Thursday 19 February, 2009

பாகிஸ்தான் பற்றிய தொடர் (5)

:::::::::::::::::
18th January
******************

சரணாகதி என்றொரு சங்கதி!

''திடுதிப்பென கைவிரித்துவிட்டது அமெரிக்கா. வாஸ்தவம்தான். அதற்காக ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, மூலையில் உட்கார முடியுமா என்ன? வாய்ப்பே இல்லை. என்ன ஆனா லும் சரி... வலுக்கட்டாயமாகப் போருக்கு அழைக்கும் பாகிஸ்தானுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கவேண்டும். கொடுப்போம்.

அமெரிக்கா அச்சுறுத்தினாலும் சரி... சீனா சீண்டினாலும் சரி... யாரும் அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பங்களாதேஷ் மீது நடத்தப்படும் யுத்தம், இந்தியாவுக்கு எதிரான யுத்தம்தான். பங்களாதேஷ் என்ற தேசத்தை உருவாக்கி விட்டுத்தான் மறுவேலை!'' -உறுதி குலையாமல் பேசினார் பிரதமர் இந்திரா காந்தி. உற்சாகம் தொற்றிக்கொண்டது, ராணுவ வீரர்களுக்கும் முக்தி பாஹினி போராளிகளுக்கும். முக்கியமாக, பங்களா தேஷ் மக்களுக்கு.

இந்தியாவின் ராணுவத் தளபதி சாம் மானெக்ஷா, மீசையைத் திருகியபடியே
ஆலோசனையில் இருந்தார். தளபதி என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலுடன் காத்திருந்தனர் ராணுவ உயரதிகாரிகள். மூளைக்குள் திட்டம் வெளியான பிறகு அதுகுறித்து, எல்லோரிடமும் விரிவாக எடுத்துச் சொன்னார்.

''பங்களாதேஷின் எல்லைகள்தான் நம்முடைய முதல் இலக்கு. அவற்றை முதலில் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும். அப்படிச் செய்து விட்டால், பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டு எல்லை கடந்துவர முடியாது. ஏற்கெனவே நுழைந்தவர்கள்தான் இருப்பார்கள். கிட்டத்தட்ட பாகிஸ்தான் ராணுவம் முடக்கப்பட்டது போல ஆகிவிடும். இதன் மூலம், துளியும் எதிர்ப்பு இல்லாமல் இந்திய ராணுவம் மிக எளிதாக பங்களாதேஷ§க்குள் நுழைந்துவிட முடியும்!'' -மானெக்ஷா பேசுவதை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தனர் அதிகாரிகள்.

இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய ராணு வத்தின் இலக்குகள் இரண்டு. சிட்டகாங் மற்றும் குல்னா துறைமுகங்கள். இங்கு ஆக்கிரமித்தல் என்றால், வெறுமனே போய் துறைமுகத்தின் ஒரு ஓரத்தில் ஒண்டிக்கொள்வது இல்லை. அங்குள்ள கடற் படையினருடன் மோத வேண்டும். எண்ணிக்கை அபரிமிதமாகவும் இருக்கலாம். சொற்பமாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும், பலமான தாக்குதலை நடத்தி... அந்தப் பகுதிகளை முதலில் கைப்பற்ற வேண்டும். இதைச் சாதிப்பதற்கு வலுவான ஆயுதம் அவசியம். இந்த இடத்தில்தான் இந்தியாவின் மிகப் பெரிய போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் களமிறங்கியது.

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் நங்கூரமிடப் பட்டிருந்த ஐ.என்.எஸ். விக்ராந்த் உடனடியாக பாகிஸ்தானின் முக்கியத் துறைமுகங்களுள் ஒன்றான சிட்டகாங்கை நோக்கி நகரத் தொடங்கியது. அதன் அதிரடித் தாக்குதலுக்கு முதல் பலி, கோக்ஸ்பஜார் துறைமுகம். அடுத்தது, குல்னா துறைமுகம் சேதமடைந்தது. சிட்டகாங், கராச்சி போன்ற துறைமுகங்கள் அடுத்தடுத்து இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.

விஷயம் பாகிஸ்தான் ராணுவத்துக்குச் சென்றது. விக்ராந்துக்கு எதிராகத் தன் வசம் இருந்த போர்க் கப்பலை களத்தில் இறக்கியது. அதன் பெயர் பி.என்.எஸ். காஸி. அமெரிக்கத் தயாரிப்பு. இதை 1963-ல் குத்தகைக்கு எடுத்திருந்தது பாகிஸ்தான். ஆனால், விக்ராந்தின் ராட்சதத் தாக்குதலை எதிர் கொள்ளமுடியாமல் சின்னாபின்னமானது காஸி. நினைத்தது நடந்தது. பங்களாதேஷின் பெரும்பாலான துறைமுகங்களை இந்தியப் படைகள் ஆக்கிரமித்திருந்தன.

அடுத்து, தரைப்படையைக் களமிறக்கியது இந்திய ராணுவம். முடிந்தவரை அதிக அளவில் நிலப்பரப்புகளை ஆக்கிரமிக்க வேண்டும் என்பதுதான் அவர்களுக்குச் சொல்லப்பட்ட செய்தி. கேட்பதற்கு நன்றாக இருந்தது. ஆனால், அதை செயல்படுத்துவது அத்தனை சுலபம் இல்லை. பாகிஸ்தானின் ராணுவத்தைக் காட்டிலும் கிழக்கு பாகிஸ்தானின் பூகோள அமைப்பு, இந்திய ராணுவத்தைப் படுத்திவைத்தது.

பிரம்மபுத்திரா, கங்கை மற்றும் மேக்னா என்ற மூன்று நதிகளும் பங்களாதேஷை நான்கு கூறுகளாகப் பிரித்திருந்தன. கிளைஆறுகள் வேறு தங்கள் பங்குக்கு ஒவ்வொரு கூறையும் தனித்தனி உட்கூறுகளாகப் பிரித்து, இந்திய ராணுவத்தின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டன.

லெஃப்டினன்ட் ஜெனரல் அரோராவின் கணக்கு வேறு மாதிரி இருந்தது.
'பங்களாதேஷின் இதயப்பகுதி டாக்கா நகரம். யுத்தத்தின் அடிப்படை இலக்கு பங்களாதேஷ் என்றால், டாக்கா நம் வசம் வந்துவிட வேண்டும். அதை பாகிஸ்தான் ராணுவத்திடம் விட்டுவிட்டுப் பிற பகுதிகளைக் கைப்பற்றிப் பலனில்லை. ஆகவே, சிறு நகரங்களை ஆக்கிரமிப்பதில் உழைப்பைச் செல விடுவதில் அர்த்தமில்லை. எவ்வளவு வேகமாகச் சென்று டாக்காவைக் கைப்பற்ற முடியுமோ... அவ்வளவு வேகத்தில் நாம் செல்லவேண்டும்!' -இது தான் அரோராவின் எண்ணம். தலையசைத்தனர் வீரர்கள்.

உண்மையில் டாக்கா நகரை அடைவதற்கு நேர் வழிகள் நிறைய. ஆனால், அங்கெல்லாம் பாகிஸ்தான் ராணுவம் இருக்காது என்று சொல்லமுடியாது. பாகிஸ்தான் ராணுவத் தளபதி நியாஸி அத்தனை ஏமாந்தவர் அல்ல. நிச்சயம் படைகளைத் திரட்டி வைத்திருப்பார். போனால் எதிர்ப்பது சிரமம்; ஆபத்தும் அதிகம். ஆகவே, குறுக்கு வழிகளில் டாக்காவை நோக்கி முன்னேற வேண்டும் என்று முடிவு செய்தது இந்திய ராணுவம்.

ஆனால், குறுக்குவழிகளைக் கடந்து செல்வது அத்தனை சுலபமாக இல்லை. பல பாலங்களைக் கடக்க வேண்டியிருந்தது. அவை எல்லாம் பெயருக்குத்தான் பாலங்கள். உடனடி உபயோகத்துக்கு லாயக்கில்லாமல் கடுமையான சேதத்துக்கு ஆட்பட்டிருந்தன. நடை பாதைகளின் நிலைமையும் மோசம்தான். உண்மையில் அனைத்துமே நன்றாக இருந்தவை. புழக்கத்தில் இருந்தவை. இப்போது பாழ்படுத்தப் பட் டுள்ளது. அந்தப் புண்ணியம் பாகிஸ்தான் ராணுவத்தினருக்குச் சொந்தமானது. இப்படிச் செய்வது, அவர்களுடைய யுத்த நுணுக்கங்களுள் ஒன்று - தன்னுடைய வழித் தடங்களை எதிரிகள் பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காக. ஆனால், இதைக் கண்டு இந்திய ராணுவம் உடைந்து போய்விடவில்லை.

'பாலம் உடைந்துவிட்டதா? நடைபாதை நலிந்து கிடக்கிறதா? ஒன்றும் பிரச்னை இல்லை. நீங்கள் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். எல்லா வற்றையும் நாங்கள் சரி செய்து தருகிறோம்...' என்றார் கள் ராணுவப் பொறியாளர்கள். வேகம், விவேகம் இரண்டும் அவர்களிடம் கொட்டிக் கிடந்தன. அவர்களுக்கு உதவியாக சில ராணுவ வீரர்கள் களத்தில் இறங்கினர்.

சிலமணி நேரங்களில் பாலங்களை சரிசெய்து கொடுத்தனர் பொறியாளர்கள். அவர்கள் பாலங்களை மட்டும் கட்டிக் கொடுக்கவில்லை. நம்பிக்கை யையும்தான். இந்திய ராணுவம் மேற்கொண்டு முன்னேறிச் செல்வதற்கு எந்தப் பிரச்னையும் இல்லா மல் பார்த்துக்கொண்டது பொறியாளர்களின் புண்ணியம்.

ஆற்றைக் கடந்து செல்வதற்கு சிக்கல் ஏற்படும் போது, ஹெலிகாப்டர் மூலம் ராணுவ வீரர்களை அழைத்துச்சென்று எதிர்க் கரையில் கொண்டுவிடும் பணியைச் செய்தது இந்திய வான்படை. ராணுவ வீரர்களை என்றால், அவர்கள் சுமந்துவரும் ஆயுதங் களையும்தான். எது பாதை என்றே தெரியாத இடங்களின் வழியாக எல்லாம் இந்திய ராணுவம் முன்னேறிச் செல்லவேண்டிய சூழல். சில இடங்களில் நடக்கவேண்டும். பல இடங்களில் நீந்தவேண்டும். எல்லாவற்றுக்கும் பின்னணியில் இருந்தவர்கள் முக்தி பாஹினிகள். அந்தப் பாதையில் எல்லாம் உருண்டு, புரண்டு, படுத்துப் புழங்கியவர்கள் அவர்கள்.

இயற்கையோடு போராடி முன்னேறிச் செல்வது ஒரு பக்கம் என்றால், எதிரே தென்படும் பாகிஸ்தான் ராணுவத்துடன் மோதலை சந்திப்பது பெரும்பாடு. துணிச்சலாக முன்னேறியது. 'வழியை அடைத்து விட்டோம்... அழித்துவிட்டோம்' என்ற நினைப்பில் கொஞ்சம் அசட்டையாக இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது இந்திய ராணுவம்.

இந்திய ராணுவத்தின் தரைப் படை, பல குழுக் களாகப் பிரிந்துதான் டாக்காவுக்குள் நுழையும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. பல இடங்களில் திடுதிப்பென நுழைந்து தாக்குதல் நடத்தியதால், பாகிஸ்தான் ராணுவத்தால் சமாளிக்க முடியவில்லை. திணறியது. பல இடங்களில் பாகிஸ்தான் வீரர்கள் பிடிபட்ட செய்திகள் வந்துகொண்டிருந்தன. அவ்வப்போது நிலப்பரப்பு வசமான செய்திகளும் வந்தன.

பாகிஸ்தான் ராணுவத்தினரின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் இந்திய ராணுவம் மலை. ஆயுதபலமும் அபரிமிதமாக இருந்தது. போதாக்குறைக்கு உள்ளூர் சிங்கங்களான முக்தி பாஹினிகள் வேறு. எங்கே தப்புவது? தடுமாறத் தொடங்கியது பாகிஸ்தான் ராணுவம்.

தரைப்படை, வான்படை, கடற்படை மூன்றையுமே சந்திக்க வேண்டியிருந்தது பாகிஸ்தான் படையினர். அவர்கள் அனைவரையும் நெட்டித் தள்ளிவிட்டு முன்னேறிக்கொண்டிருந்தது இந்திய ராணுவம்.

சேதம். பலத்த சேதம். இனியும் யுத்தத்தைக் தொடர்ந்தால் சொற்ப வீரர்களும் செத்துமடிய வேண்டும் என்பது பாகிஸ்தான் ராணுவத் தளபதியின் மூளைக்குப் புரிந்தது. அது, அவர் மனத்துக்குப் புரியவில்லை. இறுதிவரை ஆடிப் பார்த்துவிட வேண்டும் என்று தீர்மானித்தது. ஆனால், இந்திய ராணுவம் தொடர்ந்து தன்னுடைய உழைப்பை வீணாக்கத் தயாராக இல்லை. செத்த பாம்பை அடிப்பதில் யாருக்குத்தான் ஆர்வம் இருக்கும்?

மைக்கைக் கையில் எடுத்தார். இந்தியத் தளபதி மானெக்ஷா. ''பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு இந்தியாவின் அன்பான எச்சரிக்கை! நண்பர்களே... பங்களாதேஷ் இப்போது இந்திய ராணுவத்தின் முழுக்கட்டுப்பாட்டில். சுற்றிலும் நாங்கள்தான். நீங்கள் இனி வெளியேறுவதும் சாத்தியமில்லை. எங்களை வெல்வதற்கும் வாய்ப்பில்லை. சரணாகதி மட்டுமே இப்போதைக்கு சாத்தியமாகக்கூடிய சங்கதி. என்ன சொல்கிறீர்கள்?''

-மானெக்ஷாவின் இந்தக் கேள்வி, பாகிஸ்தான் ராணுவத்தினரின் தன்னம்பிக்கை முனையை உடைத்து எறிந்தது. 'கீழே விழுந்துவிட்டோம். ஆனால், மீசைக்கு எந்தச் சேதாரமுமில்லை' என்பது போல... 'யுத்தத்தைத் தொடர்வேன்' என்றார், பாகிஸ்தான் தளபதி ஜெனரல் நியாஸி. அவருடைய குரலை ஒடுக்கும் வகையில் இன்னொரு செய்தி காற்றில் கசிந்துவந்தது.
பாகிஸ்தான் அதிபர் யாஹியாகானின் பிரதிநிதியாக கிழக்கு பாகிஸ்தான் என்ற பங்களாதேஷில் கோலோச்சிக் கொண்டிருந்த கவர்னர் ஏ.எம்.மாலிக் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

யுத்தம் இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்டது. புரிந்து போனது பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு. இனி செய்வதற்கு எதுவுமில்லை. இந்தியாவுக்கு வெள்ளைக்கொடி காட்டிவிடலாம். சரண் அடை கிறோம் என்று சொல்லி ஜெனரல் நியாஸி தலை மையிலான பாகிஸ்தான்
ராணுவத்தினர் இந்திய ராணுவத்திடம் கடிதம் கொடுத்தனர்.

'அப்படியே ஆகட்டும்' என்று டாக்கா நகரில் இருக்கும் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் வைத்து சரணடைந்த வீரர்களைக் கைதுசெய்தது இந்திய ராணுவம். ''கவலைப்படாதீர்கள். உங்களுக்குரிய மரியாதைகள் அனைத்தும் கிடைக்கும்!'' உத்தரவாதம் கொடுத்தார் இந்திய லெஃப்டினண்ட் ஜெனரல் அரோரா.

பங்களாதேஷ் என்ற புத்தம் புதிய தேசத்தை உலக வரைபடத்தில் இணைப்பதற்காக நடத்தப்பட்ட இந்த யுத்தத்தைக் காட்டிலும் மிக முக்கியமானது 1947-ல் நடத்தப்பட்ட யுத்தம். யுத்தத்துக்கான காரணம் தொடங்கி... யுத்தம் நிகழ்ந்த விதம், பின்னணியில் நடந்த காட்சி மாற்றங்கள், அரசியல் நடவடிக்கைகள், யுத்தத்தின் முடிவு என ஒவ்வொன்றும் விநோத மானவை. வியப்பை ஏற்படுத்துபவை. இரு தேசங் களுடைய நிம்மதியை நிரந்தரமாக உருக்குலைத்த அந்த யுத்த களம் பற்றி அடுத்த இதழில்...

No comments: