Thursday, 19 February 2009

பாகிஸ்தான் பற்றிய தொடர் (6)

*************
21 January
*************


சிநேகம் வளர்த்து சிண்டைப் பிடி!

காஷ்மீர் என்றால், 'கடவுளின் ஓய்வகம்' என்று அர்த்தம் சொல்கிறார்கள். ஆனால், அப்படிச் சொல்வதற்கு தற்போது எந்த முகாந்திரமும் இல்லை. குண்டுச்சத்தம், ரத்தவாடை, மரண ஓலம் ஆகியவைதான் இன்றைய காஷ்மீர். அளவிலும்கூட சின்னஞ்சிறு பிராந்தியம். இதற்காக இந்தியா இதுவரை இறைத்திருக்கும் கோடி களைச் சொன்னால், உங்களுடைய இதயத்துடிப்பு
என்ன ஆகும் என்று உத்தரவாதமில்லை. அதேபோல, பாகிஸ்தானும் தன்னுடைய சக்தியை மீறி பல கோடிகளை வாரி இறைத் திருக்கிறது!
இத்தனைக்குப் பிறகும் மோதல் கள் நிற்கவில்லை; உரசல்கள் அடங்க வில்லை. பிரச்னைகள்... ம்ஹ¨ம், அதுவும் தீர்ந்தபாடில்லை. இத்தனை சங்கதிகளுக்கும் பின்னணியான ஆரம்பம் வெறும் எழுபத்தைந்து லட்சம் ரூபாய் என்றால் நம்ப முடி கிறதா?

காஷ்மீர் பிராந்தியத்தில் செல் வாக்கு நிறைந்த மனிதராக வலம் வந்தவர் குலாப் சிங். மனிதருக்கு காஷ்மீர் என்ற பிராந்தியத்தைத் தன்வசப்படுத்தவேண்டும் என்று பல நாள் கனவு. கிழக்கிந்திய கம்பெனி என்ற விசிட்டிங் கார்டுடன் உள்ளே நுழைந்து பல தேசங்களை பிரிட்டிஷார் கபளீகரம் செய்துகொண்டிருந்த சமயம் அது. பல மன்னர்களிடம் பல்வேறு கால கட்டங்களில் இருந்த காஷ்மீரை, அப்போது பிரிட்டிஷார் தங்களுடைய உள்ளங்கையில்தான் கிடத்தியிருந்தனர்.

காஷ்மீரை கைப்பற்றவேண்டும் என்றால், பிரிட்டி ஷாரை எதிர்த்து மல்லுக்கட்ட வேண்டும். அதற்கு தெம்பு, திராணி, இன்னபிற சங்கதிகள் எல்லாம் வேண்டும். அவை எதுவும் நமக்கு சாத்தியமில்லை. துவைத்துக் காயப்போட்டுவிடுவார்கள். பிறகு எப்படி வளைப்பது? ஏதாவது தந்திரோபாயம் செய்தால்தான் ஆச்சு. யோசித்தார். பலத்த சிந்தனைக்குப் பிறகு அவருக்குக் கிடைத்த ஐடியா இதுதான். சிநேகம் வளர்த்து சிண்டைப் பிடிக்கலாம்.
பிரிட்டிஷார் காலத்தில் எது நடக்கிறதோ இல்லை யோ... விருந்துகள் கனஜோராக நடக்கும். அவ்வப்போது குலாப் சிங்குக்கும் அழைப்புகள் வரும். முடிந்தவரை எல்லா விருந்திலும் கலந்து கொள்ளவேண்டும் என்று முடிவு செய்துகொண்டார் குலாப்சிங். தன் முகம் அவர்களுக்குப் பழகவேண்டும். அப்போதுதான் நட்பு துளிர்க்கும். கனவு நிறைவேறும்.

கூடிக் குலவக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவற விடவில்லை அவர். மெள்ள மெள்ள நெருக்கத்தை அதிகரித்துக்கொண்டார். அப்படியே பட்டும் படாமல் காஷ்மீர் கனவையும் அவர்களிடம் போட்டுவைத்தார். எறும்பு ஊர்ந்துகொண்டே இருந்தது. கல் மெள்ளக் கரைந்துகொண்டே இருந்தது. ஒரு சுபமுகூர்த்த தினத்தில் காஷ்மீரை தன்னுடைய பெயருக்கு எழுதி வாங்கிக்கொண்டார். அதற்காக அவர் பிரிட்டி ஷாருக்குக் கொடுத்த தொகை எழுபத்தைந்து லட்சம் ரூபாய். இது நடந்தது 1846-ல். குலாப்சிங் மற்றும் பிரிட்டிஷ் நிர்வாகம் இரு தரப்புக்கும் இடையே அரங்கேறிய இந்தப் பரிவர்த்தனைக்குப் பெயர் 'அமிர்தசரஸ் ஒப்பந்தம்.' அன்று முதல் குலாப்சிங் ஜம்மு-காஷ்மீர் என்ற சமஸ்தானத்துக்கு மகாராஜா!

ஆசைப்பட்டு அடைந்த தேசத்தை அலுங்காமல் குலுங்காமல் ஆட்சி செய்தார் குலாப்சிங். 1857-ல் அவர் மறைந்த பிறகு ஜம்மு-காஷ்மீர், அவர் மகன் ரன்பீர்சிங் வசம் வந்துவிட்டது. மெள்ள மெள்ள ஹ§ன்ஸா, கில்கிட் மற்றும் நகர் ஆகிய பகுதி களைத் தன்னுடைய ஆளுகைக்குள் அடக்கி, எல்லையை விரிவுபடுத்தினார் ரன்பீர் சிங். மன்னர்கள் மறைந்தாலும் ஆட்சி தொடரும் அல்லவா?

1925-ல் ரன்பீர்சிங்கின் பேரன் ஹரிசிங் ஆட்சிக்கு வந்தார். இந்து மதத்தின் மீது அபரிமிதமான அன்பு அவருக்கு. ஆனால், அவருடைய ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் முஸ்லிம்களின் எண்ணிக்கைதான் அதிகம். சற்றேறக் குறைய எழுபத்தேழு சதவிகிதம். ஆனாலும், பிரச்னை இல்லாமல் நிர்வாகம் இயங்கியது.

திடீரென காஷ்மீரில் ஒரு கலகக் குரல் எழுந்தது. 'மரியா தையாகக் காட்டுக்குப் போங்கள், மகாராஜா!' என்று சமீபத்தில் நேபாளத்தில் எழுந்தது அல்லவா... அதுபோன்றதொரு குரல் தான். எழுப்பியவர் ஷேக் அப்துல்லா. காஷ்மீரில் இருக்கும் முஸ்லிம் மக்கள் மத்தியில் அபரிமிதமான செல்வாக்குகொண்ட தலைவர். பிரிவினை கோஷம் எழுந்த சமயத்தில் இவருடைய கொள்கைகள் வித்தியாசமானவை.

'ஜம்மு-காஷ்மீர் என்பது தனிதேசம். ஆகவே, தனித்து மட்டுமே இயங்க வேண்டும். இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டில் எந்த ஒன்றுடனும் இணையத் தேவையில்லை. அதே சமயம் எங்களுக்கு ராஜா ஆட்சியும் தேவையில்லை. எங்களைத் தனித்துவிடுங்கள்!' என்பதுதான் ஷேக் அப்துல்லாவின் வாதம். இப்படிச் சொல்லித்தான் ஜம்மு-காஷ்மீர் மக்களைத் தன்பக்கம் வசீகரித் திருந்தார் ஷேக் அப்துல்லா. அப்போது அவர் நிர்மாணித்த கட்சிதான் இப்போது அவர் பேரனையும் முதல்வராக அங்கே அமர்த்தியிருக்கும், 'தேசிய மாநாட்டுக் கட்சி.'

இதில், ஜின்னாவின் கணக்கு வேறு. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதி ஜம்மு-காஷ்மீர். ஆகவே, பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுடன்தான் அது இணையும். ஆனால், நேரு போன்றவர்களின் கணக்கு முற்றிலும் வேறானது. மன்னர் ஹரிசிங் பழுத்த இந்து. ஆகவே, தன்னுடைய சமஸ்தானத்தை அவர் இந்தியாவுடன் இணைப்பதில்தான் ஆர்வம் காட்டுவார் என்று நினைத்தார். ஆனால், இருவருடைய கணக்கையும் தப்புக்கணக்காக மாற்றி னார் மன்னர் ஹரிசிங். தனி ஆவர்த்தனம், அதுவே சுக ஆவர்த்தனம் என்பதில் தெளிவாக இருந்தார்.

பிரிவினை அரங்கேறியது. பிரிட்டிஷ் வழக்கறிஞர் ராட் கிளிஃபின் கைங்கர்யத்தில் இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு தனித்தனி தேசங்கள் உலக வரைபடத்தில்இடம்பிடித்தன. பல சமஸ்தானங்களை இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் இணைக்கும் முயற்சிகள் நடந்தன. இந்தியாவுடன் சில முக்கிய சமஸ்தானங்களை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தவர் வல்லபாய் படேல். கவர்னர் ஜெனரல் மௌண்ட்பேட்டனின் ஒத்தாசை படேலுக்குக் கூடுதலாகவே கிடைத்தது.

சில மாகாணங்கள் இந்தியாவுடன் இணைவதற்கு முரண்டு பிடித்தன. ஜுனாகத், ஹைதராபாத் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய சமஸ்தானங்களே அந்த முரட்டுக் குதிரைகள். மௌண்ட்பேட்டனின் பலத்த வற்புறுத்தலுக்குப் பிறகும் ஹரிசிங் அசைந்து கொடுக்கவில்லை. எப்போதும்போல ஜம்மு-காஷ்மீர் 'தனியே தன்னந்தனியே' பாடிக்கொண்டிருக்கவே விரும்பினார். இதனால், பிரிவினைக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொங் கலில் இருந்தது.

தனிக்குடித்தனம் போன அசதி. போதாக்குறைக்கு நுரையீரல் கோளாறு வேறு. எதிர்காலம் குறித்த பிரமிப்பு. அது கொடுத்த பயம். எல்லாம் சேர்ந்து ஜின்னாவைப் படுத்தி எடுத்தன. ஓய்வெ டுத்தே தீரவேண்டும் போல இருந்தது ஜின்னாவுக்கு. ஓய்வு என்றால் எங்கே? காஷ்மீரில்.

காஷ்மீர் மீது முகமது அலி ஜின்னாவுக்கு எப்போதுமே அளவு கடந்த பிரியம். ஓய்வெடுக்கவேண்டும் என்று தோன்றினால் காஷ்மீர் புறப்பட்டு விடுவார். பிரமிக்க வைக்கும் பனிமலைகள், பரவசப்படுத்தும் பசுமை, சிலிர்க்க வைக்கும் சிலுசிலு காற்று. நகர்ந்து செல்லும் நதிகள். அசர வைக்கும் அமைதி. இதெல்லாம் ஒன்றுகலந்த ஒரு பிராந்தியம் என்பதால், பரிபூரண நிம்மதி சர்வ நிச்சயம். இதனால் காஷ்மீர் காதலர்கள் பட்டியலில் ஜின்னாவும் இருந்தார். நேருவுக்கும் இடம் இருந்தது. ஓய்வு தேடி காஷ்மீர் செல்ல ஜின்னா விரும்பியதால் காஷ்மீர் மன்னர் ஹரிசிங்கை பார்த்து, ஆகவேண்டிய ஏற்பாடுகளைச் செய்வ தற்காக அதிகாரிகள் கிளம்பினர்.

விஷயத்தைச் சொன்னதும், ஹரிசிங்கின் முகம் அஷ்டகோணலாகிவிட்டது. எப்போதும் வந்து ஓய்வெடுப்பதற்கும் இப்போது வருவதற்கும் நிறைய வித்தியா சங்கள். ஹரிசிங்கின் மனத்துக்குள் பல கேள்விகள் எழுந்தன. உண்மையிலேயே ஓய்வெடுக்கத்தான் வருகிறாரா? ஓய்வெடுக்க வந்தவர் புறப்படுவதற்கு அடம் பிடித்தால் என்ன ஆவது? ஜின்னாவை அனுமதித்த விஷயம் இந்தியத் தலைவர்களை உசுப்பேற்றி, அவர்களும் வருவதாகச் சொன் னால் என்ன பதில் சொல்வது? அரண்டவன் கண். எல்லாமே பேய் என்ற சந்தேகம் ஹரிசிங்குக்கு.

சர்ச்சைகளைத் தவிர்க்க விரும்பிய ஹரிசிங், ஜின்னா வருவதில் தனக்கு விருப்பமில்லை என்பதை நாசூக்காக அதிகாரிகளிடம் சொல்லி விட்டார். அவ்வளவுதான். ஜின்னாவின் முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடித்துச் சிதறின. 'அப்படி என்ன கேட்டுவிட்டேன்.. உங்களுடைய சொத்து களை எங்களுக்குக் கொடுங்கள் என்றா? அல்லது சமஸ்தானத்தை விட்டு வெளியேறுங்கள் என்றா? உடல்நிலை சரியில்லை
கொஞ்சம் ஓய்வெடுக்கவேண்டும் என்றுதானே...' - ஆத்திரம் ஆத்திரமாக வந்தது ஜின்னாவுக்கு.

தன்மானப் பிரச்னை. விட்டுவிடுவதில் அர்த்தமில்லை. ஏதாவது செய்தே தீரவேண்டும். என்ன செய்யலாம்? பிரதமர் லியாகத் அலிகான், ராணுவத் தளபதி மற்றும் சில ராணுவ அதிகாரிகள் குழு எல்லாம் சேர்ந்து ஆலோசனையில் இறங்கினர். வீண் வீறாப்புக் காட்டும் ஹரிசிங்கின் மீசையை முழுக்க மழித்தே தீரவேண்டும். அவரிடம் என்ன பெரிய ராணுவ பலம் இருக்கிறது? சுண்டைக்காய் அளவுக்குத் தேறுவதே சிரமம்தான். நம்முடைய ராணுவத்தை விட்டு ஒரு வழியாக்கிவிடலாம் என்றனர் ஆலோசனைக் குழுவினர்.

ஜின்னாவுக்குத் துளியும் விருப்பமில்லை. 'குடியேற்றம் முழுமை பெறவில்லை. அரைகுறையாகத்தான் காரியம் முடிந்திருக்கிறது. பணபலமும் சொல்லிக்கொள்வது போல இல்லை. இந்த லட்சணத் தில் எப்படி யுத்தம் நடத்துவது சாத்தியம்?' என்றார் அங்கிருந்த முக்கியஸ்தர் ஒருவர். எல்லோருடைய கவனமும் அவர் பக்கம் திரும்பியது.

'நான் சொல்வது நேரடி யுத்தம் இல்லை. மறைமுகமாக களமிறங்கப் போவது ராணுவ வீரர்கள் இல்லை. அடியாள்கள்... கூலிப்படையினர்... ரௌடிகள்... இப்படி என்ன வேண்டுமானாலும் அவர்களுக்குப் பெயர் வைக்கலாம். நிஜப்பெயர், பதான்கள். பாகிஸ்தானின் ஆதிவாசி மனிதர்கள். நிமிர்ந்து உட்கார்ந்தார் பிரதமர் லியாகத் அலிகான்.

பதான்கள் தொழில்முறை போர்வீரர்கள் அல்ல என்றாலும், அவர்களுக்கும் ஆயுதங்களுக்கும் பூர்வ ஜென்மத் தொடர்பு உண்டு. ரத்தம், நாடிநரம்பு, சிந்தனை அனைத்திலும் வன்மமும் வெறியும் ஊறிப்போன மனிதர்கள் அவர்கள். 'நம்முடைய சகோ தரர்கள் காஷ்மீரில் அவதிப்படுகிறார்கள். கொஞ்சம் போய் காப் பாற்றுங்கள்!' என்று அவர்களுடைய மனத்தைக் கரைத்தால் போதும், கிளம்பிவிடுவார்கள்.

தவிரவும், ஹரி சிங்கின் ராணுவத்தைச் சமாளிப்பது பதான்களுக்குப் பல்விளக்குவது போலத்தான். சுலபத்தில் முடித்து விடுவார்கள். பழக்கப்பட்ட ஆயுதங்களைக் கொடுத்து அவர்களை காஷ்மீருக்குள் அனுப்பிவிட்டால் போதும்... ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் ரணகளம் செய்துவிடுவார்கள். அதன் பிறகு ஜம்மு-காஷ்மீர் நம் வசம்!' என்றார் எல்லைப்புற மாகாணத்தைச் சேர்ந்த அந்த முக்கியஸ்தர்.

தாடையைத் தடவியபடியே கேட்டார் லியாகத் அலிகான்.
'பதான்கள் என்ன கூலி எதிர்பார்ப்பார்கள்?'

No comments: