Thursday September 20, 2007
By எஸ் மெய்யப்பன்
அத்தியாயம் பத்து
விபூதி யோகம்
விபூதி என்றால் மகிமை அல்லது மகத்துவம் என்று பொருள். இறைவன் எங்கும் நிறைந்தவன். எல்லாமானவன்ƒ அளவுக்கடங்காத இவ்வுலகனைத்தும் அவனது ஆளுகைக்கு உட்பட்டிருக்கின்றன. இக்கருத்துக்கள் இதில் விளக்கப் பெற்றுள்ளன.
இதில் 42 சுலோகங்கள் அடங்கியுள்ளன.
-----------
கண்ணன்: தடந்தோள் தனஞ்சயா, நீ என் அன்புக்குரியவன். நான் சொல்வதை விரும்பிக் கேட்பவன். நல்லது செய்யக் கருதி நான் உனக்குக் கூறும் உயர்ந்த தத்துவம் கேள்.
எனது பெருமையைத் தேவரும் முனிவரும் கூட அறிய மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அனைவருக்கும் நானே மூலகாரணம்1. பிறப்பும் மூலமும் அற்றவனாய், நாயகன் எனும் பெயர் பெற்றவனாய் விளங்கும் என்னை உண்மையாக அறிந்து கொண்டவன், சகல பாவங்களில் இருந்தும் விடுபட்டவன். அறிவும் தெளிவும், பொறுமையும் வாய்மையும், அடக்கமும் அமைதியும், இன்பமும் துன்பமும், பிறப்பும் இறப்பும், அச்சமும் துணிவும், புகழ்ச்சியும் இகழ்ச்சியும், திருப்தியும் சமநிலையும், தவமும் தானமும், மனதின் மயக்கமும், மற்றும் அஹிம்சையும் என்னிடம் இருந்தே தோன்றுகின்றன. பிறகு தான் பிராணிகளின் மேல் கால் ஊன்றுகின்றன. 2மகரிஷிகள் எழுவரும், 3மனுக்கள் நால்வரும், 4மனுக்களும் என் மனத்தால் பிறப்பிக்கப்பட்டவர்கள். இவர்களின் பரம்பரை தான் இவ்வுலக மக்கள். இந்த என் பெருமையை அறிந்தவன், யோக சக்தியைப் புரிந்தவன்; அசைக்க முடியாத யோக நிலை அடைந்தவன். இதில் சந்தேகமே இல்லை. உலகின் தோற்றத்திற்கும் அதன் மாற்றத்திற்கும் நானே காரணம் என்பதை நன்கறிந்தவன் என்னைத் தொழுகிறான். என்னைப் பற்றியே பேசிப்பேசி மகிழ்கிறான் பிறருக்குப் போதனைகள் செய்கிறான். என்மேல் உயிரையே பெய்கிறான். மனம் நிறைந்து உய்கிறான்ƒ அவனுக்கு நான் புத்தியோகம் அளிக்கிறேன் உள்ளத்தில் கருணை தெளிக்கிறேன். ஞான விளக்கினால் அறியாமை அழிக்கிறேன். அதனால் அவன் எனையடைந்து செழிக்கிறான்.
அர்ஜுனன்: கேசவா‚ நீயே பரம்பொருள் நீயே நிலைத்தவன் நீயே தூயவன் நீயே நாயகன் நீயே ஒளிர்பவன். நீயே உயர்ந்தவன் நீயே மூலதேவன் எங்கும் நிறைந்தவன் பிறப்பிலாச் சிறந்தவன் இதைத்தான் எல்லா ரிஷிகளும், 5தேவரிஷி நாரதரும், அசிதர், தேவலர், வியாசர் ஆகியவர்களும் சொல்லுகிறார்கள். அதையே தான் நீயும் கூறுகிறாய். அனைத்தையும் நான் நம்புகிறேன். ஆனால் ஒன்று. அரக்கரும் தேவரும் நிச்சயம் இதை அறியமாட்டார்கள். உயிர்களின் ஈசனான உலக நாயகனே‚ உன்னை நீயே தான் அறிவாய்‚ எங்கும் நீக்கமற எந்த மகிமையால் நீ நிறைந்துள்ளாயோ அதை மிச்சம் மீதயின்றி எனக்குச் சொல்லுவாயாக‚ உன்னை எப்படி நினைப்பது? எப்படி தொழுவது? அமுதம் போன்ற உன் மகிமைகளைக் கேட்கக் கேட்க எனக்குத் திகட்டவே இல்லை‚ மீண்டும் அவற்றை எனக்கு விரிவாக விளக்கிச் சொல்‚
கண்ணன்: அப்படியே ஆகட்டும் அர்ஜுனா, மங்களகரமான என் மகிமைகளில் முக்கியமானவற்றை மட்டும் விளக்குவேன். நான்முகனாகிய படைப்புக் கடவுள் நானே‚ அனைத்து ஜீவராசிகளின் இதயத்திற்குள்ளும் இருப்பவன் நானே, அவற்றின் முதலும், முடிவும், நடுவும் நானே‚ பிராணிகளில் உள்ள உயிரும் நானே, மேலும் கேள் அர்ஜுனா,
பன்னிரண்டு 6ஆதித்தியர்களில் விஷ்ணு நான்ƒ ஒளி விடும் கிரகங்களில் சூரியன் நான். நட்சத்திரங்களில் சந்திரன் நான். காற்று 7வகைகளில் மரீசி நான் அது மட்டுமல்ல‚ 8வேதங்களில் நான் சாமவேதம். புலன்களில் நான் உயர்ந்த மனம். தேவர்களில் நான் இந்திரன். 9ருத்ரர்களில் நான் சங்கரன் 10யட்ச ராட்சசர்களில் நான் குபேரன் 11அஷ்ட வசுக்களில் நான் அக்கினி. மலைகளில் நான் மகா மேரு. புரோகிதரில் நான் 12பிருகஸ்பதி சேனாபதிகளில் நான் முருகவேள். நீர்நிலைகளில் நான் நீள்கடல். மகரிஷிகளில் நான் 13பிருகு. சொற்களில் நான் ஓங்காரம் வேள்விகளில் நான் ஐபம் உறுதியில் நான் இமயம் தேவமுனிவரில் நான் நாரதர் 14கந்தர்வரில் நான் சித்ர ரதன். 15சித்தர்களில் நான் கபில முனி பசுக்களில் நான் காமதேனு குதிரைகளில் நான் உச்சை சிரவஸ் யானைகளில் நான் ஐராவதம். மரங்களில் நான் அரச மரம் மனிதர்களில் நான் சக்கரவர்த்தி ஆயுதங்களில் நான் வஜ்ராயுதம் பாம்புகளில் நான் வாசுகி. படைப்பவர்களில் நான் மன்மதன் நாகங்களில் நான் அனந்தன் என்ற ஆதிசேஷன் நீர் தேவதைகளில் நான் வருணன். பிதிர்க்களில் நான் அரியமான். அடக்குபவரில் நான் யமன் அரக்கர்களில் நான் பிரகலாதன் கணிப்பவர்களில் நான் காலம். விலங்குகளில் நான் சிம்மம். பறவைகளில் நான் கருடன் தூய்மையிலே நான் காற்று வீரர்களில் நான் ராமன் மீன்களிலே நான் மகரம். நதிகளில் நான் ஜான்ஹவீ (கங்கை).
வித்தைகளில் நான் ஆத்ம வித்தை. தர்க்கங்களில் நான் வாதம். எழுத்துக்களில் நான் அகரம். புணர்ச்சிகளில் நான் துவந்துவம். கானங்களில் நான் பிருகத்சாமம். சந்தங்களில் நான் காயத்ரீ. மாதங்களில் நான் மார்கழி. காலங்களில் நான் வசந்தம். யாதவர்களில் நான் வாசு தேவன். பாண்டவர்களில் நான் அர்ஜுனன். புத்திக் கூர்மையில் நான் சுக்கிராச்சாரி. இரகசியங்களில் நான் மௌனம்.
மேலும் கேள் பார்த்திபா, எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளும் மரணம் நானே, பிறக்கின்றவர்களின் பிறப்பும் நானே, ஏமாற்றுகிறவர்களின் சூதாட்டம் நானே‚ ஒளிமிக்கவர்களின் பிரகாசம் நானே‚ தண்டிப்பவர்களின் செங்கோல் நானே, வெற்றி விரும்பிகளின் நீதியும் நானே‚ துறவிகளின் ஞானம் நானே‚ உயிர்களின் வித்தும் நானே‚ முடிவில்லாத காலமும் நானே‚ முயற்சியும் நானே‚ வெற்றியும் நானே, மங்கையர் தம் புகழ், புத்தி, செல்வம், பொறுமை, நினைவு, வாக்கு, திண்மை அனைத்தும் நானே, திறமை மிக்கது, செழுமை மிக்கது, நன்மை மிக்கது, நல்லொளியும் மிக்கது. அத்தனையும் என் சாயலின் தோற்றமே, நானில்லாமல் இந்த உலகமே இல்லை, ஆம், என் மகிமைகளுக்கு ஒரு முடிவே இல்லை, அதில் ஒரு சிறு துளியே இப்போது நான் சொல்லியிருப்பது‚ பன்னிப்பன்னி இதைப் பகர்ந்திடத் தேவையில்லை. என்னிடம் மிளிர்ந்திடும் இத்தனை அம்சங்களில் ஓரே ஓர் அம்சத்தால் உலகையே தாங்கி நிற்கிறேன் என்பதை நீ அறிந்து கொண்டால் அதுவே போதும்.
(பத்தாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)
1.இறைவனுக்குத் தாய் இல்லை, தந்தை இல்லை, மகன் இல்லை, உறவினர் இல்லை, ஆசை இல்லை, மனைவி இல்லை. மூலம் அறியப்படாத தூய்மை வடிவான அவன், எங்கும் நிறைந்த ஒளியாவான். - குரு நானக்
2.சப்தரிஷிகள்: ஒவ்வொரு மன்வந்த்ரத்திலும் இவர்கள் வேறானவர்கள். இந்த சுவேதவ்ராக கல்பத்தில் முதல் மன்வந்த்ரமான ஸ்வாயம்புவ மன்வந்த்ரத்தில் தோன்றிய மகரிஷிகளே இங்கு முன்னவர்களாகக் கூறப் பட்டவர்கள். மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலகர், கிரது, வசிஷ்டர் எனும், எழுவர். இப்பொழுது நடக்கும் வைவஸ்தவ மன்வந்த்ரதத்திற்குரிய சப்தரிஷிகள்: அத்ரி, வசிஷ்டர், விசுவாமித்திரர், ஜமதக்னி, பரத்வாஜர், கவுதமர், காசியபர். - உரையாசிரியர் அண்ணா
3.நால்வர்கள்: சனகர், சநந்தனர், சனாதனர், சனத்குமாரர். சப்தரிஷிகள் பிரவிருத்தி மார்க்கத்தைக் காட்டியது போல், இவர்கள் நிவிருத்தி மார்க்கத்தைக் காட்டியவர்கள். இவர்களுடைய பிரஜைகள் ஞானப் புதல்வர்கள். இவர்களின் வம்சம் ஞானிகள் பரம்பரை. - உரையாசிரியர் அண்ணா
4.மனுக்கள்: பிரம்மாவின் ஒரு பகலாகிய கல்பத்தில் 14 மனுக்கள் இப்போது நடக்கும் சுவேதவராக கல்பத்தின் மனுக்கள் ஸ்வாயம்புவர், ஸ்வாரோசிஷர், உத்தமர், தாமசர், ரைவதர், சாச்சுஷர், வைவஸ்தவர், சாவர்ணி, தச்சாசாவர்ணி, பிரம்மசாவர்ணி, தர்மசாவர்ணி, ருத்ரசாவர்ணி, தேவசாவர்ணி, இந்திரசாவர்ணி எனப் பதினால்வர். இப்போது நடைபெறுவது 7-வது, அதாவது வைவஸ்த மன்வந்த்ரம். - உரையாசிரியர் அண்ணா
ஒவ்வொரு மன்வந்த்ரத்திலும் மனு, தேவர்கள், மனுபுத்திரர்கள், இந்திரன், ரிஷிகள், பகவானுடைய அம்சாவதாரம் என்று ஆறு இடங்களில் பகவானுடைய விபூதிகள் முக்கியமாய் விளங்கும். - பாகவதம்
5.தேவரிஷிகள்: தேவலோகத்தில் வசிக்கக் கூடியவராகவும், முக்கலை ஞானிகளாகவும், சத்திய விரதர்களாகவும், இயற்கையில் சம்புத்தர்களாயினும் இச்சா மாத்திரத்தால் உலகியல் சம்பந்தத்தை ஏற்பவர்களாகவும், எங்கும் தடையின்றிச் செல்லக் கூடியவர்களாகவும், உள்ளவர்கள் தேவர்களாயினும் மனிதர்களாயினும் தேவரிஷிகளாவர். இவர்களில் சிலர்: நரநாராயணர், வால்கில்யரிஷிகள், கர்த்தமர், பர்வதர், நாரதர், அசிதர், வத்சரர். இவர்கள் தேவர்களையும் அடக்கியாளக் கூடியவர்கள். - வாயு புராணம்.
6.ஆதித்யர் பன்னிருவர்: தாதா, மித்ரன், அர்யமா, இந்திரன், வருணன், அம்சன், பகன், விவஸ்வான் (சூரியன்), பூஷா, சவிதா, த்வஷ்டா, விஷ்ணு. கடைசி புதல்வனான விஷ்ணு குணத்திற் சிறந்தவன். இவர்கள் அனைவரும் கசியபருக்கு அதிதி தேவியிடம் பிறந்தவர்கள். - மகாபாரதம்.
7.மருத் கணங்கள் அல்லது காற்று தேவதைகள் காசியருக்குத் திதி தேவியிடம் பிறந்த 49 புத்திரர்கள் மருத் கணங்கள் ஆவர். திதி தேவியின் மற்ற புத்திரர்கள் அசுர குணம் உடையவர்கள். மருத்துக்கள் தேவர்களாயினர். அவர்களில் சிறந்தவன் மரீசி.
8.தேவர்கள்: முப்பத்தி மூவர்.
9.ருத்ரர்கள் பதினொருவர்: ஹரன், பகுபேன், திரியம்பகன், அபராஜிதன், விருஷாகபி, சம்பு, சங்கரன், கபர்த்தீ, ரைவதன், மருகவ்யாதன், சர்வன், கபாலி, இவர்களில் சம்புமூர்த்தியான சங்கரன் மங்களங்களை அளிப்பவன். இந்தப் பதினொருவரும் பிரம்மாவின் நெற்றிக் கண்ணில் உதித்தவர்கள். - ஹரிவம்சம்
10.யட்ச ராட்சசர்கள்: புலஸ்திய ரிஷியின் புத்திரர்கள் அகஸ்தியர், விச்ரவஸ் இவர்களில் விச்சிரவசுக்கு ஒரு மனைவியிடம் யட்சர்களுக்குத் தலைவனான குபேரனும் இன்னொரு ராட்சச மனைவியிடம் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் ஆகியோர் புத்திரர்கள். - பாகவதம்
11.அஷ்ட வசுக்கள்: தரன், துருவன், சோமன், அகஸ், வாயு, அக்கினி, ப்ரத்யுஷன், ப்ரபாசன். இவர்களில் அக்கினி சிறந்தவன். இவர்கள் பிரம்மபுத்திரராகிய தர்மர், தட்சன் குமாரியாகிய வசுதேவியிடம் பெற்ற பிள்ளைகள்.
12.பிருகஸ்பதி: அக்கிரச மகரிஷியின் புத்திரர். தேவேந்திரனுடைய புரோகிதர். தேவர்களுக்கெல்லாம் குரு.
13.பிருகு: முன் ஏழு மகரிஷிகளில் முக்கியமானவர்.
14.கந்தர்வர்: தேவர்களில் ஒரு வகையினர். ஆடல் பாடல்களில் சிறந்தவர்கள்.
15.சித்தர்கள்: அஷ்டமா சித்திகளைப் பெற்றதுடன் தருமம், ஞானம், வைராக்கியம் நிறையப் பெற்றவர்கள். காமதேனு, உச்சைசிரவஸ்,
ஐராவதம்: பாற்கடலைக் கடைந்த போது உண்டானவை.
வஜ்ரம்: ததீசி முனிவர் தேவர்களிடம் கருணை கொண்டு தபோ மயமான தன் சரீரத்தை அவர்களுக்காக தியாகம் செய்தார். அவருடைய முதுகெலும்பால் அமைந்தது இந்திரனுடைய வஜ்ராயுதம். அதனால் அது ஆயுதங்களுள் சிறந்ததாயிற்று.
வாசுகி: பாற்கடலில் அமுதம் கடைந்தபோது வாசுகி நாணாக அமைந்தது. இது சர்ப்பங்களின் அரசன்.
வருணன்: சமுத்திர ராஜன். எட்டு திக்குப் பாலகர்களில் ஒருவன். அர்யமன்: கவ்வவாகன், அனலன், சோமன், யமன், அர்யமா, அக்னிஷ்வாத்தா, பர்கிஷத் என்பவர் ஏழு வகைப் பிதிரர்கள்.
யமன்: இந்த மன்வந்தரத்தில் இவர் விவஸ்வானுடைய புத்திரராகிய வைவஸ்தவர். நல்லோர்களிடம் அறக் கருணையும் தீயோர்களிடம் மறக் கருணையும் காட்டுபவர். இவர் தருமத்தை நிலை நாட்டும் லோகபாலருள் ஒருவர். ஞானத்திலும் கருமத்திலும் பக்தியிலும் சிறந்தவர்.
அரக்கர்கள்: கசியபருக்குத் திதிதேவியிடம் பிறந்த புத்திரர்களின் வம்சம். இரண்யகசிபு, இரண்யாட்சன் முதலிய அசுரர்கள் பரம்பரை. இவ்வம்சத்தில் சிறந்தவன் பிரகலாதன்.
வைனதேயன்: தட்சன் மகள் வினதைக்குப் பிறந்தவன் இதனால் வைனதேயன் என்று பெயர். பகவானுடைய வாகனம். தேவஸ்வரூபியாக வர்ணிக்கப்பட்டவர்.
ஜான்ஹவீ: சதீ தேவி தட்ச யாகத்தில் தன் சரீரத்தை விட்ட பின்பு, தேவர்கள் பிரார்த்தனைக்கிணங்கி மறுபடி இமவானுக்கும் மேனகைக்கும் மகளாக இரண்டு வடிவங்களில் அவதரிப்பதாய் வாக்களித்தாள். ஒரு வடிவம் சாகரமூர்த்தி பார்வதி மற்றொரு வடிவம் அருஷருவம். பிரம்மாவின் கமண்டலத்திலிருந்து நீர் வடிவம் பெற்று சொர்க்கம், அந்தரிட்சம், பூலோகம் ஆகிய மூவுலகையும் பாவனமாக்கிக் கொண்டு பாய்ந்தாள். ஜன்ஹீ மகரிஷி ஆசிரமத்தில் பாய்ந்து, அவர் ஆசமனம் செய்து பின் அவர் விட, மேலே பாய்ந்து சென்றதால் ஜான்ஹவீ என்ற காரணப் பெயர் ஏற்பட்டது. - பிருகத் தர்ம புராணம்.
ஆத்மவித்தை: ரிக் வேதம், யஜீர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம், சிட்சை, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜோதிசம் முதலியன அபர வித்தை, அட்சரப் பொருள் எதனால் உணரப்படுமோ, அது பரவித்தை அல்லது ஆத்மவித்தை. - முண்டக உபநிடதம்
வாதம்: தர்க்கம் மூன்று வகையானது. நியாயம் பார்க்காமல் தன் கட்சியையே பேசுதல் ஜல்பம். எதிர்கட்சியைக் கண்டித்து பேசுதல் விதண்டை. கோபத்துக்கும் துவேஷத்துக்கும் இடம் கொடாமல் பாரபட்சமின்றி நியாயத்தை விசாரித்தல் வாதம்.
துவந்துவம்: சொற்களின் புணர்ச்சி சமஸ்கிருதத்தில் நான்கு வகை. (1) அவ்யயீ (2ம் அதிஹரி) (2) தத்புருவி (சீதாபதி) (3) பஹீவ்ரிகி (பீதாம்பரம்) (4) துவந்துவம் (ராம லட்சுமணன்). துவந்துவப் புணர்ச்சியில் புணரும் புதங்கள் இரண்டுக்கும் சமப்பிரதானம். - உரையாசிரியர் அண்ணா
சுக்கிராச்சாரி: பிருகு மகரிஷியின் புத்திரர்ƒ சஞ்;சீவினி வித்தையில் வஜ்ர சகீரம் படைத்தவர். யோக வித்தையில் நிபுணர்ƒ அரக்கர்களின் புரோகிதர்.
சூதாட்டம்: இங்கு சூதாட்டம் ஒரு மகிமையாகக் கூறப்பட்டதால், மனதைக் கவரும் அதன் சக்தியைக் கண்டு, சிங்கத்தினிடம் பயப்படுவது போல் பயப்பட வேண்டும் என்ற கருத்தேயன்றி, சூதாடுவது நல்லது என்பதன்று. - உரையாசிரியர் அண்ணா
(காலஞ்சென்ற திரு எஸ் மெய்யப்பன் உலக மக்கள்தொகைத் திட்டத்தின் உறுப்பினராய் தமிழ் நாட்டு அரசுப் பணியில் இருந்தவர்.சௌடீஸ்வரி மலர் என்ற மாத இதழின் ஆசிரியராய் இருந்தவர். )
No comments:
Post a Comment