Monday 31 March, 2008

வஹ்ஹபி கமெடிக்கு கோபால் ராஜாராம் திண்ணையில் பதில்

Friday March 28, 2008
திண்ணைப் பேச்சு - அன்புள்ள வஹாபி
கோபால் ராஜாராம்

எல்லாக் குழந்தைகளும் முஸ்லிமாய்ப் பிறக்கிறது என்று எனக்குத் தெரியாத அரபி மொழியில் ஏதோ, சொல்லியிருக்கிற வஹாபியின் கடிதம் கண்டு நான் மனமாரச் சிரித்தேன். நான் பிறந்தது நிர்வாணமாக. அம்மா-அப்பா குரொமோசோம்களின் கலவையும், முன்னோர்களின் மரபணுப் பதிவின் கலவையுமாகப் பிறந்த நான் ஒரு எழுதப் படாத சிலேட் தான். அதற்குப் பின்பு என் பெற்றோர், என் சூழல், என் ஆசிரியர்கள், படித்தது, கேட்டது என்று ஐயப் பாடுகளும், சிந்தனைகளும் பெற்று வளர்ந்து நிற்கிற ஒருவன் நான்.

எல்லோருமே அப்படித்தான், வஹாபி உட்பட. பிறக்கும்போதே சாதி, மதம், சொல்லப்போனால் பாலின உணர்வு கூடப் பெறுவதில்லை என்று அறிவியல் சொல்கிறது. எனவே தான் கிருஸ்துவ மதத்தில் ஓரளவு சிறுவர் சிறுமியர் வளர்ந்த பிறகு அவர்களுக்கு ஞானஸ்நானம் வழங்கப் படுகிறது. யூத மதத்திலும் அவ்வாறே. இப்படி வஹாபி எழுதுவது இஸ்லாமியராய் அல்லாத 400 கோடி மக்களை அவமதிப்பது மட்டுமல்ல, இஸ்லாம் என்ற மதத்தையும் அவமதிப்பது போலத்தான். அறிவு பெற்றபிறகு பகுத்தறிவால் ஆய்ந்து உணர்ந்து தேர்வு செய்துகொள்கிற நம்பிக்கை தான் உண்மையானதாய் , ஒரு மனிதனின் இயல்பிற்குத் தக்கதாய் இருக்க முடியும். மிரட்டலாலும், இப்படி பிறக்கும்போதே இஸ்லாமியனாய்ப் பிறந்தாய் என்றெல்லாம் பொய் சொல்லி ஆள் சேர்க்கிற அளவு இஸ்லாம் பலவீனமானது என்று நான் நம்பவில்லை.

இஸ்லாம் பற்றிய புகழுரையை வழங்கியுள்ள அநேகம் பேரை மேற்கோள் காட்டுவதன் மூலம் வஹாபி என்ன சொல்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை. இஸ்லாம் பற்றி விமர்சனங்களை முன்வைத்த பலநூறு பேரையும் என்னால் மேற்கோள் காட்ட முடியும். ஆனால் வஹாபி காட்டும் மேற்கோள்களும் சரி, இஸ்லாமை விமர்சனம் செய்பவர்களின் மேற்கோள்களும் சரி எதனுடைய நிரூபணமும் அல்ல. ஒரு குறிப்பிட்ட பார்வையிலிருந்து செய்யப் படுகிற பாராட்டு அல்லது விமர்சனம், அதன் பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்ளத் தக்கதே தவிர சீர்தூக்கிய முடிவல்ல. அதை வேதவாக்காய்க் கொண்டு இஸ்லாமைப் புகழ்வதோ, இகழ்வதோ தவறு. இது இஸ்லாமிற்கு மட்டுமல்ல, எல்லா மதங்களுக்கும் பொருந்தும்.

அமெரிக்காவில் மிக வேகமாக வளர்கிற மதம் இஸ்லாம் என்ற புள்ளி விவரம் தவறு என்று சொல்கிறார்கள். அப்படி இருந்தால் கூட அது இஸ்லாமின் தகுதியைக் காட்டிலும், அமெரிக்காவின் பல்கலாசாரப் பண்பிற்கு ஒரு பாராட்டாகத் தான் அமையுமே தவிர வேறில்லை. இதே சுதந்திரம் இஸ்லாமியர் பெரும்பான்மையாய் உள்ள நாடுகளிலும் வழங்கப் படவேண்டும் என்று வஹாபி பிரார்த்தனை செய்யட்டும். பெரும்பான்மை வாதத்தால் மற்ற மதங்களின் உரிமைகள் நசுக்கப்படாத அமெரிக்கா போன்றே இரான், அரேபியா , எகிப்து போன்ற நாடுகளிலும் மதச்சுதந்திரம் வழங்கப் படவேண்டும் என்பது நம் கோரிக்கையாய் இருக்கட்டும். வஹாபி இதற்குப் பாடுபடுவார் குரல் கொடுப்பார் என்று நம்புவோம்.

****

பிறக்கும்போதே ஒரு மதத்தைப் பச்சை குத்திக் கொண்டு எல்லோரும் பிறக்கிறார்கள் என்ற வாதம் ஒரு தத்துவப் பிரசினையின் தொடக்கம். மனிதனின் இருப்பு முன் கூட்டியே நிர்ணயிக்கப் பட்டுவிட்டால், அவனுடைய சுயம் என்பது என்ன? சுதந்திரத் தேர்வு என்பது என்ன? அப்படித் தேர்வு இல்லையென்றால் அவன் செயல்களுக்கு அவன் எப்படி பொறுப்பாவான்? சொர்க்கம் நரகம் என்ற கருத்தாக்கம் எப்படி பொருள் கொள்ளும் என்பது ஒரு தத்துவப் பிரசினை. கிருஸ்துவ தத்துவத்தில் சுதந்திரத் தேர்வு மனிதனுக்கு உண்டா இல்லையா என்பது பற்றி பெரும் தத்துவ விசாரங்கள் நடந்து வந்திருக்கின்றன.

ஆனால் வஹாபி போன்றவர்களுக்கு இந்தத் தத்துவப் பிரசினையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. தயாராக உள்ள பதில்களைப் பதிவு செய்தால் போதும்.

****

1400 வருடங்கள் முன்பு இஸ்லாம் தோன்றவில்லை என்று வஹாபி சொல்வதும் எனக்கு விளங்கவில்லை. முகம்மது கார்ட்டூன்களுக்குத் தானே முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். மோசஸ், ஏசு பற்றி காமெடியும், கார்ட்டூன்களும் வழமையாய் எல்லா மேற்கு நாடுகளிலும் உண்டே அதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையே. முகம்மது தோன்றியிராவிட்டால் எப்படி இஸ்லாம் என்ற மதம் தோன்றியிருக்கும்?

****

1 comment:

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If ossible gives a last there on my blog, it is about the Aparelho de DVD, I hope you enjoy. The address is http://aparelho-dvd.blogspot.com. A hug.