Thursday, 2 April 2009

பாகிஸ்தான் பற்றிய தொடர் (24)

******************

1 April 2009

*****************
மர்மம் நிறைந்த தேசம்!


ஆடிப்பார்ப்பது என்று முடி வாகிவிட்டது. பிறகு, அது நீச்சல்குளமாக இருந்தால் என்ன... நீதிமன்றமாக இருந்தால் என்ன? நீதிபதி இஃப்திகாரை உச்ச நீதிமன்றத்துக்குள் நுழைந்து, ராணுவம் கைது செய்தது. இதற்காக நெடிய குற்றப்பத்திரிகை ஒன்று இஃப்திகாருக்குஎதிராகத் தயார் செய்யப்பட்டிருந்தது. ஊழல், லஞ்சம், அதிகார துஷ் பிரயோகம் இன்ன பிற குற்றச்சாட்டுகள்.

முஷ்ரப்பின் அடுத்தடுத்த நகர்வுகள் ஒவ்வொன்றும் பீதியைக் கொடுத்தன.
நவம்பர் 3, 2007. குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த ஜனநாயகத்தைத் தூக்கி ஐ.சி.யூ. சிகிச்சைப் பிரிவில் வைத்தார். எமர்ஜென்சி, அவசரத்துக்குப் பயன்படுத்தும் ஆயுத மாக மாறியிருந்தது. வழக்கம் போல வானொலி, தொலைக்காட்சி, விமான நிலையம், பத்திரிகைகள் என்று அனைத்து அத்தியாவசியக் கேந்திரங்களும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.
விநோதமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் முஷ்ரப். நீதிபதிகள் எல்லோரும் மீண்டும் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும். எமர்ஜென்சி ஸ்பெஷல் இது. நினைத்ததை எல்லாம் செயல் வடிவத்துக்குக் கொண்டுவர இதைவிட்டால் வேறு உசிதமான தருணம் கிடைக்காது அல்லவா? ஆகவே, அத்தனைக்கும் ஆசைப்பட்டார் முஷ்ரப். எதிர்ப்பு தெரிவிக்கலாமா என்ற யோசனையில் ஈடுபட்டவர் களைக்கூட கொத்துக் கொத்தாகக் கைது செய்து, சிறைக்கு அனுப்பியது ராணுவம்.

எதிர்க்கட்சியினர்,ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள். எல்லோரையும் சாலைக்கு வந்து சத்தம் போட்டவர்கள் அத்தனை பேரும், சிறைக்குஅனுப்பப்பட்டனர்.

இத்தனை கூத்துகளும் கொஞ்ச காலத்துக்குத்தான். ஏற்கெனவே அறிவித்திருந்தபடி தேர்தல் வேலைகள் சூடுபிடித்தன. இந்தத் தேர்தலில் முஷ்ரப்புக்கு எதிராக இரு பெரும் தலைவர்களான பெனாசிரும் நவாஸ§ம் கைகோத்திருந்தனர். வாருங்கள்... பொது எதிரியைப் பொது வில் வைத்துத் தோற்கடிப்போம். இருவருமே தலையசைத்தனர். காரணம், இருவருக்குமே வேறு வழியில்லை.தேர்தல் பிரசாரம் சூடுபிடித்தது. உற்சாகம் பொங்கப் பொதுக்கூட்டங்களில் பேசிக் கொண்டிருந்தார் பெனாசிர்.

விதி விளையாடியது. டிசம்பர் 27, 2007 அன்று பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார் பெனாசிர். மிகப்பெரிய இழப்பு. பாகிஸ் தான் மக்கள் ஒரு கணம் நிலைகுலைந்து போனார்கள்! தந்தை, மகள் இருவருடைய மரணங்களுமே தேசத்தை உலுக்கியெடுத்த நிகழ்வுகள்.
மெள்ள சுதாரித்த பாகிஸ்தான் மக்கள் கட்சியினர், பெனாசிரின் மகன் பிலாவல் புட்டோவை கட்சியின்தலைவராகத் தேர்வு செய்தனர். வயதில் மிகவும் இளையவரான பிலாவலின் படிப்பு முடியும் வரை பெனாசிரின் கணவர் ஆசிப் அலி சர்தாரி கட்சி நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.

முஷ்ரப்புக்கு எதிரான அணி தன்னு டைய மிகப்பெரிய பிரசார பீரங்கியை இழந்திருந்தது. ஆனாலும், அவர் சிந்திய ரத்தம் வெற்றியைக் கொடுக்கும் என்று அந்தக் கட்சியினர் பரிபூரணமாக நம்பினர். பிப்ரவரி 18, 2008 அன்று தேர்தல் நடத்தப்பட்டது. முடிவுகள் முஷ்ரப்புக்கு முடிவுரையாக அமைந்தன.
பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் நவாஸின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற இரண்டு கட்சிகளுக்கும் மக்கள் பெருவாரியான ஆதரவை வழங்கியிருந்தனர். பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த யூசுஃப் ராஸா கிலானி, பாகிஸ்தானின் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். 'மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். பிரதமருக்கு ஒத்துழைப்புக் கொடுப்பேன்.'

இப்படிச் சொல்வதைத் தவிர முஷ்ரப்புக்கு அப்போது வேறு வழியில்லை. ஆனாலும், 'கடந்த காலப் பிரச்னைகளுக்குக் கணக்கு தீர்த்தே ஆகவேண்டும்!' என்று இரண்டு கட்சிகளின் தலைமையும் முடிவுசெய்தன. அப்போது அவர்களுக்குத் தோன்றிய யோசனை இதுதான். நம்பிக்கையில்லாத் தீர்மானம். முஷ்ரப்புக்கு எதிராக.

தர்மசங்கடத்தில் நெளிந்தார் முஷ்ரப். சிங்கம் போல சிலிர்த்துக் கொண்டு திரிந்த தன்மீது இப்படியரு தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அதன் மூலம் வீட்டுக்குப் போவதை அவர் துளியும் ரசிக்க வில்லை. அவமானம் என்று நினைத்தார். ஆகஸ்ட் 18, 2008 அன்று தன்னுடைய அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

'நான் எந்தத் தவறும் செய்யவில்லை. என்மீது ஒரு குற்றச்சாட்டைக்கூட அவர்களால் நிரூபிக்க முடியாது. ஜனாதிபதி மீது தங்களுக்குள்ள ஈகோ காரணமாக நம்பிக் கையில்லாத் தீர்மானம் கொண்டுவருகிறார்கள். அதிபர் பதவியைவிட, பாகிஸ்தான் எனக்குப் பெரியது. உடனடியாகப் பதவி விலகுகிறேன். இந்த முடிவை என்னுடைய ஆதரவாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அடுத்து நான் என்ன செய்யவேண்டும் என்பதை மக்களிடமே விட்டுவிடுகிறேன். அவர்கள் தீர்ப்பு வழங்கட்டும்!'

அதிபர் நாற்காலி இப்போது காலியாக இருந்தது. வாஞ்சை நிறைந்த கண்களோடு அந்த நாற்காலியைப் பார்த்தார் ஆசிப் அலி சர்தாரி. அதிபர் ராஜினாமா செய்த முப்பது நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது பாகிஸ் தானின் சட்டம். ஆசிப் அலி சர்தாரியை அதிர்ஷ்டம் வாரி அணைத்துக்கொள்ள விரும்பியது. உடனடியாக நடத்தப் பட்ட தேர்தலில் போட்டியிட்ட சர்தாரி, கணிசமான வாக்கு கள் பெற்று அதிபர் நாற்காலியில் அமர்ந்தார்.

அப்போது சர்தாரி மீது பல குற்றச்சாட்டுகள் காற்றில் பறந்துகொண்டிருந்தன. எல்லாமே அரதப் பழசான குற்றச்சாட்டுகள். 'தீவிரவாதிகளுடன் சிநேகம் வளர்த்தவர்... ஊழல்வாதிகளுடன் ஊர் சுற்றியவர்... கமிஷன் ஏஜென்ட்களுடன் கலந்துரையாடியவர்...' இப்படி நிறைய குற்றச்சாட்டுகள். சிலவற்றுக்கு ஆதாரங்கள் இருந்தன. சில ஆதாரங்கள், சேதாரம் ஆகியிருந்தன. எல்லா குற்றச்சாட்டுகளையும் தூக்கிக் கடாசிவிட்டுப் போய்விட்டார் சர்தாரி.
தேர்தல் பிரசாரத்தின்போது முஷ்ரப்பால் பதவி நீக்கம் செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி இஃப்திகார் உள்ளிட்ட நீதிபதிகளை, தான் ஆட்சி அமைத்ததும் மீண்டும் நியமனம் செய்வேன் என்பது பெனாசிர் கொடுத்த வாக்குறுதி. அதை நிறைவேற்றவேண்டும் என்ற கோரிக்கை அவ்வப்போது எழுந்தது. ஆனால், இஃப்திகாரை நியமிப்பதில் சர்தாரிக்குத் துளியும் ஆர்வமில்லை.

முஷ்ரப் எந்த விஷயத்துக்காகப் பயந்துகொண்டு அவரை வீட்டுக்கு அனுப்பினாரோ, அதே பயம்தான் சர்தாரிக்கும். ஊழல் வழக்குகள் தூசி தட்டப்படுமோ என்று பயந்தார். கோரிக்கை எழுந்ததே தவிர வலுக்கவில்லை. இந்த சமயத்தில்தான் மும்பையில் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் அதிரடித் தாக்குதலை நிகழ்த்தி, மிகப் பெரிய அதிர்ச்சி அலைகளைப் பரவவிட்டிருந்தனர். பாகிஸ்தான் ஆதரவுடன் மட்டுமே இந்தத் தாக்குதலை நிகழ்த்தியிருக்க முடியும் என்பது இந்திய அரசின் சந்தேகம். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அடியோடு மறுத்தது பாகிஸ்தான்.

இரு தரப்பு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் இடையே நிகழ்ந்த வாதப் பிரதிவாதங்கள் இரு நாடு களுக்கும் இடையே போர் மூண்டுவிடுமோ என்று உலகநாடுகள் அச்சப்படும் அளவுக்குச் சென்றன. ஆனால், அப்படியரு நிலை ஏற்படவில்லை. இங்கிருந்து ஆதாரங்கள் அனுப்பப்பட்டன. அங்கிருந்து கேள்விக் கணைகள் வந்துவிழுந்தன. வட்டியும் முதலுமாக பதில் கடிதம் அனுப்பியது இந்தியா. தகவல் பரிமாற்றம் தங்கு தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது.

தற்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே பெரிய அளவிலான பதற்றம் ஏதும் இல்லை. ஆனால், உள்நாட்டுக்குள் ஏதோ ஒரு விவகாரம் புகைந்து கொண்டுதான் இருக்கிறது. கிரிக்கெட் விளையாட பாகிஸ்தானுக்கு வந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள், தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது. இது யாருடைய கைங்கர்யம் என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

இத்தனை கூத்துகளும் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், அங்கே ஒருவர் மட்டும் நுணுக்கமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தார். அவர் நவாஸ் ஷெரீப். ஆயிரத்தெட்டு ஆத்திரங்கள் அவருக்கு. வசதியான நாற்காலி கிடைக்கவில்லை. தேர்தலில் போட்டியிடுவதற்கு நீதிமன்றம் தடையை வேறு விதித்து வைத்திருந்தது. சகோதரர் ஷாபா ஷெரீப்புக்கும் அதுதான் நிலைமை. ஏதாவது செய்யவேண்டும் என்று விரும்பினார்.

சட்டென்று அவருடைய கவனத்தை ஈர்த்தது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இஃப்திகார் பதவி நியமன விவகாரம். ஏற்கெனவே இது விஷயமாகப் போராடிக் களைத்துப் போயிருந்த வழக்கறிஞர்களை அழைத்துப் பேசினார். 'நண்பர்களே, நான் இருக்கிறேன், போராடுங்கள்!' என்று ஊக்கப்படுத்தினார். நீதிபதி நியமனக் கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்தப்போவதாக அறிவித்தார்.

நெற்றியைச் சுருக்கினார் ராணுவத் தளபதி பர்வேஸ் கயானி. 'என்ன இவர்? பேரணி, போராட்டம் அது இது என்று மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கிறார். ம்ஹ¨ம். எதுவும் கூடாது. பிரசிடென்ட் சர்தாரி நவாஸ் அண்ட் கோ-வுக்கு கால் கட்டுப் போடுங்கள். இல்லாவிட்டால், அதை ராணுவம் செய்யவேண்டியிருக்கும்!' என்று சீறித்தள்ளினார்.

அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்த சர்தாரி, பேரணிக்குத் தடை விதித்தார். ஆனாலும், போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. மீண்டும் ராணுவ ஆட்சி வந்துவிடுமோ என்று எல்லோரும் பயந்த நேரத்தில் பிரதமர் கிலானி கொஞ்சம் இறங்கிவந்து பேசினார்.

'அவசரம் வேண்டாம் நண்பர்களே, எதுவாக இருந்தாலும் பேசித் தீர்க்கலாம். எதற்காகப் பேரணி, ஊர்வலம் என்று தேவையில்லாமல் அலட்டிக் கொள்கிறீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும்? நீதிபதி இஃப்திகார் உள்ளிட்டோருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட வேண்டும். அவ்வளவுதானே... ஆவன செய்கிறோம் போதுமா?'

தற்போது பாகிஸ்தானில் நிலைமை சகஜமாகியிருக்கிறது, தாற்காலிகமாக. இந்த சகஜ நிலைமையின் ஆயுள் எத்தனை மாதங்கள் அல்லது நாட்கள் என்று தெரியாது. அதுதான் பாகிஸ்தான் என்ற மர்மதேசத்தின் அடையாளம்.
குழப்பம். பதற்றம். இந்த இரண்டு வார்த்தைகளால் நிரம்பியதுதான் பாகிஸ்தான் அரசியல். எந்த நேரத்தில் எவர் குழப்பம் ஏற்படுத்துவார் என்பது யாருக்குமே தெரியாது. ஆனால், பதற்றம் மக்களுக்கு; ஆபத்தும் மக்களுக்குத்தான்! இழப்புகளும் அவர்களுக்கே. விநோதங்களின் விளைநிலமான பாகிஸ்தானில், அடுத்து என்ன நடக்கும் என்று உலக நாடுகள் அனைத்தும் விழிகள் விரியப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. சிலர் ஏக்கத்துடன்... பலர் ஏளனத்துடன்!

இதை பாகிஸ்தான் அரசியல்வாதிகள் புரிந்து கொண்டால்தானே..!

(அலசல்கள் நிறைந்தன... 'அரசியல்' தொடர்கிறது.)

No comments: