‘மதம்’ பிடித்த மலேசியா!
ரவிக்குமார் எம்.எல்.ஏ. ஜூனியர் விகடன் 29 July 2007
மத நம்பிக்கை எப்படித் தீவிரவாதமாக உருவெடுத்து இருக்கிறது என்பதைத் தற்போது பாகிஸ்தானில் நடந்து வரும் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் மட்டுமல்லாமல் மலேசியாவிலும்கூட இப்போது மதவெறித் தீவிரவாதம் பெருகி வருவதைப் பார்க்க முடிகிறது. அங்கே சமீபத்தில் நடந்த சம்பவமொன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரேவதி மசோசை என்ற 29 வயது பெண்ணுக்கு மலேசியாவில் நேர்ந்த கொடுமைகளைப் பார்க்கும் போது மலேசியாவில் இருப்பது ஜனநாயக அரசாங்கம் தானா என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. ரேவதியின் பெற்றோர் இந்துவாக இருந்து முஸ்லிமாக மாறியவர்கள். ரேவதிக்கு அவர்கள் வைத்த பெயர் சித்தி ஃபாத்திமா. ஆனால், அவர் இந்துவாகவே இருக் கும் தனது பாட்டியிடம் வளர்ந்தார். 2001&ல் தனது பெயரை ரேவதி என்று மாற்றிக்கொண்டார். 2004&ம் ஆண்டு சுரேஷ் வீரப்பன் என்ற இந்து இளைஞரைத் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இப்போது ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
தன்னை இந்து மதத்தைச் சேர்ந்தவராக அறிவிக்க வேண்டுமென ரேவதி மலேசிய நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார். அதுதான் அவர் செய்த மிகப்பெரிய தவறு என்றாகி விட்டது.
அவர் உடனே, இஸ்லாமிய சீர்திருத்த மையத்துக்கு அனுப்பப்பட்டார். ஆறு மாதங்கள் அவர் அங்கே இருக்க வேண்டுமென நீதிமன்றம் கூறிவிட்டது. சீர்திருத்த மையம் என்பது ஒருவகை சிறைதான். இஸ்லாம் மதத்தை விட்டு மாற விரும்பிய ரேவதியை மனம் மாற்ற அங்கு பல்வேறு வழிமுறைகள் கையாளப் பட்டன. சைவ உணவுப் பழக்கம் உள்ள அவருக்கு பலவந்தமாக மாட்டிறைச்சி தரப்பட்டது. ஆனாலும், அவர் முஸ்லிமாக நீடிக்க விரும்பவில்லையென்று தெரிவித்து விட்டார். தனக்கு நேர்ந்த கொடுமைகளை இப்போது அவர் பகிரங்கப்படுத்தி உள்ளார்.
மலேசியாவின் பிரதமராக மஹாதிர் முகமது இருந்த போது 2001&ம் ஆண்டில் மலேசியாவை முஸ்லிம் நாடு என அவர் அறிவித்தார். அதன்பிறகு அங்கே இரண்டு விதமான நீதி அமைப்புகள் உருவாக்கப்பட்டன. முஸ்லிம்களுக்கு ஷரியா நீதிமன்றங்கள். மற்றவர்களுக்கு ‘சாதாரண’ நீதிமன்றங்கள். சுமார் இரண்டரை கோடி மக்கள் தொகை கொண்ட மலேசியாவில் 51 சதவிகிதம் பேர் மலாய் சமூகத்தினர். அங்கே சுமார் 27 சதவிகிதம் சீனர்கள் உள்ளனர். 8 சதவிகிதம் அளவுக்கு இந்தியர்கள் வாழ்கின்றனர். இந்தியர்களில் பெரும் பான்மையானவர்கள் தமிழர்கள்தான். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அழைத்து செல்லப்பட்டவர்களின் சந்ததி யினரே இப்போது அங்கு வாழும் தமிழர்களில் பெரும் பகுதியானவர்கள். அதுபோல, இலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்ட தமிழர்களும் அங்கே உள்ளனர்.
மலேசியா மீது படையெடுத்துச் சென்று தமது ஆதிக் கத்தை நிலை நாட்டி ‘கடாரம் வென்றான்’ என்று அழைக்கப்பட்ட முதலாம் ராஜேந்திர சோழனின் நினைவாலோ என்னவோ தற்போதைய மலேசிய அரசு தமிழர்களைப் பகைமையோடே பார்த்து வருகிறது. பதினான்கு மாகாணங்களைக் கொண்ட நாடாக விளங் கிய மலேசியாவிலிருந்து 1965&ல் சிங்கப்பூர் பிரிந்து சென்று தனி நாடானது. உலகின் வர்த்தக மையங்களில் ஒன்றாக சிங்கப்பூர் இப்போது வளர்ந்து விட்டது. ஆனால், மலேசியாவோ பழமைவாதத்தை நோக்கித் திரும்பிச் செல்வதுபோல் தெரிகிறது.
பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சியின்போது மலேசிய நாட்டின் வளங்கள் பெரும்பாலும் சீனர்களின் கட்டுப் பாட்டில் இருந்தன. 1957&ல் சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னரும் சிறுபான்மை இனத்தவரான சீனர்களின் பொருளாதார ஆதிக்கம் மலேசியாவில் தொடர்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாத மலாய் மக்கள் கிளர்ந் தெழுந்தனர். 1964 மற்றும் 1969&ம் ஆண்டுகளில் சீனர் களுக்கும் மலாய் இனத்தவர்களுக்கும் இடையே பெரும் கலவரம் மூண்டு ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 1969&ல் நாட்டில் அவசர நிலை பிறப் பிக்கப்பட்டு 1971 வரை அது தொடர்ந்தது.
சீனர்களோடு உள்ள பகைமையைப்போல இந்திய வம்சாவளியினரோடு மலாய்காரர்களுக்குப் பகைமை இருந்ததில்லை. ஆனால், அந்த நாடு இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்ட பிறகு நிலைமை மாறிவருகிறது. இந்தியர்களை இப்போது அவர்கள் இணக்கமாகப் பார்ப்பதில்லை. அதன் ஒரு வெளிப்பாடுதான் ரேவதி மசோசையின் வழக்கு.
மலாய்\சீன கலவரத்துக்குப் பிறகு மலேசியாவில் ‘பூமிபுத்திரர்கள்’ என்ற மண்ணின் மைந்தர்களுக்கான திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி மலாய் காரர்களுக்கே அனைத்திலும் முன்னுரிமை, மற்றவர்கள் எல்லோரும் இரண்டாந்தர குடிமக்களாகவே நடத்தப் பட்டனர். இந்தக் கொள்கையால் பொதுத்துறை நிறுவனங்கள் மலாய்காரர்கள் வசம் சென்றன. தனியார் துறையோ சீனர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதில் எதுவுமில்லாமல் நடுத்தெருவில் விடப் பட்டவர்கள் தமிழர்கள்தான். அவர்களின் நலன் பற்றி இந்திய அரசும் கவலைப்படவில்லை.
தற்போது மலேசியாவில் சுமார் இருபது லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களது உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்பட்டு வருகின்றன. சுதந்திரமடைந்து ஐம்பது ஆண்டுகள் ஆனதையட்டி பொன்விழா கொண்டாடிக் கொண்டிருக்கும் மலேசியாவில் தமிழர்கள் சொல்லவொண்ணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அரசாங் கத்திடம் பதிவு செய்துகொள்ளவில்லை எனக் காரணம்காட்டி தமிழர்களது கோயில்கள் இடிக்கப் படுவது அங்கே தொடர்கதையாகி விட்டது. புதிதாக கோயில்களைக் கட்டுவதற்கும் தமிழர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. 2001&ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கோலாலம்பூரின் புறநகர் பகுதியில் இந்திய வம்சாவளியினர் மீது மலாய்காரர்கள் தாக்குதல் நடத்தியதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
மலேசியாவில் வாழும் மூன்றாவது பெரிய இனமாகத் தமிழர்கள் இருந்தபோதிலும் அவர்கள் பெரும்பாலும் கூலிகளாகவே வைக்கப்பட்டுள்ளனர். இந்தோனேசியர்கள் வேறு இப்போது அதில் போட்டிக்கு வந்து விட்டதால் தமிழர்களுக்கு கூலி வேலை கூட கிடைப்பது அரிதாகி விட்டது. கல்வியிலும் அவர் களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. மண்ணின் மைந்தர்களுக்கான ‘பூமிபுத்திரர்கள்’ கொள்கையால் கல்வி நிறுவனங்களில் பெரும்பாலான இடங்கள் மலாய் காரர்களுக்கே அளிக்கப்படுகின்றன.
2001&ம் ஆண்டு கலவரத்தைப் பற்றிய உண்மை களும்கூட வெளி உலகுக்குத் தெரியாதபடி மறைக்கப் பட்டன. அதைப்பற்றி ஆறுமுகம் என்பவர் கடந்த ஆண்டு நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். ‘மார்ச்\8’ என்று தலைப்பிடப்பட்ட அந்தப் புத்தகத்தை மலேசிய அரசு உடனடியாகத் தடை செய்துவிட்டது. கடந்த ஆண்டில் மட்டும் மலேசிய அரசு ஐம்பத்தாறு நூல்களைத் தடை செய்திருக்கிறது. அதில் குண்டலினி பற்றிய புத்தகமும் ஒன்று. இன்ஜினீயராக இருந்து வழக் கறிஞராக மாறியிருக்கும் ஆறுமுகம், தனது நூலைத் தடை செய்ததை எதிர்த்து இப்போது நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறார்.
மலேசியாவில் இந்துக்கள்தான் இப்படி கொடுமைப் படுத்தப்படுகிறார்கள் என்றில்லை. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும்கூட இதே கதிதான். 1997&ம் ஆண்டு லீனா ஜாய் என்ற பெண் தன்னை கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவராக அறிவிக்கும்படி தேசிய பதிவுத்துறையை அணுகினார். ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இஸ்லாமைத் துறக்க ஷரியா நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கவில்லை என்று காரணம் கூறப்பட்டது. அவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். ஆனால், மலாய் இனத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் முஸ்லிம்களே என அரசியலமைப்புச் சட்டம் கூறுவதை சுட்டிக்காட்டி நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்தது. அதன் பிறகு அவர் மேல் முறையீட்டு நீதிமன்றத்துக்குச் சென்றார். அங்கும் அவரது கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது. மலேசியாவின் உச்ச நீதிமன்றமான ஃபெடரல் கோர்ட்டில் லீனாஜாய் மனு செய்தார். இந்த ஆண்டு மே மாதம் முப்பதாம் தேதி அந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. ஷரியா நீதிமன்றம் மட்டுமே இதில் தீர்ப்பு வழங்க முடியும் என்று ஃபெடரல் கோர்ட் நீதிபதிகள் கூறிவிட்டனர். மலேசியா எந்த அளவுக்கு மதவாதத்தில் ஆழ்ந்து போயிருக்கிறது என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணமாகும்.
மலேசியாவில் எவர் வேண்டுமானாலும் முஸ்லிம் ஆகிவிட முடியும். ஒருவர் முஸ்லிமாக மாறினால் அவரது மைனர் குழந்தைகளும் முஸ்லிமாக மாறிவிட்டதாகவே பொருள் என மலேசிய சட்டம் கூறுகிறது. ஆனால், ஒருவர் இஸ்லாத்திலிருந்து வெளியேற நினைத்தால் அங்கே அது நடக்காது. இஸ்லாத்தைத் தழுவுவது ஏறத்தாழ ஒரு வழிப்பாதையாகவே வைக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் தற்போதைய பிரதமர் அப்துல்லா அஹமது படாவி, இந்தப் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என்று கூறியுள்ளார். ஆனால், அதற்கான வழி எதுவும் இப்போதைக்குத் தெரிய வில்லை.
மலேசியாவை மதச்சார்பற்ற நாடாக மாற்றுவதற்கான ஜனநாயக முயற்சிகளை மேற்கொள்ளக்கூடிய அமைப்பு எதுவும் அங்கே இல்லை. பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு எதிர்ப்பு என்ற வடிவில் முதலில் முற்போக்காக வெளிப் பட்ட மலாய் தேசியவாதம், கடந்த ஐம்பது ஆண்டுகளில் பேரினவாதமாகவும் முஸ்லிம் அடிப்படைவாதமாகவும் மாறியுள்ளது. அந்த நாட்டின் சிறுபான்மை சமூகமாக உள்ள தமிழர்களின் உரிமை அதனால் முழுவதுமாகப் பறிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பௌத்தத்தின் பெயரால் வெளிப்படும் பேரினவாதம், மலேசியாவில் இஸ்லாத்தின் பெயரால் கொடுமை செய்கிறது. எல்லா நாடுகளிலும் பாதிக்கப் படுபவர்கள் என்னவோ தமிழர்களாகவே இருக்கிறார்கள். மலேசியாவில் தீவிரமடைந்து வரும் மதவெறி குறித்து ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் முதலிய அமைப்புகள் எச்சரித்துள்ளன. ஆனாலும், மலேசிய ஆட்சியாளர்கள் அதைக் கேட்பதாக இல்லை.
மலேசியாவில் ஆட்சியில் உள்ள கூட்டணியில் தமிழர் கட்சியான மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியும் ஒரு பங்காளியாக இருந்தபோதிலும் அதனால் பதவி சுகத்தை அனுபவிக்க முடிந்த அளவுக்குத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க முடியவில்லை என்று மலேசியத் தமிழர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தியப் பிரதிநிதிகளும் பங்கு பெற்ற ‘தேசியப் பொருளாதார ஆலோசனை மன்றம்’ என்ற அரசாங்க அமைப்பின் சார்பில் தமிழர்களின் மேம்பாட்டுக்காக சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. ரப்பர் தோட்டங்களில் பாலர் பள்ளிகள் திறக்கப்படவேண்டும்; தமிழ்ப்பள்ளிகளுக்கு முழுமையான அரசாங்க நிதி உதவி அளிக்கப்படவேண்டும்; இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், அதற்கான பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; இந்தியர்களுக்கு வங்கியும், இன்ஷ¨ரன்ஸ் நிறுவனமும் துவக்கப்பட வேண்டும்; இந்திய மாணவர்கள் உயர் கல்வி பெறுவதற்கு சிறப்பு உதவித்தொகை வழங்க வேண்டும் முதலிய பரிந்துரைகளை அந்த அமைப்பு செய்திருந்தது. இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு பதினேழு ஆண்டுகள் சென்று விட்டன. மலேசிய அரசு இதில் ஒன்றையும் நிறைவேற்றவில்லை. ஆட்சியில் பங்கெடுத்துவரும் மலேசிய இந்திய காங்கிரஸ§ம் இதுபற்றி வாய் திறப்பதில்லையென்று தமிழர்கள் குறை கூறுகின்றனர்.
உலகம் முழுவதும் பரவி நிற்கும் தமிழினம் எல்லா நாடுகளையும் வளப்படுத்தத் தனது உழைப்பைச் செலுத்தி வருகிறது. ஆனால், எல்லா நாடுகளிலும் அது ஒதுக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டே கிடக்கிறது. மலேசியாவுக்கு அடிக்கடி தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்கள் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்திப் பொருள் ஈட்டி வருகிறார்கள். மற்றும் பல பெருமக்களும்கூட அங்கு சென்று திரும்பு கிறார்கள். ஆனால், மலேசியாவில் வாழும் தமிழர் நிலை குறித்து அக்கறைகாட்ட வேண்டும் என்று அவர்கள் இந்திய அரசையோ, தமிழக அரசையோ இதுவரை வலியுறுத் தியதாகத் தெரியவில்லை. இன்றைய நிலை நீடித்தால் மலேசியாவில் தமிழர்களே இல்லை என்னும் நிலை சில ஆண்டுகளில் ஏற்படலாம். அங்கு வாழும் தமிழர்களின் சனநாயக உரிமைகள் காக்கப்பட உலகத் தமிழர்களின் தலைவராக விளங்கும் நம் தமிழக முதல்வர் கொஞ்சம் கவனம் செலுத்தவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.
Copyright(C) vikatan.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment