***************
07-01-09
***************
குன்றுகள்... குண்டுகள்!
காஷ்மீர் ஆப்பிள் சாப்பிட்டதுண்டா?ருசியின் உச்சம். என்ன ஒன்று... விலையும் உச்சம்தான். இதே கேள்வியை பாகிஸ்தானியர்களிடம் கேட்டுப் பாருங்கள். முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடிக்கும். அவர்களுக்கு காஷ்மீர் என்ற பிராந்தியம் தான் ஆப்பிள். மாய ஆப்பிள். இன்றுவரை அது அவர்களுக்கு எட்டாக்கனிதான்!
எத்தனை நாள்தான் அப்படியே நினைத்துக் கொண்டிருப்பது? ஆப்பிளை ஒரு முறையேனும் தொட்டுப் பார்த்துவிட வேண்டும் என்று ஆசை பர்வேஸ்
முஷ்ரபுக்கு. பாகிஸ்தான் ராணுவத் தளபதி இதற்குக்கூட ஆசைப்படாவிட்டால் எப்படி? அவர் மூளை காஷ்மீரை நோக்கிச் சிந்திக்கத் தொடங்கியது.
அந்த சமயத்தில் பாகிஸ்தான் பிரதமராக இருந்தது நவாஸ் ஷெரீப். அவருக்கு இந்திய பிரதமர் வாஜ்பாயுடன் கைகுலுக்கவேண்டும் என்பதில்தான் ஆர்வம். இதற்காக வாஹா எல்லை வழியாக வாஜ்பாயை சுமந்துகொண்டு வரும் பேருந்துக்காக லாகூரில் கால்கடுக்கக் காத்துக்கொண்டிருந்தார்.
தன்னுடைய எண்ணத்தை பிரதமர் ஷெரீபிடம் தெரிவித்தார் முஷ்ரப். உதட்டைப் பிதுக்கினார் ஷெரீப். 'அமைதி நோக்கி நம்முடைய பணி தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில், ராணுவம் என்ன... முஜாஹிதீன் என்ன... துரும்பு சைஸ் எறும்புகூட இந்தியாவுக்குள் ஊடுருவக் கூடாது. அதற்கான சிந்தனைகூட யாருக்கும் வரக்கூடாது, ஜாக்கிரதை!'
ஏமாற்றம்... அதிருப்தி! கையைப் பிசைந்தபடியே வெளியே வந்த முஷ்ரபுக்கு தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உதடுகள்துடித்தன. என்ன ஆனாலும் ஆகட்டும், ஒரு கை பார்த்து விட வேண்டியதுதான். அமைதிப்பேச்சு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் ஊடுருவல் நடந்தால், அதற்கு நவாஸ் ஷெரீப்தான் பொறுப்பாளி; நான் அல்ல. முகம் முழுக்கப் புன்னகையுடன் போராளி களுக்குப் பச்சைக்கொடி காட்டினார். அவர் சொன்னால் அங்கே அத்தனையும் அசையும். குறிப்பாக, ராணுவமும் அங்குள்ள தீவிரவாத இயக் கங்களும் அவர் சொன்னால்தான் அசையும்.
'கடமையைக் கண்ணியமாக முடிக்கவேண்டும். அதற்கு ஒரு விஷயத்தில் கவனமாக இருங்கள். நம்முடைய இலக்கு கார்கில். கார்கில் என்றால் காஷ்மீர். அதில் சந்தேகமில்லை. அது சாத்தியப்பட நிறைய எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். எதிரிகளை அழிப்பதற்கு நம்முடைய அவசியத் தேவை குன்றுகள்தான். முடிந்தவரைக்கும் அதிகக் குன்றுகளை கண்டுபிடியுங்கள். கண்ணில் பட்டால் காத்திருக்கத் தேவையில்லை. ஆக்கிரமித்துவிடுங்கள். அதுதான் வெற்றிக்கான மூலஸ்தானம். கவனம்... நீங்கள் பயன்படுத்தும் சாலைகள் எதுவும் எதிரிகளின் பார்வையில் சிக்கிவிடக்கூடாது. தகுந்த மாற்று ஏற்பாடுகள் செய்துவிடுங்கள். அழித்துவிடுவது உத்தமம்.' ஊடுருவல் தலைவர்களை உட்காரவைத்துத் தெளிவாகப் பேசினார் முஷ்ரப்.
எதற்காகக் குன்றுகள்?
மனிதத் தலைகள் தென்படாத குன்றுகளைக் கண்டு பிடித்து அதில் ஏறி வசதியாக அமர்ந்துகொண்டால், எதிரியின் ஒவ்வொரு நகர்வையும் துல்லியமாகப் பார்க்க முடியும். எத்தனை பேர் வருகிறார்கள் என்பதையும் கணிக்க முடியும். எப்போது தாக்கினால், எதிரிகள் மேலே முன்னேறி வராமல் தடுக்க முடியும் என்பதற்கான உத்திகளை வகுக்க முடியும். எப்போதும் நம்முடைய கை ஓங்கியே இருக்கும். சாதுரியத்துடன் வகுக்கப்பட்ட திட்டம்.
அத்தனையும் அனுபவம் கொடுத்த பாடம். கடந்த கால யுத்தங்களில் குன்றுகள் கிடைக்காமல்... எதிரிகள் முன்நிற்க முடியாமல் வீரர்கள் தலை தெறிக்க ஓடிவந்தது எல்லாம் முஷ்ரபுக்கு நன் றாகவே நினைவிருந்தது. சாஸ்திரி காலத்தில் நடந்த யுத்தத்தின்போது களத்தில் இருந்தவர் அல்லவா அவர்.
அப்போது நிகழ்ந்தது போன்ற தவறு, தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் நிகழ்ந்துவிடக்கூடாது. வெற்றி முக்கியம்; காஷ்மீர் முக்கியம். இதற்காகவே எல்லா தளபதிகளையும் போல தலைநகரில் குளுகுளு அறையில் உட்கார்ந்து உத்தரவு பிறப்பிக்காமல் நேரடியாகக் களத்துக்கு வந்து வீரர்களிடமும் போராளிகளிடமும் பேசினார். உற்சாகப்படுத்தி னார்.
பாரம்பரிய முறைப்படி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து தொடங்கியது ஊடுருவல். LoC என்றால் பளிச்சென்று புரிந்துவிடும். தோளோடு தோள் உரசுவதுபோல சுமார் நூற்றியறுபது கிலோமீட்டர் நீளத்துக்கு நீண்ட சாலை இருக்கிறது. குண்டும் குழியும்தான் கண்ணுக்கு வெளிச்சம். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை போல.
அந்தச் சாலையின் வழியாகத்தான் முஷ்ரபின் பாசத்துக்குரிய முஜாஹிதீன்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவத் தொடங்கினார்கள். மொத்தம் ஐயாயிரம் பேர். அசைவுகள் இருந்தன. ஆனால், அதிர்வுகள் இல்லை. அத்தனை நாசூக்கு. அத்தனை நேர்த்தி. பதுங்கிப் பதுங்கி நகர்ந்தனர், பாய்வதற்காக என்பதால்!
வழிநெடுக ஆங்காங்கே பல குன்றுகள் தென்பட்டன. குளிர் தாங்க முடியாமல் இந்திய வீரர் கள் காலி செய்துவிட்டுச் சென்ற குன்றுகள் அவை. சொல்லியவண்ணம் செயலில் இறங்கினர். பத்துப் பேருக்கு ஒரு குன்று. சில குன்றுகளில் இருபதுக்கும் மேல். தாக்குதல் தொடங்கிவிட்டது. முஜாஹிதீன்கள் ஊடுருவிய விஷயம், இந்திய ராணுவத்துக்குச் சென்றது. முஜாஹிதீன்கள் அத்தனை குன்றுகளையும் ஆக்கிரமித்துவிட்டார்கள் என்ற செய்தி ராணுவத்தை யோசிக்க வைத்தது.
அவசர ஆலோசனையில் இறங்கியது. பலமான தயாரிப்புடன் வந்துள்ளனர் முஜாஹிதீன்கள். நாமும் எச்சரிக்கையுடன் புறப்படவேண்டும். தற்காப்பு நடவடிக்கை ஒன்றுதான் சரியானதாக இருக்கும். முடிவெடுத்தது இந்திய ராணுவம். தயாராக இருக்குமாறு வீரர்களுக்கு உத்தரவு பறந்தது.
யுத்த களத்துக்குப் புறப்படுவது என்றால் தலை யில் ஒரு தொப்பி, உடம்பில் ஒரு ஜெர்கின், கையில் ஒரு துப்பாக்கி, கொஞ்சம் தோட்டாக்கள் என்று சென்றுவிட முடியாது. நிறைய வஸ்துகள் தேவைப் படும். ஒரு பட்டியல் பார்த்தால் கஷ்டம் புரியும்.
நாலரை கிலோ எடைகொண்ட எஸ்.எல்.ஆர். ரக ரைஃபிள். ஒன்றேகால் கிலோவில் எஃகு தலைக்கவசம். வயிற்றை நிரப்பிக்கொள்ள இரண்டு கிலோ உணவு வகையறாக்கள். குறைந்தபட்சம் நூறு ரவுண்டுகள் வரும் அளவுக்கு மூன்றேகால் கிலோ வெடிபொருட்கள். ஒன்றரை கிலோ எடைகொண்ட தண்ணீர் பீப்பாய். இவற்றை எல்லாம் ஒன்றாக உள்ளே தள்ளி முதுகில் சுமக்கும் தோள் பையின் எடை மட்டும் இரண்டு கிலோ இருக்கும்.
பிறகு, மலையேறுவதற்கு உதவும் கயிறு, குளிரில் இருந்து தப்பிக்க ஸ்வெட்டர்-மஃப்ளர் போன்றவை என்று மொத்தம் 24 கிலோ எடைகொண்ட சுமை களைச் சுமந்தபடிதான் எதிரிகளை எதிர்கொள்வது வழக்கம். சில வீரர்கள் மிஷின் கன்கள், ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்டவற்றைக் கூடுதலாகச் சுமக்க வேண்டியிருக்கும்.
ஊடுருவல் தொடங்கிவிட்டது என்பது மட்டும் தான் இந்திய ராணுவத்துக்குத் தெரியும். அவர்கள் எங்கே, எப்படிப் பதுங்கியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவே இந்திய ராணுவம் முதலில் களமிறங்கியது. அதுவும் சொற்ப வீரர்களுடன்.
இந்த இடத்தில்தான் முஜாஹிதீன்கள் பலமாக இருந்தனர். அவர்கள் வசம் அதிகம் சுமையில்லை. துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் கையெறி குண்டுகள். அவ்வளவுதான். சரமாரியாகத் தோட்டாக்களைச் செலுத்துவார்கள். கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்வார்கள். அடுத்த குன்றில் இருந்து தாக்குதல் தொடங்கும். ஒத்தாசைக்கு பாகிஸ் தான் ராணுவத்தினரும் நுழைந்திருந்தனர். இதனால் இந்தியப் படைகள் மீது துல்லியமான தாக்குதலை சோர்வில்லாமல் நடத்தமுடிந்தது. இழப்பு. பலத்த இழப்பு.
குன்றுகளின் மேலே நின்றுகொண்டு இந்திய வீரர்கள்மீது தாக்குதல் நடத்திய முஜாஹிதீன்கள் இந்திய வீரர்களை அநா யாசமாக நசுக்கித்தள்ளினர். அதன்பிறகுதான், இந்திய ராணுவத்துக்கு எதிரிகளின் வியூகம் புரிந்தது. சொற்ப நபர்களை அனுப்பினால் வேலைக்கு ஆகாது. கும்பலாகத் தாக்க வேண்டும். அதுதான் எதிரிகளை எதிர் கொள்வதற்கான வழி.
இப்போது முப்பதாயிரம் வீரர்களை அனுப்பியது இந்திய ராணுவம். ஆம். முஜாஹிதீன்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஆறு மடங்கு அதிகம். முன்னே சென்று தாக்குதல் நடத்துங்கள். ஏதேனும் ஆபத்து என்றால் நாங்கள் பின்னால் வருகிறோம் என்று உத்தரவாதம் கொடுத்த பாகிஸ்தான் ராணுவம், இந்திய எல்லை நோக்கி வருவதற்கான சாத்தியக்கூறுகளே தெரிய வில்லை.
இந்திய வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், அவர்களுடைய வீரியம் மிகுந்த தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது முஜாஹிதீன்களின் படை. குன்றுகளின் மேல் ஆணி அடித்ததுபோல படுஸ்ட்ராங்காக இருந்தது இப்போது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது. முஜாஹிதீன்கள் கீழே இறங்குவது சிக்கலாகிவிட்டது. இறங்கினால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. மேலே முஜாஹிதீன்கள். கீழே இந்திய ராணுவம். பலத்த தாக்குதலால் நிலைகுலைந்து போனது பாகிஸ்தான் கூலிப்படை.
தவிரவும் ஃபோபர்ஸ் பீரங்கிகள், மெஷின்கன் போன்ற ஆயுதங்கள் இந்தியாவிடம் இருந்ததால் தப்பிக்க முடியாத சூழல். வெற்றி பெற்றுத்தான் கீழே இறங்குவோம் என்று சொல்லி குன்றின் மீது ஏறிய வர்கள் எல்லாம், செத்து விழுந்தனர். கிட்டத்தட்ட நான்காயிரம் பேர் உயிரிழந்தனர்.
நிலைமை எல்லை கடந்திருந்தது. கார்கில் ஊடுருவல் பாகிஸ்தான் மீது பலத்த எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் பில் கிளின்ட் டனிடம் இருந்து கடும் ஆட்சேபனைகள். அலறிக்கொண்டு அமெரிக்காவுக்கு ஓடினார் பிரதமர் நவாஸ் ஷெரீப். ஒழுங்கு மரியாதையாக எல்லாவற்றையும் நிறுத்திக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால்...? புரிந்துவிட்டது ஷெரீபுக்கு. தலையசைத்துவிட்டு பாகிஸ் தான் திரும்பினார்.
விவகாரம் எந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பது புரிந்துவிட்டது முஷ்ரபுக்கு. ஒதுங்கிக்கொள்ள முடிவு செய்தார். போர்நிறுத்தம். இருப்பினும், எஞ்சியிருந்த பாகிஸ்தான் கூலிப்படையினரை ஓட ஓட விரட்டிய பிறகுதான் இந்திய வீரர்கள் ஓய்ந்தனர்.
தெளிவான திட்டங்கள். துல்லியமான காய் நகர்த்தல்கள். எல்லாம் இருந்தது பாகிஸ்தான் ராணுவத்திடம். பிரச்னை என்னவென்றால், இந்திய வீரர்கள் எத்தனை பலமானவர்கள் என்பதை பாகிஸ்தான் ராணுவம் கணிக்கத் தவறியது அல்லது தவறாகக் கணித்ததே தோல்விக்குக் காரணம். பிரதமரின் ஒத்துழைப்பே இல்லாமல் வெறும் ராணுவத் தளபதியின் உத்தரவின்படி நிகழ்ந்த யுத்தத்தின் முடிவு இது.
இது பரவாயில்லை... 1965-ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட யுத்தம் அதிபர், பிரதமர், ராணுவம் அத்தனை பேரின் ஆதரவுடன் நிகழ்த்தப்பட்டபோதுதான் பாகிஸ்தானின் அதி முக்கிய அதிகார மையம் அம்பலத்துக்கு வந்தது. இந்தியா-பாகிஸ்தான் உறவு வேகமாக மோச மடையத் தொடங்கியது அப்போதுதான். அந்த அதிகார மையம்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment