Thursday 19 February, 2009

சீனாவின் நதிநீர் ஆசை... விழித்துக் கொள்ளுமா இந்தியா?

ஜூனியர் விகடனில் வந்த கட்டுரை. இந்தியாவை ஆள்வோர்க்கு இந்த திருட்டு நாய்கள் குறித்த விழிப்புணர்வை எதிர்பார்க்க முடியுமா ?

’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

சீனாவின் நதிநீர் ஆசை... விழித்துக் கொள்ளுமா இந்தியா?

இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் என்றாலே, அவர் ஏதோ பாகிஸ்தான் விவகாரங் களை மட்டும்தான் கையாள்வார் என்பது போன்ற தோற்றம் இப்போதெல்லாம் உருவாகிவிட்டது. இலங்கை உள்ளிட்ட மற்ற விவகாரங்களில் அப்படியரு அடக்கம் அவருக்கு! பாகிஸ்தானுக்கு இணையாக சீனாவும் பல குடைச்சல்களுக்குத் தயாராகி வருவதுதான் நம் கவலையெல்லாம்.

கூரை ஏறிய சீனா...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 16 ஆயிரம் அடி உயரத் தில் இமயமலையின் வடக்கே அமைந்திருக்கும் நாடு திபெத். அதிகபட்ச உயரத்தில் அமைந்திருப்பதாலேயே திபெத்தை 'உலகின் கூரை' [Roof of the world] என்று அழைப்பார்கள். 1950-ம் ஆண்டு வரை தனி நாடாக இருந்துவந்த திபெத், சீனாவின் விடுதலைக்குப் பிறகு, சீன ஆட்சியாளர்களின் நிர்ப்பந்தம் காரணமாக ஒரு உடன்படிக்கையில் கையப்பமிட நேர்ந்தது. அதன் காரணமாக சிறிது சிறிதாகத் தன் சுதந்திரத்தை இழந்து... இன்று சீனாவின் ஒரு பகுதியாகவே மாறிபோயிற்று.

திபெத்திய மக்கள் சுமார் ஐம்பது ஆண்டுகாலமாக அமைதியான முறையில் ஐ.நா. சபையையும், இந்தியா போன்ற நாடுகளிடமும் இழந்த சுதந்திரத்தை மீட்டுத் தரும்படி கரடியாகக் கூச்சலிட்டும் எந்தப் பயனுமில்லை. காரணம், சீனா என்ற வல்லரசை எதிர்க்க உலக நாடுகளுக்கு இருக்கும் தயக்கம்தான்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே திபெத் என்ற ஒரு நாடு சுதந்திர நாடாக இருப்பதுதான், இந்திய பாதுகாப்புக்கு உகந்தது. ஆனாலும் 1950-களில் சீனா, திபெத்தை விழுங்கிய நேரம்... அப்போதைய நேரு தலைமையிலான இந்திய அரசு, அந்த ஆக்கிரமிப்பை முழுவலிமையோடு எதிர்க்கவில்லை. மாறாக 1954-ம் ஆண்டு SINO-INDIA ஒப்பந்தப்படி, சீனாவின் ஒரு பகுதிதான் திபெத் என்று அங்கீகரித்தது. காரணம், சோஷலிசவாதியான நேரு, சீனா கூறிய நட்பு வார்த்தைகளை நம்பியதும், பரஸ்பரம் அடுத்த நாட்டு உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற பஞ்சசீலக் கொள்கையின் அடிப்படையிலும்தான். ஆனால், 1962-ம் ஆண்டு சீனா, இந்தியா மீது படையெடுத்து aksaichin பகுதியைத் தன் வசமாக்கிக் கொண்ட பிறகுதான் புரிந்தது சீனாவின் சூழ்ச்சி. அதன்பின் வந்த இந்திய ஆட்சியாளர்கள் சீனாவின் எண்ணத்தைப் புரிந்து கொண்டனர். ஆனால் திபெத், சீனாவிடம் போனதால் ஏற்பட்ட இழப்புகளை நாம் இப்போதுதான் ஒவ்வொன்றாக அனுபவிக்கிறோம்.
முதலாவதாக திபெத்தை கைப்பற்றியதன் மூலம் சீனா இந்தியாவுடன் 4,057 கிலோமீட்டர் எல்லையை ஏற்படுத்திக்கொண்டது. ஆசியா வில் ஓடும் Yantze, Yellow river, Indus river, Mekong, Bramaputra, Salveen, Sutleg, Yartang போன்ற மகாநதிகள் திபெத்திலிருந்து உருவாகி சீனா, இந்தியா, பங்களாதேஷ், மியான்மர், பூடான், நேபாளம், கம்போடியா, பாகிஸ்தான், லாவோஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு ஜீவநதிகளாகத் திகழ்கின்றன. இந்தியாவில் கங்கை, பிரம்மபுத்திரா, சட்லஜ், யமுனா என்ற பல ஜீவநதிகள், வட இந்தியாவைப் பசுமைப்படுத்தி வந்தாலும் கங்கை மட்டும்தான் இந்திய இமாலயப் பகுதியிலிருந்து உற்பத்தியாகிறது. பிரம்மபுத்திரா, சட்லஜ் போன்ற நதிகள் எல்லாம் இமயமலையின் வட பகுதியில் (சீன ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்) இருந்து உற்பத்தியாகி, பின் வட இந்தியப் பகுதி வாயிலாக ஓடி கடலில் கலக்கின்றன.

நீர்த் திருட்டுக்கு ஒரு திட்டம்!

உலகை இன்று அச்சுறுத்திக் கொண்டிருக்கும் விஷயம், வளர்ந்து வரும் ஜனத்தொகை. இதற்கு முக்கியக் காரணம் ஆசிய நாடுகள். அதிலும் குறிப்பாக, சீனாவும் இந்தியாவும். இந்த இரு நாடுகளின் ஜனத்தொகை 2040-ல் 1.4 பில்லியனைத் தொடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அப்படியென்றால், இரு நாடுகளும் தற்போதைய உணவு உற்பத்தியை சுமார் இரண்டு மடங்கு அதிகமாக்க வேண்டும். அதற்கு, விளை நிலங்களும், நீர்வரத்தும் அதிகப்படுத்தப்பட வேண்டும். இங்குதான் பிரச்னை தீவிரமாகிறது!
ஓசோன் படிவத்தில் ஏற்பட்டிருக்கும் ஓட்டை, சுற்றுப்புறச்சூழல் மாசு மற்றும் காடுகள் பெருமளவில் அழிக்கப்படுவது போன்ற காரணங்களால்... இப்போது கிடைத்துக் கொண்டிருக்கும் தண்ணீர் வரத்தே குறைந்துகொண்டு வருகிறது. இந்நிலையில், எதிர்கால தண்ணீர் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்வது? இதுதான் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான தலையாய பிரச்னை. இதை மனதில்கொண்டுதான் சீன அதிகாரிகள், 1999-ம் ஆண்டே ஒரு திட்டம் தீட்டி அதை அறிவியல் வல்லுநர்களுடன் விவாதித்து இன்று வரைபடமாகக் குறிப்பிடுகிற அளவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.

அதன்படி, திபெத்திலிருந்து உருவாகும் பிரம்மபுத்திரா நதியை இந்திய எல்லைக்கு முன்னரே, இமயமலையில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் குடைந்து அந்த நீரை சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளுக்கு திருப்புவது அவர்களின் திடுக்கிடும் திட்டம். இப்படி நதியைத் திருப்பி சீனப் பகுதியில் தண்ணீரைத் தேக்கி, பின் வட பகுதிகளை நன்செய் நிலமாக்கலாம் என்பதோடு, இதன் மூலம் சுமார் 40,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும் சீனா முடிவு செய்துள்ளது. (இந்தியாவின் தற்போதைய மொத்த மின் சார உற்பத்தியே 1,40,000 மெகாவாட்).

பொதுவாக, சீன ஆட்சியாளர்கள் தத்தம் ஆட்சிக் காலத்தில் ஒரு பெரிய திட்டத்தை நிறைவேற்றி சரித் திரத்தில் தங்கள் பெயரைப் பதித்துக்கொள்வது வழக்கம். இதற்கு முன் ஜனாதிபதியாக இருந்த ஜியாங் ஜமின் ஆட்சிக்காலத்தில்தான் '3 ஜார்ஜஸ்' என்ற அணை கட்டப்பட்டது. அதன் மூலம் 23 ஆயிரம் மெகாவாட் மின்சாரமும் பல லட்ச ஏக்கர் நிலங்களுக்கு பாசனவசதியும் கிடைத்துவருகிறது. அது போலவே, இந்தத் திட்டத்தையும் தம் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றி சரித்திரத்தில் இடம்பிடிக்க இப்போதைய சீன ஜனாதிபதி ஹ¨-ஜின்டாவ் முடிவு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதன் மூலம் தட்டுப்பாடான நேரங்களில் தண்ணீரை சீனா பயன் படுத்திக்கொண்டு வெள்ளக்காலங்களில் அதனை அப்படியே (காவேரிப் பிரச்னையில் கர்நாடகம் செய் வது போல்) இந்தியாவுக்குள் திருப்பிவிட்டு நம்மை பல இன்னலுக்கு ஆளாக்கும்.

சீனா ஒரு வல்லரசு என்பதால் அதை யாரும் சுலபத்தில் பகைத்துக்கொள்ள மாட்டார்கள். அப்படியே தட்டிக்கேட்டாலும் சீனா செவி சாய்க்கப் போவதில்லை. அவர் களைப் பொறுத்தவரையில், தாங்கள் முன்னேற வேண்டும் என்ற வெறியோடு சரி! மற்றவர்களைப் பற்றி என்ன கவலை?!

சீனா தரும் (பூமி) அதிர்ச்சி!

சீனாவின் இந்த அணை கட்டும் திட்டம் நிறைவேற்றப்பட்டால், இந்தியா வின் பாசனப் பரப்பு குறைவதோடு உணவு உற்பத்தியும் பாதிக்கப்படும். இந்தியா மட்டுமல்ல... பங்களாதேஷ், வியட்நாம், கம்போடியா, நேபாளம் போன்ற நாடுகளுக்கும் ஆபத்து உள்ளது. எனவே, இந்த நாடுகளை எல்லாம் ஒருங்கிணைத்து குறைந்தபட்சம் ஐ.நா. சபை மூலம் உத்தரவாத நதிநீர் திட்டம் ஒன்றை சீனாவுடன் ஏற்படுத்திக்கொள்வது நல்லது. இது மட்டுமல்ல, இது போன்ற மகாநதிகளைத் திருப்பி அணைகட்டி பெருமளவு தண்ணீரைத் தேக்குவதால், ஏற்கெனவே நிலநடுக்க அபாயம்கொண்ட வட இந்தியா மேலும் ஆபத்துக்கு தள்ளப்படுமென்பது புவியியல் வல்லுநர்களின் கருத்து.

அடாவடி அவர்கள் வரலாறு!

திபெத்தைக் கைப்பற்றியதன் மூலம் நதிகள் உற்பத்தி ஆகும் இடத்தைப் பிடித்துக் கொண்டதுடன், இந்தியாவுடன் சுமார் 4056 கிலோமீட்டர் எல்லையும் சீனா ஏற்படுத்திக் கொண்டது. சீன ஆட்சியாளர்கள் எல்லையை விரிவுபடுத்துவதில் ஆர்வம் கொண்டவர்கள். இந்த இலக்கை அடைய... அவர்கள் பேச்சுவார்த்தை மற்றும் யுத்தம் என்ற இரண்டு முறைகளை சாதுர்ய மாகக் கையாண்டு வந்துள்ளனர். ஹாங்காங் போன்ற பகுதிகளை பேச்சுவார்த்தை மூலமும், திபெத் மற்றும் இந்தியாவின் அகிசென் போன்ற பகுதிகளை போர் மூலமும் தங்கள் வசம் இணைத்துக்கொண்டனர். இப்போது தைவான் தங்களுடையது என்று கூறி தைவானியர்களுக்கும் அடாவடியாக நெருக்குதல் கொடுத்து வருகின்றனர். திபெத்தை பிடித்த சீனா, இப்போது இந்தியாவின் மாநிலமான அருணாச்சலப் பிரதேசமும் தன் பகுதி என்று கூறி வரைபடங்களில் காட்டிவருகிறது. அருணாச்சல பிரதேஷ் அவர்களைப் பொறுத்த வரை தெற்கு திபெத்தாம். இத்துடன் நின்றுவிடவில்லை... நேபாள், பூடான் மற்றும் இந்தியப் பகுதிகளான சிக்கிம், லடாக் போன்றவையும் தங்களதுதான் என்று கூறிவருகிறது.

திபெத்தில் ஏவுகணைகள்!

திபெத்தை கைப்பற்றியதன் மூலம் சீனா அடைந்த மிகப்பெரிய ஆதாயம், தன்னிடமுள்ள கண்டம்விட்டு கண்டம் தாவும் (ஐ.சி.பி.எம்) ஏவுணைகளை திபெத்தில் நிறுத்திவைக்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பு. கடலிலிருந்து சுமார் 16 ஆயிரம் அடி உயரத்தில் திபெத் அமைந் திருப்பதால் தேவைப்படும் நேரத்தில் இந்திய நகரங்கள் உட்பட எந்தப் பகுதியை வேண்டுமானாலும் எளிதாகவும் வேகமாகவும் துல்லியமாகவும் தாக்கலாம். திபெத்தின் புவியியல் அமைப்பு இதற்கு வழி செய்கிறது.

பொருளாதார நெருக்கடி...

இதெல்லாம் ஒருபுறமிருக்க... காலத்தின் கட்டாயம் காரணமாக இந்தியா செய்துகொண்ட உலக வர்த்தக ஒப்பந்தத்தை வெகு சாதுர்யமாகப் பயன்படுத்தி, இந்தியாவை சீனா கடனாளியாக்கி வருகிறது. உதாரணத்துக்கு, 'இந்திய-சீன வர்த்தகம் 2010-ல் 40 பில்லியன் (நூறு கோடி) டாலரை எட்டவேண்டும்' என்று இரு நாட்டு வர்த்தக அமைச்சர்களும் இலக்கு நிர்ணயித்தனர். ஆனால், இது 2008-ம் ஆண்டே எட்டப்பட்டு விட்டது. இதில் கவலையளிக்கக் கூடிய விஷயம் என்னவென்றால், சீனாவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் சுமார் 26 பில்லியன் டாலர். ஆனால், நாம் அவர்களுக்கு ஏற்றுமதி செய்வது வெறும் 14 பில்லியன் டாலர்தான். அதாவது, நிகரப் பற்றாக் குறை இந்தியாவுக்கு 10 பில்லியன் டாலர். இதிலும் நாம் ஏற்றுமதி செய்தது இரும்புத் தாது போன்ற தொழில் தொடங்குவதற்கான மூலப் பொருள்கள். ஆனால், சீனாவிடமிருந்து இறக்குமதி செய்வதோ, குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள், நம்முடைய நெசவாளர்களின் வேலைகளை காலிசெய்த துணிவகைகள், செல்போன், டி.வி. போன்ற ஆடம்பரப் பொருட்கள்தான்! சுங்க வரியோ விற்பனை வரியோ அரசுக்குத் கட்டாமல் நடக்கும் இது போன்ற இறக்கு மதிகள், இந்தியப் பொருளாதாரத்தைச் சீரழித்து வருகின்றன.

முன்பு வெள்ளையன் 'கிழக்கு இந்திய கம்பெனி' என்ற வர்த்தகக் கம்பெனி மூலம் பல நூறு ஆண்டு களுக்கு நம்மை அடிமைப்படுத்தினான். இன்று சீனாவோ, வர்த்தகம் வாயிலாக மட்டுமில்லாமல் நதிநீர் வாயிலாகவும், இந்திய மாநிலங்களில் உரிமை கொண் டாடியும் இந்தியாவை இறுக்கிக்கொண்டே வருகிறது.

இந்தியாவை எதிர்கால உலக அரங்கில் தன் பிரதான போட்டி நாடாக சீனா கருதி அஞ்சுகிறது. இதை உணர்ந்திருக்கும் இந்திய ஆட்சியாளர்கள் நதிநீர் விஷயம், வர்த்தகம், எல்லைப் பிரச்னை எதிலுமே கண்டிப்பும் ராஜதந்திரமும் காட்டி துரிதமாகச் செயல் படவில்லை என்றால், பிற்கால சந்ததிக்கு இன்னொரு தீராத தலைவலி ஏற்பட்டுவிடும்!

No comments: