Thursday, 26 February 2009

பாகிஸ்தான் பற்றிய தொடர் (15)

****************
1 March 2009
****************

நிறையப் பேச்சு... கொஞ்சம் செயல்!

'தேசத்தைக் குழிதோண்டிப் புதைத்த புண்ணிய வான்!'

-பாகிஸ்தான் என்ற தேசத்தையும் அதன் ராணுவத்தையும் தன் உள்ளங் கைக்குள் அடக்கி வைத்திருந்த யாஹியா கானுக்கு, 1971 யுத்தத்தின் இறுதியில் கிடைத்த பட்டம் இது தான். நிலைகுலைந்து போன யாஹியா கான், தன் நெருக்கமான நண்பர்களுடன் ஒரு ரகசிய சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். மனத்திலிருந்த அத்தனை சோகத்தையும் மொத்தமாகக் கொட்டித்தீர்த்துவிடும் எண்ணத்தில் இருந்தார் யாஹியா கான் அன்று.
'போதும்... இனியும் பதவியில் இருப்பதை விட அவமானம் எதுவுமில்லை. விலகிவிடுகிறேன். என்ன சொல்கிறீர்கள்?'

கண் கலங்கிவிட்டார்கள் நண்பர்கள். பிறகு ஆளுக் கொரு யோசனை சொன்னார்கள். வெவ்வேறு கோணங் களில் சொல்லப்பட்டாலும் அடிப்படை ஒன்றுதான். 'அவசரம் வேண்டாம்... நிதானமாக யோசியுங்கள். முடி வெடுங்கள்!' மீண்டும் யோசனையில் மூழ்கிவிட்டார் யாஹியா கான்.
அதற்குள் அமெரிக்கா சென்றிருந்த புட்டோவுக்கு மூக்கில் வியர்த்துவிட்டது. உபயம்: புட்டோவின் அடிப் பொடிகள். பாகிஸ்தானில் கடுகு தொலைவது முதல் மிளகு உருள்வது வரை எல்லாவற்றையும் அணுவளவு மாற்றமின்றி, அவர்கள் புட்டோவிடம் கொண்டு சேர்த்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள். அவர்கள் ரகசிய ஆலோசனை செய்யும் விஷயம் காதில் விழுந்ததும் மனிதருக்கு இருப்புக் கொடுக்குமா? மின்னல் வேகத்தில் புறப்பட்டு வந்து சேர்ந்தார்.

பேசிப்பேசியே பலருடைய மனத்தைக் கரைத்த மனித ருக்கு, ராணுவ வீரர்களை வளைப்பதில் அதிக சிரமம் இருக்கவில்லை. புட்டோவின் உணர்ச்சிப் பிரவாகப் பேச்சில் மயங்கி... வலியவந்து ஆதரவு தெரிவித்தனர் ராணுவத்தினர். யாஹியாவுக்கு மாற்றாக நினைக்கலாம் என்று கருதப்பட்ட முஜிபுர் ரஹ்மானும் தனிக்குடித்தனம் போய்விட்டதால், மக்களுக்கு புட்டோவை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி யில்லை!

துளியும் ஆர்ப்பாட்டமின்றி ஆட்சியைக் கைப்பற்றி னார் புட்டோ. ஜனநாயகவாதி என்று தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட புட்டோ, ராணுவ அதிகாரத்தைப் பூசிக்கொண்ட தினம் டிசம்பர் 20, 1971. ஆட்சிக்கு வந்ததும் செய்த முதல் காரியமே ராணுவப் படையின் தலைவராக இருந்த ஜெனரல் ஹமீதை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அவருடைய இடத்துக்கு குல் ஹாஸன் என்பவரை நியமித்ததுதான். பதவியேற்பதற்கு முன்பே இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு இருந்தது. குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால்... புட்டோவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவதற்கு, பல உள் வேலைகளைப் பக்காவாகச் செய்திருந்தவர் குல் ஹாஸன்.
'என்னதான் நட்பு இருந்தாலும் காரியம் என்று வரும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும்!' என்று நினைத்தார் குல் ஹாஸன். இதனால் பலத்த நிபந்தனைகளுக்குப் பிறகுதான் ராணுவப் படையின் தலைவர் பதவியை ஏற்றார். 'என்னுடைய பணியில் யாரும் குறுக்கிடக் கூடாது. அநாவசியமாக ராணுவ விஷயங்களில் தலையிடக் கூடாது...' என்றெல்லாம் சகட்டுமேனிக்குக் கெடுபிடிகள் போட்டிருந்தார். பதவி கொடுத்தால் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளாமல், பந்தா செய்கிறாரே என்று ஒரு பக்கம் எரிச்சலாக இருந்தது புட்டோவுக்கு. இருந்தாலும் இப்போதைக்கு இவரை விட நல்ல ஆள் இல்லை. குல் ஹாஸனின் பேச்சுகளை சகித்துக்கொண்டு எல்லாவற்றுக்கும் மர்மமாகத் தலையாட்டினார் புட்டோ.
'அடிபட்ட வேங்கையை அடைத்து வைக்கவேண்டும். சுதந்திரமாக உலவவிட்டால்... சூனியம் வைத்துவிடும்!' என்று அடிக்கடி பேசுவார் புட்டோ. செயலிலும் அதை நிரூபித்தார். ஆம். யாஹியா கானை திடுதிப்பென வீட்டுச் சிறைக்குள் ஒரே இடத்தில் முடக்கி வைத்தார்.

வெளியே திரிந்த வேங்கையை கூண்டுக்குள் அடைத்த புட்டோ, அடுத்த கூண்டுக்குள் அடைக்கப்பட்டுக் கிடந்த சிங்கமான ஷேக் முஜிபுர் ரஹ்மானை விடுதலை செய்தார். யாஹியாவை விட, தான் மிகவும் நல்லவன் என்று உலகுக்குக் காட்டுவதற்குக் கிடைத்த அற்புதமான வாய்ப்பு அது. பயன்படுத்திக்கொண்டார். விடுதலையாகி ஓய்வெடுத்துக்கொண்டிருந்த முஜிபுரை திடீரென நேரில் வந்து சந்தித்தார் புட்டோ. எதற்காக வந்திருக்கிறார் என்று தெரியாமல் விழித்தார் முஜிபுர். நிலைமையை சகஜமாக்கிவிட்டு நேரடியாக விஷயத் துக்கு வந்தார் புட்டோ.

'நாம் பிரிந்துவிட்டோம்... பரவாயில்லை. இருந்தாலும் உறவு தொடரவேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் இதற்காகச் செய்ய வேண்டியது ஒன்றுதான். வெளியுறவு, ராணுவம், தொலைத்தொடர்பு என்று மூன்று முக்கியமான துறைகளையும் நாம் இணைந்து நிர்வகிக்க நீங்கள் சம்மதம் தெரிவிக்கவேண்டும். என்ன சொல்கிறீர்கள்?'

'சாத்தியமில்லை என்றுதான் நினைக்கிறேன். வேண்டு மானால், என் மக்களிடம் ஆலோசனை நடத்திவிட்டுச் சொல்கிறேன்...'

முஜிபுரின் முகத்தை வைத்தே, 'இது வேலைக்கு ஆகாது!' என்ற முடிவுக்கு வந்துவிட்ட புட்டோ, பிறகு ரேடியோ மூலமாக பாகிஸ்தான் மக்களிடம் பேசினார்.

'நாடு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. நம்மு டைய அத்தனை சக்திகளையும் ஒன்று திரட்டி, நாட்டை மீட்டெடுக்கவேண்டும். புதிய பாகிஸ்தானை உருவாக்க வேண்டும். இவைதான் என்னுடைய கனவுகள். நனவாக ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறேன்!'

வெறுமனே சொன்னதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. நித்தம் ஒரு அறிவிப்பு வெளியிட்டு மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துக்கொண்டிருந்தார். இரும்பு, எஃகு, கனரகத் தொழில், பெட்ரோலியம், சிமென்ட் உள்ளிட்ட அத்தனை முக்கியத் துறைகளும் தேசிய மயமாக்கப் படுகின்றன என்ற அறிவிப்பு எல்லோரையும் நிமிர்ந்து பார்க்க வைத்தது!

அடுத்து, நில உச்சவரம்பு சட்டத்தைக் கொண்டுவந்து, ஒரு மில்லியன் ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தி நிலமற்ற ஏழைகளுக்கு அன்புப் பரிசு வழங்கினார். எல்லோருக்கும் தலை கால் புரியவில்லை! மக்களுடைய அபிமா னத்தை எத்தனை விரைவாகப் பெற முடியுமோ... அத்தனை விரைவாகப் பெற்றுவிட வேண்டும் என்ற துடிப்பு அவருடைய ஒவ்வோர் அசை விலும் தென்பட்டது.

இப்போது புட்டோவின் கவனம் ராணுவம் மீது திரும்பியது. ராணுவம் இயங்கவேண்டும்; வளர்ச்சியின் உச்சத்துக்குச் செல்லவேண்டும். ஆனால், எந்தக் காரணத்தை முன்னிட்டும் என்னுடைய பிடியில் இருந்து நழுவக்கூடாது. 'கொஞ்சம் அசட்டையாக இருந்தாலும் கழுவிலேற்றி விடுவார்கள்!' என்பது புட்டோவின் கணிப்பு. தன்னுடைய கணிப்பை ராணுவத்துக்குப் புரியவைக்க விரும்பினார். எப்படி?

தனக்கு நெருக்கமான ராணுவ அதிகாரிகளை அருகில் வைத்துக்கொண்டு பட்டியல் ஒன்றைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார் புட்டோ. முன்னாள் அதிபர் களான அயூப்கான் மற்றும் யாஹியா கான் காலங்களில்... எந்தெந்த ராணுவ அதிகாரிகளுக்கெல்லாம் தலையில் கொம்பு முளைத்திருந்தது, யாரெல்லாம் முக்கிய முடிவுகளுக்குப் பின்னணியில் செயல்பட்டார்கள் என்பதெல்லாம் தோண்டியெடுக்கப்பட்டன.

பலத்த ஆராய்ச்சிக்குப் பிறகு 29 அதிகாரிகளைக் கொண்ட பட்டியல் தயாரானது. இரண்டு ஜெனரல்கள், பதினோரு லெப்டினன்ட் ஜெனரல்கள், பத்து மேஜர் ஜெனரல்கள், ஆறு பிரிகேடியர்கள் ஆகியோரை உள்ளடக்கி இருந்தது அந்தப் பட்டியல். பிறகு அதிபர் மாளிகையிலிருந்து அறிவிப்பு வெளியானது.
'பணியை ஒழுங்காகச் செய்யாமல் ஊழலில் திளைத்துக்கொண்டிருந்த 29 ராணுவ அதிகாரிகள் இன்று முதல் பதவி நீக்கம் செய்யப்படுகிறார்கள். இது வெறும் களையெடுப்புதானே தவிர, ராணுவத்தை சிதைக்கும் நடவடிக்கை அல்ல. மெள்ள மெள்ள ராணுவத்துக்குப் புது ரத்தம் பாய்ச்சிக் கொண்டிருக்கிறேன். கவலை வேண்டாம்!'

-சொல்லிவிட்டு, அடுத்த வேலைகளில் மும்முரம் காட்டத் தொடங்கினார். முக்கியமாக ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பல உயரதிகாரிகளுக்குப் பதவி உயர்வு, பதவி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்ய வேண்டியிருந்தது. அதற்காக ராணுவப் படையின் தலைவர் குல் ஹாஸன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்து கொள்வதற்காக அதிபர் என்கிற முறையில் புட்டோ வந்தார். அங்கே அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

'நான் ஏற்கெனவே விதித்த நிபந்தனைகளை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன் புட்டோ. ராணுவப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிபரான நீங்கள் பங்கு பெறவேண்டிய அவசியம் இல்லை. ஆகவே, உங்களை நான் அனுமதிக்க மாட்டேன்!'

தூக்கிவாரிப் போட்டது புட்டோவுக்கு. என்ன மனிதர் இவர்? மூளைக்கோளாறு ஏதும் வந்துவிட்டதா? நெற்றியைச் சுருக்கியபடியே யோசித்தார் புட்டோ. அவசரப்பட்டு அவமானத்தைச் சந்திக்க அவர் விரும்ப வில்லை. வேறோர் உபாயம் மூலமாக குல் ஹாஸனை மடக்க நினைத்தார்.

'உங்களுடைய நிலைமை புரிகிறது ஹாஸன். இருப் பினும் என் தலைமையில் நடக்கும் அமைச்சரவைக் கூட்டங்களில் நீங்கள் கலந்துகொள்வதில், எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அதன்படி நானும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளலாம் என்று விரும்பு கிறேன்...'
'அமைச்சரவைக் கூட்டத்தில் எனக்கு ஆர்வமில்லை!' -முகத்தில் அடிப்பதுபோல வந்தது குல் ஹாஸனின் பதில்.

'நண்பர், நல்லவர் என்றெல்லாம் நினைத்து வலியப் போய் வம்பை வாங்கிவிட்டோமே...' என்று வருத்தமாக இருந்தது புட்டோவுக்கு. நேரம் பார்த்துக் கணக்குத் தீர்த்துவிட வேண்டும் என்று புலம்பிக்கொண்டே வெளியேறி விட்டார் புட்டோ.

நினைத்ததை நடத்தி முடிப்பதற்குச் சரியான வாய்ப்பாக அமைந்தது, பெஷாவரில் உருவான காவல் துறைப் போராட்டம். சில அடிப்படை பிரச்னைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்ட காவலர்களை அடக்குவதற்கு ராணுவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிலை. ஆனால், குல் ஹாஸனுக்கு அதில் உடன்பாடு இல்லை. அதனால் என்ன? புட்டோவுக்கு ஆர்வம் இருக்கிறதே! உடனே களத்தில் இறங்கி விட்டது ராணுவம். காரியமும் கச்சிதமாக முடிக்கப்பட்டது. கலவரம் ஓயந்தது.

புன்னகை ததும்ப ரேடியோவில் பேசத் தொடங்கினார் புட்டோ. 'கலவரம் பெரிய அளவில் முற்றிய பிறகு முறையாகச் செயல் படத் தயங்கிய குல் ஹாஸனுக்கு பதிலாக லெஃப்டினன்ட் ஜெனரல் டிக்கா கானை நியமித்துள்ளேன்!'

எதிர்த்துப் பேசத் திராணியற்று வெளி யேறினார் குல் ஹாஸன். எல்லாம் முடிந்ததும் டிக்கா கானை அழைத்தார் புட்டோ.

'ராணுவ வீரர்களை மேய்ப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள், போதும். அரசியல் விஷயத்தில் மூக்கை நுழைக்கலாம் என்று கனவில் தோன்றினாலும் ராஜினாமா கடிதத்தை எழுதிக் கொடுத்துவிடுங்கள்!' என்று செல்ல எச்சரிக்கை விடுத்தார் புட்டோ. மிரட்சியுடனேயே தலையாட்டி வைத்தார் டிக்கா கான்.

சூட்டோடு சூடாக ராணுவத்தின் தரத்தை அபிவிருத்தி செய்வதற்காக நாட்டின் மொத்த பட்ஜெட்டில் அறுபது சதவிகிதத் தொகையை ராணுவத்துக்கு ஒதுக்கினார் புட்டோ. உண்மையில் துண்டு துக்கடா ஆயுதங்களை வெளிநாடுகளிடம் இருந்து வாங்கி 'ஷோ' காட்டுவதில் புட்டோவுக்கு துளியும் விருப்பமில்லை.

கேட்பவர்கள் மிரளவேண்டும். பார்ப்பவர்கள் பிரமிக்க வேண்டும். பாகிஸ்தானின் ராணுவ பலத்தைப் பார்த்து உலகநாடுகள் வாய் பிளக்கவேண்டும். அப்போதுதான் நீண்ட காலமாக, 'நிறையப் பேச்சு... கொஞ்சம் செயல்!' என்ற அளவில் இருந்துவந்த அணு ஆயுதம் பற்றிய சிந்தனை புட்டோவுக்கு வந்தது!

No comments: