Monday 22 September, 2008

தினமணி தலையங்கம் : வீரத்துக்கு தலைவணங்குவோம்

Monday September 22 2008 00:00 IST

வீரத்துக்கு தலைவணங்குவோம்
ஆர். நடராஜ்

செப்டம்பர் 19-ம் தேதி தில்லி ஜாமியா நகர் பாட்லா வளாகத்தில் தீவிரவாத தேடுதல் வேட்டையில் தில்லி போலீஸôருக்கு மகத்தான வெற்றி கிட்டியது. ஆனால் காவல் அணிக்குத் தலைமை ஏற்ற ஆய்வாளர் மோகன் சந்த் சர்மா, தீவிரவாதிகளின் குண்டுக்கு இரையானார். இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. தலைநகரை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பிற்கு காரணமான முக்கிய தீவிரவாதிகள் இருந்த இடத்தைச் சுற்றி வளைத்தபோது நடந்த துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்தார். தீவிரவாதத்தைப் பற்றி பல சர்ச்சைகள் எழுந்துள்ள இத்தருணத்தில் கடமை உணர்வோடு, துணிச்சலுடன் மக்கள் பாதுகாப்புக்காக தன் உயிரை அர்ப்பணித்த மாமனிதர் மோகன் சந்த் சர்மா.
தீவிரவாதிகளின் இலக்கு சமுதாயத்தில் அமைதியின்மையை ஏற்படுத்துவது, பிரிவினையைத் தூண்டுவது. உயிர் இழப்பைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. அப்பாவி மக்கள், எதிலும் சம்பந்தப்படாதவர்கள் இறந்தால் அதன் தாக்கம் மேலும் தீவிரமாக இருக்கும். மக்கள் கொதிப்படைவார்கள்.
பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவர்களைக் குறை கூறுவார்கள். அரசாங்கத்தின் மீதும், பாதுகாப்புத் துறையினர் மீதும் காழ்ப்புணர்ச்சி உடையவர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மேலும் எதிர்ப்புக் கணைகளை எய்துவார்கள். சமுதாயத்தின் இடைவிடாத குறை கூறலால் நன்றாகப் பணி செய்யக் கூடியவர்களும் மனச் சோர்வடைந்து உந்துதலோடு பணி செய்யாமல் ஒதுங்கி விடுகிறார்கள். காவல்துறையினரை செயலிழக்கச் செய்வதுதான் தீவிரவாதிகளின் முதல் இலக்கு. சமுதாயத்தில் நிலைத்திருக்கும் அமைப்புகளான நீதி, பாதுகாப்புத்துறை, குற்றவியல் துறை, மொத்தத்தில் அரசியல் அமைப்பின் தூண்களாக விளங்குபவற்றைத் தகர்ப்பது அவர்களது முழுமையான இலக்கு. ஒவ்வொரு முறையும் தீவிரவாத தாக்குதல் நடக்கும்பொழுதும் மேற்சொன்ன உணர்வுகள் வெளிப்படுவதை நாம் எல்லோரும் காண்கிறோம்.

உயிர், உடைமைக்கு பாதிப்பு ஏற்படும்பொழுது, எதனால் பாதிப்பு ஏற்படுகிறதோ அதை எதிர்ப்பதுதான் மனித இயல்பு. ஆனால் தீவிரவாதம் தலைதூக்கும்பொழுது தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும். அதனை முறியடிக்க வேண்டும் என்ற உணர்வு யாருக்கும் ஏற்படுவதில்லை. அதற்கு மாறாக தீவிரவாதத்தை ஒடுக்குவதில் ஈடுபடுபவர்களின் மீதுதான் சமுதாயத்தின் எதிர்ப்பு திரும்புகிறது. திறம்பட முயற்சி செய்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்தால் அந்த நடவடிக்கையைக் குறை கூறுபவர்கள்தான் அதிகம். கைது முறையற்றது. விசாரணையில் முறைகேடு நடந்துள்ளது. உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை, விசாரணையின்போது குற்றவாளிகளின் மனித உரிமைகள் மீறப்பட்டன போன்ற விமர்சனங்கள் தான் பரவலாகப் பேசப்படுகின்றன. ஏற்கெனவே மேலாண்மை பாதிப்பில் உள்ள பாதுகாப்புப் பிரிவு உள்ளடங்கி விடுகிறது. தீவிரவாதம் வெற்றி பெறுகிறது. சமுதாயம் தன்னையே தாக்கிக் கொண்டு நிலை குலைகிறது. இந்த சுயதாக்குதல் தீவிரவாதிகள் தாக்குதலைவிட பன்மடங்கு கொடுமையானது என்பது உணரப்படுவதில்லை.

காவல்துறையில் சுயஉந்துதலோடு பணிபுரிபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டுவரும் இந்நாளில் மோகன் சந்த் சர்மா போன்றவர்கள் எந்த ஒரு புவியால் இயக்கப்படுகிறார்கள்? "யாருக்கு வந்த விருந்தோ' என்று வாழும் மனிதர்கள் மத்தியில் சர்மா போன்றவர்கள் குன்றின் மீது ஏற்றிய விளக்காகப் பிரகாசிக்கிறார்கள்.

காவல்துறையின் பல்வேறு பணிகளில் கடினமானதும், ஆளுமைக்கு அடித்தளமாகவும் விளங்குவது புலன் விசாரணை பிரிவு ஒன்றே ஆகும். அதற்கு பொறுமை வேண்டும், திறமை வேண்டும். ஓய்வில்லாத உழைப்பு தேவை. சங்கிலியைக் கோர்ப்பதுபோல ஒவ்வொரு பாகத்தையும் கண்டுபிடித்து முழுமையான வடிவம் புலப்படும் வரை நடவடிக்கை தொடர வேண்டும். புலன் விசாரணையில் சுய ஆதாயம் கிடைக்காது, மக்களிடம் அறிமுகம் இருக்காது, அவர்கள் அமைதியாகச் செய்யும் பணி மற்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது சில வழக்குகள் முடிவு பற்றி செய்திகள் வரும். அதுவும் புலன் விசாரணை பற்றி எதிர்மறையான விமர்சனங்கள்தான் அதிகமாகக் கவனத்தை ஈர்க்கும். தான் கொண்ட பணியை நேசித்து புலனாய்வுப் பிரிவில் பலர் பணிபுரிகிறார்கள். தீவிரவாதம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் விசாரணை மிகவும் சிக்கலானது. அதற்கு நுண்ணறிவுப் பிரிவினர் சேகரிக்கும் தகவல்களை ஆராய்ந்து, அதில் கிடைக்கும் தடயங்கள் மீது விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

1984-ம் ஆண்டு இந்தியாவில் முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 33 பயணிகள் உயிரிழந்தனர். அந்த வழக்கு புலன் விசாரணையின்பொழுது நுண்ணறிவுப் பிரிவினர் "இடைமறிப்பு' மூலம் கிடைத்த "தமு' என்ற தடயத்தின் அடிப்படையில் "தம்பாப்பிள்ளை மகேஸ்வரன்' என்பவரின் இயக்கம் தான் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டது என்பது கண்டுபிடிக்க உதவியது.
பல்வேறு மாநிலங்களின் காவல்துறை அமைப்புகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் மிக அவசியம். தீவிரவாத இயக்கங்களின் அமைப்புகள் பற்றியும், அவைகளுக்குக் கிடைக்கும் உள்நாட்டு, வெளிநாட்டு ஆதரவு என்ன, கிடைக்கக்கூடிய பணம், பொருள் எவ்வாறு வருகின்றன என்பதை தொடர்ச்சியாக நுண்ணறிவுப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட வேண்டும். புலன் விசாரணையின்பொழுது பெறப்படும் உண்மைகள் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கக்கூடிய தகவல்களாக ஏனைய புலனாய்வுப் பிரிவுகளோடு பரிமாற்றம் செய்யப்பட வேண்டும். தில்லியில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு, ஆமதாபாத், பெங்களூரில் நிகழ்ந்த சம்பவங்களின் தொடர்ச்சி என்பதும் தற்சமயம் பிடிபட்ட குற்றவாளியின் முதல்கட்ட விசாரணையில், உத்திரப்பிரதேச நீதிமன்ற வளாகங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளது என்பதும் அதிர்ச்சி தரும் தகவல்கள்.
"அதிசயம் ஆனால் உண்மை' என்பது தீவிரவாத இயக்கங்கள் மனித உரிமைகள் பாதுகாப்புப் பற்றி சிலாகிப்பதற்கு பொருந்தும். மனித உரிமைகள் நிலைநாட்டுவதில் உண்மையாக நாட்டம் கொண்ட அமைப்புகள் குரல் கொடுக்கும்பொழுது அவற்றை தீவிரவாதிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் அபாயம் உள்ளது.

பயங்கரவாதத்தின் முழு வடிவமான வீரப்பன் சிறப்பு காவல்படையினர் மீது சாடிய மனித உரிமை மீறல்கள் பற்றிய வியாக்கியானங்கள் செய்திகளாக வந்தன. நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றவர், வனச் செல்வங்களை அழித்தவர், கெட்டேசால் என்ற கிராம மக்கள் முன்னால், காவல்துறைக்கு உளவாளிகள் என்று ஐந்து அப்பாவிகளைக் கொடூரமாகக் கொன்றவர், 14 கண்ணி வெடிகள் வைத்து பாலாற்றுப் படுகையில் 22 உயிர்களை அழித்தவர், மக்கள் நன்மதிப்பைப் பெற்றவர் என்ற ஒரே காரணத்தால் வன அதிகாரி சீனிவாசனின் தலையை சீவி பர்கூர் காட்டுப் பகுதியில் ஒரு மரத்தில் தொங்கவிட்ட கொடூரர், மனித உரிமைகள் பேசியது கொடுமையிலும் கொடுமை. இன்றும் வீரப்பனுக்கு சில சமுதாய அமைப்புகள் அங்கீகாரம் அளிப்பதை அதிசயம் என்று நொந்து கொள்வதைத் தவிர வேறென்ன செய்வது?

சட்டத்தை மதிப்பவர்களுக்குத்தான் மனித உரிமைகள் துணை நிற்கும். சட்டத்தை மிதிப்பவர்களுக்கும் மீறுபவர்களுக்கும் அல்ல. அதுவும் ஒன்றும் அறியாத ஏழை மக்களைக் கொன்று குவிக்கும் பயங்கரவாதிகளுக்கு மனித உரிமைகள் கை கொடுக்காது என்பதில் மாற்றுக் கருத்து இருக்கக் கூடாது.
இந்தியக் காவல்துறை வரலாற்றில் மக்கள் பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கானோர் உயிர் துறந்துள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஆயிரம் காவல்துறையினர் உள்நாட்டு பாதுகாப்பிற்காக உயிரிழக்கின்றனர். இது ராணுவத்தில் ஏற்படும் உயிரிழப்பைவிட அதிகம்.
தமிழக காவல் துறையில் நக்ஸலைட்டுகளை ஒடுக்குவதில் ஈடுபட்ட வேலூர், திருப்பத்தூர் ஆய்வாளர் பழனிச்சாமி, சமூக விரோதிகளால் கொல்லப்பட்ட பனவடலிச்சத்திரம் உதவி ஆய்வாளர் அய்யாபழம், வீரப்பன் வேட்டையில் உயிர் துறந்த உதவி ஆய்வாளர் செந்தில், செல்வராஜ், ரமேஷ் போன்ற பலர் உயிர்த்தியாகம் செய்து கடமையை நிறைவேற்றியதால் இன்று அமைதியை அனுபவிக்கிறோம்.

இப்போதிருக்கும் சூழ்நிலையில் அமைதி காப்பதில் பொதுமக்களின் பங்கும், ஒத்துழைப்பும் மிகவும் அவசியமாகிறது. தில்லி தொடர் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட முகமது சைப் மூலம் பெறப்பட்ட தகவல்படி சுமார் ஐந்து இளைஞர்கள் தில்லி ஜாமியா நகர் பகுதியில் தாங்கள் மாணவர்கள் என்று கூறி குடியிருப்பை வாடகைக்கு எடுத்துள்ளனர். அவர்கள் தங்களைப் பற்றி கூறியதும், நம்புவதற்குக் கொடுக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தந்த சரகத்தில் புதிதாகக் குடிவருபவர்களை நன்கு விசாரித்து குடி அமர்த்திட வேண்டும் என்று திரும்பத் திரும்ப காவல்துறையினரால் வலியுறுத்தப்படுகிறது. காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்க வேண்டும் என்று சமுதாயக் காவல் பணியின் ஒரு விதியாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தியும் இந்த நேர்வில் கடைப்பிடிக்கப்படவில்லை. அதன் விளைவு எவ்வளவு பயங்கரமானதாக உரு எடுத்துள்ளது!

இப்போதாவது பொதுமக்கள் விழிப்படைந்து உள்ளூர் காவல் துறையினரோடு இணைந்து அவரவரது குடியிருப்புப் பகுதியை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தீவிரவாதத்தைத் தடுக்க புது சட்டம், பிரத்யேக விசாரணைப் பிரிவு போன்ற யுக்திகள் விவாதத்தில் உள்ளன. இவை எந்த அளவில் நடைமுறைக்கு வந்தாலும், உள்ளூர் காவல்துறையினரின் ரோந்துப் பணி, சமுதாயக் காவல் பணி, சந்தேக நபர்களைக் கண்காணித்தல் போன்ற முக்கியமான நடவடிக்கைகளில் தொய்வு இருக்கக் கூடாது.
. புதிய காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட வேண்டும். நெரிசலான இடங்கள், வணிக வளாகங்கள், பொது இடங்களில் காமிராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை மையத்தில் பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புலன் விசாரணை பிரிவிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். போலீஸ் கமிஷன் தனது பரிந்துரையில் பிரத்யேக புலன் விசாரணை பிரிவு அமைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. புலன் விசாரணைப் பிரிவில் பணிபுரியும் அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் ஊக்கம் கொடுத்தால்தான் அவர்களது பணித்திறன் செப்பனடையும்.

பணியில் மேலாண்மை ஏட்டளவில் இருந்தால் மட்டும் போதாது. உயர் அதிகாரிகள் தங்களுக்கென்ற செயல் வட்டத்தை அமைத்து குறுகிய மனப்பான்மையோடு செயல்படுவதைத் தவிர்த்து நமது காவல்துறை மேன்மையுற வேண்டும் என்ற ஒருமித்த செயலாக்கம்தான் எந்த தீய சக்தியையும் தகர்க்கக்கூடிய ஆயுதம். நடைபெற்ற வழக்குகளில் தீர்க்கமான நடுவுநிலை பிறழாத முறையில் வெளித் தலையீடுகளுக்கு இடம்கொடாது விசாரணை மேற்கொள்ள வழிவகை செய்தால் தான் மக்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை ஏற்படும். எல்லோர் கவனத்தையும் ஈர்க்கும். திகில் நிகழ்வுகளில் குறுகிய காலத்தில் கண்டுபிடிக்க வேண்டிய நிர்பந்தமும் எதிர்பார்ப்பும் நிச்சயமாக இருக்கும். இம்மாதிரி தருணத்தில் மனித உரிமை மீறல்கள் இன்றி பொறுமையாக முயற்சிகள் மேற்கொண்டு உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். இதில் சிறு தவறு நேர்ந்தாலும் பயங்கரவாதத்தைத்தான் மேலும் பலப்படுத்தும். மீண்டும் எதிர்காலத்தில் பயங்கர நிகழ்வுகளுக்கு அடித்தளமாக அமைந்துவிடும்.

காவல்துறையின் சிரமமான பணியினைக் கருத்தில்கொண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக நேரும் தவறுகளைப் பெரிதுபடுத்தி ஒட்டுமொத்த காவல்துறையைப் பழிப்பது நியாயமற்றது. நேர்மையாகப் பணிபுரிபவர்களுக்கு மனச் சோர்வை ஏற்படுத்தி பணியில் சுணக்கம் ஏற்பட்டால் சமுதாயத்திற்குத்தான் பாதிப்பு. குறைகள், தவறுகள் சுட்டிக்காட்டப்பட வேண்டும், களையப்பட வேண்டும், மெச்சத்தக்கப்பணி போற்றப்பட வேண்டும். இந்த வகையில் மோகன் சந்த் சர்மாவின் வீரச்செயல் மகத்தானது. சர்மா எதிரிகளின் தாக்குதலில் இறப்பதற்கு முன் இருவரை சுட்டு வீழ்த்தினார். ஒரு பெரிய சதிகார கும்பலின் பின்னணி பற்றிய விவரம் கிடைத்துள்ளது. சில மாதங்களுக்காவது மக்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம். மக்கள் அமைதிக்காக நிரந்தர அமைதி அடைந்துவிட்டார் இந்த வீரர்.

வீரத்திற்கு தலைவணங்குவோம் - கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துவோம். இவரது தியாகம் வீணாகாது. ஒளி படைத்த வைராக்கியத்துடனும் உறுதி கொண்ட நெஞ்சத்தோடும் தலை நிமிர்ந்து பயங்கரவாதத்தை எதிர்ப்போம், வெற்றி பெறுவோம்.

(கட்டுரையாளர்: சிறைத்துறை தலைமை இயக்குநர்)

No comments: