Wednesday 18 November, 2009

சிந்துவிலிருந்து ராஜஸ்தானுக்கு...

சிந்துவிலிருந்து ராஜஸ்தானுக்கு... – எல்.கே. அத்வானி

என் தேசம் என் வாழ்க்கை – 4


...இந்திய பிரிவினைக்கு இறுதி வரையில் இணங்காமல் நின்ற மஹாத்மா காந்தி, "மதத்தின் அடிப்படையில் இந்தியாவை இரண்டாகப் பிளப்பது, தெய்வத்திற்குப் புறம்பான செயல்' என்று நம்பினார். கடைசியில் அவரும் சம்மதித்தார். என்றாலும், அது தொடர்ந்து நிகழ்ந்த மதக் கலவரங்களை – ரத்தக் களறியை – பிரிவினையாவது முடிவுக்குக் கொண்டு வரட்டுமே என்கிற நம்பிக்கையால், விருப்பத்திற்கு மாறாக தந்த சம்மதம்.

துவேஷமும், வன்முறையும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தபோது, அவர் தனது சக்தி மொத்தத்தையும் திரட்டி, அமைதியை, இணக்கத்தைப் பரப்ப கவனம் செலுத்தினார். அதில் அவர் வெற்றியும் பெற்றார். ஆனால் அது முழுமையானதல்ல. நவகாளி போன்ற பகுதிகளில் பாத யாத்திரை மேற்கொண்டார். ஆனால் வேறு இடங்களில் நடந்த கொலைகளையும், இரண்டு பக்கத்து அகதிகள் பயணத்தையும் தடுக்கும் சக்தியற்றவராகிவிட்டார்.


பிரிவினை மற்றும் அதற்கு பிறகு கட்டவிழ்த்து விடப்பட்ட குரூரம், தடுக்க முடியாத சக்தியாக, மனித உணர்வுகளைக் கடந்தக் கட்டுப் பாடற்ற நிலையை அடைந்துவிட்டது. தலைவர்களிடம் பிரிவினையின் பாதிப்புகளை உணர முடியாத கூட்டு இயலாமை இருந்தது; அதனால் கொடுமைகளைத் தடுக்க முடியவில்லை. இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று கணிக்க முடியாத அளவிற்கு, நமது தலைவர்களின் சிந்தையில் இயலாமை இருந்திருக்கிறது என்பதை இப்போது உணர முடிகிறது.


இப்படிச் சொல்வது அவர்களின் தோல்வியைக் குத்திக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. தலைவர்களும் மனிதர்கள்தான். அவர்களும் தவறு செய்ய நேரும் என்பதை உணரத்தான். எல்லாவற்றுக்கும் மேலாக வரலாற்றை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடிவதில்லை. வரலாறுதான் மனிதர்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
...நான் பயணம் செய்த விமானம், டெல்லி பாலம் விமான நிலையத்தில் மதியம் வந்து இறங்கியது....


...எங்களது டெல்லி வருகையின் நோக்கம் இரண்டு அம்சங்களைக் கொண்டது. முதலாவது – திடீரென்று ஏற்பட்டு விட்ட மாற்றங்களைத் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும் என்று ராஜ்பால்ஜியுடன் கலந்தாலோசிக்க வேண்டும். இரண்டாவது – ராஜ்பால்ஜியை சிந்து திரும்ப வேண்டாம் என்று வேண்டிக்கொள்ள வேண்டும். காரணம், அவர் அங்கு சென்றால் கைதுசெய்யப்படலாம்.

நாங்கள் கன்டோன்மென்ட் ஏரியாவிற்கு அருகில் வந்த போது, அங்கிருந்தவர்களில் ஒருவரிடம் ""உங்களுக்கு ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் யாரையாவது தெரியுமா?'' என்று கேட்டோம். அந்த மனிதர், ஒரு கடையைக் காட்டி, ""அந்தக் கடைக்குப் போங்கள். அவர் ஆர்.எஸ்.எஸ்.காரர்தான்'' என்றார்...
...கடைக்காரரின் மூலம் வசந்த்ராவ் வோக்கை சந்திக்க முடிந்தது. "ராஜ்பால்ஜி ஜோத்பூர் போய்விட்டார்; அங்கிருந்து கராச்சி போவார்' என்ற தகவலை வசந்த்ராவ் வோக் தெரிவித்தார். அந்தத் தகவல் எனக்குப் பதட்டத்தை அளித்தது. எப்படியாவது ராஜ்பால்ஜியைத் தொடர்புகொள்ள வேண்டும். சிந்துவிற்குத் திரும்பப் போகாமல் தடுக்க வேண்டும். அன்று இரவே முரளிதரும் நானும், ராஜ்பால்ஜியைச் சந்திக்க ஜோத்பூருக்கு ரயில் ஏறினோம்.

ஜோத்பூரை சென்று அடைந்தபோது, நான் சிந்துவிற்குத் திரும்பக்கூடாது என்ற தகவல் வந்திருப்பதாகச் சொல்லப்பட்டது. தவிர, சிந்துவைச் சேர்ந்த எல்லா பிரச்சாரக்குகளும் ஆர்.எஸ்.எஸ். மூத்தத் தலைவர்களும் ஜோத்பூர் வந்து சேர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தகவல் அடுத்து வரும் நாட்களில் எங்களுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் கராச்சியில் நிகழ்ந்த மாற்றங்கள் பற்றி எதுவும் அறியாமல், ராஜ்பால்ஜி ஜோத்பூரில் இருந்து கராச்சிக்கு ரயிலில் போய்விட்டார்...

...பாகிஸ்தானில் இருந்து வந்த ஸ்வயம் சேவக்குகளுக்கு, இடம் பெயர்ந்து வரும் அகதிகளின் இடப் பெயர்வை முறைப்படுத்த உதவும் முக்கியமான வேலை தரப்பட்டிருந்தது. குடிபெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்விற்கு உதவி செய்வதும் எங்கள் கடமையாக இருந்தது. இந்தக் கடமையை முழுமனதுடன் செய்வதில், எங்களை நாங்கள் ஈடுபடுத்திக்கொண்டோம்.

...கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, பஞ்சாப் மற்றும் புதி தாக உருவான பாகிஸ்தானின் பிற பகுதிகளில் இருந்து திரண்டு வந்த அகதிகளுக்கு நிவாரணப் பணிகளைச் செய்வது – ஆகியவைதான் அந்த நேரத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் முக்கியப் பணியாக இருந்தது.

இந்தப் பொறுப்பு முழுவதும் ஏன் ஆர்.எஸ்.எஸ்.ஸின் தோள்களில் விழுந்தது என்பதை இங்கு விளக்க வேண்டும். "இந்தியாவை மதத்தின் பெயரால் துண்டாடத் திட்டமிட்ட முஸ்லிம் லீகின் செயல் முறியடிக்கப்படும்' என்று காங்கிரஸ் தலைவர்கள் ஹிந்துக்களையும், சீக்கியர்களையும் நம்ப வைத்தார்கள். ஆனால், மஹாத்மா காந்தியைத் தவிர பெரும்பாலான மற்ற தலைவர்கள், கொலைக்கு நிகரான அந்த முடிவிற்கு எதிர்ப்பில்லாமல் உடன்பட்டுவிட்டார்கள்.

பாகிஸ்தான் ஹிந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் இது அதிர்ச்சியாக அமைந்தது. பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்கள், மதவெறி ஊழித் தீயின் கோரத் தாண்டவத்தின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள். பிரிவினையை இனி தவிர்க்க முடியாது என்று அறிந்த நிலையில், அவர்களுக்குப் பாதுகாப்பு தேவைப்பட்டது. அவர்களைப் போலவே இந்திய பகுதியைச் சேர்ந்த ஹிந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும் பாதுகாப்பு தேவையாக இருந்தது.

இந்திய அரசாங்கத்திடம் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாத சூழ்நிலை நிலவியது. இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் படேல், "எல்லா தனிநபர்களின் உயிரையும், மானத்தையும் காப்பாற்றுகிற நிலையில் அரசாங்கம் இல்லை' என்று அறிவிக்கிற அளவிற்குக் கடுமையானதாக மதக் கலவரம் இருந்தது. இந்த நிர்கதியான சூழ்நிலையில் மக்களைக் காப்பாற்ற ஆர்.எஸ்.எஸ். களம் இறங்கியது.

சர்தார் படேல்

பிறகு, சர்தார் படேல், ஆர்.எஸ்.எஸ். மேற்கொண்ட மீட்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளைப் பாராட்டினார். 1948 ஜனவரி 7ஆம் தேதி ஹிந்து நாளிதழில் கீழ்கண்டவாறு செய்தி வெளியானது: "சர்தார் படேல் அவர்கள் (ஆர்.எஸ்.எஸ்.) சுயநல நோக்கத்துடன் செயல்படவில்லை என்று உணர்ந்துகொண்டார். அமைதியை நிலைநாட்டுவதில் அரசாங்கத்தின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற சூழ்நிலை அவர்களைச் செயல்பட வைத்திருக்கிறது... தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்தசிலருக்கு அவர் எச்சரிக்கையையும் விடுத்தார்.

அதிகாரத்தில் இருக்கிற காங்கிரஸார், தங்களது அதிகாரத்தைக் கொண்டு ஆர்.எஸ்.எஸ்.ஸை நசுக்கிவிட தங்களால் முடியும் என்று நினைக்கிறார்கள். தடியைப் பயன்படுத்தி ஓர் அமைப்பை உங்களால் நசுக்கிவிட முடியாது. தடி, திருடர்களுக்கும், கொள்ளையர்களுக்குமானது. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திருடர்களோ, கொள்ளையர்களோ அல்ல. அவர்கள் தங்களது நாட்டை நேசிக்கிற தேச பக்தர்கள்'.

ஆர்.எஸ்.எஸ். பிரசாரக்காக எனது பணி

ஜோத்பூர் கேம்ப் முடிந்த பிறகு, சிந்துவில் இருந்து வந்த நாங்கள் எல்லாம், ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகளைத் தொடர, ராஜஸ்தானின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டோம். அடுத்த பத்தாண்டுகளுக்கு ராஜஸ்தான் எனது பணியிடமாக இருந்தது. முதலில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பிரச்சாரக்காக மட்டும் இருந்து, இடையில் ஜன சங்கக் கட்சியின் முழுநேரத் தொண்டனாக ஆனேன்.

...அமைப்பு ரீதியாக எனது வேலைகள் இரண்டு. ஒன்று, ஏற்கெனவே இருக்கும் ஷாகாக்களை வலிமைப்படுத்தி, அவற்றின் நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டும். இரண்டாவது, புதிய ஷாகாக்களை உருவாக்க வேண்டும். இதற்கு தொடர்ந்து பயணம் மேற்கொள்வது அவசியமாக இருந்தது. நிறைய இடங்களுக்கும் பஸ் வசதி இருந்தது. ஆனால் இப்போது உள்ள சாலைகளோடு ஒப்பிட்டு அன்று இருந்த சாலைகளைக் கற்பனைக் கூட செய்ய முடியாது. சைக்கிள் அல்லது ஒட்டகத்தில் மட்டும்தான், மற்ற இடங்களுக்குப் பயணம் செய்ய வேண்டும். ஆல்வார் மாவட்டத்தில் நாராயண்பூர் என்ற கிராமத்திற்கு அடிக்கடி பயணம் செய்தது நினைவில் வருகிறது. ஆல்வாரில் இருந்து செல்லும் பஸ் தானா காஜி வரைதான் செல்லும். அங்கிருந்து 12 மைல்களுக்கு அப்பால், நாராயண்பூருக்கு ஒட்டகப் பயணத்தில் மட்டுமே செல்ல முடியும்.
*****

No comments: