Thursday, 19 February 2009

பாகிஸ்தான் பற்றிய தொடர் (1)

இந்திய எதிர்ப்பு என்பதையே தனது ஒற்றைக்குறிக்கோளாக இன்றுவரை கொண்டுவந்துள்ள பாகிஸ்தான் குறித்து,
2009 ஜனவரி முதல் ஜூனியர் விகடனில் வெளிவரும் கட்டுரைத் தொடர் இது.
********************************************
04-01-09
*******************************************
'ஓடி விளையாடு பாப்பா' என்று நம் குழந்தை களுக்கு சொல்லிக் கொடுக்கிறோம். ஆனால், பாகிஸ்தானிலோ, 'சீண்டி விளையாடு பாப்பா' என்றுதான் சொல்லிக் கொடுப்பார்கள் போல! அங்கு பொதிந்திருப்பது அப்படியரு வன்மம்! ஒரு முறை... இரு முறை... அல்ல, சுதந்தரம் வாங்கியது தொடங்கி நேற்று வரை இந்தியாவைப் பலமுறை சீண்டியிருக்கிறது பாகிஸ்தான். ஒன்று, சந்தர்ப்பம் ஏற்படும்போது; அல்லது வலுவில் சந்தர்ப்பத்தை உருவாக்கிக்கொண்டு.

'இனியும் நாம் இணைந்திருப்பது சாத்தியமில்லை. நீங்கள் தனி ஆவர்த்தனம் செய்துகொள்ளுங்கள்' என்று சொல்லி தனி தேசத்தையும் பிரித்துக் கொடுத்து, ஆகவேண்டிய செலவுகளுக்கு எழுபத்தைந்து கோடி ரூபாய் (சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பாக) பணத்தையும் கொடுத்தது இந்தியா. முகம் முழுக்கப் புன்னகையுடன் வாங்கிக்கொண்டது பாகிஸ்தான்.

கனத்துப் போயிருந்த இந்தியாவின் இதயம் சகஜநிலையை எட்டுவதற்குள் காஷ்மீரைக் குறிவைத்து முதல் யுத்தத்தைத் தொடுத்தது பாகிஸ்தான். கிட்டத் தட்ட முதுகில் குத்தியதற்கு சமம். குத்தியது நம் பங் காளிதானே என்று தட்டிவிட்டுக்கொண்டு போக முடியவில்லை. ரணம் அத்தனை மோசமானது விளைவு, வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுத்தது இந்தியா.

அதோடு 'பாக்.' பெட்டிப்பாம்பாக அடங்கிவிடும் என்றுதான் நினைத்தது இந்தியா. ஆனால், தான் தனிப்பிறவி எடுத்ததே இந்தியாவை வம்பிழுக்கத்தான் என்பதுபோல் வாலாட்டல் தொடர்கிறது. பதிலுக்கு பற்பல மூக்குடைப்புகளையும் பரிசாகப் பெற்றுள்ளது பாகிஸ்தான்.

வாலாட்டுவது என்றால் எப்படி? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகக் கூலிப்படைகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்வார்கள்... முக்கியமாக, காஷ்மீர் பகுதிக்குள். 'ஆயுதம் வைத்துக்கொள்ளுங்கள். பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ஒன்றுதான். காஷ்மீரில் கலவரம் ஏற்படவேண்டும். பிட் நோட்டீஸ்அடிப்பீர் களோ... பீதியைக் கிளப்புவீர்களோ... தெரியாது. தேவை கலவரம். மற்றதை, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.'

கலவரம் ஏற்பட்டு அதை அடக்க இந்தியக் காவல் துறையோ ராணுவமோ களமிறங்கும் வரை காத்திருப்பார்கள் பாகிஸ்தான் ராணுவவீரர்கள். அவர்கள் வந்ததும், 'அய்யகோ, எங்கள் சகோதரர்களை அநியாயமாகக் கொன்று குவிக்கிறார்களே, இந்திய அதிகாரிகள்!' என்று ஓலமிட்டபடியே இந்தியாவுக்குள் ஊடுருவி யுத்தத்தில் ஈடுபடத் தொடங்கிவிடுவார்கள்.
கலவரமா, யுத்தமா என்று அடையாளம் காண்பதற்கே சில மாதங்கள் பிடித்துவிடும். பிறகு, இந்திய வீரர்களால் பாகிஸ்தான் ராணுவத்தினரும் கூலிப்படையினரும் ஓட ஓட விரட்டப்படுவார்கள். ஆயிற்று அறுபத்து சொச்ச ஆண்டுகள். இன்னமும் பாகிஸ்தானின் சீண்டல்கள் நின்றபாடில்லை. சமீபத்திய உதாரணம், மும்பை தாக்குதல்.

நூற்றியெழுபதுக்கும் மேற்பட்ட உயிர்பலிகள். பலத்த காயங்களுடன் எஞ்சியிருப்பவர்களின் எண்ணிக்கை முந்நூறு இருக்கும். தன்னுடைய ஆன்மா மீது விழுந்த மிகப்பெரிய அடியாகத்தான் மும்பை தாக்குதலைப் பார்க்கிறது இந்தியா. 'இந்தியா' என்றால் இந்திய அரசு; இந்திய ராணுவம்; இந்திய மக்கள் எல்லோரும்தான். தாக்குதல் ஏற்படுத்திய அதிர்வில் இருந்து இந்திய மக்கள் மீண்டுவருவதற்கு இன்னும் சில மாதங்கள் பிடிக்கும்.

நிற்க. மும்பை தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாதிகள் கருவாகி உருவாகி வளர்ந்தது பாகிஸ் தானில். ஆயுதம் உள்ளிட்ட அத்தனை விதமான பயிற்சி களும் தரப்பட்டது பாகிஸ்தானில். வரைபடத்தை வசதியாகப் பிரித்துவைத்துக்கொண்டு தாக்குதலுக்குத் திட்டம் போட்டது பாகிஸ்தானில். எல்லாவற்றுக்கும் ஆதாரம் இருக்கிறது.

முக்கியமாகப் பிடிபட்ட ஒரே தீவிரவாதியான அஜ்மல் கசாப்பின் வாக்குமூலம். 'பாகிஸ்தான் பிரஜை யான எனக்கு சட்ட உதவி வேண்டும்' என்று கண்ணீர்க் கடிதம் வேறு கசாப்பிடம் இருந்து பாகிஸ்தான் அரசுக்குச் சென்றுள்ளது. ஆனாலும், 'எங்களுக்கும் மும்பை தாக்குதலுக்கும் தூரத்து சம்பந்தம்கூட இல்லை' என்கிறது பாகிஸ்தான். அது பிடிக்கும் முயலுக்கு மூன்று கால்கள்தான் பிரிவினைக்கு முன்பிருந்தே!

சரி, உங்களுக்கும் தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை என்றால், எதற்காக இந்திய எல்லைப்பக்கம் நோக்கி உங்கள் ராணுவம் நகரத் தொடங்கியிருக்கிறது என்று கேள்வி கேட்டது இந்தியா. கேள்விக்கு அழுத்தம் கொடுத்தது அமெரிக்கா. இன்னமும் தன்னுடைய திருவாய் மலர்ந்து எதையும் சொல்லவில்லை பாகிஸ்தான் தலைமை. ஆக, புகைமூட்டம், உருவாகியிருக்கிறது. அதற்கான நெருப்பு Made in Pakistan .

இருக்கட்டும். தாக்குதலை நிகழ்த்திய பாகிஸ்தானே நான்கைந்து அடிகள் முன்னேறி வந்தபிறகு, அடிபட்ட இந்தியா ஒரு அடியைக்கூட எடுத்துவைக்காமல் இருக்குமா? அதெப்படி! காலம் இந்தியாவுக்குப் பல நல்ல அனுபவங்களைக் கொடுத்திருக்கிறது. அதன்படி இந்தியாவும் காஷ்மீர் எல்லைப்பக்கம் தன்னுடைய படைகளை நகர்த்தி வருவதாகச் செய்திகள் காற்றில் கசியத் தொடங்கியிருக்கின்றன.

ஒருவேளை இந்தியா படைகளைக் குவிக்கவில்லை என்றாலும்கூட எல்லைப் பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்திருப்பதை மறுப்பதற்கில்லை. இடி இடிக்கத் தொடங்கியிருக்கிறது. மழை சாத்தியமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

ஒருவேளை போர் தொடங்குகிறது... ஒரு பேச்சுக்குத் தான்... தொடங்குகிறது என்று வைத்துக் கொள்வோமே. பாகிஸ்தான் தரப்பில் இருந்து போரை இயக்கும் பொறுப்பு யார் வசம் இருக்கிறது? தலைமை பீடத்தில் இருக்கும் ஜனாதிபதி சர்தாரி, பிரதமர் கிலானி. ராணுவத் தளபதி பர்வேஸ் கயானி. முக்கியமாக, ஐ.எஸ்.ஐ.

ஜனாதிபதி ஆஸிப் அலி சர்தாரி. ஒரு வருடத்துக்கு முன்பு கொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவி பெனாசிர் புட்டோவின் கணவர். இதுதான்... இந்த ஒற்றைக் காரணம்தான் தற்போது சர்தாரி ஜனாதிபதி பதவியில் இருப்பதற்கு அடிப்படை! மற்றபடி, அவருடைய பர்ஸனல் புரொஃபைலை மூக்கைப் பிடித்துக்கொண்டுதான் படிக்கவேண்டியிருக்கும்.
பிரதமரின் கணவர் என்ற ஹெல்மட்டை அணிந்து கொண்டு கடந்த காலத்தில் அவர் ஆடிய கமிஷன் விளையாட்டுகள் சர்வதேச பிரசித்தி பெற்றவை. 'பத்து பர்சன்ட் சர்தாரி' என்றுதான் அவரை அரசியல் வட்டத்தில் சத்தமில்லாமல் அழைப்பார்கள். அமெரிக்கா, சுவிட்சர்லாந்து என்று பல நாடுகளுக்கும் அவருடைய கைகள் நீண்டுள்ளன. தவிரவும், தீவிரவாதிகள், கடத்தல்காரர்கள் பலர் சர்தாரியின் அன்புக்குரியவர்கள் என்பது கடந்தகால வரலாறு. அதிகம் படிப்பில்லை. அரசியல் அனுபவம் எதுவும் இல்லை. நிர்வாகம் இனிமேல் பழகினால்தான் உண்டு. உண்மையில் சர்தாரி என்ற பெயருக்கு மக்கள் மத்தியில் இருக்கும் 'இமேஜ்' என்பது பூஜ்ஜியம்.
பிரதமர் யூசுப் ராஸா கிலானி. இவர்அரசியல்தெரிந்த ஆசாமி. ஆனால், பதவிக்கு வந்து வெறும் முக்கால் வருடம்தான் ஆகிறது. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவர் என்ற போதிலும் இவருக்கென்று வலுவான ஆதரவுத் தளம் கட்சி மட்டத்திலும் இல்லை, மக்கள் மத்தியிலும் இல்லை.
யுத்தம் என்று வரும்போது என்னதான்ராணுவ பலம் கொட்டிக்கிடந்தாலும் மக்கள் ஆதரவு என்பது முக்கியம். ஆக, பாகிஸ்தானின் ஜனாதிபதி, பிரதமர் இருவருக்குமே மக்கள் ஆதரவு என்பது கேள்விக்குறியான விஷயம்.
ராணுவத்தில் நிலைமை எப்படி இருக்கிறது?

ராணுவத் தளபதி ஜெனரல் பர்வேஸ் கயானி. பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகியிருக்கிறது. உண்மையில் பர்வேஸ் முஷ்ரப் ஏற்படுத்திய அதிர்வுகளில் இருந்து இன்னமும் பாகிஸ்தான் ராணுவம் முழுமையாக விடுபடவில்லை. அதிர்வுகள் என்றால்..?

பாகிஸ்தான் ராணுவத்தில் உள்ள மொஹாஜிர்களுக்கும் பஞ்சாபிகளுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். முஷ்ரப் காலத்தில் இந்தப் பகையின் பரிணாம வளர்ச்சி தன் அதிகபட்ச உயரத்தைத் தொட்டது. நவாஸ்ஷெரீஃப் பஞ்சாபி. முஷ்ரப் மொஹாஜிர். தீர்ந்தது விஷயம்! கார்கில் யுத்தகாலம் தொடங்கி இந்த இரு தரப்பு ஜவான்களையும் வலுக்கட்டாயமாகச் சேரவிடாமல் பிரித்து வைத்து, அதன் விளைவாக இரு தரப்பினரும் தனித்தனியே தம்முடைய ஆதரவாளர் குழுக்களை உருவாக்க ஆரம்பித்தது, உட்பகை வளர பதவி மோதல்கள் அடித்தளமிட்டது, திட்டமிட்டுச் செய்யப்பட்ட சில அரசியல் பழிவாங்கல்கள் போன்றவற்றால் ராணுவம் முற்றிலுமாக ஒற்றுமை குலைந்திருக்கிறது.

இந்தச் சமநிலைக் குலைவு ராணுவத் தளத்திலிருந்து உளவுத் துறைக்கும் பரவியிருப்பதுதான் இதில் ஹைலைட்.

இன்றைக்குப் பதவியில் இல்லாவிட்டாலும் பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு குறிப்பிட்ட அளவு படைப்பிரிவினை ஆட்டிப்படைக்கும் மறைமுக சக்திமிக்கவராக பர்வேஸ் முஷ்ரப் இருக்கிறார். இது மறுக்க முடியாத உண்மை. உளவுத் துறையிலும் அவரு டைய செல்வாக்கு ஓரளவு இருக்கவே செய்கிறது என்கிறார்கள்.

முஷ்ரபுக்கு மாற்றாக வந்த அதிபர் ஓரளவேனும் மக்கள் செல்வாக்கு அல்லது ராணுவ ஆதரவு கொண் டவராக இருந்திருந்தால் பிரச்னை இராது. மாறாக, ஒரு கமிஷன் ஏஜென்ட்டாக மட்டுமே இதுநாள் வரை அறிமுகமாகியிருந்த ஒருவர், அதிபர் என்று திடீரென்று ஷெர்வானி போட்டுக்கொண்டு வந்து உட்கார்ந் ததில் மக்களுக்குச் சமமாக ராணுவமும் அதிருப்தி அடைந்திருப்பதையே பார்க்கமுடிகிறது.

இந்த நிலையில் எல்லையில் ராணுவக் குவிப்பு என்பது அதிபரின் முடிவாக இருக்கும்பட்சத்தில் பெரிய அளவில் கவலைப்படவேண்டிய அவசியமில்லை. ராணுவம் சர்தாரியைப் பெரிதாக மதிக்காது.

மாறாக ராணுவமும் உளவுத் துறையும் இணைந்து இந்தச் செயலில் முழு ஆர்வமுடன் இறங்கியிருக்குமென்றால் கவனித்தே தீரவேண்டும். அதற்கு சர்தாரியின் ஆதரவு இருக்குமென்றால் விஷயம் தீவிரமானதுதான். ஆனால், இன்றைய சூழலில் பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக ஒரு யுத்த ஏற்பாட்டினைச் செய்ய அமெரிக்கா உள்ளிட்ட பாகிஸ்தானின் அன்னதானப் பிரபுக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.

இந்த இடத்தில் இந்திய-பாகிஸ்தான் யுத்த வரலாற்றின் தொடக்ககால அத்தியாயங்களை மறுவாசிப்புக்கு உட்படுத்தும்போது பாகிஸ் தானுக்குச் சாதகமான பல அம்சங்கள் தென் படுகின்றன.

மொத்தம் நான்கு யுத்தங்கள். சுதந்திரம் அடைந்த சூடு குறைவதற்குள் முதல் யுத்தம். பிறகு, லால் பஹாதூர் சாஸ்திரி காலத்தில் இரண்டவது யுத்தம் (1965). பிறகு பங்களாதேஷ் உருவாக்கத் துக்காக 1971-ல். இறுதியாக கார்கில் (1999). அனைத்து யுத்தங்களின்போதும் பாகிஸ்தானின் தலைமை பீடத்தில் இருந்தவர்கள் அத்தனை பேருமே நிகரற்ற நிர்வாகிகள். ஆளுமை நிறைந்த ஆட்சியாளர்கள். தகுதிமிக்க தளபதிகள்.

மறைந்துபோன தலைவர்கள் பயன்படுத்திய போரியல் உத்திகள், தந்திரங்கள் எதுவும் மதிப்புக் குறைவானவை அல்ல. முதல் யுத்தத்தில் ஆதிவாசிகளைப் பயன்படுத்தியது தொடங்கி கார்கில் போரில் ஆஸாத் காஷ்மீர் போராளிகளை இணைத்துக்கொண்டது வரை அனைத்துமே நுணுக்கமானவை. என்ன ஒன்று... தகுந்த முறையில் அமல்படுத்தத் தவறியது ராணுவம். தோல்வியைத் தவிர்க்கமுடியவில்லை.

மக்கள் மத்தியில் வலுவான செல்வாக்கு இல்லாத தலைவர்கள் ஒரு பக்கம். கட்டுப்பாடுகளுக்கும் ஒழுக்கத்துக்கும் புகழ்பெற்ற பாகிஸ்தான் ராணுவத்தில் தற்போது நிரம்பியிருக்கும் குழப்பங்களும் அதிருப்திகளும் இன்னொரு பக்கம். முதல் குண்டு எந்தப் பக்கத்திலிருந்து வந்து விழப்போகிறது என்று உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பாகிஸ்தானின் ஒரே நம்பிக்கை, முன்னாள் ஆட்சியாளர்களின் போரியல் நுணுக்கங்கள் மட்டும்தான். அந்த நுணுக்கங்கள்..?

No comments: