***************07-01-09***************
உலவு, உளவு செய்!
'இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தாக்குப் பிடிப்பாரா? அடுத்து ஒருவேளை... பி.ஜே.பி. ஆட்சிப் பொறுப்புக்கு வருமானால், அத்வானி ஆட்சியில் அமர எந்த ஜோதிடரிடம் ஆரூடம் பார்த்துக் கொண்டிருக்கிறார்? இலங்கை தமிழ் எம்.பி-யான சிவாஜிலிங்கம் இன்னும் எத்தனை நாள் இந்தியாவில் தங்கியிருப்பார்? அஸ்ஸாமில் உல்ஃபா தீவிரவாத அமைப்பு எதற்காக புத்தாண்டு தினத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தியது?'
அத்தனை கேள்விகளுக்குமான விடைகளும் இந்தியாவில் ஆட்சியில்
இருப்பவர்களிடம் இருக்கும் என்று நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. ஆனால், அவை அனைத்தும் பாகிஸ்தானில் இருக் கும் சில நபர்களுக்கு கோப்புகளுடன் தயாராக இருக்கும். குறைந்தபட்சம் செவி வழியாகவேனும் தகவல்கள் வந்து சேர்ந்திருக்கும். இதில் துளியும் மிகையில்லை... நிஜம்! கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளாக நடந்துவரும் சங்கதி இது.
யார் அந்த நபர்கள்? எதற்காக அவர்களுக்குத் தகவல்கள் செல்கின்றன? இதைப் புரிந்துகொள்ள முதலில் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
பாகிஸ்தானுக்கென்று சில அங்க அடையாளங் கள் இருக்கின்றன. அரைகுறையாக ஜனநாயகம் தட்டுப்படும் தேசம் அது. முழு ஜனநாயகத்துக்கு முற்றிலும் வாய்ப்பில்லை அங்கே.
எல்லையில் இருந்துகொண்டு காவல் காக்க வேண்டிய ராணுவம் திடுதிப்பெனதலை நகரத்துக்குள் நுழைந்து ஆட்சி செய்யத் தொடங் கிவிடும். மிலிட்டரி உடையில் மிடுக்காக வந்த ராணுவத் தளபதி கோட்-சூட் போட்டுக்கொண்டு ஆட்சியாளர் அவதாரம் எடுத்துவிடுவார். அரசியல் தலைவர்களும் உண்டு. பெரும்பாலும் வெளிநாடுகளிலும் அவ்வப்போது தாய் தேசத்திலும் தென்படுவார்கள்.
இத்தனை பேர் இருந்தாலும் அண்டை நாடுகளுடனான உறவு விஷயத்தைத் தீர்மானிக்கும் சக்தி, ஐ.எஸ்.ஐ-க்கு மட்டுமே உண்டு. பாகிஸ்தானின் உளவு நிறுவனமான 'இண்டர் சர்வீஸஸ் இண்டலிஜென்ஸ்' என்பதன் சுருக்கம் ஐ.எஸ்.ஐ. சுதந்திரத்துக்குப் பின் இந்தியாவுடன் நடந்த யுத்த தோல்விக்குப் பிறகு 1948-ல் உருவான அமைப்பு இது.
ஐ.எஸ்.ஐ-யின் செயல்திட்டங்கள் அனைத்துமே திட்டவட்டமானவை. அக்கம்பக்கத்து நாடுகளுடன் உறவை ஏற்படுத்துவது, அவர்களுடைய அசைவுகள் ஒவ்வொன்றையும் உன்னிப்பாக கவனிப்பது. ஆட்சியாளர்களை 'அலர்ட்' செய்வது அல்லது ஆலோசனைகள் சொல்வது. ஆனால், செய்வது?
இந்தியாவின் எல்லை தேசங்களில் கூலிப்படையினர் மூலம் குழப்பங்களை ஏற்படுத்துவது, பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆயுதம் தொடங்கி ஆயுதப்பயிற்சி வரை வழங்குவது, இந்தியாவுடனான யுத்தங்களுக்கு 'ப்ளூப்ரின்ட்' போட்டுக்கொடுப்பது... உட்பட இன்னும் இன்னும் நிறைய வேலைகள். அங்கே அவர்கள் வைத்ததுதான் சட்டம். அவர்கள் வகுப்பதுதான் வியூகம். முக்கியமாக, பாகிஸ்தான் என்ற தேசம் ராணுவரீதியாக எந்தப் பாதையில் செல்லவேண்டும் என்பதை நிர்ணயிக்கும் சக்தி, ஐ.எஸ்.ஐ-க்கு மட்டும்தான் உண்டு. இதற்குப் பொருத் தமான உதாரணம் 1965-ல் நடைபெற்ற யுத்தம்.
அயூப்கான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருந்த நேரம் அது. இவரைத் தெரிகிறது அல்லவா? 'கைய்டட் டெமாக்ரஸி' என்ற பதத்தை அறிமுகம் செய்தவர். நடப்பது சர்வாதிகார ஆட்சிதான். சந்தேகமில்லை. ஆனால், சீரிய வழிகாட்டுதலுடன் நடத்தப்படும் ஜனநாயகம். உலகத்தையே வியக்க வைத்த விளக்கம் அது. மனிதர் என்னதான் தேர்தலில் ஜெயித்திருந்தாலும் மக்கள் மத்தியில் தன்னுடைய 'இமேஜ்' எப்படி இருக்கிறது என்ற கவலை வாட்டிக் கொண்டிருந்தது.
பாகிஸ்தான் அரசியலில் ஒருவருக்கு இமேஜ் உயர வேண்டும் என்றால், இலவச அரிசியும் வேட்டி சேலையும் கொடுத்தால் வேலைக்கு ஆகாது. காஷ்மீர். இதுதான் அந்த மக்களுக்கு சர்வரோக நிவாரணி. காஷ்மீரை கைப்பற்றுவோம் என்று சொல்லி, ராணுவத்தை எல்லை நோக்கித் திருப்பினாலே அப்போதைய ஆட்சியாளர் மக்களின் அபிமான ஹீரோவாகிவிடுவார்.
அந்த யோசனையைத்தான் அயூப்கானுக்குக் கொடுத்திருந்தது ஐ.எஸ்.ஐ. மொத்தம் இரண்டு காரியங்களைச் செய்யவேண்டும், ஒன்றன்பின் ஒன்றாக. இந்தியாவின் எல்லைகளில் முக்கியமானது குஜராத்-கட்ச் வளைகுடாப் பகுதி. குழப்பங்களும் குளறுபடிகளும் நிறைந்த பகுதி. அதுதான் நமது முதல் இலக்கு.
போராளி இயக்கத்தினர் கொஞ்சம் பேரை கட்ச் வளைகுடாப் பகுதிகளுக்கு அனுப்பவேண்டும். அவர்கள் செய்யவேண்டியது ஒன்றுதான். உள்ளூர் பகுதியில் சின்னதும் பெரியதுமான கலவரங்களை ஏற்படுத்தவேண்டும். கலவரம் விஸ்வரூபம் எடுக்கும்போது இந்திய அரசின் கவனம் கட்ச் பக்கம் குவியும். இந்தச் சமயத்தில் மேலும் சில போராளிகளை சுதந்திர காஷ்மீர் (இந்தியர்கள் மொழியில் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர்) வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவச் செய்ய வேண்டும்.
குறுக்கே கேள்வி எதுவும் கேட்காமல் அமைதி யாக அமர்ந்திருந்தார் அயூப்கான். ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் பேசிக்கொண்டே இருந்தனர். ஊடுரு விய போராளிகள் காஷ்மீர் மக்கள் மத்தியில் லேசான சலசலப்புகளை ஏற்படுத்துவார்கள்கவனம். அத்தனையும் காவல்துறையின் கண்களுக்கு எதிரே- - ராணுவத்தின் பார்வைக்குப் படும் விதமாக. நோக்கம் ஒன்றுதான். போராளிகள் மீது அடக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். அதை சாக்காக வைத்து ராணுவம் உள்ளே நுழைய வேண்டும். அவ்வளவுதான். யுத்தம் தொடங்கிவிடும்.
சொல்லி முடித்தனர் ஐ.எஸ்.ஐ. அதிகாரி கள். மௌனத்தைக் கலைத்த அயூப்கான் முதல் சந்தேகத்தைக் கேட்டார். 'காஷ்மீர் மக்கள் நமக்கு ஆதரவு கொடுப்பார்களா?' 'நிச்சயமாக!' சட்டென்று பதில் வந்தது ஐ.எஸ்.ஐ. தரப்பிடம் இருந்து. கிடைக்கும். அதற்காகவே போராளிகளை முன்கூட்டியே அனுப்புகிறோம். அங்குள்ள மக்களோடு நெருங்கிவிடுவார்கள் நம்மவர்கள். அதேசமயம் குழப்பத்தையும் ஏற்படுத்திக் கொண்டி ருப்பார்கள், ஓசைப்படாமல்.
குழப்பத்தைக் கண்டு ஆத்திரப்படும்ராணுவம் அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டால், அது நமக்குச் சாதகமாகவே இருக்கும். வேண்டு மென்றே இந்திய ராணுவம் நம்மைத் தாக்குகிறது என்றுதான் காஷ்மீர் மக்கள் நினைப்பார்கள். நம்முடைய போராளிகளின் ரகசிய நடவடிக்கைகள் அவர்களுக்குத் தெரியாது. ஆகவே பிரச்னை இல்லை. வெற்றி நிச்சயம்.
உற்சாகம் பொங்கியது அயூப்கானுக்கு. தலைய சைத்து விட்டார். களத்தில் இறங்கியது ஐ.எஸ்ஐ. முதலில் கட்ச் வளைகுடாவுக்குப் போராளிகள் அனுப்பப்பட்டனர். இட்ட பணியை இடையூறு இல்லாமல் செய்து முடித்தனர் போராளிகள். வந்து விட்டது கலவரம். ராணுவம் கட்ச் பகுதிப் பக்கம் பார்வையைத் திருப்பும் சமயம், ஆஸாத் காஷ்மீர் போராளிகளை காஷ்மீருக்குள் அனுப்பியது ஐ.எஸ்.ஐ. மண்புழுவிடம் பாடம் கற்றவர்களைப் போல ஊர்ந்தே இந்தியப் பகுதிக்குள் ஊடுருவினர் முஜாஹி தீன்கள்.
சில காலம் அமைதியாக நோட்டம் விட்டவர்கள், நிதானமாக கலவரத்துக்கு நெருப்பு மூட்டத் தொடங்கி னர். மெள்ள மெள்ள கலவரம் சூடுபிடித்தது. அதிர்ச்சியடைந்த காவல் துறை கலவரக்காரர்கள் மீது தாக்குதல் தொடுத்தது. கைது நடவடிக்கைகள் அவசரகதியில் நடந்தன. எல்லையோரத்தில் தேவுடு காத்துக் கொண்டிருந்த மேலும் சில ஆஸாத் காஷ்மீர் போராளிகள் இந்திய எல்லைக் குள் நுழைந்தனர். 'காஷ்மீர் புரட்சிப்படை' என்ற பெயரோடு. கலவரம் பரிணாம வளர்ச்சி பெற்றது.
ஸ்ரீநகரில் இருக்கும் விமானநிலையம், வானொலி நிலையம் இரண்டையும் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியது இந்த புரட்சிப்படை. எண்ணிக்கை மிகுதியாக இருந்ததால் இரண்டுமே அவர்கள் வசம் வந்தது. புரிந்துபோனது இந்திய ராணுவத்துக்கு. வந்திருப்பவர்கள் வெறும் போராளிகள் அல்ல. ராணுவம். பாகிஸ்தானின் ராணுவம். லேசாகத் தட்டுவது எல்லாம் சரிப்படாது. முதுகெலும்பில் தாக்கவேண்டும். முடிவெடுத்தது ராணுவம். வீரர்களைத் திரட்டத் தொடங்கியது. அதற்கு முன்னால் பாகிஸ்தானின் படையில் போராளிகள், ராணுவ வீரர்கள் எல்லாமாகச் சேர்ந்து சுமார் முப்பதாயிரம் பேர் இருப்பார்கள் என்பது இந்திய ராணுவத்தின் கணிப்பு.
இந்திய சுதந்தர தினத்தன்று யுத்தம் தொடங்கியது. இந்திய வீரர்களின் முதல் இலக்கு கைவிட்டுப்போன விமான நிலையம் மற்றும் வானொலி நிலையத்தை மீட்டெடுப்பது. அதிரடியாகச் செயல்பட்டதால் விரைவில் அது இந்திய ராணுவத்தின் கரங்களில் விழுந்தது. அதேசமயம், பாகிஸ்தான் ராணுவம், திக்வால், உரி, பூஞ்ச் ஆகிய பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. ஆனால், ஹஜிபிர் கணவாய் பகுதியை இந்திய ராணுவம் கைப்பற்றியது.
செப்டம்பர் முதல் வாரத்தில் ஜம்முவின் அக்னூர் பகுதியைக் கைப்பற்றும் நோக்கத்துடன் உக்கிரத்துடன் போரிட்டது பாகிஸ்தான் ராணுவம். இதற்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் வான்படையைப் பயன்படுத்தியது. பதிலுக்கு பாகிஸ்தான் வான்படையை முன்னிறுத்தியது. எனினும், அக்னூரைப் பாகிஸ்தானால் கைப்பற்ற முடியவில்லை. தோல்வி... சோர்ந்து போனது பாகிஸ்தான் ராணுவம்!
செப்டம்பர் ஆறு. இந்திய ராணுவம் எல்லை தாண்டியது. மேஜர் ஜெனரல் பிரசாத் தலைமையில் இந்திய ராணுவத்தின் பதினைந்தாவது பிரிவு தாக்குதலைத் தொடங்கியது. அடுத்த மூன்றாவது நாள் முதல் பிரிவு தாக்குதலில் இறங்கியது. இரு தரப்பிலும் பீரங்கிகள் பயன்படுத்தப் பட்டன. விளைவு, இரு தரப்புக்கும் பலமானசேதம் ஏற்பட்டது. பீரங்கிகுண்டுகள் இரு தரப்பு வீரர்களின் உடல்களிலும் ஊடுருவி உயிரைக் குடித்தன.
இந்தியத் தரப்பில் மூவாயிரம் பேர் பலியாகி யிருந்தனர். கூடுதலாக எண்ணூறு பேரை இழந்திருந்தது பாகிஸ்தான் ராணுவம். ஆக்கிரமிப்பும் நடந்திருந்தது. சுமார் ஆயிரத்து எண்ணூற்றுநாற்பது சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு இந்திய ராணு வத்தின் கட்டுப்பாட்டில் வந்திருந்தது. ஆனால், வெறும் ஐநூற்றுநாற்பத்தைந்து சதுரகிலோமீட்டர் நிலப்பரப்பு மட்டும் பாகிஸ்தான் ராணுவத்தால் கைப்பற்றப்பட்டிருந்தது.
செப்டம்பர் 22. சர்வதேச சமாதானப் புறாக்களின் வேண்டுகோளை அடுத்து யுத்தம் முடிவுக்கு வந்தது. அடுத்தது என்ன? அமைதிப் பேச்சுவார்த்தை. பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் அதிபர் அயூப்கானும் தாஷ்கண்ட் பிரகடனத்தில் கையெழுத்திட்டனர். இமேஜை உயர்த்தவேண்டும் என்ற நோக்கத்துடன் யுத்தத்துக்குத் தலையசைத்த அயூப்கானின் இமேஜ் அதலபாதாளத்துக்குப் போயிருந்தது. காஷ்மீரைக் காட்டி மக்களின் ஆதரவை வளைக்கலாம் என்று நினைத்த உத்தி, படுதோல்வி அடைந்தது. ஆனாலும், அதே உத்தியைத் துணிச்சலுடன் பயன்படுத்தினார் யாஹியாகான் 1971-ல்.
என்ன நடந்தது?
No comments:
Post a Comment