Friday 24 August, 2007

பகவத் கீதை - ஓர் எளிய மொழியாக்கம் - 4

பகவத் கீதை - ஓர் எளிய மொழியாக்கம் - 4
எஸ் மெய்யப்பன் Thursday August 23, 2007

அத்தியாயம் ஐந்து


கர்ம சந்நியாச யோகம்

உடலால் செயல்படுதல் கர்மம் உள்ளத்தால் செயல்படுதல் சந்நியாசம். ஞானயோகமும் சந்நியாச யோகமும் ஒன்றே. கர்மயோகமும் சந்நியாச யோகமும் ஒரே பலனைத்தான் கொடுக்கின்றன. தொழிலைத் துறப்பதைக் காட்டிலும் அதைச் செய்வதே மேலானது. இக்கருத்துக்கள் இதில் விளக்கப்படுகின்றன.

இதில் 29 சுலோகங்கள் உள்ளன.
----------------
அர்ஜுனன்: கிருஷ்ணா, ஒரு முறை கர்மத்தைத் துறந்து விடச் சொல்லுகிறாய், மறுமுறை கர்மத்தை மேற்கொள்ளச் சொல்லுகிறாய், சந்தேகத்திற்கு இடமின்றி, இரண்டில் எது சிறந்தது என்று முடிவாகச் சொல்.

கண்ணன்: 1கபித்விஜயா, கர்மம் செய்தாலும் சரியே, அதனைத் துறந்தாலும் சரியே, இரண்டுமே சொர்க்கத்தை அளிப்பவை. ஆனாலும் கர்மத்தைத் துறப்பதைக் காட்டிலும், அதைச் செய்வதே மேலானது. ஏனெனில் விருப்பு வெறுப்புகளைக் கடந்த உண்மையான ஞானி, இன்ப துன்ப இரட்டைகளை நீக்கிவிடுவதால், இனிதே பந்தத்திலிருந்து விடுபடுகிறான். ஆத்ம ஞானம் வேறு, செயல் நிலை வேறு என்று அறியாதவர்கள் சொல்வார்கள். அறிந்தவர்கள் அவ்விதம் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் இவை இரண்டில் எதைக் கடைப்பிடித்தாலும் சொர்க்கம் கிட்டுவது நிச்சயம். ஆத்ம ஞானி அடையும் அதே உன்னத நிலையை, கர்மயோகியும் நிச்சயம் அடையலாம். உண்மையில் சொல்ல போனால் கர்மத்தைச் செய்வது, கர்மத்தைத் துறப்பது இரண்டுமே ஒன்று தான். இதை உணர்ந்தவனே விபரம் தெரிந்தவன்.

மேலும் ஒன்றைப் புரிந்து கொள் அர்ஜுனா, துறவியாக வேண்டுமென்றாலும் சில கர்மங்களைச் செய்து தான் ஆக வேண்டும். அந்த 2கர்மங்களின் மூலம் மனத்தைச் சித்தப்படுத்தி, ஆத்மாவைச் சுத்தப் படுத்தி, புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும். முடிவில் உயிர்கள் அனைத்திலும் ஊடாடும் பரம்பொருளின் சொரூபமே ஆத்மா என்பதை உணர வேண்டும். இத்தகைய திறமை படைத்தவன் வெகுவிரைவில் இறைவனை அடைகிறான்.

உண்மையான ஞானி எதையுமே தான் செய்வதாக நினைப்பதில்லை. அவன் பார்த்தாலும் கேட்டாலும், உண்டாலும் உறங்கினாலும், தொட்டாலும் விட்டாலும், நடந்தாலும் நுகர்ந்தாலும், எடுத்தாலும் கொடுத்தாலும், சுவாதித்தாலும் பேசினாலும், திறந்தாலும் மூடினாலும், எல்லாம் அவன் செயல்… என்றே நினைக்கிறான். செய்வதைச் செய்துவிட்டுப் பலாபலன்களை ஈசுவரனிடம் விட்டுவிடுகிறவன் தாமரை இலை போன்றவன், அவன் மேல் பாவம் எனும் தண்ணீர் ஒட்டுவதில்லை.

துறவிகள் கர்மத்தில் ஈடுபடுவது எதற்காக? உடம்பு, மனம், அறிவு மற்றும் ஐம்புலன்களில் படிந்துள்ள பற்று எனும் அழுக்கை அகற்றி, ஆத்மாவைப் பரிசுத்தம் ஆக்கத்தான். கர்மங்களின் பலனைத் துறக்கும் ஞானி, நிலையான நிம்மதியை அடைகிறான். ஆனால் இலாப நோக்குடன் செயல் படுபவன் அச்செயலுக்குள்ளேயே மாட்டிக் கொள்ளுகிறான். உடம்பை வென்று உள்ளத்தாலும் ஞானியானவன் எதையும் செய்வதில்லை, செய்யப் பிறரை தூண்டுவதும் இல்லை. அவன் 3நவவாயில் நகரத்தில் சுகமாக இருப்பான். „இதைச் செய்‚… என்று ஆத்மா ஆனையிடுவதும் இல்லை, செயல்களை உண்டாக்குவதும் இல்லை, பலாபலன்களுடன் நம்மை பந்தப்படுத்துவதும் இல்லை. இயற்கையே எல்லாவற்றையும் இயக்குகிறது. அந்த ஆத்மா எவனுடைய பாவத்தையும் எடுத்துக் கொள்ளுவதில்லை, புண்ணியத்தையும் ஏற்றுக் கொள்ளுவதில்லை. மூடத்தனம் அறிவை மூடி இருப்பதால், ஜீவராசிகள் மயக்க நிலையில் உள்ளன. இந்த மயக்கம் அகல வேண்டுமானால், ஆத்மாவில் ஞானம் உதிக்க வேண்டும். அப்போது ஆத்மா சூரியனைப் போல் பிரகாசிக்கும. ஞானத்தால் பாவங்களைக் கழுவிக் கொண்டு, புத்தி முதலான எல்லாவற்றையும் பரம்பொருளோடு சங்கமிக்கிறவர்கள் பிறவிப் பெருங்கடலைத் தாண்டிவிடுகிறார்கள்.

4சவ்யசாசின், சமநோக்கைப் பற்றி இப்போது விளக்குவேன், நாயையும், பசுவையும், நாய் தின்னும் நீசனையும், மிகப்பெரிய யானையையும் செந்தண்மை பூண்டொழுகும் அந்தணனையும் ஞானிகள் 5சமமாகத் தான் பார்ப்பார்கள், சம நோக்குடைய இவர்கள் பிறப்பு இறப்பு இரண்டையும் வென்றுவிடுகிறார்கள். ஏனெனில் எங்கும் எதிலும் சமமாக இருக்கும் ஈசுவரனும் அவர்களும் ஒன்றாகிவிடுகிறார்கள். ஈசுவர சம்பத்தைப் பெற்றவன் வேண்டியது கிடைத்த போது இன்புறுவதும் இல்லை, வேண்டாதது கிடைத்த போது துன்புறுவதும் இல்லை.
ஆத்ம சுகத்தைப் பற்றி இனி கூறுவேன் அர்ஜுனா, வெளியுலகில் கவனம் செலுத்தாதவன் ஆத்மாவின் உள்ளுக்குள் சுகங்களைக் கண்டு கொள்கிறான். ஈசுவரனிடம் ஈடுபாடு கொள்ளும் அவன், அழிவில்லாத சுகத்தில் திளைக்கிறான். உலகிலுள்ள எல்லாப் பொருள்களுக்கும் ஆதியும் உண்டு, அந்தமும் உண்டு. அவற்றில் சுகமும் உண்டு, துக்கமும் உண்டு. எனவே விவேகி அவற்றில் நாட்டம் செலுத்த மாட்டான். உடம்பெடுத்த இப்பிறவிலேயே காமத்தின் வேகத்தையும், குரோதத்தின் தாபத்தையும் தடுக்கும் சக்தியுள்ளவன் தான் சுகம் பெற்ற ஞானி. ஆத்மாவின் மேல் விருப்பம் கொண்டு, அது காட்டும் வெளிச்சத்தில் வழியைக் கண்டு, அந்த ஆத்மாவின் உள்ளுக்குள்ளேயே சுகத்தில் திளைப்பவன் ஈசுவரனாகவே மாறி விடுகிறான், பிரம்மானந்தத்தில் ஊறிவிடுகிறான். மாசுகளை நீக்கிக் கொண்டவர்களும், சந்தேகத்தைப் போக்கிக் கொண்டவர்களும், உலக நலத்தையே தங்கள் நலமாக ஆக்கிக் கொண்டவர்களும், மனக்கதவைப் பூட்டிகொண்டவர்களும், ஆத்மஜோதியில் உள்ளத்தை நாட்டிக் கொண்டவர்களும் மண்ணுலகில் மட்டுமல்ல, விண்ணுலகிலும் பிரம்மானந்தத்தை அனுசரிக்கிறார்கள்.

புறவுலகக் காட்சிகளை வெளியிலே இருக்க விட்டு, நயனப்பார்வையை புருவ மத்தியில் நிலைக்க விட்டு, நாசிவழிப் பிராண அபானங்களை சமப்படுத்தி மூச்சுவிட்டு, ஆசை அச்சம் கோபம் இவற்றை நீக்கிவிட்டு, அறிவு, மனம், தேகம் இவற்றை அடக்கிவிட்டு, சொர்க்க நோக்கமே கொண்டிருக்கும் முனிவனுக்கு எந்த நேரமும் சுகம் தான் எந்த இடமும் சொர்க்கம் தான்.

தனஞ்சயா, தவங்களையும் யாகங்களையும் அனுபவிப்பவன் நானே, அனைத்து உலகங்களுக்கும் ஈசன் நானே, சகல உயிர்களுக்கும் நண்பன் நானே, இதனை அறிந்தவன் நிம்மதியில் திளைக்கிறான்.

(ஐந்தாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

1. குரங்குக் கொடியுடையவன்.

2. காய் ஒன்று மரத்தில் முறையாக ஒட்டியிருந்தால் மரத்திலிருந்து பெற வேண்டிய சாரத்தையும் வலிவையும் பெற்றுப் பின் தானே மரத்தைவிட்டுப் பிரிந்து பழமாக விழுகிறது. யோகி ஒருவன் முறையாகக் கர்மயோகம் செய்வதால் இயற்கையினின்று பெற வேண்டிய அனுபவங்களைப் பெற்று, அந்த ஞான முதிர்ச்சியால் பிரம்ப நிஷ்டனாகிறான். இதுவே முறையான கர்ம சந்தியாசம். ஆக, எல்லாரும் கர்மயோகத்தைக் கையாளுதல் வேண்டும். - சுவாமி சித்பவானந்தர்

3. ஒன்பது வாசல்களை உடைய உடல், நகரமாக உவமிக்கப்பட்டுள்ளது. நாசித் துவாரங்கள் 2, காதுத்; துவாரங்கள் 2, கண்வழி 2, வாய்த் துவாரம் 1, சிறுநீர்த் துவாரம் 1, மனத்துவாரம் 1 ஆக 9 வாயில்கள்.

-கருணை வடிவான அவன், தான் இருப்பதற்கான இடத்தை அமைத்துக் கொண்டான், காற்று, நீர், நெருப்பு இவற்றை இணைத்து, சரீரத்தைப் படைக்கிறான். அதற்கு ஒன்பது வாசல்களை வைத்து, பத்தாவது வாசலில் அவன் வசிக்கிறான். - குரு நானக்

புனித நகரமாகிய மனித உடம்பில் ஒன்பது வாயில்கள் இருக்கின்றன. அவற்றுக்குக் கதவுகளும் கிடையாது. ஆனாலும் ஒன்பது ஓட்டைகள் உள்ள உடம்பில் உயிர்க்காற்று இயங்கிக் கொண்டிருக்கிறது. மூச்சுக் காற்று உடம்பிலிருந்து வெளியே செல்லும் போது ஏதோ ஒரு சக்தி அதை மீண்டும் உள்ளேயும் இழுத்துக் கொள்கிறது. - சுவாமி சச்சிதானந்தா

4. இடது கையால் அம்பு எய்பவன்.

5. சூரிய வெளிச்சம் எல்லாப் பொருள்கள் மீதும் சமமாகவே படுகிறது. இது கங்கை, இது சாக்கடை என்று சூரியன் பேதம் பாராட்டுவதில்லை.
- சுவாமி சித்பவானந்தர்.

அத்தியாயம் ஆறு

தியான யோகம்

ஆத்மாவைப் பற்றிய சிந்தனையில் இன்பமுறுவதே தியானம். கர்ம யோகத்திலும் ஞான யோகத்திலும் சித்தி பெற்றவன் ஆத்ம ஞானம் பெறுகிறான். அப்படிப்பட்டவனுக்கு அனைத்தும் ஒன்றே என்ற சமநோக்கு தோன்றி விடும். உடல் உறவை நீக்கிவிட்டால், ஆத்மாவும் பரம்பொருளும் ஒன்றேயாகும். இக்கருத்துகள் இதில் விளக்கப்படுகின்றன.
இதில் 47 சுலோகங்கள் அடங்கியுள்ளன.
-------------
கண்ணன்: பாண்டு குமாரனே‚ இலாப நோக்கத்தைத் துறக்காதவன் துறவி ஆக மாட்டான். உணவுக்காக உலையில் நெருப்பைப் பற்ற வைக்காததாலும், உரிய காரியங்களைச் செய்யாமல் துறந்து விடுவதாலும் கூட ஒருவன் துறவியாகிவிட மாட்டான். பலாபலன்களைப் பற்றிக் கவலைப்படாமல், செய்யும் காரியத்தை ஒழுங்காகச் செய்பவனே உண்மைத் துறவி. புலன்கள் விஷயத்திலும், கர்மங்களைச் செய்யும் விஷயத்திலும் அவன் சகலத்தையும் துறந்துவிட வேண்டும். துறவு என்று சொல்லுகிறார்களே, அது தான் யோகம். தியான யோகத்தில் முன்னேற விரும்பும் முனிவனுக்கு அதற்குரிய வழி கர்மத்தில் இறங்குவது தான். இவ்விதம் தியான சித்தி அடைந்தவனுக்கு செயலற்றிருப்பது1 சாத்தியாமாகிறது.

ஆத்மாவை 2ஆத்மாவினால் தான் உயர்த்த வேண்டும். எக்காரணம் கொண்டும் அதைக் 3கீழ்நோக்கிச் செல்லவிடக் கூடாது. ஆத்மாவே ஆத்மாவுக்கு நண்பன்ƒ 4ஆத்மாவே ஆத்மாவுக்குப் பகைவன். ஆத்மாவினால் ஆத்மாவை வசப்படுத்தியவனுக்கு ஆத்மா நண்பன்ƒ ஆத்மாவை வசப்படுத்தியவனுக்கு ஆத்மாவே பகைவன்5.

தன்னை வென்று மனந் தெளிந்தவனுக்கு, குளிர்ச்சியிலும், வெப்பத்திலும், இன்பத்திலும் துன்பத்திலும், புகழ்ச்சியிலும் இகழ்ச்சியிலும் பரமாத்ம தரிசனம் கிட்டும். அறிவு மற்றும் அனுபவத்தால் மனத்திருப்தி அடைந்தவனும் இன்ப துன்பங்களில் 6அசைந்து கொடுக்காதவனும், ஐம்புலன்களை வெற்றி கண்டவனும், மண்ணையும் பொன்னையும் ஒன்றாகக் காணும் பண்பு கொண்டவனும் எவனோ அவன் துறவிகளில் எல்லாம் உயர்ந்த துறவியாவான். அன்பர்கள்.. அலட்சியப்படுத்துபவர்கள், நண்பர்கள்.. பகைவர்கள், நடுநிலையாளர்கள்.. வெறுத்து ஒதுக்குபவர்கள், சாதுக்கள்..பாவிகள், உற்றார்கள்..உறவினர்கள் அனைவரிடமும் சமமாக நடந்து கொள்ளுபவன் மிகவும் உயர்ந்தவன். உண்மையான துறவி ஆசையை அறுக்க வேண்டும்ƒ சொத்து சுகங்களைத் துறக்க வேண்டும்ƒ மனக் கிளர்ச்சியை ஒடுக்க வேண்டும்ƒ 7ஏகாந்தத்தில் கிடக்க வேண்டும்ƒ ஆத்மாவுக்கு யோக விருந்து படைக்க வேண்டும் ƒ சுத்தமான ஓரிடம் பிடிக்க வேண்டும்ƒ அது மிதமான உயரத்தில் இருக்க வேண்டும்ƒ அதன் மேல் 8தர்பைப்புல் பரப்ப வேண்டும், பிறகு 9மான் தோலை விரிக்க வேண்டும்ƒ அதன் மேல் வஸ்திரத்தைப் போட வேண்டும். அதில் அமர்ந்து உடல், தலை, கழுத்து, மூன்றையும், நேராகவும், அசையாமலும், நிலையாகவும் வைக்க வேண்டும். கண்கள் இப்படியும் அப்படியும் அசையாமல் இரண்டு 10புருவங்களுக்கும் இடைப்பட்டு முக்கின் நுனியையே பார்க்க வேண்டும். பிரம்மசரிய கட்டுப்பாட்டுடன் சலனமும் பயமும் நீங்கிய மனத்தை என் மேல் செலுத்த வேண்டும். பிறகு புலன்களை அடக்கி என்னையே குறிக்கோளாய்க் கொண்டு யோகம் பயில வேண்டும். இவ்விதம் யோகம் பயிலும் துறவி என்னிடம் உள்ள, சொர்க்க சுகத்துடன் கூடிய அமைதியை அடைகிறான்.

வயிறு முட்டச் சாப்பிடுபவனுக்கும், பட்டினி கிடப்பவனுக்கும், அதிகமாகத் தூங்குபவனுக்கும், விழித்துக் கொண்டே இருப்பவனுக்கும் யோகம் கிட்டுவதில்லை. அளவான ஆகாரம், அளவான நடமாட்டம், அளவான தூக்கம், அளவான விழிப்பு, அளவான செயல், இவையே ஒரு வகை யோகம் தான். இது நிச்சயம் துக்கத்தை நீக்கும். மனதைப் பிடித்து ஆத்மாவிற்குள் அடைத்து விட்டு,ஆசையைத் துடைத்து விட்டு,பொருட்களின் மேல் விருப்பத்தை நீக்கி விட்டவன் உன்னதமான யோகியாவான். அவன் காற்றில்லாத இடத்தில் வைக்கப்பட்ட மூடியில்லாத விளக்கைப் போன்றவன். விளக்கில் எரியும் நெருப்பு ஆடாது, அசையாது, யோகியின் மனமும் ஆடாதுƒ அசையாதுƒ பரம்பொருள் மேல் நிலைத்து நிற்கும்.

எந்த நிலையில் யோகப்பயிற்சில் கட்டுண்ட மனம் அடைய வேண்டிய இடத்தை நாடுகிறதோ.. எந்த நிலையில் மனமானது ஆத்மாவைக் கண்டு ஆனந்திக்கிறதோ.. எந்த நிலையில் சுகம் என்பது உடலால் அனுபவிக்கப்பட முடியாமல் அறிவால் அனுபவிக்கப்படுகிறதோ.. எந்த நிலையில் இதற்கு மேல் இலாபமில்லை என்று கருதப்படுகிறதோ.. எந்த நிலையில் எந்தத் துக்கம் வந்தாலும் கலங்காத நிலை ஏற்படுகிறதோ.. அந்த நிலையே பிரம்மானந்த யோகம். இந்த யோகத்தை மனங்கலங்காமல் உறுதியாகப் பயில வேண்டும். மனக்கிளர்ச்சியால் தோன்றும் ஆசைகளைத் துறந்து, புலன்களின் கூட்டத்தை மனச்சங்கிலியால் கட்டிப் பிணைத்துத் துணிவுடனும் விவேகத்துடனும் மௌ;ள மௌ;ள அடக்க வேண்டும். மனம் வேறொன்றையும் நினைக்காத படி11 ஆத்மாவிலேயே நிலைக்கச் செய்ய வேண்டும். ஆடிக் கொண்டும் ஓடிக் கொண்டும் இருக்கும் மனத்தைத் தகுந்த முறையில் தடுத்து நிறுத்தி, ஆத்மாவுடன் அது கூடிக் கொண்டிருக்கும் நிலையை உருவாக்க வேண்டும். இவ்விதம் ஈசுவர நிலையடைந்த யோகிக்குத் தான் உன்னதமான சுகம் கிடைக்கிறது. அவன் ஈசுவரனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு எல்லையற்ற சுகத்தைத் தொல்லையின்றி அனுபவிக்கிறான். அவன் சகல உயிர்களிலும், தன்னைக் காண்பான்ƒ தனக்குள் சகல உயிர்களையும் காண்பான்ƒ அனைத்திலுமே சமநோக்குக் காட்டுவான்12.

எங்கும் நிறைந்தவனாயும் எல்லாம் இருப்பவனாயும் என்னைக் காண்பவனுக்கு நான் காட்சியளிப்பேன். நானும் அவனைக் கண்டு கொள்வேன். ‘உள்ளது ஒன்றே” என்ற உணர்வுடன் எல்லா உயிர்களிலும் உள்ள என்னைத் தொழுகின்றவன் எந்த நிலையில் இருந்தாலும் அவன் என்னிடமே இருப்பான்.

அர்ஜுனன்: 13கிருஷ்ணா‚ மனம் என்பது சஞ்சலம்மிக்கதுƒ குழப்பம் விளைவிக்கத் தக்கதுƒ அடங்காததுƒ எதற்கும் மடங்காதது. காற்றை அடக்க முடியாதது போல் அதையும் அடக்கமுடியா தென்று நான் நினைக்கிறேன்‚ அதனால் நீ சொன்ன சமநிலை தேவைப்படும் தியான யோகம் செய்வதில், அந்த மனம் நிலையாக நிற்காதென்றே நான் எண்ணுகிறேன்‚
கண்ணன்: உண்மை தான் விஜயா, மனம் அடக்க முடியாதது தான், அலை பாய்வது தான். ஆனால் வைராக்கியம் மிக்க பயிற்சியினால் அதை இழுத்துக் கட்டிவிடலாம். மனதை அடக்கமுடியாதவனுக்கு யோகம் கிட்டுவதில்லை, 14மனத்தை ஒழுங்குபடுத்தி முறையாக முயல்பவனுக்கு யோகம் நிச்சயம் கிட்டுகிறது.

அர்ஜுனன்: சரி கண்ணா, ஒருவன் அக்கறையுடன் யோகத்தில் இறங்கினான். ஆனால் அவனுக்கு முயற்சி போதவில்லை. யோகத்திலிருந்து அவன் மனம் நழுவிவிட்டதால் யோகத்தின் பலன் அவனுக்குக் கிடைக்கவில்லை. அவன் என்ன கதி அடைவான்? சிதறுண்ட மேகம் போல் அவன் அழிந்து விடுவானா? இந்தச் சந்தேகத்தைத் தீர்க்க வேண்டுகிறேன்‚ இந்தச் சந்தேகம் தீர்க்க உன்னையன்றி யாரால் முடியும்?

கண்ணன்: அர்ஜுனா, அப்படிப்பட்டவனுக்கு இந்த உலகத்திலும் சரி.. மேலுலகத்திலும் சரி அழிவே கிடையாது. நல்லதைச் செய்ய முயலும் எவனும் துர்கதி அடைவதில்லை. அப்பனே‚ அவ்விதம் யோகத்திலிருந்து நழுவியவன் புண்ணியவான்கள் அடையும் இன்பங்களை வேண்டிய மட்டும் அனுபவிப்பான், பிறகு உத்தமச் செல்வர்களின் குலத்தில் மறுபடியும் பிறப்பான். அல்லது ஞானிகளான யோகிகள் குலத்தில் பிறப்பான். இந்தப் பிறவி கிடைத்தற்கரிய ஒன்றாகும். இந்தப் பிறவியில் முந்திய பிறவியில் இருந்த அதே அறிவைப் பெறுவான். யோக நிலை அடைவதற்கு மறுபடியும் முயற்சி செய்வான். பூர்வ ஜென்ம 15வாசனையால் அவனையறியாமலே யோகத்தின் பக்கம் இழுத்துச் செல்லப்படுவான். வெறும் யோக ஆராய்ச்சியில் ஈடுபட்டாலே போதும், ஒலி உலகத்தை அவன் கடந்து விடுவான். இடைவிடா முயற்சியில் ஈடுபடும் யோகியானவன், கடந்த பல பிறவிகளில் பக்குவப்பட்டிருப்பதால், யோக சித்தி பெற்று நல்ல கதி அடைகிறான்;.

கடுத்தவ முனிவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன் யோகி. கனிந்த நல் ஞானிகளைக் காட்டிலும் உயர்ந்தவன் யோகி. கடமையில் சிறந்தவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன் யோகி. ஆகவே அர்ஜுனா‚ நீயும் யோகியாய் ஆகுக‚ என்னைச் சரணடைந்து என்னையே தொழுகின்றவன் யோகிகளில் எல்லாம் உன்னதமானவன். இதுவே என் முடிந்த முடிவு.

(ஆறாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

1. பம்பரம் நடுநிலையில் நின்று வேகமாகச் சுழலும் போது அதனிடத்து ஒரு செயலும் வெளிக்குத் தென்படுவதில்லை. ஓய்ந்து நிற்பது போன்று அது காட்சியளிக்கிறது. ஒழுங்கான இயக்கம் என்பது அதுவே. அதர்மம் போன்று தென்படுகிற கர்மம் அது. தியானம் நன்கு கூடிவரும் பொழுது யோகியானவன் கர்மத்தையெல்லாம் ஒழித்துவிட்டவனாகக் காட்சியளிக்கிறான். - சுவாமி சித்பவானந்தர்

2. எதிலும் பற்றுக் கொள்ளாத உள்ளம். - ஸ்ரீ ராமாநுஜர்.

3. மனதைக் கீழ் ஆதாரங்களில் நிலைக்கும்படிச் செய்வது அறிவுடைய செயல் ஆகாது. கீழ் ஆதாரங்களில் தோன்றும் இனிய வெப்பத்தில் மனம் ஈடுபட அனுமதிக்கக் கூடாது. அதை மேல் நோக்கிச் செல்லும் படிச் செய்ய வேண்டும். இதயப் பகுதியாகிய அனாகத ஆதாரத்தையோ, புருவ மத்திப் பகுதியாகிய ஆக்ஞை ஆதாரத்தையோ, நோக்கி மனம் செல்லும்படிச் செய்ய வேண்டும். தியான ஆற்றல் முழுவதையும் கொண்டு மனத்தை மேல் நோக்கியேச் செல்லும் படிச் செய்ய வேண்டும். - சுவாமி சச்சிதானந்தா

4. தன் மனத்தை வசப்படுத்தியவனுக்கு. - ஸ்ரீ ராமாநுஜர்

5. தீதும் நன்றும் பிறர் தர வாரா. - புறநானூறு
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். - திருவள்ளுவர்

6. சம்மட்டி அடிக்கல் அதன் மேல் அடிக்கப்படும் இரும்பு பல உருவத்தை அடைந்தாலும் அடிக்கல் மாறுபடாமல் நிற்பது போல் அசையாமல் நிற்பவன். - உரையாசிரியர் அண்ணா

7. பசித்திரு, தனித்திரு, விழித்திரு. - வடலூர் இராமலிங்க சுவாமிகள்

8. தர்பை ஆசனத்திலோ, பலகை ஆசனத்திலோ அமர்ந்து நம் துறவிகள் தியானம் செய்கிறார்கள். இந்த ஆசானங்கள் மின்சாரத்தைத் தடுக்கும் ஆற்றல் உடையவை. பூ மையக் கவர்ச்சியிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கு இப்படிப்பட்ட இருக்கைகள் துணை செய்கின்றன. - சுவாமி சச்சிதானந்தா

9. மான் தோலிலோ புலித் தோலிலோ யோகிகள் அமர்ந்து தியானம் செய்யும் படங்களைப் பார்த்திருக்கிறோம். தங்கள் தியானத்திற்கு வேண்டிய தோல்களுக்காக யோகிகள் அந்த உயிர்களைக் கொல்வதில்லை. தங்களுக்குக் கிடைக்கும் தோல்களைத் தியானப் பயிற்சிக்கு ஏற்ற இருக்கையாகப் பயன்படுத்துகிறார்கள். அந்தத் தோல்கள் பூ மையக் கவர்ச்சியிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறது. மின்சாரக் கம்பியில் வேலை செய்பவர்கள் தங்கள் கைகளில் தோலினாலோ ரப்பரினாலோ ஆன கை உரைகளை அணிந்து கொள்வதை நாம் பார்க்கிறோம். இது மின்சாரத் தாக்குதலிலிருந்து அவர்களைக் காப்பாற்ற உதவுகிறது. - சுவாமி சச்சிதானந்தா

10. கையறவு இலாதுநடுக் கண்புருவப் பூட்டு கண்குகளி கொண்டுதிறந்(து) உண்டு நடு நாட்டு
ஐயர்மிக உய்யும் வகை அப்பர்விளை யாட்டு ஆடுவதென் மறமறைகள் பாடுவது பாட்டு. - வடலூர் இராமலிங்க சுவாமிகள்

நாட்டமிரண்டு நடுமூக்கில் வைத்திடில் வாட்டமுமில்லை மனைக்கு மழிவில்லை ஓட்டமுமில்லை உணர்வில்லை தானில்லை தேட்டமில்லை சிவ னவனாமே. - திருமந்திரம்.
நாசி நுனியைப் பார்ப்பது போல் இருகண்களையும் புறப்பொருள்களில் செல்லாமல் அகத்தில் பதிய வைத்தல். புறத்தில் நாசி நுனியில் கவனம் செலுத்துவது கருத்தன்று. - ஆதி சங்கரர்.

11. தியானம் என்றால், எண்ணெயின் ஒழுக்கு போல், நினைவுகளின் தொடர்ச்சி பொருளை வகை கண்டு, தொடர்பு படுத்திக் காணும் ஆற்றலினால், நினைவானது பொருளை நேராக அறிகிறது. - ஸ்ரீ இராமாநுஜர்

12. இன்பத்திலும் துன்பத்திலும் தன்னைப் போலவே பிறரையும் எண்ணுவான். அவனே உயர்ந்தவன், உன்னதமானவன்.

13. க்ருஷ் என்பதற்கு இழுத்தல் என்று பொருள். பக்தர்களின் பாவத்தைத் தன்பால் இழுத்துக் கொள்வதால் கிருஷ்ணன்.

14. பயங்கர மழை, கடும் குளிர், பெரும் காற்று, மிகுந்த வெயில், இவற்றிற்கு அஞ்சாமல், ஒருமித்த மனத்தோடு கடவுளிடம் பக்தி செலுத்துகிறவனே சாதகப் பறவையைப் போல் புத்திசாலி. மற்றதெல்லாம் பூஜிக்கத் தகுந்த காமதேனுப் பசுவை. தங்கக் கலப்பையில் கட்டி, விஷத்தை அறுவடை செய்ய உழுவது போலாகும். - துளிசிதாசர்

15. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லவராக இருப்பது பூர்வ ஜென்மத்தில் விட்ட குறை தொட்ட குறை தானே. - கண்ணதாசன்

(காலஞ்சென்ற திரு எஸ் மெய்யப்பன் உலக மக்கள்தொகைத் திட்டத்தின் உறுப்பினராய் தமிழ் நாட்டு அரசுப் பணியில் இருந்தவர்.சௌடீஸ்வரி மலர் என்ற மாத இதழின் ஆசிரியராய் இருந்தவர். )

No comments: