Friday, 28 September 2007

திண்ணை கட்டுரை - K.ரவி ஸ்ரீநிவாஸ் - வன்முறையே வழிகாட்டி நெறியா?

Thursday September 27, 2007
வன்முறையே வழிகாட்டி நெறியா?
K.ரவி ஸ்ரீநிவாஸ்

ராமர் பாலம் குறித்த சர்ச்சைக்கள் வன்முறைக்கு இட்டுச் சென்றிருப்பது கண்டிக்க வேண்டியது. பெங்களூரில் கருணாநிதியின் மகள் வீட்டில் நடந்த தாக்குதல், பேருந்து எரிக்கப்பட்டு இருவர் மரணமடைந்தது - இவற்றை செய்தவர்களை சட்டப்படித் தண்டிப்பதே முறையாகும். வேதாந்தி தான் அவ்வாறு சொல்லவில்லை என்று மறுத்திருந்தாலும் மத நூல்களை காரணம் காட்டி வன்முறைக்கு தூண்டுவதோ, நியாயப்படுத்துவதோ சரியல்ல. அதையும் சட்ட ரீதியாகவே எதிர் கொள்ள வேண்டும். ஆனால் இவறிற்கு பதிலாக ஏவப்படும் வன்முறை மிகவும் மோசமானது. அதற்கு பதில் வன்முறை என்ற சுழற்சிக்கு அது இட்டுச் செல்லக்கூடும். தமிழ் நாட்டில் பாஜக அலுவலகம் தாக்கப்படுகிறது, கொடிக்கம்பங்கள் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன, அலுவலகங்கள் மீதும், தனி நபர் வீடுகள் மீதும் தாக்குதல் நடைபெறுகிறது. இதைக் கண்டிக்காமல் இவற்றிற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவும், மகிழ்ச்சியினை தெரிவிக்கும் போக்கு இருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது. பாஜகவையும், ஹிந்த்துவ அமைப்புகளையும் கொள்கை ரீதியாக, அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும், வன்முறை மூலம் அவற்றை எதிர்கொள்வது விரும்பத்தகாத விளைவுகளுக்கே இட்டுச் செல்லும்.

தீக்கதிரில் வெளியான ஒரு தலையங்கம் இந்த வன்முறைகளைக் கண்டிக்கவில்லை. மாறாக பாஜக ஒரு பாசிசக் கட்சி என்று பதில் சொல்கிறது. அந்தக் கட்டுரையில் அவ்வளவும் சொல்லிவிட்டு இறுதியாக சொல்லப்படுவது இது.

"இந்த தாக்குதல்களை எதிர்த்து - சேது திட்டத்தை முடக்க அவர்கள் செய்யும் சாகசங் களை எதிர்த்து மக்களைத் திரட்ட வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை. ஆளும் திமுக வுக்கு அதில் அதிகப் பொறுப்புண்டு. ஆயினும் அந்த ஆர்ப்பாட்டங்கள் கட்டுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியதும் ஆட்சியாளர்கள் பொறுப்பே. ஏனெனில் பாசிஸ்டுகளை எதிர்த்த போராட்டத்தையும், ஜனநாயக வழியிலேயே நடத்த வேண்டும். அதுதான் இன்றைய காலத்தின் கட்டளை."

(பாசிஸ்டுகள் யார்? காலத்தின் கட்டளை எது?-http://www.theekkathir.in/index.asp)

இக்கட்டுரை ஏதோ பாஜகவும், ஹிந்த்துவ அமைப்புகள்தான் அனைத்து வன்முறைகளுக்கும் காரணம் என்றத் தொனியைத் தருகிறது. மண்டைக்காடு கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ் குறித்து நீதிபதி வேணுகோபல் கமிஷன் கூறியதை எடுத்துக்காட்டுபவர்கள் அது கிறித்துவ அமைப்புகள் குறித்து கூறியதையும் சொல்ல வேண்டும். கேரளாவில் கம்யுனிஸ்ட்கள் நடத்தாத வன்முறையா, வெறியாட்டமா. மேலும் இந்தியாவில் அனைத்து மதக்கலவரங்களுக்கும் பாஜகவையும், சங்க பரிவாரங்களையும் குறை கூறுவது முறையன்று. அது சரியானகண்ணோட்டமுமல்ல. ஆனால் இடதுசாரிகளைப் பொருத்தவரை இப்படி ஒருபட்சமாக எழுதுவதும்,. பேசுவதும் வழக்கமாகிவிட்டது.

இந்தியாவில் எங்காவது ஒரிடத்தில் ஒரு சர்ச்சில் சன்னல் கதவுகளை யாரேனும் உடைத்துவிட்டால் கூட அய்யோ மதசார்பின்மைக்கு ஆபத்து என்று அறிக்கை விடும் சிபிஐ(எம்) தலைவர்கள்/பொலிட்பீரோ இதுவரை தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட வன்முறைகளை, குறிப்பாக பாஜக அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டிக்கவில்லை. இந்த வன்முறையை மேலே சுட்டிக்காட்டபட்ட தலையங்கமும் கண்டிக்கவில்லை.

சிபிஐ(எம்) இந்த விவகாரத்தில் தொடர்ந்து ஒரு பொய்யைப் பரப்பி வருகிறார்கள். இந்த்துவ அமைப்புகள், பாஜக இந்த திட்டத்தினை எதிர்க்கவில்லை, ராமர் பாலம் இதனால் பாதிப்படையக்கூடாது என்றுதான் கோருகிறார்கள் என்ற உண்மையை மறைத்து விட்டு பொய்ப் பிராச்சரம் செய்கிறார்கள். இந்தப் பொய்ப்பிரச்சாரம் அகில இந்திய அளவிலும், தமிழக அளவிலும் செய்யப்படுகிறது. இங்கு சர்ச்சை ராமர் பாலம் குறித்துதான், திட்டத்தின் தேவை குறித்து அல்ல என்பதை இடதுசாரிகளும், தமிழ் நாட்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் மூடி மறைத்துவிட்டு பாஜக/இந்த்துவ அமைப்புகளுக்கு எதிரான ஒன்றாக மாற்றுகிறார்கள். இதன் மூலம் பாஜக/இந்த்துவ அமைப்புகள் தமிழர்கள் நலனுக்கு, தமிழ் நாட்டிற்கு எதிரிகள் என்ற கருத்தினைப் பரப்புகிரார்கள். குஜராத்தில் நர்மதை திட்டத்தினை எதிர்ப்பவர்கள் குஜராத்தின் எதிரிகள்/துரோகிகள் என்று மோடி சொன்னால் அது கலாச்சார பாசிசமாகிவிடும். சேதுசமுத்திரம் திட்டத்தினை எதிர்ப்பவர்கள் துரோகிகள் என்று கருணாநிதி சொன்னால் இடதுசாரிகள் கைதட்டி வரவேற்ப்பார்கள், அதே கருத்தையே தாங்களும் பரப்புவார்கள். இந்த துரோகிகளை தாக்கினால் சரிதான் என்று இவர்கள் நேரடியாக வாதிடமாட்டார்கள், ஆனால் வன்முறையை மறைமுகமாக நியாயப்படுத்துவார்கள். நீ அன்றைக்கு அவர்களை, இவர்களை அடித்தாயே, இன்று நீ அடிவாங்கினால் அது சரிதான் என்பது இங்கு சொல்லாமல் சொல்லப்படுகிறது.

மொகலாயர் காலத்தில் இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டன, அந்தக் கணக்கினை இப்போது தீர்த்துக் கொள்கிறோம் என்ற வாதத்திற்கும், இன்று வன்முறைக்கு மறைமுகமாக நியாயம் கற்பிக்கும் தீக்கதிரின் வாதமும் ஒரே அணுகுமுறையின் அடிப்படையில்தான் அமைகின்றன. முன்னது மத வெறி, பின்னது மதச்சார்பற்ற கன்ணோட்டம் என்று வாதிடுவது சரியல்ல. இரண்டும் பழிக்கு பழி வன்முறை என்ற கருத்தினையே வலியுறுத்துகின்றன. பாஜகவோ, இந்த்துவ அமைப்புகளோ மீதான வன்முறை தவறு, அவர்களை இப்படி எதிர்கொள்வது மத சார்பற்ற கண்ணோட்டமல்ல என்ற நிலைப்பாட்டினை சிபிஐ(எம்) எடுக்கவில்லை. மாறாக அது வெறுப்பினையும், காழ்ப்புணர்வினையும் வளர்க்கிறது.

தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் தன் இணைய தளத்தில் காலச்சக்கரம் சுழல்கிறது என்ற தலைப்பில் ஒரு சிறு குறிப்பினை வெளியிடுகிறது. http://www.tmmkonline.org/tml/others/109044.htm

அதில் இரண்டு புகைப்படங்கள் உள்ளன. இறுதியில் குறிப்பிடப்படுகிறது " அன்று மிரட்டியவர்கள், இன்று மிரட்டப்படுகிறார்கள். இறைவன் மிகப் பெரியவன். அவன் பொறுமையாளர்களோடு இருக்கிறான்". சென்னையில் பாஜக தலைமயகத்தினை தாக்குபவர்கள் 'போராட்டக்காரார்கள்' என்று இக்குறிப்பில் குறிப்பிடப்படுகிறார்கள். கல்லை எடுத்து அடிப்பதும், வன்முறையில் ஈடுபடுவதும் போராட்டம் என்றால் அதன் பொருள் என்ன. குஜராத்தில் அன்று மிரட்டியவர்களுக்கும், இன்று பாஜக அலுவலகத்தில் அப்புகைப்பட்டத்தில் இருப்பவர்களுக்கும் என்ன தொடர்பு. இவர்களா அன்று குஜராத்தில் வன்முறையில் ஈடுபட்டார்கள், இல்லை இவர்கள் கருணாநிதியை கொன்றால் பரிசு என்று அறிவித்தார்களா. இக்குறிப்பின் மூலம் தமுமுக வன்முறையை நியாயப்படுத்துகிறது. இதில் இறைவன் மிகப் பெரியவன் என்று வேறு எழுதுகிறார்கள். இதன் மூலம் தமுமுக என்ன சொல்ல வருகிறது, அன்று குஜராத்தில் பாஜக ஆட்சியில் மதக்கலவரம் நடந்தது, முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டார்கள், இன்று சென்னையில் பாஜக அலுவலகம் தாக்கப்படுகிறது, உள்ளிருப்பவர்கள் அஞ்சுகிறார்கள். காலச்சக்கரம் சுழல்கிறது, இன்று நீங்கள் அடி வாங்குவது சரி. எத்தகைய வாதம் அது. இந்த தர்க்கத்தினை இந்துத்துவ அமைப்புகள் நீட்டித்து வன்முறையில் இறங்கினால் அது சரியாகுமா.
பாஜகவை அரசியல் ரீதியாக எதிர் கொள்ள வேண்டியவர்கள், இப்படி வன்முறைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரிக்கிறார்கள் என்றால் மக்கள் கலை இலக்கிய கழகம் (ம.க.இ.க), அதன் ஆதரவாளர்கள் அத்வானி தலைக்கு இவ்வளவு விலை என்று சுவரொட்டி ஒட்டுகிறார்கள். வலைப்பதிவுகளில் இந்த வன்முறை குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள். பார்பபன வெறுப்பும் இதில் இடம் பெறுகிறது. குடுமி மறைத்து வந்தாலும் என்றே தலைப்பிட்டு எழுதுகிறார்கள். உதாரணமாக

http://potteakadai.blogspot.com/2007/09/blog-post_24.html
http://kedayam.blogspot.com/2007/09/blog-post_25.html
http://kedayam.blogspot.com/2007/09/blog-post_24.html
http://www.poar-parai.blogspot.com/

இது போன்ற போக்கினைத்தான் பெரியார் சிலை தாக்கப்படதற்கு எதிரடியாக பெரியார் தி.கவினரும், ம.க.இ.க வினரும் வன்முறையில் ஈடுபட்ட போது காண முடிந்தது. அப்போதும் அந்த வன்முறையை நியாயப்படுத்தித்தான் அவர்கள் எழுதினார்கள், பேட்டி கொடுத்தார்கள்.தா.பாண்டியன் அப்போது அந்த வன்முறையை மறைமுகமாக ஆதரித்துப் பேசினார். இடதுசாரிகள் இந்த வன்முறையை பெயரளவிற்கு எதிர்த்தார்கள். குஜராத்திலோ அல்லது ராஜஸ்த்தானிலோ ஒரு பாதிரியாரின் ஆடை கிழிக்கப்பட்டால் கூட கூக்குரல் எழுப்பியிருப்பார்கள்,அகில இந்திய அளவில் அறிக்கைகள் வெளியிட்டு, பாராளுமன்றத்தில் கூக்குரல் எழுப்பியிருப்பிபார்கள். அதற்கு ஆதரவாக பிரபுல் பித்வாய், ராம் புனியானி போன்ற போலி மதச்சார்பின்னைவாதிகள் எழுதித் தள்ளியிருப்பார்கள். ஆனால் தமிழ் நாட்டிம் பெரியார் சிலை தாக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கு தொடர்பே இல்லாதவர்கள் தாக்கப்பட்டதை, வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடைபெற்றதை இங்குள்ள இடதுசாரிகள் பெயரளவிற்கு, ஏதோ ஒப்புக்கு எதிர்த்தன. அப்போதும் இந்த்துவ அமைப்புகளுக்கு எதிரான பிரச்சாரத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது, இந்துக்களின் மத உணர்வுகள், உரிமைகளுக்கல்ல.
பாஜக/இந்த்துவ அமைப்புகளை அரசியல்/கொள்கை ரீதியாக ஆதரிக்காத இந்துக்கள் கூட அரசு இந்துக்களின் உணர்வினை மதித்து ராமர் பாலம் பாதிப்புறா வண்ணம் மாற்றுப் பாதைகளை பரீசீலிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதில் உள்ள நியாயத்தினை இடதுசாரிகளும், திமுகவின் தோழமைக் கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறின்றி அவ்வுணர்வுகள் மதிக்கப்படாமல் பாஜகவிற்கான எதிரான ஒன்றாக இந்தச் சர்ச்சையை திசை திருப்புவது குறுகிய கால நோக்கில் பலன் தரலாம், ஆனால் நீண்ட கால நோக்கில் அது எதிர்மறையான விளைவுகளை உருவாக்கும்.

மத்திய அரசு கோரிப் பெற்றுள்ள மூன்று மாத காலத்தினை சுமுகத் தீர்வு எட்டுவதற்காக பயன்படுத்த வேண்டும். அத்தகைய தீர்வு உருவாவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். ஆனால் கருணாநிதியின் பேச்சுக்கள், அவற்றிற்கான இடதுசாரிகளின் ஆதரவும் அதற்கு எதிரான திசையில் இருக்கின்றன. இந்துக்களின் மத உணர்வுகளை இடதுசாரிகள் அலட்சியம் செய்கின்றனர். தங்களது மதச்சார்பின்மைக் கண்ணோட்டம் எவ்வளவு போலியானது, பாரபட்சமானது என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டனர். இதை பாஜக எதிர்ப்பு அரசியலாக மாற்றி விட்டனர். எனவே இன்று பாஜக/இந்த்துவ அமைப்புகளை ஆதரிக்காத இந்துக்கள் கூட எதிர்காலத்தில் அவர்களுக்கு ஆதரவாளர்களாக மாறும் சூழல்தான் உருவாகும். இந்துக்களின் உண்ர்வுகளை மதிக்க வேண்டும் என்று கோரியதால்தான் பாஜக/இந்த்துவ அமைப்புகள் தாக்கப்படுகின்றன என்ற எண்ணம்தான் இந்துக்கள் மத்தியில் வலுப்பெறும். இந்துக்களின் உணர்வுகளை மதிக்கும் அமைப்புகள்தான் , அரசியல் கட்சிகள்தான் தங்கள் ஆதரவினைப் பெறத் தகுதியானவை என்று இந்துக்களில் மிகப் பெரும்பான்மையினர் கருதும் சூழ்நிலை ஏற்பட்டால் அதானல் ஆதாயம் பெறப் போவது பாஜகதான். இந்த வன்முறை தொடருமானால் அத்தகைய சூழ்நிலை உருவாக அது ஒரு முக்கிய காரணியாக அமைந்து விடும். இடது சாரிகளும், முற்போக்கு, மதத்சார்பற்ற என்று சொல்லிகொள்ளும் அமைப்புகளும் அதைத் தான் விரும்புகின்றன என்றால் அவர்கள் தங்கள் நிலைப்பாடுகளை குறிப்பாக வன்முறையை நியாயப்படுத்துவது, ஆதரிப்பதை தொடர்ந்து செய்யட்டும்.

பிற்குறிப்பு:
இடதுசாரிக் கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் சிபிஐ, சிபிஐ(எம்) - இரண்டும் மதவாத, ஜாதியவாதக் கட்சிகளாகி விட்டன. இவற்றை மதசார்ப்பற்ற கட்சிகள் என்று நான் கருதமாட்டேன். மதச்சார்பின்மை என்பது சிறுபான்மையினர் சார்பு, பாஜக/இந்த்துவ எதிர்ப்பு என்பதாக குறுக்கப்பட்டுள்ளது. இதை இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்ளும் கட்சிகள், அமைப்புகள் உட்பட பலரும் செய்கிறார்கள். எனவே இன்றுள்ள சூழலில் இந்தியாவில் உள்ள இடதுசாரி, முற்போக்கு அமைப்புகள், அவறிற்கு ஆதரவு தரும் அறிவு ஜீவிகளை எந்த அளவிற்கு உண்மையான மதச்சார்பின்மையளர்கள் என்றுதான் கேட்க வேண்டியுள்ளது. பெரியார் தி.க, ம.க.இ.க போன்றவை வெளிப்படையாக வன்முறையை ஆதரிக்கும், நடைமுறைப்படுத்தும் அமைப்புகள், இயக்கங்கள். பெரியார் தி.க பிராமணர்கள், ஜைனத் துறவிகள் மீதான தன் வன்முறையை நியாயப்படுத்திய அமைப்பு. வெளிப்படையாக, இந்து மதத்தினையும், இந்தியாவையும் சிதறடிப்பதே தங்கள் நோக்கம் என்று அதன் தலைவர் கொளத்தூர் மணி பேசியிருக்கிறார். இத்தகைய அமைப்பினைத்தான் எஸ்.வி.ராஜதுரை புகழ்ந்து பேசுகிறார், ஆதரிக்கிறார். எனவே இன்று முற்போக்கு,மதச்சார்பின்மை என்ற பெயர்கள்/முத்திரைகளுக்கு பின்னால் உள்ள அரசியலைப் புரிந்து கொள்வது அவசியமாகிறது. அது இந்துமத எதிர்ப்பு, இந்தியா என்கிற தேசத்திற்கான எதிர்ப்பு, பிரிவினைவாதத்திற்கான ஆதரவு, கண்மூடித்தனமான அமெரிக்க/இஸ்ரேல் எதிர்ப்பு என்பதாக இருக்கும் போது அதை முற்போக்கு என்றோ, மதச்சார்பின்மை என்றோ ஏற்கமுடியாது. வேறொரு கோணத்தில் பார்த்தால் இன்று முற்போக்கு, இடதுசாரி என்பது குறுகிய கண்ணோட்டங்களாக சுருக்கப்பட்டுள்ளது. ஒரு தாராளவாத(liberal) கண்ணோட்டமாகக் கூட அது இல்லை. மாறாக அது அடையாள அரசியலுக்கான (identity politics) ஆதரவு என்ற பெயரில் சமத்துவத்தினை நிராகரித்துவிட்டு, ஜாதிய, மத அரசியலுக்கு துணையாக இருக்கிறது. சிபிஐ, சிபிஐ(எம்) என்ற இரண்டு கட்சிகளும் இன்று இப்படிப்பட்ட கொள்கைகளை இன்று கொண்டிருக்கின்றன. இன்றுள்ள சூழலில் பாஜக/இந்த்துவத்தினை எதிர்க்கும் அமைப்புகள், இயக்கங்களின் போக்குகள்,நிலைப்படுகள் எனக்கு பல நேரங்களில் ஏற்க இயலாதவைகளாக உள்ளன. ராமர் பாலம் பிரச்சினை உட்பட பலவற்றில் இன்று முற்போக்கு, இடதுசாரி நிலைப்பாடு(கள்) என்று முன்வைக்கப்படும் நிலைப்பாடுகளை, குறிப்பாக இட ஒதுக்கீடு, குறித்த நிலைப்பாடுகளை நான் ஏற்கவில்லை. இது 123 ஒப்பந்தத்திற்கும் பொருந்தும். 123 ஒப்பந்தத்தில் சில பிரச்சினைகள் இருந்தாலும், அணுசக்தி குறித்து எனக்கு ஐயப்பாடுகள் இருந்தாலும், அதை நான் நிராகரிக்கவில்லை, அது தேச விரோதமானது என்று கருதவும் இல்லை. முடிந்தால் வேறொரு சந்தர்ப்பத்தில் இதை விரிவாகப் பேசலாம்.

No comments: