைக் கூட அடிக்கடி உற்றுப்பார்த்து ஊர்ஜிதம் செய்யக் கூடியவர். ஆனால், பிரதமர் மாற்றத்துக்குக் காரணம் உள்கட்சிக் குழப்பம் என்று செய்தி வெளியானது. உண்மையில் இது முஷ்ரப்பின் கைங்கர்யம் என்று அரசியல் வட்டத்தில் நமட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்டனர்.

இதுபோன்ற பொரணிகளை எல்லாம் லட்சியம் செய்யும் பழக்கமே முஷ்ரப்புக்கு கிடையாது. துளியும் அசராமல் அடுத்த அஸ்திரத்தை எடுத்தார். முன்பே தயார் செய்து வைத்திருந்த அஸ் திரம். நாட்டின் அதிபரே ராணுவத்துக்கும் தளபதியாகச் செயல்பட முடியும் என்ற சட்டம் அமலுக்கு வந்தது.

கிராபிக்ஸில் தங்களுடைய மூக்கு கழன்று விழுந்தது போல இருந்தது எதிர்க்கட்சி ஆசாமிகளுக்கு. காதிலும் பந்து பந்தாகப் பூ! நம்ப வைத்து நடுமுதுகில் குத்தியிருந்தார் முஷ்ரப். இனிமேல் நான்கு ஆண்டுகள் யாரும் எவரும் என்னை ஆட்ட முடியாது; அசைக்க முடியாது. குறைந்தபட்சம் அருகில் கூட நெருங்க முடியாது.

தங்கள் பிதாமகர் உச்சாணிக்கொம்பில் இருக்கிறார். ஆபத்து நம்மை நெருங்கினால் நமக்கு ஒன்றுமில்லை. ஆபத்துக்குத்தான் சிக்கல் என்று நினைத்தனர் முஷ்ரப்பின் சிஷ்யகோடிகள். துணிச்சலாக ஊழல் குளத்தில் மூழ்கி முத்தெடுக்கத் தொடங் கினர். இன்ன துறை என்று இலக்கு வைத்துக்கொள்ளவில்லை. எல்லாம்... எல்லாம் நமக்கே என்று கும்மாளம் போட்டனர். எல்லாத் துறைகளிலும் ஊழல் பிசாசு ருத்ர தாண்டவம்ஆடியது.
பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் ஊழல் செய்யும் விஷயம் ஒன்றும் பாகிஸ்தான் மக்களுக்குப் புதிய விஷயமில்லை. புட்டோ காலத்திலும் ஊழல் இருந்தது. அவருக்கு முன்பும் இருந்தது. அவரின் மகள் காலத்திலும் ஊழல் இருந்தது. ஆனால், இப்போது அதைப் பற்றிப் பேச... தோண்டித் துருவ ஊடகங்கள் மிகுதியாகிவிட்டதுதான் பிரச்னை.

'டிரான்ஸ்ஃபரன்சி இன்டர்நேஷனல்' என்ற நிறுவனம், அரசியல்வாதி அல்லது ஆட்சியாளர் எங்கே சோரம் போவார் என்று எல்லா இடங்களிலும் தங்களுடைய கேமரா கண்களைப் பொருத்தி வைத்திருக்கும் நிறுவனம். இங்கே டெஹல்கா இருக்கிறது இல்லையா... அதைப் போல. ஊழல் வாடை ஊரையே நாறடித்துக்கொண்டிருந்தது. அப்புறமென்ன... டிரான்ஸ்ஃபரன்ஸி இன்டர்நேஷனல் வரிந்து கட்டிக்கொண்டு சர்வேயில் இறங்கியது.
முஷ்ரப்பின் ஆட்சிக்கும் பிராக்ரஸ் ரிப்போர்ட் தயார் செய்வதுதான் அதன் அஜெண்டா. பொத்திப் பொத்தி வைத்திருந்த கோபம், அதிருப்தி, வெறுப்பு என்ற அனைத்து உணர்ச்சிகளையும் அந்த நிறுவனத்திடம் கொட்டித் தீர்த்துவிட்டனர் பொதுமக்கள். எதிர்க்கட்சிகளைக் காட்டிலும் முஷ்ரப்பை முழுமையாகப் புரிந்து வைத்திருந்தவர்கள் பொதுமக்கள்தான் என்பது அந்த ஆய்வில் அம்பலமானது.

ஆய்வு முடிவுகளை பகிரங்கமாக அரங்கேற்றம் செய்தது அந்த நிறுவனம். பற்றிக்கொண்டது நெருப்பு. எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு அலை. 'முஷ்ரப் ஒழிக... முஷ்ரப் ஒழிக!' நெருக்கடி முற்றியது. என்ன செய்யப்போகிறார் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த சமயத்தில், நிதானம் கலையாமல் இருந்தார் முஷ்ரப். நான் எடுத்துவைக்கும் அடுத்த அடி அத்தனை பேரையும் கதிகலங்கச் செய்யவேண்டும். இதுதான் முஷ்ரப்பின் அப்போதைய ஒரே சிந்தனை.

யாருமே கைவைக்க யோசிக்கும் ஒரு துறையில் கை வைத்தார். ஆம், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த இஃப்திகார் முகமது சௌத்ரியைக் தற்காலிகப் பதவி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். எதற்கு நீதிபதியை வம்புக்கு இழுக்கவேண்டும்? பெரிய இடத்துப் பொல்லாப்பு எதற்கு? விநாச காலே விபரீத புத்தி என்று நினைத்துக்கொண்டனர் பொதுமக்கள்.

அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். ஆனால், யதார்த்தம் சிக்கலானது. முஷ்ரப்பின் ஊழல் அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நீதிபதி இஃப்திகார் ரகசிய ஆலோசனை செய்வதாகத் தகவல் ஒன்று அதிபருக்கு காற்றுவாக்கில் காதில் விழுந்தது. பழைய குப்பைகளைக் கிளறி எடுப்பதில் மனிதர் கில்லாடி என்ற விஷயம் தெரிந்ததும் விறுவிறுத்துப் போனது முஷ்ரப்புக்கு. இதுதான் பதவி நீக்கம் குறித்து அவரைச் சிந்திக்க வைத்தது.

கொஞ்சமும் தாமதிக்காமல்உத்தரவு பிறப்பித்தார். இது நடந்தது மார்ச் 9, 2007. அவ்வளவுதான். 'நீதி செத்துவிட்டதே!' என்று நீதிபதி பதவி நீக்கத்துக்கு எதிராக வழக்க றிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விஷயம் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. வழக்கு. விசாரணை. பதவிநீக்கம் செய்யப் பட்ட நான்காவது மாதத்தில் 'தற்காலிகப் பணிநீக்கம் செல்லாது!' என்று தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம்.

கண்கள் சிவந்துவிட்டன முஷ்ரப்புக்கு. 'ஓஹோ, அத்தனை பெரிய ஆசாமியா அவர். பிழைத்துப் போகட்டும். கொஞ்சம் விட்டுபிடிக்கலாம்!' என்று தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டார். இந்த சமயத்தில்தான் வெளிநாடுகளில் வசித்துவந்த பெனாசிர் புட்டோ மீண்டும் நாடு திரும்பும் ஆசையை வெளிப்படுத்தினார். அதன்படியே அக்டோபர் 18, 2007 அன்று பாகிஸ்தான் வந்திறங்கினார். தேர்தல் நடக்கும் என்பதற் கான சாத்தியக்கூறுகள் கண்ணுக்குப் புலப்படவே... அம்மையாருக்கு அரசியல் ஆர்வம் மீண்டும் துளிர்த்திருந்தது.

தேர்தலில் முஷ்ரப் போட்டியிடுவார் என்ற செய்திகள் காட்டுத் தீயாகப் பரவின. கொதித்து எழுந்துவிட்டனர் வழக்கறிஞர்கள். யார் வேண்டுமானாலும் போட்டியிடட்டும். ஆனால் முஷ்ரப் மட்டும் கூடாது. போட்டியிட்டால், அவரை எதிர்த்து வாஜாஹ§த்தீன் என்ற மூத்த சட்டமேதை தேர்தலில் நிற்பார் என்று மிரட்டினார்கள். கொஞ்சம் செல்வாக்குள்ள மனிதர். ஆனால், முஷ்ரப் எதற்கும் கவலைப்படவில்லை. 'தாராளமாக நில்லுங்கள்!' என்று சொல்லிவிட்டார்..
வெறுமனே மிரட்டலோடு வழக்கறிஞர் கள் நிறுத்திக்கொள்ளவில்லை. சொன்ன படியே வாஜாஹ§த்தீனை தேர்தல் களத்துக்குக் கொண்டுவந்தனர். மொத்த வாக்குகள் 1,170. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தேர்தலைப் புறக்கணிக்க, முஷ்ரப்புக்கும் வாஜாஹ§த்தீனுக்கும் நேரடிப் போட்டி. புன்னகை தும்பிய முகத்துடன் தேர்தலைச் சந்தித்தார் முஷ்ரப். புன்னகைக்கான அர்த்தம் தேர்தல் முடிவுகளில் தெரிந்தது.

மொத்தம் பதிவான வாக்குகள் 685. அவற்றில் வாஜாஹ§த்தினுக்கு ஏழு. செல்லாத வாக்குகள் ஏழு. மீதமுள்ள அனைத்தும் முஷ்ரப்புக்கே. அதை அறிவிக்கவேண்டியது மட்டும்தான். பாக்கி. இங்குதான் பிரச்னை ஆரம்பித்தது. முடிவு சொல்லவேண்டிய உச்ச நீதிமன்றம் அசையாமல் நின்றது. எல்லோரும் நீதிமன்றத்தை நோக்கியே தங்களது பார்வையை வைத்திருந்தனர். காரணம், நீதிமன்ற உத்தரவுப்படிதான் தேர்தல் நடைபெற்றது. ஆகவே, தேர்தல் முடிவையும் நீதிமன்றம்தான் அறிவிக்க முடியும்.
காத்திருந்து... காத்திருந்து... காலங்கள் கழிந்தது. வெறுப்பாக இருந்தது முஷ்ரப்புக்கு. இடைப்பட்ட காலத்தில் வெளிநாடுகளில் வசித்துவந்த நவாஸ் ஷெரீஃப் மற்றும் பெனாசிர் புட்டோ இருவருக்கும் தாய்நாட்டுப் பாசம் பீறிட்டுக்கொண்டு வந்தது. நவாஸ் வருவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று கூறிவிடவே, அவர் பாகிஸ்தான் வந்தார். ஆனால், அவரை விமானத்தில் இருந்து கீழே இறக்காமலேயே திருப்பி அனுப்பிவிட்டது முஷ்ரப் அரசு.

நவாஸைத் திருப்பினால் என்ன? நான் போவேன் என்று அடம்பிடித்துக்கொண்டு பாகிஸ்தான் வந்தார் பெனாசிர் புட்டோ. வந்திறங்கிய தினமே ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. பயங்கரமான சமிக்ஞை என்றாலும் கூட துளியும் அலட்டிக்கொள்ளவில்லை பெனாசிர். புட்டோவின் மகள் அல்லவா... அவ்வப்போது மக்களை சந்தித்துக் கொண்டிருந்தார்.

காத்திருந்த முஷ்ரப்புக்கு பதிலளித்த நீதிமன்றம், 'இப்போதைக்கு முடிவை அறிவிக்கும் உத்தேசம் இல்லை. 2008-ல் நடக்கவிருக்கும் தேர்தலுக்கான முடிவை வெளியிடும்போதே இதையும் அறிவித்து விடுகிறோம்!' என்றது.
'ஓ, அதுதானே விஷயம். எதற்கு வீணாக மௌனம்? இனி நீங்கள் எதுவும் செய்யவேண்டாம். என்னுடைய நடவடிக்கைகளைக் கொஞ்சம் தள்ளி நின்று வேடிக்கை பாருங்கள்!' என்றுசொல்லி விட்டார் முஷ்ரப். அடடா, உடுக்கை சத்தம் கேட்கிறதே என்று எல்லோருமே பரபரத்தனர். அதற்குள் திருவிழா தொடங்கிவிட்டது.

பாகிஸ்தான் பற்றிய தொடர் (22)

******************

25 March 2009

*****************


நடுவானில் நடந்த நாடகம்!


துணிச்சல்கார மனிதர்என்பது தான் முஷ்ரப் மீது நவாஸ் ஷெரீஃபுக்கு ஈர்ப்பு ஏற்படக் காரணம். 1998-ல் ராணுவத் தளப தியாக இருந்தவர் ஜெனரல் ஜஹாங்கீர் கராமத். ஏனோ நவாஸ§க்கு கராமத் தின் சகவாசம் பிடிக்கவில்லை. அவரு டைய இடத்துக்குப் புதிய நபரைக் கொண்டுவர விரும்பினார். அப்போது முஷ்ரப் பெயர்தான் அவருக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது. உடனடியாக அவரை வரசொல்லி உத்தரவு போட்டார் நவாஸ்.

பழைய டெல்லியில் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்குப் புலம்பெயர்ந்த
மத்தியதர இஸ்லாமியக் குடும்பத்தைச் சேர்ந்த முஷ்ரப், ராணுவக் காதல் வந்தபோது வெறும் ஜவானாகத்தான் முகாமுக்கு வந்தார். படிப்படியான பதவி உயர்வுகளுக்குப் பாதை வகுத்துக் கொடுத்தவை அவருடைய துணிச்சல், உழைப்பு. முக்கியமாகக் கட்டுப்பாடு. இப்போது ஜெனரல் அந்தஸ்துக்கு வந்திருந்தார் முஷ்ரப்.

தலைமைத் தளபதி கராமத் இருக்கும்போது, பிரதமர் தன்னிடம் பேச என்ன இருக்க முடியும் என்று யோசித்துக்கொண்டே பிரதமர் இல்லம் நோக்கி விரைந்தார் முஷ்ரப். வழியில் அவ்வப்போது வாழ்த்து அழைப்புகள், அவருடைய மொபைல் போனை பிஸியாக வைத்திருந்தன. பிரதமரை பார்ப்பதற்குள் விஷயம் புரிந்துவிட்டது முஷ்ரப்புக்கு.

'கராமத் ராஜினாமா செய்து விட்டார். இனிமேல் நீங்கள்தான் ராணுவத் தலைமைத் தளபதி'.

உள்ளுக்குள் உற்சாகம் நிரம்பி வந்தது. கராமத்துக்கு இன்னும் பதவிக்காலம் முடியவில்லை.தவிரவும், தன்னைவிட சீனியர்கள் பலர் இருக்கின்றனர். இருந்தும் தன்னை உச்சாணிக் கொம்பில் உட்காரவைத்திருக்கிறார் நவாஸ். எத்தனை பெரிய வாய்ப்பு... காற்றில் மிதப்பது போல இருந்தது அவருக்கு. பெருமிதத்தை வெளிக்காட்ட வெட் கமாக இருந்தது. கம்பீரமாக சல்யூட் அடித்து நன்றி சொன்னார் முஷ்ரப்.

பதவி ஏற்று சில மாதங்கள் நகர்ந்தன. திடீர் திடீரென ராணுவ அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். யார் எங்கே எப்போது நியமிக்கப்படுகிறார்கள் என்ற விவரமே முஷ்ரபுக்குத் தெரியவில்லை. சாதாரண லெப்டினன்ட் ஜெனரல் ஒருவர் ஓவர் நைட்டில் உயர்பதவிக்கு வந்தார். குழப்பமாக இருந்தது முஷ்ரபுக்கு.

'எல்லாம் என் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் கைங்கர்யம்தான்'.
நமட்டுச் சிரிப்பு சிரித்தார் நவாஸ். ஆத்திரம் ஆத்திரமாக வந்தது முஷ்ரபுக்கு. நவாஸின் நடவடிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொண்டால் அதைவிட அபத்தம் இருக்க முடியாது. உடனடியாக இதற்கு முடிவு கட்டியாக வேண்டும். தன் அதிருப்தியை நவாஸிடம் நேரடியாகவே வெளிப்படுத்த முடிவு செய்தார்.
'அய்யா, ராணுவத்தில் நீங்கள் செய்யும் காரியங்களில் எனக்குத் துளியும் சம்மதமில்லை!' சொல்லிவிட்டாரே ஒழிய... இரவு முழுக்க நவாஸின் எதிர்வினை குறித்தே சிந்தித்துக் கொண்டிருந்தார். நவாஸின் முகம் கொடூரமாக மாறியது, நினைவை விட்டு அகலவே இல்லை. கோபக்கார மனிதர். என்ன வேண்டுமானாலும் செய்வார். நாம் முந்திக்கொள்ள வேண்டும்.

அப்போது அவருக்குத் தோன்றிய சிந்தனை, போர். காஷ்மீரை மையமாக வைத்து இந்தியாவுக்கு எதிராக ஒரு யுத்தம். ஆனால், நேரடியாக அல்ல... மறைமுகமாக. அதே பழைய டெக்னிக். முதலில் முஜாஹிதீன்கள். பிறகு ராணுவம். கூடவே கூடாது என்று சொல்லிவிட்டார் நவாஸ். காரணம், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இந்திய பிரதமர் வாஜ்பாய், லாகூர் நோக்கிப் பேருந்தில் வந்துகொண்டிருந்தார்.

சரியென்று தலையசைத்துவிட்டுச் சென்ற முஷ்ரப், தீவிரவாதிகளைப் பார்த்துக் கண்ணசைக்க அவர்கள் களத்தில் இறங்கிவிட்டனர். ஊடுருவலாகத் தொடங்கி, அது யுத்தமாக உருவெடுத்த கதையை நாம் இரண்டாவது அத்தியாயத்திலேயே விரிவாகப் பார்த்துவிட்டோம். அமெரிக்காவின் தலையீட்டுக்குப் பிறகு ஒரு வழியாக யுத்தம் முடிவுக்கு வந்தது.
'பிரதமரான எனக்கே தெரியாமல் கார்கில் யுத்தத்தைத் தொடங்கி விட்டார் முஷ்ரப்!' என்று சொன்னார் நவாஸ். பிரதமருக்குத் தெரியாமல் இங்கே எதுவும் நடப்பதில்லை என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார் முஷ்ரப். விளைவு, கார்கில் யுத்தம் இருவருக்கும் இடையே மிகப்பெரிய விரிசலை உருவாக்கியது.

உண்மையில் கார்கில் யுத்தம் பாகிஸ்தானுக்குத் தோல்வியைக் கொடுத்திருந்தாலும், உள்நாட்டில் முஷ்ரப் மீது அபரிமிதமான நம்பிக்கையை உருவாக்கியிருந்தது. நேர்மாறாக நவாஸ் மீது வில்லன் இமேஜ் உருவாகி யிருந்தது.

நச்சு விதைக்கு நீர் பாய்ச்சிவிட்டோமே என்று நொந்துபோன நவாஸ், முஷ்ரபை அடக்கிவைக்கும் காரியத்தில் இறங்கினார். அப்போது வேலை விஷயமாக இலங்கை சென்றிருந்தார் முஷ்ரப். மின்னல் வேகத்தில் காய்களை நகர்த்தினார் நவாஸ். பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதியாக ஜெனரல் ஜியாவுதீனை நியமித்தார். இலங்கையில் காரியம் முடிந்ததும் விமானம் மூலமாக பாகிஸ்தான் திரும்பிக் கொண்டிருந்தார் முஷ்ரப்.

'அய்யா, விமானத்தை இஸ்லாமாபாத்தில் தரையிறக்கக்கூடாது என்று சொல்கிறார்கள், என்ன செய்யலாம்?'

தூக்கிவாரிப் போட்டது முஷ்ரப்புக்கு. பைலட் சொல்வதைத் துளியும் நம்ப முடியவில்லை. முஷ்ரப், அவர் மனைவி உள்ளிட்ட இருநூறு பயணிகள் நடுவானில். அங்கே இறங்கக்கூடாது என்றால் எங்கே இறங்குவது? நவாஸ் புண்ணியத்தில் ஏதோ சதி நடக்கிறது என்பது புரிந்துவிட்டது. சில நிமிடங்களில் கராச்சி கமாண்டர் விமானத் தைத் தொடர்புகொண்டு பேசினார். 'ஒன்றும் பிரச்னையில்லை. இஸ்லாமாபாத்தில் விமானம் இறங்கலாம்.'

எதிரி என்ன நினைப்பார் என்பதை முன்கூட்டியே கணிக்கும் சக்தியை வழங்கிய அல்லாவுக்கு நன்றி சொல்லிக்கொண்டார் முஷ்ரப். ஆம். இலங்கை புறப்படுவதற்கு முன்பே நவாஸின் நடவடிக்கை எப்படி யெல்லாம் இருக்கலாம் என்று ஒரு விதமாக யோசித்துவைத்திருந்தார் முஷ்ரப்.
ராணுவ அதிகாரிகளை அழைத்த அவர், 'நவாஸ் நமக்கு எதிராக ஏதேனும் காய் நகர்த்தினால், உடன டியாக அவரை கைது செய்யுங்கள். ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் சகலமும் வந்துவிட வேண்டும். சகலமும் என்றால் மீடியா, அரசாங்கம் உள்ளிட்ட சகலமும்.'

முஷ்ரப் பதவிநீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக ஜியாவுதீன் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி தொலைக்காட்சிகளில் கசிந்த மறுநொடியே, களத்தில் இறங்கிவிட்டது ராணுவம். தொலைக்காட்சி நிலையம், வானொலி நிலையம், விமான நிலையங்கள். இறுதியாக, நவாஸ் ஷெரீஃபையும் கைது செய்துவிட்டது ராணுவம்.

பத்திரமாகத் தரையிறங்கிய முஷ்ரப், உடனடியாக அதிகாரிகளை அழைத்துப் பேசினார். நள்ளிரவில் வானொலியில் முஷ்ரபின் குரல் ஒலித்தது.
'தேசத்தை அபாயத்திலிருந்து மீட்டெடுக்கும் நோக்கத் துடன் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியிருக்கிறது!'

ஜியாவுக்குப் பிறகு ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்த முஷ்ரப், அடுத்து என்ன செய்வாரோ என்று எல்லோருமே வியர்க்க விறுவிறுக்கப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், மனிதர் தன் எதிரிகளை நசுக்கிப் பார்ப்பதில் ஆர்வம் செலுத்தவில்லை. முதலில் இமேஜ் வளர்க்கும் நடவடிக் கையில் இறங்கினார்.

தலைமை நிர்வாக ஆட்சியாளர் என்ற முறையில் நாட்டில் இருக்கும் அடிப்படைப் பிரச்னைகளில் ஆர்வம் செலுத்தினார். முக்கியமாகப் பொருளாதாரம், வறுமை, கல்வி. 'இந்த மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வேலை செய்யுங்கள்' என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார் முஷ்ரப்.
நவாஸ் ஷெரீஃபால் உச்சத்துக்கு வந்த முஷ்ரப், அவர் பாணியிலேயே மேலும் உச்சத்துக்கு செல்ல விரும்பினார். ஆம். இந்தியாவுடன் சிநேகம் வளர்க்க விரும்பினார். கார்கில் யுத்தத்தின்போது அவர் ராணுவத்தளபதி. அரசியல்வாதி அல்ல. இன்று நிலைமை வேறு. அரசியலில் அந்தஸ்து வேண்டுமானால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். தெளிவான திட்டத்துடன் காய் நகர்த்தினார்.

ஜூலை 14, 2001. ஆக்ராவில் இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த நாள் குறிக்கப்பட்டது. ஆனால், மனிதருக்கு தலைமை ஆட்சியாளராக வந்து இந்தியாவுடன் பேசுவதில் கொஞ்சம் தயக்கம். எல்லாமே என்னுடைய பிடியில். பிறகு எதற்கு தலைமை நிர்வாக ஆட்சியாளர் என்று நீட்டி முழக்கவேண்டும்? இனிமேல் அடியேனே பாகிஸ்தானின் அதிபர் என்று அறிவித்தார்.

அதிபர் என்ற முறையில் ஆக்ராவில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒன்றும் பெரிதாக சாதித்துவிடவில்லை என்றாலும், 'அமைதி விரும்பி' என்பதை எல்லோருக்கும் அறிவிக்கக் கிடைத்த அற்புத வாய்ப்பு அது. பயன்படுத்திக் கொண்டார்.

பேச்சுவார்த்தை முடித்து விட்டு பத்திரமாக பாகிஸ்தான் திரும்பியபோது அங்கே நீதிமன்றம் அறிவித்திருந்த தேர்தல் கெடு தேதி பீதியைக் கொடுத்தது. எப்போதுமே பாகிஸ்தானில் ராணுவம்மூலம் ஆட்சியைப் பிடிப்பவர்களுக்கு தேர்தல் என்றாலே வேப்பங்காய் தான். முஷ்ரபுக்கும் அப்படியே. அதற்காக தேர்தலை அப்படியே வெறுத்து ஒதுக்காமல், என்ன செய்தால் அதைத் தனக்குச் சாதக மாக மாற்றிக்கொள்ள முடியும் என்று சிந்திக்கத் தொடங்கினார்.

முதல் கட்டமாக தன் அதிபர் பதவி சட்டபூர்வமானது என்பதை உலகத்துக்கு அறிவிக்க விரும்பினார். ஒரு மசோதா மூலம் இதை சாத்தியப்படுத்திவிடலாம் என்றார்கள் அடிப்பொடிகள். உடனடியாக மசோதா வாக்கெடுப்புக்கு வந்தது. 'உங்களை அதிபராக ஏற்க முடியாது' என்று முரண்டு பிடித்தனர் நவாஸ§ம் பெனாசிரும். ஆனாலும், வாக்கெடுப்பு நடந்தது. முஷ்ரப் அதிபரானது, அதிகாரபூர்வமாக்கப்பட்டது எல்லாம் ராணுவ மகிமை.

அக்டோபர் 12, 2002. இதுதான் தேர்தலுக்காக நீதிமன்றம் கொடுத்திருந்த தேதி. முஷ்ரபும் தயார். ஆம், அவருடைய பெயரைச் சொல்லிக்கொண்டு ஒரு புதிய கட்சி உருவாகியிருந்தது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (காயிதே அஸம்) என்பதுதான் கட்சியின் பெயர். முஷ்ரப் என்ற மூளைக்கார மனிதரின் மேற்பார்வையில் நடந்த தேர்தலில் அவருக்கே அமோக வெற்றி. தேர்தலின் முடிவில் அதிபர் நாற்காலியில் அமர்ந்தார்.

இனி ஒருவரும் வாய் திறக்கமுடியாது என்று நினைத்தவருக்கு, ஒரு திடீர் கலகக்குரல் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.

'ஒரே நபர் நாட்டின் அதிபராகவும் ராணுவத் தலைமைத் தளபதியாகவும் செயல்பட முடியாது. கூடாது!'

Wednesday, 18 March 2009

பாகிஸ்தான் பற்றிய தொடர் (21)

***************
22 March 2009
***************

பாகிஸ்தானின் பிரம்மாஸ்திரம்!

முப்பத்து சொச்சம் வயது. காந்தம் போல கவர்ந்திழுக்கும் முகம். வசீகரம் நிறைந்த பேச்சு. சுறுசுறுப்புக்குப் பஞ்சமில்லாத நடை. கண்களில் கனவுகள். இவைதான் பாகிஸ்தானில் பெனாசிருக்கு எதிராக உருவாகிக் கொண்டிருந்த அரசியல் வாதியின் அங்க அடையாளங்கள். பெயர் நவாஸ் ஷெரீஃப். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவர். தீவிர தொழிற்சங்கவாதி.
பஞ்சாப் மாகாணத்தில் நவாஸ் ஷெரீஃபுக்கு அபரிமித மான செல்வாக்கு. இவருடைய ஒவ்வொரு நடவடிக்கை யையும் உன்னிப்பாக கவனித்துவந்த ஜியாவுல் ஹக், நவாஸை உச்சாணிக் கொம்பில் உட்கார வைத்து அழகு பார்க்க விரும்பினார்.

1985 ஏப்ரல் மாதத்தில் பஞ்சாப் முதல்வர் பதவியை நவாஸ§க்கு வழங்கி, தன் ஆசையைத் தீர்த்துக்கொண்டார் ஜியா. நம்பிக்கைக்குக் கொஞ்சமும் பங்கம் வராமல் நடந்து கொண்டதால், அரசியல் வாழ்க்கை ஏறுமுகத்திலேயே இருந்தது நவாஸ§க்கு. ஜியாவின் மரணத்துக்குப் பிறகு நடந்த தேர்தலிலும் அவருக்கே பஞ்சாப் முதல்வர் பதவி வந்து சேர்ந்தது. ஆக, 'பஞ்சாப் என்றால் நவாஸ். நவாஸ் என்றால் பஞ்சாப்' என்ற நிலை உருவானது.

மெள்ள மெள்ள அக்கம் பக்கத்து பிராந்தியங்களுக்கும் நவாஸின் புகழ் பரவத் தொடங்கியது. அந்த சமயத்தில் பெனாசிர் புட்டோ அரசு திடீரென கலைக்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானின் சக்திவாய்ந்த அரசியல் கட்சியாக இயங்கிய பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு மிகச்சரியான போட்டியைக் கொடுத்தவர் நவாஸ் ஷெரீஃப் மாத்திரமே. தன்னுடைய ஒட்டுமொத்த சக்தியையும் ஒன்றுதிரட்டிப் பிரசாரத்தில் ஈடுபட்டார்!

அக்டோபர் 24 மற்றும் 27 தேதிகளில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களை அவருடைய கட்சியே கைப்பற்றியது. மியான் முகமது நவாஸ் ஷெரீஃப் என்ற நாற்பது வயது இளைஞர் நவம்பர் 1, 1990 அன்று பாகிஸ்தானின் பிரதமர் நாற்காலியில் அமர்ந்தார். பரவசம். பரம சந்தோஷம். அதே சமயம் நிதானம் அவசியம். உள்ளுக்குள் சொல்லிக் கொண்டார் நவாஸ்.
எந்தவித துர்க்காரியங்களிலும் ஈடுபடா மல் மக்கள் நலப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதுதான் தன்னுடைய அமைச்சர்களுக்கு நவாஸ் கொடுத்த முதல் உத்தரவு. 'பிரச்னை சிறியதாக இருக்கும்போதே, உடனடியாகத் தீர்த்துவிடுங்கள். இல்லாவிட்டால், அதற்கு வால் முளைத்துவிடும். பிறகு அதுவே, நம்முடைய கழுத்தை நெரித்துவிடும்!'என்பார் நவாஸ்.

நிலம் இல்லாமல் விவசாயிகள் தவிக்கிறார்களா, உடனடியாக அவர்களுக்குத் தேவையான நிலத்தைப் பிரித்துக்கொடுங்கள். சாலை வசதி, கழிப்பிட வசதி இல்லை என்று எங்கேயாவது முணுமுணுப்புக் கேட்கிறதா? உடனடியாக ஆட்களை அனுப்பி ஆகவேண்டிய காரியங்களைச் செய்யுங்கள். கரன்ட் பிரச்னை, தண்ணீர் தகராறு என்று எந்தவிதமான குறைபாடும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஒன்றும் பிரச்னை இல்லை. எல்லாம் சுமுகமாகச் செல்கிறது என்ற திருப்தி உணர்வு ஷெரீஃபின் மனத்தை எட்டுவதற்குள் மிகப்பெரிய குழப்பம் வளைகுடா யுத்தம் என்ற பெயரில் வந்து சேர்ந்தது. பாகிஸ்தான் முழுக்க சதாம் ஆதரவு அலை வீசியது. அதாவது, அமெரிக்க எதிர்ப்பு அலை. ஒரு இஸ்லாமியரின் வெற்றிக்காக எல்லோரும் பிரார்த்தனை செய்யவேண்டும் என்று கூறிய இஸ்லாமிய அமைப்புகள், பிரதமர் நவாஸ் ஷெரீஃப், ஈராக் அதிபர் சதாமுக்கு ஆதரவுக்கரம் நீட்டவேண்டும் என்று வம்படி செய்தன.
மனிதருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. உள்ளூர் அரசியலில் பழம் தின்று கொட்டை போட் டவர். ஆனால், வெளியுறவு விவகாரத்தில் சுத்த சைப ராக இருந்தார். தெளிவான முடிவு எதையும் எடுக்க முடியாமல் திணறினார். இது விஷயமாக ராணுவத் தளபதி அஸ்லம்பக்குக்கும் ஷெரீஃபுக்கும் இடையே ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள்.

கஷ்டங்களுக்கு எப்போதுமே தோழர்கள் அதிகம். வளைகுடா என்ற பெயரில் நவாஸ§க்கு வந்த இம்சை, மேலும் சில இம்சைகளை இலவசமாக அழைத்துவந்தது. ஈராக்கை மையப்படுத்தி ஆங்காங்கே வன்முறை கள் வெடிக்கத் தொடங்கின. காலுக்குக் கீழே அடங்கிக்கிடந்த ஊழல் பெருச்சாளிகள், எகிறிக் குதித்து வெளியே வந்தன. நவாஸின் வயிற்றில் புளி கரைக்கத் தொடங் கியது.

எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்த அதிபர் இஷாக் கான், ஷெரீஃபுக்குக் கணக்கு தீர்த்துவிட நாள் குறித்து விட்டார். ஏப்ரல் 18, 1993 அன்று ஆட்சி கலைக்கப்பட்டது. தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டார் நவாஸ். போதாக்குறைக்கு பாலக் ஷேர் மஸாரி என்ற பொம்மை மனிதரைக் காபந்து பிரதமராக நியமித்தார் அதிபர். கண்கள் சிவந்துவிட்டன நவாஸ§க்கு. கோர்ட்டில் சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றது. விதி இஷாக் கானை பார்த்து எகத்தாளமாகச் சிரித்தது. ஆம். நவாஸ் ஷெரீஃப் ஆட்சி கலைக்கப்பட்டது செல்லாது என்று அறிவித்தது பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம். நாற்காலியில் இருந்து இறங்கிய ஆறாவது வாரத்தில் மீண்டும் பதவியைப் பிடித்தார் நவாஸ். என்னதான் சட்டத்தின் மூலம் மீண்டும் நாற்காலியைப் பிடித்தாலும் கூட மனிதருக்கு ஆட்சியில் இருப் பதில் ஏகப்பட்ட தர்மசங்கடங்கள். ஒரு நல்ல நாளாகப் பார்த்து ராஜினாமா செய்துவிட்டார். மொயின் குரோஷி என்பவர் காபந்து பிரதமரானார்.

மீண்டும் தேர்தல். இப்போது களத்துக்கு வந்திருந் தார் அடிபட்ட பழைய புலியான பெனாசிர் புட்டோ. மக்கள் கவலை தோய்ந்த முகத்துடன் அவரை வரவேற்றனர். புரிந்துவிட்டது பெனாசிருக்கு. அனுதாப அலை வீசப்போகிறது. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்று கட்சிக்காரர்களுக்குச் சொல்லிவிட்டார். அவர் நினைத்தது பலித்தது. அபரிமிதமான ஆதரவுடன் மீண்டும் பிரதமரானார் பெனாசிர் புட்டோ.

கடந்த ஆட்சியில் கவனக்குறைவாக இருந்துவிட்டோம். இனியும் அப்படி இருக்கக் கூடாது என்று தன்னை எச்சரித்துக் கொண்டார் பெனாசிர். கட்சிக்காரர்களிடம் கறாராக நடந்து கொண்டார். அதன் மூலம் ஊழல் என்ற வஸ்துவை இல்லாமல் செய்துவிடலாம் என்பது அவருடைய கணிப்பு.
தவிரவும், தன் ஆட்சியின் மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்படவேண்டும் என்பதற்காக நிறையவே மெனக் கெட்டார். பாகிஸ்தான் என்ற தேசம் புதிய பாதையில் நடை போட்டுக்கொண்டிருப்பதாக உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தபோது பேசினார் பெனாசிர். சர்வதேச அளவில் நடக்கிற தீவிரவாதச் செயல்கள், போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றை ஒழிப்பதற்குத் தன்னால் ஆன அத்தனை முயற்சிகளையும் செய்வதாக வாக்குறுதி அளித்தார். எல்லாமே ஒழுங்காகத்தான் நடந்து கொண்டிருந்தது, ஒரேயரு விஷயத்தைத் தவிர.

பெனாசிரின் குடும்ப அன்பர்கள் மாறவே இல்லை. ஆங்காங்கே பெட்டிகள் கைமாறின. அவருடைய உறவினர்கள் என்று சொல்லிக்கொண்ட அத்தனை பேரும் அளவுக்கு மீறிய சலுகைகளை அனுபவிக்கத் தொடங்கினர். சட்டத்தைத் தங்களுக்கு ஏற்ப வளைக்கத் தொடங்கினர். எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. 'பணம். பணம். அது மட்டும் போதும்!' என்ற முடிவில் இயங்கத் தொடங்கினர்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த எதிர்க்கட்சிகள் பொங்கியெழுந்துவிட்டன. கட்டுக்கடங்காத மதிப்பு கொண்ட சொத்துகளை வெளிநாடுகளில் வாங்கிக் குவித்திருப்பதாக பெனாசிர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டுகளை எழுப்பின. தவிரவும், பாகிஸ்தானில் அவர் கணவர் சர்தாரியின் சகோதரருக்கு விதிகளை மீறி நிலம் வழங்கப்பட்டுள்ளது, பெனாசிர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு வேண்டியவர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்று சரவெடிக் குற்றச்சாட்டுகள்.

எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார் அதிபர் ஃப்ரூக் லக்காரி. நடப்பது எதுவும் திருப்திகரமாக இல்லை அவருக்கு. விளைவு, தன்னுடைய பிரம்மாஸ்திரத்தை எடுத்தார். எட்டாவது அரசியல் சட்டத்திருத்தம் என்பது அந்த அஸ்திரத் தின் பெயர். பிரதமரை பதவி நீக்கம் செய்து, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தை அதிபருக்கு வழங்கும் சட்டத்திருத்தம் அது.

ஆலோசகர்களை அழைத்து நீண்ட நெடுநேரம் விவாதித்த அதிபர், அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

'பெனாசிரின் ஆட்சி கலைக்கப்படுகிறது.'

தூக்கிவாரிப் போட்டது பெனாசிருக்கு. ''இத்தனை மோசமான முடிவை எடுக்கும் அளவுக்கு இங்கே என்ன நடந்துவிட்டது? இவரை அரும்பாடுபட்டு அதிபராக்கியது நான். இவரைத்தான் அதிபராக்க வேண்டும் என்று சர்தாரி எத்தனை பாடுபட்டார்? இன்று என்னடாவென்றால்... யாரோ சில விஷமிகள் கிளப்பிவிட்ட ஊழல் குற்றச்சாட்டுக்குச் செவிசாய்த்து, என்னுடைய ஆட்சியைக் கலைத்து விட்டாரே? சே, நன்றிகெட்ட மனிதர்களின் கூடாரமாகிவிட்டதே பாகிஸ்தான் அரசியல்களம்!'' - நொந்து போய் பேசினார் பெனாசிர்.

மீண்டும் ஒரு தேர்தல். பாகிஸ்தான் பிரதமர் என்ற மியூசிக்கல் சேர் ஆட்டத்தில் பெனாசிரும் நவாஸ் ஷெரீஃபும் மாறி மாறி உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். இந்த முறை வாய்ப்பு நவாஸ§க்கே என்றன பாகிஸ்தான் ஊடகங்கள். தன்னுடைய ஆட்சியைக் கலைத்தது அநியாயம் என்று மக்களிடம் சென்று அனுதாபம் தேடினார் பெனாசிர். ஊழலுக்கு ஏற்ற தண்டனைதான் கிடைத்திருக்கிறது. ஆகவே, மீண்டும் அவருக்கு வாய்ப்பளிக்காதீர்கள் என்று பிரசாரம் செய்தார் நவாஸ்.

நவாஸ் ஷெரீஃபின் பிரசாரத்துக்கு நல்ல வரவேற்பு. அவருடைய பொதுக் கூட்டங்களுக்குத் திரண்ட மக்களின் எண்ணிக்கை அவருடைய வெற்றியை ஓரளவுக்கு உறுதி செய்தது. இறுதியாக, ஊடகங்களின் கணிப்பே சரியாக இருந்தது. நவாஸ் ஷெரீஃப் மீண்டும் பிரதமர் நாற்காலியில் அமர்ந்தார். மிருகபலம் என்று சொல்வார்கள். கிட்டத்தட்ட தொண்ணூறு சதவிகிதத்தினரின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருந்தார் நவாஸ் ஷெரீஃப்.
இப்படியரு மாற்றத்துக்காகத்தான் கால்கடுக்கக் காத்துக் கொண்டிருந்தார் நவாஸ் ஷெரீஃப். நினைத்த மாத்திரத்தில் ஆட்சியைக் கலைத்துப் போடும் அதிபரின் அதிகார ஓட்டத்துக்குக் கடிவாளம் ஒன்றைத் தயாரித்தார். அதற்குப் பெயர், பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தம். அதன்படி பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் அதிபரிடம் இருந்து பறிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் இருந்த அபரிதமான பலத்தால் பூனைக்கு மணி கட்டினார் நவாஸ் ஷெரீஃப்.

இந்த சமயத்தில்தான் விதி தன் வேலையைக் காட்டத் தொடங்கியது. மேஜர் ஜெனரலாக ஒரு ஓரத்தில் ஓசையின்றிக் கடமையாற்றிக் கொண்டிருந்த பர்வேஸ் முஷ்ரப் என்ற மனிதரை திடுதிப்பென ராணுவத் தலைமைத் தளபதியாக நியமித்தார் நவாஸ் ஷெரீஃப். ராகு காலம் தொடங்கியது ஷெரீஃபுக்கு!

Monday, 16 March 2009

பாகிஸ்தான் பற்றிய தொடர் (20)

***************
18 March 2009
***************

வந்தார் பெனாசிர் புட்டோ!

தேர்தல் வேண்டும், அதுவும் உடனடியாக. 1981--ம் ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தானில் இருந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் உச்சரித்த ஒரே கோஷம் இதுதான். இதை ஜியா துளியும் கண்டுகொள்ளவில்லை. தன் இமேஜை வளர்ப்பதற்காக இஸ்லாம் என்ற போர்வையை அணிந்துகொண்டு திரியும் ஜியாவுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் கொந்தளித்தன.
விஷயம் ஜியாவின் கவனத்துக்குச் சென்றது. மனிதர் யோசித்தார். கலகம் செய்பவர்களை எங்கே அடித்தால் வலிக்கும் என்பது அவருக்கு நன்றாகவே
தெரியும். அனுபவஸ்தர். ஏகப்பட்ட அரசியல் கட்சிகள் ஆவேசக்குரல் எழுப்பிக்கொண்டிருக்கின்றன. எல்லோருமே பெரிய ஆட்கள் கிடையாது. பெரும்பாலும் நண்டு, சிண்டு, வண்டு, வாண்டுகளே. எல்லோர் மீதும் கை வைப்பதற்குப் பதிலாக மெகா சைஸ் திமிங்கிலமான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மீது கைவைத்தால், மற்றவை பெட்டிப்பாம்பாகிவிடும் என்று நினைத்தார்.

'இந்த நொடியிலிருந்து பாகிஸ்தான் மக்கள் கட்சி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.'

உத்தரவுக்கு அர்த்தம் புரியாமல் குழம்பியது, அந்தக் கட்சியின் தலைமை. உடனடியாக ஜியாவிடம் இருந்து விளக்கம் வந்தது.

பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது. ஊர்வலம், பேரணி பற்றிய சிந்தனையே வரக்கூடாது. போராட்டம் என்பதை நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. ஆனால், அரசியல் கட்சி மட்டும் இருக்கலாம், இயங்கலாம்.

சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை, அரசியல் கட்சிகளுக்கு! மேலே இருக்கும் சங்கதிகள் எதுவும் இன்றி அரசியல் கட்சிகள் எப்படி இயங்க முடியும்?

குரல்வளையை பகிரங்கமாக நெரிக் கிறார் ஜியா என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தெளிவாகப் புரிந்தது. இன்று பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஏற்பட்ட நிலை நாளை எல்லாக் கட்சிகளுக்கும் ஏற்படாது என்று நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. இனியும் மூட்டையில் இருந்து பிரிந்த நெல்லிக்காய்களைப் போல சிதறிக்கிடந்தால் தன் பூட்ஸ் காலால் எல்லா அரசியல் கட்சி களையும் நசுக்கிவிடுவார் ஜியா என்று நினைத்தனர்.
உண்மையில் அவர்களுக்கு வந்தது பயம். உயிர்பயம். எதிர்காலம் குறித்த அச்சம். மறுநொடியே எல்லாக் கட்சிகளும் ஒரு குடையின்கீழ் திரள்வது என்று முடிவு செய்துவிட்டன. பாகிஸ்தானில் இயங்கிவந்த ஒன்பது முக்கியக் கட்சிகளின் தலைவர்களும் கராச்சியில் சந்தித்துப் பேசினர்.

'வாருங்கள் ஒன்றிணைந்து போராடுவோம். தேர்தல் நடத்த வலியுறுத்துவோம். ஜனநாய கத்தை மீட்டெடுப்போம்.'

எல்லோரும் தலையசைக்கவே ஒன்பது கட்சிகளின் கூட்டமைப்பு உருவானது. அதேசமயம் பாகிஸ்தானில் இயங்கிவந்த அடிப்படைவாதக் கட்சிகள் சில, இந்த அமைப்பில் சேராமல் தனித்தே இயங்கத் தொடங்கின.
அரசியல் கட்சிகளின் திடீர் சங்கமம் ஜியாவை உசுப்பேற்றியது. 'தனித்தனியே தலைவலி கொடுத்தது போதாதென்று கூட்டம் சேர்த்துக்கொண்டு வேறு குழப்பம் செய்கிறீர்களா? இருங்கள், உங்கள் கால்களை உடைக்கிறேன்!' என்று நறநறத்தார். அவருடைய எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் செயல்படத் தொடங்கியது பாகிஸ்தான் காவல்துறை. அரசுக்கு எதிராக மூச்சுவிட ஒருவர் எத்தனிக்கிறார் என்று தெரிந்தாலே அவரைக் கைது செய்து கம்பிகளுக்குள் திணித்தது.

நித்தம் நித்தம் கைதுகள் தொடர்ந்தன. அந்தக் களே பரத்தில் அரசியலுக்குப் புதுமுகமாக அறிமுகம் ஆகியிருந்த புட்டோவின் மகள் பெனாசிர் புட்டோவையும் கைதுசெய்து உள்ளே வைத்துவிட்டது ஜியா அரசு. கலவரத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சித் தொண்டர்களை சுட்டுத்தள்ளவும் அரசு தயங்கவில்லை. பலத்த போராட்டத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்ட பெனாசிர், பாகிஸ்தானிலிருந்து வெளியேறி வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார்.

1986 ஏப்ரல் மாதம் பெனாசிர் புட்டோ பாகிஸ்தான் திரும்பியபோது அவருக்கு ஆதரவாக மக்கள் சக்தி திரண்டிருந்தது. அவருடைய பேச்சைக் கேட்க வந்த கூட்டத்தின் அளவு புட்டோவின் பொதுக்கூட்டங்களை நினைவூட்டின. இதோ தேர்தல், அதோ தேர்தல் என்று போக்குக் காட்டிக்கொண்டிருந்த ஜியாவுக்கு இப்போது உண்மையிலேயே தேர்தல் நடத்தும் சிந்தனை வந்திருந்தது.
'அன்புமிக்க மக்களே, நீங்கள் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தேர்தல் வெகுவிரைவில் நடத்தப்பட இருக்கிறது. அநேகமாக 1988 நவம்பரில் தேர்தல் நடத்தப்படும். தயாராகுங்கள்.'

ஜியாவின் அறிவிப்பு பொதுமக்களை சந்தோஷப்படுத் தியது. அரசியல் கட்சிகளைக் குதூகலிக்க வைத்தது. ஆக வேண்டிய காரியங்கள் அத்தனைக்கும் தேவையான உத்தரவுகளை ஒருபக்கம் பிறப்பித்துக் கொண்டே இருந் தாலும் ஜியாவின் கவனம் முழுக்க, பஹவல்பூர் அருகில் இருக்கும் தமேவாலி என்ற நகரின் மீதே குவிந்திருந்தது. அங்கே தயாராக இருக்கும் அமெரிக்கத் தயாரிப்பு பீரங்கி ஒன்றைப் பார்வையிடுவதற்காகத் தயாராகிக் கொண் டிருந்தார் ஜியா.

விமானம் தயார். உடன் வருவதற்கு அமெரிக்க தூதர் ஆர்னால்டு ரஃபேல் மற்றும் ராணுவ உயரதிகாரி ஆகியோரும் தயார். பஹவல்பூர் வந்திறங்கிய ஜியா, பீரங்கி அணிவகுப்பைக் கண்டுகளித்தார். முகம் முழுக்க புன்னகை. மனம் முழுக்க சந்தோஷம். உற்சாகம் குறையாமல் ஏறி விமானத்தில் உட்கார்ந்தார். புறப்பட்ட இரண்டாவது நிமிடம் நடுவானில் வெடித்துச் சிதறியது விமானம். ஜியாவின் உடலும்தான்.

ஆகஸ்ட் 17, 1988 அன்று நடுவானில் நிகழ்ந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பது இன்றுவரை புரியாத புதிர்தான். பாகிஸ்தான் என்ற குழப்பத்தின் விளைநிலம் மீண்டும் குழப்பத்தில் மூழ்கியது. நேற்றுவரை நாட்டின் அத்தனை அதிகாரங்களையும் தன் உள்ளங்கைக்குள் குவித்து வைத்திருந்த ஜியாவின் மரணம், பாகிஸ்தானில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது. அடுத்தது என்ன? இதுதான் அப்போது எல்லோர் மனத்திலும் எழுந்த கேள்வி.

விடை என்று அவர்கள் நினைத்தது, குலாம் இஷாக் கான் என்பவரைத்தான். ஜியாவின் இரும்புக்கரங்களுக்குள் அடங்கிய பாகிஸ்தானின் செனட்டுக்கு அவர்தான் தலைவராக செயல்பட்டுக் கொண்டிருந்தார். ராணுவ உயரதிகாரிகள் அத்தனை பேரும் இஷாக் கானையே அதிபராகச் செயல்படுமாறு கேட்டுக்கொண்டனர். பலமாக யோசித்த இஷாக் கான், 'உங்கள் விருப்பத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இது தாற்காலிக ஏற்பாடு தான். திட்டமிட்டபடி விரைவில் தேர்தல் நடத்தப்படும்' என்று சொல்லி, அதிபர் நாற்காலியில் அமர்ந்தார்.

கொடுத்த வாக்குறுதியை எந்தக் காரணத்தை முன்னிட்டும் காப்பாற்றிவிடக் கூடாது என்பதில் கண்ணுங் கருத்துமாக இருப்பவர்கள் பாகிஸ்தான் அதிபர்கள். புதிய அதிபர் இஷாக் கானும் அந்த ரகத்தைச் சேர்ந்தவர் என்றுதான் எல்லோரும் நினைத்தனர். ஆனால், மனிதர் வெள்ளை மனசுக்காரர். சொன்னபடி நவம்பர் 16, 1988-ல் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். தேர்தல் ஏற்பாடுகள் மீண்டும் முடுக்கிவிடப்பட்டன.
பெனாசிர் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி உற்சாகம் பொங்க தேர்தலை எதிர்கொண்டது. எல்லா கட்சிகளும் தங்களுடைய மறுவாழ்வுக்கான களமாகவே தேர்தல் களத்தைப் பார்த்தன. தேர்தல் முடிந்தது. புட்டோ என்ற மந்திரச் சொல் மிகப்பெரிய மாயத்தை நிகழ்த்திக் காட்டியிருந்தது. ஆம், அரசியலுக்கு முற்றிலும் புதியவரான பெனாசிர் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு அபரிமிதமான ஆதரவை வழங்கி, ஆட்சிக் கட்டிலை ஒப்படைத்தனர் பாகிஸ்தான் வாக்காளர்கள்.
முப்பந்தைந்து வயதில் பிரதமர் பதவியில் அமர்ந்த முதல் அரசியல்வாதி என்ற பெருமை பெனாசிருக்குக் கிடைத்தது (முதல் பெண் பிரதமர் என்று தனி யாகச் சொல்லவேண்டுமா என்ன?). நாட்டில் ஜனநாயகம் மறுபிரவேசம் செய்துவிட்டதாக ஊடகங்கள் புளகாங்கிதம் அடைந்தன. உலக நாடுகள் எல்லாமே பாகிஸ்தான் அரசியலில் ஏற்பட்ட இந்தத் திடீர் திருப்பத்தை ஆச்சர்யம் குறையாமல் பார்த்துக்கொண்டிருந்தன. முக்கிய மாக, இந்தியா.
ஆட்சிக்கு வந்துவிட்டாரே ஒழிய பெனா சிருக்கு ஒவ்வொரு நகர்வும் சிரமமாகவே இருந்தது. சொந்த சகோதரர்களான முர்தஸா புட்டோ, ஷா நவாஸ் புட்டோ என்ற தீவிரவாத இயக்கத் தலைவர்கள் ஒரு பக்கம் (ஜுல்ஃபிகர் அலி புட்டோ கைதுக்குப் பிறகு அல்ஜுல்ஃபிகர் என்ற இயக்கத்தைத் தொடங்கி, ஜியாவுக்கு எதிராக சண்டமாருதம் செய்ய முயற்சி செய்து தோற்றுப்போனவர்கள்...) பெனாசிர் ஆட்சிக்குத் தங்களால் எந்த அளவுக்குக் கெட்ட பெயர் வாங்கித் தரமுடியுமோ அந்த அளவுக்கு வாங்கித் தந்துகொண்டிருந்தனர்.

பெனாசிரின் காதல் கணவரான ஆசிஃப் அலி சர்தாரி இன்னொரு பக்கம், மனைவியின் இமேஜைக் குழிதோண்டிப் புதைக்கும் காரியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். சீமான் வீட்டு செல்லப் பிள்ளையாகத் திரிந்துகொண்டிருந்தவர் ஆசிஃப் அலி சர்தாரி. பார்த்த மாத்திரத்திலேயே மனத்தைப் பறிகொடுத்த பெனாசிர், சர்தாரியைத் திருமணம் செய்துகொண்டார். என்னதான் பணம், பகட்டு எல்லாம் இருந்தாலும்கூட சர்தாரிக்கு ஏனோ கையூட்டின் மீது காதல் வந்துவிட்டது.

'அரசாங்கத்தில் ஏதும் காரியம் ஆக வேண்டுமா? சர்தாரிக்கு பத்து பர்சென்ட் வெட்டுங்கள். காரியம் கனகச்சிதம்.' இதுதான் அப்போது தொழிலதிபர்கள், சர்தாரி மீது வைத்திருந்த அபரிமிதமான நம்பிக்கை. கைநீட்டிப் பைசா வாங்கிவிட்டால், மனிதர் உயிரைப் பணயம் வைத்தாவது காரியத்தை முடித்துவிடுவார் என்று பரிபூரணமாக நம்பினர். விஷயம் மெள்ள மெள்ள மீடியாவுக்குக் கசிந்தது. தர்ம சங்கடத்தில் நெளிந்தார் பெனாசிர்.
அவரை மேலும் சங்கடப்படுத்தும் வகையில் ஹைதராபாத் மாநிலத்தில் பெரிய கலவரம் உருவானது. இனக்கலவரம். மொஹாஜிர்களுக்கும் சிந்திக்களுக்கும் இடையே 'நீயா - நானா' போட்டி விஸ்வரூபம் எடுத்தது. வன்முறையாக வெடித்தது. பெனாசிர் சமாளிக்க முடியாமல் திணறினார் என்று சொல்லமுடியாது. கொஞ்சம் மெனக்கெட்டால் கலவரத்தை அடக்கி விடலாம். ஆனால், அதற்குள் குறுக்கே புகுந்துவிட்டார் அதிபர் இஷாக்கான்.
'ம்ஹ¨ம்... வேலைக்கு ஆகாது. எல்லா வற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் வீட்டுக்குப் போகலாம்.'

ஆம். நல்ல மனிதர் என்று பெனாசிரால் நம்பப்பட்ட இஷாக்கான், அதிரடியாக ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றம் செய்தார். நிலைகுலைந்து போனார் பெனாசிர். வெறும் ஒன்றரை ஆண்டு களில் ஜனநாயகம் தன் மூச்சை நிறுத்திய அதிர்ச்சி அவருக்கு. சிறை யில் அடைக்கப்பட்ட பெனாசிருக்கு அரசியல் களத்தில் புதிய எதிரி உருவாகியிருந்தார். அவர், நவாஸ் ஷெரீஃப்!
வீசுமா ராணுவக் காற்று?
*******************************
கொதிநிலையில் தகித்துக்கொண்டிருக்கிறது தற்போதைய பாகிஸ்தான். நாடு முழுக்க பேரணி, வன்முறை, அதிரடிக் கைதுகள், எந்த நொடியில் வேண்டுமானாலும் புரட்சி வெடிக்கும் என்கிற சூழல்!

இத்தனைக்கும் பின்னணி இதுதான்... முஷ்ரப் காலத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் அதே பதவியில் நியமிக்கவேண்டும் என்பது அங்குள்ள வழக்கறி ஞர்களின் நீண்டநெடுநாள் கோரிக்கை. தன்னுடைய அடுத்த கட்ட நகர்வுக்கு ஒரு கொழுகொம்பு கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டிருந்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், இந்த விவகாரத்தைப் புளியங்கொம்பாகப் பிடித்துக்கொண்டார்.

நாடுதழுவிய அளவில் நான்கு நாட்களுக்குப் பேரணி நடத்தப்படும் என்று அறிவித்தார் ஷெரீஃப். ஏற்கெனவே தீவிரவாதம், ஊழல் என்று அதிருப்தி மனப்பான்மையில் இயங்கிய இம்ரான்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் அதிபர் சர்தாரிக்கு எதிராக அணிதிரள... பதற்றம் பற்றிக்கொண்டது பாகிஸ்தானில். விஷயம் கேள்விப்பட்ட ராணுவத் தளபதி பர்வேஸ் கயானி, வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கத் தொடங்கிவிட்டார்.
'என்ன செய்வீர்கள் என்று தெரியாது. போராட்டம், பேரணி என்று எதுவும் நடக்கக் கூடாது. அவ்வளவுதான், எல்லாவற்றையும் தடுத்து நிறுத்துங்கள். இல்லாவிட்டால், ராணுவம் தன் கடமையைச் செய்யும்.'

ராணுவத் தளபதியின் பகிரங்க மிரட்டல், ஈரான் சென்றிருக்கும் அதிபர் சர்தாரியின் கவனத்துக்குச் சென்றது. உடனடியாக பேரணிக்குத் தடை விதித்தார். ஆனாலும், 'அதிபரின் உத்தரவு எங்களைக் கட்டுப்படுத்தாது!' அறைகூவல் விடுத்து, பேரணியையும் ரகளையாகத் தொடங்கிவிட்டார்
ஷெரீஃப். தடையை மீறிய அரசியல் கட்சித் தொண்டர்களைக் கொத்துக்கொத்தாகக் கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் ஊர்வலம் தொடர்கிறது.

'நடப்பது எதுவும் நன்றாக இல்லை!' என நினைத்த ராணுவத் தளபதி பர்வேஸ் கயானி, அவசரமாக பிரதமர் யூசுப் ராஸா கிலானியைச் சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். அநேகமாக பாகிஸ்தானில் மீண்டும் ராணுவக்காற்று வீசத்தொடங்கும் என்றே தோன்றுகிறது!

Wednesday, 11 March 2009

பாகிஸ்தான் பற்றிய தொடர் (19)

*****************
15 March 2009
*****************

கடவுள் வளர்க்கும் காரியம்!

ஆத்திரம் ஆத்திரமாக வந்தது முஜாஹிதீன் களுக்கு. ஆப்கனை ஆக்கிரமிக்க வந்துள்ள சோவியத்துக்கு எதிராக யுத்தம் என்பது விருப்பம்தான். ஆனால், அதை நடத்தத் தேவையான வலிமை? அப்போது அவர்களுடைய யுத்தப் பயிற்சி, ஆயுத பலம் ஆகியவை எதுவும் சொல்லிக் கொள்கிறாற்போல் இல்லை.

நடப்பதையெல்லாம் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்த பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ., தீவிரமாகத் திட்டம் வகுக்கத் தொடங் கியது. ஆப்கனை ஆக்கிரமிக்க வந்திருப்பது சோவியத் ரஷ்யா. இந்தியாவின் உற்ற தோழன். ஆப்கனில் சோவியத்தை அனுமதித்தால், அது நம்முடைய எதிர்காலத்துக்கான தலைவலி. ஆக, நாம் சோவியத்தை எதிர்த்தே தீரவேண்டும்... குறைந்தபட்சம் மறைமுக மாகவாவது.

இன்னொரு கோணமும் இருக்கிறது. சோவியத்துக்கு எதிராக நாம் ஏதாவது செய்தால், அது அதன் பரம எதிரியான அமெரிக்காவுக்கு சந்தோஷத்தைக் கொடுக் கும். அமெரிக்க அதிபரான ஜிம்மி கார்ட்டர், பாகிஸ்தானுக்குக் கொடுக்காமல் நிறுத்தி வைத்திருந்த உதவிகளைத் திரும்பக் கொடுக்க முன்வருவார். பணம் தருவார்... ஆயுதம் தருவார்! ஆக, சோவியத்துக்கு எதிராக நாம் எடுத்துவைக்கும் ஒரு அடி, நமக்குப் பல பலன்களைத் தரும்.

தீவிர ஆலோசனைக்குப் பிறகு அதிபர் ஜியாவுல் ஹக்கை சந்தித்துப் பேசினார், ஐ.எஸ்.ஐ. இயக்குநர் அக்தர் அப்துர் ரஹ் மான். அப்போது சோவியத்துக்கு எதிரான யுத்தத்துக்கு முஜாஹிதீன்களுக்கு உதவினால், கிடைக்கப்போகும் பலாபலன்கள் பற்றி எடுத்துச்சொன்னார். எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொண்ட ஜியா, பலத்த யோசனைக்குப் பிறகு அக்தரிடம் முதல் கேள்வியை எழுப்பினார்..

'முஜாஹிதீன்களுக்கு நம்மால் என்ன உதவி செய்ய முடியும்?'

இதற்காகவே காத்துக்கொண்டிருந்தவர் போல விளக்கம் கொடுக்கத் தொடங்கினார் அக்தர். 'எல்லை வழியாக முஜாஹிதீன்களை நம் பக்கம் அழைத்து வருவோம். அவர்களுக்குத் தங்குமிடம், பயிற்சிப் பாசறை அமைத்துக் கொடுப்போம். நம் ஐ.எஸ்.ஐ-யும் ராணுவமும் அவர்களுக்குத் தேவையான ஆயுதப் பயிற்சிகளைக் கொடுக்கும். பிறகு அவர்கள் ஆப்கன் சென்று சோவியத் படைகளை வெளுத்துக் கட்டுவார்கள்!'

'ஆயுதப் பயிற்சியை நாம் கொடுத்து விடுவோம்; ஆனால், ஆயுதங்கள்?'

'இருக்கவே இருக்கிறது சி.ஐ.ஏ. இங்கே நாம் பயிற்சி கொடுப்பது எல்லாமே அமெரிக்க உளவுநிறுவன மான சி.ஐ.ஏ-வின் கழுகுக் கண்களுக்கு அகப்பட்டுவிடும். பிறகு அவர்களே ஆயுத உதவிகளைச் செய்ய முன்வரு வார்கள். அந்த ஆயுதங்களை நாம் முஜாஹிதீன்களுக்குக் கொடுத்து விடலாம். நமக்கு பைசா செலவில்லை. ஆனால், லாபம் வெகு அதிகம். என்ன சொல்கிறீர்கள்?'

'நடத்துங்கள்!' என்று சொல்லி விட்டார் ஜியா. உற்சாகம் பொங்க வேலையை ஆரம்பித்துவிட்டது ஐ.எஸ்.ஐ. முஜாஹிதீன்கள் என்னதான் போராளி களாக இருந்தாலும்... அவர்களில் பெரும்பாலானோருக்கு ஆயுதங்களுடன் நேரடி உறவு இருந்ததில்லை. மனத் தளவில் போராளிகளாக இருந்தனர்; உடல் பலமும் இருந்தது. அவர்களுக்கு ஆயுதங்களை அறிமுகம் செய்து, கையாளக் கற்றுக்கொடுப்பது பெரும் பாடாக இருந்தது ஐ.எஸ்.ஐ-க்கு. நேரடித் தாக்குதல் கெரில்லாத் தாக்குதல் என்று அத்தனையும் அத்துப்படியாகும் வரை ஐ.எஸ்.ஐ. பயிற்சி கொடுத்தது.

விஷயம் சி.ஐ.ஏ-வுக்குச் சென்றது. அப்படியே அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டருக்கும் சென்றது. 'நல்ல காரியம் செய்கிறார்கள். நாம் உதவாவிட்டால் எப்படி?' என்று நானூறு மில்லியன் டாலர்களைப் பொருளாதாரம் மற்றும் ராணுவ உதவியாக வழங்கினார் ஜிம்மி கார்ட்டர். 'போட்டுவைத்த ஆப்கன் திட்டம் ஓகே கண்மணி!' என்று ஆட்டம் போடத் தொடங்கியது ஜியாவின் மனசு.

அமெரிக்கா அள்ளிக் கொடுத்ததில் கொஞ்சம் முஜாஹிதீன்களுக்கும் கிள்ளிக் கொடுத்தது பாகிஸ்தான். அதை முதலீடாக வைத்துக்கொண்டு அடுத்தடுத்து முன்னேறிச் சென்றனர் முஜாஹிதீன்கள். எழுபதுகளின் இறுதியில் தொடங்கிய யுத்தம், அடுத்த பத்தாண்டுகளுக்கு நீடித்தது. அல் கொய்தா, ஒஸாமா பின்லேடன், ஜிஹாத், தாலிபன்கள் ஆகிய பதங்களெல்லாம் சர்வதேச மீடியாவில் உலா வரத் தொடங்கியது அந்தப் பத்தாண்டுகளில்தான்!
ரஷ்யப் படையினரை வெளியேற்றிவிட்டுத்தான் மறு வேலை பார்த்தனர் முஜாஹிதீன்கள். இத் தனைக்கும் பிள்ளையார் சுழி போட்ட பாகிஸ்தான் அதிபர் ஜியாவுல் ஹக், மெள்ள ஆப்கன் விவ காரத்தில் இருந்து ஒதுங்கி, பாகிஸ்தானின் அடுத்த கட்ட முன்னேற்றம் குறித்த நடவடிக்கையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

அது, கடவுள் வளர்க்கும் காரியம்.

ஜியாவுக்கு கடவுள் என்பது மதம். இஸ்லாமிய மதம். ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுகை செய்யக் கூடிய ஜியாவை ராணுவ வட்டாரத்தில் மௌலவி என்று செல்லமாக அழைப்பது வழக்கம். அத்தனை தீவிர மதப்பற்றாளர். ஆட்சி நிர்வாகம் என்பது இஸ்லாமிய முறைப்படி மட்டுமே இயங்கவேண்டும் என்பதுதான் ஜியாவின் ஒரே இலக்கு. அதை சாத்தியப்படுத்தும் வழிகள் பற்றித்தான் சதா சர்வகாலமும் சிந்தித்துக் கொண் டிருந்தார்.

அப்போதுதான் மத இயக்கமான 'ஜமாத் இ இஸ்லாமி' என்ற அமைப்பு ஜியாவுடன் வெகுவாக நெருக்கம் காட்டத் தொடங்கியது. மசூதிக்கும் ராணுவத்துக்குமான உறவு மேம்படத் தொடங்கியது ஜியா காலத்தில்தான். அந்த இயக்கத்தின் தலைவர்களுடன் அடிக்கடி பேசியதன் காரணமாக, அவருடைய எண்ணங்கள் எல்லாம் இஸ்லாமிய மயமாக்கலை நோக்கியே குவியத் தொடங்கின. இஸ்லாமிய முறைக்கு ஒவ்வாத நிர்வாக நடைமுறைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியது ஜியா அரசு.
அவற்றில் முக்கியமானது ஷரியத் நீதிமன்றங்கள். வழக்கமாகச் செயல்பட்டு வந்த உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களும் இனி இந்த நீதிமன்றங்களையே நாடவேண்டும். குர்ஆனில் சொல்லப் பட்டுள்ள வழிமுறைகளுக்கு ஏற்ப, இந்த ஷரியத் நீதிமன்றம் இயங்கும் என அறிவித்தார் ஜியா.

ஏற்கெனவே ஜியா உருவாக்கி வைத்திருந்த 'மஜ்லிஸ் இ ஷ§ரா'வை இப்போது தன் இஸ்லாமிய மயமாக் கலுக்குப் பயன்படுத்த விரும்பினார். உடனடியாக அந்தக் குழுவினரை அழைத்துப் பேசினார். இறுதியாக அவர்களுக்கு நான்கு வேலைகளைக் கொடுத்தார்.

* தேசம் முழுக்க இஸ்லாத்தைப் பரப்பும் பணிகளை முடுக்கிவிடுங்கள்.

* இஸ்லாமிய ஜனநாயகத்தைக் கொண்டுவருவதற்கான திட்டங்களைத் தயார் செய்யுங்கள்.

* தேச நிர்வாகம் மற்றும் அயலுறவு தொடர்பாக இஸ்லாம் என்ன சொல் கிறது என்பதை நெறிமுறைகளாக வகுத்துக்கொடுங்கள்.

* இஸ்லாமிய வழியில் பொருளாதார மற்றும் சமூகச் சீர்த்திருத்தத்தை ஏற்படுத்த வழிவகை செய்யுங்கள்.

பாகிஸ்தானின் ஒவ்வொரு மனிதரும் கண்டிப்பாக குர்ஆன் வாசிக்கவேண்டும். அரசு அலுவலகங்களில் நடத்தப்படும் விழாக்கள் இஸ்லாமிய முறைப்படி மட்டுமே நடத்தப்பட வேண்டும். அரபு மொழியில் மட்டுமே தொலைக்காட்சி, வானொலியில் செய்தி வாசிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் எத்தனை மணிக்குத் தொழுகை நடத்தவேண்டும் என்று வானொலியில் அறிவிப்பு வெளி யானது.
அரபு மொழியை ஆர்வத்துடன் படிக்கும் மாணவர்களுக்குக் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டன. அரசுப் பணியாளர்கள் அத்தனை பேருக்கும் பதவி உயர்வுகள் அவர்கள் செய்கிற வேலையைப் பொறுத்துத் தரப்படவில்லை. இஸ்லாமிய ஒழுங்கு களைக் கடைப்பிடிக்கும் அதிகாரிகளுக்கு மட்டுமே பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன. ராணுவத்திலும் இதே அணுகுமுறைகளே அனுசரிக்கப்பட்டன.

மத வரி என்ற பெயரில் புதிய வரிகள் மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டன. அந்த நிதியைக்கொண்டு நாடு முழுக்க ஏராளமான மசூதிகள் கட்டப்பட்டன. ரம்ஜான் மாதத்தில் எல்லோ ரும் கண்டிப்பாக விரதம் அனுஷ்டிக்க வேண்டும். தவறினால் ஐந்நூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மது அருந்துதல், திருடுதல், பாலியல் குற்றம் செய்தல் போன்றவற்றுக்கு இஸ்லாமிய முறைப்படி ஆயுள் சிறை தொடங்கி... கல்லால் அடித்துக் கொலை செய்வது வரை தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இவற்றை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் ஜியா. ஒரு பெண் வன்புணர்ச்சி செய்யப்படுகிறார் என்றால், ஷரியத் நீதிமன்றத்தில் நான்கு பேர் சாட்சியம் கூறவேண்டும். இல்லாவிட்டால், அது கள்ள உறவு என்று அறிவிக்கப்படும். ஜியாவின் இந்த அதிரடிகளால் திணறத் தொடங்கினர் பாகிஸ்தான் பிரஜைகள்.

முகம் முழுக்கப் புன்னகையாக இருந்தது ஜியாவுக்கு. தனது கனவுகள் நிறைவேறப் போகின்றன. இஸ்லாம் தழைக்கப் போகிறது. அதுவும் என்னால்; என் நடவடிக்கைகளால். என் ஆட்சியில். வானத்தில் பறப்பது போல உணர்ந்தார் ஜியா. இன்னும் என்ன செய்யலாம் என்று நண்பர்களிடம் கேட்டார்.

'போதும். எல்லை மீறவேண்டாம். கொஞ்சம் அரசியலில் கவனம் செலுத்துங்கள்!' என்று ஆலோசனை கொடுத்தனர் நண்பர்கள். அதற்குக் கட்டுப்பட்டு ஜியா அரசியல் பக்கம் எட்டிப் பார்த்தார். அங்கே ஜியாவின் இஸ்லாமிய மயமாக்கலுக்கு எதிராக அரசியல் கட்சிகள் எல்லாம் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்துக் கொண்டிருந்தன. போராட்டம். பேரணி. ஊர்வலம்.

அவ்வளவுதான் கண்கள் சிவந்துவிட்டன ஜியாவுக்கு. அடுத்து அவரிடம் இருந்து வந்த உத்தரவு அனைத்து அரசியல் கட்சிகளையும் கதிகலங்கச் செய்தது!

Monday, 9 March 2009

பாகிஸ்தான் பற்றிய தொடர் (18)

**************
11 March 2009
**************
மைதானத்தில் விழுந்த அணுகுண்டு!

ஒரு ஞாபகத்துக்குச் சொல்ல வேண்டுமானால்... எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டில் முதலமைச் சராகப் பொறுப்பேற்ற ஐந்தாவது நாள் (ஜூலை 5, 1977) பாகிஸ் தான் ஜியா வுல்ஹக் என்ற ராணுவ மனிதரின் கட்டுப் பாட்டுக்குள் வந்தது. இங்கே பரவசம் என்றால், அங்கே பதைப்பதைப்பு. அன்று தொடங்கி தொடர்ந்து பதினொரு ஆண்டுகளுக்கு ஜியாவுல் ஹக்கின் கைப்பிடிக்குள் அகப்பட்டிருந்தது பாகிஸ்தான். அத்தனையும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாதஆண்டுகள்.

தன் ஆட்சிக்காலத்தில் ஜியாவுல் ஹக் மூக்கை நுழைத்து மூர்க்கத்தனம் காட்டாத துறைகளே பாகிஸ் தானில் இல்லை. ஆட்சிமுறையில் அவர் நடத்திய அதிரடிகள் ஒவ்வொன்றும் மிரள வைப்பவை. ராணுவத்துக்குள் மதத்தை நுழைத்த புண்ணியவான். அரசுக்கு ஊன்றுகோலாக இருந்த உளவு நிறுவனத்தை, உலக்கையாக மாற்றி அதிரடி உபயோகம் செய்தார்.

ஆப்கன் விஷயத்தில் வல்லரசான சோவியத்தை எதிர்த்துக் களமிறங்கி, இன்னொரு வல்லரசான அமெரிக்காவை அசர வைத் தார். இன்னும் இன்னும் நிறைய சுவாரஸ்யங்கள் இருக் கின்றன அவருடைய வாழ்க்கையில். முக்கியமாக தனக்குக் கொம்பு சீவி வளர்த்துவிட்ட ஜுல்பிகர் அலி புட்டோவின் கழுத்தையே தூக்கில் தொங்கவிட்டு வேடிக்கை பார்த்தவர் ஜியா.

ஒரு சாதாரணப் போர்வீரனாக ராணுவத்துக்குள் நுழைந்த ஜியா, ராணுவ ஆட்சியாளராக மாறியதோடு, அத்தனை ஆண்டு காலம் தொடர்ச்சியாக ஆட்சி செய் தது பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் இன்றளவும் பிரமிப்பைத் தருகிற விஷயம். இந்த இடத்தில் ஜியாவுல் ஹக்கின் நதிமூல, ரிஷிமூலங்களைத் தெரிந்துகொள்வது அவசியம். அப்போதுதான் அவருடைய ராணுவத்தில் அவர் எத்தனை பெரிய மனிதர் என்பதையும் அவருடைய வளர்ச்சியின் விஸ்வரூபம் எப்படிப்பட்டது என்பதையும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் (1924) பிறந்தவர் முகமது ஜியா வுல்ஹக். தந்தை முகமது அக்பர், ராணுவ குமாஸ்தா. நடுத்தரத்துக்கும் சற்றே கீழான குடும்பம். அதற்கேற்ற வாழ்க்கை முறை. சிம்லாவில் பள்ளிப் படிப்பை முடித்த ஜியா பட்டம் வாங்கியது டெல்லியில் உள்ள கல்லூரியில்.

படிக்கும் காலத்திலேயே மனிதருக்கு ராணுவக் கனவுகள் வந்துவிட்டன. 1943-ல் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் தன்னை இணைத்துக்கொண்டார் ஜியா. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பர்மா, மலேயா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தது. கூர்தீட்டக் கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் கனக்கச்சிதமாகப் பயன் படுத்திக்கொண்டார். பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவத்தில் இணைந்தார்.
எதையும் விரைவாகக் கற்றுக்கொள்ளக் கூடியவர். நேர்மையானவர். திறமைக்குப் பஞ்சமில்லை. விளைவு, அமெரிக்காவில் இருக்கும் ராணுவக் கல்லூரியில் பயிற்சிகளுக்காக அனுப்பப்பட்டார். 1967-ல் ஜோர்டான் செல்ல வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஜோர்டான் மன்னரை, பாலஸ்தீன விடுதலைப் படை யினர் சிம்ம சொப்பனமாக இம்சித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவருக்கு நேசக்கரம் நீட்டிய தலைவர்களுள் ஒருவர், பாகிஸ்தான் அதிபராக இருந்த யாஹியா கான். ஒரு படையை ஜோர் டானுக்கு அனுப்பிவைத்தார். அதற்குத் தலைமை ஏற்றவர் ஜியாவுல் ஹக்.
ஜோர்டானில் அவர் நிகழ்த்திய மாயம், 1969-ல் பிரிகேடியர் அந்தஸ்தை வாங்கிக்கொடுத்தது. அடுத்த மூன்றாவது ஆண்டில் மேஜர் ஜெனரலானார். முல்தான் நகரில் பணியாற்றியபோது முதன்முதலாக புட்டோவை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பழகினார். நட்பு கனியத் தொடங்கியது.

ராணுவத்தில் இருக்கும் சாதாரண வீரர் தொடங்கி, தலைமை தளபதி வரை எல்லோருக்கும் மதுப்பழக்கம் ஒரு அடையாளம். யாஹியா கான், அயூப் கான் உள்ளிட்ட பலருக்கும் மது இல்லாமல் வேலை ஓடாது. சாப்பிடுவதற்கு முன் ஒரு பெக் விஸ்கி அடிக்காவிட்டால் அயூப் கானுக்கு சாப்பாடு இறங்காது. நண்பர்களுடன் இணைந்து மது அருந்தலாம் என்ற ஒரே காரணத்துக்காகவே அவ்வப்போது திட்டம் தீட்டலாம், ஆலோசனை நடத்தலாம் என்று அரட்டைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்வாராம் யாஹியா கான்.

பாகிஸ்தானில் இருக்கும் பாரம்பரியமிக்க பிண்டி கிளப் உள்ளிட்டவற்றில் அயூப் கான், யாஹியா கான் போன்ற ராணுவப் பெருந்தலைகளைப் பார்க்கலாம். ஆனால், ஜியா நேரெதிரான குணம் கொண்டவர். ஆல்கஹாலுக்கும் ஜியாவுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். வாடையே ஆகாது. கொஞ்ச காலம் சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தவர், பிறகு அதையும் விட்டுவிட்டார்.

ஜியாவின் அத்தனை அசைவுகளையும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருந்த புட்டோ, தான் அதிபரானதும் ஜியாவை ராணுவப்படையின் தலைவராக நியமித்தார். இது உண்மையிலேயே ஜியாவுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி. கூடுதல் தகுதி மிக்க அதிகாரிகள் பலர் இருந்தும் புட்டோவின் ஒரே சாய்ஸ், ஜியாவுல் ஹக்.

புட்டோ அதிபராக இருந்தபோது ஜியாவின் நடவடிக் கைகள் ஒவ்வொன்றும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துபவை. தான் அளவுக்கு அதிகமாக புட்டோவை நேசிப்பதை அவருக்கு நிரூபிக்க அதிகம் மெனக்கெடுவார் ஜியா. ஒரு நாள் புட்டோவை சந்தித்தபோது கையில் புனித குர்ஆனை வைத்துக்கொண்டு, 'புட்டோவே பாகிஸ் தானின் ஒரே மீட்பர். அவருக்கு என்றென்றும் நான் கடமைப்பட்டவன்!' என்று ஜியா சத்தியம் செய்தார் என்றுகூட ஒரு தகவல் பாகிஸ்தானில் பரபரப்பாக உலா வந்தது.

ஜியாவின் புட்டோ மீதான விசுவாசம் எந்த அளவுக்குச் சென்றது தெரியுமா? ஒரு முறை புட்டோவிடம் ஆலோ சனை நடத்துவதற்காக வந்திருந்தார் அமெரிக்க அதிகாரி ஒருவர். அந்தக் குறிப்பிட்ட சந்திப்பின்போது ஜியாவும் கலந்துகொண்டார். புட்டோவின் கண்ணசைவுக்கு ஏற்ப ஜியாவின் உடலசைவுகள் இருந்தன.

சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த அந்த அதிகாரி, 'புட்டோவுக்கு இன்னொரு நூரா கிடைத்திருக்கிறார்' என்று சொல்லிவிட்டுச் சென்றார். சங்கடத்தில் நெளிந் தனர், அதிபர் மாளிகை அதிகாரிகள். காரணம், நூரா என்பது புட்டோவின் வேலைக்காரர் நூர் முகம்மதுவின் செல்லப் பெயர். நிற்க.
ஜியாவுல் ஹக் இப்போது பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் பதவிக்கு வந்ததும், அவர் கொடுத்த வாக்குறுதிகள் மூன்று. 'தொண்ணூறு நாள்களில் தேர்தல் நடத்தப்படும்' என்பது அதில் ஒன்று. ஆனால், அதை நிறைவேற்றும் திட்டத்தை திடீரெனக் கைவிடுவதாக அறிவித்தார். 'மிகப் பெரிய தேர்தலை சந்திக்கும் அளவுக்கு தேசத்துக்கு நிதிபலம் இல்லை' என்ற ஒற்றை விளக்கத்தோடு முடித்துகொண்டிருந்தால் பரவாயில்லை. ஆனால், ஜியா வீசிய அணுகுண்டு, பாகிஸ்தான் அரசியல் கட்சிகளின் மைதானத்தில் விழுந்து வெடித்துச் சிதறியது.

'பாகிஸ்தான் அரசியல்வாதிகள் ஊழல்களின் ஊற்றுக்கண்களாக மாறியிருக்கிறார்கள். அவற்றை எல்லாம் களைந்த பிறகு தேர்தல் நடத்தினால் போது மானது என்பதுதான் பெரும்பாலான பொதுமக்களின் விருப்பம். ஊழல் செய்த மக்கள் பிரதிநிதிகள் மீது விசாரணை நடந்துவருகிறது. அந்தப் பணிகள் முடிந்து தண்டனைகள் அறிவிக்கப்படும். அரசியல் மீது படிந்தி ருக்கும் கறைகள் அகன்றதும் தேர்தல் நடத்தப்படும்.'
கொந்தளித்துவிட்டார் பேகம் நஸ்ரத். இவரை தெரி கிறதல்லவா? புட்டோ கைது செய்யப்பட்ட சமயத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டவர். புட்டோவின் மனைவி. 'நாட்டில் சட்டவிரோதமாக ராணுவம் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆகவே, அதைத் தகுதி இழக்கச் செய்து மக்களாட்சி ஏற்பட வழிசெய்ய வேண்டும்' என்று வழக்குத் தொடர்ந்தார் பேகம் நஸ்ரத்.

விஷயம் ஜியாவின் கவனத்துக்குச் சென்றது. மௌனமாகப் புன்னகை செய்துவிட்டு அடுத்த வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த யாகூப் அலி இரவில் அதிரடியாக நீக்கப்பட்டு, அந்த இடத்துக்கு அன்வர் உல் ஹக் அமர்த்தப்பட்டார். வழக்கை விசாரித்த புதிய நீதிபதி, 'ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதில் சட்டமீறல் எதுவும் இல்லை. நாட்டின் பாதுகாப்புக்கு ராணுவ ஆட்சி அவசியம் என்று கருதப்பட்டது. ஆகவே, அமல்படுத்தப்பட்டது' என்று தீர்ப்பு வழங்கி னார். சர்வம் ஜியா மயம்.

செப்டம்பர் 16, 1978... அதிபர் பஸல் இலாஹி சௌத்ரியின் பதவிக் காலம் முடிவுக்கு வந்தது. அவரு டைய பதவிக்காலத்தை நீட்டிப்பு செய்ய விரும்பினார் ஜியா. மறுத்துவிட்டார் சௌத்ரி. என்ன செய்யலாம்? சௌத்ரிபோல் அதிகம் பிரச்னை செய்யாத மனிதரை அதிபராக நியமிக்கவேண்டும். அதற்குக் கால அவகாசம் இல்லை. அவசரத்தில் செய்கிற காரியமும் இல்லை. கீழே இருப்பவனை மிதித்துக்கொண்டு மேலே போகும் ஆசாமிகள் அதிகம் உள்ள தேசம் இது. அந்தப் பொறுப்பையும் நாமே ஏற்றுக்கொண்டால் என்ன? யோசனை வந்த நிமிடமே நாட்டின் அதிபராகத் தன்னை அறிவித்துக்கொண்டார் ஜியா.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது. தேர்தலும் இப்போதைக்கு இல்லை என்றாகிவிட்டது. அதற்காக ஆக வேண்டிய காரியங்களை எல்லாம் ஆறப்போட முடியாது அல்லவா... அப்போது ஜியாவின் கனவில் உருவான திட்டம், மஜ்லிஸ் இ ஷ¨ரா. 'ஆலோசனைக் குழு' என்று இதற்கு அர்த்தம். பொருளாதார வல்லு நர்கள், நிர்வாகிகள், கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், சட்டமேதைகள் என்று பலரையும் உள்ளடக்கிய அமைப்பே இந்த மஜ்லிஸ் இ ஷ¨ரா. நாடு முழுவதிலும் இருந்து 284 பிரதிநிதிகள் அந்த அமைப்புக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். நாட்டை நிர்வகிக்க, திட்டங்களை வடிவமைக்க, பொருளாதாரத்தைச் சரிப்படுத்த, வெளியுறவை மேம்படுத்த என்று அதிபருக்குத் தேவையான அத்தனை ஆலோசனைகளையும் வழங்குவதுதான் அந்த அமைப்பினரின் பணி. 'அந்த உறுப்பினர்கள் எல்லாம் அதிபரால் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்பதால், அந்தக் குழுவால் சுயமாக, சுதந்திரமாக, உருப்படியாக ஒன்றும் செய்ய முடியாது' என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.

ஜியா எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. காரணம், அவருடைய கவனம் முழுக்க, அண்டை நாடான ஆப்கானிஸ்தான் மீது குவிந்திருந்தது. அங்கு வந்து களேபரம் செய்துகொண்டிருந்த சோவியத் துருப்புகள் பேயாட்டம் ஆடத் தொடங்கியிருந்தன. ஆபத்து. மிகப் பெரிய ஆபத்து. இன்று ஆப்கானிஸ்தானுக்கு வந்தது, நாளை பாகிஸ்தானுக்கு வராது என்று நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. ஏதாவது செய்தே தீரவேண்டும். நாற்காலியில் சாய்ந்தபடியே கண்களை மூடி சிந்தனையில் மூழ்கியிருந்தார் ஜியா. அந்த நேரம் பார்த்து...

'ஐயா, உங்களை சந்திக்க ஐ.எஸ்.ஐ. இயக்குநர் வந்திருக்கிறார்...'

இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நடத்தப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதல்

**************
11 March 2009
**************
கிரிக்கெட் மைதானம்... வெடிகுண்டு விளையாட்டு!

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாடச் சென்ற இலங்கை அணி, மயிரிழையில் உயிர்தப்பி மீண்டு வந்திருக்கிறது. இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்ற பேருந்தின் மீது துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் முதலியவற்றால் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், தாக்குதலை முடித்துவிட்டு சாவகாசமாகத் தப்பித்துச் சென்றிருக்கிறார்கள். இரண்டு குழுவினர் மோட்டார் சைக்கிள்களில் ஏறிச் சென்றதாகவும், ஒரு குழு நடந்தே சென்று தப்பித்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக் கின்றன. பாகிஸ்தான் ஒரு 'தோல்வி அடைந்த அரசு' என்பதற்கு இந்தத் தாக்குதல் இன்னொரு எடுத்துக்காட்டு என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட இந்தியா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளின் அணிகள் மறுப்புத் தெரிவித்து விட்டதால்தான், இலங்கை அணி அங்கு சென்றது. இலங்கைக்கு, பாகிஸ்தான் அளித்து வருகிற ராணுவ உதவிகளுக்கு நன்றிக்கடன் தெரிவிக்கவே, இக்கட்டான சூழலில் இலங்கை தன்னுடைய கிரிக்கெட் அணியை அனுப்பி பாகிஸ்தானின் மானத்தைக் காப்பாற்றியது என்று கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில்தான் பயங்கரவாதிகளின் தாக்குதல் நடைபெற்றி ருக்கிறது. மற்ற நாடுகளின் அணிகள் வர பயந்த நிலையில், இலங்கை அணி பாகிஸ்தானுக்கு விளையாட வந்தது பயங்கரவாதிகளின் கோபத்தை அதிகப்படுத்தியிருக்கக் கூடும்.

பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்பட்டுவரும் பயங்கரவாதக் குழுக்களில் முதன்மையானதாகக் கருதப்படும் லஸ்கர்-இ-தொய்பா, கிரிக்கெட்டைக் கடுமையாக எதிர்த்து வருகிற ஒரு இயக்கம்.

''பிரிட்டிஷ்காரர்கள் கிரிக்கெட் மட்டைகளை பாகிஸ்தானியர்களின் கையில் கொடுத்துவிட்டு அவர்களிடமிருந்த வாளைப் பறித்துக்கொண்டு விட்டார்கள். அதன் மூலம் பாகிஸ்தானை அவர்கள் அடிமைப்படுத்திக் கொண்டார்கள். பாகிஸ்தானின் பெண்களைக் கவர்ந்து கொண்டுவிட்டார்கள்!'' என்பது லஸ்கர்-இ-தொய்பாவின் பிரசாரங்களில் ஒன்று. ''பாகிஸ்தானியர்களே! இஸ்ரேலைப் பாருங்கள். அந்த நாட்டில் உங்களைப் போல கிரிக்கெட் அணி இருக்கிறதா? அது எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறது என்பதை எண்ணிப்பாருங்கள். எனவே, கிரிக்கெட் மட்டைகளைத் தூக்கியெறிந்துவிட்டு, கைகளில் வாள்களை ஏந்துங்கள்!'' என்று அந்த இயக்கம் அறைகூவல் விடுத்துவந்தது. இந்தப் பின்னணியில்தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. கிரிக்கெட் மீது பயங்கரவாதிகளுக்கு இருந்துவரும் வெறுப்பு மட்டுமல்லாது, அந்த விளையாட்டுக்கு உலகமெங்கும் கிடைத்துவரும் விளம் பரத்தைத் தாங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற திட்டமும் சேர்ந்துதான் இந்தத் தாக்குதல் நடப்பதற்குக் காரணமாகியிருக்கிறது என்பது உளவுத்துறை அதிகாரிகளின் வாதம். உலக மக்களின் கவனத்தைக் கவர்ந்துள்ள இலக்குகளைத் தாக்குவதன் மூலம் மிக எளிதாக விளம்பரம் பெற்றுவிடலாம் என்று பயங்கரவாதிகள் கருதுகிறார்கள். இதனால்தான் மும்பையில்கூட தாஜ் ஹோட்டலை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள் என்று இந்திய அதிகாரிகளும் கருத்துக் கூறியுள்ளனர். இந்தத் தாக்குதலால் பயங்கரவாதிகளுக்கு விளம்பரம் கிடைத்ததோ, இல்லையோ... பாகிஸ்தான் அரசு பற்றிய உலக நாடுகளின் மதிப்பீட்டை அது கூர்மைப்படுத்திவிட்டது. பாகிஸ்தான் அரசுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை. அங்கு பயங்கரவாதிகள்தான் ஆதிக்கம் செய்கிறார்கள் என்ற சந்தேகம் இப்போது நிரூபணமாகிவிட்டது. தாக்குதல் நடத்திய பிறகு நடந்தே சென்று பயங்கரவாதிகள் தப்பித்தார்கள் என்ற செய்தியும், இதுவரை தாக்குதல் நடத்திய ஒருவரைக்கூட பாகிஸ்தான் அரசு கைது செய்யமுடியவில்லை என்ற உண்மையும் இதைத்தான் தெளிவுபடுத்துகின்றன.

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்கு தல் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்கா, ''இது இலங்கைக்கும், பாகிஸ்தானுக்குமான நல்லுறவை கெடுப்பதற்காக நடத்தப்பட்ட தாக்கு தல்!'' என்று கூறியிருக்கிறது. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யின் முன்னாள் தலைவரும் இதேவிதமான கருத்தைத்தான் கூறியிருக்கிறார். இந்தத் தாக்குதலில் இந்தியாவின் பங்கு இருக்கிறது என்பதைப்போல அவர் பேசியிருக்கிறார். மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ் தானிலிருந்து செயல்பட்டுவரும் பயங்கரவாத அமைப்புகள்தான் காரணம் என்று இந்தியா குற்றம் சாட்டிவரும் நிலையில் இந்தத் தாக்குதலை, இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்துக்குப் பயன்படுத்த பாகிஸ்தான் முயற்சிக்கிறது. இந்தக் குற்றச்சாட்டை எவரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்றபோதிலும், மும்பைத் தாக்குதல் விசாரணையை திசைதிருப்ப பாகிஸ்தான் இதை பயன்படுத்தும் என்பதே இதில் வெளிப்படுகிற செய்தியாகும்.

இந்தத் தாக்குதல் குறித்து விசாரிப்பதற்கு அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. அமைப்பு விருப்பம் தெரிவித்தது. ஆனால், அதை பாகிஸ்தான் அரசு நிராகரித்துவிட்டது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உரிமை கோரவில்லை. லஸ்கர்-இ-தொய்பாவைப் பொறுத்தவரை அது, பாகிஸ்தான் மண்ணில் எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதலையும் நடத்தியதில்லை என்று கூறப்படுகிறது. எனவே, இந்தத் தாக்குதலுக்கு வேறு ஏதாவது அமைப்புகள் காரணமா என்ற நோக்கிலும் விசாரணை நடந்துவருகிறது. அண்மைக்காலமாக அமெரிக்கா வின் நெருக்குதலினால் பாகிஸ் தான் அரசு அங்குள்ள பல்வேறு தீவிரவாத அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இயக்கங்கள் எவையே னும், இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருக்குமா என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

இந்தத் தாக்குதலின் விளைவுகள் எப்படி யிருக்கும் என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம். பாகிஸ்தானின் கிரிக்கெட் விளையாட்டுக்கு இது மிகப்பெரும் பின்ன டைவை ஏற்படுத்திவிட்டது. இனிமேல் சர்வதேச அணிகள் அங்கு விளையாட வருமா என்பது சந்தேகம்தான். இதனால் பொருளாதார ரீதியாகவும் பாகிஸ்தானுக்கு நஷ்டம்தான். பாகிஸ்தான் அரசின் பலவீனம் இந்தத் தாக்குதலின் மூலம் அம்பலப்பட்டுப் போயிருப்பதால், அங்கு எத்தகைய அணுகுமுறையை இனிமேல் அமெரிக்கா பின்பற்றப்போகிறது என்பது ஒரு கேள்விக்குறி. அமெரிக்காவின் தலையீட்டின் காரணமாகத்தான் பாகிஸ்தான் அரசு இவ்வளவு தூரம் பலவீனம் அடைந்துவிட்டது. 'பயங்கர வாதிகளை ஒடுக்குகிறேன்' என்ற பெயரில் தன்னிச்சையாக அமெரிக்கா, பாகிஸ்தானில் மேற்கொண்டு வருகிற நடவடிக்கைகள்தான் இதற்கெல்லாம் அடிப்படை என்கிற குற்றச்சாட்டும் புறக்கணிக்கத்தக்கதல்ல. ''பாகிஸ்தானில் வளர்ந்துவரும் பயங்கரவாதம் உலகத் துக்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளது!'' என்று இந்தியத் தரப்பிலிருந்து சொல்லப் படுகிறது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாகிஸ்தானில் அதிகரித்துவரும் பயங்கர வாதத் தாக்குதல்கள் இந்தியாவின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஏற்கெனவே இந்தியா அதற்காக மிகப்பெரும் விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானிலிருந்து இயக்கப்படும் பயங்கர வாதிகளால் இந்திய உயிர்கள் ஏராளமாக பறிபோய் இருக்கின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்த அரசாக மாறுவது இந்தியா வுக்கு எந்தவிதத்திலும் நல்லதல்ல என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால், இதில் சில சாதகமான அம்சங்களும் இருக்கின்றன என கூறுவோரும் இருக் கிறார்கள். ராணுவ விஷயங்கள் குறித்து கருத்துக் கூறிவருகிற டாக்டர் சுபாஷ் கபிலா என்பவர் இப்படியரு கருத்தைத் தெரிவித் திருக்கிறார்.

''பாகிஸ்தான் முழுமையாக தாலிபன் மயமாகி வருவது இந்தியாவுக்கு ஒருவிதத்தில் நல்லது. தாலிபன் கட்டுப்பாட்டில் உள்ள நாடாக அது மாறிவிட்டால், அங்கு அமெரிக்காவின் நடவடிக்கைகள் தடுக்கப்பட்டு விடும். ஆப்கானிஸ்தான் பிரச்னையை முன்னிறுத்தி பாகிஸ்தானுக்குள் தலையிட்ட அமெரிக்கா, மெள்ள மெள்ள... அங்கு தன்னுடைய பிடியை அதிகரித்து வருகிறது. ராணுவ நோக்கிலிருந்து பார்த்தால், பாகிஸ் தானில் அமெரிக்காவின் ஆதிக்கம் உறுதிப்படுவது இந்தியாவுக்கு நல்லதல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்!'' என்கிறார் டாக்டர் சுபாஷ் கபிலா. அண்மைக்காலமாக பாகிஸ்தானை சீனாவும் தன்னுடைய ஆதரவு நாடாக மாற்றுவதற்கு முயற்சித்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், ''தாலிபன் மயமான பாகிஸ்தான் சீனா வுக்கும் உதவியாக இருக்காது'' என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவற்றின் செல்வாக்கைக் குறைப்பதற்கு அது தாலிபன் மயமாவது உதவும் என்பது சுபாஷ் கபிலாவின் கருத்தாகும்.

அமெரிக்கா மற்றும் சீனாவின் ஆதிக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி பேசுகிறவர்கள், தாலிபன் மயமா வதால் ஏற்படப்போகும் விளைவுகளைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. பாகிஸ்தான் முழுமையாக தாலிபன்களின் கட்டுப்பாட்டில் வருமேயானால், அதற்கான சர்வதேச வலைப்பின்னலுக்குள் அது சென்றுவிடும். அது அமெரிக்க-சீன ஆதிக்கத்தைவிடவும் அதிகப்படியான ஆபத்தை இந்தியாவுக்கு கொண்டுவந்து சேர்க்கும். ஏனென்றால் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதிகள் வெறுக்கின்ற ஒரு நாடாக இருப்பது இந்தியாதான். அதுபோல யூதர்களைப்போல இந்துக் களையும் அவர்கள் வெறுக்கிறார்கள். எனவே, பாகிஸ்தான் அவர்களுடைய முழுமையான கட்டுப் பாட்டுக்குள் வந்துவிட்டால், அது இந்தியாவுக்கு மிகப்பெரும் தொந்தரவாகவே முடியும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இந்தத் தாக்குதலால் ஏற்பட்டுள்ள உபவிளைவு ஈழத்தமிழர் பிரச்னைக்கு நேர்ந்துள்ள பின்னடைவாகும். இப்போது சர்வதேச நாடுகளின் கவனமெல்லாம் பாகிஸ்தானை நோக்கியே திரும்பியுள்ளது. தாக்கப்பட்டது இலங்கை கிரிக்கெட் அணி என்பதால் சர்வதேச நாடுகள் இலங்கைக்கு தம்முடைய ஆதரவை தெரிவித்து வருகின்றன. தமிழர்களை இனப்படுகொலை செய்துவருகின்ற இலங்கை அரசை கண்டித்து இப்போதுதான் சர்வதேச நாடுகள் பேசத் தொடங்கியிருந்தன. அதற்குள் இப்படியரு சம்பவம்.

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள தாக்கு தலை இந்தியா சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும். தேர்தல் நேரத்தில் ஐ.பி.எல். போட்டிகள் இங்கே நடக்கவுள்ளன. அதற்கு கூடுதலான பாதுகாப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் முடியும் வரை அந்தப் போட்டிகளை ஒத்திவைப்பதுதான் நல்லது என்ற கருத்தும் நிலவுகிறது. இதை இந்திய அரசும், கிரிக்கெட் வாரியத்தினரும் கவனமாகப் பரிசீலிக்கவேண்டும். தேர்தல் நடைபெறும்போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அது இந்தியாவின் எதிர் காலத்தையே திசைதிருப்பிவிடும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!

பாகிஸ்தான் பற்றிய தொடர் (17)

*************
8 March 2009
*************
ஜியா என்றொரு சுறா!

'ஆமாம். முறைகேடுகள் நடந்தது உண்மைதான்... மறுக்கவில்லை! எல்லாத் தொகுதிகளிலுமா நடந்துவிட்டது? இல்லையே... வெறும் முப்பது தொகுதிகளில்தானே நடந்துள்ளது. எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டம்? போய் வேலையைப் பாருங்கள்!'

-திமிர் குறையாமல் பேசினார் புட்டோ. தன்னம் பிக்கையா... தலைக்கனமா என்று இனம் காண முடியாத வகையில் இருந்தது அவருடைய பேச்சு. கொந்தளித்துவிட்டனர் எதிர்க்கட்சியினர். 'தேர்தல் முடிவுகளை ரத்து செய்யுங்கள். புதிதாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால், நாடு மிகப் பெரிய போராட்டங்களை சந்திக்கும். எது உங்களுக்கு வசதி?' கிடுக்கிப்பிடி போட்டனர்.

நிலைமையை சமாளிக்க எதிர்க்கட்சித் தலைவர் களுடன் சமரசம் செய்துகொள்ள விரும்பினார் புட்டோ. இரு தரப்புப் பிரதிநிதிகளும் பேசினர். ஆனால், முடிவு எதுவும் எட்டப்படாமல் விவகாரம் தொங்கலிலேயே இருந்தது. புட்டோவின் திட்டமும் அதுவாகவே இருந்தபடியால், அமைதியாக நாட்களை நகர்த்திக்கொண்டு இருந்தார். ஆறிய கஞ்சி பழங்கஞ்சியாகிவிடும் என்பது அவருடைய எதிர்பார்ப்பு.

அரசியல் வட்டாரம் குழப்பத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் சமயத்தில்... ராணுவப் படையின் தலைவர் ஜியா வுல் ஹக், ஓசையில்லாமல் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். கூடவே லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் அலி சிஸ்தி. அவரை ஜியாவின் மனசாட்சி என்று சொன்னால் பொருத்த மாக இருக்கும்.

'நாட்டில் கொந்தளிப்பு அதிகமாக இருக்கிறது. ஏதாவது செய்தே தீரவேண்டும்!' என்றார் ஜியா. 'இது தான் சரியான வாய்ப்பு என்பதால் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்' என்றார் ஃபைஸ் அலி சிஸ்தி. பலத்த யோசனைக்குப் பிறகு அவர்கள் மேற்கொள்ள இருந்த நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் ஃபேர் ப்ளே' என்று பெயர் வைக்கப்பட்டது. 'நல்ல நாடகம்' என்று அர்த்தம்.
நள்ளிரவு மணி பன்னிரண்டு. திடீரென பிரதமர் புட்டோவின் இல்லத்தில் நின்றிருந்த பாதுகாவ லர்கள் மாற்றப்பட்டனர். மேலிடத்து உத்தரவு என்று விளக்கம் சொல்லப்பட்டது. முற்றி லும் புதிய முகங்கள் ஆயுதங்களோடு நின்ற னர். பிரதமர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு ஏதோ நெருடியது. பிரதமரின் காதுக்குள் கிசுகிசுத்தனர். 'ம்ஹ§ம்... இருக்காது. ஜியா அப்படிச் செய்யக் கூடியவர் அல்ல. கவலைப்படாதீர்கள்!' என்று சமாதானம் சொல்லி அனுப்பிவைத்தார் புட்டோ.

சில நிமிடங்கள் கழித்து வாச லில் ராணுவ வாகனம் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அதிலிருந்து இறங்கிய அதிகாரி ஒருவர் விறுவிறுவென புட்டோவுக்கு எதிரே வந்து நின்றார். வழக்கமாக அடிக்கும் சல்யூட் எதுவும் இல்லை. புரிந்துவிட்டது புட்டோவுக்கு. ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டது. ஜியாவுல் ஹக்

பால் மாறிவிட்டார். நம்பிக்கை துரோகி. முணுமுணுத்தபடியே எதற்கும் ஒரு முறை டெலிபோனில் பேசிவிடலாம் என்று ரிஸீவரை எடுத்தார். உயிரிழந்து கிடந்தது டெலிபோன்.

'எனக்கு ஒன்றும் ஆகாது. எல்லாம் சரியாகிவிடும். அமைதியாக இரு...' வருத்தத்தில் சுருண்டு படுத்திருந்த மகள் பெனாசிரை தேற்றினார் புட்டோ. உண்மையில் அது தனக்கே அவர் சொல்லிக்கொண்ட சுய ஆறுதல். ஜூலை 5, 1977 அன்று அதிகாலையிலேயே முர்ரி நகரத்தில் இருக்கும் பங்களாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் புட்டோ. வழக்கம் போல ரேடியோவில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார் ராணுவ ஆட்சியாளர் ஜியாவுல் ஹக்.
'தேசத்தில் நிகழ இருந்த மிகப் பெரிய உள்நாட்டு யுத்தத்தைத் தவிர்க்கும் வகையில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. அனைத்து மாகாண அரசுகளும் கலைக்கப்படுகின்றன. பீதி வேண்டாம். பயம் வேண்டாம். நான் இருக்கிறேன். ஆகவே கவலையும் வேண்டாம். இன்று தொடங்கி சரியாக தொண்ணூ றாவது நாள் தேர்தல் நடத்தப்படும். பிறகு நாட்டின் நிர்வாகம் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்படும்!'

பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைக் சேர்ந்த முக்கியமான தலைவர்கள் பலரையும் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார் ஜியா. வம்பு செய்யும் ஆசாமிகள் என்ற சாயல் தெரிந்தாலே, அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். இதனால் ஜியா வின் நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்தன எதிர்க் கட்சிகள்.

புட்டோவுக்கு முடிசூட்டுவதற்காக அவருடைய அடிவருடியான ஜியாவுல் ஹக் நடத்தும் நாடகம் இது என்று குற்றம் சாட்டின. இந்த சமயம் பார்த்து ஜூலை 29 அன்று புட்டோ ஜாமீனில் விடுதலை செய்யப்படவே, எதிர்க்கட்சிகள் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கத் தொடங்கிவிட்டன. 'பார்த்தீர்களா... பார்த்தீர்களா... நாங்கள் சொன்னது உண்மையாகிவிட்டது!' என்று கூவின. மனதுக்குள் சிரித்துக்கொண்டார் புட்டோ.

ராணுவமே எல்லாம் என ஆன பிறகும் புட்டோ மீது துளியும் நம்பிக்கை குறையவில்லை மக்களுக்கு. அவர் ஒரு செல்வாக்கு மிக்க மக்கள் தலைவர் என்பதை அவரைப் பார்க்க வந்த ஜனத்திரள் நிரூபித்தது. அடுத்தடுத்து பொதுக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தது பாகிஸ்தான் மக்கள் கட்சி. அவருடைய பேச்சைக் கேட்கத் திமிறிக்கொண்டு வந்தது கூட்டம். மக்கள் தீர்ப்புக்கு எதிராக ராணுவ ஆட்சியாளர் செயல்படுகிறார் என்று ஜியாவை கடுமையாக விமர்சித் தார் புட்டோ.

கூட்டங்களில் புட்டோவின் பேச்சு கள், பொதுமக்களின் குரல்கள் எல்லாம் ஜியாவின் பார் வைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.முக்கியமாக பஞ்சாப் மாநிலம் முல்தான் பகுதியில் நடந்த கூட்டத்தில் அளவுக்கு அதிகமாக மக்கள் திரண்டிருந்தனர். இது ஜியாவை மிகவும் உறுத்தியது. கொஞ்சம் அலட்சியமாக இருந்தாலும் புட்டோ விஸ்வரூபம் எடுத்துவிடுவார் என்பதால், உடனடியாக அவரை கைது செய்ய உத்தர விட்டார் ஜியா. அதற்கு அவர் சொன்ன காரணம் விநோதமானது.

'மக்கள் எல்லோரும் புட்டோ மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே அதிக அளவில் திரண்டு வருகிறார்கள். ஒருவேளை, அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட் டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அவரு டைய உயிரைக் காப்பாற்றவேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அவரைப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்கிறது ராணுவம்!'

ஆடு, ஓநாய் கதையை நினைவுபடுத்திய இந்த விளக்கம் வருவதற்குள் தன்னுடைய பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக மனைவி நஸ்ரத்தை நியமித்திருந்தார் புட்டோ. செப்டம்பர் 17, 1977 அன்று மீண்டும் கைதான புட்டோ மீது கொலைச் சதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தூக்கிவாரிப் போட்டது புட்டோவுக்கு. 'யாரைக் கொல்ல சதி செய்தேன்? யாஹியா கானையா? அயூப் கானையா? அல்லது ஜியா வுல் ஹக்கையேவா?' -குழம்பிப்போயிருந்த புட்டோவுக்கு தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டது.
'அகமது ராஸா கஸ¨ரி என்பவர் பாகிஸ்தானின் முக்கியமான அரசியல்வாதி. தேர்ந்த வழக்கறிஞரும்கூட. அவருக்கும் புட்டோவுக்கும் இடையேயான முன் விரோதம் காரணமாக, கஸ¨ரியை கொலை செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தார் புட்டோ. ஒரு நாள் காரில் பயணம் செய்துகொண்டிருந்த கஸ¨ரியை துப்பாக் கியால் சுட்டுக் கொல்ல முயன்றார், புட்டோவின் கைக்கூலி ஒருவர். அப்போது அருகில் அமர்ந்திருந்த கஸ¨ரியின் தந்தை குண்டடிபட்டு மரணமடைந்தார். அந்த சம்பவம் தவிர பதினான்கு முறை கஸ¨ரியை கொலை செய்ய புட்டோவின் கைக்கூலிகள் முயற்சி செய்துள்ளார்கள். அத்தனையும் புட்டோவின் கண்ணசைவுக்கு ஏற்ப நடந்தவையே. ஆகவே, கொலைச்சதி தீட்டிய வழக்கில் நீங்கள் கைது செய்யப்பட்டுள் ளீர்கள்!'

வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது. யாருமே எதிர்பாராத திருப்பமும் வந்தது. சாட்சிகள் முரண்பாடாக இருக்கின்றன. குற்றச்சாட்டுகள் குழப்பத்தைத் தருகின்றன என்று கூறி புட்டோவை விடுதலை செய்தார் நீதிபதி சமாதனி. போன உயிர் வந்து சேர்ந்திருந்தது புட்டோவுக்கு. ஆனாலும், சளைக்காமல் அடுத்த ஆயுதத்தை எடுத்தார் ஜியா.

'அகமது ராஸா கஸ¨ரியை கொலை செய்ய சதி செய்த குற்றத்துக்காக ராணுவச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறீர் கள்!'

வாயடைத்துப்போனார் புட்டோ.ஜியாவை வெறும் அமைதிப் புறா என்று நினைத்திருந்தார் புட்டோ. திடுதிப்பென மாபெரும் சுறாவாக அவதாரம் எடுத்து தன்னையே விழுங்கக் கூடியவராக இருப்பார் என்று அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் கைது. வழக்கு விசாரணை. இந்த முறை வலுவாக வலை பின்னி யிருந்தார் ஜியா.

வழக்கமாக இதுபோன்ற வழக்குகள் கீழ் நீதிமன்றத் துக்குத்தான் வரும்.அதன் தீர்ப்புக்குப்பிறகு தேவைப் பட்டால் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு செல்ல லாம். ஆனால், புட்டோ மீதான வழக்கு மட்டும் நேரடியாக லாகூர் உயர் நீதிமன்றத்தில் வந்திருந்தது. இதன் மூலம் புட்டோவுக்கு நியாயமாகக் கிடைக்கக்கூடிய மேல் முறையீடு நிராகரிக்கப்பட்டது. எல்லாம் ஜியாவின் கைங்கர்யம்.

உயர் நீதிமன்றத்தில் புட்டோ வழக்கை விசாரிப்பதற்கென்று நீதிபதி மௌல்வி முஷ்டாக் அலி தலைமையில், ஐந்து நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். புட்டோவுக்குத் தரப் பட்டிருந்த ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. அக்டோபர் 24, 1977 அன்று வழக்கு விசா ரணைகள் தொடங்கின. நீதிமன்றத்தில் ஆஜரான புட்டோவை அவருக்கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கூண்டில் வைத்து விசாரணை செய்தனர்.

பலத்த வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு மார்ச் 18, 1978 அன்று புட்டோவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று சொல்லிவிட்டார் புட்டோ. ஆனால், அவருடைய குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர். மீண்டும் வழக்கு விசாரணை. கிட்டத்தட்ட நான்கு நாட்களுக்குத் தன்னிலை விளக்கம் கொடுத்தார் புட்டோ. அப்போது ஒரு குறிப்பைக்கூட கைவசம் வைத்துக்கொள்ளாமல் பேசினார். எல்லோரையுமே பிரமிக்க வைத்தது புட்டோவின் வாதம். எல்லாமே விழலுக்கு இறைக்கும் நீர் என்பதை புட்டோ நன்றாகவே உணர்ந்திருந்தார். அதுதான் நடந்தது.

மார்ச் 24, 1979 அன்று புட்டோவுக்கான தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. மறு நாள் ராவல்பிண்டியில் இருக்கும் மத்திய சிறைச்சாலை புட்டோவின் இறுதி யாத்திரைக்காகத் தயாராகியது. கடைசி நிமிடத்தில் ஜியா மனம் மாறுவார் என்று ஏங்கிக்கிடந்தனர் புட்டோவின் குடும்பத்தினர். தொண்டர் களும் அப்படியே. ஜியா மாறவில்லை; ஆகவே, தீர்ப்பும் மாறவில்லை!

கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டு காலப் பொதுவாழ்க் கையை ஒற்றைத் தூக்குக் கயிறு முடித்துவைத்தது. புட்டோவின் மரணம், ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் ஒரு கணம் ஸ்தம்பிக்க வைத்தது. அதே சமயம், மாபெரும் மக்கள் சாம்ராஜ்ஜியத்தை நடத்திய புட்டோவையே தூக்கில் போடும் அளவுக்கு வன்மம் பொருந்திய மனிதர் பாகிஸ்தானின் தலைமைப் பீடத்தை ஆக்கிரமித்திருக்கிறார் என்பது மக்களை வெலவெலக்க வைத் திருந்தது!

பாகிஸ்தான் பற்றிய தொடர் (16)

*************
4 March 2009
*************

அணுவின்றி அசையாது பாகிஸ்தான்!

ஆயிரம் கனவுகள் இருந்தன புட்டோவுக்கு. தேசத்தைப் பற்றி. அரசியல் பற்றி. ஆட்சி, அதிகாரம் பற்றி. ராணுவ எதிர்காலம் பற்றி நிறைய கனவுகள். அதில் ஒன்று, அணு ஆயுதக் கனவு.

அயூப்கானின் ஆட்சியின்போது ஐ.நா-வுக்குச் சென்ற குழுவில் உறுப்பினராக இருந்தபோதே மனிதருக்கு அணு ஆயுதக் காதல் வந்துவிட்டது. காரணம், முந்தைய ஆண்டுதான் பாகிஸ்தானில் இருக்கும் நாற்பது விஞ்ஞானிகளைத் தங்கள் நாட்டுக்கு அழைத்துச்சென்று அணு இயற்பியல் பற்றிய பால பாடங்களைக் கற்றுக்கொடுத்து அனுப்பியிருந்தது அமெரிக்கா.

அமெரிக்காவில் பயிற்சி பெற்ற நாற்பது விஞ்ஞானிகளும் அணு ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு வசதியாக 1956-ல் பாகிஸ்தான் அணுசக்தி ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதைவைத்து மிகப்பெரிய வித்தை களைக் காட்டி உலகத்தை பிரமிக்க வைக்கலாம். குறிப்பாக, இந்தியாவை மிரளவைக்கலாம் என்று கனவு காணத் தொடங்கியிருந்தார் புட்டோ.

துடிப்பு நிறைந்த மனிதரான புட்டோவுக்கு மிக முக்கியமான அமைச்சகம் வழங்கப்பட்டது. கனிம வளத்துறை. அது போதாதா..? உற்சாகம் பொங்க அணு ஆராய்ச்சிப் பணிகளுக்குப் பச்சைக்கொடி காட்டினார் புட்டோ. அதன்பிறகு, பாகிஸ்தானின் அணுசக்தி ஆணையம் நாலு கால் பாய்ச்சலில் நடைபோடத் தொடங்கியது.

டாக்டர் இஷ்ராத் உஸ்மானி என்பவர் அணுசக்தி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். உடனடியாக பின்ஸ்டெக் என்ற அணுசக்தி நிறுவனம் மற்றும் பிஸ்ட் என்ற அறிவியல் நிறுவனம் ஆகியவற்றை உருவாக்கினார். கூடவே, கராச்சியில் அணுசக்தி மையம் ஒன்றும் உருவாக்கப்பட்டது.
தேசம் முழுக்க இயற்பியல் மாணவர் களைக் கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. அணு விஞ்ஞானிகள் ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்று திறமை நிறைந்த மாணவர்களைத் தேடிப்பிடித்து அழைத்துவந்தனர். பலத்த வடிகட்டலுக்குப் பிறகு அறுநூறு மாணவர் கள் தேர்வு செய்யப்பட்டனர். வெவ்வேறு காலகட்டங் களில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட அவர் களுக்கு, அங்கே அணு இயற்பியல் பயிற்சிகள் தரப் பட்டன.

பாகிஸ்தான் அணு ஆயுதத்தில் ஆர்வம் செலுத் தியது அமெரிக்காவின் கவனத்தை ஈர்த்தது. அப்போது அமெரிக்காவின் நட்பு வளையத்தில் இருந்தது பாகிஸ்தான். ஆகவே, அதன் ஆர்வத்துக்குத் தீனிபோடும் வகையில் மூன்றரை லட்சம் அமெரிக்க டாலர்களை ஆயுத உதவியாக அளித்தது. அந்தப் பணத்தைக் கொண்டுதான் பாகிஸ்தான் அணு ஆராய்ச்சி ரியாக்டர் (PARR-1) உருவாக்கப்பட்டது.

பிறகு, 1964-ல் வெளியுறவுத்துறை அமைச்சராக புட்டோ நியமிக்கப்பட்டார். அரசியல் சங்கதிகள் ஆயிரம் இருந்தன. காய் நகர்த்தல்கள் நிறைய செய்ய வேண்டியி ருந்தன. இருப்பினும், தன் 'அணு' காதலை புட்டோ கைவிடவே இல்லை.

அப்போது தன்னுடைய அணுஆயுதக் கனவுக்கு சீனப் பிரதமர் சூ யென் லாய் நேசக்கரம் நீட்டுவார் என்பது புட்டோவின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதைச் சொல்லியே அதிபர் அயூப்கானை அழைத்துக் கொண்டு பீஜிங் சென்ற புட்டோ, சூ யென் லாயிடம் உதவி கேட்டார். அமெரிக்கக் கூடாரத்தில் இருந்து விலகி தன்னுடைய மந்தைக்கு வந்த ஆட்டை எப்படி மேய்ப்பது என்பது சூ யென் லாய்க்குத் தெரியாதா? 'உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். நம்பிக்கையாகப் போய்வாருங்கள்' என்று ஊக்கம் கொடுத்து அனுப்பிவைத்தார்.

சூ யென் லாயின் உத்தரவாதம் புட்டோவுக்கு மன வலிமையை வாரி வழங்கியிருந்தது. செய்தியாளர்களை சந்தித்த புட்டோ, 'இந்தியா அணுகுண்டு தயாரிக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் வெறுமனே அதை வேடிக்கை பார்க்காது. பட்டினி கிடந்தோ அல்லது புல்லைத் தின்றோ எங்களுக்கென்று ஒரு அணுகுண்டையாவது தயாரிக்காமல் விடமாட்டோம்' என்று முழங்கினார். அதன்பிறகு, அரசியல் மாற்றங்கள் புயல் வேகத்தில் நிகழ்ந்து, ராணுவ ஆட்சியாளராக வந்து அமர்ந்து விட்டார் புட்டோ.

அணு ஆயுத சோதனைகள் அடுத்த நகர்வு குறித்து ஆலோசனை செய்வதற்காக பலுசிஸ்தானின் முக்கிய நகரமான குவெட்டாவில் ரகசியக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தார் புட்டோ. அந்தக் கூட்டத்துக்கு அப்துஸ் சலாம், இஷ்ராத் உஸ்மானி, முனிர் அகமது கான் உள்ளிட்ட வெகுசில அணுசக்தி மூளைகளே அழைக்கப்பட்டிருந்தன. ஆனால், திடீரென கூட்டத்தை பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் முல்தான் நகருக்கு மாற்றினார்.

ஜனவரி 24, 1972 அன்று நிகழ்ந்த அந்தக் கூட்டத்தில் அணுகுண்டு மற்றும் அணுஆயுதங்கள் குறித்த தன் கனவுகளை அணு விஞ்ஞானிகளிடம் கண்கள் விரிய விவரித்த புட்டோ, பேச்சின் இறுதியில் சொன்னது இதுதான்:
'இனி உங்கள் அனைவருடைய சுவாசம், சிந்தனை, செயல் எல்லாமே அணுகுண்டுதான்!'

விஞ்ஞானிகளை அணுகுண்டின் பக்கம் அனுப்பி விட்டு மீண்டும் அரசியல் களத்துக்கு வந்தார் புட்டோ. காரணம், கடமைகள் இரண்டு காத்துக்கொண்டு இருந்தன. 1971 யுத்தத்தின்போது இந்தியாவிடம் பறிகொடுத்த இடத்தை பேச்சுவார்த்தை மூலம் மீட்டெடுக்க வேண்டும். இந்தியாவிடம் சரணடைந்த பாகிஸ்தான் வீரர்களைத் திரும்பப்பெற வேண்டும். உலக நாடுகளின் உதவியோடு இரண்டை யுமே சுலபமாகச் சாதித்துவிட முடியும். இருந்தும், புட்டோவின் மூளை குறுக்குவழியில் சிந்தித்தது.

இந்தியா வசம் சிறைபட்டிருக்கும் வீரர்களுடய குழந்தைகளின் தவிப்பைக் கடிதம் மூலமாக வெளிப் படுத்தி உலக நாடுகளின் அனுதாபத்தைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டார் புட்டோ. அப்போது தொண்ணூறாயிரம் பேர் போர்க்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் எழுபதாயிரம் பேர் ராணுவ வீரர்கள். உள்நாட்டுப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களே மீதமுள்ள இருபதாயிரம் பேர்.

இந்திய-வங்கதேசக் கூட்டுப்படையினரிடம்தான் பாகிஸ்தான் ராணுவத்தினர் சரணடைந்தனர். வங்க தேச அதிபர் முஜிபுர் ரஹ்மானுக்கு, வீரர்களைத் திரும்ப ஒப்படைப்பதில் விருப்பமில்லை. ஆகவே, 'என்னால் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது' என்று கைவிரித்துவிட்டார் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி.

'சரி, அந்தப் பிரச்னையை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். முதலில் எங்களிடமிருந்து கைப்பற்றிய நிலப்பகுதிகளை ஒப்படையுங்கள்' என்று கேட்டார் புட்டோ. இதுவிஷயமாகப் பேசுவதற்கு சிம்லாவில் சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. அப்போதுதான் பெனாசிர் என்ற பெண்ணின் முகம் உலக நாடுகளின் பார்வையில் தென்பட்டது. அப்பா புட்டோவுடன் வந்திருந்தார்.
பலகட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போர் நிறுத்தக் கோட்டை, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடாக ஏற்றுக்கொள்ள சம்மதித்தார் புட்டோ. ஆனால், அதையே சர்வதேச எல்லையாகத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி விட்டார். இறுதியாக, ஜூலை 3, 1972 அன்று சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தங்கள் வசம் இருந்த போர்க்கைதிகளைத் திரும்ப ஒப்படைத்தது இந்தியா.

'போர்க்கைதிகளை விடுவித்து மக்கள் மத்தியில் தன்னை சாதனையாளராகக் காட்டிக்கொள்ள விரும்பினார் புட்டோ. அதற்காகவே சிம்லா ஒப்பந்தத்தில் நிறைய சமரசம் செய்துகொண்டார்' என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டத் தொடங்கின. அதற்கெல்லாம் கவலைப்பட்டு மூலையில் உட்காரும் ரகத்தைச் சேர்ந்தவர் அல்ல புட்டோ.

ராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்களைத் தருவிப்பது தொடர்பாக வடகொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தொடங்கினார். உண்மையில், விடுபட்டுப் போன பேச்சுவார்த்தை அது. அயூப்கான் காலத்திலேயே வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற முறையில் வடகொரியா சென்றிருந்த புட்டோ, ஆயுதம் தொடர்பாக அஸ்திவாரம் போட்டுவிட்டு வந்திருந்தார்.
பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, பாகிஸ்தான்-வடகொரியா இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. உடனடியாகக் கப்பல் மூலமாக ஏராளமான ஆயுதங்கள் கராச்சிக்கு வந்திறங் கின. ஏவுகணைகள், ஏவுகணை செலுத்தி, வெடி பொருள்கள் மற்றும் சில உதிரி பாகங்கள் ஆகியவை வந்திறங்கின. இதற்கான தொகையை அமெரிக்க டாலர்களாகக் கொடுத்தது பாகிஸ்தான் அரசு. அதன்பிறகுதான் பாகிஸ்தானுக்கான முதல் அணு உலை உருவாக்கப்பட்டது.

அணு ஆராய்ச்சி விஷயத்தில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டபோதும் புட்டோவுக்கு அவர்களுடைய வேகத்தில் திருப்தியில்லை. தவிரவும், அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த விஞ்ஞானிகள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் முளைத்திருந்தன. இதனால் பாகிஸ்தான் அணுசக்தி ஆணையத்தின் தலைவராக இருந்த உஸ்மானியைப் பதவி நீக்கம் செய்துவிட்டு, முனீர் அகமது கானை நியமித்தார் புட்டோ.

தவிரவும் புட்டோவின் கனவுத்திட்டமான அணுகுண்டுத் தயாரிப்புக்கு நிறைய நிதி ஆதாரம் தேவைப்பட்டது. எல்லாவற்றுக்கும் கையை ஊன்றிக் கரணம் போட முடியாது. கொஞ்சம் அக்கம் பக்கத்து ஆசாமிகளின் உதவி வேண்டும் என்ற நிலை. சிறிதும் தயக்கமின்றி சுற்றுப் பயணம் கிளம்பினார் புட்டோ. அப்போது அவர் குறிவைத்த நாடுகள் எல்லாமே மத்திய கிழக்கில் இருக்கும் இஸ்லாமிய நாடுகள்.

ஈரான், துருக்கி, மொராக்கோ, லிபியா, எகிப்து, சிரியா, சவூதி அரேபியா என்று பல நாடுகளுக்கும் சென்று 'புதிய பாகிஸ்தானை நிர்மாணிக்க உதவுங் கள்' என்று வேண்டுகோள் விடுத்தார் புட்டோ. எல்லோருமே மையமாகத் தலையாட்டி வைத்தனர். அதிகாரப்பூர்வமாக யாரும் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. ஆனாலும், நம்பிக்கை குறையாமல் பாகிஸ்தான் வந்திறங்கினார் புட்டோ.

திடீரென புட்டோவுக்கு ஏதோ பொறிதட்டியது. ஆம்... அவருடைய ஆட்சிக்கு எதிராக ராணுவப் புரட்சி நடத்த ராணுவ அதிகாரிகள் திட்டம் போட்டிருப்பது புட்டோவின் கவனத்துக்கு வந்தது. கண்ணசைத்தார். உடனடியாக 59 ராணுவ அதிகாரிகள் கைது செய்யப் பட்டனர். நொடிப் பொழுதில் ராணுவப் புரட்சி பிசுபிசுத்துப்போனது. இனிமேலும் பழைய நபர்களை நம்பினால் சரியாகாது என்ற முடிவுக்கு வந்த புட்டோ, ராணுவ பிரிகேடியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஜியா உல் ஹக் தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்தார்.

இதற்கிடையே புதிய அரசியலைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி பாகிஸ்தான் ஒரு இஸ்லாமியக் குடியரசாக மாறியது. அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கிய புட்டோ, தான் வகித்து வந்த அதிபர் பதவியை ஃபஸல் இலாஹி சௌத்ரிக்கு வழங்கிவிட்டு ஆகஸ்ட் 14, 1973 அன்று பாகிஸ்தானின் பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

நாற்காலியை மாற்றிக்கொண்டாரே ஒழிய, தன் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளவில்லை புட்டோ. அரசியல். ஆயுதம். அணுசக்தி. இத்யாதி இத்யாதி விஷயங்களில் கவனம் செலுத்திக்கொண்டே இருந்தார். கொஞ்சம் கவனம் கலைந்தாலும் அவரை உசுப்பேற்றும் காரியத்தில் இறங்கி சேவை செய்தது இந்தியா.

மே 18, 1974. இந்தியா முதன்முறையாக அணுகுண்டுச் சோதனை ஒன்றை நிகழ்த்தியது. அதற்கு சூட்டப்பட்ட சங்கேதப் பெயர், 'சிரிக்கும் புத்தர்.' ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் வெடித்த அந்த குண்டு புட்டோவின் தூக்கத்தைச் சிதறடித்தது!