***************
14th January
***************
அமெரிக்கா கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்!
மேஜை முழுக்கப் பூங்கொத்துகள். முகம் முழுக்கப் புன்னகை. பங்களாதேஷின் புதிய பிரதமராகத் தேர்வு செய்யப் பட்டிருக்கும் ஷேக் ஹஸீனாவின் இல்லமும் அலுவலகமும் வாழ்த்து கோஷங்களால் நிரம்பிக் கொண்டுள்ளன. இந்த உற்சாகம், மகி2ழ்ச்சி,வாழ்த்து அத்தனைக்கும் விதை ஊன்றப்பட்டது ஒரு யுத்த களத்தில்.
1971-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த யுத்தத்துக்கான காரணகர்த்தாக்கள் என்று ஒரு பட்டியல் போட்டால் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பெயர்தான் முதலில் இடம்பெற வேண்டும் (பங்களாதேஷின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் அரசியல் வாரிசு ஷேக் ஹஸீனா). அந்த யுத்தத்தின் ஆகப்பெரிய விளைவுதான் பங்களாதேஷ் என்ற புத்தம்புது தேசம்.
கடந்த காலங்களில் இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு தேசங்களுக்கும் இடையே நடந்த யுத்தங்களிலிருந்து 1971 யுத்தம் பல கோணங்களில் வித்தியாசமானது. விநோதமானதும்கூட. அடிப்படையில் அது ஒரு உள்நாட்டு
யுத்தம். மேற்கு, கிழக்கு என்று பூகோளரீதியாக (மனரீதியாக என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்) பிரிந்துகிடந்த பாகிஸ்தான் மக்களுக்கு இடையே நிகழ்ந்த உணர்ச்சிகரமான உரிமைப் போராட்டம். அது மெள்ள மெள்ள இரு தேசங்களுக்கு இடையே யான பெரும் யுத்தமாகப் பரிணாம வளர்ச்சி பெற்றது.
இந்த வளர்ச்சியின் பின்னணியில் பல நுணுக்கமான காய் நகர்த்தல்கள் இருக்கின்றன. முக்கியமாக பாகிஸ்தானின் ஆட்சியாளர்களும் ஐ.எஸ்.ஐ-யும் நிகழ்த்திய ஜாலங்கள் அபரிமிதமானவை. அவற்றைப் புரிந்துகொள்ள அப்போதைய பாகிஸ்தான் அரசியல் சூழல் பற்றிய பாலபாடம் தெரிந்திருக்கவேண்டும்.
பூகோளரீதியாக மேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு பாகிஸ்தானுக்கும் இடைவெளி இருந்தது வாஸ்தவம்தான். அதற்காக ஆட்சியாளர்களும் கிழக்கை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைத்திருக்க வேண்டியதில்லை. 'கிழக்கு பாகிஸ்தான்வாசிகள் எல்லோரும் குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள்' என்ற நினைப்பு பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு இருந்தது. சட்டியில் உள்ளதுதான் அகப்பையிலும் சிக்கும்.
பள்ளிக்கூடம் கட்டிக்கொடுங்கள் என்று கேட்டால், பத்து மாதங்கள் கழித்துத்தான் என்ன... ஏது என்று விசாரிக்கவே ஆள் அனுப்புவார்கள். பஞ்சாயத்துப் பணிகள் பாதியில் நிற்கின்றன என்று மனு போட்டால், மரியாதைக்குக்கூட என்னவென்று கேட்கமாட்டார்கள். நிதியுதவி பற்றி... ம்ஹ¨ம், நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. எல்லாவற்றிலும் புறக்கணிப்பு. எல்லாவற்றிலும் பாராமுகம். வளர்ச்சியின் வாசனைகூட கிழக்குப் பக்கம் சென்றுவிடாமல் பார்த்துக்கொண்டனர் ஆட்சியாளர்கள். அதிருப்தி. ஏமாற்றம். விரக்தி. ஆத்திரம். எப்போது வேண்டுமானாலும் புரட்சி வெடித்துவிடும் என்ற சூழல்.
'கொஞ்சம் பொறுங்கள், மேலிடத்தில் பேசிப் பார்க்கிறேன்' என்றார் ஷேக் முஜிபுர் ரஹ்மான். கிழக்கு பாகிஸ்தான் மக்களின் ஒரே மீட்பர் அவர்தான். அங்கே பிரபலமாக இருந்த 'அவாமி லீக்' கட்சியின் நிரந்தரத் தலைவர் அவர்.
'அதிகம் உணர்ச்சிவசப்படாதீர்கள் முஜிபுர். உடம்புக்கு ஆகாது' என்று சொல்லிவிட்டது மேலிடம். மேலிடம் என்றால் பாகிஸ்தான் அதிபர் யாஹியாகான். அயூப்கானுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றிய மிலிட்டரி மனிதர். மக்களிடம் வந்து விஷயத்தைச் சொன்னார் ரஹ்மான். ஆவேசப்பட்டனர் மக்கள். ஆற்றாமை வந்துவிட்டால் அக்கம் பக்கத்தில் புலம்புவது தவிர்க்கமுடியாது அல்லவா... இந்திய அதிகாரிகள் சிலரிடம் மனம்விட்டுப் பேசினார் முஜிபுர்.
ஏதோ தீய்ந்த வாடை அடிப்பதுபோல இருந்தது பாகிஸ்தான் அதிபர் யாஹியாகானுக்கு. பாகிஸ்தானுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாகக் குற்றம் சாட்டி முஜிபுரை கைது செய்தது பாகிஸ்தான் அரசு. சூட்டோடு சூடாக அவரை மேற்கு பாகிஸ்தானுக்கும் பார்சல் செய்துவிட்டது. அவ்வளவுதான். சிலிர்த்து எழுந்துவிட்டது கிழக்கு பாகிஸ்தான்.
கிழக்குப் பிராந்தியம் முழுக்கப் பதற்றம். ரகளை. உரிமைக்குரல். ஆட்சிக்கு எதிராக ஆக்ரோஷம் நிரம்பிய கோஷம். அதிபர் யாஹியாகானுக்கு விஷயம் சென்றது. 'முஜிபுரைத்தான் உள்ளே வைத்துவிட்டோமே... பிறகு, யார் தொந்தரவு செய்கிறார்கள்?' கேட்டார் யாஹியாகான். 'நாம் ஒரு முஜிபுரைத்தான் உள்ளே வைத்தோம். அது பல முஜிபுர்களை உருவாக்கிவிட்டது. படிப்பு வாசனை உள்ள அத்தனை பேரும் பிரச்னை செய்கிறார்கள்.'
'அவர்களை கவனித்துவிடுங்கள்' என்று கூலாகச் சொல்லிவிட்டார் யாஹியாகான். அர்த்தம் வெளிப்படையானது. கிழக்கு நோக்கிக் கிளம்பியது பாகிஸ்தான் ராணுவம். இறங்கிய வேகத்தில் தாக்குதல். கண்மூடித்தனமான தாக்குதல் என்று சொல்வதற்கில்லை. நிச்சயம் கண்ணைத் திறந்து வைத்துக்கொண்டு நடத்திய தாக்குதல் அது. கிழக்கு பாகிஸ்தானியர்கள் யார் என்று தெளிவாகத் தெரிந்துகொண்டு அடிக்கவேண்டும் அல்லவா... தேடி தேடிக் கைது செய்யப்பட்டனர் கிழக்கு பாகிஸ்தானியர்கள்.
அடி தாங்கமுடியவில்லை. திருப்பி அடித்தாலொழிய தப்பிக்க வழியில்லை என்ற நிலை. இத்தனைக்கும் கிழக்கு பாகிஸ்தானில் ஒரு ராணுவப்பிரிவு உண்டு. மேற்கில் உள்ளது போலவே. அதிருப்தி ராணுவம். அதன் தளபதியாக இருந்தவர் ஜியாவுர் ரெஹ்மான். முஜிபுரின் ராணுவ மூளை அவர். மார்ச் 27, 1971 அன்று புதிய பிரகடனம் ஒன்றை வெளியிட்டார் ஜியாவுர் ரெஹ்மான்.
'பங்களாதேஷ் இனி சுதந்திர தேசம்.'
பதற்ற நெருப்பு பற்றிக்கொண்டது கிழக்கு பாகிஸ்தானில். அதில் தெறித்து விழுந்த ஒரு பொறி, 'முக்தி பாஹினி.' பங்களாதேஷ் என்ற தேசத்தை உருவாக்கவேண்டும் என்ற கனவில் இருந்து கருவான இயக்கம் அது. முழுக்க முழுக்க இளைஞர்களைக்கொண்ட இயக்கம். அதுவும் ஆயுதம் ஏந்திய இளைஞர்கள். 'வாருங்கள். ஒன்றிணைந்து எதிர்கொள்வோம்.' கிழக்குப் பாகிஸ்தான் ராணுவம், பாரா மிலிட்டரி படை, முக்தி பாஹினி எல்லோரும் கரம் கோத்தனர். முக்கியமாக பங்களாதேஷ் மக்கள்.
திருப்பி அடிக்கத் தயாரானது கிழக்கு பாகிஸ்தான். ஒரு பக்கமாகவே இருந்த தாக்குதல் இரு தரப்பு யுத்தமாக மாறத் தொடங்கியது, முக்தி பாஹினி களமிறங்கிய புள்ளியில் இருந்துதான். என்னதான் சுதந்திர வேட்கையுடன் போரிட்டபோதும் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னால் முக்தி பாஹினியும் கிழக்கு பாகிஸ்தான் ராணுவமும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. முழு வீச்சில் இறங்கியிருந்தது ராணுவம். ஆனாலும், யுத்தம் தொடர்ந்தது.
போரில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த மக்கள் எப்படியாவது தப்பிக்க விரும்பினர். அப்போது அவர்களுக்கிருந்த ஒரே வாய்ப்பு அகதி அவதாரம் எடுப்பது மட்டும்தான். புறப்பட்டுவிட்டனர் இந்தியாவை நோக்கி.
நிலப்பரப்பை அளவுகோலாகக் கொண்டு பார்த்தால் பாகிஸ்தானைவிட மிகப்பெரிய தேசம் இந்தியா. இருப்பினும், திடீர் இடப்பெயர்ச்சியை எந்த தேசமும் அத்தனை சுலபமாக எதிர்கொள்வது சாத்தியமில்லை. கிழக்கு பாகிஸ்தானில் இருந்து அலை அலையாக இந்தியாவுக்குள் நுழைந்தனர் அகதிகள்.
வருத்தத்தைச் சுமந்துகொண்டு வருபவர்களை விரட்டிவிடுவதற்கு இந்தியாவின் ஆன்மா தயாராக இல்லை. எல்லோரையும் உள்ளே அனுமதித்தது. ஆயிரம், பத்தாயிரம், ஐம்பதாயிரம், லட்சம்... எண்ணிக்கை விறுவிறுவென உயர்ந்து ஐம்பது லட்சத்தைத் தொட்டது. வருபவர்கள் வெறும் மூட்டை முடிச்சுகளோடு வரவில்லை. தொற்று நோய்களையும் சுமந்துகொண்டு வந்தனர்.
அகதிகள் முகாமைப் பார்வையிடச் சென்ற இந்திய பிரதமர் இந்திராகாந்திக்கு பகீரென்றது. முகத்தில் கவலை ரேகைகள் படரத் தொடங்கின. 'பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு யுத்தத்துக்காக இந்தியா பலிகடா ஆகவேண்டிய அவசியம் இல்லை. தாக்குதலை நிறுத்துங்கள். அகதிகளை அழைத்துக்கொள்ளுங்கள்' என்றார் இந்திரா. இந்தப் புள்ளியில்தான் பாகிஸ்தானின் காய் நகர்த்தல்கள் அடுத்த பரிமாணத்துக்கு வந்தன. ஐ.எஸ்.ஐ. காட்சிக்குள் நுழைந்ததும் அப்போதுதான்.
'உள்நாட்டு மக்களைக் கொன்று குவிக்கிறது பாகிஸ்தான் அரசு என்று நம் மீது அதிருப்தி பரவியிருக்கிறது. போதாக்குறைக்கு இந்திரா வேறு வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக் கிறார். இப்படியே போனால் நிலைமை சிக்க லாகிவிடும். உடனடியாக உலக நாடுகளின் கவனத்தைத் திசை திருப்பவேண்டும்.' காதில் கிசுகிசுத்தது ஐ.எஸ்.ஐ. உடனடியாக அதிபர் யாஹியாகான் அறிக்கை குண்டு ஒன்றைப் போட்டார்.
'முக்தி பாஹினிக்கு இந்தியா ஆயுதமும் ஆயுதப் பயிற்சியும் கொடுக்கிறது.'
யாஹியாகான் சொன்னது வாஸ்தவம்தான். எல்லை வழியாக இந்தியாவுக்கு வந்த முக்தி பாஹினி போராளிகளுக்கு சில காலம் இந்தியா ராணுவப் பயிற்சிகள் கொடுத்தது. அதுவும்கூட தற்காப்பு முயற்சியாகத்தான். அதற்காக உள்நாட்டில் நடந்துகொண்டிருக்கும் குழப்பங்களை தார்ப்பாலின் போட்டு மறைத்துவிட்டு இந்தியா மீது குற்றம் சாட்டுகிறது பாகிஸ்தான் என்பது ஏனோ அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் புரியவில்லை. தேவைப்பட்டால் பாகிஸ்தானுக்கு உதவிகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வேறு வெளியிட்டனர்.
துணிச்சல் வந்துவிட்டது யாஹியாகானுக்கு. ராணுவத்தின் பெரும்பகுதியை இந்திய எல்லைக்குத் திருப்பினார். கவனம் கலைக்கும் முயற்சி. பாகிஸ்தான் தன் பழைய உத்தியைப் பயன்படுத்துகிறது என்பதை இந்திய அரசால் உணர முடிந்தது. இந்திய எல்லையில் ராணுவம் உஷார்ப்படுத்தப்பட்டது. அதேசமயம் இந்திரா உறுதியாகப் பேசினார்.
'இனியும் அகதிகள் வருவது தொடர்ந்தால் கையைக் கட்டி வேடிக்கை பார்ப்பது சாத்தியமில்லை.' சொன்னதோடு நிறுத்தாமல் உலக நாடுகள் சிலவற்றுக்கு நேரில் சுற்றுப்பயணம் செய்து இந்தியாவின் நிலைப்பாடு குறித்த விளக்கங்களை அளித்தார். எல்லோரும் இந்தியா பக்கம் என்றுதான் நினைத்தார் இந்திரா. ஆனால், நிலைமை முழுக்க இந்தியாவுக்கு எதிராகத் திரும்பப்போகிறது என்பதை சுற்றுப்பயணம் முடித்து இந்தியாவில் கால் வைத்தபோது இந்திரா உணரவில்லை.
இந்திய எல்லைப்பக்கம் தன் ராணுவத்தை பாகிஸ்தான் திருப்பியது முக்தி பாஹினிக்குச் சாதகமாக இருந்தது. குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும் உக்கிரமாக அவர்களால் போராட முடிந்தது. அதே சமயம் சீன ஆதரவு, யாஹியாகானை எல்லை மீற வைத்தது. டிசம்பர் 3, 1971. இந்தியப் பகுதியான திரிபுரா மாநிலத்தில் ஜெட் தாக்குதலை நிகழ்த்தியது பாகிஸ்தான் ராணுவம். அதிகாரபூர்வமாக இந்தியாவைச் சீண்டிய முதல் தாக்குதல் அது.
இந்திராவின் பொறுமை எல்லை கடந்தது. அறிவிப்பு வெளியிட்டார். இந்தியா மீது யுத்தம் திணிக்கப்பட்டுள்ளது. அதை இந்தியா துணிச்சலுடன் எதிர்கொள்ளும். இந்தியா முழுக்க அவருடைய பேச்சின் அதிர்வு எதிரொலித்தது. முழு தேசமும் இந்திராவுக்கு ஆதரவுக்கரம் நீட்டின. ஆதரவு கிடைத்த உற்சாகத்தில் டிசம்பர் ஆறு அன்று எல்லை கடந்தது இந்திய ராணுவம். யுத்தம் தொடங்கிவிட்டது. இந்திய ராணுவம் முக்தி பாஹினியுடன் கைகோத்தபடி பாகிஸ்தானுக்குள் பிரவேசிக்கத் தொடங்கியது.
இந்தச் சமயத்தில்தான் அமெரிக்கா இந்தியாவுக்கு ஓர் அதிர்ச்சி வைத்தியத்தைக் கொடுத்தது. 'ஏற்கெனவே கொடுப்பதாகச் சொல்லியிருந்த எண்பத்தேழு மில்லியன் டாலர் பொருளாதார உதவியை இப்போது தர முடியாது. நாங்கள் கொடுக்கும் நிதியை இந்தியா யுத்த காரியங்களுக்குப் பயன்படுத்திவிடுமோ என்று சந்தேகமாக இருக்கிறது.' இதுதான் அமெரிக்கா கொடுத்த விளக்கம். கண்ணைக் கட்டிவிட்டது போலிருந்தது இந்திராவுக்கு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment