Wednesday 18 November, 2009

எல்லை கடந்த பயங்கரவாதம்

எல்லை கடந்த பயங்கரவாதம் – எல்.கே. அத்வானி

என் தேசம், என் வாழ்க்கை 24

1999ஆம் ஆண்டின் கோடைகாலம் நெருங்கிக்கொண்டிருந்தபோது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் கார்கிலில் 74 நாட்கள் ஒலித்துக்கொண்டிருந்த துப்பாக்கிச் சத்தம் ஓய்ந்து, அமைதி நிலவியது. போர் இந்தியாவிற்கு மகத்தான வெற்றியாகவும், பாகிஸ்தானுக்கு மறக்க முடியாத தோல்வியாகவும் முடிந்தது. ஆக்ரமிப்பாளரின் தவறான சாகசம், பூமராங் போல அவரையே சென்று தாக்குவதில் போய் முடிந்தது.


அதே போன்ற ஒரு பூமராங் தாக்குதல், இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தது. வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்க்கும் தவறான சாகசத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சிக்கு 1999 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடந்த 13ஆவது மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் சரியான அடி கொடுத்தார்கள்....


தேர்தல் முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக அமைந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணி 543 தொகுதிகளில் 306 தொகுதிகளைக் கைப்பற்றியது. பாரதிய ஜனதா கட்சி 182 தொகுதிகளை (1998 விட ஒரு தொகுதி அதிகம்) பெற்றது. காங்கிரஸ் 114ல் வெற்றி பெற்றது (1998ல் 140).


...அக்டோபர் 13 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையின் வளாகம், மூன்றாவதுமுறை இந்தியாவின் பிரதமராக அடல் பிஹாரி வாஜ்பாய்க்குப் பதவிப் பிரமாணம் எடுத்து வைக்கும் உற்சாகத்தில் இருந்தது. நானும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு, நார்த் பிளாக்கில் உள்ள என்னுடைய உள்துறை அமைச்சக அலுவலகத்திற்குச் சென்றேன்.


...1999 டிசம்பர் 24. அந்தக் குளிர் மிகுந்த வெள்ளிக்கிழமையின் மதிய நேரத்தில், நான் எனது நார்த் ப்ளாக் அலுவலகத்தில் இருந்தேன். எல்லா வருடங்களையும் போல அந்த வருடமும் நாடு புத்தாண்டை எதிர்நோக்கிக் காத்திருந்தது...


...நான் எனது அலுவலகத்தில் ஃபைல் பார்த்துக்கொண்டிருந்தேன். மாலை ஐந்து மணிக்குக் கொஞ்சம் முன்பாக, உளவுத்துறை அமைப்பான ஐ.பி.யின் இயக்குனர் எனக்குப் ஃபோன் செய்து, "ஐயா நேபாளத்தில் இருந்து வந்துகொண்டிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டுவிட்டது' என்றார். செய்தியைக் கேட்டு நான் திகைப்படைந்தேன்.....

"விமானத்தில் எவ்வளவு பயணிகள் இருக்கிறார்கள்?' என்று கேட்டேன். "160க்கும் அதிகமாக' என்றார் அவர். காட்மண்டுவில் இருந்து புறப்பட்டு டெல்லி வந்து சேர வேண்டிய ஐ.சி.814 எண் கொண்ட விமானத்தை ஆயுதம் தாங்கிய ஐந்து நபர்கள் கடத்தியிருந்தார்கள். அவர்கள் விமானத்தை லாகூருக்குக் கொண்டு செல்லும்படி விமானிக்குக் கட்டளை இட்டிருக்கிறார்கள். லாகூர் விமான நிலைய அதிகாரிகள், கடத்தப்பட்ட விமானம் தரை இறங்க அனுமதி மறுத்துவிட்டதால், அமிர்தசரசில் தரை இறங்கி இருக்கிறது. அங்கு விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று கடத்தல்காரர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

இந்த திடீர் சம்பவங்களைத் தொடர்ந்து, பிரதமர் அடல்ஜி அவசரக் கூட்டத்தை தனது வீட்டில் கூட்டினார். விமானத்தை இயக்க முடியாமல் செய்து, நாட்டிற்கு வெளியே கொண்டு செல்ல முடியாதபடி செய்வதற்கு முன்னுரிமை அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவைச் செயலர் பிரபாத் குமார் தலைமையில் கூடிய சிக்கல் நிர்வாகக் குழு (கிரைசிஸ் மேனேஜ்மென்ட் குரூப்) உடனடியாக அந்தத் தகவலை பஞ்சாப் போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பியது.

கமாண்டோ படையினரைக் கொண்ட எரிபொருள் நிரப்பும் குழுவை அனுப்பி, விமானத்தின் சக்கரங்களில் காற்றை இறக்கிவிடுவது என்று கிரைசிஸ் மேனேஜ்மென்ட் குரூப் தீர்மானித்தது. கமாண்டோ குழு விமானத்தை நெருங்கும் சில நிமிடங்களுக்குமுன், துரதிர்ஷ்டவசமாக கடத்தல்காரர்கள் விமானத்தைக் கிளப்ப விமானிக்கு உத்தரவிட்டனர். அமிர்தசரசில் இருந்து புறப்பட விமானிக்கு உத்தரவிட்டனர்.

அமிர்தரசிலிருந்து புறப்பட்ட விமானம் லாகூருக்குச் சென்றது. அங்கு பாகிஸ்தான் அதிகாரிகள் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பினர். அதே சமயம், விமானம் அங்கிருந்து கிளம்பாமல் தடுக்கும்படி நாம் வைத்த கோரிக்கையை நிராகரித்துவிட்டார்கள். கடத்தல்காரர்கள் விமானத்தை துபாய்க்கு அருகில், ஒரு ராணுவ விமான தளத்திற்குக் கொண்டு சென்று இறக்கினர். ரூபின் கத்தியால் என்ற பயணியைக் கொன்று வெளியே வீசினர். 28 பேர்களை விடுதலை செய்தனர். பிறகு 161 பயணிகளுடன் பறந்து, தென் ஆஃப்கானிஸ்தானில் கந்தகாரில் விமானத்தை தரை இறக்கினர். ஆஃப்கானிஸ்தான் அப்போது தாலிபான்களின் ஆட்சியின் கீழ் இருந்தது.

...இந்திய சிறைச்சாலைகளில் இருக்கும் 36 தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று விமான கடத்தல்காரர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் என்று விரைவில் தெரிய வந்தது. ஆனால், அவர்களின் முக்கிய கோரிக்கை 1994ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட, ஜம்மு காஷ்மீரில் இயங்கும், பயங்கரமான தீவிரவாத இயக்கங்களில் ஒன்றின் தலைவனான முஹமது மசூத் அஸாரை விடுதலை செய்ய வேண்டும் என்பதாகும்.

...பிணைக் கைதிகளாக உள்ள விமானப் பயணிகளின் விடுதலைக்குப் பதிலாக, தீவிரவாதிகளை விடுதலை செய்வதற்கு ஆரம்பத்தில் நான் ஆதரவாக இருக்கவில்லை. எனினும் எங்கள் ஆட்சி, சூழ்நிலையை உண்மையாகவே அசாதாரணமான முறையில் எதிர்கொண்டது. கடத்தல்காரர்கள் விமானத்தை கந்தகாருக்குக் கொண்டு சென்றுவிட்டது, நிலைமையை மேலும் சிக்கலானதாகவும், சிரமமானதாகவும் ஆக்கிவிட்டது.
வழக்கமாக இந்த மாதிரி சூழ்நிலைகளில், கடத்தலுக்கு உள்ளான விமானத்திற்குச் சொந்தமான நாட்டின் அரசாங்கம், வேகமாகப் பேச்சு வார்த்தையை நடத்திப் பேரத்தை முடித்து விடும். கடத்தல்காரர்கள் சிறைப் பிடிப்புக் காலத்தை இழுத்தடிக்கத் தயாராக இருந்தார்கள். இதற்குக் காரணம் அவர்களுக்கு இருந்த மூன்று சாதகமான அம்சங்கள். அவர்கள் தாலிபான்களால் ஆளப்படும் ஆஃப்கானிஸ்தானில் வசதியான இடத்தில் இருந்தார்கள். ஆஃப்கானிஸ்தானுடன் இந்தியாவிற்கு தூதரக உறவும் இருக்கவில்லை. தாலிபான் ஆட்சியாளர்கள், விமான கடத்தல்காரர்களிடம், கடத்தலை முடிக்கும்படி அல்லது தங்கள் நாட்டை விட்டு வெளியேறும்படி எந்த நிர்பந்தத்தையும் பிரயோகிக்கவில்லை.

இரண்டாவதாக, விமானக் கடத்தல்காரர்களின் ஒவ்வொரு அசைவிற்கும் பின்னால், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மூளையாக இருந்து செயல்படுகிறது என்ற, மறுக்க முடியாத தகவல் எங்களுக்குக் கிடைத்திருந்தது. அதே ஐ.எஸ்.ஐ.யால் உருவாக்கப்பட்டதுதான் தாலிபானும் கூட. விமானம் மட்டுமின்றி, விமான நிலையமும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்திய அரசாங்கம், பயணிகளை மீட்க விமானப் படை கமாண்டோ படைகளை கந்தகாருக்கு அனுப்ப வாய்ப்பு இருந்தது. ஆனால், இஸ்லாமாபாத்தின் உத்திரவின்படி, தாலிபான் அதிகாரிகள் விமான நிலையப் பகுதியை டாங்கிகளைக் கொண்டு சுற்றி வளைத்திருந்தனர் என்ற தகவலும் எங்களுக்குக் கிடைத்தது. நமது கமாண்டோக்கள் விமானத்திற்குள் சென்று கடத்தல்காரர்களைப் பிடித்துவிட முடியும். ஆனால், விமானத்திற்கு வெளியே தாலிபான் படைகளுடன் ஆயுத தாக்குதல் நடந்து, விமானப் பயணிகளின் உயிரைப் பறித்துவிடக் கூடிய ஆபத்து இருந்தது.

மேலும் ஒரு சிக்கல் இருந்தது. விமானத்தை மீட்டு விட்டாலும் அது பாகிஸ்தானின் வானப்பகுதியின் வழியாகத்தான் இந்தியா திரும்ப முடியும். அதற்கு பாகிஸ்தான் அனுமதி தராது. நிச்சயம் மறுக்கும். கடத்தல்காரர்கள் வெடி பொருட்களை வைத்திருக்கிறார்கள். விமானத்தைத் தகர்த்துவிட தயாராக இருக்கிறார்கள் என்ற தகவலும் கிடைத்திருந்தது. "புத்தாண்டு தினத்தில் வெடிகுண்டு இந்திய அரசாங்கத்திற்கு ஆயிரமாவது ஆண்டிற்கான பரிசு' என்று கடத்தல்காரர்களில் ஒருவன் கூறியதையும் கேட்க முடிந்தது.
மூன்றாவது, மொத்த விவகாரத்திலும் துரதிர்ஷ்டவசமான ஒரு பகுதி, விமானத்தில் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருப் பவர்களின் உயிர்களை எப்படியாவது மீட்க வேண்டும் என்று இந்திய அரசாங்கத்திற்குக் கொடுக்கப்பட்ட நெருக்குதல், பிரச்சனை ஆரம்பித்த மூன்றாவது நாள், சில விமானப் பயணிகளின் உறவினர்கள் பிரதமரின் வீட்டின் முன்பாகக் கூடி வெறி பிடித்தவர்கள் போல் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் எங்கள் அரசியல் எதிரிகளின் தூண்டுதல் ஓரளவு இருந்தது என்பதைத் தெரிவிக்க, எனக்கு வருத்தமாக இருக்கிறது.

சில தொலைக்காட்சி சேனல்கள், இந்த எதிர்ப்புப் போராட்டங்களை 24 மணி நேரமும் ஒளிபரப்பி, சில இந்தியர்களின் உயிர் ஆபத்தான நிலையில் இருக்கும்போது, அரசாங்கம் ஒன்றுமே செய்யாமல் இருக்கிறது என்ற தோற்றத்தை உண்டாக்கமுயன்றன. இந்திய நாடு மென்மையான நாடு என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், இப்போது இந்திய சமுதாயமும் மென்மையான சமுதாயமாகி விட்டதா என்று இந்தச் சம்பவங்கள் என்னை வியப்படைய வைத்தன. எனினும் கார்கில் போரில் உயிர் நீத்த தியாகிகளின் உறவினர்கள், விமானப் பயணிகளின் உறவினர்களைப் பொறுமையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டனர். இது நம்பிக்கை இழக்கத் தேவை இல்லை என்ற எண்ணத்தைத் தந்தது.

ஒரு பக்கத்தில் விமானப் பயணிகளின் உறவினர்களின் நெருக்குதல், மறுபுறத்தில் கடத்தல்காரர்கள் சில மோசமான செயல்களில் ஈடுபட்டு விடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்ற நிலை. அரசாங்கம், வேறு வழி இல்லை என்ற மனதுடன், இழப்பைக் குறைக்கும் அம்சத்தைத் தேர்வு செய்தது. மசூத் அஸார் உட்பட மூன்று தீவிரவாதிகள் சிறையில் இருந்து டிசம்பர் 31ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டு, கந்தகாரில் தாலிபான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கந்தகாரில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நமது குழுவினர் கடுமையாகப் பேரம் நடத்தி, 36 தீவிரவாதிகளைச் சிறையில் இருந்து விடுதலை செய்து ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, வெறும் மூன்று பேர் என்ற அளவிற்குக் குறைத்தனர். ஐ.சி. 814 விமானத்தின் அனைத்துப் பயணிகளும், விமானப் பணியாளர்களும் அன்று இரவே டெல்லி திரும்பினர். சிக்கல் முடிவுக்கு வந்தது. மாபெரும் ராணுவத்தைக் கொண்ட ஒரு நாட்டிற்கு, சாகத் தயாராக இருக்கும் ஒரு சிறிய குழு சவாலாக எழுந்து நிற்கிற, புதிய முகம் கொண்ட போர்முறையை உலகம் கண்டது.

copyright(c) thuglak.com

No comments: