Tuesday 25 March, 2008

திபெத் விவகாரங்கள் குறித்த தகவல்கள் (4)

Dinamani 24 March 2008 Editorial

திபெத் எனும் தீப்பொறி

திபெத்தின் தலைநகர் லாசாவில் புத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் சீன அரசுக்கு எதிராகக் கொதித்தெழுந்த சம்பவம், அங்கே அடக்குமுறை ஆட்சி நடைபெறுகிறது என்பதை மேலும் உறுதிப்படுத்தி இருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களைப்போல அல்லாமல், 19 பேரின் உயிரைப் பலி வாங்கிய இந்தப் போராட்டம் உலகெங்கிலும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருப்பதில் வியப்பில்லை.

பல்வேறு நாடுகளின் உள்நாட்டுப் பிரச்னைகளில் அமெரிக்கா தேவையில்லாமல் மூக்கை நுழைப்பது வழக்கம். அது தனது சுய ஆதாயத்திற்காகவும், தனது ஏகாதிபத்திய லட்சியத்தை முன்னிறுத்தியும் செய்யப்படுபவை என்பதிலும் நமக்கு நிச்சயமாகக் கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால், திபெத் விஷயத்தில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலூசி வெளியிட்டிருக்கும் கருத்தை ஆமோதிக்க மறுப்பது என்பது மனித நேயமற்றவர்களால் மட்டும்தான் முடியும்.

""திபெத்தில் நடக்கும் அடக்குமுறைகளைப் பற்றி பேசாவிட்டால், உலகில் மனித உரிமை மீறல் பற்றி பேசும் தார்மிக உரிமையை இழந்து விடுவோம்'' என்கிற நான்சி பெலூசியின் கருத்தை நமது இந்திய அரசு ஏன் எதிரொலிக்கவில்லை என்பது புரியவில்லை.

இராக் மற்றும் பாலஸ்தீனத்தில் அமெரிக்காவின் பங்கு எத்தகையதோ அதைவிட மோசமான அணுகுமுறையை திபெத்தில் சீனா கையாள்கிறது என்பது உலகத்துக்குத் தெரிகிறது. ஆனால், இந்திய அரசுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை?

1959ஆம் ஆண்டு திபெத் நாட்டின் அரசியல் மற்றும் ஆன்மிகத் தலைவரான தலாய் லாமா சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குப் பயந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். தலைநகர் லாசாவைக் கைப்பற்றிய சீனப் படைகள், 86 ஆயிரம் திபெத்தியர்களைக் கொன்று குவித்தது. அன்று முதல் இன்று வரை திபெத், சீனாவின் அடக்குமுறை ஆட்சியில் தொடர்கிறது. தலாய் லாமா இமாசலப் பிரதேசத்திலுள்ள தர்மசாலாவில் தங்கி இருக்கிறார்.

திபெத்தைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று அவர் கேட்கவில்லை. ஹாங்காங்குக்கு இருப்பதுபோல சுயாட்சி அதிகாரம்தான் கேட்கிறார். தங்களது கலாசாரத்துக்குப் பாதுகாப்புக் கேட்கிறார். ஆனால், அதைக்கூடத் தர மறுக்கிறது சீன அரசு. இதை விமர்சிக்கத் துணிவில்லாமல், மௌனம் காக்கிறது இந்திய அரசு. சீனாவின் உள்நாட்டுப் பிரச்னை என்று திபெத்தைப் பற்றி இந்தியா கூறுகிறது.

பிரம்மபுத்ரா, சட்லெஜ் மற்றும் சிந்து நதிகள் திபெத்தில்தான் உற்பத்தியாகின்றன. சீனா நினைத்தால், கர்நாடகம், தமிழகத்துக்குச் செய்யும் அதே துரோகத்தை எப்போது வேண்டுமானாலும் செய்ய முடியும். இந்த நதிகளில் அணைகட்டி, அவற்றிலுள்ள தண்ணீரைத் திசைதிருப்பினால், இந்தியா வறண்ட பிரதேசமாகிவிடும். இது தெரிந்துதான் ஜவாஹர்லால் நேருவும், இந்திரா காந்தியும், தலாய் லாமாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டி அடைக்கலம் கொடுத்தார்கள். அதுகூட, அவர்களது வாரிசுகளுக்குத் தெரியவில்லையே, ஏன்?

திபெத்தை ஆக்கிரமித்திருக்கும் சீனா, இந்தியாவின் பகுதிகளையும் ஆக்கிரமித்திருக்கிறது. அருணாசலப் பிரதேசத்துக்கு சொந்தம் கொண்டாடுகிறது. அந்தமான் தீவுகள் மீது தனது பார்வையைச் செலுத்துகிறது.

இதெல்லாம் தெரிந்திருந்தும் இந்திய அரசு மௌனம் சாதிக்கிறது, அது ஏன்?
இந்திய அரசு மௌனம் சாதிப்பது இருக்கட்டும். நமது இடதுசாரிக் கட்சிகள் இந்த விஷயத்தில் சீனாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களே, அது ஏன்?

பாலஸ்தீனத்திலும், வியத்நாமிலும், ஆப்கானிஸ்தானிலும், இராக்கிலும் அமெரிக்கா தலையிட்டது எந்த அளவுக்குத் தவறோ அதே அளவு தவறைத்தான் சீனா திபெத்தில் செய்திருக்கிறது. அதைப்பற்றி ஏன் மௌனம் சாதிக்கிறார்கள் நமது இடதுசாரிகள்? இவர்களுக்கு தேசபக்தியைவிட சீனபக்தி அதிகமாக இருப்பது ஏன்?

முதலாளித்துவ ஏகாதிபத்தியம் செய்தால் தவறு, ஆனால் பொதுவுடைமை ஏகாதிபத்தியம் செய்தால் மட்டும் அது சரியா?

திபெத் என்பது சீனாவின் உள்நாட்டுப் பிரச்னை அல்ல. மனித உரிமை மீறல் பிரச்னை. மக்களின் விருப்பத்துக்கு எதிராக அடக்குமுறை மூலம் யார் ஆட்சி செலுத்த முயன்றாலும் அதை எதிர்க்கும் தார்மிகக் கடமை இந்தியாவுக்கு உண்டு. இலங்கையில் ஆனாலும், பாலஸ்தீனத்தில் ஆனாலும், இராக்கில் ஆனாலும், திபெத்தில் ஆனாலும் அடக்குமுறைக்கு எதிராகக் குரலெழுப்ப மறுத்தால், சரித்திரம் நம்மை மன்னிக்காது!

No comments: