Thursday 26 February, 2009

பாகிஸ்தான் பற்றிய தொடர் (15)

****************
1 March 2009
****************

நிறையப் பேச்சு... கொஞ்சம் செயல்!

'தேசத்தைக் குழிதோண்டிப் புதைத்த புண்ணிய வான்!'

-பாகிஸ்தான் என்ற தேசத்தையும் அதன் ராணுவத்தையும் தன் உள்ளங் கைக்குள் அடக்கி வைத்திருந்த யாஹியா கானுக்கு, 1971 யுத்தத்தின் இறுதியில் கிடைத்த பட்டம் இது தான். நிலைகுலைந்து போன யாஹியா கான், தன் நெருக்கமான நண்பர்களுடன் ஒரு ரகசிய சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். மனத்திலிருந்த அத்தனை சோகத்தையும் மொத்தமாகக் கொட்டித்தீர்த்துவிடும் எண்ணத்தில் இருந்தார் யாஹியா கான் அன்று.
'போதும்... இனியும் பதவியில் இருப்பதை விட அவமானம் எதுவுமில்லை. விலகிவிடுகிறேன். என்ன சொல்கிறீர்கள்?'

கண் கலங்கிவிட்டார்கள் நண்பர்கள். பிறகு ஆளுக் கொரு யோசனை சொன்னார்கள். வெவ்வேறு கோணங் களில் சொல்லப்பட்டாலும் அடிப்படை ஒன்றுதான். 'அவசரம் வேண்டாம்... நிதானமாக யோசியுங்கள். முடி வெடுங்கள்!' மீண்டும் யோசனையில் மூழ்கிவிட்டார் யாஹியா கான்.
அதற்குள் அமெரிக்கா சென்றிருந்த புட்டோவுக்கு மூக்கில் வியர்த்துவிட்டது. உபயம்: புட்டோவின் அடிப் பொடிகள். பாகிஸ்தானில் கடுகு தொலைவது முதல் மிளகு உருள்வது வரை எல்லாவற்றையும் அணுவளவு மாற்றமின்றி, அவர்கள் புட்டோவிடம் கொண்டு சேர்த்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள். அவர்கள் ரகசிய ஆலோசனை செய்யும் விஷயம் காதில் விழுந்ததும் மனிதருக்கு இருப்புக் கொடுக்குமா? மின்னல் வேகத்தில் புறப்பட்டு வந்து சேர்ந்தார்.

பேசிப்பேசியே பலருடைய மனத்தைக் கரைத்த மனித ருக்கு, ராணுவ வீரர்களை வளைப்பதில் அதிக சிரமம் இருக்கவில்லை. புட்டோவின் உணர்ச்சிப் பிரவாகப் பேச்சில் மயங்கி... வலியவந்து ஆதரவு தெரிவித்தனர் ராணுவத்தினர். யாஹியாவுக்கு மாற்றாக நினைக்கலாம் என்று கருதப்பட்ட முஜிபுர் ரஹ்மானும் தனிக்குடித்தனம் போய்விட்டதால், மக்களுக்கு புட்டோவை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி யில்லை!

துளியும் ஆர்ப்பாட்டமின்றி ஆட்சியைக் கைப்பற்றி னார் புட்டோ. ஜனநாயகவாதி என்று தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட புட்டோ, ராணுவ அதிகாரத்தைப் பூசிக்கொண்ட தினம் டிசம்பர் 20, 1971. ஆட்சிக்கு வந்ததும் செய்த முதல் காரியமே ராணுவப் படையின் தலைவராக இருந்த ஜெனரல் ஹமீதை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அவருடைய இடத்துக்கு குல் ஹாஸன் என்பவரை நியமித்ததுதான். பதவியேற்பதற்கு முன்பே இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு இருந்தது. குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால்... புட்டோவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவதற்கு, பல உள் வேலைகளைப் பக்காவாகச் செய்திருந்தவர் குல் ஹாஸன்.
'என்னதான் நட்பு இருந்தாலும் காரியம் என்று வரும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும்!' என்று நினைத்தார் குல் ஹாஸன். இதனால் பலத்த நிபந்தனைகளுக்குப் பிறகுதான் ராணுவப் படையின் தலைவர் பதவியை ஏற்றார். 'என்னுடைய பணியில் யாரும் குறுக்கிடக் கூடாது. அநாவசியமாக ராணுவ விஷயங்களில் தலையிடக் கூடாது...' என்றெல்லாம் சகட்டுமேனிக்குக் கெடுபிடிகள் போட்டிருந்தார். பதவி கொடுத்தால் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளாமல், பந்தா செய்கிறாரே என்று ஒரு பக்கம் எரிச்சலாக இருந்தது புட்டோவுக்கு. இருந்தாலும் இப்போதைக்கு இவரை விட நல்ல ஆள் இல்லை. குல் ஹாஸனின் பேச்சுகளை சகித்துக்கொண்டு எல்லாவற்றுக்கும் மர்மமாகத் தலையாட்டினார் புட்டோ.
'அடிபட்ட வேங்கையை அடைத்து வைக்கவேண்டும். சுதந்திரமாக உலவவிட்டால்... சூனியம் வைத்துவிடும்!' என்று அடிக்கடி பேசுவார் புட்டோ. செயலிலும் அதை நிரூபித்தார். ஆம். யாஹியா கானை திடுதிப்பென வீட்டுச் சிறைக்குள் ஒரே இடத்தில் முடக்கி வைத்தார்.

வெளியே திரிந்த வேங்கையை கூண்டுக்குள் அடைத்த புட்டோ, அடுத்த கூண்டுக்குள் அடைக்கப்பட்டுக் கிடந்த சிங்கமான ஷேக் முஜிபுர் ரஹ்மானை விடுதலை செய்தார். யாஹியாவை விட, தான் மிகவும் நல்லவன் என்று உலகுக்குக் காட்டுவதற்குக் கிடைத்த அற்புதமான வாய்ப்பு அது. பயன்படுத்திக்கொண்டார். விடுதலையாகி ஓய்வெடுத்துக்கொண்டிருந்த முஜிபுரை திடீரென நேரில் வந்து சந்தித்தார் புட்டோ. எதற்காக வந்திருக்கிறார் என்று தெரியாமல் விழித்தார் முஜிபுர். நிலைமையை சகஜமாக்கிவிட்டு நேரடியாக விஷயத் துக்கு வந்தார் புட்டோ.

'நாம் பிரிந்துவிட்டோம்... பரவாயில்லை. இருந்தாலும் உறவு தொடரவேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் இதற்காகச் செய்ய வேண்டியது ஒன்றுதான். வெளியுறவு, ராணுவம், தொலைத்தொடர்பு என்று மூன்று முக்கியமான துறைகளையும் நாம் இணைந்து நிர்வகிக்க நீங்கள் சம்மதம் தெரிவிக்கவேண்டும். என்ன சொல்கிறீர்கள்?'

'சாத்தியமில்லை என்றுதான் நினைக்கிறேன். வேண்டு மானால், என் மக்களிடம் ஆலோசனை நடத்திவிட்டுச் சொல்கிறேன்...'

முஜிபுரின் முகத்தை வைத்தே, 'இது வேலைக்கு ஆகாது!' என்ற முடிவுக்கு வந்துவிட்ட புட்டோ, பிறகு ரேடியோ மூலமாக பாகிஸ்தான் மக்களிடம் பேசினார்.

'நாடு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. நம்மு டைய அத்தனை சக்திகளையும் ஒன்று திரட்டி, நாட்டை மீட்டெடுக்கவேண்டும். புதிய பாகிஸ்தானை உருவாக்க வேண்டும். இவைதான் என்னுடைய கனவுகள். நனவாக ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறேன்!'

வெறுமனே சொன்னதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. நித்தம் ஒரு அறிவிப்பு வெளியிட்டு மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துக்கொண்டிருந்தார். இரும்பு, எஃகு, கனரகத் தொழில், பெட்ரோலியம், சிமென்ட் உள்ளிட்ட அத்தனை முக்கியத் துறைகளும் தேசிய மயமாக்கப் படுகின்றன என்ற அறிவிப்பு எல்லோரையும் நிமிர்ந்து பார்க்க வைத்தது!

அடுத்து, நில உச்சவரம்பு சட்டத்தைக் கொண்டுவந்து, ஒரு மில்லியன் ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தி நிலமற்ற ஏழைகளுக்கு அன்புப் பரிசு வழங்கினார். எல்லோருக்கும் தலை கால் புரியவில்லை! மக்களுடைய அபிமா னத்தை எத்தனை விரைவாகப் பெற முடியுமோ... அத்தனை விரைவாகப் பெற்றுவிட வேண்டும் என்ற துடிப்பு அவருடைய ஒவ்வோர் அசை விலும் தென்பட்டது.

இப்போது புட்டோவின் கவனம் ராணுவம் மீது திரும்பியது. ராணுவம் இயங்கவேண்டும்; வளர்ச்சியின் உச்சத்துக்குச் செல்லவேண்டும். ஆனால், எந்தக் காரணத்தை முன்னிட்டும் என்னுடைய பிடியில் இருந்து நழுவக்கூடாது. 'கொஞ்சம் அசட்டையாக இருந்தாலும் கழுவிலேற்றி விடுவார்கள்!' என்பது புட்டோவின் கணிப்பு. தன்னுடைய கணிப்பை ராணுவத்துக்குப் புரியவைக்க விரும்பினார். எப்படி?

தனக்கு நெருக்கமான ராணுவ அதிகாரிகளை அருகில் வைத்துக்கொண்டு பட்டியல் ஒன்றைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார் புட்டோ. முன்னாள் அதிபர் களான அயூப்கான் மற்றும் யாஹியா கான் காலங்களில்... எந்தெந்த ராணுவ அதிகாரிகளுக்கெல்லாம் தலையில் கொம்பு முளைத்திருந்தது, யாரெல்லாம் முக்கிய முடிவுகளுக்குப் பின்னணியில் செயல்பட்டார்கள் என்பதெல்லாம் தோண்டியெடுக்கப்பட்டன.

பலத்த ஆராய்ச்சிக்குப் பிறகு 29 அதிகாரிகளைக் கொண்ட பட்டியல் தயாரானது. இரண்டு ஜெனரல்கள், பதினோரு லெப்டினன்ட் ஜெனரல்கள், பத்து மேஜர் ஜெனரல்கள், ஆறு பிரிகேடியர்கள் ஆகியோரை உள்ளடக்கி இருந்தது அந்தப் பட்டியல். பிறகு அதிபர் மாளிகையிலிருந்து அறிவிப்பு வெளியானது.
'பணியை ஒழுங்காகச் செய்யாமல் ஊழலில் திளைத்துக்கொண்டிருந்த 29 ராணுவ அதிகாரிகள் இன்று முதல் பதவி நீக்கம் செய்யப்படுகிறார்கள். இது வெறும் களையெடுப்புதானே தவிர, ராணுவத்தை சிதைக்கும் நடவடிக்கை அல்ல. மெள்ள மெள்ள ராணுவத்துக்குப் புது ரத்தம் பாய்ச்சிக் கொண்டிருக்கிறேன். கவலை வேண்டாம்!'

-சொல்லிவிட்டு, அடுத்த வேலைகளில் மும்முரம் காட்டத் தொடங்கினார். முக்கியமாக ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பல உயரதிகாரிகளுக்குப் பதவி உயர்வு, பதவி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்ய வேண்டியிருந்தது. அதற்காக ராணுவப் படையின் தலைவர் குல் ஹாஸன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்து கொள்வதற்காக அதிபர் என்கிற முறையில் புட்டோ வந்தார். அங்கே அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

'நான் ஏற்கெனவே விதித்த நிபந்தனைகளை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன் புட்டோ. ராணுவப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிபரான நீங்கள் பங்கு பெறவேண்டிய அவசியம் இல்லை. ஆகவே, உங்களை நான் அனுமதிக்க மாட்டேன்!'

தூக்கிவாரிப் போட்டது புட்டோவுக்கு. என்ன மனிதர் இவர்? மூளைக்கோளாறு ஏதும் வந்துவிட்டதா? நெற்றியைச் சுருக்கியபடியே யோசித்தார் புட்டோ. அவசரப்பட்டு அவமானத்தைச் சந்திக்க அவர் விரும்ப வில்லை. வேறோர் உபாயம் மூலமாக குல் ஹாஸனை மடக்க நினைத்தார்.

'உங்களுடைய நிலைமை புரிகிறது ஹாஸன். இருப் பினும் என் தலைமையில் நடக்கும் அமைச்சரவைக் கூட்டங்களில் நீங்கள் கலந்துகொள்வதில், எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அதன்படி நானும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளலாம் என்று விரும்பு கிறேன்...'
'அமைச்சரவைக் கூட்டத்தில் எனக்கு ஆர்வமில்லை!' -முகத்தில் அடிப்பதுபோல வந்தது குல் ஹாஸனின் பதில்.

'நண்பர், நல்லவர் என்றெல்லாம் நினைத்து வலியப் போய் வம்பை வாங்கிவிட்டோமே...' என்று வருத்தமாக இருந்தது புட்டோவுக்கு. நேரம் பார்த்துக் கணக்குத் தீர்த்துவிட வேண்டும் என்று புலம்பிக்கொண்டே வெளியேறி விட்டார் புட்டோ.

நினைத்ததை நடத்தி முடிப்பதற்குச் சரியான வாய்ப்பாக அமைந்தது, பெஷாவரில் உருவான காவல் துறைப் போராட்டம். சில அடிப்படை பிரச்னைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்ட காவலர்களை அடக்குவதற்கு ராணுவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிலை. ஆனால், குல் ஹாஸனுக்கு அதில் உடன்பாடு இல்லை. அதனால் என்ன? புட்டோவுக்கு ஆர்வம் இருக்கிறதே! உடனே களத்தில் இறங்கி விட்டது ராணுவம். காரியமும் கச்சிதமாக முடிக்கப்பட்டது. கலவரம் ஓயந்தது.

புன்னகை ததும்ப ரேடியோவில் பேசத் தொடங்கினார் புட்டோ. 'கலவரம் பெரிய அளவில் முற்றிய பிறகு முறையாகச் செயல் படத் தயங்கிய குல் ஹாஸனுக்கு பதிலாக லெஃப்டினன்ட் ஜெனரல் டிக்கா கானை நியமித்துள்ளேன்!'

எதிர்த்துப் பேசத் திராணியற்று வெளி யேறினார் குல் ஹாஸன். எல்லாம் முடிந்ததும் டிக்கா கானை அழைத்தார் புட்டோ.

'ராணுவ வீரர்களை மேய்ப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள், போதும். அரசியல் விஷயத்தில் மூக்கை நுழைக்கலாம் என்று கனவில் தோன்றினாலும் ராஜினாமா கடிதத்தை எழுதிக் கொடுத்துவிடுங்கள்!' என்று செல்ல எச்சரிக்கை விடுத்தார் புட்டோ. மிரட்சியுடனேயே தலையாட்டி வைத்தார் டிக்கா கான்.

சூட்டோடு சூடாக ராணுவத்தின் தரத்தை அபிவிருத்தி செய்வதற்காக நாட்டின் மொத்த பட்ஜெட்டில் அறுபது சதவிகிதத் தொகையை ராணுவத்துக்கு ஒதுக்கினார் புட்டோ. உண்மையில் துண்டு துக்கடா ஆயுதங்களை வெளிநாடுகளிடம் இருந்து வாங்கி 'ஷோ' காட்டுவதில் புட்டோவுக்கு துளியும் விருப்பமில்லை.

கேட்பவர்கள் மிரளவேண்டும். பார்ப்பவர்கள் பிரமிக்க வேண்டும். பாகிஸ்தானின் ராணுவ பலத்தைப் பார்த்து உலகநாடுகள் வாய் பிளக்கவேண்டும். அப்போதுதான் நீண்ட காலமாக, 'நிறையப் பேச்சு... கொஞ்சம் செயல்!' என்ற அளவில் இருந்துவந்த அணு ஆயுதம் பற்றிய சிந்தனை புட்டோவுக்கு வந்தது!

Tuesday 24 February, 2009

பாகிஸ்தான் பற்றிய தொடர் (14)

வேலி தாண்டிய வெள்ளை நரி!

'என் தேசம் கிழக்கு பாகிஸ்தான்; என் மக்கள் வங்காளிகள். அவர்களுடைய ஒரே நம்பிக்கை, என்னுடைய அவாமி லீக் கட்சி. பிறகு எதற்காக மேற்கு பாகிஸ்தானில் போட்டியிட வேண்டும்? அங்கே இருப்பவர்கள் அவாமி லீக்கை ஆதரிப்பார் களா? சத்தியமாக வாய்ப்பில்லை. வீண் கௌரவம் பார்த்து, எல்லாத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினால்... உழக்குகூட மிஞ்சாது!' -கூர்மையாகச் சிந்தித்தார் முஜிபுர் ரஹ்மான்.

''கிழக்கு பாகிஸ்தானுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் 162 நேஷனல் அசெம்பிளி தொகுதிகளிலும் அவாமி லீக் போட்டியிடும். பிற மாகாணங்களில் வெறும் எட்டு வேட்பாளர்களை மட்டும் நிறுத்தும். கிழக்கு பாகிஸ்தானில் மட்டும் தொண்டர்கள்

கவனம் கலை யாமல் உழைப்பைச் செலுத்தினால், பரிபூரண வெற்றி சாத்தியம்!''

அவாமி லீக் தொண்டர்களின் மூளைக்குள் மந்திரம் போல ஒலிக்கத் தொடங்கின முஜிபுரின் வார்த்தைகள். கிழக்கு பாகிஸ்தானின் ஒவ்வோர் அங்குலத்திலும் முஜிபுரின் தொண்டர்கள் தடம் பதித்துத் தேர்தல் பணிகளைச் செய்தனர். தொண்டர் களைக் களத்துக்கு அனுப்பிவிட்டு, குளிர்சாதன அறையில் ஓய்வெடுக்காமல், முஜிபுரும் கிழக்கு பாகிஸ்தானிலேயே மையம்கொண்டு சுழன்று கொண் டிருந்தார்.

முஜிபுரைவிட, தீர்க்கமாகத் திட்டம் வகுத்திருந்தார் புட்டோ. அவர் களத்தில் இறக்கியது, வெறும்120 வேட்பாளர்களை மட்டுமே. அதிலும்முஜிபுரின் கோட்டையான கிழக்கு பாகிஸ்தானில் புட்டோ ஒருவரைக்கூட நிறுத்தவில்லை. மேற்கு பாகிஸ் தானில்தான் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தார். எத்தனுக்கு ஏற்ற ஜித்தன் அவர்.

தன்னம்பிக்கை மிளிர, இரு தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஒருவழியாகத் தேர்தல் நடத்தப்பட்டு... முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கிழக்கு பாகிஸ்தானின் இரண்டு தொகுதிகளைத் தவிர, அத்தனை தொகுதிகளையும் வாரிச் சுருட்டி மிகப்பெரிய புரட்சியை நிகழ்த்திக் காட்டியது முஜிபுரின் அவாமி லீக்! போதாக்குறைக்கு கிழக்கு பாகிஸ்தானின் மாகாண அசெம்பிளியில் 288 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்து நின்றது அவாமி லீக்.

மேற்கு பாகிஸ்தானில் மொத்தமுள்ள 138 தொகுதி களில் 81 தொகுதிகளை வென்றது புட்டோவின், பாகிஸ்தான் மக்கள் கட்சி. குறிப்பாக, சிந்த் மற்றும் பஞ்சாபில் நல்ல அறுவடை. வடமேற்கு எல்லைப்புற மாகாணம் மற்றும் பலுசிஸ்தானத்தில் தேசிய அவாமி கட்சிக்குக் கணிசமான வெற்றி. இங்கெல்லாம் புட்டோ வுக்கோ முஜிபுருக்கோ ஒன்றுமே இல்லை!
அடுத்து ஆட்சியைப் பிடிப்பது யார்? பதில் சொல்ல வேண்டிய முஜிபுர், புட்டோ மற்றும் யாஹியா மூவரும் ஆளுக்கொரு பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டு உட்கார்ந்திருந்தனர். காரணம், ஆளுக்கொரு திட்டம். ஆளுக்கொரு கனவு வைத்திருந்தார்கள். உண்மையில் ஆட்சி அமைப்பதற்கான முழுத் தகுதியும் முஜிபுருக்கு இருந்தும், முட்டுக்கட்டைகள் அவர் முன்னால் அடுக்கப்பட்டிருந்தன.

'தேர்தலில் மக்கள் வித்தியாசமாக முடிவெடுத்திருப் பதால், முஜிபுரை ஒட்டுமொத்த தேசத்தின் பிரதமராக ஏற்றுக்கொள்ள முடியாது!' என்று போர்க்கொடி உயர்த்தினார் புட்டோ. 'இது என்னய்யா புது நியாயமாக இருக்கிறது? மெஜாரிட்டி என் வசம் இருக்கும்போது, நான் பிரதமராவதில் என்ன சிக்கல் இருக்கமுடியும்?' என்று கேட்டார் முஜிபுர். நியாயமான கேள்வி!
நீதிபதி ஸ்தானத்தில் நின்று கொண்டிருந்த யாஹியா கானோ, எல்லாவற்றுக்கும் மௌன சாட்சியாகவே இருந்தார். காரணம், முஜிபுரை பிரதமராக ஏற்றுக்கொள்வதில் யாஹியாவுக்கு உள்ளுக்குள் கடும் தயக்கம். அதை வெளிப்படையாகச் சொன்னால் நன்றாக இருக்காது என்பதால், பூசி மெழுகிச் சொல்ல விரும்பினார். முஜிபுரை அழைத்துப் பேசினார்.
''உச்சகட்டக் குழப்பத்தைத் தந்திருக்கின்றன தேர்தல் முடிவுகள். மேற்கு மக்கள் உங்கள் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இப்படியே போனால், நீங்கள் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பே இல்லாது போய்விடும். இத்தனை சிரமப்பட்டு தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்றுவிட்டு மூலையில் போய் உட்காருவதில் என்ன இருக்கிறது? நான் ஒரு யோசனை சொல்கிறேன். சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது உத்தமம். ஈகோவைத் தூக்கி தூரமாக வைத்துவிட்டு, புட்டோவிடம் சென்று பேசிப் பாருங் கள். உங்களுக்குள் ஒத்துப் போய்விட்டால்... பிறகு, ஆட்சி அமைப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை!''

வியூகம் புரிந்துவிட்டது முஜிபுருக்கு. 'புட்டோவால் திரைக்கதை எழுதப்பட்டு, யாஹியாவால் இயக்கப்படும் நாடகம்தான் எல்லாமே. கொஞ்சம் பிசகினாலும் சமாதி கட்டிவிடுவார்கள். கவனம் தேவை!' -மானசீகமாகத் தனக்குள் எச்சரித்துக்கொண்டார் முஜிபுர்.

''அய்யா, எனக்கு புட்டோவுடன் கைகுலுக்குவதில் விருப்பமில்லை. அதற்கான அவசியமும் இல்லை. புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்!'' -பளிச்சென்று சொல்லி விட்டுப் புறப்பட்டுவிட்டார் முஜிபுர். எள்ளும் கொள்ளும் வெடித்துச் சிதறின, யாஹியாவின் முகத்தில்.

ஊருக்கு வந்ததும் முதல் காரியமாக பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

'புட்டோவும் யாஹியாவும் என்னை நசுக்கப் பார்க்கிறார்கள். தேர்தல் முடிவுகளைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு ஆட்சியைப் பகிர்ந்து கொள்ளத் திட்டம் வகுத்துவிட்டார்கள்!' என்று சொல்லியிருந்தார்.
கொஞ்சம் விட்டுப்பிடிக்க முடிவு செய்தார் யாஹியா கான். அதன்படி மார்ச் 3, 1971 அன்று முஜிபுரையும்புட்டோவையும் டாக்காவில் சந்திக்க வைத்தார். 'இதெல்லாம் வேலைக்கு ஆகாது!' என்று புலம்பிக்கொண்டே சந்திப்பில் கலந்துகொண்டார் முஜிபுர். எதிர்பார்த்தபடியே பேச்சுவார்த்தை தோல்வி.
ஆத்திரம் வந்துவிட்டது யாஹியா கானுக்கு. நேஷனல் அசெம்பிளியை ஒத்திவைப்பதாக அறிவித்துவிட்டார். இது முஜிபுரை கொதிப்படைய வைத்து விட்டது.

''துரோகத்துக்கு பலியான கிழக்கு பாகிஸ்தானியர்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக, ஐந்து நாட்களுக்கு ஹர்த்தாலில் ஈடுபடுவார்கள்!'' என்று அறிவித்தார் முஜிபுர். இதை வலியுறுத்த மார்ச் 7, 1971 அன்று ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், ''கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு உடனடித் தேவை, சுதந்திரம். ராணுவ ஆட்சியில் இருந்து பரிபூரண விடுதலை!'' என்றார் முஜிபுர். இது மக்கள் மத்தியில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத் தியது.

கிழக்கு பாகிஸ்தானியர்கள் சாலைக்கு வந்து விட்டனர். எங்கு பார்த்தாலும் சுதந்திர கோஷம். யாஹியாவையும் புட்டோவையும் திட்டித் தீர்க்கத் தொடங்கினர். வரி கட்ட முடியாது என்று முரண்டு பிடித்தனர். யாஹியாவின் ஆட்சி அதிகாரத்துக்கு நாங்கள் கட்டுப்பட முடியாது என்றனர். எங்கு பார்த்தாலும் வன்முறை. போராட்டம். ஊர்வலம். பேரணி. எல்லாம்... எல்லாம்!
தலைவலி முற்றிவிட்டது. ராணுவ வைத்தியம்தான் பலன் கொடுக்கும் என்று முடிவு செய்தார் யாஹியா கான். அவருடைய கண்ணசைவுக்கு ஏற்ப ராணுவத் தளபதி ஜெனரல் டிக்கா கான், கிழக்கு பாகிஸ்தானை தன்னுடைய பொறுப்பில் எடுத்துக் கொண்டார். அங்கு கால்பதித்ததும் டிக்கா கான் செய்த முதல் காரியம், அவாமி லீக் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளுக்குக் கிடுக்கிப்பிடி போட்டதுதான்.

சாலையில் இறங்கிப் போராடிய கிழக்கு பாகிஸ்தானியர்களின் முதுகெலும்பை ஒடிக்கும் நடவடிக்கையில் இறங்கியது ராணுவம். நாலு பேர் கூடி நின்று பேசினாலே அடி, உதை, சிறை. கிழக்கு பாகிஸ்தானில் இருக்கும் அத்தனை பத்திரிகைகளுக்கும் தணிக்கை அமல்படுத்தப்பட்டது.
வெளித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. கிட்டத்தட்ட கிழக்கு பாகிஸ்தானைத் தனித் தீவாக உருமாற்றம் செய்திருந்தது ராணுவம்.

தலைக்கு மேலே வெள்ளம் வந்துவிட்டது. 'இனியும் இந்தியாவை அணுகாவிட்டால், எதற்கும் உத்தரவாதமில்லை!' என்ற எண்ணம் முஜிபுருக்கு வந்திருந்தது.

அப்போது இந்திய பிரதமராக இருந்தவர் இந்திராகாந்தி. கிழக்கு பாகிஸ்தான் மீது ஏற்கெனவே மெல்லிய பாசம் இந்திராவுக்கு. முஜிபுரே வாய்திறந்து கேட்ட பிறகு, வல்லிய பாசம் வந்துவிட்டது. 'நம்பினோர் கைவிடப்படார்!' என்று சொல்லிவிட்டார் இந்திரா. பெருமூச்சு விட்டார் முஜிபுர்.
கிழக்கு பாகிஸ்தானில் எது நடந்தாலும் யாஹியா கானின் கவனத்துக்குச் சென்றுவிடும். முஜிபுரின் நடவடிக்கைகள் மெள்ளக் கசிந்து, யாஹியாவின் காது களுக்குள் ஊடுருவின. 'ஓஹோ, வெள்ளை நரி வேலி தாண்டுகிறதா? ம்ஹ§ம்... இனியும் விட்டு வைத்தால் மனிதர் ஒட்டுமொத்த தேசத்தையும் காவு கொடுத்து விடுவார். உள்ளே வைத்துவிட வேண்டியதுதான்!'
உத்தரவிட்டார் யாஹியா.

முஜிபுரை கைது செய்த கையோடு மேற்கு பாகிஸ்தானுக்கு பார்சல் செய்து அனுப் பியது ராணுவம். 'முஜிபுரை முடக்கிவிட்டால்... எல்லாவற்றையும் முடக்கிவிடலாம்!' என்பது யாஹியாவின் கணிப்பு. அதை சுக்குநூறாக சிதறச் செய்தனர் கிழக்கு பாகிஸ்தானியர்கள். ஆவேசம் பொங்கப் போராட்டத்தில் குதித்தனர். மீண்டும் ரணகளம்.

முஜிபுர் கைது செய்யப்பட்டு விட்டதால், போராட்டத்தை வழிநடத்த முன்வந்தார் ஜியாவுர் ரெஹ்மான். கிழக்கு பாகிஸ்தானுக்கான ராணுவத் தளபதி அவர். முஜிபுரின் அன்புக்குப் பாத்திரமானவர்.

'இனி கிழக்கு பாகிஸ்தான் என்ற பிராந்தியமே கிடையாது. இனி அந்தப் பிரதேசத்தின் பெயர், பங்களாதேஷ். சுதந்தர பங்களாதேஷ். அதன் அதிபர் ஜியாவுர் ரெஹ்மானியாகிய நான். என்னுடைய நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்திருக்கும் பாகிஸ்தான் ராணுவத்தை பங்களாதேஷ் வீரர்கள் விரட்டி அடிப்பார்கள்!'

கிழக்கு பாகிஸ்தானியர்களுக்கே அதிர்ச்சியளித்த முடிவு இது. ஆனால், எல்லாமே முஜிபுர் போட்டுக் கொடுத்த திட்டம் என்பது தெரிந்ததும், சந்தோஷம் தாங்கவில்லை கிழக்கு பாகிஸ்தானியர்களுக்கு. அப்போதுதான் கிழக்கு பாகிஸ்தானில் இருக்கும் 'முக்தி பாஹினி' போராளிகள், பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டனர். ஆத்திரம் பொங்க எல்லோரையும் கொன்று குவிக்கத் தொடங்கியது ராணுவம். தவிரவும், காமவெறி பிடித்தவர்களைப் போல கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்து, தூக்கி வீசினர்.

பாகிஸ்தானின் உள்நாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. அந்த விமானங்கள் எல்லாம் 'அரசுப் பணிக்காக' என்ற பெயரில் ஏராளமான நபர்களை ஏற்றிக்கொண்டு டாக்கா சென்றன. அவர்கள் அத்தனை பேரும் சாதாரண உடையில் சென்ற ராணுவ வீரர்கள். தாக்குவது ராணுவம்தான் என்று தெரியாமல் இருப்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு அது. இந்தச் சமயத்தில் ராணுவத் தளபதி டிக்கா கான் மாற்றப்பட்டார். அவருடைய இடத்தில் துணைத் தளபதி நியாஸி வந்து சேர்ந்தார். எல்லாம் யாஹியாவுக்கே வெளிச்சம்.

தாக்குதலை சமாளிக்க முடியாமல் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் அகதிகளாக இந்தியாவுக்குள் நுழையத் தொடங்கினார்கள். அது இந்தியாவுக்கும் பெரும் தலைவலியை உண்டாக்கியது. தங்களுடைய சொந்த உறவுகளைக் கொன்று குவித்துக்கொண்டே... அண்டை நாட்டுக்கும் பிரச்னை ஏற்படுத்து வதைப் பொறுக்க முடியாமல், கிழக்கு பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியா நுழைந்தது. வெறும் உள்நாட்டு யுத்தமாகக் கருதப்பட்ட விஷயம், மெள்ள இந்தியா-பாகிஸ்தான் யுத்தமாக உருவெடுத்தது. விளைவு, பாகிஸ்தான் என்ற தேசத்தில் இருந்து பங்களாதேஷ் என்ற புது தேசம் உருவாக்கப்பட்டது.
கிட்டத்தட்ட மூன்று லட்சம் உயிர்கள் பலியாகி யிருந்தன. ஆனால், ஐந்து லட்சம் உயிர்கள் என்கிறது இன்னொரு புள்ளிவிவரம். இரு தேசங்களுக்கு இடையே மிகப்பெரிய யுத்தம் நிகழ்ந்து முடிந்திருந்தது. இத்தனைக்கும் காரணம் புட்டோவின் ஈகோ. அவர் மட்டும் ஆட்சி அமைப்பதில் முரண்டு பிடிக்காமல் இருந்திருந்தால்... இத்தனை இழப்புகளும் தவிர்க்கப் பட்டிருக்கும். அதைப் பற்றியெல்லாம் அவர் துளியும் கவலைப்படவில்லை.

எல்லாவற்றையும் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு அடுத்த பாய்ச்சலுக்குத் தயாரானார்!

கஞ்சா செடிகள் நிறைந்த பாளடைந்த முகமதிய தேசங்கள்

கஞ்சா செடிகளும் பயங்கரவாதிகள் பதுங்கிவாழும் குகைகளும் நிறைந்த தேசம் பாகிஸ்தானும் ஆஃப்கானிஸ்தானும். இந்த பாகிஸ்தான் குறித்துதான் “அதன் வளர்ச்சி பாரதத்துக்கு ஒன்றும் குறைந்தில்லை... அங்கே தேனும் பாலும் ஆறாக ஓடுகிறது.. ” என்ற ரீதியில் “தீராநதி” யில் முகமதியன் எழுதிய கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தது. அன்நாடுகளில் மையம்கொண்டுள்ள முகமதிய பயங்கரவாதம் குறித்த ஜூவி கட்டுரை இது.
*************************************
25th February 2009
*************************************

எம்.ஏ.ஜவஹர்
ஊர் இரண்டு பட்டால்...

பாகிஸ்தானில் கடந்த வாரம் நடந்த மூன்று சம்பவங்கள், நம் நாட்டுக்கு முக்கியத் துவம் வாய்ந்தவை. முதலாவதாக, மும்பை தாக்கு தல் சம்பந்தமாக இந்திய அரசு எவ்வளவோ ஆதாரங்கள் கொடுத்தும், அத்தாக்குதல் பாகிஸ்தானியர்களால் பாகிஸ்தானிலிருந்து திட்டமிட்டுத்தான் நிறைவேற்றப்பட்டது என்று கூறியும் தொடர்ந்து மறுத்துவந்தது பாகிஸ்தான்.

இப்போது திடீரென்று, 'தங்கள் நாட்டில்தான் இத்திட்டத்தின் ஒரு பகுதி நிறை வேறியது!' என்பதை ஒப்புக்கொண்டதுடன் தாக்குதலுக்குப் பின்னணியாக இருந்த வேறு ஒரு பாகிஸ்தானியரையும் கைதுசெய்து, அந்நாட்டு பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. இதற்கு அமெரிக்கா மற்றும் உலகநாடுகளின் நிர்ப்பந்தம்தான் காரணம். இப்படி பாகிஸ்தானிய அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருப்பதே இந்திய அரசின் அணுகுமுறைக்குக் கிடைத்திருக்கும் வெற்றி யாகவும், பயங்கரவாத இயக்கங்களின் சறுக்கலாகவும் இத்துறை வல்லுநர்கள் வர்ணிக் கிறார்கள்.

இனி, பாகிஸ்தானிலிருந்து வந்த அடுத்த இரண்டு செய்திகள்... இவை இரண்டுமே இந்திய அரசுக்கும் உலகநாடுகளுக்கும் கவலையைத் தந்திருக்கின்றன.

ஒரு வெளிநாட்டு செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் பாகிஸ்தான் ஜனாதிபதிஆஸிப் அலி சர்தாரி, 'பாகிஸ்தானின் அண்டை நாடான
ஆப்கானிஸ்தானை ஆண்ட தாலிபன்கள் அமெரிக்கர்களால் தூக்கியெறியப்பட்டவர்கள். மீண்டும் ஆட்சியைப் பிடிக்கச் சண்டையிட்டுக் கொண்டு இருக்கும் இவர்கள், பாகிஸ்தானில் தங்களுக்கு மறைமுக ஆதரவு கொடுத்துவரும் ராணுவத்தினர் மற்றும் நிர்வாகத்தில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் மூலம் பாகிஸ்தானையே பிடிக்கத் திட்டமிட்டு வருகி றார்கள்!' என்று கூறியிருக்கிறார். மேலும் 'இதுபோன்ற முயற்சிகள் சில ஆண்டுகளாகவே இருந்து வந்தபோதும், இதற்கு முந்தைய பாகிஸ் தானிய ஆட்சியாளர்கள் கண்டும் காணாமல் இருந்திருக்கிறார்கள்...' என்றும் பேசியிருக்கிறார். இந்தச் செய்தியைக் கேட்டு உலக நாடுகள் அதிர்ந்துவிட்டன.

அந்த அதிர்ச்சியில் இருந்து மீளுவதற்கு முன்பே, தாலிபன்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாத பாகிஸ்தானிய அரசு, 'ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் பாகிஸ்தானின் 'நார்த் வெஸ்ட் ஃப்ரான்டியர்(NWFP-North west Frontier province)' என்ற 'ஸ்வாட்' பகுதியை தாலிபன்கள், அவர்களின் சட்டவிதிப்படி பாகிஸ்தான் அரசுக்கும் உட்பட்டு ஆட்சி நடத்திக்கொள்ளலாம்' என்றொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக அமெரிக்கப் படையினரை எதிர்த்துத் தீவிரமாகப் போரிட்டுவரும் தாலிபன் படையினருக்கு இது பெரும் வெற்றி. இதைக் கொண்டாடும் விதமாக ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் அப்பகுதி யில் தொடர்ந்து நடந்தவண்ணமாக உள்ளன. இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த உடன்பாடும், உலகநாடுகளுக்கு, குறிப்பாக இந்தியாவுக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கும் செயல். ஸ்வாட் பகுதியில் தன் ஆட்சியை மறைமுகமாக நிலைநாட்டியிருக்கும் தாலிபன்கள், அடுத்தபடியாக பாகிஸ்தான் நாட்டின் மற்ற பகுதிகளில் வேரூன்ற முயற்சிப்பார்கள்.

இந்நிலையில், ஸ்வாட் பகுதியில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரமே உள்ள பாகிஸ்தானிய தலைநகரம் இஸ்லாமாபாத்தை தாலிபன்கள் கைவசப்படுத்த எத்தனை நாட்கள் ஆகும்? மேலும், அங்கிருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் அவர்கள் வேரூன்றிவிட்டால், நம் நாட்டு எல்லைக்கு தாலிபன்கள் வந்துவிட்டார்கள் என்றுதான் அர்த்தம். தாலிபன்களின் இந்திய எதிர்ப்புக் கொள்கைகள், காஷ்மீர் பிரச்னையில் அவர்கள் காட்டும் ஆர்வம் போன்றவற்றைப் பார்க்கும்போது, இந்தியாவுக்கு சிக்கல் வலுக்கிறது என்பதுதான் நிஜம். அரசு இப்போதே இதுபோன்ற நிலைமையை எதிர்கொள்ளத் தன்னை ஆயத்தம் செய்துகொள்ள வேண்டும்.

இதற்கிடையில், இந்தியக் கடற்படைத் தளபதி, 'கடல்வழியாக இந்தியாவுக்குள் அணு ஆயுதங்களைக் கொண்டுவர முயற்சிகள் நடைபெறும் அபாயம் இருக்கிறது. அதைத் தடுக்க கடற்படையை மேலும் வலுப்படுத்தவேண்டும். ஸ்கேனர் போன்ற கருவி களைப் பயன்படுத்தி, நாட்டினுள் வரும் அத்தனை சரக்குப் பெட்டிகள், சரக்குகள் ஆகியவற்றை சோதனை செய்யவேண்டும்' என்று கூறியிருக்கிறார். கடற்படைத் தளபதி தனக்குக் கிடைத்த நம்பத்தகுந்த உளவுத் தகவல்களை வைத்துதான் இப்படிச் சொல்லி யிருக்கவேண்டும்.
பாகிஸ்தானிடம் அதிக அளவில் அணு ஆயுதங் களும், அணுகுண்டுகளும் இருக்கிறது என்பது உண்மைநிலை. ஏற்கெனவே பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ., ராணுவம், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்று மூன்று அதிகாரத் துறைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியின் கீழ் முழுமையாக இயங்காமல், தனித் தனியே சுயேச்சையாகச் செயல்பட்டுவருவதாக செய்திகள் வந்தபடி இருக்கின்றன. இச்சமயத்தில் அந்நாட்டில் ஒரு அசம்பாவிதம் நடந்து, அந்நாட்டின் அணு ஆயுதங்கள் அடிப்படைவாதிகள் கையில் இருக்குமேயானால், இந்தியாவுக்கு மட்டுமல்ல மொத்த உலக நாடுகளுக்குமே அது அச்சுறுத்தலாகத்தான் முடியும்.

இந்நிலையில், இந்தியா என்ன செய்யவேண்டும்?

தன்னுடைய உளவுத் துறை, எல்லையோரப் பாது காப்புப் படை போன்றவற்றை முடுக்கிவிடவேண்டும். கடற்படை பாதுகாப்பை அதிகப்படுத்துதல், நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி ஆயுத ஊடுருவல்களைத் தடுத்தல் ஆகியவற்றைச் செய்யவேண்டும். அதோடு, இரண்டு முக்கிய நடவடிக் கைகளையும் எடுக்கவேண்டும்.

ஒன்று, இது வரை பாகிஸ்தான் நம்மை எப்படி நடத்தியது என்பது ஒரு புறம் இருக்க, இப்போது அங்கு அமைந்திருக்கும் சிவில் அரசின், 'தீவிரவாதிகள் மீது நாங்கள் தகுந்த நடவடிக்கை எடுப்போம். ஏனென் றால், அவர்கள் எங்களுக்குமே அச்சுறுத்தலாகி விட்டார்கள்' என்கிற கூற்றை ஏற்று அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளித்துப் பார்க்கலாம். இன்று இந்தியா-பாகிஸ்தானிடையே நிலவும் பரஸ்பர நம்பிக்கையின்மை, தீவிரவாத இயக்கங்களுக்குத்தான் சாதகம். நிர்ப்பந்தத்தால்தான் மும்பை பயங்கரவாதச் செயலுக்கு எதிரான நடவடிக்கையை பாகிஸ்தான் தொடங்கியிருக்கிறது என்றாலும், அப்படியரு முடிவை எடுத்திருப்பதே நல்ல விஷயம்தான். நம்மைப் பொறுத்த வரை அங்குள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பிரதிநிதிகளைத்தான் நம்பியாகவேண்டும். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் மீதும் தீவிரவாதப் பயிற்சி முகாம்கள் மீதும் உலக நாடுகள் மூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானை உலகநாடுகள் மூலம் நிர்ப்பந்திக்கவேண்டும். அதே சமயம், தீவிரவாதிகளை ஒழிக்க பாகிஸ்தான் கேட்கும் உதவிகளைச் செய்யத் தயங்கக்கூடாது. அங்கிருக்கும் பயங்கரவாத இயக்கங்களை நாம் போர் மூலம் ஒழிக்கமுடியும் என்றாலும், அதை பாகிஸ்தான் அரசு மூலமே செயல்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்.

இரண்டாவதாக, நம் நாட்டில் கிட்டத்தட்ட 20 கோடி இஸ்லாமிய சகோதரர்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பயங்கரவாதச் செயல்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது போன்ற தவறான எண்ணத்தை சில அரசியல் கட்சிகள் பொதுமக்கள் மத்தியில் பரவவிட்டிருக்கின்றன. இதில் எள்ளளவும் உண்மை இல்லை. நாட்டுக்காக பல தியாகங்கள் செய்து, நாட்டின் வளர்ச்சியில் சிறுபான்மை மக்கள் ஆற்றிய, ஆற்றிவருகிற பங்கை யாராலும் மறுக்க முடியாது. இது போன்று நிலவிவரும் கருத்தைக் களையெடுக்க எல்லாக் கட்சிகளுடனும் சேர்ந்து ஒரு யுக்தியை நம்முடைய அரசு தீட்டிச் செயல்படுத்த வேண்டும். தாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் என்று சிறுபான்மை மக்கள் நினைத்தால், அதைக் களைந்து அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கவேண்டும். அப்போதுதான் நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களிடமும் ஒற்றுமை நிலவி... அந்த பலத்தின் வாயிலாக எல்லை வரை வரப்பார்க்கும் எதிரியை வெல்லலாம். இல்லையென்றால், 'ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குத்தானே கொண்டாட்டம்?!'

பெங்களூரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய முகமதிய பயங்கரவாதிகள்

பெங்களூரில் வெடிகுண்டு தாக்குதல் நடந்த பிறகு, அவை ஹிந்துக்களே தங்கள்மீது எறிந்துகொண்டதாக எழுதித்தீர்த்தன இணைய முல்லாக்கள். சிமி அமைப்பு உள்பட தாக்குதல் நடத்திய முகமதியர் அனைவரும் ஒவ்வொருவராக பிடிபட்டு வந்த நிலையில், சமீபத்தில் சிக்கிய முகமதியன் ஒருவன் குறித்த ஜூ.விகடன் கட்டுரை இது.
************************************************
25 February 2009
************************************************

பிடிபட்ட பயங்கரவாதியின் பகீர் பின்னணி...
'மெஸ்மரிஸத்துக்கு மயங்கி வாழ்க்கையைத் தொலைக்கிறாங்க...'
அமில் பர்வேஸ்..!

நெடுநாள் வேட்டையில் இந்த பயங் கரவாத சுறா சிக்கியதையடுத்து, ஆச்சர்ய அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது கர்நாடகா மத பயங்கரவாதத் தடுப்பு போலீஸ்.
பெங்களூருவில் 2008-ம் வருடம் ஜூலை 25-ல் ஏழு இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் இரண்டு பேர் பலியானார்கள்; இருபதுக்கும் மேற்பட்டவர்கள் மிகக் கடுமையாகக் காயம் பட்டார்கள். அந்த பயங்கர சம்பவத்தின் மூளையாக இருந்த அமில் பர்வேஸ்தான் கேரள போலீஸ் மூலம், இப்போது கர்நாடக போலீஸாரின் கஸ்டடிக்குவந்திருக்கிறான்.

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு, 2008-ம் வருடம் அக்டோபர் 4 மற்றும் 7-ம் தேதிகளில் காஷ்மீர் எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு தப்ப முயன்ற நான்கு முஸ்லிம் இளைஞர்கள், இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்! அவர்களில் இரண்டு பேரிடம் இருந்த வாக்காளர் அடையாள அட்டைகள்தான் அமில் பர்வேஸை போலீஸ் பிடியில் சிக்க வைத்திருக்கிறது. இது குறித்து மதவாத வழக்குகளை விசாரிக்கும் கேரள போலீஸ் அதிகாரிகளிடம் முதலில் பேசினோம்.
''காஷ்மீர் எல்லையில் சுட்டுக்கொல்லப்பட்ட அப்துல் ரஹீம், முகமது ஃபயாஸ், ஃபாயிஸ், முகமது யாசின் என்ற அந்த நால்வருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள். அவர்களின் சடலங்களை, அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைத்தபோது, 'எங்களுடைய பிள்ளைகளை வெளி நாட்டுக்குத்தானே வேலைக்கு அனுப்பினோம். காஷ்மீர் எல்லைக்கு எப்படிப் போனார்கள்? இதில் ஏதோ சதி இருக்கிறது. அது தெரியாதவரை நாங்கள் பிணத்தை வாங்க மாட்டோம்!' என்று பிரச்னை செய்தார்கள். அவர்களின் சந்தேகத்தை அடுத்து, முகமதையும், அப்துல் ரஹீமையும் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பியதாகச் சொல்லப்பட்ட கண்ணூரை சேர்ந்த சிபிலி, சாவிலி ஆகிய இருவரிடமும் விசாரித்தோம். அப்போதுதான் அந்த இரு ஏஜென்ட்களும் அரபு நாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்புவதாகச் சொல்லி, அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை காஷ்மீர் எல் லையில் இருக்கும் பயங்கரவாத முகாம்களுக்கு அனுப்பிய விவரம் தெரியவந்தது.

ஏழை முஸ்லிம் மற்றும் மதம் மாறிய முஸ்லிம் இளைஞர்க ளைத் தேடிப் பிடித்து... ஆசை வார்த்தை காட்டும் சிபிலியும், சாவிலியும் அவர்களின் குடும்பத்துக்கு தாராளமாக நிதி யுதவி செய்து அவர்களையும் சரிக்கட்டிவிடுகிறார்கள். பிறகு, அந்த இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதிகளாக மாற்றுகிறார்கள். 'உங்களை போலீஸ் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் உங்களை எந்த நேரத்திலும் சுட்டுக் கொல்லலாம். அதற்கு முன்பாக அல்லாஹ்வின் பெயரால் உங்களுக்கு இடப்பட்ட கட் டளையை செய்து முடித்துவிடுங்கள். உங்கள் குடும் பத்தை இயக்கம் பார்த்துக்கொள்ளும்!' என அந்த இளைஞர்களுக்கு உயிர் பயத்தை போக்கும் மனோதிடப் பயிற்சியும் கொடுக்கிறார்கள். இந்த மெஸ்மரிஸத்துக்கு பலியாகும் இளைஞர்களுக்கு அசைன்மென்ட்களை கொடுத்து முடிக்க வைக்கிறார்கள்...'' என்றவர்கள் தொடர்ந்தனர்...

''இப்படி பயங்கரவாதிகளாக்கப்பட்ட அந்த கேரள இளைஞர்களின் குடும்பங்களுக்கு சிபிலி, சாபிலியின் ஆட்கள் மாதா மாதம் ஒரு தொகையை அனுப்பி வைத்துள்ளனர். பாவம், அந்தப் பெற்றோர்களை, வெளிநாட்டிலிருந்து தங்கள் பிள்ளைதான் பணம் அனுப்புகிறான் என நம்ப வைத்துள்ளனர். இதைவிடக் கொடுமை, இந்தக் கும்பலால் பயங்கரவாதிகளாக்கப்பட்ட சிலர், ஏதாவதொரு மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டும், குட்டு வெளிப்படாமல் இருப்பதற்காக அந்த இளை ஞர்களின் குடும்பத்துக்குத் தொடர்ந்து இன்னும் பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்...'' என்று திகிலூட்டினார்கள்.
பிடிபட்ட அமில் பர்வேஸிடம் விசாரணை நடத்தி வரும் கர்நாடக உயர் போலீஸ் அதிகாரிகளிடம் பேசினோம்.

''சிபிலி, சாவிலி ஆகியோர் கொடுத்த தகவலை வைத்து ஜனவரி 10-ம் தேதி அமில் பர்வேஸை மத்திய பிரதேசத்தில் கைதுசெய்தோம். தடை செய்யப்பட்ட 'சிமி' அமைப்பின் கமாண்டோ படை தளபதிதான் அமில் பர்வேஸ். கையெறி குண்டுகளையும் பாட்டில் குண்டுகளையும் நிமிஷத்தில் தயாரிக்கும் திறமைசாலி. ஆறு பாஷைகள் தெரிந்த இவன், சமீப காலமாகத் தமிழ் படிக்கிறானாம். முப்பத்தைந்து வயதான பர்வேஸ§க்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த ஆண்டு மட்டும், தென் மாநிலங்களில் தேர்வு செய்யப்பட்ட சுமார் முந்நூறு முஸ்லிம் இளைஞர்களுக்கு இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாகைமண்ணில் பயிற்சி கொடுத்துள்ளான். நீச்சல், மலை ஏற்றம், மரம் ஏறுவது, காடுகளுக்குள் மறைந்து தப்பிப்பது, கூட்ட நெரிசலில் தாக்குதல் நடத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்ட அவர்களை ஆப்கானிஸ்தானில் லஸ்கர்-இ-தொய்பா முகாமுக்கு அனுப்பியதற்கான ஆதாரங்களும் சிக்கியிருக்கின்றன. அமில் பர்வேஸிடம் கமாண்டோ பயிற்சி எடுத்த மலப்புரம் அப்துல் சத்தார், அப்துல் ஜபார், சர்ஃபுதீன், சக்காரியா, கண்ணூரை சேர்ந்த அப்துல் ஜலீல், முஜ்ஜீப், ஃபைசல், மனாஃப், எர்ணா குளத்தை சேர்ந்த பத்ருதீன் ஆகிய ஒன்பது பேரை கைது செய்திருக்கிறோம்.

அமில் பர்வேஸின் ஆலோசனைப்படி பெங்களூரு வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டிருக்கிறான் முஜ்ஜீப். மற்றவர்கள் வாயே திறக்க மறுக்கிறார்கள். ரிமாண்டில் இருக்கும் அவர்களை மீண்டும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதி மன்ற அனுமதி கேட்டிருக்கிறோம். பிடிபட்டவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கேரளத்தைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ-க்கள், தேசியக் கட்சி எம்.பி. ஒருவர் உள்ளிட்ட இன்னும் சிலரிடமும் விசாரணை நடத்த வேண்டியிருக்கிறது...'' என்று திடுக்கிட வைக்கிறார்கள் கர்நாடக காவல் துறையினர்.

- இரா.முத்துநாகு

முகமதிய பயங்கரவாதிகள் மீதான அமெரிக்காவின் போர் குறித்து.

பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் பதுங்கியிருக்கும் முகமதிய பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா எடுத்துவரும் போர் நடவடிக்கைகள் குறித்த ஆனந்த விகடன் கட்டுரை.
::::::::::::::::::::::::::::::::::
25 February 2009
*********************************

அமெரிக்காவின் அடுத்த அட்டாக்!
மருதன், பாஸ்போர்ட்

தொட்டில் பழக்கம். மீண்டும் போரைப் பற்றி தான் சிந்தித்துக்கொண்டு இருக்கிறது அமெரிக்கா. இராக்குக்குப் பிறகும், பொருளாதாரச் சீரழிவுக்குப் பிறகும்!

இரு எதிரிகள்... அல்-கொய்தா மற்றும் தாலிபன். இரு தேசங்கள்... பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான். ஒரே கல்லில் அடித்து வீழ்த்திவிடலாம் என்கிறார்கள் ராணுவ ஆலோசகர்கள். தீவிரவாதத்துக்கு எதிரான மாபெரும் போர். புஷ் சென்ற அதே திசை.... புஷ் கையாண்ட அதே கொள்கை... புஷ் காட்டிய அதே தீவிரம்!

இப்போது தொடங்கினால் சரியாக இருக்கும். இதைவிட்டால் இன்னொரு சந்தர்ப்பம் அமையாது. அபாயம், ஆபத்து, எச்சரிக்கை என்று பக்கம் பக்கமாக ரிப்போர்ட்டுகளை அள்ளிக்கொண்டுவந்து அவர் மேஜையில் குவித்துக்கொண்டு இருக்கிறார்கள். ''மிஸ்டர் பிரசிடென்ட், இன்னொரு போரா என்று மிரள வேண்டாம். அநாவசியத் தயக்கம் வேண்டாம். மக்கள் ஒருபோதும் போரை வெறுப்பதில்லை. தோல்வியைத்தான் வெறுக்கிறார்கள். நீங்கள் ஜெயிக்கப் பிறந்தவர். ஆல் தி பெஸ்ட்!''

அல்-கொய்தா வறண்டுவிட்டது. அவர்களால் பெரும் திட்டங்களை இனி தீட்ட முடியாது என்று சற்று முன் னால்தான் அறிவித்திருந்தார் ஒபாமா. தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டுவிட்டார். காரணம், ஒபாமா எதிர்பார்த்ததைப் போல் அல்லாமல், அல்- கொய்தா விழித்துக்கொண்டுவிட்டது. பாகிஸ்தான் எல்லைப் பிரதேசங்களில் இருந்து அதற்கான சமிக்ஞைகள் கிடைத்துவிட்டன. ஏற்கெனவே, தாலிபன்கள் பரவியிருக்கும் பிரதேசம். இரு அபாயங்கள் ஒரேஇடத் தில் கைகோத்துக்கொள்வது அமெரிக்காவுக்கு நல்லது அல்ல... உலகத்துக்கும்! அல்-கொய்தா அலுவலகத்தில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட வீடியோமிரட் டல், அமெரிக்காவை நிமிர்த்தி உட்காரவைத்திருக்கிறது. 20 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த டேப்பில் பேசி இருப்பவர் அல் ஜவஹிரிக்கு அடுத்த நிலையில் இருக் கும் முஸ்தபா அபு யாசித். ''பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் எண்ணத்தை இந்தியா விட்டொழிக்க வேண்டும். பாகிஸ்தான் மீது குண்டு அல்ல, குண்டின் நிழல் விழுந்தாலும் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். பாகிஸ்தான் அரசி யல் தலைவர்கள் பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. ஜர்தாரி ஒழிக்கப்பட வேண்டியவர் என்பதில் சந்தேகம் இல்லை. பாகிஸ்தான் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அவரை ஆட்சியில் இருந்து தூக்கியெறிய வேண்டியது அவசியம். அது தனிக் கதை. இந்தியாஇதில் தலையிடக் கூடாது. அதற்கு அனுமதிக்கவும் மாட் டோம்.''

இந்தியாவை எச்சரித்ததற்கு அமெரிக்கா ஏன்எரிச்சல் அடைய வேண்டும்? காரணம், இந்த முஸ்தபா அபு யாசித், அல்-கொய்தாவின் ஆப்கன் பிரிவுத் தலைவர். இவர் பாகிஸ்தான் எல்லையில் இருக்கிறார் என்றால், அவர் படைப் பிரிவும் அங்கேதான் இருக்கிறது என்று பொருள். ஆப்கானிஸ்தானை தாலிபன்களிடமும், பாகிஸ்தானை அல்-கொய்தாவிடமும் பிய்த்துக்கொடுத்து விட்டால், அமெரிக்காவின் கதி என்னவாகும்? இரு குழுக்களுக்குமே அமெரிக்கா எதிரி என்னும்போது, எப்படி இதை அனுமதிப்பது? இன்னொரு தீவிரவாதத் தாக்குதலை எதிர்கொள்ளும் நிலையில் அமெரிக்கா இல்லை. ஒபாமாவின் ஆலோசகர்கள் பதற்றம்கொள் வதற்கு இதுவே காரணம்.
முறைப்படி போரைத் தொடங்குவதற்கு முன்னால் ஒரு சர்வே செய்து பார்த்துவிட முடிவெடுத்திருக்கிறது அமெரிக்கா. இப்போதைய திட்டம் இதுதான். அமெரிக்காவின் சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டுஇருக் கும் ரிச்சர்ட் ஹால்புரூக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இரு தேசங்களுக்கும் நேரில் சென்று நிலைமையை ஆராய வேண்டும். வரும் வழியில், இந்தியாவுக்கு ஒரு பயணம். அவர்கள் திட்டம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இது நடந்துவிட்டால், தெளிவான ஒரு சித்திரம் கிடைத்துவிடும். நல்ல நாளாகப் பார்த்து வேலையை ஆரம்பித்துவிட வேண்டியதுதான்.

பிரிட்டனும் தன் பங்குக்கு ஒரு தூதரைத் தயார் செய்துவிட்டது. ஷெரார்ட் கூப்பர் கோல்ஸ்... ஆப்கானிஸ்தானுக்கான தூதர். அமெரிக்கத் தூதருடன் இவர் இணைந்து செயல்படுவார். பொருளாதார வீழ்ச்சியில் கூடிய விரைவில் அமெரிக்காவைத் தொட்டுவிடும் நிலையில் இருக்கிறது பிரிட்டன். வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை சென்ற வாரம் வரை 1.97 மில்லியன். இன்னும் மூன்று மாதங்களில் 2 மில்லியன் ஆகிவிடும். ஆனாலும், போர் என்று வந்துவிட்டால் அமெரிக்காவுக்குத் தோள் கொடுத்தாக வேண்டும். அமெரிக்காவின் எதிரி பிரிட்டனின் எதிரியும்தானே?

கிட்டத்தட்ட கூட்டணி தயார். அமெரிக்கா, பிரிட்டன். ஆதரவுக்கு இந்தியா. போருக்கான அவசியத்தையும் பாகிஸ்தானிடம் எடுத்துச் சொல்லியாகிவிட்டது. 'அல்- கொய்தாவையும் தாலிபன்களையும் உங்களால் சமாளிக்க முடியாது. சர்வதேச ஒத்துழைப்பும், உதவியும், அனுதாபமும் உங்களுக்குத் தேவைப்படுகின்றன. தயாராக இருங்கள். எந்நேரமும் ஆரம்பிப்போம்.'

பாகிஸ்தானில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்துவிட்டது. எல்லைப் பிரதேசத்தைத் தாக்குகிறோம் என்று சொல்லிக்கொண்டு, அமெரிக்காவும் நேடோவும் வாரம் இருமுறை குண்டு தூவிக்கொண்டே இருக்கின்றன. தீவிரவாதிகள் அல்ல, ஆப்கன் பழங்குடிகள்தான் பெருமளவில் இறக்கிறார்கள். ஆப்கனில் தொடரும் யுத்தமே பாகிஸ்தானை அலைக்கழிக்கும்போது, பாகிஸ்தானை நேரடியாகத் தாக்க ஆரம்பித்துவிட்டால் என்ன ஆகும்? ஆப்கானிஸ்தான் மக்களுக்கும் இதே கவலை. தற்சமயம் 32 ஆயிரம் வீரர்கள் ஆப்கன் எல்லையில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். கூடுதலாக 30 ஆயிரம் பேரை அனுப்பப் போவதாகச் சொல்லிஇருக்கிறார் ஒபாமா. ராணுவத்தின் பலம் இரட்டிப்பாகும்போது இழப்பின் பலமும் இரட்டிப்பாகப் போகிறது. என்ன செய்வது?

போர் நிச்சயம் என்று அமெரிக்கா முடிவெடுத்துவிட்டால், ஐந்து விளைவுகளை உலகம் எதிர்பார்க்கலாம். முதல் அடி, அமெரிக்காவுக்கு. தேசத்தைத் தூக்கி நிறுத்தும் பணி தொய்வடையும். அமெரிக்கர்களின் பணமும், பொருளும், கவனமும், உழைப்பும் மற்றுமொரு பேரழிவுக்குச் செலவிடப்படும். ஏற்கெனவே பள்ளத்தில் இருக்கும் அமெரிக்கா, பாதாளத்துக்குப் பாயும்.

ஆப்கானிஸ்தான் நாசமாகும். தாலிபன்கள் ஒரு பக்கமும், அமெரிக்கர்கள் இன்னொரு பக்கமுமாக மாறி மாறி ஆப்கனை அடிக்க, முழு நீளப் போர் ஆரம்பமானால், சருகுகள்கூட மிஞ்சியிருக்காது. மூன்றாவது விளைவு, பாகிஸ்தானின் அழிவு. போராட்டங்களும் கிளர்ச்சிகளும் இப்போதே தொடங்கிவிட்டன.

இராக்கில் இருந்து வெளியேறப் போகிறோம் என்னும் ஒபாமாவின் அறிவிப்பால் கிடைத்த கொஞ்சநஞ்ச நல்ல பெயரும் அழிந்துபோகும். ஒபாமா மட்டுமல்ல, யார் வந்தாலும் அமெரிக்காவுக்கு மாற்றம் சாத்தியமல்ல என்பது நிரூபணமாகும்!

தீவிரவாதம் இன்னும் அதிகமாகும். சுண்டைக்காய் தேசமான இராக்கில் மாட்டிக்கொண்டு இன்று வரை அமெரிக்கா விழிபிதுங்கிக்கொண்டு இருப்பது ஏன்? அமெரிக்காவைவிட இராக்கின் படை பலம் பெரிதா? ஆப்கானிஸ்தான்? கஞ்சாச் செடிகளும் குகைகளும்கொண்ட ஒரு பாழடைந்த தேசத்தை இன்று வரை அமெரிக்காவால் வெல்ல முடியாமல் இருப்பது ஏன்? காரணம், அமெரிக்காவுடன் மோதிக்கொண்டு இருப்பது இராக் ராணுவமும் ஆப்கன் ராணுவமும் அல்ல. இராக்கியர்களும் ஆப்கானிஸ்தான் மக்களும்தான். ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டு வெல்வது சுலபம். மக்களை வெல்வது கடினம்!

அமெரிக்கா அலறுவது போல் உண்மையில் ஆப்கன் - பாக். எல்லை அத்தனை பயங்கரமானதா? இங்கிருந்துதான் அல்-கொய்தா பயிற்சி எடுத்துக்கொள்கிறதா? திட்டமிடுகிறதா? தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் இந்தப் பிரதேசம் மட்டும்தானா? நினைவிருக்கட்டும். செப்டம்பர் 11 - தாக்குதல் திட்டம் பெருமளவில் உருவானது பாகிஸ்தானிலோ, ஆப்கானிஸ்தானிலோ அல்ல... ஜெர்மனி மற்றும் ஃப்ளோரிடாவில். போரைப் பற்றிச் சிந்திப்பதற்கு முன்னால், இல்லாத இடத்தில் எதையோ தேடி, எதையெதையோ பெற்றுக்கொண்ட புஷ்ஷின் கதையை ஒபாமா ஒரு முறை நினைவுபடுத்திக்கொள்ளட்டும்!

Thursday 19 February, 2009

பாகிஸ்தான் பற்றிய தொடர் (14)

*******************
22nd February
******************

குறைந்த விலையில் ஒரு துருப்புச்சீட்டு!

'உனக்கு இந்தியாவைப் பிடிக்காதா... அப்படியென்றால், நீதான் என்னுடைய சிறந்த நண்பன்!' -பாகிஸ்தானின் சர்வதேச உறவுகளுக்கான ஃபார்முலா இதுதான். அந்தக் காலத்து லியாகத் அலிகான் தொடங்கி, இந்தக் காலத்து ஆசிஃப் அலி சர்தாரி வரை பாகிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தில் யார் இருந்தாலும் இந்த பாலிஸியில் அணுவளவும் மாற்றம் இருக்காது. அப்படி இருந்தால்... 'ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது!' என்று அர்த்தம்.
அமெரிக்க நெருக்கத்தில் உல்லாசமாக இயங்கிக் கொண்டு இருந்த பாகிஸ்தான், திடுதிப்பென சீனாவைக் காதலிக்கத் தொடங்கியதன் பின்னணியில் இருந்ததும் இந்த ஃபார்முலாதான். வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்கா மும்முரமாக ஈடுபட்டிருந்ததைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்த விரும்பிய பாகிஸ்தான், சீனாவின் மீது ஏக்கப் பார்வையை வீசத் தொடங்கியது.

இந்தியா, சீனா இடையேயான யுத்தத்துக்குப் பிறகு சீனாவுடன் நெருக்கம் காட்டத் தொடங்கியது பாகிஸ் தான். இந்தியாவுக்கு எதிராக 'செக்' வைப்பதற்கு பாகிஸ்தானால் உதவ முடியுமா என்று கணக்குப் போட்டுப் பார்த்தது சீனா. விடை சரியாக வரவே, பாகிஸ்தானும் சீனாவும் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்டன. உண்மையில், இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தக் குறைந்த விலையில் கிடைத்த துருப்புச் சீட்டு பாகிஸ்தான் என்று கணித்தது சீனா. அதைப் போலவே, இந்தியாவின் புண்ணியத்தில் தனக்குக் கிடைத்த பிரமாண்டமான பரிசு சீனாவின் உறவு என்பது பாகிஸ்தானின் எண்ணம்.
சீனாவுடன் பாகிஸ்தான் உறவு பேணுவதை, அமெ ரிக்கா துளியளவும் ரசிக்கவில்லை. நேரம் பார்த்துக் குட்டு வைக்க முடிவு செய்தது. அதற்குத் தோதாக இந்தியா-பாகிஸ்தான் இடையேயான யுத்தம் (1965) வந்தது. இதுதான் சாக்கென்று நீண்ட கடிதத்தை பாகிஸ் தானுக்கு எழுதியது அமெரிக்கா.
'நாங்கள் கொடுக்கும் ராணுவ உதவிகள் தவறாகப் பயன்படுத்தப் படலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. ஆகவே, இனி எங்களிடம் இருந்து எந்த விதமான ராணுவ உதவி யையும் எதிர்பார்க்க வேண்டாம்!' -இதுதான் அந்தக் கடிதத்தின் சாரம்.

அப்போது வெள்ளை மாளிகையில் வீற்றிருந்தவர் லிண்டன் ஜான்சன். யுத்தம் நடந்துகொண்டிருக்கும் சமயத்தில் திடீரென அமெரிக்கா முறுக்கிக்கொண்டதால், பாகிஸ்தானுக்கு பலத்த சிக்கல். யுத்தத்தில் பயன்படுத்தப் பட்ட ஏராளமான ஆயுதங்கள் பழுதடைந்துவிட்டன. சரிசெய்து மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்றால், புதிய உதிரிபாகங்கள் தேவை.
அமெரிக்க அதிபர் ஜான்சன் கறாராகச் சொல்லி விட்டதால், ராணுவ உதவிக்கான வழி முற்றிலுமாக அடைக்கப்பட்டிருந்தது. வசமாகச் சிக்கிக்கொண்டது பாகிஸ்தான். பின்னர் ஒருவழியாக, ஐ.நா-வின் தலையீட் டால் தப்பிப் பிழைத்தது.

நேரம் பார்த்துப் பழிவாங்கிய அமெரிக்கா மீது, அளவு கடந்த ஆத்திரம் பாகிஸ்தானுக்கு. கூடவே கொஞ்சம் பயமும் வந்து சேர்ந்திருந்தது. காரணம், பாகிஸ்தானுக்குத் தேவையான ஆயுதங்களில் எண்பது சதவிகிதம் அமெரிக் காவில் இருந்துதான் இறக்குமதியாகிக்கொண்டு இருந் தது. இப்போது அமெரிக்கா கைவிரித்துவிட்டது என்பதற்காக ஈரத்துணியைக் கட்டிக்கொண்டு உட்கார முடியாது என்று தன்னைத்தானே உசுப்பேற்றிக்கொண்ட பாகிஸ்தான் உதவி கோரி சீனா, வடகொரியா, ஜெர்மனி, இத்தாலி, ஃபிரான்ஸ் என்று பல தேசங்களுக்கும் படை யெடுத்தது.

பெரும்பாலான நாடுகள் கைவிரித்துவிட்டன. ஆனால், அன்பு நண்பர் சீனா மட்டும் பாகிஸ்தானைப் பாசத்துடன் உபசரித்தார். 'கவலையே வேண்டாம். உங்க ளுக்குத் தேவையான ராணுவ உதவிகளை நாங்கள் செய்துகொடுக்கிறோம். போதுமா?'

இந்தியாவுக்கு எதிராகத் தன்னைக் கொம்பு சீவிவிடுவது என முடிவு செய்துவிட்டது சீனா என்பதை பாகிஸ் தான் நன்றாகவே புரிந்துகொண்டது. உற்சாகமாகத் தலையசைத்தது. விளைவு, தொள்ளாயிரம் பீரங்கிகள், 'மிக்-19' ரகத்தைச் சேர்ந்த போர் விமானங்கள், மூன்று காலாட்படைகளுக்குத் தேவையான ஆயுதங்களைக் கொடுத்து, பாகிஸ்தானை உற்சாகப்படுத்தியது சீனா.

சீனாவைப் பின்பற்றி மேலும் சில தேசங் கள் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வாரி வழங்கின. குறிப்பாக, போர் விமானங்கள் மற்றும் சிறிய அளவிலான கப்பல்களை பாகிஸ்தானுக்குப் பரிசளித்தது ஃபிரான்ஸ். உடனே சோவியத் யூனியனும் தன் பங்குக்குக் கொஞ்சம் கொடுக்கலாம் என்று முடிவு செய்து, 'டி-55' ரகத்தைச் சேர்ந்த பீரங்கிகள் மற்றும் சில ஹெலிகாப்டர்களை பாகிஸ்தானுக்கு அளித்தது.

விஷயத்தைக் கேள்விப்பட்ட இந்தியா, சோவியத் யூனியனிடம் தன் அதிருப்தியை வெளிப்படுத்தவே பின்வாங்கியது சோவியத். வெள்ளை அமெரிக்கா உதறினாலும் செஞ்சீனம் கைகொடுத்ததில் பாகிஸ்தானுக்குப் பரம திருப்தி. கையைக் கடிக்காத விலையில் சீனா கொடுத்த ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. இந்தப் பின்னணியுடன் 1969 மார்ச் மாதம் பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளராகப் பொறுப்பேற்று இருந்தார், ஆகா முகமது யாஹியா கான்.

நேற்று வரை நடந்தவை மிலிட்டரி மனிதரால் நடத்தப்பட்டவை, மினிமம் கியாரன்டி ஜனநாயக ஆட்சி முறை. ஆனால், யாஹியா கான் அப்படி ஆட்சி நடத்த விரும்பவில்லை. அதை மக்களிடம் ரேடியோ மூலம் பட்டவர்த்தனமாகச் சொன்னார்.

'வன்முறை, பதற்றம், பீதி. நிர்வாகம் செயலிழந்துவிட்டது. மக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியிருக்கிறது. போதாக்குறைக்குப் பொருளாதாரம் வேறு அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. இனி சட்டத்தின் ஆட்சியால் நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. நாடு அழிவின் விளிம்பில் நின்றுகொண்டு இருக்கும்போது, ராணுவம் வெறுமனே கைகட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்காது. நாட்டின் பாதுகாப்பு, சுதந்திரம், ஸ்திரத்தன்மை ஆகியவற்றை மீட்டெடுக்க ராணுவம் இந்த நொடியில் இருந்து களத்தில் இறங்குகிறது. தற்போது நம்முடைய தேசத்தை ஆக்கிரமித்திருக்கும் வன்முறை, உள்ளிட்ட அத்துணை பிரச்னைகளையும் அடியோடு ஒழித்து, பாரபட்சமற்ற முறையில் நேர்மையான தேர்தலை நடத்தி, மக்கள் பிரதிநிதிகளிடம் நாட்டை ஒப்படைப்பதுதான் என் ஒற்றை நோக்கம். ஆதரவு கொடுங்கள்!'

'ராணுவத்தில் குப்பை கொட்டிக்கொண்டிருந்த மனிதரால் அரசு நிர்வாகத்தில் ஒன்றும் சாதித்துவிட முடியாது!' என்று கெக்கெலி கொட்டிய அரசியல்வாதிகளுக்கு யாஹியா கான் சொன்ன பதில் இதுதான். 'முப்பத்திரண்டு ஆண்டு காலம் ராணுவத்தை மேய்த்த எனக்கு, உங்களை மேய்ப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை!'

அரசு அதிகாரிகள் பல் பிடுங்கப்பட்ட பாம்புகளாக மாறினர். சர்வம் ராணுவ மயம். யாஹியா கானின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ராணுவ அதிகாரிகள் பலருக்குப் பதவிகள் வழங்கப்பட்டன. ராணுவ நிர்வாகத்தில் பழம் தின்று கொட்டை போட்ட பல அதிகாரிகள், முக்கியமான பதவிகளில் அமர்த்தப்பட்டனர்.

ராணுவம், வெளியுறவு, பொருளாதாரம் ஆகிய துறைகளைத் தன்வசம் வைத்துக்கொண்டார் யாஹியா கான். பெயருக்கு எட்டு அரசியல்வாதிகளை அமைச்சர் பொறுப்பில் அமர்த்தியிருந்தார். துணைத் தளபதியாக இருந்த பீர்ஸாதா, கிட்டத்தட்ட பிரதமரைப் போல செயல்பட்டுக் கொண்டிருந்தார். ராணுவ அதிகாரி ஹாஸன் என்பவரே அரசின் சட்ட ஆலோசகர். சுருக்கமாகச் சொல்வதென்றால், ராணுவ அதிகாரிகளே தடியெடுத்த தண்டல்காரர்களாகத் திரிந்து கொண்டிருந்தார்கள். ஏழெட்டு மாதங்களுக்கு இதே கூத்துகள் தான்.

நவம்பர் 28, 1969 அன்று திடுதிப்பென பாகிஸ்தான் ரேடியோ ஒரே செய்தியைத் திரும்பத் திரும்ப ஒலிபரப்பிக்கொண்டு இருந்தது. தேர்தல். மக்களுக்கு சந்தோஷம். முக்கியமாக - அரசியல்வாதிகளுக்கு. தேர்தல் முடிந்ததும் அமையப்போகும் நாடாளுமன்றம் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும். அதை அங்கீகரிக்கக்கூடிய அதிகாரம், அதிபரான தனக்கு மட்டுமே உண்டு என்று அறிவித்தார் யாஹியா கான்.
அப்துஸ் சத்தார் என்ற உச்ச நீதிமன்ற நீதிபதியைத் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமித்தார் யாஹியா கான். 1961-ம் ஆண்டுக்கான மக்கள் தொகைப் பட்டியலை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதன் பிரகாரம் வாக்காளர் பட்டியலைத் தயார் செய்யுங்கள். அப்படியே பழைய தொகுதிகளை மறுசீரமைப்பு செய்துவிடுங்கள். முக்கியமான விஷயம், ஆஸாத் காஷ்மீர் (இந்திய பாஷையில், பாகிஸ்தானால் ஆக்கிர மிக்கப்பட்ட காஷ்மீர்) மக்களும் இந்தத் தேர்தலில் வாக்களிக்கப்போகிறார்கள். அதற் கான ஏற்பாடுகளைச் செய்துவிடுங்கள்!' -அப்துஸ் சத்தாருக்கு யாஹியா கான் ஒதுக்கிய வேலைகள் இவைதான்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 5, 1970. ஆனால், ஜூன் மாதமே தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் முடிவடைந் திருந்தன. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை ஐந்து கோடியே எழுபது லட்சம் என்று அறிவிக்கப்பட்டது. தடை செய்யப்பட்டிருந்த அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் விலக்கிக்கொள்ளப்பட்டன. இனி கட்சிகள் அரசியல் பேசலாம்; பிரசாரம் செய்யலாம். தேர்தல் நடத்துவது மட்டும்தான் பாக்கி என்ற நிலை.
தேர்தல் நடத்துவதில் புயலுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. 'போலா' என்ற பெயரில் உருவான பலத்த புயல் ஒன்று ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியெடுத்துவிட்டது. முக்கியமாக, கிழக்கு பாகிஸ்தானுக்கு பலத்த அடி. உயிர்ச்சேதம். பொருள்சேதம். இத்யாதி இத்யாதிகள். விளைவு, தேர்தல் டிசம்பருக்கு நகர்த்தப்பட்டது.

புயலால் ஏற்பட்ட வடு மறைவதற்குள் மக்கள் தேர் தலுக்குத் தயாராகவேண்டிய நிலை. ஆனால், இந்த அக்கறை எதுவும் இல்லாமல் அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் குதித்துவிட்டன.

'இஸ்லாம் எங்களுடைய நம்பிக்கை. ஜனநாயகம் எங்களுடைய கொள்கை. சோஷலிசம் எங்களுடைய கோட்பாடு.' என்ன... வித்தியாசமாக இருக்கிறதா? ஆம். கொஞ்ச காலம் தலைமறைந்திருந்த ஜுல்ஃபிகர் அலி புட்டோ, வெகுநாட்களுக்குப் பிறகு காட்சிக்குள் நுழைந்திருந்தார். அப்போது 'இஸ்லாமிய சோஷலிசம்' என்ற புதிய கொள்கையை அறிவித்தார் புட்டோ. மேற்கு பாகிஸ்தானை மையம்கொள்ளத் தொடங்கியது புட்டோ புயல்.
இதற்கு நேர் எதிராகத் தன் ஆறு அம்சக் கோரிக்கையுடன் கிழக்கு பாகிஸ்தான் பிரசாரக் களத்தில் குதித்திருந்தார் ஷேக் முஜிபுர் ரஹ்மான். அவர் சொன்ன ஆறு அம்சங்களும் மிக முக்கியமானவை.
வயதுவந்த வாக்காளர்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய நாடாளுமன்றத்தால் நாடு நிர்வகிக்கப்பட வேண்டும், ராணுவம் மற்றும் வெளியுறவு தவிர மற்ற அனைத்துத் துறைகளும் மாநில நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். நாடு முழுக்க ஒரே கரன்ஸி பயன்படுத்தப்பட வேண்டும். மாநிலத்தின் வரி மற்றும் வருவாய் விவகாரத்தில் மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலை யிடக் கூடாது, வெளிநாடுகள் மூலமாகக் கிடைக்கும் வருவாய் தொடர்பான தனித்தனி கணக்குகள் பின்பற்றப்பட வேண்டும். கிழக்கு பாகிஸ்தானுக்கென்று பிரத்தியேகமாக ராணுவம் உருவாக்கப்பட வேண்டும்.

முஜிபுரின் கோரிக்கைகளுக்கு கிழக்கு பாகிஸ்தானில் பலத்த ஆதரவு. அதே போல புட்டோ மேற்கு பாகிஸ்தானில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தார். தேர்தல் முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என்று வெவ்வெறு கருத்துக் கணிப்புகள் வந்துகொண்டிருந்தன. ஆனால், தேர்தல் முடிவுகள் அனைத்துக் கட்சிகளுக்குமான அதிர்ச்சி வைத்தியமாக அமைந்ததுதான் சுவாரஸ்யம்!

பாகிஸ்தான் பற்றிய தொடர் (13)

***************

18th February

***************
தாஷ்கண்ட் என்றொரு தந்திரம்!


வெறுப்பின் உச்சகட்டத்துக்குச் சென்றிருந்தார் ஜுல்ஃபிகர் அலி புட்டோ. 'உலகத் தலைவர்கள் அத்தனை பேருக்கும் முன்னால் தன்னை அறைக்குள் வரவேண்டாம்!' என்று தடுத்து நிறுத்தியது உறுத்திக்கொண்டே இருந்தது. தன் சுயமரியாதையைக் கேள்விக்குறியாக்கி விட்டாரே அயூப்கான் என்ற வருத்தம் புட்டோவுக்கு. மனதுக்குள் நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டிருந்த அதிருப்தி, மெள்ள மெள்ளப் பழிவாங்கும் உணர்ச்சியாகப் பரிணா மம் அடையத் தொடங்கியது.


காஷ்மீரையும் தாஷ்கண்ட் ஒப்பந்தத்தையும் வைத்து, தன் இமேஜை உயர்த்தி
உச்சாணிக்கொம்பில் உல்லாசமாக அமர்ந்துகொள்ளலாம் என்று திட்டம் போட்டிருக்கிறார் அயூப்கான். 'கூடாது... கூடவே கூடாது! அவற்றை வைத்தே அயூப்கான் என்ற மரத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்க்கப் போகிறேன்!' என்று உறுமினார் புட்டோ.


மனிதர் ஆத்திரக்காரரே ஒழிய, அவசரக்காரர் அல்ல. படுபுத்திசாலி. திட்டம் போட்டு ஆளை வளைப் பதில் வல்லவர். '1965 யுத்தத்துக்கு வியூகம் வகுத்துக்கொடுத்தவரே புட்டோதான்!' என்று அயூப்கானே ஒரு முறை பகிரங்கமாக அறிவித்திருந்தார். அந்த அளவுக்கு அசகாயசூரரான புட்டோ, அயூப்கான் விஷயத்தில் அமைதியாகக் காய்களை நகர்த்துவது என்று முடிவு செய்தார். கத்தி வேண்டாம். ரத்தம் வேண்டாம். குறைந்தபட்சம் சத்தம்கூட வேண்டாம். எனில் எப்படி இது சாத்தியம்?


புட்டோ தேர்ந்தெடுத்த ஆயுதம், பிரசாரம். ரகசியப் பிரசாரம். அயூப்கானுக்கு எதிராக மக்களைத் திருப்பிவிட்டாலே போதும்... மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள். தன் திட்டத்தை வகுப்பதற்கு வசதியாகத் தனக்கு அணுக்கமான நண்பர்கள் மற்றும் உதவியாளர்களை மட்டும் அவ்வப்போது அழைத்துப் பேசினார்.


'நீங்கள் எப்படிச் செய்வீர்கள் என்று தெரியாது. ஆனால், என்ன செய்யவேண்டும் என்பதை மட்டும் சொல்கிறேன். நாடு முழுக்க இருக்கும் மாணவர் தலைவர்களைச் சந்தியுங்கள். துடிப்பான இளைஞராகப் பிடித்தால் நல்லது. மெதுவாகப் பேச்சுகொடுத்துப் பாருங்கள். அயூப்கான் மீது அதிருப்தியில் இருக்கிறார் என்று லேசுபாசாகத் தெரிந்தாலே போதும்... அழைத்து வந்துவிடுங்கள். அவர்களைச் சரிக்கட்டவேண்டிய பொறுப்பு என்னுடையது. முக்கியமாக அரசியல்வாதி களையும் அழைத்து வாருங்கள். கொஞ்ச மாவது உபயோகமாக இருப்பார்கள்.'


திட்டம்வேலை செய்யத் தொடங்கி யது. அவ்வப்போது மாணவர்களும் அரசியல்வாதி களும் புட்டோவை சந்திக்க வந்தார்கள். பேசினார்கள். நம்பிக்கைக் கீற்று தூரத்தில் தென்படுவதுபோல இருந்தது. சட்டென்று ஒரு யோசனை வந்தது புட்டோவுக்கு. இனிமேல் நிறைய மனிதர்களை சந்திக்க வேண்டியிருக்கும். விவாதிக்க வேண்டியிருக்கும். அமைச்சராகவே இருந்துகொண்டு எல்லோரையும் சந்திப்பது, பேசுவது சாத்தியமில்லை. பேசாமல் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தார்.


'அளவுக்கு மீறிய அசதி. உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. ஓய்வு எடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். ஆகவே, நீண்ட விடுப்பு எடுத்துக் கொள்கிறேன்.'


கடிதத்தை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வேலை பார்க்கத் தொடங்கினார் புட்டோ. நாட்டின் முக்கியமான அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் லெட்டர் பேடு கட்சிகள் வரை ஓசைப்படாமல் வந்து ஆலோ சனை நடத்திச்சென்றனர். முக்கியமாக மாணவர் தலைவர்கள்.


'ராணுவ ஆசாமியான அயூப்கானுக்கு அரசியலும் தெரியவில்லை. ஒரு மண்ணும் தெரியவில்லை. இந்திய அரசியல்வாதிகள் அவரை சுலபமாக ஏமாற்றிவிட்டனர். தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் சோவியத்தின் தந்திரத்துக்கு முன்னால்... அயூப்பின் அனுபவம் எடுபடவில்லை. பல விஷயங்களில் பாகிஸ்தானை விட்டுக்கொடுத்துவிட்டார் அயூப்கான். தாஷ்கண்ட் ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கே அதிக லாபம். நமக்கு ஒரு பயனும் இல்லை. உண்மையில் பாகிஸ்தானின் தலைக்கு மேலே கத்தியைத் தொங்கவிட்டிருக்கும் காரியத்தைத்தான் அயூப் செய்திருக்கிறார். நான் தலையிட்டு ஏதேனும் செய்யலாம் என்று பார்த்தால், அந்த வழியையும் அயூப்கான் அடைத்துவிட்டார். இனிமேல் பாகிஸ்தானை அந்த அல்லாவே காப்பாற்றவேண்டும்!'


கண்களில் நீர் தளும்பாத குறையாக புட்டோ தன்னிலை விளக்கம் கொடுத்தார். ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுடைய எண்ணவோட்டத்தை கணித்துவிடக் கூடியவர் புட்டோ. அரைகுறை அறிவுள்ள அரசியல் ஆசாமிகளிடம் ஒரு மாதிரி பேசினார். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய மாணவர் களிடம் வேறு மாதிரி பேசினார். புட்டோவின் கண்ணீர், அயூப்கானுக்கு எதிரான அலையாக உருமாறத் தொடங்கியது.


மாணவர்கள் முடிந்ததும் ஆசிரியர்கள். அவர்களுக்கு அடுத்து அரசியல்வாதிகள். ஒவ்வொரு திரியாகப் பற்ற வைத்துக்கொண்டே இருந்தார் புட்டோ. அங்கொன்றும் இங்கொன்றுமாக நெருப்பு பற்றி எரியத்தொடங்கியது. மாணவர்கள் அதிபர் அயூப்கானுக்கு எதிராக சாலையில் குதித்துப் போராடத் தொடங்கினர்.


'பாகிஸ்தானின் நலனை எதிரியிடம் விட்டுக்கொடுத்த அயூப்கான் ஒழிக! நாட்டின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கிய அயூப்கானே பதவி விலகு!' உச்சஸ்தாயியில் கேட்கத் தொடங்கின எதிர்ப்பு கோஷங்கள். அரசியல் தலைவர்கள் தாஷ்கண்ட் ஒப்பந்தத்தைத் தாறுமாறுகாகக் கிழித்துத் தோரணமாகத் தொங்கவிட்டனர். போராட்டம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்தது.


பிப்ரவரி மாதத்தில் லாகூர் நகரத்தில் சர்வகட்சிப் பிரதிநிதிகளுக்கான மாநாடு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சர்வ கட்சிகள் என்றால் தாஷ்கண்ட் ஒப்பந்தத்தை எதிர்க்கும் அத்தனை கட்சிகளும் கலந்துகொண்டன. முக்கியமாக, கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஷேக் முஜிபுர் ரஹ்மான். தன் ஆதரவாளர்களுடன் வந்து அயூப்கானுக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தியிருந்தார் முஜிபுர்.


நடக்கும் அத்தனை கூத்துகளையும் நான்கு மாதங்களுக்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் புட்டோ. காதில் விழுகிற செய்திகள் எல்லாம் அவருக்கு உற்சாகத்தை வாரி வழங்கின. நிலைமை சாதகமாக இருக்கிறது. இப்போது இறங்கினால் சரியாக இருக்கும். முடிவெடுத்தார் புட்டோ. மீண்டும் ஒரு கடிதம் எழுதினார்.


'அன்புக்குரிய நண்பரே, அசதி போய் விட்டது. ஆனாலும், அமைச்சர் பதவியைத் தொடர்வதில் விருப்பமில்லை. வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன். இன்ஷா அல்லாஹ்.'
பதவி விலகிய புட்டோ, ராவல்பிண்டியிலிருந்து தன் சொந்த ஊரான லர்கானாவுக்கு ரயிலில் சென்றார். அயூபுக்கு எதிரான அக்னி யுத்தத்தை அங்கிருந்து தொடங்குவதாக முடிவு செய்திருந்தார். வழிநெடுக ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் புட்டோவைப் பார்ப் பதற்காகப் பொதுமக்கள் கூடினர். பாது காப்பை மீறி வந்து கோஷம் எழுப்பினர். 'புட்டோ வாழ்க! புட்டோ வாழ்க!' எல்லோர் கண்களுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்தார் புட்டோ.
ஆதரவு இருக்கும் என்று தெரியும். ஆனால், இத்தனை பெரிய ஆதரவு அலை உருவாகி இருக்கும் என்று புட்டோ துளியும் எதிர்பார்க்கவில்லை. பூரிப்பாக இருந்தது. அந்தத் தெம்பிலேயே தன் ஆதரவாளர்களுடன் இணைந்து புத்தம் புது அரசியல் இயக்கத்தை உருவாக்கினார். நவம்பர் 30, 1967 அன்று தொடங்கப்பட்ட கட்சியின் பெயர். 'பாகிஸ்தான் மக்கள் கட்சி.' (Pakistan People's Party)


எதிர்ப்பின் வேகம் விஸ்வரூபம் எடுத்தது. நாட்டில் முழுமையான ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று எல்லாக் கட்சிகளும் உரத்த குரலில் உறுமிக் கொண்டிருந்தன. அந்த ஜோதியில் புட்டோவின் கட்சி யும் இணைந்துகொண்டது. புட்டோவின் வசீகரம் ததும்பும் பேச்சில் மக்கள் மயங்கத் தொடங்கினர். புட்டோ ஆதரவு அலை உருவாகிக்கொண்டிருந்தது. அதாவது, அயூப்கான் எதிர்ப்பு அலை.


நீதியின் ஆட்சியை வழங்கக் கூடிய வல்லமை புட்டோவுக்கு மட்டுமே இருப்பதாக ஊடகங்கள் எழுதித் தீர்த்தன. அனைத்துக்கும் பின்னணியில் இருந்தவர் சாட்சாத் புட்டோவே. ஆனால், விஷயம் வெளியே கசியாமல் பார்த்துக்கொண்டது புட்டோவின் சாதுர்யம். எனினும் அவருக்குப் பல தொழிற்சங்கத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் வலிய வந்து ஆதரவு கொடுத்தனர்.


போதாக்குறைக்கு கிழக்கு பாகிஸ்தானின் ஷேக் முஜிபுர் ரஹ்மான். 'மேற்கு வாழ்கிறது, கிழக்கு தேய்கிறது' என்று தொண்டைத் தண்ணீர் வற்றும் அளவுக்குக் கதறிக்கொண்டிருந்தார். அங்கே ஒவ்வொரு நாளும் போராட்டமும் ஊர்வலமுமாகவே கழிந்து கொண்டிருந்தன.


மேற்கு, கிழக்கு என்று நாட்டின் ஒவ்வொரு அங்குலமும் குலுங்கிக்கொண்டிருந்தது. வன்முறை களுக்கு வால் முளைத்திருந்தன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர விரும்பிய காவல் துறை, மாணவர்களுக்கு எதிராக லத்தியைச் சுழற்றியது. அவ்வளவுதான்... கனன்று கொண்டிருந்த வன்முறை நெருப்பு வெடித்துச் சிதறியது.
எரிகிற நெருப்பில் எரிவாயு செலுத்தியது போல பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்த அயூப்கானை மாணவர் ஒருவர் கொலை செய்ய முயற்சி செய்துவிட்டார். கண்கள் சிவந்த அயூப்பின் அடிப்பொடிகள் மாணவர்களைத் துவைத்துக் காயப் போட ஆரம்பித்துவிட்டனர். பலர் கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டனர்.


எல்லாவற்றுக்கும் பின்னணியில் இருப்பவர்கள் இந்த இருவரும்தான் என்று புட்டோவையும் முஜிபுர் ரஹ்மானையும் கைது செய்து உள்ளே வைத்தது அயூப்கான் அரசு. விநாச காலே விபரீத புத்தி. கைது செய்ய உத்தரவிட்டது எத்தனை பெரிய தவறு என்பது பின்னர்தான் அயூப் அரசுக்குப் புரிந்தது. ஓய்ந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. கண்டனக் கணைகள் அயூப்கானை அதிர வைத்தன. தினம் தினம் எழுந்த எதிர்ப்பு கோஷங்களை அயூப்கானால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை!
நித்திய கண்டம் பூரண ஆயுசாகக் கழிக்க அவருக்கு விருப்பமில்லை. பேசித் தீர்க்கலாம் வாருங்கள் என்றால், அதற்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள்முரண்டு பிடித்தனர். ஒரு முடிவுக்கு வந்தார் அயூப்கான்.


'மேஜர் யாஹியா கான், இனிமேல் எல்லாவற்றையும் நீங்கள்தான் பார்த்துக் கொள்ளப்போகிறீர்கள். நான் ராஜினாமா செய்கிறேன்.'


ஆம். மார்ச் 17, 1969 அன்று பாகிஸ்தானில் மீண்டும் ராணுவம் ஆட்சிக்கு வந்தது. ராணுவப் பணியாளர்களின் தலைவராக இருந்த ஆகா முஹம்மது யாஹியா கான் ராணுவ ஆட்சியாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். வால் போய் கத்தி வந்த கதை. இத்தனை கூத்துகளுக்கும் இடையில் அமெரிக்காவிடம் இருந்து ஓசையில்லாமல் ஓலை ஒன்று வந்து சேர்ந்திருந்தது!

பாகிஸ்தான் பற்றிய தொடர் (12)

********************
15th February
********************
விடாக்கண்டன்... கொடாக்கண்டன்!

'நாம் அடித்தால்... திருப்பியடிக்கும் திராணிகூட இந்தியாவுக்குத் தற்போது இல்லை. கொஞ்சம் கவனம் கலைந்தாலும், இந்தியாவை கபளீகரம் செய்யக் காத்துக் கொண்டிருக்கிறது சீனா. இப்போது நாம் களத்தில் இறங்கினால், கச்சிதமாகக் காரியத்தை முடிக்கலாம் என்ன சொல்கிறீர்கள்?' -ஆளாளுக்கு தூபம் போட்டுக் கொண்டிருந்தனர்.

அனைத்துக் கருத்துகளையும் காதில் வாங்கிக் கொண்டார் அயூப்கான். ஆனால், மூளைக்குள் அனுமதிக்கவில்லை. நிதானம் குறையாமல் பேசினார்.
'நண்பர்களே, எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. என் ராணுவம் மிக பிரமாண்டமானது. யாருக்கும் சளைத்ததில்லை. இந்தியாவோடு நேருக்குநேர் மோதி ஜெயிப்பதைத்தான் விரும்புகிறேன். முதுகில் குத்துவது அவமானம்!'

அயூப்கானின் இந்த வித்தியாசமான வீரவசனம் சுற்றி யிருந்த அதிகாரிகளை
வாய்பிளக்க வைத்தது. 'என்ன மனிதர் இவர்? இவருடைய வியூகத்தைப் புரிந்துகொள்ளப் புண்ணியம் செய்திருக்க வேண்டும் போல...' என்று புலம்பியபடியே நகர்ந்துவிட்டனர். இந்திய-சீன யுத்தச் செய்திகளை பேப்பரில் படித்துக்கொண்டிருந்த அயூபுக்கு திடீரென்று ஒரு யோசனை.

'நம்மை உச்சாணிக் கொம்பில் உட்கார வைத் திருக்கிறார்கள். கேட்டதையெல்லாம் அள்ளிக் கொடுக்கிறார்கள்; சமயத்தில் கேட்காதபோதும் கொடுக் கிறார்கள். ராணுவத்தை அங்குலம் அங்குலமாக வளர்த்துக் கொடுத்திருக்கிறார்கள். பதிலுக்கு நான் என்ன செய்தேன்?' விநோதமான சிந்தனை வந்திருந்தது அயூப்கானுக்கு. அவர் அன்புப்பரிசு கொடுக்க விரும் பியது அமெரிக்காவுக்கு. நேராக அவர்களிடமே கேட் டார். 'என்ன வேண்டும் உங்களுக்கு?'

'எங்கள் உளவுத் துறை உத்தமோத்தமர்கள் சிலர், உங்கள் நாட்டில் இருந்துகொண்டு சில காரியங்களைச் செய்ய விரும்புகிறார்கள். ரஷ்யா சம்பந்தமாக ஏதோ ஆராய்ச்சி செய்ய வேண்டுமாம். இடம் இல்லாமல் தவிக்கிறார்கள், பாவம். உங்களால் உதவ முடியுமா?'

அமெரிக்க ஒட்டகம் தெற்காசியக் கூடாரத்துக்குள் நேரடியாகவே கால்வைக்க விரும்புகிறது.

'தாராளமாக அனுப்புங்கள். வடமேற்கு எல்லைப்புற மாகாணங்கள் எல்லாம் காலியாகத்தான் இருக்கின்றன. படாபர் என்ற இடத்தை ஸ்பெஷலாகத் தயார் செய்து கொடுக்கச் சொல்கிறேன். பயன்படுத்திக் கொள்ளட்டும்' என்றார் அயூப்கான்.

'ஆங், கேட்க மறந்துவிட்டோம். எங்களுடைய உளவு விமானங்களை இயக்க ஏதேனும் ஒரு விமான நிலையத்தில் அனுமதி கொடுக்க முடியுமா?' -பக்கு வம் குறையாமல் கேட்டது அமெரிக்கா. 'அவ்வளவுதானே... பேஷாக பெஷாவர் விமான நிலையத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!' என்றார் அயூப்கான். அகமகிழ்ந்து போனது அமெரிக்கா. சில மில்லியன் டாலர்களை அன்பளிப்பாக வழங்கியது.

உற்சாகமடைந்த அயூப், சூட்டோடு சூடாக அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார்.

'வாக்காளப் பெருமக்களே, தேர்தலுக்குத் தயாரா குங்கள். அடியேனையே மீண்டும் அதிபராக்க உங்க ளுக்கு மீண்டும் ஓர் அரிய வாய்ப்பு...'

கடந்த முறை போலல்லாமல் 1965 தேர்தலில் வித்தியாசமான எதிர்ப்பை அயூப்கான் சந்திக்க வேண் டியிருந்தது. பாகிஸ்தானின் பிரதான எதிர்க்கட்சிகள் ஐந்தும் ஓரணியில் திரண்டு நின்றன. போதாக்குறைக்கு தங்களுடைய பொது வேட்பாளாராக தேசத்தந்தை ஜின்னாவின் சகோதரி ஃபாத்திமா ஜின்னாவை அறி வித்தன.

அதிர்ச்சி. ஆனால், ஆர்ப்பாட்டமெல்லாம் செய்யவில்லை. சத்தமில்லாமல் காய் நகர்த்த விரும்பி னார் அயூப்கான். அரசாங்கத்தின் அனுமதி பெறாமல் யாரும் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்ற அறிவிப்பு வெளியானது.

அமைதியாக இருந்த சிறுத்தையிடம் வலியச் சென்று வம்பிழுத்தது போல இருந்தது அயூப்கானின் நடவடிக்கை. மக்கள் ஃபாத்திமாவைச் சந்திக்க அதீத ஆர்வம் காட்டினர். எங்கு பார்த்தாலும் ஃபாத்திமா அலை. இதைக் கலைக்க அயூப்கான் நாடியது 'உலேமே' என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பை. 'பாகிஸ்தான் என்ற இஸ்லாமிய தேசம் ஒரு பெண்ணைத் தன் தலைவராக ஏற்றுக்கொள்ளாது!' என்று அந்த அமைப்பு பிரசாரம் செய்யத் தொடங்கியது.
அதை முறியடிக்கும் வகையில் ஃபாத்திமாவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். கிழக்கு, மேற்கு என்று நாட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் தடம் பதித்து மக்களின் கவனத்தை ஈர்த்துக்கொண்டு இருந்தார். ஆனால் ஆட்சி, அதிகாரம், ராணுவம் என்று அத்தனை பேரையும் தன் உள்ளங்கைக்குள் அடக்கியிருந்த அயூப் கானுக்கே வெற்றி வசமானது. மீண்டும் அதிபரானார் அயூப்.

வெற்றி கொடுத்த போதையில் அடுத்து என்ன செய்வது என்று யோசித்த அயூப்கானின் கண்களில் காஷ்மீர் வரைபடத்தைக் காட்டி ஆசைத்தீயை மூட்டி விட்டது உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. சொந்த புத்தி இருந்தும் சொல்புத்தி கேட்டு இந்தியாவுடன் யுத்தத்தைத் தொடுத்தார் அயூப்கான். அந்த யுத்தம் பற்றித் தொடக்க அத்தியாயங்களிலேயே பார்த்துவிட்டோம். உண்மையில் பதிலடி அத்தனை மூர்க்கமாகக் கிடைக்கும் என்று அயூப் துளியும் எதிர்பார்க்கவில்லை.

பக்காவாகத் திட்டம் போட்டிருந்தும் யுத்தத்தில் தோல்வி அடைந்ததை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடிய வில்லை. 'எல்லாம் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ-யின் கையாலாகாத்தனம்!' என்று நொந்துகொண்டார்.

எல்லாவற்றையும் தூக்கிக் கடாசிவிட்டு, சுதாரித்து எழுவதற்குள் மூச்சுத் திணறிவிட்டது. இதற்கிடையே இரு தேசத்துக்கும் இடையே போர் நிறுத்தப் பஞ்சாயத்தை செய்துவைக்கும் பொறுப்பை ஏற்றிருந்தார், சோவியத் பிரதமர் அலெக்ஸி கோஸிஜின். இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் பாகிஸ்தான் அதிபர் அயூப்கான் இருவரையும் தாஷ்கண்ட் நகருக்கு வருமாறு தனித்தனியே அழைப்பு விடுத்திருந்தார் கோஸிஜின் (சோவியத்தில் இருந்த தாஷ்கண்ட் தற்போது உஸ்பெகிஸ்தானில் இருக்கிறது).

சாஸ்திரிக்கு அங்கு செல்வதில் விருப்ப மில்லை. கோஸிஜினின் வற்புறுத்தல் காரணமாகவே தாஷ்கண்ட் புறப்பட்டார். கூடவே, வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரண்சிங்கையும் அழைத்துக்கொண்டார். பாகிஸ்தானில் இருந்து அதிபர் அயூப்கானும் தாஷ்கண்ட் புறப்பட் டார். அவருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜுல்ஃபிகர் அலி புட்டோவும் வந்தார்.
ஜனவரி 4, 1966 அன்று பேச்சுவார்த்தை தொடங்கியது. அயூப்கான் விடாக்கண்டன் என்றால், லால் பகதூர் சாஸ்திரி கொடாக்கண்டன். பேச்சுவார்த்தையில் இருவருமே கில்லாடியாக இருந்தனர். காஷ்மீர் பிரச்னை தீர்க்கப்பட்டுவிட்டால், போர் ஒப்பந்தத்தில் கையெழுத் திடுவதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றார் அயூப்கான். ஆனால் சாஸ்திரியோ, மற்ற பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றால், அதற்கு போர் நிறுத்த ஒப்பந்தம் மிக அவசியம் என்று கிடுக்கிப்பிடி போட்டார்.

பேச்சுவார்த்தை இழுபறியாகவே சென்றது. சட்டென்று எழுந்த கோஸிஜின், சாஸ்திரியையும் அயூப் கானையும் தனி அறைக்குச் சென்று பேசிவிட்டு வருமாறு யோசனை சொன்னார். அவர்களுடன் ஜுல்ஃபிகர் அலி புட்டோவும் எழுந்து அறைக்குள் நுழைய முயன்றார். ஆனால், அயூப்கானுக்கு புட்டோ வருவதில் லேசான சங்கடம். மனம்விட்டுப் பேசுவதற்கு தடையாக இருப்பார் என்று நினைத்தாரோ என்னவோ... 'வேண்டாம்' என்று கையசைக்கவே முகம் சிவந்துவிட்டது புட்டோவுக்கு. கைகளைப் பிசைந்துகொண்டார். அயூப்கான் - புட்டோ மோதலுக்கு இதுதான் முதல் புள்ளி.

படைகள் வெளியேறுவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நகர்ந்தது. 'நீங்கள் சாம்ப் பகுதியிலிருந்து வெளியேறுங்கள். பதிலுக்கு ஹாஜி பிர் மற்றும் திக்வால் ஆகிய பகுதிகளிலிருந்து இந்திய ராணுவம் வெளியேறிவிடும்' என்றார் சாஸ்திரி. 'பாகிஸ்தானின் பல பகுதிகளுக்குள் இந்திய ராணுவம் ஊடுருவியிருக்கிறது. முக்கிய மாக சிந்த் பகுதியில். முதலில் அங்கிருந்து உங்கள் ராணுவத்தை வெளியேறச் சொல்லுங்கள். மறுநொடியே சாம்பில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் நகர்ந்துவிடும்' என்று திட்டவட்டமாகச் சொன்னார் அயூப்கான். மீண்டும் இழுபறி.

பேச்சுவார்த்தை நீண்டுகொண்டே போனது. ஒரு வழியாக செயல்திட்டம் தயாரிக்கும் வேலை ஸ்வரண்சிங்குக்கும் புட்டோவுக்கும் தரப்பட்டது. இவர்களும் விடாக்கண்டர், கொடாக் கண்டர்கள்தான். 'காஷ்மீர் விவகாரத்தைச் செயல் திட்டத்தில் சேர்த்தாலே ஆச்சு' என்றார் புட்டோ. 'முடியவே... முடியாது!' என்றார் ஸ்வரண்சிங். இரு தரப்புடன் மாறிமாறிப் பேசிப்பார்த்தார் கோஸிஜின். ம்ஹ§ம்... இருவருமே மசிவதாகத் தெரியவில்லை.
இறுதியாக, காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் அமைதியான முறையில் தீர்த்துக்கொள்வதற்கு வகை செய்யும் ஒரு திட் டத்தைக் கொண்டுவந்தார் அயூப்கான். அதைப் பார்த்த சாஸ்திரி, 'ஆயுத உதவியில்லாமல்' என்ற வார்த்தைகளைச் சேர்க்கச் சொன்னார். முதலில் தயங்கிய அயூப், பிறகு சம்மதம் தெரிவித்தார். இதில் புட்டோவுக்குத் துளியும் விருப்பமில்லை.

யுத்தத்தை நிறுத்தியதிலேயே அவருக்கு உடன்பாடு கிடையாது. இந்த லட்சணத்தில் எதிர்காலத்தில் காஷ்மீர் பிரச்னையில் ஆயுதம் பயன்படுத்தப்படக் கூடாது என்பதை ஏற்கவே முடியாது என்றார் புட்டோ. விளைவு, புட்டோ வுக்கும் அயூப்கானுக்கும் இடையே கருத்து வேறுபாடு முற்றத் தொடங்கியது. புட்டோ தன் நிலைப்பாட்டில் நங்கூரம் போட்டு நின்றிருந்தார். நிலைமையை சமாளிக்க, 'ஆயுத உதவியில்லாமல்' என்ற வார்த்தைகளை வாபஸ் வாங்கிக்கொண்டார். இது கோஸிஜின், சாஸ்திரி உள்ளிட்ட அனைவரையுமே ஆத்திரம்கொள்ளச் செய்தது.

அதிருப்தியடைந்த சாஸ்திரியை சமாதானம் செய்ய கோஸிஜின் பெரும்பாடு படவேண்டியிருந்தது. கோஸிஜினின் விடாமுயற்சியால் தாஷ்கண்ட் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. சாஸ்திரி, அயூப்கான் இருவருமே ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டனர். தாஷ்கண்ட் ஒப்பந்தத்தின் சாரம் இதுதான்.

*1965 யுத்தத்துக்கு முன்னால் இரு தேசங்களுக்கும் எது எல்லைக்கோடாக இருந்ததோ, அதுவே எதிர்காலத்திலும் எல்லைக்கோடாக இருக்கும்.

*எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒரு நாடு, இன்னொரு நாட்டு உள்விவகாரங்களில் தலையிடவே கூடாது.

*இரு தேசத்து உறவுகளை சீரழிக்கக்கூடிய எந்தவிதமான பிரசாரத்தையும் இரு தேசத்துத் தலைவர்களும் அனுமதிக்கக் கூடாது.

*யுத்தத்தின்போது கைது செய்யப்பட்ட இரு தேசத்து வீரர்களையும் பரஸ்பரம் ஒப்படைத்துவிட வேண்டும்.

*இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார மற்றும் ராஜீய உறவுகள் தொடரும்.

*அதை மேம்படுத்தும் முயற்சியில் இரு தேசத்துத் தலைவர் களும் ஈடுபடுவார்கள்.

- இந்த ஒப்பந்தம் கையெழுத்தான ஜனவரி 10, 1966 என்ற தேதி சரித்திரத்தில் இடம் பெறுவதில் ஆயிரம் நியாயங்கள் இருக்கின்றன. ஆனால், அதற்கு மறுதினமான ஜனவரி 11-ம் தேதியும் சரித்திரத்தில் இடம்பெறுவேன் என்று அடம் பிடித் தது. அன்று தாஷ்கண்டிலேயே மரணமடைந்தார் லால் பகதூர் சாஸ்திரி. திடீர் மாரடைப்பு.

இந்தியா மிகப்பெரிய அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்க, ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்துவிட்ட திருப்தியில் பாகிஸ்தான் வந்திறங்கினார் அயூப்கான். அங்கே அவருக்காக ஒரு புலி வலை விரித்துக் காத்திருந்தது. அந்தப் புலி, ஜுல்ஃபிகர் அலி!

பாகிஸ்தான் பற்றிய தொடர் (11)

********************
11th February
********************


ராணுவம் வழியாக ஜனநாயகம்!

மார்புக்குக் குறுக்காகக் கையைக் கட்டிய படி... விறைப்புக் குறையாமல் நடந்து கொண்டிருந்தார் அயூப்கான். அப்படி நடந்தால், மூளைக்கு வேலை கொடுக்கிறார் என்று அர்த்தம். யாரும் கிட்டே நெருங்க மாட்டார்கள். ஓசைப்படாமல் ஒதுங்கி விடுவார்கள். தவறு... ஒதுங்கிவிடவேண்டும்!
எனக்கு இந்த அரசியல் ஆசாமிகளைப் பார்க் கவே வெறுப்பாக இருக்கிறது. வேகம் இல்லை... துடிப்பு இல்லை... வெறி இல்லை... ஆனால், பதவி ஆசை மட்டும் வக்கணையாக இருக் கிறது. கத்தை கத்தையாகப் பணம் குவிக்கத் தெரிகிறது. என்ன மனிதர்கள் இவர்கள்? ஊழல் பெருச்சாளிகளை விட்டுவைக்கவே கூடாது. ஒழித்துக் கட்டவேண்டும். எல்லோரையும்... எல்லாவற்றையும்! இல்லாவிட்டால் நாட்டையே சுடுகாடாக மாற்றி விடுவார்கள்.

என்ன செய்வது என்று முடிவெடுத்து விட்டார். ஆனால், எப்படிச் செய்வது என்பதில்தான் லேசான குழப்பம். அயூப்கானை ஆதர்ச குருவாக ஏற்றுக் கொண்ட அதிகாரிகள் ராணுவத்தில் அநேகம். அவரது ஒவ்வோர் அசைவையும் பார்த்துப் பார்த்து வளர்ந்தவர்கள் அவர்கள். முக்கியமாக, அவரை முழுக்கப் புரிந்து கொண்டவர்கள். ஆகவே, ஒவ்வொருவரையும் அழைத்துப் பேசினார் அயூப்கான்.

திட்டம் இதுதான். 'ராணுவ ஆட்சியைக் கொண்டுவரலாம் என்று நினைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள்?' நீட்டி முழக்காமல் பளிச்சென்று கேட்டுவிட்டார். அதுதான் அயூப்கான். சில நிமிடங்களுக்கு கனத்த அமைதி. அவர்களாகப் பேசட்டும் என்று அமைதியாகக் காத்திருந்தார்.

'இல்லை மேஜர், எங்களுக்கு விருப்பமில்லை. ராணுவம் மூலம் ஆட்சியைப் பிடிக்கலாம். தப்பில்லை. உங்களுக்கு அது சுலபமும்கூட. ஆனால், அரசு எந்திரத்தை இயக்கும் அளவுக்கு ராணுவத்தில் அனுபவம் நிறைந்தவர்கள் தற்போது எவரும் இல்லை. கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாமே...'
தோள்களைக் குலுக்கியபடி சிரித்தார் அயூப்கான். 'நிர்வாக அனுபவம் கொண்டவர்கள் இல்லை என்பதுதானே உங்கள் பிரச்னை? பயப்படவே வேண்டாம். அதற்குத் தான் நான் இருக்கிறேன். அரசியல்வாதிகள் ஆபத்தானவர்கள். அவர்களை நம்பி இனி ஒரு நொடிகூட தேசத்தை விட்டுவைக்க எனக்கு விருப்பமில்லை. தேசத்தின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் ராணுவத்தின் பிடியில் கொண்டுவர முடிவெடுத்து விட்டேன். சொல்வது புரிகிறதா? என்னுடைய பிடியில்!'
சொல்லிவிட்டு நேராக அதிபர் இஸ்கந்தர் மிர் ஸாவைப் பார்க்கப் புறப்பட்டார் அயூப்கான்.

'மிஸ்டர் மிர்ஸா. நீங்கள் செய்யவேண்டியது ஒன்றுதான். ராணுவ விதிகளின்படி மத்திய சட்டசபை, மாநில சட்டமன்றங்கள் எல்லாம் கலைக்கப்படுகின்றன என்று அறிவித்து விடுங்கள். அமைச்சர்கள், முதலமைச்சர்கள் ஆகியோருடைய பதவிகள் எல்லாம் காலியாகிவிட்டது என்று சொல்லி விடுங்கள். முக்கியமாக, என்னை பாகிஸ்தானுக்கான ராணுவ நிர்வாகியாக அறிவித்துவிடுங்கள்.'

கிட்டத்தட்ட அயூப்பின் மனநிலையில்தான் மிர்ஸாவும் இருந்தார். ஆகவே, காரியம் கச்சிதமாக முடிந்தது. இஸ்கந்தர் மிர்ஸா நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஆயிரத்துநானூறு வார்த்தைகள் கொண்ட அறிக்கை அது என்பதால், அதன் சாரத்தை மட்டும் பார்த்து விடலாம்.

'தேசத்தில் அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு ஊழல் அதிகரித்து விட்டது. பிரச்னைகள் பெருகி விட்டன. வன்முறைகள் விஸ்வரூபம் எடுத்துவிட்டன. கிழக்கு பாகிஸ் தானில் அபாயகரமான சூழல் உருவாகியுள்ளது. ஒட்டுமொத்த தேசத்தையும் ஆபத்து சூழ்ந்துள்ளது. ஆகவே, தேசத்தை சீர்ப்படுத்தி, மேம்படுத்தி, வழிநடத்த ராணுவத்துக்கு அழைப்பு விடுக்கிறேன். இந்த நிமிடம் முதல்... தேசத்தில் ராணுவ சட்டம் அமல்படுத்தப்படுகிறது.'

அக்டோபர் 24, 1958. அயூப்கான் தலைமையிலான புதிய அமைச்சரவையை நியமித்தார் அதிபர் இஸ்கந்தர் மிர்ஸா. ராணுவ நிர்வாகியான அயூப்கானே பிரதமர். வர்த்தக அமைச்சராக ஜுல்ஃபிகர் அலி புட்டோ. அமைச்சரவையில் அதிகம் ஆக்கிரமித்திருந்தது மேற்கு பாகிஸ்தான் ஆசாமிகள்தான். போனால் போகிறதென்று, நான்கு கிழக்கு பாகிஸ்தான் நபர்களையும் ஆட்டத்தில் சேர்த்திருந்தனர்.

பதவியேற்ற மூன்றாவது நாள் இஸ்கந்தர் மிர்ஸாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் அயூப்கான்.

'என்னுடைய ஆட்சியைக் கவிழ்க்க அதிபர் இஸ்கந்தர் மிர்ஸா சதி செய்வதாகத் தகவல் கிடைத்தது. ஆகவே, அவரை நாடு கடத்த உத்தரவிட்டுள்ளேன். தேசநலனை முன்னிட்டு இன்று முதல் அதிபராக அடியேனே செயல்பட இருக்கிறேன்!'

அறிவிப்பு வெளியானதும் மூன்று ராணுவத் தளபதிகளைச் சுமந்துகொண்டு மிர்ஸாவின் வீட்டை நோக்கி ராணுவ வாகனங்கள் விரைந்தன. உறங்கிக்கொண்டிருந்த மிர்ஸா அரக்கப்பரக்க எழுந்து இரவு உடையுடன் வெளியே வந்தார்.

'அய்யா, தேச நலனை உத்தேசித்து உங்களை நாடு கடத்த முடிவு செய்திருக்கிறது ராணுவ அரசு. உங்களுக்கு ஒரு மணி நேரம் அவகாசம். பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்களோ... அதற்கான பயணச்சீட்டை நீங்களே காசு கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள். புறப்பட்டு விடுங்கள். அதிபர் உத்தரவு.'
பாகிஸ்தானின் சர்வ அதிகாரத்தையும் தன்னுடைய உள்ளங்கைக்குள் அடக்கிய தினத்தை புரட்சி தினம் என்று அறிவித் தார் அயூப்கான். இனிமேல் அயூப் வரைந்ததுதான் வட்டம். போட்டதுதான் சட்டம்.

ஒரு நாட்டில் ராணுவ ஆட்சி நடக்கிறது என்றால், மக்களுக்கு எத்தனை கெடுபிடிகள் இருக்கும்... எத்தனை நெருக்கடிகள் இருக்கும் என்பதற்கு வெகு நெருக்கமான உதாரணம் சொல்லவேண்டும் என்றால், அது சாட்சாத் அயூப்கானின் ஆட்சிக் காலம்தான். பாகிஸ்தான் மக்கள் பார்த்த முதல் ராணுவ ஆட்சியாளர் அயூப்கான்.

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருந்தது மக்களுக்கு. இந்த மனிதர் என்ன செய்யப் போகிறார்? மிலிட்டரி மனிதர், ஆட்சியை நிர்வகிக்க முடியுமா? ராணுவ ஆட்சியில் எல்லா உரிமைகளும் குழிதோண்டிப் புதைக்கப்படும் என்கிறார்களே, உண்மையாக இருக்குமா? அறுபத்தெட்டு சந்தேகங்கள். ஆயிரத்தெட்டு குழப் பங்கள். எல்லாவற்றுக்கும் பதில் சொல்வதற்கு அயூப் தயாராக இல்லை. வெண்ணெய் தடவிய வெறும் பேச்சில் அவருக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை. செயல். அது மட்டும்தான் அவருக்கு முக்கியம். அதிகம் பேசுபவர்கள் அத்தனை பேருக்கும் கடிவாளம் வழங்கும் திருவிழா ஒன்றை நடத்த ஆசைப்பட்டார் அயூப்.

அரசியல்வாதிகள், தொழிற்சங்கவாதிகள், மாணவர்கள் ஆகியோரைக் குறிவைத்து அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது!
'பகிரங்கமாகவோ ரகசிய அறைகளிலோ அமர்ந்து கதா காலட்சேபம்கூட செய்யக்கூடாது. செய்தால் தொலைத்துவிடுவேன் தொலைத்து!'
அடுத்த குறி கடத்தல்காரர்கள். கடத்தல் என்றால் உப்பு, புளி, மிளகாய் இல்லை. போதை வஸ்துகள் மது வகையறாக்கள். முக்கியமாக, இளம் பெண்கள். சகட்டுமேனிக்கு செயல்பட்டுவந்த சமூக விரோதிகளைக் கண்டவுடன் கைதுசெய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தார் அயூப்கான்.

இவ்வளவு ஏன்? பொது இடங்களில் சிறுநீர் கழித்தால்கூட ஒரு வருடம் கம்பிக்குப் பின்னால் கவிதை பாட அனுப்பப்பட்டனர். ஒழுங்காக வேலை செய்யாமல் நாற்காலி தேய்த்துக்கொண்டிருந்த அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது. காவல் துறையும் ராணுவமும் கால்களில் சக்கரங் களைக் கட்டிக்கொண்டு சுற்றிவந்தன.

அயூப்கானின் ஆத்திரத்துக்குப் பாத்திரமானவர் களில் முக்கியமானவர்கள் ஊழல் செய்த அரசியல்வாதிகள். ஏழாயிரம் பேர் கொண்ட பெரும் பட்டியல் தயாரிக்கப்பட்டது. வெறுமனே வேலைநீக்கம் செய்தால், வேலைக்கு ஆகாது. வேறு வழியில் கட்டம்கட்டவேண்டும் என்று விரும்பினார். அப்போது உருவானதுதான் ணிஙிஞிளி. அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைத் தகுதியிழக்கச் செய்யும் சட்டம். அத்தனை பேரையும் வீட்டுக்கு அனுப்புங்கள். ஏழு ஆண்டுகளுக்குத் தேர்தல் பக்கமே அவர்கள் தலை வைத்துப் படுக்கக் கூடாது. தடை!

'அவர் செய்கிற அத்தனை காரியங்களும் வெகுஜன நன்மைக்காக மட்டும்தான், அரசியலுக்கும் அதற்கும் தூரத்து சம்பந்தம் கூட கிடையாது!' என்றே பிரசாரம் செய்யப்பட்டது. இதனால் அயூப்கானை சர்வாதிகாரியாகப் பார்க்காமல் பரோபகாரி யாகவே பாகிஸ்தான் மக்கள் பார்த்தனர். தன்னுடைய ஆட்சிக்காலத்தில் அயூப்கான் நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்த முக்கியமான வார்த்தை வழிகாட்டுதலுடன் கூடிய ஜனநாயகம். ஆங்கிலத்தில் Guided Democracy..

உரிமைகள் எல்லாம் அளவுக்கு அதிகமாக இருந்தால்... மக்களும் அரசியல்வாதிகளும் தினவெடுத்துத் திரியத் தொடங்கிவிடுவார்கள் என்பதால், எல்லோரையும் அடக்கிவைக்கும் முகமாக அவர் சில அஜெண்டாக்களை வகுத்திருந்தார். அவர் மனத்துக்கு எது சரியென்று தோன்றுகிறதோ... அதுதான் ஜனநாயகம். அவரால் வழிகாட்டப்பட்ட ஜனநாயகம். ராணுவத்தில் மிடுக்கு குறையாமல் செயல்பட்ட மனிதருக்கு அரசியலில் மதிப்பு குறையாமல் இருப்பதற்கு இந்த 'ராணுவம் வழி ஜனநாயகம்' பேருதவியாக இருந்தது.
அதே சமயம் தன்னை ராணுவ ஆட்சியாளர் என்று எல்லோரும் சொல்வது அவருடைய மனத்தை உறுத்திக்கொண்டே இருந்தது. தன் மீதிருக்கும் இந்தக் கறையைக் களைய அவர் தேர்ந்தெடுத்த ஆயுதம், தேர்தல். பெரிய மெனக்கெடல் எதுவும் இல்லை. நாடு தழுவிய அளவில் எண்பதாயிரம் மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அத்தனை பேரிடமும் ஒரே கேள்வி. அதிபர் அயூப்கான் மீது நம்பிக்கை இருக்கிறதா? 'ஆம்... இல்லை' என்ற இரண்டே வாய்ப்புகள். கிட்டத்தட்ட 96 சதவிகிதம் பேர், 'ஆமாம் சாமி!' போடவே ஜாம் ஜாமென்று ஜூன் 8, 1962-ல் அதிபர் நாற்காலியில் அமர்ந்துவிட்டார் அயூப்கான். நாற்பத்துநான்கு மாதங்களாக அமலில் இருந்த ராணுவச்சட்டத்தை வாபஸ் பெற்றார் அயூப்கான். புதிய அமைச்சரவையையும் உருவாக்கினார்.

தன்னுடைய ஆட்சிக்காலம் முழுக்க ராணுவத்தை வார்த்தெடுப்பதில் அதிகம் மெனக்கெட்ட அயூப்கான், ஒவ்வொரு ராணுவ வீரரையும் ஊக்கப்படுத்தினார். அவ்வப்போது எல்லைப் பக்கம் சென்று வீரர்களிடம் வீர உரை நிகழ்த்தினார். தோளில் கைபோட்டுப் பேசி உற்சாகப் படுத்தினார். என்னென்ன ஆயுதங்கள் வேண்டும் என்று பார்த்துப் பார்த்து விசாரித்தார். அவற்றை உடனடியாக வரவழைத்துத் தரவும் ஏற்பாடு செய்திருந்தார். விளைவு, ராணுவம் அயூப்கானின் காலையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தது.

ஒரு பக்கம் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி ஜெகஜ்ஜோதியாக சென்று கொண்டிருக்க... இன்னொரு பக்கம் இந்தியா-சீனா இடையே உருவான எல்லை மோதல் யுத்தமாக வெடித் திருந்தது. அவ்வளவுதான், விவாதம் தொடங்கிவிட்டது பாகிஸ்தானில்.

'இந்தியாவைப் பழிவாங்கக் கிடைத்த அற்புதமான வாய்ப்பு இது. பயன்படுத்திக்கொள்ளுங்கள் அயூப்!' படபடத்தனர் பாகிஸ்தான் அரசியல்வாதிகள் யோசிக்கத் தொடங்கினார், அயூப்கான்!

பாகிஸ்தான் பற்றிய தொடர் (10)

**********
4th Feb --> no article this week
***********

*************
8th February
*************


விரும்பி வந்த வெள்ளைமாளிகை!

சோவியத் யூனியனும் அமெரிக் காவும் பனிப்போர் என்ற பெயரில் உலகநாடுகளை உறைய வைத்துக்கொண்டிருந்த சண்டைக் கோழிகள். இவர்கள் தங்களுடைய நட்பு வட்டத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் மிகத் தீவிரத்துடன் இறங் கியிருந்த காலகட்டம் அது. குறிப்பாக, தெற்காசியாவில் யாருக்கு அதிகமான நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் அப்போதைய பரபரப்பான விவாதம்.

நண்பர்கள் எப்படி வருவார்கள்? ஒன்று கொள் கையால் ஈர்க்கப்பட்டு அல்லது உதவிகளால் இழுக்கப் பட்டு. அமெரிக்காவுக்கு மிகவும் பிடித்தமான வழி, கரன்சி வழி. சுலபமானதும்கூட. தங்கள் உளவுத் துறையை வெவ்வேறு தேசங்களுக்கு அனுப்பி அங்குள்ள பிரச்னைகள் பற்றி நோட்டம் பார்க்க அனுப்பியது அமெரிக்கா. நிதிதான் பிரச்னை என்றால், அந்த நாடு களைப் பெட்டிகள் மூலம் வளைத்தது. வேறு பிரச்னை என்றால் அதையும் தீர்க்கிறோம் வேறு வகையில் என்று ஆசை காட்டியது.

சோவியத்துக்கு இருக்கவே இருக்கிறது கம்யூனிஸக் கொள்கை. பல தேசங்களின் தலைவர்களுக்கு கம்யூனிஸம் மீது அபரிமிதமான ஈர்ப்பு. சிலருக்கு கம்யூனிஸ நெருப்பு பற்றிக்கொண்டு எரியும். இன்னும் சிலருக்கு உள்ளுக்குள் புகைந்துகொண்டே இருக்கும். சோவியத் தலைவர்களுக்கு இது நன்றாகவே தெரியும். சோவியத் தன்னுடைய நட்பு வட்டத்தை விரிவுபடுத்த அதிகம் அலட்டிக்கொள்ளவே இல்லை என்பதற்கு இதுதான் காரணம். தேவைப்பட்டால் ராணுவ உதவியைச் செய்வதற்கும் சோவியத் தயாராக இருந்தது.

தொடக்கத்தில் இந்தியாவுடன் நட்பு பாராட்டு வதில்தான் அமெரிக்கா ஆர்வம் செலுத் தியது. ஆனால், இந்தியத் தலைவர்களோ சோவியத் காதலில் மூழ்கியிருந்தனர். சோவியத் தடைக்கல்லைத் தகர்க்க, சாம, பேத, தான, தண்ட முறைகள் அனைத்தையும் பயன் படுத்திப் பார்த்து அமெரிக்கா. ம்ஹ§ம்... ஒன்றும் நடக்க வில்லை. நங்கூரம் போடாத குறையாக சோவியத் ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது இந்தியா. அதற்காக ஓரமாக ஒதுங்கிவிட முடியுமா? வாய்ப்பே இல்லை!

யோசிக்கத் தொடங்கியது அமெரிக்கா. இந்தியாவுக்கு மாற்றாக யாரைப் பிடிக்கலாம்? அப்போதுதான் வாஷிங்டனின் கவனம் கராச்சியை நோக்கித் திரும்பியது. முஸ்லிம்களின் தேசமான பாகிஸ்தானுக்கு கம்யூனிஸம் மீது எந்த விதமான ஈர்ப்பும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. கொஞ்சம் மெனக்கெட்டால் போதும். சாய்ந்து விடுவார்கள். குதூகலித்தது அமெரிக்கா. விருட்டென எழுந்து பாகிஸ்தானின் கதவை லேசாகத் தட்டியது.
பாகிஸ்தானில் ராணுவம் அத்தனை வலுவாக இல்லை. நிர்வாகக் கட்டமைப்பு இன்னமும் முழுமை பெறவில்லை. மக்களுக்கும் இன்னும் 'இந்திய ஹோம்சிக்' தீரவில்லை. நிதி என்ற வஸ்து மலைப்பைக் கொடுத்தது. போதாக் குறைக்கு போர் என்ற பெயரில் இந்தியா என்ற தீட்டிய மரத்திலேயே கூர் பார்த்துவிட்டதால், அவர்களுடைய எதிர்ப்பையும் சம்பாதித்தாகிவிட்டது. இனி வானத்தில் இருந்து வெள்ளை தேவதைகள் வந்து ஒத்தாசை செய்தால்தான் பிழைக்க முடியும் என்ற நிலை.

நேரம் காலம் எல்லாம் கூடி வந்தது. அப்புறம் என்ன? ஓசைப்படாமல் இரு தேசத்தைச் சேர்ந்த பிரநிதிகளும் பேசத் தொடங்கினர். நேரில் சென்று அமெரிக்காவுடன் பேசினார் லியாகத் அலிகான். 'அய்யா எங்களுக்கு தேவை நிதி. அதுவும் உடனடியாக. இல்லாவிட்டால் ராணுவம் தொடங்கி இன்ன பிற விஷயங்கள் அனைத்துமே துருப்பிடித்துவிடும். என்ன சொல்கிறீர்கள்?'
பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல இருந்தது அமெரிக்காவுக்கு. நல்லது. 'உங்களுக்கு செய்யாமல் யாருக்குச் செய்யப்போகிறோம். என்ன ஒன்று... சோவியத்துக்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கும் இந்தியாவுக்கு எதிர்முகாமில்தான் நீங்கள் வாசம் செய்ய வேண்டியிருக்கும். எப்படி வசதி?' கேட்டது அமெரிக்கா.

பாலில் விழுந்த பழம் வழுக்கிக்கொன்டு வாயில் விழுந்ததுபோல இருந்தது லியாகத் அலிகானுக்கு. துளியும் யோசிக்கவில்லை. எங்களுடைய முதல் எதிரி இந்தியா. அவர்களுடன் அனுசரணையுடன் நடந்துகொள்ளுங்கள் என்று சொன்னால்தான் எங்களுக்கு தர்மசங்கடமாக இருந்திருக்கும். புன்னகை ததும்ப கைகுலுக்கிக்கொண்டனர்.

ஆனால், பாகிஸ்தானில் நிலைமை அத்தனை திருப்திகரமாக இல்லை. லியாகத்துக்கு எதிராக மிகப்பெரிய குழிபறிப்பு வேலை ஒன்று நடந்து கொண்டிருந்தது. உபயம்: மேஜர் ஜெனரல் அக்பர்கான். பாகிஸ்தான் ராணுவத்தில் மிக முக்கியப்புள்ளி அவர். காஷ்மீருக்காக நடத்தப்பட்ட யுத்தத்தை ஐ.நா. தலையீடு காரணமாக நிறுத்தியதில் கடும் அதிருப்தி இவருக்கு. முனைப்பு குன்றாமல் யுத்தம் நடத்தவேண்டும் என்று சதாசர்வகாலமும் புலம்பிக்கொண்டிருந்தார்.

யுத்தம் இல்லை என்றானதும் இந்தியா மீதிருந்த ஆத்திரத்தை லியாகத் அலிகான் ஆட்சியின் மீது காட்ட விரும்பினார். இதற்காக அவர் கையிலெடுத்த ஆயுதம், ராணுவப்புரட்சி. ஆம். பாகிஸ்தானின் அங்க அடையாளங்களுள் ஒன்றான ராணுவப்புரட்சிக்கு பிள்ளையார் சுழி போட்ட புண்ணியம் அக்பர் கானுக்குச் சொந்தமானது.

ராணுவத்துக்குள் புரட்சிக்குழுவை உருவாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டிய அக்பர் கானுக்கு தோள்கொடுக்கப் பலர் முன் வந்தனர். உற்சாகம் தொற்றிக்கொண்டது. மேலும்மேலும் ஆதரவைத் திரட்ட முயன்றார். போதாக்குறைக்கு மனிதரிடம் கொஞ்சம் கம்யூனிஸ கனெக்ஷன்கள் வேறு இருந்தன. அக்பர் கானின் மனைவி பேகம் நஸீம் சில கம்யூனிஸ்ட் அபிமானிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினார். தீய்ந்த வாடை அடிப்பதுபோல் இருந்தது. 'என்ன ஏது என்று கவனியுங்கள்' என்று உத்தரவிட்டுவிட்டு அயூப்கானை ராணுவத் தளபதியாக நியமித்தார் லியாகத் அலிகான்.

பிப்ரவரி 23, 1951 அக்பர் கான் தன் இல்லத்தில் ராணுவ சகாக்களின் ரகசிய சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். எல்லோரும் வந்ததும் தன்னுடைய திட்டத்தை விவரித்தார் அக்பர் கான்.

'தோழர்களே கவனியுங்கள். வரும் வாரத்தில் கவர்னர் ஜெனரல் கவாஜா நஜிமுதீனும் பிரதமர் லியாகத் அலிகானும் ராவல்பிண்டி வருகிறார்கள். அங்கே தயாராகத் காத்திருக்கும் நம்முடைய குழு அவர்கள் இருவரையும் அதிரடியாகக் கைதுசெய்யும். உடனடியாக லியாகத்தின் ஆட்சியைக் கலைக்குமாறு கவர்னர் ஜெனரலை வற்புறுத்துவேன். நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும் அவருக்கு வேறு வழியில்லை. கலைத்துவிடுவார். உடனடியாக என்னு டைய தலைமையில் இடைக்கால அரசு அமையும். பிறகு ராணுவத்தின் மேற்பார்வையில் தேர்தல் நடக்கும்.'

பேசிக்கொண்டே இருந்தார் அக்பர் கான். அருகில் இருந்தவர்கள் அத்தனை பேர் கண்களிலும் உற்சாகம். கனவுகள் விரியத்தொடங்கியிருந்தன. ஆர்வம் இருந்த அளவுக்கு அக்பர் கான் ஆசாமிகளிடம் நேர்த்தி இல்லை. விளைவு, வடமேற்கு எல்லைப்புற மாகாண கவர்னருக்கு விஷயம் அரசல் புரசலாகச் சென்றுவிட்டது. அவர் வழியே பிரதமருக்கு சென்றது. அவ்வளவுதான். கண்கள் சிவந்துவிட்டன லியாகத்துக்கு. 'சதிகாரர்கள் ஒருவர்கூட மிச்சமிருக்கக்கூடாது. அத்தனை பேரையும் கைது செய்து அழைத்துவாருங்கள்!' - உத்தர விட்டார் லியாகத்.

அடுத்த நொடியே கைது நடவடிக்கைகள் தொடங்கின. மின்னல் வேகத்தில் அக்பர் கான் உள்ளிட்ட அவருடைய சகாக்கள் கம்பிகளுக்குப் பின்னால் கௌரவிக்கப் பட்டனர். நீதி விசாரணைக்குப் பிறகு அக்பர் கான் உள்ளிட்டோர் சிறைக்கு அனுப்பப்பட்டாலும், ராணுவப்புரட்சி என்ற வித்து பாகிஸ்தான் மண்ணில் விதைக்கப்பட்டுவிட்டது.

எனினும் தன்னுடைய ஆட்சிக்கு ஏற்படவிருந்த அபாயத்தை வெற்றிகரமாக முடக்கியதில் லியாகத்துக்கு மிகுந்த சந்தோஷம். அதே உற்சாகத்துடன் ராவல்பிண்டியில் ஏற்பாடாகியிருந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். விதி வலியது. இரண்டு தோட்டாக்களை நெஞ்சில் ஏந்திக்கொள்வதற்காகவே அங்கு சென்றதுபோல ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார் லியாகத் அலிகான்.

அதிர்ச்சி. குழப்பம். அரசியல் சூழல் ஆட்டம் கண்டது. நிலைமையை சமாளிக்கும் விதமாக கவர்னர் ஜெனரல் நஜிமுதீன் பிரதமராக்கப்பட்டார். லியாகத் அலிகானின் கொலைக்குப் பிறகு பல பிரதமர்கள் வந்தபோதும் பாகிஸ்தான் நிர்வாகத்தின் ஆதார சக்தி ஜெனரல் அயூப்கான் மட்டுமே.
யார் வேண்டுமானாலும் வரட்டும். போகட்டும். பிரச்னை இல்லை. எனக்குத் தேவை ராணுவ விஸ்தரிப்பு. ராணுவ முன்னேற்றம். தன் முயற்சியில் சற்றும் கவனம் கலைக்காமல் அமெரிக்க உறவை வளர்த்துக்கொண்டிருந்தார் அயூப்கான். இதன் ஒரு பகுதியாக 1953-ம் ஆண்டு இறுதியில் அமெரிக்காவுக்கு ரகசிய விசிட் ஒன்றை அடித்தார். அமெரிக்க அதிபர் ஐசனோவருடன் அப்போது நடத்திய பேச்சுவார்த்தைகள் அயூப்கானை உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்தன. ஆனால், செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

கத்தரிக்காய் முற்றியது. பிப்ரவரி 1954-ல் கடைத்தெருவுக்கும் வந்தது. ஆம். அமெரிக்காவில் இருந்து நிதியுதவிகள் பாகிஸ்தான் கஜானாவை நிரப்பத் தொடங்கின. 1954... பாகிஸ்தான் ராணுவ சரித்திரத்தில் மிக முக்கியமான ஆண்டு. பாகிஸ்தான் ராணுவத்தின் நீள அகலங்களை ஐசனோவர் உயர்த்தினார் என்றால் ஆழ, உயரங்களை அயூப்கான் மேம்படுத்தினார்.
துருக்கி, ஈரான் ஆகிய இரண்டு தேசங்களை தனக்கு நெருக்கமாக வைத்துக்கொண்டு சோவியத் யூனியனின் ஆதிக்கத்தை எதிர்க்கும் நடவடிக்கையில் இறங்கிய அமெரிக்காவின் நட்புப் பட்டியலில் புதிய வரவு பாகிஸ்தான். ராணுவ உதவிக்கான ஒப்பந்தம் மற்றும் நிதியுதவிகளுக்கான ஒப்பந்தம் ஆகியவற்றின் மூலம் அமெரிக்காவும் பாகிஸ்தானும் தோளோடு தோள் உரசத்தொடங்கின.

இந்தியா மீதிருந்த பயத்தால் குளிர்ஜுரத்தில் தவித்துக்கொண்டிருந்த பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் அரவணைப்பு இதமாக இருந்தது. இந்த மயக்கத்தில் தென்கிழக்கு ஆசிய நட்புறவு ஒப்பந்தமான(SEATO)வில் கையெழுத்திட்டது பாகிஸ்தான். இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. பில்லியன் கணக்கில் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தானுக்குப் பரிசளித்தது அமெரிக்கா. கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. முகம் முழுக்கப் புன்னகையுடன் வாங்கிக்கொண்டது பாகிஸ்தான்.

'வெற்றி. அற்புதமான வெற்றி. விரைவில் என்னுடைய கனவுகள் நிறைவேறப்போகின்றன. கிடைத்த பணம் முழுவதையும் ராணுவ அபிவிருத்திக்குப் பயன்படுத்தப்போகிறேன். ராணுவத்தை விஸ்வரூபத்துடன் வளர்த்தெடுத்து இந்தியாவின் தூக்கத்தைக் கெடுக்கப்போகிறேன்.' தன்னை மறந்து உற்சாகத்தில் துள்ளிக்குதித்தார் அயூப்கான்.

சொன்னபடியே பல வெளிநாடுகளில் இருந்தும் ஆயுதங்களை வாங்கி வருவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. நேற்று வரை இந்தியா பயன்படுத்திய ஆயுதங்களையே பயன்படுத்திய பாகிஸ்தான் ராணுவத்தினரின் கரங்களில் நவீன ரக ஆயுதங்கள் தவழத்தொடங்கின. தவிரவும், பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் பலரும் அமெரிக்கா சென்று ராணுவ உத்திகள் குறித்துப் பயிற்சி பெற்றுவந்தனர்.

நாலுகால் பாய்ச்சலில் ராணுவம் முன்னேறிக் கொண்டிருந்தபோது மேஜர் ஜெனரல் அயூப்கானுடைய மூளை எட்டுக்கால் பாய்ச்சலில் சிந்தித்துக்கொண்டிருந்தது. நிதி கேட்டு வாஷிங்டன் வாசலில் தவம் கிடந்தது நான். ராணுவத்தை அங்குலம் அங்குலமாக வளர்த்தெடுப்பது நான். நிதி தொடங்கி பாதுகாப்பு வரை எல்லாவற்றையும் நானே செய்யும்போது நாடாளுமன்றம், அதிபர், பிரதமர் இன்ன பிற வெங்காயங்கள் எல்லாம் எதற்காக? காசுக்குக் கேடு. முடிவெடுத்துவிட்டார் அயூப்கான்!

பாகிஸ்தான் பற்றிய தொடர் (9)

**************
1st February
*************


சண்டைக்கோழிகள் தயாராகின்றன!

பிரிவினை பற்றிய விவாதங்கள் இந்தியாவில் சூட்டைக் கிளப்பிக் கொண்டிருந்த காலகட்டம் அது. தூங்கும்போது கூட, 'பாகிஸ்தான்... பாகிஸ்தான்!' என்றுதான் முனகிக் கொண்டிருந்தார் முகமது அலி ஜின்னா. கல்லூரி, கருத்தரங்கு என்று எது கிடைத்தாலும் சரி... அத்தனை வாய்ப்புகளையும் பிரிவினைக் கருத்தை வலியுறுத்தப் பயன்படுத்துவதில் அதீத முனைப்பு அவருக்கு. ஒரு நாள் முஸ்லிம் மாணவர்கள் சிலரை சந்தித்தார். கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் ஜின்னாவிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

'ஒருவேளை இந்தியாவிலிருந்து பிரிந்து, பாகிஸ்தான் என்ற தனிதேசம் உருவாகிவிடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஏதேனும் ஒரு மூன்றாவது நாடு இந்தியா மீது யுத்தம் தொடுத்தால், பாகிஸ்தான் ராணுவம் என்ன செய்யும்?'

பிரிவினை தொடர்பாகப் பெரிய பெரிய தலைவர் களுடன் எல்லாம் காரசாரமாக விவாதித்து ஆதரவைத் திரட்டிக் கொண்டிருந்த ஜின்னாவுக்கு, இந்தக் கேள்வி ஆகப்பெரிய தர்மசங்கடத்தைக் கொடுத்தது. எத்தனை நுட்பமான கேள்வி இது? என்ன பதில் சொல்வது? சட்டென்று சுதாரித்துக்கொண்டு ஜின்னா அளித்த பதில் மிக முக்கியமானது.
'எதிரிகளைத் தோற்கடிக்க, பாகிஸ்தானிய வீரர்கள் இந்திய ராணுவத்துடன் கைகோத்துச் செயல் படுவார்கள்!'

ஜின்னாவின் பதிலில் இன்னொரு முக்கியமான சங்கதியும் ஒளிந்திருக்கிறது. அன்று இருந்த சூழலில் மூன்றாவது எதிரி பற்றிய சிந்தனைதான் இரு தேசத்து மக்களுக்கும் இருந்ததே தவிர, இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் சண்டையிட்டுக்கொள்ளும் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை! குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள். ஆனால், யதார்த்தம்?

பிரிவினை முடிந்த கையோடு... இந்தியா மீதே யுத்தம் நடத்த, தன்னுடைய ராணுவத்துக்கு உத்தரவு பிறந்தது. ஐ.நா-வின் தலையீட்டுக்குப் பிறகே யுத்தம் முடிவுக்கு வந்தது. இடைப்பட்ட காலத்தில் ஜின்னாவும் மறைந்துவிடவே, நாட்டைக் கட்டிக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு பிரதமர் லியாகத் அலிகானிடம் வந்தது.

நாட்டைக் காப்பாற்றவேண்டும் என்றால்? வேறென்ன... ராணுவத்தை பலப்படுத்தினால் ஆச்சு. இதுதான் லியாகத் அலிகானின் சித்தாந்தம். ஆகவேண்டிய காரியங் களைச் செய்யத் தொடங்கினார். முக்கியமான விஷயம். பாகிஸ்தான் ராணுவம் இந்த நொடியில் இருந்து வளர்ச்சிப் பாதை யில் பயணம் செய்ய இருக்கிறது. உள்நாட்டுக்குள் அதிரடிப் புரட்சிகளை நடத்தி, ஒட்டுமொத்த ஆட்சி அதிகாரத்தையும் தன்னுடைய உள்ளங்கையில் அடக்கப்போகிறது. அதுவும் அடிக்கடி, பல ராணுவ ஆட்சியாளர்களை உருவாக்கத் தயாராகியிருக்கிறது. அணுகுண்டுகளை உருவாக்கி உலக நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்போகிறது.

பாகிஸ்தான் ராணுவத்தின் விஸ்வரூப வளர்ச்சியைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், அதன் நதிமூலம் பற்றிய புரிதல் வெகு அவசியம்!
ஜூன் 3, 1947. பிரிட்டிஷ் இந்தியா என்ற மிகப்பெரிய தேசம் சுதந்திர இந்தியா, சுதந்திர பாகிஸ்தான் என்று இரு தேசங்களாகப் பிரிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது இந்தத் தேதியில்தான். பிரிவினை என்றால் வெறும் நிலப்பரப்புக்கு மாத்திரம் இல்லை! மனிதர்களுக்கு... கால்நடைகளுக்கு... சொத்துகளுக்கு... சமஸ்தானங்களுக்கு... முக்கியமாக ராணுவத்துக்கு. ஒவ்வொன்றையும் நாள் குறித்துத்தான் பக்குவமாகப் பங்கு பிரித்துக் கொடுத்தார்கள் பிரிவினைக் குழுவினர். ராணுவப் பிரிவினைக்கு அவர்கள் குறித்த தேதி ஜூன் 30, 1947.

உண்மையில் ராணு வத்தை இரண்டாகப் பிரிப் பதில் மவுன்ட் பேட்டன் உள்ளிட்ட பலருக்கும் விருப்பம் இல்லை. மற்ற அனைத்தையும் பிரித்து விடலாம். பிரச்னை இல்லை. ஆனால், ராணுவத்தை மட்டும் பொதுவில் வைத்துவிடலாம். இருவரில் யாருக்கு ஆபத்து என்றாலும் மத்திய ராணுவம் களத்தில் இறங்கும். அது தான் இரண்டு தேசங்களுக்கும் நல்லது. முக்கிய மாக பாகிஸ்தானுக்கு. இதுதான் முதலில் வைக்கப்பட்ட யோசனை. ஆனால், ஜின்னாவுக்கு இந்த யோசனை சுத்தமாகப் பிடிக்கவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டார்.

'இந்தியா என்பது நன்கு கட்டமைக்கப்பட்ட தேசம். ஆனால், பாகிஸ்தான் புத்தம் புதிய தேசம். பாதுகாப்பு என்பது அத்தியாவசியம். அதைப் போய் அடுத்தவரிடம் கடன் வாங்குவது அல்லது பொதுச்சொத்தில் இருந்து கொஞ்சம் எடுத்துக்கொள்வது என்பதெல்லாம் வேலைக்கு ஆகாது. அதில் எங்களுக்கு விருப்பமும் இல்லை. முதலில் ராணு வத்தைப் பிரித்துக்கொடுங்கள்!' அழுத்தந்திருத்தமாகச் சொல்லிவிட்டார் ஜின்னா.
64:36 என்ற விகிதாசாரத்தில் ராணுவத்தைப் பிரிப்பது என்று முடிவானது என்பதைக் கடந்த அத்தியாயத்தில் பார்த்துவிட்டோம். இப்போது கொஞ்சம் விலாவாரியாகப் பார்க்கலாம். மொத்தப் படைகளையும் ஒன்றாகக் கூட்டி, பெருக்கி, வகுத்து, இறுதியாகக் கவச வாகனப் படையில் (Armored Regiment) இருந்து ஆறு பிரிவுகளும், பீரங்கிப் படையில் (Artillery Regiment) இருந்து எட்டு பிரிவுகளும், காலாட்படையில் (Infantry Regiment) இருந்து எட்டு பிரிவுகளும் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டன. இந்தியாவுக்குக் கவச வாகனப்படையில் இருந்து நாற்பது பிரிவுகள், பீரங்கிப் படையில் இருந்து நாற்பது பிரிவுகள், காலாட்படையில் இருந்து இருபத்தொரு பிரிவுகள் ஒதுக்கப்பட்டன.
பிரிட்டிஷ் இந்தியாவின் ராணுவத்தில் இருந்த ராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கை 11,800. ராணுவ வீரர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சம். இவர் களை எல்லாம் எவ்வளவு பிரிப்பது என்று ஏற்கெனவே முடிவாகிவிட்டது. ஆனால், எதன் அடிப்படையில் பிரிப்பது?

குட்டையானவர்கள் எல்லாம் பாகிஸ்தானுக்குப் போங்கள், நெட்டையானவர்கள் எல்லாம் இந்தியாவில் இருங்கள், தாடி வைத்தவர்கள் எல்லாம் இந்தியாவுக்கு... முழுக்க மழித்தவர்கள் எல்லாம் பாகிஸ்தானுக்கு என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வது சாத்திய மில்லையே! பலத்த யோசனைக்குப் பிறகு விண்ணப்பம் கொடுக்கும் யோசனை வந்தது. நீங்கள் எங்கே போக விரும்புகிறீர்கள்? இந்தியாவுக்கா அல்லது பாகிஸ் தானுக்கா? விண்ணப்பத்தில் இருக்கும் பெட்டியில் குறித்துக்கொடுங்கள். அதன் அடிப்படையில் பரிசீலிக் கப்படும்.

பொதுமக்கள் நிலையைவிட ராணுவ வீரர்களின் நிலைமை ரொம்பவே தர்மசங்கடமாகிவிட்டது. நேற்று வரை இந்தியா ஜிந்தாபாத் என்று கூறிக் கொண் டிருந்தவர்கள் எல்லாம், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று சொல்ல வேண்டியிருக்கும். முந்தைய நாள் வரை தோளோடு தோள் உரசிப் பழகிய நண்பர்களுடன் நாளை எல்லையில் ஆயுதத்துடன் மோத வேண்டியிருக்கும். உணர்ச்சிகரமான மனப்போராட்டம் அது.

விண்ணப்பத்தோடு மனத்தையும் இறுக்கிப் பிடித்துக்கொண்டு ஆளுக்கொரு பெட்டியில் குறியிட்டுக் கொடுத்தனர். விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தகவல்கள் அனுப்பப்பட்டன. எல்லோரும் இடம் பெயர்வதற்குத் தயாராகினர். இதில் பாகிஸ்தானுக்குக்கென்று ஒதுக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை நான்காயிரம். ஆனால், அவர்களில் 2,300 பேர் மட்டுமே தயார் நிலையில் இருந்தனர். மற்றவர்களை வரவழைக்க முடியவில்லை அல்லது முடிவை மாற்றிக்கொண்டனர்.

இடைவெளி... பூர்த்தி செய்யவேண்டும். அதுவும் உடனடியாக. அவகாசம் அதிகமில்லை. பேசாமல் பிரிட்டிஷ் படையினரை சேர்த்துக்கொள்ளலாம் என்றார் மவுன்ட் பேட்டன். யோசிக்கத் தொடங்கினார் ஜின்னா. தனக்குரிய 'சொத்தில்' குந்துமணி அளவைக்கூட விட்டுவிட்டுப் போவதில் அவருக்கு விருப்பமில்லை. கிடைக்கிற வாய்ப்பை எதற்காக ஒதுக்கவேண்டும். பிரிட்டிஷ் படையினர் நம்முடன் இருப்பது ஒரு வகையில் நல்லதுதான். புன்னகை ததும்ப தலையசைத்தார் ஜின்னா.

எத்தனை அதிகாரிகள் குறைவாக இருந்தனரோ அந்த எண்ணிக்கைக்கு பிரிட்டிஷ் அதிகாரிகள் பாகிஸ்தான் ராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். ராணு வத்துக்கு ஆள்களைக் கடன் வாங்குவதில் தனக்கு விருப்பமில்லை என்று சொல்லிக்கொண்டிருந்த ஜின்னா, இந்த விஷயத்தில் சமரச ஆடையை அணிந்துக்கொண்டதாக இந்தியத் தலைவர்கள் கிசுகிசுத்தனர்.

எல்லாம் பிரித்தாகிவிட்டது. மவுன்ட் பேட்டனுக்கு திருப்தி. நேருவுக்கு திருப்தி. ஜின்னாவுக்கு மட்டும் லேசான அதிருப்தி, அந்த 64:36 ஃபார்முலாவில். ஆனாலும், தனிக்குடித்தனம் வந்ததே பெரிய விஷயம் என்பதால், இது விஷயமாக அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை அவர். நல்லது. ராணுவ வீரர்களை எப்படி சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அனுப்புவது? இங்குதான் அடுத்த சிக்கல் தொடங்கியது.

இரு தேசங்களுக்கும் ஒதுக்கப்பட்ட ராணுவத்தினர் நாடு முழுக்க விரவிக் கிடந்தனர். லாகூருக்குக் கிளம்ப வேண்டியவர் கல்கத்தாவில் உட்கார்ந்திருந்தார். டெல் லிக்கு வரவேண்டியவர் இஸ்லாமாபாத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். எல்லோருக்கும் தகவல் அனுப்பி, அவர்களை எல்லாம் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பிவைப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது.

ரயில். அப்போதைக்கு உருப்படியாக இருந்த போக்குவரத்து வாகனம். ஏற்கெனவே, இந்துக்களும் பஞ்சாபிகளும் முஸ்லிம்களும் இந்தியாவுக்கும், பாகிஸ் தானுக்கும் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். கூடுதலாக ராணுவ வீரர்களும் அந்தக் கோதாவில் குதித்தனர். வீரர்கள் என்றால், அவர்களோடு சேர்த்து ஆயுதங்களும்தான். ஒவ்வொரு ரயிலும் மனிதர்களையும் மனிதர்களைக் கொல்லும் ஆயுதங்களையும் சுமந்து கொண்டு இரண்டு தேசங்களுக்கும் இடையே கடமை யாற்றிக் கொண்டிருந்தன.
கண்ணீரோடு ரயிலேறிய வீரர்கள் அவரவருக்கான இடத்தில் இறங்கியபோது, கண்கள் காய்ந்து கிடந்தன. தண்ணீர் வற்றியிருந்தது. ஆசுவாசப்படுத்திக் கொள் வதற்கும் அசதியைப் போக்கிக் கொள்வதற்குமே பல மாதங்கள் பிடித்தன. திடீரென ஆட்சியாளர்களுக்கு காஷ்மீர் ஆசை வந்து யுத்தத்துக்கு வழிவகை செய்து விட்டது.

யுத்தத்துக்கு வீரர்கள் உடல்ரீதியாகத் தயார் என்றாலும்கூட மனரீதியாக ஒடுங்கிப் போயிருந்ததை கவர்னர் ஜெனரல் ஜின்னாவும் பிரதமர் லியாகத் அலிகானும் நன்றாகவே உணர்ந்திருந்தனர்.
அதனால்தான், (முன்பு கூறியிருந்தது போல்) ஆதிவாசிகளை ரகசியமாகக் காஷ்மீருக்கு அனுப்பும் யோசனைக்கு சம்மதம் தெரிவித்திருந்தனர். ஆனால், நீண்டகால நோக்கில் ஆதிவாசிகளை நம்புவதும் பயன்படுத்துவதும் நல்லதல்ல. அதைவிட அவமான கரமான விஷயம் வேறு எதுவுமில்லை. உடனடியாக ராணுவத்தை மேம்படுத்தும் யோசனைகளை வரவேற்கத் தொடங்கினார் லியாகத் அலிகான்.

பாகிஸ்தான் ராணுவத்துக்கென்று பிரத்தியேகமாக ஆள் சேர்க்கும் படலத்தை நடத்தும் யோசனை லியாகத் அலிகானை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. 'வாருங்கள் இளைஞர்களே. நாட்டைக் காக்கும் ஆர்வம்கொண்ட அத்தனை இளைஞர்களையும் வாரி அணைத்துக் கொள்ள ராணுவம் தயாராக இருக்கிறது!' என்றார்.

காஷ்மீருக்காக நடத்தப்பட்ட யுத்தத்தில், பாகிஸ் தானுக்குக் கிடைத்தது தோல்வி என்று உள்ளுக்குள் லியாகத் அலிகான் நினைத்துக் கொண்டிருந்தாலும் வெற்றி என்றுதான் வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய பேச்சுகளில் எல்லாம் இளைஞர்களை ராணுவத்துக்கு வளைத்துப் போடும் வியூகம் அப்பட்டமாகத் தெரிந்தது. வசீகரம் நிறைந்த அவருடைய பேச்சுக்குக் கட்டுப்பட்டு ஏராளமான இளைஞர்கள் ராணுவத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். வந்தனம். வந்தனம்.

ராணுவத்தின் பலம் கணிசமான எண்ணிக்கையில் உயர்ந்துகொண்டிருந்தது. ஆனால், இது போதாது. இன்னும் கூடுதலாக முன்னேறவேண்டும். இன்னும்... இன்னும் வேகமாக முன்னேறவேண்டும். இது சாத்தியப்பட வேண்டுமென்றால் 'ப' வைட்டமின் தேவை. பணத்துக்கு என்ன செய்யலாம்? பிரதமர் கையைப் பிசைந்து கொண்டிருந்தபோது ராணுவத்தின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. யாராக இருக்கும்..? திறந்து பார்த்தார்.

அமெரிக்கா!

பாகிஸ்தான் பற்றிய தொடர் (8)

****************
28 January
****************


ராணுவம் பராக் பராக்!

மீசையை முறுக்கிக்கொண்டு முதலில் கிளம்பியது சீக்கியப் படைகள் (Sikh Regiment). ஸ்ரீநகர் விமான நிலையம் எதிரியின் கைகளில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் சிக்கிவிடக் கூடாது. பிடித்தால் மீட்பது கடினம். விரைந்துசென்று அரண் அமைக்கவேண்டும். இதுதான் சீக்கியப் படையின் திட்டம்.
நினைத்தபடியே சுற்றி வளைத்துவிட்டனர். பாரமுல்லாவைப் புரட்டித் தள்ளிவிட்டு ஸ்ரீநகர் விமான நிலையம் நோக்கி முனைப்புக் குறையாமல் வந்துகொண்டிருந்தது பதான்களின் படை.

'வாருங்கள் வாருங்கள்... வந்து வாங்கிக் கொள்ளுங்கள். உங்களுக்காகத்தான் காத்துக்கொண்டு இருக்கிறோம்!' முஷ்டியை உயர்த்திக்கொண்டு தயாராக இருந்த இந்திய ராணுவம், பதான்கள் மீது மூர்க்கத்தனமாகத் தாக்குதலை நடத் தியது. துளியும் எதிர்பாராத தாக்குதல், ஒன்றுமே புரியவில்லை பதான்களுக்கு. 'எப்படிவந்தார்கள் இவர்கள்? யார் மூலம் செய்தி கசிந்தது? தாக்குதல் இத்தனை நேர்த்தியாக இருக்கிறதே?' சுதாரிப்பதற்குள் சுருண்டு விழத் தொடங் கியது பதான் படை. விளைவு, விமான நிலையத்தைக் கைப்பற்றும் பதான்களின் கனவு பிசுபிசுத்தது.

முறைப்படி களமிறங்கிவிட்டது இந்திய ராணுவம். ஆனால், பாகிஸ்தான் ஆட்சியாளர்கள்? ஜின்னா பலத்த யோசனையில் மூழ்கியிருந்தார். கவர்னர்
ஜெனரல் எவ்வழியோ, பிரதமரும் அவ்வழி. லியாகத் அலிகானின் கைகள் அவருடைய மோவாய்க்கட்டையைத் தாங்கிப் பிடித்திருந்தன. பார்வையாளர்கள். வெறும் பார்வையாளர்கள். வேறொன்றும், அப்போது செய்யமுடியாத சூழல்!

ஏன்? இதற்கு பதில் வேண்டும் என்றால், கொஞ்சம் பிரிவினைப் பக்கம் எட்டிப்பார்க்க வேண்டியது அவசியம். 'மேற்படி பிரிட்டிஷ் இந்தியா இன்று முதல் சுதந்திர இந்தியா, சுதந்திர பாகிஸ்தான் என்று இரண்டாகப் பிரிக்கப்படுகிறது' என்று அறிவிக்கப்பட்டது அல்லவா... அப்போது நிலப்பரப்புகள் எப்படி இரண்டு கூறுகளாகப் பிரிக்கப்பட்டனவோ... அதுபோல பிரிட்டிஷ் இந்தியாவின் ராணுவமும் சுதந்திர இந்தியாவுக்கும் சுதந்திர பாகிஸ்தானுக்கும் தனித்தனியே பிரிக்கப் பட்டன.

மொத்தமுள்ள ராணுவத்தில் 64 சதவிகிதம் இந்தியாவுக்கு. மீதமுள்ள 36 சதவிகிதம் பாகிஸ்தானுக்கு. இதுதான் பிரிவினை ஃபார்முலா. பலத்த வற்புறுத்தலுக்குப் பிறகுதான் பாகிஸ்தான் இந்தப் பங்கீட்டுக்கு சம்மதம் தெரிவித்திருந்தது. பாகிஸ்தான் என்றால் ஜின்னாதான். இருப்பினும், போர் என்று வந்ததும் வீரர்களை ஓரிடத்தில் திரட்டி வருவதற்கு ஆட்கள் இல்லை. பயிற்சி கொடுப்பதற்கு பக்குவமான நபர்கள் இல்லை. ஒருங்கிணைக்க உருப்படியான அதிகாரி ஒருவர் இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டை. எல்லா இடங்களிலும் வெற்றிடம்.

பெரிய அளவிலான ஆயுதபலமும் இல்லை. இருக்கின்ற ஆயுதங்களை எல்லாம் பதான்களுக்குப் படையல் செய்தாகிவிட்டது. 'அவசரப்பட்டு விட்டோம்'. புரிந்துபோனது ஜின்னாவுக்கு. அதனால் என்ன? பதம் குறையாமல் பார்த்துக்கொள்வதற்கு பதான்கள் இருக்கும்போது எதற்காக வீண்கவலை? தன்னை வலுவில் தேற்றிக்கொண்ட ஜின்னா மெள்ளப் பெருமூச்சுவிட்டார்.
பதான் படையினர் மீது ஜின்னா, லியாகத் அலிகான் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் வைத்திருந்த நம்பிக்கை அபரிமிதமானது. அதற்குப் பாத்திரமாகும் முயற்சியில் பதான்களும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். மெய்யைக் கொஞ்சம் வருத்தினாலும் முயற்சிகள் கண்டிப்பாகக் கூலி தரும் இல்லையா? பதான்களின் முயற்சிகளுக்குப் பரிசாக கில்கிட் அவர்கள் வசம் அடிபணிந்தது.

அதற்கு மிகவும் உதவியாக இருந்தது, கில்கிட் பகுதியில் இருக்கும் சாரணர் படை. துணிச்சலுடன் களமிறங்கிய பதான் படையினர், கில்கிட் பகுதியில் அதிரடித் தாக்குதல் நடத்தி அங்கிருந்த ஹரிசிங்கின் படையினரை அடித்துவிரட்டி விட்டு கில்கிட்டைக் கைப்பற்றினர். வெற்றி. ஸ்ரீநகர் விமான நிலையம் கிடைக்காத வருத்தம் இப்போது போன இடம் தெரியவில்லை.
உற்சாகம் தலைக்கேறிவிட்டது பதான் படையினருக்கு. மதிப்பு குறையாமல் தாக்குதலில் ஈடுபட்டனர். மிர்பூர் என்ற இடத்தில் தென்பட்ட இந்துக்கள் அத்தனை பேரும் தயவுதாட்சண்யம் இல்லாமல் கொன்று குவிக்கப்பட்டனர். பதான்களின் கைங்கர்யம். விளைவு, மிர்பூரும் பதான்களின் பாக்கெட்டுக் குள் சென்று விட்டது.

இப்போது பதான்களுக்குத் தோள்கொடுக்கக் கணிசமான எண்ணிக்கையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவியிருந்தனர். இருவருடைய கூட்டு முயற்சியால் தாக்குதலின் வீரியம் அதிகரித்தது. அதற்கு சாட்சியாக ஜாங்கர் என்ற பகுதி அவர்கள் வசம் சென்றது.
தொடர்ந்து வெற்றி கிடைத்த உற்சாகத்தில், ஊரி நகரத்தின் மீது தாக்குதல் நடத்தியது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அது அத்தனை சுலபமானதாக இல்லை. இந்திய ராணுவம் வளைத்து வளைத்து எதிர்த்தாக்குதல் கொடுத்ததால் மண்டை காய்ந்துவிட்டது பதான்களுக்கு. இருப்பினும், ஊரியின் முக்கியப் பகுதிகள் பதான்கள் வசம் சென்றன.

நிலைமை கைமீறிக் கொண்டிருப்பது புரிந்து விட்டது இந்திய ராணுவத்துக்கு. சுதாரித்தே தீரவேண்டும். இல்லையென்றால், சர்வநாசம் சர்வநிச்சயம். பாகிஸ்தான் கூலிப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்ட பகுதிகளை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியது இந்திய ராணுவம்.
இந்தியப் படையினரின் விஸ்வரூபத் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஜாங்கரைப் பறிகொடுத்தது பதான் படை. அடுத்தடுத்து முழுவேகத் தாக்குதல் நடத்தியதில், நவம்பர் ஒன்பதாம் தேதி பாரமுல்லாவை மீட்டெடுத்தது. அடுத்த நான்காவது நாள் ஊரியையும் பதான்களிடம் இருந்து விடுவித்தது.
இங்கே எதுவும் செல்லுபடியாகாது என்று தெரிந்ததும் பாகிஸ்தான் கூலிப்படையும் அவர்கள் ராணுவமும் லே பிராந்தியத்துக்குச் சென்று கார்கிலை கைப்பற்றியது. அங்கிருந்த இந்தியப் படையினரால் கார்கிலை காப்பாற்ற முடியவில்லை. மாதக் கணக்கில் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
ஒரு இடத்தை அவர்கள் கைப்பற்றுவது... உடனே, இந்தியப்படை அதிரடியாகச் செயல்பட்டு அதை மீட்டெடுப்பது. இது தொடர்கதையானது. ஆனால், தொடர்வதில் இந்தியாவுக்கு விருப்பமில்லை. விரைவில் முற்றும் போடுவதில் ஆர்வம் செலுத்தியது. இத்தனைக்கும் யுத்தம் நடந்துகொண்டிருந்த பெரும்பாலான முனைகளில் இந்தியாவின் கைகளே ஓங்கியிருந்தன.

இறுதியில் இந்தியா ஒரு முடிவுக்கு வந்தது. பேசாமல் விஷயத்தை ஐக்கியநாடுகள் சபையிடம் கொண்டுபோகலாம். இதுதான் பிரதமர் நேருவின் வாதம். ஆனால், சர்தார் வல்லபபாய் படேலுக்கோ அதில் துளியும் விருப்பமில்லை.

'ஒருவேளை காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா. விசாரணை நடத்துகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். விசாரணை எப்படி நடக்கும்? காஷ்மீர் மீது பரிபூரண உரிமைகொண்ட இந்தியாவையும் கொஞ்சமும் உரிமை இல்லாத பாகிஸ்தானையும் சம அந்தஸ்தில் வைத்தே விசாரணை நடக்கும். இது அவமானம். தவிரவும் அநாவசியம். ஆகவே வேண்டாம்.' இது படேல் உள்ளிட்ட தலைவர்களின் வாதம். எல்லாவற்றையும் நிதானமாகக் கேட்டு உள்வாங்கிகொண்ட நேரு, தனக்கு எது சரியென்று தோன்றியதோ அதைத்தான் செய்தார்.

'எங்களுடன் முறைப்படி இணைந்த காஷ்மீர் பிராந்தியத்துக்குள் பாகிஸ்தான் ராணுவத்தின் பரிபூரண ஆசீர்வாதம் பெற்ற ஆசாமிகள் நுழைந்து கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர். காஷ்மீரின் ஒவ்வொரு அங்குலமும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் கள் அங்கிருந்து வெளி யேற வேண்டும். கூலிக்கு வந்து குழப்பம் ஏற்படுத்தும் அத்தனை பேரும் வெளியேற வேண்டும். ஆவன செய் யுங்கள்!'
நேருவின் கோரிக்கையை ஏற்று ஐக்கிய நாடுகள் சபை விசாரணை தொடங்கியது. விசாரணை என்றால், அதற்கு தனியே கமிஷன் ஒன்று போடுவது பாரம்பரியப் பழக்கம். அதன் படி, இந்தியா-பாகிஸ்தானுக்காக ஐ.நா ஆணையம் உருவாக்கப்பட்டது. மேற்படிப் பகுதிகளுக்கு அதன் உறுப்பினர்கள் நேரில் செல்வார்கள். என்ன நடக்கிறது என்பதை கவனித்து உள்ளது உள்ளபடி அறிக்கை தயார் செய்து கொடுப்பார்கள். இதுதான் நடைமுறை.
அதன்படியே எல்லாம் நடந்தன. பாகிஸ்தான் ஆதரவுபெற்ற கூலிப்படையினர் உடனடியாக காஷ்மீர் பிராந்தியத்தைவிட்டு வெளியேறவேண்டும் என்று உத்தரவு வந்தது ஐ.நா-விடம் இருந்து. அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 13, 1948 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 'இரு தரப்பும் யுத்தத்தை நிறுத்திக்கொள்ளுங்கள். காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கையை எடுங்கள்.' இதுதான் தீர்மானத்தின் சாரம்.

போர்நிறுத்தம் என்பது அதிகாரபூர்வமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இடையே நடைபெறும் யுத்ததுக்கு மாத்திரமே. ஆனால், பாகிஸ்தான் ஆதரவுப்படையினர் தங்களுடைய வாலை சுருட்டிக்கொள்வதாகத் தெரியவில்லை. ஆகவே, அந்தக் காரியத்தை முடிக்கும் பணியில் இந்திய ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டது. மெள்ள மெள்ளக் கூலிப்படையினர் விரட்டி அடிக்கப்பட்டனர். இறுதியாக ஜனவரி 1, 1949 அன்று போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது.

அதன் பின் காஷ்மீரை யார் எந்த அளவுக்கு ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று கணக்கெடுத்துப் பார்த்தபோது, ஐந்தில் இரண்டு பங்கு காஷ்மீரை பாகிஸ்தான் கபளீகரம் செய்திருந்தது. மீதமுள்ள ஐந்தில் மூன்று பங்கே இந்தியாவுக்கு எஞ்சியது.

கொஞ்சம் புரியும்படி சொல்லவேண்டும் என்றால்... போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான அன்று எந்தப் படை எங்கு இருக்கிறதோ அதை அடிப்படையாக வைத்து எல்லைக்கோடு நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி காஷ்மீரில் ஐந்தில் இரண்டு பங்கு பாகிஸ்தான் வசம் சென்றுவிட்டது. இதனை பாகிஸ்தான் அரசு 'ஆஸாத் காஷ்மீர்' என்று அழைக்கிறது. ஆனால் அதனை இந்தியா, 'பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர்' (Pakistan Occupied Kashmir) என்கிறது. சுருக்கமாக PoK.

ஆக, தனிக்குடித்தனம் போன சூடு குறைவதற்குள் யுத்தம் நடத்தியாகிவிட்டது. நேற்று வரை காஷ்மீரில் காணிநிலம்கூட சொந்தமில்லாத நிலையில், தற்போது காஷ்மீரில் கொஞ்சம் நிலம் கிடைத்திருக்கிறது. நல்லது. ஆனால், அது நிஜமான வெற்றியா? இல்லை... நிச்சயமாக இல்லை! கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் பல ஓட்டை உடைசல்கள் தென்பட்டன.
இந்தியாவுடன் நேரடி யுத்தமே செய்திருக்கலாம். செய்யவில்லை. காரணம், நினைத்த மாத்திரத்தில் வீரர்களை ஒன்றுதிரட்ட முடியவில்லை. முக்கியமாக யுத்தம் நடத்தும் அளவுக்கு அவர்கள் வசம் தன்னம்பிக்கை இல்லை. இல்லாவிட்டால், போயும் போயும் கூலிப்படையை நம்பியா அனுப்பியிருக்க முடியும்? ஆகவே, கிடைத்திருப்பது தோல்வி... பெரிய தோல்வி!

நிஜம் புரியத் தொடங்கியது பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு. மறுநொடியே பல கேள்விகள் மனதுக்குள் முளைத்தன.

'பாகிஸ்தான் என்ற தேசத்தை இனி இந்தியாவிடம் இருந்து எப்படிப் பாதுகாப்பது? இன்று ஐ.நா புண்ணியத்தில் தப்பிவிட்டோம். நாளை? வலுவான ராணுவம் இல்லாவிட்டால்... கோழிக்குஞ்சை நசுக்குவது போல பாகிஸ்தானை நசுக்கிவிடுமே இந்தியா?' உதறல் எடுத்துவிட்டது பாகிஸ்தானுக்கு.
'இனி தாமதிப்பதில் அர்த்தமில்லை. நம்முடைய பாதுகாப்புக்கு நாம் முதலில் கட்டமைக்க வேண்டியது - பலம்பொருந்திய ராணுவத்தை' என்று முடிவெடுத்தார்கள்..!