Wednesday 10 September, 2008

கார்கில் புகழ் முஷாரஃபும் திருவாளர் 10 சதவிகிதமும்

இவ்வார ஆனந்த்விகடனில் வந்த பாகிஸ்தான் பற்றீய கட்டுரை இது. எவ‌ன் ஆட்சிக்கு வந்த்தாலும் அந்த‌ நாட்டுக்கும் விமோச்ச‌ன‌மில்லை, பார‌த‌த்துக்கும் ந‌ன்மை விழைய‌ப்போவ‌தில்லை.

திருவாளர் 10 சதவிகிதத்துக்கு, முஷ்ர‌ஃப் தேவ‌லாம் என்ற‌ ரீதியில் எழுத‌ப்ப‌ட்டிருப்ப‌தை வாசித்த‌போது சுடாக்ஹோம் சிண்ட்ரோம் (Stockholm syndrome) ஞாப‌க‌த்துக்கு வந்த‌து.

பாகிஸ்தான் பற்றி எழுதினால் இணைய முல்லாக்கள் பாய்ந்து வரும்...
***********************

பாகிஸ்தான் என்றும் புதிர்!
உலக அரசியலைக் கரைத்துக் குடித்தவர்கள்கூட பாகிஸ்தான் என்றால் பதுங்குவார்கள். 'மன்னிக்கவும், என்னால் பாகிஸ்தானைப் புரிந்துகொள்ள முடியவில்லை' என்று இரண்டு கைகளையும் மேலே தூக்கி சரண் அடைந்த வரலாற்று ஆசிரியர்கள் அநேகம். எதையும் அங்கே கணித்துச் சொல்ல முடியாது. குறைந்தபட்சம் யூகிக்கக்கூட முடியாது!

பாகிஸ்தானில் தேர்தல் நடக்கும். பிரதமரை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், முறைப்படி முழுமையாக ஆட்சிக் காலம் முடித்த பிரதமர்கள் அங்கே சொற்பம். கொஞ்சம் போரடித்தால் 'போய்யா!' என்று வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். ராணுவத்தைக் கைக்குள் போட்டுக்கொண்டால் யாரும் எப்போதும் ஆட்சியைக் கலைக்கலாம், கைப்பற்றலாம். பர்வேஸ் முஷ்ரப் 1999-ல் செய்ததைப் போல!

சாகஸங்கள் பல நிகழ்த்தி நவாஸ் ஷெரீஃபை அவர் வீட்டுக்கு அனுப்பியபோது, ஆங்காங்கே பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினார்கள். இவராவது ஏதாவது மாற்றத்தைக் கொண்டுவருகிறாரா பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு. தேங்கிச் சுருங்கிப் போயிருந்த பாகிஸ்தானைக் கொஞ்சம் போல் பளபளப்பாக்கினார் முஷ்ரப். முதல் காரியமாக, மீடியாவை மீட்டெடுத்தார். அங்கே இது பெரிய விஷயம். ஆட்சியாளர்கள் கட்டுப்பாட்டிலிருந்த மீடியாவை, 'உங்கள் இஷ்டம் போல் ஏதாவது செய்துகொள்ளுங்கள்' என்று சுதந்திரம் கொடுத்தார்.

பாகிஸ்தான் முன்னேறாமல் போனது யாரால் என்று யோசித்தபோது, முஷ்ரபுக்குக் கிடைத்த விடை, அடிப்படைவாதிகள். குர்ஆனை உயர்த்திப் பிடித்துக் கடுமையான சட்டதிட்டங்கள் தீட்டும் முல்லாக்கள். விதிக்கப்பட்ட ஒழுங்குமுறைகளில் இருந்து இம்மி பிசகினாலும் பகிரங்கமாகப் போர் தொடுக்கும் பயங்கரவாதிகள். இவர்களோடு சமரசம் செய்துகொள்பவர்கள் மட்டுமே ஆட்சி நடத்த முடியும். இதுதான் அங்கே விதி. முஷ்ரப் இந்த விதியை மீறினார். இஸ்லாமியப் பெண்களுக்காகச் சில பாதுகாப்புச் சட்டங்களைக் கொண்டுவந்தார். 'நான் மிகவும் கடினமானவன். என்னோடு மோத முயற்சிக்க வேண்டாம்' என்னும் செய்தியை அடிப்படைவாதிகளுக்கு அனுப்பிவைத்தார்.

காஷ்மீர் என்னும் பெயரை இரண்டு நாளுக்கு ஒரு முறை மக்களுக்கு நினைவுபடுத்தியாக வேண்டும். 'இந்தியா ஓர் எதிரி தேசம்!' என்னும் பிம்பத்தை அழுத்தமாக அனைவருக்கும் பதியவைத்தாக வேண்டும். முஷ்ரப் இந்த இரண்டையும் செய்யாமல், இந்தியாவுடன் கைகுலுக்கிக் கொள்வதில் ஆர்வம் காட்டினார். காஷ்மீர் எல்லைப் பகுதியில் இயங்கி வந்த தீவிரவாத அமைப்புகளுக்குத் தடை விதித்தார். 2003-ல் இந்தியாவுடன் செய்துகொண்ட எல்லைப் பாதுகாப்பு ஒப்பந்தத்துக்குப் பிறகு, பெரிய அளவில் எந்தவித மோதலும் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் நடைபெறவில்லை. கடந்த சில ஆண்டுகளாக, காஷ்மீர் ஓரளவுக்கு அமைதியாகவே இருந்து வருவதற்குக் காரணம், முஷ்ரப்தான் என்று இந்தியா ஒப்புக்கொண்டு உள்ளது.
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு, எல்லையில் குவிக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு வீரர்களில் கணிசமானோரைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, ஆப்கானிஸ்தான் நோக்கிச் செலுத்தினார் முஷ்ரப், தாலிபன்களை ஒழிப்பதற்காக. 'அப்பாடா! இன்னும் கொஞ்ச காலத்துக்கு நமக்குக் கவலையில்லை!' என்று இந்திய ராணுவம் மெய்யாகவே காலை நீட்டி இளைப்பாறிய அதிசய காலகட்டம் இது. பதற்றம் நீங்கியதால், சிதறிக்கிடந்த காஷ்மீர் மக்கள் நீண்ட காலத்துக்குப் பிறகு எல்லைகளைக் கடந்து ஒன்று சேர்ந்த அதிசயமும் இந்தக் காலக்கட்டத்தில் நடந்தது. சிறுபான்மையினராக இருந்த இந்துக்களும் கிறிஸ்தவர்களும் முஷ்ரபின் ஆட்சிக் காலத்தில் எந்தவித அச்சுறுத்தல்களும் இன்றிப் பாதுகாப்பாக உணர்ந்தனர்.
அடிப்படையில் நல்லவர். முற்போக்குச் சிந்தனை கொண்டவர். மாற்றங்களைக் கொண்டுவர விரும்புபவர். ஒரு சர்வாதிகாரியாகவும் அவர் அமைந்திருப்பது தற்செயலானதுதான். இதனால் அதிகம் வருத்தப்பட வேண்டாம். இதுதான் பர்வேஸ் முஷ்ரப் பற்றிய பாகிஸ்தான் மக்களின் ஆரம்ப காலப் பிம்பம். தன் ராணுவ உடைகளை அவர் களைந்தபோது அவர் இமேஜ் மேலும் கூடியது. 9 ஆண்டு கால ஆட்சியை முடித்துக்கொண்டு, போய் வருகிறேன் என்று முஷ்ரப் டாடா காட்டியபோது, ஒரு பகுதியினர் ஆச்சர்யப்பட்டனர். காரணம், பாகிஸ்தானில் இதுவரை எந்தவொரு ராணுவ அதிபரும் தாமாகவே முன்வந்து பதவி விலகியதில்லை.

நிற்க. உச்சத்தைப் பார்த்ததைப் போலவே அதல பாதாளத்தையும் பார்த்துவிட்டார் முஷ்ரப். 'ஆஹா... ஓஹோ!' என்று முஷ்ரபைப் புகழ்ந்த அதே பாகிஸ்தானியர்கள், இன்று அவர் பெயரைக் கேட்டாலே முகம் சுளிக்கிறார்கள். என்ன பெரிய பொருளாதார மாற்றங்கள்? விலைவாசி உச்சத்தை முட்டி நிற்கிறது. கடந்த 30 ஆண்டுகளைக் காட்டிலும் பணவீக்கம் இன்று அதிகரித்திருக்கிறது. தினம் தினம் மின்சாரத் தடை. இதுதான் ஆட்சி நடத்தும் லட்சணமா?

ஆயிரம் சொன்னாலும் முஷ்ரப் ஒரு சர்வாதிகாரி. நல்ல சர்வாதிகாரியைவிட மோசமான ஜனநாயகவாதி மேல்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, முதன்முறையாக பாகிஸ்தானில் ஜனநாயகத்துக்கான நம்பிக்கை வெளிச்சம். ஆனால், ஜர்தாரி, நவாஸ் ஷெரீஃப் கூட்டு ஆட்சியில் பளபளப்பான, மினுமினுப்பான ஒரு புதிய பாகிஸ்தான் உருவாகப்போகிறது என்பது தவறான நம்பிக்கை. முஷ்ரப் இல்லை என்பதால் மட்டுமே பாகிஸ்தானில் ஜனநாயகம் தழைக்க ஆரம்பித்துவிட்டது என்று சொல்வது தவறு. அதே போல் ஜனநாயகம் தழைத்துவிட்டால் பாகிஸ்தான் சொடக்குப் போட்டது போல் உருமாறிவிடும் என்று நினைப்பதும் தவறு.
அரசியல் களத்தில் இப்போது இருப்பவர்கள் அனைவருமே பழம் பெருச்சாளிகள். பழைய மொந்தை. பழைய கள். பழைய அரசியல். முஷ்ரப்போடு ஒப்பிட்டால் ஜர்தாரி, நவாஸ் ஷெரீஃப் மீதிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.

ஒரு புதிய பாகிஸ்தான் உதயமாகப்போகிறது, எல்லாமே மாறப்போகிறது என்று சொல்வது குடுகுடுப்பைக்காரனின் வாக்கு போன்றது. பலித்தால் நல்லது. ஆனால், பலிக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. காரணம், பாகிஸ்தான் என்றும் ஒரு புதிர்!

Copyright Vikatan.

No comments: