Wednesday 18 November, 2009

பிரிவினையின் துயரம் !

********************

திரு. எல்.கே. அத்வானி அவர்கள், ஆங்கிலத்தில் எழுதிய இந்நூலை,வசந்தன் பெருமாள் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். 1060 பக்கங்கள் கொண்ட இந்த நூலை அல்லயன்ஸ் கம்பெனி வெளியிட்டிருக்கிறது.

********************

பிரிவினையின் துயரம் ! – எல்.கே. அத்வானி

என் தேசம் என் வாழ்க்கை – 1


அது முக்கியத்துவம் வாய்ந்த நாள். ஆனால், கராச்சி நகரத்துப் பள்ளிகளில் படிக்கும் ஹிந்து குழந்தைகள், தங்களுக்கு அளிக்கப்பட்ட இனிப்புகளைச் "சாப்பிட மாட்டோம்' என்று கூறிவிட்டார்கள். குழந்தைகள் இப்படி ஒட்டுமொத்தமாக இனிப்புகளைத் தவிர்க்கிறார்கள் என்றால், வெளியில் அச்சம் தரும் தவறு ஏதோ நடந்திருக்கிறது என்பதைச் சுலபமாக யூகித்துக்கொள்ள முடியும்...

...குழந்தைகள் இப்படியென்றால், இவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும், "இனி என்ன?' – என்ற கேள்வியுடன் இதயத்தைப் பிழியும் உணர்ச்சி வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டு இருந்தார்கள். இத்தனைக்கும் காரணம், "அந்த விசேஷ தினம்' கொண்டு வந்து சேர்த்த, கலவரமூட்டும் தகவல்கள்தான். கராச்சியின் பக்கத்து மாகாணமான பஞ்சாபில், ரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. ஹிந்துக்களும், முஸ்லிம்களும் கூட்டம் கூட்டமாக எதிர் எதிர் திசைகளில், அகதிகளைப் போல புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று பரவிக்கொண்டிருந்த செய்தி குழந்தைகளையும் அவர்களது பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் பாதிக்கத்தானே செய்யும்?...


...1947 ஆகஸ்டு 14.


அன்றுதான் ஒன்றுபட்ட இந்தியாவில் இருந்து, பாகிஸ்தான் என்ற இஸ்லாமியத் தனிநாடு பிரிக்கப்பட்டது. இந்த இரு தேசக் கோட்பாடு பற்றிய பேச்சு, சில ஆண்டுகளாகவே நடந்துகொண்டிருந்தது எனக்குத் தெரிந்திருந்தது. ஆனால் எனது இளமனது, அதை ஏற்க மறுத்து உடனடியாக நிராகரித்தது. வெவ்வேறு மத நம்பிக்கைகளைப் பின்பற்றுகிறவர்கள் – என்கிற ஒரு சாதாரண வித்தியாசத்தை வைத்து ஹிந்துக்களும், முஸ்லிம்களும் எப்படி இரு வேறு தேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆக முடியும்? இந்த இரு தேசக் கோட்பாட்டை, அறிவுபூர்வமான ஒன்றாக என்னால் நினைக்க முடியவில்லை. குறிப்பாக, சிந்து மாகாணத்தின் சமூகக் கட்டமைப்பு – கலாச்சார ஒன்றிணைப்பு, ஹிந்துக்களிடம் இருந்து முஸ்லிம்களையோ, முஸ்லிம்களிடம் இருந்து ஹிந்துக்களையோ பிரிக்க முடியாததாக இருந்தது...


...ஆனாலும் நிகழ்ந்தே விட்டது!


சில வருடங்களுக்கு முன்பு வரையில் யதார்த்தத்துடன் தொடர்பற்ற, அதீத கற்பனையாகத் தோன்றிய பிரிவினை, உண்மையாகிவிட்டது. கராச்சியின் ஒரு சில இடங்களில் மட்டுமே பிரிவினையை வரவேற்று வாண வேடிக்கைகளும், விருந்துகளும், கும்மாளங்களும் விடிய விடிய நடந்தன. பெரும்பாலான பகுதிகளில் அதன் அடையாளங்களே இல்லை. மறுநாள் இந்தியாவின் சுதந்திர தினம். அன்றும் கூட நகரின் எங்கள் பகுதிகளில் ஒரு கொண்டாட்டமும் இல்லை. மாறாக வேதனையும், சோர்வும் நகரத்தை ஆக்ரமித்துக்கொண்டன.

சிந்துவிற்கு காங்கிரஸ் கசந்து போனது ஏன்?


...ஒன்றுபட்ட இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தருவதே ஆர்.எஸ்.எஸ்.ஸின் குறிக்கோளாக இருந்தது. ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர்ந்ததிலிருந்து, அதுவே எனது சொந்தக் குறிக்கோளாகவும் ஆகிவிட்டது. ஆர்.எஸ்.எஸ்.ஸின் தேசியக் கோட்பாடுகளும் – அது தனது கொள்கைகளுக்குத் தரும் முக்கியத்துவமும் என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தன. (பாகிஸ்தானிலுள்ள) ஹைதராபாத்தில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஆர்.எஸ்.எஸ்.ஸில் ஸ்வயம் சேவக்காக சேர்ந்ததன் மூலம், என் வாழ்க்கை மாற்றி அமைக்கப்பட்டுவிட்டது...


...அன்றைய நாட்களில் ஆர்.எஸ்.எஸ்.ஸிற்கும், காங்கிரஸுக்கும் இடையில் பகை உணர்ச்சி இருக்கவில்லை என்ற உண்மையை, இப்போது அறிய நேரும் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால், அதுதான் உண்மை. ஆர்.எஸ்.எஸ்., காங்கிரஸ் இரண்டு இயக்கங்களும் பிரிட்டிஷ் பிடியில் இருந்து இந்தியாவை மீட்கும் ஒரே நோக்கம் கொண்டவை என்பதே, ஹிந்துக்களின் எண்ணமாக இருந்தது...


...சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ஒட்டு மொத்த ஹிந்துக்களும், காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தார்கள். பல காங்கிரஸ் குடும்பங்கள் தங்களது இளவயதுப் பிள்ளைகளை ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர ஊக்குவித்ததை, நான் நேரடியாக அறிந்திருக்கிறேன். இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக காலம் சென்ற கே.ஆர். மல்கானியைச் சொல்லலாம்...


...கே.ஆர். மல்கானியின் மூத்த சகோதரர் பேராசிரியர் என்.ஆர். மல்கானி. மிகவும் மதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர். அவர்தான் தன் தம்பி கே.ஆர். மல்கானியிடம் ""ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர்ந்துகொள். இளைஞர்களுக்கு தேசபக்தியையும், நல்ல ஒழுக்கத்தையும் போதிக்கும் சிறந்த இயக்கம் அது'' என்று கூறி ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர ஊக்குவித்தார்...


பிரிவினை சிந்துஹிந்துக்களுக்கு இருமுனைத் துயரம்...


...பாகிஸ்தான் உண்டாகும் வரை, சிந்து மாகாணத்தில் பெருமளவில் அமைதி நிலவியது. 1947ன் பின் பகுதியில் பக்கத்து மாநிலமான பஞ்சாபில் கடுமையான வகுப்புக் கலவரம் வெடித்தது. அதைத் தொடர்ந்து, உத்திரப்பிரதேசம், பீஹார், ராஜஸ்தான் மற்றும் கிழக்குப் பகுதிக்கும் கலவரம் பரவியது. பஞ்சாப் முதல் கிழக்கு மாகாணம் வரை கலவரப் பகுதிகளில் ஹிந்துக்கள் தாக்கப்படுகிறார்கள். கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள், தங்களது சொந்த இடங்களில் இருந்து விரட்டி அடிக்கப்படுகிறார்கள். ரயில் வண்டிகள் குவியல் குவியலான மனித சடலங்களுடன் இந்தியப் பகுதியைச் சென்று அடைகின்றன என்று செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அந்தச் செய்திகள் சிந்துவிலும் பயத்தையும், அச்சத்தையும் உண்டாக்கின...

...சிந்துவின் வரலாற்றில் 1948 ஜனவரி 6ஆம் தேதி ஒரு கறுப்பு தினம். திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையைக் கொண்டு, கராச்சி முஸ்லிம் மயமாக்கப்பட்டது. நிகழ்ந்த கொடுமைகளுக்கு ஒரு சிறிய உதாரணம். சிந்தி சபா என்று ஒரு கட்டிடம். சிந்து மாகாணத்தின் பிற பகுதிகளில் வசிப்பவர்கள், பம்பாய் செல்ல கராச்சி வந்து கப்பலில் பயணப்படுவார்கள். மறுநாள் புறப்படுகிற கப்பலில் பயணம் செய்கிறவர்கள், முதல் நாளே கராச்சி வந்து சிந்தி சபாவில் தங்குவார்கள். 1948 ஜனவரி 6ஆம் தேதியும், பல ஹிந்துக்களும், சீக்கியர்களும் சிந்தி சபாவில் தங்கி இருந்தார்கள். கராச்சி நகரை முஸ்லிம் மயமாக்கும் நோக்கத்தில், திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்தில், சிந்தி சபாவில் தங்கி இருந்த 300 பேர்கள், படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் வைத்திருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. பிரிவினைக் கலவரங்களில், சிந்து மாகாணத்தில் கொல்லப்பட்ட ஹிந்துக்களின் எண்ணிக்கையைத் தெரிவிக்கக்கூடிய அதிகாரபூர்வமான ஆவணம் எதுவும் இல்லை. ஆனால், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பல ஆயிரம் என்று கருதப்படுகிறது...


...பிரிவினையின் விளைவாக சிந்து மக்கள் தங்களது சொத்துக்களை எல்லாம் இழந்து, சொந்த மண்ணை விட்டு அகதிகளாக வெறும் கையுடன் இந்தியாவிற்கு வந்தனர். இருந்ததை இழந்த துன்பம்; இனி புதிய இடத்தில், புதிய வாழ்க்கையை, வெறும் மன உறுதியை மட்டும் துணையாகக் கொண்டு துவக்க வேண்டிய துன்பம் என்று இரட்டைத் துயரங்களுக்கு ஆளாயினர். அகதிகளாக இந்தியா வந்த மக்களின் ஒவ்வொருவரது வாழ்வும் ஒரு தனியான துன்பக் குவியல்...


...பிரிவினைக்கு முந்தைய கால கட்டத்தில், மதங்களிடையிலான பொறுமை, பிணைப்பு ஆகியவற்றைப் பல சிந்துக் கவிஞர்கள், தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் ஷேக் அயாஸ். 1923ல் பிறந்து 1997 வரை வாழ்ந்த அவர், ஒரு கவிதையில் "நான் எல்லா ஆண்களின், எல்லா பெண்களின், எல்லாக் குழந்தைகளின் மதத்தைச் சேர்ந்தவன். இரக்கமற்ற அரேபியர்களை எதிர்த்துப் போரிட்ட, தாஹிரின் மனைவி லாதியின் ரத்தத் துளிகள் எங்கெல்லாம் சிதறியதோ அந்த இடங்களில், அங்கு எங்கு நட்டாலும் செழித்து வளரும் மதன்மஸ்தி செடி நான். அன்னை காளிதேவியின் ஆயிரம் சிலைகளைக் கொண்ட குகை நான். அவளைக் கல்லால் வடித்து வாழ்நாள் எல்லாம் வழிபடுகிறேன்' என்றார்....

*******

No comments: