கடந்தவார திண்ணையில் ”கல்லின்மீது பூவை எறிபவர்கள்” குறித்த நேசக்குமார் கட்டுரை வெளியானது. உடனே பாய்ந்து வந்து குதறிவிட்டுப்போயிருக்கிறது ஒரு பெரிய வானரக்கூட்டம்.
இந்த இணைய முல்லாக்கள் எதிர்வினை என்றபெயரில் எடுதிருக்கும் வாந்திகளுக்கு ஏற்கனவே பலரும் இணையத்தில் எழுதிவிட்டனர்.
சும்மா படித்து சிரித்துவிட்டுப்போகும் விஷயங்கள்...
இந்த வானரங்களுக்கு பதில் எழுதி நேசக்குமார் தனது நேரத்தை வீணாக்காமல் இருப்பது நல்லது. குறந்தபட்சம், நா.ரூ (பேராசிரியர் ?!!... அதுவே பெரிய ஜோக்தான்...!).-வின் தூண்டுதலால் (ஏன்தான் இப்படி குண்டை மடியில் வ்வத்துக்கொண்டு அலைகிறார்களோ ?) தனது சொந்த விபரங்களை எழுதாமல் இருப்பது நலம்.
யார்தான் குண்டு விழுந்து அடிபட நினைப்பார்கள்...
“””””””””””””””””””””””””””””””””””””””
Thursday May 7, 2009
நாகூர் ஹனீஃபா பற்றி அப்துல் கையூம் மற்றும் மலர்மன்னனின் கட்டுரைகள்
நேசகுமார்.
நாகூர் ஹனீஃபா பற்றிய அப்துல் கையூமின் கட்டுரையையும் அக்கட்டுரையை படித்துவிட்டு தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்ட மலர்மன்னன் அவர்களது கட்டுரையையும் படித்தேன். அப்துல் கையூமும் மலர் மன்னனும் மிகவும் சுவையாகவும் தத்தமது நினைவுகளிலிருந்தும் எழுதியிருந்தார்கள்.நானும் எனது சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
அப்துல்கையூமைப் பற்றி முதலில் நான் படித்தது சக-நாகூரியான ஆபீதினின் பதிவு ஒன்றில் என்று நினைக்கின்றேன். பொதுவாக ஆபீதின் முதலான இந்த நாகூரிகள் சூஃபியிஸத்துடன் தொடர்பு கொண்டிருந்ததால் மிதவாதிகளாக இருப்பார்கள் என்ற என் நம்பிக்கை நாகூர் ரூமியின் எழுத்துக்களை, கருத்துக்களை பார்த்து தகர்ந்தது என்றாலும், கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருக்கும் நம்பிக்கைகளையும் தகர்ப்பது போன்று இருக்கின்றன தொடர்ந்து தென்படும் இவர்களின் கருத்துக்கள்.
***
ஹனீஃபாவைப் பற்றி எழுத வந்த கட்டுரையில் அப்துல் ரகுமான் எழுதிய காஃபிர்களை தாக்கும் இந்த வரிகளை அப்துல் கையூம் அவர்கள் குறிப்பிட்டிருக்கத்தான் வேண்டுமா?
//"கல்லின் மீது
பூவை எறிபவர்கள்
இப்போது
பூவின் மீது
கல்லை எறிகிறார்கள்" //
அரபியர் தம்மிடையே வாழ்ந்துவந்த ஒரு நபர் திடீரென்று கடவுள் தன்னிடம் பேசுவதாகவும், தனது சொற்கள் கடவுளின் சொற்கள், தனது நடத்தை கடவுளின் நடத்தை என்று சொல்லி தனக்கு கீழ்ப்படிந்து தன்னிடம் ஆளும் உரிமையையும், நீதி வழங்கும் உரிமையையும், நிதி வசூல் செய்யும் உரிமையையும் ஒப்படைக்குமாறு கோர, அப்படி யார் கேட்டாலும் எதிர்க்கக் கூடிய மக்கள் அதை ஏற்க மறுக்க பின்பு முஹமது அவர்கள் மீது தாக்குதல் தொடுத்து அவர்களை தமக்கு கீழ்ப்படிய வைத்த கதையை இப்படி இந்துக்களை விவரிக்கும் வரிகளாக (கல்லின் மீது பூவை எறிபவர்கள்) புரட்டிய புண்ணியம் அப்துல் ரகுமானுக்கு சேரும் என்றால், அந்த மதக்காழ்ப்பை இங்கே அப்துல் கையும் சம்பந்தமில்லாத வகையில் இழுத்து வரத்தான் வேண்டுமா?
இது அநாகரிகமான கூற்று என்பது கூட இவர்களுக்கு புலப்படாமல் போனதுதான் தமிழ் சமுதாயத்தின் துரதிர்ஷ்டம், உலகின் துரதிர்ஷ்டம் என்று தோன்றுகிறது.
***
//"நாயகத் திருமேனியின் ஏகத்துவ போதனைகளை ஏற்க மறுத்த தாயிப் நகர மக்கள் அவர்கள் மீது கல்மாரி பொழிந்தார்கள். அண்ணலாரின் புண்பட்ட மேனியிலிருந்து செந்நீர் குருதி மண்மீது வழிந்தோடுகிறது."//
இந்த வரிகளுக்கு பின்பிருக்கும் வரலாற்றை, பொதுவான உளவியலை நாம் உணர்ந்து கொள்வது அவசியம். குறிப்பாக இப்படி உணர்வது, இஸ்லாமியர்களிடையே மதவெறியை தணித்து மனித நேயத்தை மலரச்செய்யும்.
நபித்துவம் என்பதே ஒருவர் கடவுள் தம்மூலம் மக்களுக்கு கட்டளைகளை வழங்குவதாகக் கூறி, அதன் மூலம் ஆளுமை நிலையை அடைவதுதான். இது மத்திய கிழக்கில் அந்தக்காலத்தில் வாடிக்கையாக நிகழ்ந்துவந்ததொன்று. மக்களை தமது விசேஷ சக்திகள் மூலம் (ஃபேரோ மன்னனிடம் மந்திர நிகழ்வுகளை காண்பித்த மோசஸ்), வன்முறை மூலம் தம் பக்கம் ஈர்த்து தானே அகில உலகிற்குமான ஏக நபி என்று அறிவிப்பது இந்த நபித்துவத்துடன் சம்பந்தப்பட்ட ஒன்று. வெற்றி பெற்றவர்கள் நபியாகவும், தோல்வியுற்றவர்கள் 'போலி நபி'யாகவும் வரலாற்றில் இடம் பெற்றனர். உதாரணம் – முஸலமா. இவரை நபி என்று நம்பி ஏற்று, அவரின் கீழ் பத்தாயிரம் அரபியர் திரண்டனர், பெரும் போருக்கு பின் இப்படை தோற்கடிக்கப்பட்ட்து. வென்றிருந்தால், அவரே கடைசி நபியாக உலகின் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் பின்பற்றும் நாயகமாக ஆகியிருப்பார். ஆனால், தோல்வியடைந்த்தால், அவரைப் பற்றிய விபரங்கள் கூட இன்று கிட்டவில்லை. இதில் தோல்வியும் பெற்று, மரணத்திற்குப் பின்பு வெற்றி பெற்றவர்களும் உண்டு - அதுவே இன்று கிறிஸ்துவமாக நிலவுகிறது.
இந்த நபித்துவத்துடன் சேர்ந்தே persecution என்ற கருத்தும் வருகிறது. ஏனெனில், உலகில் எங்குமே, யாருமே திடீரென்று பக்கத்து வீட்டுக்காரர் வந்து நான் கடவுளின் ஏக பிரதிநிதி, எனக்கே அதிகாரமெல்லாம், நான் சொல்வதெல்லாம் கடவுளின் வாக்கு என்று சொன்னால் யார் தான் ஏற்பார். இந்தியா மற்றும் மற்ற பாகன் சம்பிரதாயங்களிலும் இது போன்ற கூற்றுக்கள் உண்டு என்றாலும், இங்கே ஆட்சியதிகாரம், வரைமுறையற்ற தூல அடிபணிதல் நிர்ப்பந்தங்கள் இல்லை. எங்கோ ஒரு கோவனாண்டி 'நான் கடவுள்' என்று சொல்லிக்கொண்டு அவதூத நிலையிலோ, உடல்-மன உணர்வுகளை தாண்டிய நிலையிலோ, மோன நிலையிலோ திளைத்திருப்பதை யாரும் விபரீதமாக, ஆபத்தான விஷயமாக கருதுவதில்லை. ஆனால் ம.கிழக்கில் தோன்றிய இந்த நபித்துவம் என்பது அப்படிப்பட்டதில்லை. நபித்துவத்துடனேயே இணைந்தது வன்முறை - ஏனெனில் ஒரு நபியின் கீழ் உலகு இரு பிரிவுகளாக பிரிந்து விடுகிறது.ஒரு பக்கம் கடவுளின் ஏக பிரதிநிதியான நபியானவர், எதிர்ப்பக்கம் ஏகப்பட்ட தஜ்ஜால்கள் (சைத்தான்கள்). இப்படி உலகை பிரிக்கும்போது சைத்தானின் பிரதிநிதிகளை, சைத்தானை பின்பற்றுபவர்களை அழிக்க வேண்டிய Warriorகளாக அந்த நபியும் அவருக்கு அடிபணிந்து இருக்கும் அவரது நம்பிக்கையாளர்களும் ஆகிவிடுகின்றனர்.
இப்படிப்பட்ட ஒரு வன்முறையை மற்றவர்கள் எதிர்ப்பதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. அது மிகவும் இயல்பானதும் கூட. எப்படி மோசஸை நபியென்று நம்பிய யூதர்கள் இயேசு கிறிஸ்துவை நபியென ஏற்க மறுத்து வன்முறையில் இறங்கினார்களோ, எப்படி இயேசு கிறிஸ்துவை நபியென்று நம்பிய கிறிஸ்துவர்கள் முஹமதை ஏற்க மறுத்தார்களோ, அப்படியே முஹமதை நபியென்று நம்பியவர்களை ஏற்க ஷியாக்கள் (அவர்களில் ஒரு பகுதி - அவர்கள் முஹமதின் மருமகன் அலியே இறைவனால் அனுப்பப்பட்ட நபி என்று நம்பினார்கள், ஜிப்ரீல் தவறாக முஹமதுவுக்கு வசனங்களை சொல்லிவிட்டார் என்று கருதினார்கள்) மறுத்தனர். காதியானில் பிறந்த அஹமது நபியை ஏற்ற அஹமதியா முஸ்லீம்களை ஏனைய முஸ்லீம்கள் ஏற்க மறுத்தனர். ஆங்காங்கே தோன்றிய வலிமார்களை ஏற்றவர்களை இன்று வஹாபிக்கள் மறுக்கின்றனர். வெளிப்படையாக நபியென்று சொல்லிக்கொள்ளாவிட்டாலும், ஒரு நபிக்கான அனைத்து குணாம்சங்களையும் கொண்ட அப்துல் வஹ்ஹாபை ஏற்பவர்களை மற்ற முஸ்லீம்கள் ஏற்க மறுக்கின்றனர்.
இவற்றில் ஒவ்வொரு குழுவும் தம்மை ஏற்காதவர்கள் மீது வன்முறையை ஏவச்சித்தமாயிருக்கின்றது. ஏற்காத குழு ஏற்பவர்கள் மீது வன்முறையை ஏவச்சித்தமாயிருக்கின்றது.
***
இதில் திடீரென்று 'கல்லின் மீது பூவை எறிபவர்கள்' எங்கு வந்தார்கள்? கல்லின் மீது அம்பை எய்த அரபியர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம், கல்லின் மீது கல்லை எறியும் அரபியர்(மற்றும் முஸ்லீம்கள் - சைத்தானான கம்பத் தெய்வத்தின் மீது கல்லெறியும் ஹாஜிகள்) பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் எங்கும் அரபி பாகன்கள் கல்லின் மீது பூவை எறிந்து பூஜை செய்ததாக கேள்விப்பட்டதில்லை. இது இந்துக்களின் வழக்கம், இந்தியர்களின் வழக்கம், கீழத்தேய மதத்தவரின் வழக்கம்.
இதை அந்த நிகழ்வுடன் முடிச்சுப் போட்டிருப்பது பாடலை படிக்கும் இஸ்லாமியர்கள் மனதில் முஹமதை துன்புறுத்தியது இந்துக்கள் என்று நிறுவும் முயற்சியாகவே எனக்கு படுகிறது. இது எனது யூகம் மட்டுமல்ல, இதே திண்ணையில் ஒரு முறை ஹமீது ஜாஃபர் வள்ளலார் என்ற நபி/வலிமாரை இதே போன்று காஃபிர்கள் துன்புறுத்தியதாக எழுதியிருந்தார். இவரும் ஒரு நாங்கோரிதான் என்று நினைக்கிறேன், சூஃபியிஸத்தில் நம்பிக்கை உள்ளவர் என்பது எழுத்துக்களிலிருந்து தெரிகிறது.
இதெல்லாம் எனது கற்பனையாகக் கூட இருக்கலாம். இருக்க வேண்டும் என்று நம்புகிறேன்.
***
அடுத்ததாக, ‘கல்லின் மீது பூ எறிபவர்கள்’ என்ற வார்த்தைப் பிரயோகமே அநாகரிகமான ஒரு சிந்தனையின் வெளிப்பாடு. ஏனெனில், அந்த வார்த்தைப் பிரயோகத்துடனேயே இதுவும் வருகிறது:
// “காணக் கண் கோடி வேண்டும் கஃபாவை
ஹஜ்ஜூ காட்சிக்கிணை யாகஉலகில் எதுவுமே இல்லை”
என்று இவர் இசைக்கையில் மக்கமா நகரத்து இறையில்லக் காட்சிகள் கண்முன் தத்ரூபமாக காட்சிதரும்.
//
ஒரு மதத்தின் இறை வழிபாட்டு முறைகள் கல்லில் பூ எறிவது என்று தாழ்வாகப் பேசிக்கொண்டே அதே கட்டுரையில் இன்னொரு கல்லை ‘இறைவனின் வீடு’ என்று கருதும் முரண்பாட்டை இஸ்லாமியர்களிடம் தான் காண முடிகிறது. இப்படி தனது நம்பிக்கைகள் எல்லாம் நேரடியாக இறைவனிடமிருந்து வந்த்து, அது எப்படி இருந்தாலும், அதற்கு எதாவது ஒரு இட்டுக்கட்டிய சால்ஜாப்பை – மிகவும் பகுத்தறிவான விளக்கம் போல முன்வைப்பதும், அதே போன்ற மற்றவர்களின் வழிபாட்டு முறைகள் எல்லாம் தவறு என்று கருதுவதும், அந்த தவறை வன்முறை மூலம் சரி செய்ய நினைப்பதும் தான் இன்றைய உலகின் தீவிரவாதத்திற்கு காரணம் என்பதை மிதவாத இஸ்லாமிய சகோதரர்களும் உணராததுதான் உலகின் துரதிர்ஷ்ட நிலை.
இங்கே இறையில்லம் என்று அப்துல் கையூம் மற்றும் ஏனைய இஸ்லாமியர்கள் கருதுவதை, ‘அகில உலகையும் பரிபாலிக்கும் ஏக இறைவனுக்கு இல்லமா’ என்று மற்றவர்கள் கேட்டால் அது எப்படி இஸ்லாமியர்களால் பார்க்கப் படும் என்று சகோதரர்கள் சற்றே யோசித்துப் பார்க்க வேண்டும். உலகம் அந்த நிலையை நோக்கித்தான் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும்.
மத்திய காலத்தில், மத்திய கிழக்கில் பரப்பப்பட்ட கருத்துக்களை புரிந்தும் புரியாத நிலையில் வன்முறை மூலம் பெரும் கூட்டத்தின் மீது திணித்து, அவர்களுக்கு பணம், பதவி, பெண்கள் என்று ஆசை காட்டி அந்தக் கருத்துக்களைப் பற்றிய விமர்சனங்கள், கேள்விகள் எதுவும் எழுப்பாதவாறு அவர்களிடம் ஆசை, வெறுப்பு ஆகியவற்றை தூண்டிவிட்டு அந்தகூட்டங்களின் சக்தியை மற்றவர்கள் மீது திருப்பிவிட்டு கட்டப்பட்ட இந்த இறைக்கோட்பாடு இத்தனை நூற்றாண்டுகளாகியும் இந்தியாவில் நிலை கொள்ள முடியவில்லை. ஒரு நூறு வருடங்களுக்குள் அரேபிய தீபகற்பத்தையும் அடுத்திருந்த பிரதேசங்களையும் கோட்பாடின் ஆதிக்கத்திற்குள் கொண்டுவந்துவிட்ட ஜிஹாதிகளால், பதினான்கு நூற்றாண்டுகளாகியும் இந்தியாவை இக்கோட்பாட்டை பின்பற்ற வைக்க முடியவில்லை. மாறாக, சூஃபியிஸம் எதிர்நீச்சல் போட்டு இஸ்லாத்திற்குள் புகுந்தது. சூஃபியிஸமும் வன்முறைக்கோட்பாட்டிற்கு முழுவதுமாக விதிவிலக்கில்லை என்பது ஒரு புறமிருந்தாலும், இஸ்லாம் அதன் நேரிய வடிவில் இந்தியாவிற்குள் எந்த காலகட்டத்திலுமே பெருவாரியானவர்கள் பின்பற்றுகிற கோட்பாடாக இருக்க முடியாமல் போனதற்கு இந்த அடிப்படைக் கோணலும், அதை சித்தாந்த ரீதியாக சோதிக்காமல் ஏற்க மறுக்கும் ஆன்மீக பாரம்பரியமும் தான் காரணம் என்பதை இஸ்லாமிய சகோதர சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
Copyright:thinnai.com
“””””””””””””””””””””””””””””””””””””””””””””
Thursday May 14, 2009
நேசக்குமார் அவர்களின் கட்டுரை
ஹமீது ஜாஃபர்
புலம்பவேண்டாம் ஐயா!
திருவாளர் நேசக்குமார் அவர்களின் கட்டுரையைப் படித்தபோது சிரிப்புத்தான் வந்தது. வழக்கம்போல புலப்பம், ஒப்பாரி என்ன செய்வது? சிலருக்கு SATURATED MIND.
இவருக்கு காஃபிர் என்று சொன்னால் தீயை மிதித்ததுபோல் குதிக்கிறார். இறைநிராகரிப்பவருக்கு காஃபிர் என்று அரபுச்சொல். காஃபிருக்கு காஃபிர் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?
நேசக்குமாரை நேசக்குமார் என்றுதான் அழைக்கமுடியுமே தவிர நோஞ்சக்குமார் என்று அழைக்கமுடியாது அழைக்கவும்கூடாது. எனவே சகோதரர் இஸ்லாத்தின்மீது எரிந்து விழுவதை விட்டுவிட்டு தாம் சார்ந்திருக்கும் இந்து மதத்தில் மறைக்கப்பட்ட; குழித்தோண்டிப் புதைக்கப்பட்ட உண்மையை; இறைக்கொள்கையை வெளிக்கொணருங்கள். சைவ சித்தாந்தம் இறைவனைப் பற்றி என்ன சொல்கிறது? "அருவமா? அருஉருவமா? உருவமா? இல்லை அதற்கும் அப்பாற்பட்டதா?" உண்மைக்கொள்கையை விளக்குங்களேன்! பட்டிணத்தாரையும் கரூராரையும் காட்டுங்களேன்!
இவண்,
ஹமீது ஜாஃபர்
email: maricar@eim.aeCopyright:thinnai.com
:”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
Thursday May 14, 2009
ஒளிந்துகொண்டு பேசுபவர்களுக்கு
நாகூர் ரூமி
என் பெயர் ஏ.எஸ்.முஹம்மது ரஃபி.
நான் நாகூர் ரூமி என்ற புனை பெயரில் 1980களில் இருந்து எழுதி வருகிறேன்.
என் தொழில்: பேராரிசிரியர், ஆங்கிலத்துறைத் தலைவர், மஜ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்பூர்.
எனது நிழல் படம்:
என் மின்னஞ்சல்: ruminagore@gmail.com
என் வலைத்தளம்: www.nagorerumi.com
நான் இறைவனுக்கு மட்டுமே அஞ்சுகிறேன். பொதுவாழ்வில் என் கருத்துக்களை நான் எப்போதுமே திறந்த மனதுடன் பேசிவருகிறேன். உதாரணமாக இசை இஸ்லாத்துக்கு விரோதமானதல்ல என்றும், கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை காட்டுமிராண்டித்தனமானது என்றும் விமர்சித்துள்ளேன். அதனால் என் மீது மதிப்பு வைத்திருந்த நண்பர்கள் பலருக்கு என்மீது லேசான சந்தேகம்கூட வந்துள்ளது. ஆனாலும் என் கருத்துக்கள் தவறென்று நீங்கள் நிரூபித்தால் அந்தக் கணமே நான் மாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். ஆனால் என்னைப் பற்றி மற்றவர் வைக்கும் உள்நோக்கம் கொண்ட விமர்சனங்களை நான் எப்போதும் பொருட்படுத்துவதே இல்லை. குறிப்பாக நேசகுமார் என்ற பெயரில் இஸ்லாத்தின் மீது அவதூறை வாரி இறைத்துக் கொண்டிருப்பவரின் கருத்துக்களுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருப்பது கால விரயம் என்பதை மிகவும் தெளிவாக உணர்ந்திருக்கிறேன்.
பின் ஏன் இக்கடிதம்?
ஒரு காரணம் உள்ளது. அவர் அப்துல் கையூமின் நாகூர் ஹனிபா பற்றிய கட்டுரையைப் பயன்படுத்தி, இஸ்லாத்தின் மீதும், ஆபிதீன் மீதும், கையூம் மீதும் என் மீதும் உமிழ்ந்திருக்கும் வெறுப்புக்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதை திண்ணை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும், நேசகுமாரைப் பற்றிய சில உண்மைகளையும் வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும்தான்.
நேசகுமார் என்ற பெயரில்தான் நேசம் இருக்கிறது. இதுவரை அவர் போட்டுக்கொண்டிருப்பது ஒரு வேஷம். கொட்டியதெல்லாம் விஷம். ஒரு பெயருக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் அவர்மீது மனித நேயத்தின் மீதும் பண்பாட்டின் மீதும் அக்கறை கொண்ட பலர் மிகவும் கோபமாக இருந்தார்கள், இருக்கிறார்கள். காரணம், அவர் தொடர்ந்து இஸ்லாத்தையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் தாக்குவதையே தன் வேலையாக வைத்திருப்பதால்.
நேசகுமார் ஒரு வலைத்தளம் வைத்துள்ளார். அதில் அவர் எழுதியவை தொடர்பாக நான் என் கருத்துக்களை பதிவு செய்ய முயன்றபோது, எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. (அதாவது நாகூர் ரூமி போன்றவர்களிடமிருந்து வரும் எதிர்ப்புக் கருத்துக்களை அனுமதிக்க வேண்டாம் என்று தொழில் நுட்ப உத்தரவு கொடுத்திருக்கிறார். இதேபோல அபூ நூறா போன்ற நண்பர்களின் பதில்களும் பிரசுரமாகவில்லை. ஆனால் எனது வலைத்தளத்தில் ஏதாவது ஒரு கட்டுரைக்கான பின்னூட்டத்தில் சம்பந்தமில்லாமல் நேசகுமார், அரவிந்தன் நீலகண்டன் போன்றோர் நுழைந்து என்னைத் திட்டுவார்கள். இது நேசகுமார் கடைப்பிடிக்கும் பண்பாடு).
என் முன் இருக்கும் கேள்விகள் இவைதான்:
1. நேசகுமார் அவர்களே, நான் மேலே கொடுத்திருப்பது போல, உங்கள் பெயர், முகம், முகவரி இவற்றைக் கொடுக்கும் துணிச்சல் உங்களுக்கு இருக்கிறதா? அல்லது மறைந்திருந்து வாலியைக் கொன்ற ராமனுக்கு நேசனாகத்தான் இருக்க விரும்புகிறீர்களா?
2. கொலை, கொள்ளை, வன்முறை, யுத்தங்கள் எல்லாம் எல்லாக் காலத்திலும், எல்லா நாடுகளிலும் நடந்துள்ளது. குறிப்பிட்ட சமுதாயம்தான் வன்முறை வளர்க்கும் சமுதாயம் என்று யாரையும் முத்திரை குத்துவது அறிவீனம். ஒருவன் இன்னொருவனைக் கொன்றால் அது கொலை. அதையே யுத்த களத்தில் ராணுவ வீரனாகச் செய்தால் அது நாட்டுப் பற்று. தூக்கு மேடையில் மாதச் சம்பளத்துக்காக கயிற்றை இழுப்பவனும் கொலைதான் செய்கிறான். ஆனால் அவனை யாரும் குற்றம் காண்பதில்லை. எனவே கடந்த காலத்தில் நடந்ததைப் பற்றி விமர்சனம் வைக்கும்போது, பல விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
எல்லாவற்றையும் விவாதிக்கலாம். அரேபியாவில் நடந்ததையும் என்னவென்று பார்க்கலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கை எதற்காக, எப்போதெல்லாம் உயர்ந்தது என்றும் பார்க்கலாம். அதற்கு முன் நமது நாட்டில் நடந்தது, நடந்து கொண்டிருப்பது என்ன என்று பார்க்க வேண்டுமல்லவா? ஹிந்து மதம் என்றால் என்ன? ஹிந்துக்கள் என்பவர்கள் யார்? இந்திய மண்ணின் மைந்தர்கள் யார்? உண்மையான இந்திய வரலாறு என்ன? வேத கால மதம் என்ன சொன்னது? மனு தர்மம் என்ன சொல்கிறது? ஏகலைவனின் கட்டை விரல் ஏன் குருதட்சனையாகக் கேட்கப்பட்டது? ஒரு பெண்ணை ஐந்து பேர் பகிர்ந்து கொண்ட கலாச்சாரம் யாருடையது? வர்ணாசிரமம் என்பது என்ன? அதன் விளைவுகள் எப்படிப்பட்டவை? அது எங்கே இருந்து வந்தது? கூட்டம் கூட்டமாக, கும்பல் கும்பலாக ஏன் ஹிந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்துக்கும் இஸ்லாத்துக்கும் மக்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்? இந்தியாவில் உள்ள தலித்களும், சீக்கியர்களும், நாத்திகார்களும் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ செய்கிறார்களா? எதற்காக அம்பேத்கார் ஒரு லட்சம் தலித் மக்களோடு பௌத்தம் தழுவினார்? சிவனடியார்களுக்கும் வைணவர்கள்களுக்கு இடையே நடந்தது என்ன? ஜைனர்கள் ஏன் கழுவில் ஏற்றப்பட்டார்கள்? குஜராத்தில், கோயமுத்தூரில் நடந்தது என்ன? எல்லாவற்றையும் பார்க்கலாம்.
Islam is the fastest growing religion in USA என்று ஹிலாரி கிளிண்டன் ஏன் சொன்னார்? மனிதாபிமானமற்ற சிலர் செய்த வன்முறையால் இரட்டைக் கோபுரங்கள் தரைமட்டமாக்கப்பட்ட மண்ணில் அது எப்படி சாத்தியமாயிற்று? அதையும் பார்க்கலாம். உங்கள் குற்றச்சாட்டுகளிள் உண்மை இருக்கிறதா என்றும் திறந்த மனதுடன் விவாதிக்கலாம்.
ஒரு கவிதை. அது அப்துல் ரகுமான் எழுதியது. அதைப் போகிற போக்கில் கையூம் மேற்கோள் காட்டியிருந்தார். அவ்வளவுதான். கல், பூ என்ற விஷயங்கள் மாறி மாறு வரும் முரண் அழகுக்காக ரகுமான் அப்படி எழுதியிருக்கிறார். அதைத்தாண்டி அதில் நேசகுமார் போல யோசிப்பதற்கு ஒன்றுமில்லை என்பதை கவிதை அறிந்தவர்கள் அறிவார்கள். சிலருக்கு சொரியாசிஸ் என்று ஒரு வியாதி இருக்கும். நேசகுமாருக்கு அதுபோன்ற ஒரு மன அரிப்பு வியாதி இருப்பது போல் தெரிகிறது. அது நீங்க ஒரு வழி உள்ளது. அது இதுதான்
முதலில் வெளியே வாருங்கள். ஆரோக்கியமான காற்றைச் சுவாசியுங்கள். எங்களைப் பிராண்டுவதாக நினைத்துக் கொண்டு உங்களை நீங்களே காயப்படுத்திக்கொள்ள வேண்டாம். ஆரோக்கியமான முறையில், நேர்மையாக, நாகரீகமாக விவாதங்கள் நடத்தலாம். ஆனால் முதலில் வெளியே வாருங்கள்.
நான் கேட்டுக் கோள்வதில் உள்ள உண்மைகளைப் பற்றி வாசகர்கள் சிந்தியுங்கள். எனது தளம் எல்லாருக்குமானது. யாருக்கும் தடையில்லை. உங்கள் கருத்துக்கள், விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும், அது யார் மனதையும் புண்படுத்தாமல், நாகரீகமான முறையில் சொல்லப்பட்டிருந்தால், நீங்கள் திண்ணையில் மட்டுமல்ல, என் மின்னஞ்சலுக்கும் எழுதலாம், வலைத்தளத்திலும் பதியலாம். உண்மையான நேசம் வளர்க்கலாம்.
அன்புடன்
நாகூர் ரூமி
Copyright:thinnai.com
”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
Thursday May 14, 2009
பூக்களின் சரம், ஒரு கல், தொட்டுக் கொள்ள நாகூர்!
வஹ்ஹாபி
நாகூர் ஹனீஃபா என்ற பாட்டுக்காரரைப் பற்றிக் கவிஞர் அப்துல் கையூம், 'நாகூர் ஹனிபா - அவர் ஒரு சரித்திரம்' என்ற தலைப்பில் திண்ணையில் எழுதியிருந்தார் [சுட்டி-1].
பெரியார், இஸ்மாயீல் ஸாஹிப், பன்னீர் செல்வம், பட்டுக்கோட்டை அழகிரி, கருணாநிதி, அன்பழகன் போன்ற பிரபலங்களோடு நாகூர் ஹனீஃபாவின் நெருக்கம் அதில் பேசப்பட்டாலும் அண்ணாவைப் பற்றி பேசியது மலர் மன்னனுக்கு அவரது பழைய நினைவுகளை மலர வைத்தது. நாகூர் ஹனீஃபாவோடு அவருக்கு இருந்த நெருக்கத்தையும் திண்ணை வாசகர்களோடு மலர் மன்னன் பகிர்ந்து கொண்டார் [சுட்டி-2].
கவிஞர் அப்துல் கையூம் தனது திண்ணைக் கட்டுரையில், தாயிஃப் நகரில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கல்லடி பட்ட நிகழ்வுப் பூக்களைக் வெகு இயல்பாகச் சரம் தொடுத்திருந்தார்:
பூ-1 : "கல்லடிகள் பட்டபோதும் எங்கள் பெருமானே, கயவர்களைச் சபிக்கவில்லை எங்கள் பெருமானே”
பூ-2 : "தாயிப் நகரத்தின் வீதிகளில் - ஒரு தங்க நிலவைத் துரத்துகிறார். அருமை நபியை ஆருயிரை, அணையா விளக்கை வருத்துகிறார்"
பூ-3 : "கல்லின் மீது பூவை எறிபவர்கள், இப்போது பூவின் மீது கல்லை எறிகிறார்கள்"
பூ-4 : "சொன்மாரி பொழிந்ததற்காய்க் கன்மாரி பெய்துவிட்ட வன்மனத்தார் திருந்துதற்கு வழிவகுத்த நாயகமே"
பூ-5 : "கல்லடி ஏற்று, கடுமொழி கேட்டு, உள்ளம் துடித்து, உதிரத்தை வடித்து"
பூ-6 : "தாயிப் நகரில் கல்லடிகள் தந்த தழும்பிலே – இமைகள் தழுவதற்கும் அழுவதற்கும் கண்ணீர் பொங்குதே"
பூ-7 : "தாயிப் நகரத்து வீதியிலே - எங்கள் தாஹா இரசூல் நபி நடக்கையிலே - பாவிகள் செய்த கொடுமையினை - எண்ணிப் பார்த்தால் நெஞ்சம் பதைக்குதம்மா!"
இவற்றுள் மூன்றாவது பூவான, "கல்லின் மீது பூவை எறிபவர்கள், இப்போது பூவின் மீது கல்லை எறிகிறார்கள்" என்ற கவிக்கோ அப்துர் ரஹ்மானின் வரிகளைப் பற்றிச் சொல்லும்போதே, "வித்தியாசமான உவமைப் படிமம்" எனக் குறிப்பிடக் கவிஞர் மறக்கவில்லை. மலர் மன்னன் உட்பட எல்லாருக்கும் இயல்பாகத் தோன்றும் 'உவமைப் படிமம்' இயல்புக்கு மாற்றமான மனநிலையில் உள்ள ஒருவருக்கு மட்டும் விகாரமாகத் தோன்றுகிறது [சுட்டி-3].
திண்ணையில் உள்ள சொம்பை எடுத்து உள்ளே வைத்துக் கொள்வோம்; யோக்கியர் வரப் போகிறார்.
//தனக்கு கீழ்ப்படிந்து தன்னிடம் ஆளும் உரிமையையும், நீதி வழங்கும் உரிமையையும், நிதி வசூல் செய்யும் உரிமையையும் ஒப்படைக்குமாறு கோர// நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தாயிஃப் நகருக்குப் போனதாகத் திண்ணையில் எழுதும் நேசகுமார் என்பவரது மனநிலையை/வரலாற்று அறிவை எதில் சேர்ப்பது?
//இந்துக்களை விவரிக்கும் வரிகளாக (கல்லின் மீது பூவை எறிபவர்கள்) புரட்டிய புண்ணியம் அப்துல் ரகுமானுக்கு சேரும் என்றால், அந்த மதக்காழ்ப்பை இங்கே அப்துல் கையும் சம்பந்தமில்லாத வகையில் இழுத்து வரத்தான் வேண்டுமா?//
'கல்லின் மீது பூவை எறிபவர்கள்' என்ற உவமை புரிபடாத மாதிரி, அரபு நாட்டுப் பாகன்களான தாயிஃப்வாசிகளை அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டதைத் திசை திருப்பி, 'கல்லின் மீது பூவை எறிபவர்களை' இந்திய இந்துகளாகத் திருகுதாளம் செய்ய முயலும் நேசகுமாருக்கு சுருக்கமான ஒரேயொரு கேள்வி:
காந்திஜி பிறந்தநாள் முதல் தியாகிகள் நினைவுநாள்வரை அந்தந்தக் கற்சிலைகளுக்கு/நினைவுச் சின்னங்களுக்குச் சென்று பூ அள்ளிப் போடும்/எறியும் நமது பிரதமர் மன்மோகன் சிங் இந்துவா?
உவமை/உண்மை விளங்காமல், "கல்லின் மீது பூவை அள்ளிப் போடுபவர்/வீசுபவர் எல்லாரையும் இந்துக்கள்" என்ற அபத்தக் கருத்தை இங்கு வலிந்து புகுத்தினால், கி. வீரமணியை இந்து என்று சொல்ல வேண்டிய அபாயம் ஏற்படும். அதைவிடவும் அவர் வீசும் பூக்கள் போய் விழும் கல்லான பெரியாரை, "கடவுள்" என்று சொல்ல வேண்டிய பேரபாயம் ஏற்படும்.
இத்தனைக்கும் கவிக்கோவின் இருவரிக் கவிதை, விளங்க முடியாத அளவு கடினமாக இல்லையே! "சிலை வணங்கிகளான தாயிஃப் நகர பாகன்கள் மென்மையான குணம் கொண்ட நபிகளாரைக் கல்லால் அடித்து ஊரை விட்டுத் துரத்தினார்கள்" இதுதானே அந்த இருவரிக் கவிதை சொல்லும் செய்தி!
//இது அநாகரிகமான கூற்று என்பது கூட இவர்களுக்கு புலப்படாமல் போனதுதான் தமிழ் சமுதாயத்தின் துரதிர்ஷ்டம், உலகின் துரதிர்ஷ்டம் என்று தோன்றுகிறது// என்று உலகளாவிய அளவில் மாய்ந்து போகிறார் நேசகுமார்.
எந்த நேசகுமார்?
ஸைபர் ப்ரம்மாவோடு சேர்ந்து அசிங்கமான 'கிச்சு-கிச்சு தாம்பாளம்; கிய்யா-கிய்யா தாம்பாளம்' விளையாட்டு [சுட்டி-4] விளையாடிய நேசகுமார். கிச்சு மானஸ்தன் போலும்; 'நேசகுமாருடன் ஒரு நேர்காணல்' என்ற தனது 25.05.2005 தேதியிட்ட பதிவைத் தூக்கி விட்டார் [சுட்டி-5]. நேசகுமார் நாகூருக்குப் போய் நன்னாரி சர்பத் குடித்ததாக வெட்கமின்றிக் கதை சொல்லும் அப்பதிவு இன்றுவரை வேறோர் இடத்தில் பாதுகாப்பாகப் படிக்கக் கிடைக்கிறது [சுட்டி-6].
தனி மனிதத் தாக்குதலை அனுமதிக்காத திண்ணையின் விதிகள் புரிந்து கொள்ளத் தக்கவைதாம். ஆனால், 100 கோடி இந்தியர்களுள் 20 கோடி முஸ்லிம்கள் - அதாவது ஐந்தில் ஓர் இந்தியர் - உயிரினும் மேலாக மதிக்கும் உலகளாவிய தலைவர் ஒருவரை அவமதித்து எழுதுவதையே தொழிலாகக் கொண்ட ஒருவரது காழ்ப்புக் கழிவுகளைத் திண்ணை ஏற்றுக் கொள்வதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தனது இருப்பைக் 'காட்டி'க் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் நேசகுமாருக்கு இருக்கலாம்; திண்ணைக்கு அப்படி இல்லையே!
சென்ற வாரம் திண்ணையில் அவர் கக்கியதைப் போல் நூறு மடங்கு காழ்ப்புகளுக்கு ஏற்கனவே பலரால் விளக்கங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன [சுட்டி-7]. குறிப்பாக நல்லடியார் என்பவர் நான்காண்டுகளுக்கு முன்னர் தமிழோவியத்தில் அசைக்க முடியாத சான்றுகளுடன் 9 வாரங்கள் தொடர் விளக்கம் எழுதியிருக்கிறார் [சுட்டி-8].
என்றாலும் பழைய குருடி கதவைத் திறடி கதையாய் மீண்டும், //மத்திய காலத்தில், மத்திய கிழக்கில் பரப்பப்பட்ட கருத்துக்களை புரிந்தும் புரியாத நிலையில் வன்முறை மூலம் பெரும் கூட்டத்தின் மீது திணித்து, அவர்களுக்கு பணம், பதவி, பெண்கள் என்று ஆசை காட்டி அந்தக் கருத்துக்களைப் பற்றிய விமர்சனங்கள், கேள்விகள் எதுவும் எழுப்பாதவாறு அவர்களிடம் ஆசை, வெறுப்பு ஆகியவற்றை தூண்டிவிட்டு அந்தகூட்டங்களின் சக்தியை மற்றவர்கள் மீது திருப்பிவிட்டு கட்டப்பட்ட இந்த இறைக்கோட்பாடு// என்று இஸ்லாத்தின் மீது சேறுவாரி இறைப்பதன் மூலம் - அதிலும் நாகூர் என்ற பெயர் கேட்டாலே நடுக்கம் கூடிப் போய்விடுவதைக் காட்டி விடுவதன் மூலம் - தனக்கு மிரட்சி முற்றிப் போய்விட்டதை மறுபடியும் நிரூபிக்கும் நேசகுமார், "இந்தியாவில் இஸ்லாத்துக்கு எதிர்காலமில்லை" என்ற கிழடு தட்டிய கிளிசோதிட நம்பிக்கையிலேயே இன்னமும் மூழ்கிக் கிடக்கிறார்; கிடந்து விட்டுப் போகட்டும்!
"எல்லாப் புகழும் இறைவனுக்கு" என்பது நாகூர் ஹனீஃபா பாடிய பாடல்களுள் ஒன்று. அதே வரிகளை, ஹாலிவுட்டில் உள்ள கோடாக் அரங்கில் உலகமெங்கும் கேட்கும்படி உரத்துச் சொன்னவரது - அதாவது ஐந்து இந்தியரில் ஒருவரது - முன்னாள் பெயர் திலீப் குமார் என்று 'ஐ லவ் இண்டியா' தளத்தில் செய்தி போட்டிருக்கிறார்கள் [சுட்டி-9].
ஜெய்ஹோ!
ஃஃஃ
to.wahhabi@gmail.com
சுட்டிகள்:
1 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20904235&edition_id=20090423&format=html
2 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20904303&edition_id=20090430&format=html
3 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20905071&format=html
4 - http://wahhabipage.blogspot.com/2008/03/2.html
5 - http://kichu.cyberbrahma.com/?p=61
6 - http://copymannan.blogspot.com/2007/04/blog-post_19.html
7 - http://wahhabipage.blogspot.com/2006/09/blog-post.html
8 - http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=nalladiyar1&taid=1
9 - http://www.iloveindia.com/indian-heroes/ar-rahman.html
Copyright:thinnai.com
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””” “ “”””
Thursday May 14, 2009
நேசகுமாருக்கு என் பதில்
அப்துல் கையூம்
---------------------------------------
நேசமிலா நேசகுமாருக்கு,
நாகூர் ஹனீபாவை பத்தி மிகவும் சுவையா எழுதியிருந்தேன்னு உங்க கடுதாசியை தொடங்கி இருந்தீங்க. பாக்க சந்தோஷமா இருந்துச்சு.
கடைசியிலே பாத்தா ஆடு மழையிலே நனையுதேன்னு ஓநாய் கவலைபட்ட கதையா ஆயிடுச்சு.
சில ஊருலே இப்படித்தாங்க ஆட்டை பலி கொடுக்குறதுக்கு முன்னாடி கழுத்துலே மாலை போடுவாங்க. ஆடு பேசாதுங்குற தைரியத்துலேதான். பேசுற சக்தி மட்டும் இருந்துச்சுன்னா “போடா.. ..ங், நீயும் உன் மாலையும்ன்னு” திட்டிப்புடும்.
திடீர்ன்னு வர்றீங்க. மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறீங்க. மீண்டும் முருங்கை மரத்துலே ஏறிடுறீங்க.
மலர் மன்னன் ஐயா என்னைப் புகழ்ந்ததை உங்களால பொறுத்துக் கொள்ள முடியலையோ என்னவோ.
கறுப்புக் கண்ணாடி போட்டுக்கிட்டு பாத்தா பாக்குறதெல்லாம் கறுப்பாத்தாங்க தெரியும். நீங்க என்னடான்னா அதை Permanent Contact Lens மாதிரி பொருத்திக்கிட்டீங்க போங்க.
கொஞ்ச காலத்துக்கு முன்னாடி நாகூர் ரூமியை பகடைக்காயா வச்சு இணையத்துலே பெரிய்ய்ய்ய்..ய விளம்பரம் தேடிக்கிட்டீங்க.
இப்ப என்னடான்னா எல்லா சமூகத்தவரும் தலையிலே தூக்கி வச்சு கொண்டாடுற கவிக்கோ ஐயாவை பலிகடாவாக்கி இணையில்லா புகழ் அடையத் துடிக்குறீங்க.
எனக்குள்ள கவலை என்னான்னு கேட்டா, உங்க உள்நோக்கம் புரியாம எத்தனை பேரு நீங்க அமைச்சிருக்குற சாணக்யா வியூகத்துலே வந்து விழப் போறாங்களோன்னுதான்
“கல்லின் மீது
பூவை எறிபவர்கள்
இப்போது
பூவின் மீது
கல்லை எறிகிறார்கள்”
இந்த வரிகளை வச்சுதானே கவிக்கோ ஐயா இந்துக்களை வசை பாடுறாருன்னு ‘புக்ரான்’ குண்டை எடுத்து போடுறீங்க? இல்லீங்களா?
தாயிஃப் நகரத்துலே, அந்த பத்தரைமாத்து தங்கத்தை அத்துமீறி புத்திகெட்ட பாவிங்க கல்லாலே அடிச்சு சித்திரவதை செய்யிறதை சித்தரிக்கும்போது இந்த சத்தான வரிகளை முத்தமிழுலே கவிக்கோ ஐயா முத்திரை பதிக்கிறாரு.
அரபு நாட்டுலே நடக்குற இந்த சம்பவத்துக்கும், இங்கே இருக்குற நம்ம இந்து சமுதாயத்தாருக்கும் துளிகூட சம்பந்தம் இல்லேங்குற விஷயம் உங்களுக்கு நல்லாவே தெரியும். அப்படியிருந்தும் இதுக்கும் அதுக்கும் லிங்க் கொடுக்குறீங்க. அப்துல் ரகுமானுக்கும் அமாவாசைக்கும் என்னங்க சம்பந்தம்?
அந்த காலத்து அரபிங்களை ‘காட்டரபிகள்’ன்னுதான் வரலாறே குறிப்பிடுது. அரபியிலே ‘ஜாஹிலியத்’, இங்கிலீசுலே ‘Barbaric’ ன்னு வருணிக்குறாங்க. கொஞ்ச நஞ்ச அட்டகாசம் இல்லீங்க. நம்ம ஊரு உசிலம்பட்டியிலே பொட்டைச்சி-னு சொல்லிப்புட்டு பச்ச புள்ளைங்களை கள்ளிப்பாலு ஊத்தி கொன்னாங்க இல்லியா?
அதே மாதிரி இந்த காட்டரபிங்க என்ன செஞ்சாங்க தெரியுமா? பொறந்த குழந்தை பொம்பளைப் புள்ளையா இருந்துச்சுனா உசிரோட மண்ணைத் தோண்டி புதைச்சாங்க.
அது மட்டுமில்லீங்க. பொம்பளைங்களை ஒரு போகப் பொருளாத்தான் அவுக நெனச்சாங்க. ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துலே ஜெயலலிதாவை சாட்டையாலே அடிச்சு அடிச்சு ஏலம் விடுவாங்க. அந்த அம்மாவும் “ஆடாமல் ஆடுகிறேன், பாடாமல் பாடுகிறேன், ஆண்டவனைத் தேடுகிறேன்”னு சொல்லிப்புட்டு மயங்கி மயங்கி ஒரு தினுசா டான்ஸ் ஆடும். இப்படித்தான் அரபிகளும் பொம்பளைங்களை ஒரு வியாபாரப் பொருளா கருதி ஏலம் விட்டாங்க.
இங்கே மழை வரலேன்னா நம்ம குன்னக்குடி ஐயா வயலினை வச்சு ‘சொய்ங் சொய்ங்’ன்னு இழுத்து மழை வர வச்சிடுவேன்னு சொல்றாரு. அவுக என்ன செஞ்சாங்க தெரியுமா? மாட்டு வாலுலே தீ வச்சா மழை வருமுன்னு நம்புனாங்க.
அப்ப ஏதுங்க ‘புளு கிராஸ்’, ‘ரெட் கிராஸ்’ இதெல்லாம்? இருந்துச்சுன்னா புடிச்சு முட்டிக்கு முட்டி தட்டியிருக்கலாம்.
அந்த காலத்துலே யாராச்சும் செத்துப் போனா அவங்களை உடனே கடவுளா ஆக்கிடுவாங்க. அப்பா, அம்மா, அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா – இப்படி அவுக தாத்தா பாட்டி எல்லாத்தையும் சிலையா வடிச்சு வணங்குனாங்க.
//“மக்கா நகரத்து அராபியர்கள் கஃபா என்கிற பல நூற்றாண்டுகள் புராதனமான வணக்கஸ்தலத்தை பயபக்தியுடன் வலம் வந்து வணங்குபவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். எங்கெங்கிருந்தோ முந்நூற்று அறுபது இறை உருவங்களை எடுத்துவந்து அங்கே பிரதிஷ்டை செய்து தினமொரு கடவுளை பிரார்த்திப்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்"//
இத நான் சொல்லலீங்க. குமுதம் ரிப்போர்ட்டருலே பா. ராகவன் எழுதுறாரு. ‘நிலமெல்லாம் ரத்தம்’ ங்குற வரலாற்றுத் தொடருலே இதை நீங்க படிச்சு தெரிஞ்சுக்கலாம்.
விக்கிரகத்தை வச்சு காட்டரபிங்க எப்படியெல்லாம் பூஜித்தாங்க-ங்குற சம்பிரதாயம் சரியா எனக்கு சொல்லத் தெரியலே. ஆனா உலகத்துலே பல இடத்துலே இருந்த விக்கிரக வழிபாடுகள்லே, ஒண்ணோட ஒண்ணு கனெக்ஷன் இருக்க நிறைய வாய்ப்பு இருக்குதுங்க.
லாத், உஸ்ஸா, மனாத், ஹுபால் – இந்த மாதிரி நெறய கடவுளை அரபிங்க அப்ப ஸ்டாக் வச்சிருந்தாங்க. இங்கே கூட நம்ம ஆளுங்க திருச்சியிலே குஷ்புவுக்கு , நெல்லையிலே நமிதாவுக்கு, அரவாக்குறிச்சியிலே நயன்தாராவுக்கு கோயில் வச்சிருக்காங்க இல்லீங்களா?
பா.ராகவன் சார் சொல்லுற “பிரதிஷ்டை”ங்குற வார்த்தையை வச்சு பாக்குறப்போ பூசை, புனஸ்காரம், புஷ்பாஞ்சலி, தூப ஆராதனை, அபிஷேகம், அங்கப் பிரதட்சணம், சாஷ்டாங்க நமஸ்காரம், குடமுழுக்கு, நைவேத்யம் – இதுமாதிரி சம்பிரதாயத்துலே ஏதாவது ஒண்ணு இருக்க சான்ஸ் இருக்குது, இல்லாமலிருக்கவும் சான்ஸ் இருக்குது.
அந்த நாட்டுலே, பூஜையிலே ‘பூ’ இருந்திருக்க வாய்ப்பே இல்லேன்னு அடிச்சும் சொல்ல முடியாது. அது பாலைவனப் பிரதேசம்தான். அதுக்காக பூவே அங்கே மலராதுன்னு சொல்ல முடியுங்களா?
இந்துக்கள் தெய்வச் சிலை மீது பூ எறிய மாட்டாங்க. பூ சாத்துவாங்கன்னு சொல்றதுதான் கரிக்டு. (இங்கிலீசுலே கூட Flower Offerings -ன்னுதான் சொல்லுறாங்க, Flower Throwing-ன்னு யாரும் சொல்லுறதில்லே)
நீங்க சொல்லுற மாதிரி சிலைகளை அம்பாலே எய்தி அவங்க வணக்கம் செஞ்ச மாதிரி, ஏன் பூவை எறிஞ்சு சிலைகளை வணக்கம் செஞ்சிருக்கக் கூடாது?
அப்படியே ‘பூ’ சமாச்சாரம் நம்ம இந்தியாவுலே மாத்திரம்தான் உண்டுங்குற உங்க விவாதத்தை ஏத்துக்கிட்டாலும், பூ’சை/ பூ’சித்தல் சமாச்சாரத்தை பூ’வோடு இணைச்சு உருவகப்படுத்தி கவிதை எழுதுனா என்ன தப்புங்க?
“கல்” – “பூ”
“பூ” - “கல்”
இந்த வார்த்தைகளை வச்சு சொற்சிலம்பம் ஆடுற அந்த அழகான கவிதையை நீங்க ரசிக்கிறதை விட்டுப்புட்டு, “ப்.. பூ” ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு இப்படி குண்டக்கா மண்டக்கான்னு எழுதுறீங்களே.. .. இது நல்லா இருக்கா?
“மதக்காழ்ப்பு”, “தமிழ்ச் சமுதாயத்தின் துரதிர்ஷ்டம்” “உலகின் துரதிர்ஷ்டம்” இப்படி பெரிய பெரிய வார்த்தையெலாம் போட்டு பயமுறுத்துறீங்க வேற.
ஆனா ஒண்ணுங்க. என்னதான் இந்த பூவை நீங்க கல்லாலே எறிஞ்சாலும் இந்த பூவுக்குள்ளேந்து பூகம்பம் புறப்படாதுங்க.
பகைவர்களுக்கும் அன்பு காட்டுங்கன்னுதான் அகில உலகத்துக்கும் அருட்கொடையா வந்த நம்ம நபிகள் நாயகம் சொல்லியிருக்காங்க.
நாயகம் தெனமும் நடந்து போற பாதையிலே, வூட்டு மாடி மேலே நின்னுகிட்டு குப்பையை அவங்க தலைமேலே கொட்டுறத வழக்கமா வச்சிருந்துச்சு ஓரு வயசான யூதக் கெழவி. ஆனா நாயகம் அதை பெருசு படுத்தலே. ஒருநாளு அந்த கெழவியைக் காணோம். அக்கம் பக்கத்துலே நபிகள் விசாரிச்சாங்க. அந்த அம்மா படுத்த படுக்கையா கெடக்குன்னு யாரோ சொல்ல, நபிகள் அந்த கெழவியோட வீட்டுக்குப் போயி “நல்லாயிருக்கீங்களா அம்மா?” ன்னு விசாரிச்சாங்க. அந்த கெழவி துடிதுடிச்சு போயிடுச்சு. “போயும் போயும் இந்த தங்கமான மனுஷரை நாம கொடுமை செஞ்சிட்டோமேன்னு” கண் கலங்கிடுச்சு.
நபிகள் மேலே குப்பை கொட்டுறதையே வாழ்க்கையோட குறிக்கோளா வச்சிருக்கிற நீங்க, என்னிக்காவது ஒரு நாளு மனம் திருந்தி உங்க போக்கை மாத்திக்கிடுவீங்க-ங்குற நம்பிக்கை எனக்கு இருக்குதுங்க.
தாயிஃப் நகரத்து சம்பவத்தை என் கட்டுரையிலே படிச்சிட்டு ஒரு இந்துமதச் சகோதரி “நபிகள் நாயகம் இப்படிப்பட்ட கொடுமைகளைக் கூட அனுபவிச்சிருக்காங்களா? படிச்சு கண்கள் குளாமாயிடுச்சு”ன்னு எனக்கு மடல் எழுதியிருந்தாங்க.
ஆனா நீங்களோ கல்லெறிஞ்சவங்களை விட கல்மனசு படைச்சவரா இருக்கீங்க. கல்லெறிஞ்சது நியாயம்ங்குற மாதிரி ஒரு தோற்றத்தை உண்டு பண்ணப் பாக்குறீங்க. நீங்க கொடுத்திருக்கிற நிறைய தகவல் பொய்யும் புரட்டுமா இருக்குதுங்க, உதாரணமா ‘ஷியா’ பிரிவினர் நபிகள் நாயகத்தை நபின்னு ஏற்க மறுத்தாங்கன்னு சொல்றது உண்மையில்லீங்க.
உங்களோட ஒவ்வொரு வரிக்கும் என்னாலே ஆதாரபூர்வமா, அறிவுப்பூர்வமா வாதாட முடியும். ஆனா அதையே சாக்கா வச்சு நீங்க மேலும் மேலும் நாங்க உசிருக்கு உசிரா மதிக்கிற ‘அழகிய முன் மாதிரி’யை இழித்து பழித்துப் பேசுறதுக்கு சான்ஸா பயன்படுத்திக்கிட்டு பழி தீர்த்துக்கிடுவீங்க.
நீங்க இஸ்லாத்தைப் பத்தி நெறையா தெரிஞ்சு வச்சிருக்கீங்க. ஆனா இஸ்லாத்தைப் பத்தி சரியா புரிஞ்சு வைக்கலே.
நீங்க சொல்லுற மாதிரி “அல்லாஹ்”ங்குற கடவுள் கஃபாவுக்குள்ளே இருக்குறதா யாரும் சொல்லலீங்க. இறைவன் எல்லா இடத்திலும் நீக்கமற நெறஞ்சு இருக்குறான். தூணிலும் இருக்குறான் துரும்பிலும் இருக்குறான்னுதான் இந்து மதமும் கூறுது.
‘கஃபா’ ங்குறது வெறும் கல்மண்டபம். அதப்போயி எந்த முஸ்லீமும் வணங்குறதில்லே. இறைவழிபாட்டுக்காக உலகத்துலே நிறுவப்பட்ட முதல் ஆலயம் அது. இன்னும் சொல்லப்போனா உலகத்துலே இருக்குற எல்லா பள்ளிவாசலும் இறையில்லம்தானுங்க. ஒரு Discipline-க்காக எல்லா முஸ்லீம்களும் கட்டுப்பாடான முறையிலே, ஒழுங்கு முறையைக் கடைப்பிடிச்சு, ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி, ஒரே நேரத்துலே தொழறாங்க அவ்ளோதான். கூட்டுப் பிரார்த்தனையிலே ஒரு ‘பவர்புல் வேவ்ஸ்’ கிளம்புதுன்னு இந்துமத சாஸ்திரங்கள் கூட சொல்லுதுங்களே.
கடந்த 30 வருஷமா நான் வசிக்கிற நாட்டுலே தமிழ்மக்கள் நலனுக்காக, இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ சகோதரர்கள் எல்லோரும் ஒன்றிணைச்சு மதவேறுபாடு களைஞ்சு நாங்க பாடுபட்டு வர்றோமுங்க. அதுலே கிடைக்குற இன்பம் இருக்கே. ஆஹா.. அத அனுபவிச்சு பாத்தாதான் புரியும்.
உங்களுக்கும் எனக்கும் இதுக்கு முன்னாடி அறிமுகம் அறவே கெடையாது, அப்படியிருந்தும் நான் எந்த ‘இஸத்தைச்’ சேர்ந்தவன்னு ஆராய்ச்சி பண்ணுறீங்க. “சூஃபியிஸம்”ன்னு ஒரு முத்திரையை குத்துறீங்க. எனக்கு தெரிஞ்சதெல்லாம் ஒரே இஸம்தாங்க. அது HUMANISM.
அந்த இலக்கியப் பண்பாடு உங்கக்கிட்ட இல்லே, இருந்துச்சுன்னா ஒருத்தவன் பொறந்த ஊரை வச்சு அவனை தரக்குறைவா விமர்சனம் பண்ண மாட்டீங்க, நான் நாகூர்காரன்தாங்க. அதனாலே What is your Problem?
எங்க ஊரு, எத்தனையோ படைப்பாளிகளை தமிழ்மொழிக்கு வேண்டி அர்ப்பணிச்சுருக்கு. நீங்க ‘போட்டுக் கொடுக்குற’ காரியத்தை தவிர உருப்படியா இலக்கியத்துக்காக ஏதாவது செஞ்சிருக்கீங்களா?
“நீ இந்த உலகத்தில் மனிதனாய்ப் பிறந்ததற்கு ஏதேனும் ஒரு நினைவுச் சின்னத்தை விட்டுச் செல்ல வேண்டும்” ன்னு சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்காரு. நீங்க வெறும் அவமானச் சின்னங்களைதான் இதுவரை இணயத்துலே விட்டுச் சென்றிருக்கீங்க. உக்காந்து யோசிச்சுப் பாருங்க அப்போ புரியும்,
மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டா திகழ்கிற கவிக்கோ ஐயா, அண்ணன் நாகூர் ஹனீபா போன்ற ஜாம்பவன்களையே நீங்க கழுகு மரத்துலே ஏத்தும்போது, நான் வெறும் பிஸ்கோத்துங்க.
ஒண்ணு மட்டும் சொல்றேன். தப்பா நெனச்சுக்க மாட்டீங்களே? .இஸ்லாத்தைப் பத்தி நிறைய தெரிஞ்சுக்கணும்னு ஆசை உங்களுக்கு இருக்கு. இந்து மதத்துலே இருக்குற எத்தனையோ நல்ல விஷயங்களை நானும் அப்பப்போ தெரிஞ்சுக்கிட்டு வர்ரேன்.
நீங்க மட்டும் அந்த கறுப்பு கண்ணாடியே கழட்டி வச்சிட்டு பாத்தீங்கன்னு வச்சுக்குங்க. அப்பறமா நீங்களும் ‘உஜாலா’வுக்கு மாறிடுவீங்க.
சும்மா ட்ரை பண்ணிதான் பாருங்களேன். குட் லக்.
அப்துல் கையூம்
vapuchi@hotmail.com
Copyright:thinnai.com
Friday, 15 May 2009
Subscribe to:
Posts (Atom)