Thursday 19 February, 2009

பாகிஸ்தான் பற்றிய தொடர் (7)

*********************
25 January
*********************


இணைப்பு என்றொரு நாடகம்!

வெறும் மூன்றே எழுத்துகளைக் கொண்ட வார்த்தை அது. ஆனால், அதற்கு இருக்கும் சக்தி அபரிமிதமானது. ஒரே நேரத்தில் உலகம் தழுவிய அளவில் இருக்கும் முஸ்லிம்களை வீறுகொண்டு எழ வைத்துவிடும். அந்த நொடியில் அவர்கள் செய்து கொண்டிருக்கும் காரியம் எல்லாவற்றையும் அப்படி அப்படியே நிறுத்திவிட்டு, சிலிர்த்துக்கொண்டு நிற்பார்கள்.

'ஜிகாத்' என்றால், 'புனிதப்போர்' என்று அர்த்தம். உலகம் முழுக்க விரவிக் கிடக்கும் முஸ்லிம்கள் சுதந்திரமாக சுவாசிக்க வேண்டுமா? இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வேண்டுமா? உலக சமுதாயத்தை நோக்கிக் கோரிக்கை மட்டும் வைப்பதால் எந்தப் பலனுமில்லை. போர். அதுதான் அனைத்தையும் சாத்தியப்படுத்தும். ஆதிக்க சக்திகளுக்கு எதிராகத் தாங்கள் நடத்தும் யுத்தத்துக்கு முஸ்லிம்கள் வைத்த பெயர் ஜிகாத். இந்த ஒற்றை வார்த்தையைப் பயன்படுத்தியே ஆதிவாசிகளான பதான்களை வசியப்படுத்த நினைத்தனர் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள்.

படிப்பு வாசனை இல்லாத மனிதர்கள். சுலபத்தில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். சொல்பேச்சு கேட்பார்கள்; சில சமயங்களில் சொல்லாத பேச்சையும். அவர்களிடம் போய் 'நம்முடைய முஸ்லிம் ரத்தங்களை ஜம்மு காஷ்மீரில் வைத்து இந்தியர்கள் நசுக்குகிறார்கள். கொடுமைப்படுத்துகிறார்கள். நமக்கென்ன என்று இருந்துவிட்டால்... அங்கிருக்கும் அத்தனை முஸ்லிம்களும் புதைக்கப்பட்டு விடுவார்கள்! அவர்களை நாம் காப்பாற்றாவிட்டால் யார் காப்பாற்றுவது?' என்று கேட்டால் போதும், மெள்ள மெள்ள கரையத் தொடங்குவார்கள்.

விபரீதங்கள் ஏதும் நடந்துவிடாமல் தடுப்பது நம்முடைய கடமை என்று சொல்லி அவர்களுடைய உணர்வுகளை மேலும் கொஞ்சம் கிளப்பிவிட்டால் போதும்... துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு கிளம்பி விடுவார்கள். எத்தனை சீக்கிரம் அவர்கள் சம்மதம் தெரிவிக்கிறார்கள் என்பது, பேச்சுவார்த்தையில் உணர்ச்சிகளை உசுப்பேற்றும் வகையில் எப்படிப் பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் இருக்கிறது.

போதாக்குறைக்கு அங்கே ஸ்ரீநகர் என்ற செழுமை நிறைந்த நகரம் இருக்கிறது. சீமான்களும் சீமாட்டிகளும் நிரம்பி வழியும் நகரம் அது. 'அங்கு இருக்கும் அனைத்து சொத்துகளும் உங்களுக்கே. புனிதப்போரில் உங்களை ஈடுபடுத்தியதற்கான பரிசு அது. வேண்டியதை எடுத்துக் கொள்ளலாம். வேண்டாததைக்கூட எடுத்துக் கொள்ளலாம்!' என்று சொல்லிவிட்டால் போதும். கூடுதல் உற்சாகத்துடன் கிளம்பி விடுவார்கள். பிரதமர் லியாகத் அலிகானுக்கு மெள்ள மெள்ள வியூகம் பிடிபடத் தொடங்கியது.

பதான் ஆதிவாசிகள் முரட்டு மனிதர்கள். அவர்களிடம் சென்று யார் விஷயத்தைச்சொல்வது? எல்லோருடைய ஆள்காட்டி விரலும் மேஜர்குர்ஷித் அன்வரையே சுட்டிக்காட்டின. ஆதிவாசி மனிதர்களிடம் பேசுவது தொடங்கி மூளைச்சலவை செய்வது, திட்டத்தைப் புரியும் வகையில் விளக்குவது, யுத்தத்துக்குத் தயார் செய்வது எல்லாமே மேஜர் குர்ஷித் அன்வருடைய பொறுப்பு என்று முடிவானது. முக்கியமாக திட்டத்துக்கான பெயரும் அறிவிக்கப்பட்டது. ஆபரேஷன் குல்மார்க். [Operation Gulmarg]
பதான்களுக்குத் தேவையான ஆயுதங்களைக் கொடுத்து, முக்கியமாக, தேவையான ஊக்கங்களைக் கொடுத்து அவர்களை பத்திரமாகக் கொண்டுவந்து காஷ்மீர் எல்லையில் களமிறக்கிவிட வேண்டும். அங்கே ஆயுதங்கள் உள்ளிட்ட இன்ன பிற சமாசாரங்களும் தயார் நிலையில் இருக்கும். எல்லா வற்றையும் எடுத்துக்கொண்டு ஊர்ந்து நகர்ந்து, காஷ்மீர் பிராந்தியத்துக்குள் நுழைந்து விடுவார்கள் பதான்கள்.

அங்கே மன்னர் ஹரி சிங்கின் எல்லைக்காவல் படை வீரர்கள், குளிர் தாங்காமல் விறைத்துக் கொண்டு நிற்பார்கள். எண்ணிக்கை சொற்பம். தவிரவும், யுத்தத்தை எதிர்பாராதவர்கள். யுத்தத்தின் வாசனையைக்கூட அவர்கள் நேரடியாக நுகர்ந்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆகவே, பதான்களின் திடீர் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பஞ்சு பஞ்சாகப் பறந்துவிடுவார்கள்.

முதலில் முஸாஃபராபாத். அடுத்து டோனல். பிறகு யூரி, பாரமுல்லா. முடிந்ததும் ஸ்ரீநகர். இறுதியாக ஒட்டுமொத்த காஷ்மீர். திட்டம் இதுதான். பார்த்துப் பார்த்துப் பக்குவம் குறையாமல் போடப்பட்ட திட்டம்.
பதான்களின் முதல் பிரிவு காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்த தினம், அக்டோபர் 22, 1947. எதிர்ப்பட்ட ஹரி சிங்கின் படையினரை மின்னல் வேகத்தில் நெட்டித் தள்ளிவிட்டு முஸாஃபராபாத்துக்குள் நுழைந்து விட்டனர் பதான்கள். அடிக்க வேண்டும். கண்ணில் தென்படுபவர்களை எல்லாம் சுட்டுத்தள்ள வேண்டும். பாகிஸ்தான் அதிகாரிகள் சொன்ன வார்த்தைகள் எல்லாம் பதான்களின் காதுகளில் மந்திரம் போல ஒலித்துக் கொண்டிருந்தன.

மனிதர்களை எல்லாம் அடித்து உதைத்தார்கள். அவ்வப்போது தென்படும் பெண்களையும் இழுத்து வைத்து நாசம் செய்தார்கள். கண்ணில் தட்டுப்பட்ட கடைகளையும் வீடுகளையும் தகர்த்து, அங்கிருந்த பொருள்களையும் கொள்ளையடித்தார்கள். அவர் களுக்குத் தரப்பட்டிருந்த வாக்குறுதிகளுள் ஒன்று, ஸ்ரீநகரில் இருக்கும் சொத்துகளை எல்லாம் எடுத்துக் கொள்ளலாம் என்பது. அதை நிறைவேற்றும் காரியத்தை முஸாஃபராபாத்தில் இருந்தே தொடங்கி விட்டனர்.

எங்கு பார்த்தாலும் கலவரம். பதற்றம். மரண ஓலம். அவை எதுவும் மன்னர் ஹரி சிங்கின் காதுகளுக்குக் கேட்கவே இல்லை. ஆனால், விஷயம் இந்தியாவின் செவிகளுக்குள் நுழைந்துவிட்டது. இந்தியக் காது என்றால் கவர்னர் ஜெனரல் மௌன்ட் பேட்டன் காதுக்கு. அவருடைய அணுக்க நண்பர்கள் சிலர் ஜம்மு காஷ்மீர் பகுதியில் தங்கியிருந்தனர். விஷயம் லேசுபாசாக அவர்களுடைய கவனத்துக்குச் செல்ல, வந்த விஷயத்தைச் சிதறாமல் மௌன்ட் பேட்ட னுக்கு அனுப்பி வைத்தனர்.

மௌன்ட் பேட்டன் மூலமாக பிரதமர் நேருவுக்குச் சென்றது. இறுதியாக மன்னர் ஹரி சிங்குக்கு. வத்திப்பெட்டி சைஸ் ராணுவத்தை வைத்துக்கொண்டு முரட்டு ஆதிவாசிகளை எதிர்கொள்வது சிரமம். ஒருவேளை சமாளித்தாலும் அவர்களுக்கு உதவியாக பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீருக்குள் நுழையாது என்று சொல்வதற்கில்லை. வந்தால் திண்டாட்டம்தான். பேசாமல் இந்தியாவின் கால்களில் விழுந்துவிட வேண்டியதுதான். முடிவு செய்து விட்டார் மன்னர் ஹரி சிங்.
'ராணுவத்தை அனுப்பி எங்களுக்கு உயிர்ப் பிச்சை கொடுங்கள்...'
இதைத்தான் இந்தியாவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. மன்னரே வலியவந்து கேட்டு விட்டார் என்பதற்காக அவசரப்பட்டு ராணுவத்தை அனுப்புவதில் நேருவுக்கு உடன்பாடில்லை. ஒருவேளை அனுப்பினால் அதையே சாக்காக வைத்துக்கொண்டு பாகிஸ்தானும் ராணுவத்தை அனுப்பலாம். தேவையில்லாமல் பிரச்னையைப் பெரிதாக்க வேண்டாம். 'சத்தமில்லாமல் செயல்படுவோம். நாசூக்காகக் கையாள்வோம்' என்றார் மௌன்ட் பேட்டன்.

'முதலில் காஷ்மீரை இந்தியாவுடன் தற்காலிகமாக இணைத்து விடுங்கள். பிறகு, மற்ற விஷயங்களை வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என்று மன்னர் ஹரி சிங்கிடம் சொல்வோம். ஒப்பந்தம் கையெழுத்தாகும். அதன் பிறகு,இந்திய ராணுவத்தைக் காஷ்மீருக்குள் அனுப்பி பாகிஸ் தானின் அடிப்பொடிகளை அடித்து விரட்டலாம். விரட்டி விரட்டி அடிக்கலாம்.'
திட்டம் தயாரானது. உற்சாகம் கொப்பளித்தது மௌன்ட் பேட்டனின் முகத்தில். நேருவுக்கும் அப்படியே.

நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்த்து வர உயரதிகாரி வி.பி.மேனன், ராணுவத் தளபதி சாம் மானெக்ஷா உள்ளிட்ட உயர்மட்டக்குழு காஷ்மீர் புறப்பட்டது. மன்னர் ஹரி சிங் வெலவெலத்துப் போயிருக்கிறார் என்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே எல்லோராலும் புரிந்து கொள்ள முடிந்தது. இணைப்பு தொடர்பாக சில நிமிடங்கள் பேசினர். பிறகு, நிலைமை சிக்கலாக இருப்பதால் உடனடியாக ஜம்முவுக்கு இடம் பெயர்ந்து விடுமாறு வி.பி.மேனன் கொடுத்த ஆலோசனையின்படி மன்னர் ஹரிசிங் ஜம்முவுக்குப் புறப்பட்டார்.

இத்தனை விஷயங்களும் அந்தரங்கமாக நடந்துகொண்டிருக்க, பாரமுல்லா பூலோகப் பரலோகமாக மாறிக் கொண்டிருந்தது. பதான் கள் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தனர். அவர் களுடைய முரட்டுத் தனமான தாக்குதல்களுக்கு அங்கிருந்த கிறிஸ்துவ தேவாலயம் ஒன்று மோசமான முறையில் இரையாகியது.

தேவாலயம் என்றால், தேவாலயம் இருக்கும் இடம். உள்ளே இருந்த கன்னியா ஸ்திரீகள். அவர்களுடைய கற்பு, எல்லாமே! இதற்கிடையே, மன்னரிடம் பேசிவிட்டு டெல்லி வந்திறங்கிய வி.பி.மேனன், பிரதமர் நேரு மற்றும் மௌன்ட் பேட்டன் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். பிறகு, ஜம்மு சென்று மன்னர் ஹரி சிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது இரண்டு முக்கிய விஷயங்கள் பேசப்பட்டன. ஒன்று, காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான மனப்பூர்வமான சம்மதத்தைத் தெரிவித்தார் மன்னர் ஹரிசிங். அடுத்து, காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளுங்கள் என்று கவர்னர் ஜெனரல் மௌன்ட் பேட்டனுக்கு எழுதிய கடிதத்தை வி.பி.மேனனிடம் ஒப்படைத்தார்.

கடிதத்தை வாங்கிக்கொண்டு டெல்லி புறப்பட் டார் வி.பி.மேனன். கடிதத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டாரே ஒழிய, மன்னருக்கு நம்பிக்கைக் கீற்று எதுவும் தென்படவில்லை. எதிர்காலம் சூனியமாகிவிட்டதோ என்ற பதற்றம் அவரை ஆக்கிரமித்திருந்தது. உடனே, தன்னுடைய திவானை அழைத்த ஹரிசிங், 'இன்னும் சில மணி நேரங்களில் வி.பி.மேனன் வருவார். அப்போது அவர் வசம் காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தால், என்னை வந்து எழுப்புங்கள். இல்லாவிட்டால்... என்னைச் சுட்டுக் கொன்றுவிடுங்கள்!' -விருட்டென அறைக்குள் சென்றுவிட்டார் ஹரி சிங்.

கடிதத்துடன் டெல்லி சென்ற வி.பி.மேனன் அதை மௌன்ட் பேட்டன், நேரு உள்ளிட்ட முக்கியஸ்தர்களிடம் ஒப்படைத்தார். அவ்வளவுதான், மின்னல் வேகத்தில் காரியங்கள் நடந்தன. காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான முறைப்படியான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உடனடியாகப் புறப்பட்டு ஜம்மு சென்ற வி.பி.மேனன், அங்கிருந்த ஹரி சிங்கிடம் கையெழுத்து வாங்கினார். அப்போதுதான் மூச்சே வந்தது போல இருந்தது ஹரி சிங்குக்கு. இது நடந்தது அக்டோபர் 26, 1947 அன்று.

நினைத்தது எல்லாம் நடந்தபடியால் நேரு உற்சாகத்தின் உச்சத்துக்குச் சென்றுவிட்டார். உடனடியாக இந்திய ராணுவத்தை ஸ்ரீநகர் நோக்கி அணிவகுக்குமாறு உத்தரவிட்டார். இதன்அர்த்தம், இந்தியா... தன்னுடைய பிரதேசங் களுக்குள் ஒன்றான காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைந்திருக்கும் பாகிஸ்தான் ஆதரவுப் படையினருக்கு எதிராக யுத்தத்தை நடத்தும். பேருந்துகள், லாரிகள், ரயில், விமானம் இன்னது என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லாவற்றிலும் ராணுவ வீரர்கள் ஏற்றப்பட்டனர். எல்லா வாகனங்களும் காஷ்மீரின் முக்கியப் பகுதிகளை நோக்கி விரைந்தன.
விஷயம் முகமது அலி ஜின்னாவை வெறுப்பின் உச்சக்கட்டத்துக்குக் கொண்டுசென்றது. இத்தனை வேகமாகவும் நுணுக்கமாகவும் தந்திரமாகவும் காஷ்மீர் விஷயத்தை இந்தியா கையாளும் என்று அவர் துளியும் எதிர்பார்க்கவில்லை. அதிகாரப்பூர்வமாக யுத்தத்தில் குதித்துவிட்ட இந்தியாவுக்கு எப்படி பதிலடி கொடுப்பது என்று சிந்திக்கத் தொடங்கியது ஜின்னாவின் மூளை.

No comments: