Friday 17 August, 2007

அமெரிக்காவின் ‘தாவூத்’ விளையாட்டு! - விகடன் கட்டுரை

அமெரிக்காவின் ‘தாவூத்’ விளையாட்டு!
ரவிக்குமார் எம்.எல்.ஏ. Junior Vikatan 15 Aug.2007

நடிகர் சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை சரிதானா என்றும், மும்பை குண்டுவெடிப்புக்கு முன்னர் நடந்த கலவரம் பற்றி விசாரித்த ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை குறித்தும் பரபரப்பாக நடந்து வந்த விவாதங்களை இப்போது தாவூத் இப்ராகிம் கைது செய்யப் பட்டதாக வெளியான செய்தி திசை திருப்பி விட்டுள்ளது.

தாவூத் கைது செய்யப்படவில்லை என பாகிஸ்தான் மறுத்துள்ள போதிலும் இந்தப் பிரச்னை இப்போதைக்கு ஓயப்போவதில்லை.

1993&ல் மும்பையில் 257 பேர்களின் உயிர்களைப் பலிவாங்கிய தொடர்குண்டு வெடிப்புகளுக்குக் காரணமாகக் கருதப்படும் தாவூத் ஒரு சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளின் மகனாகப் பிறந்தவர். மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் ரத்னகிரி என்ற ஊரைச் சேர்ந்த தாவூத், மும்பையில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்த கரீம்லாலா கோஷ்டியில் இணைந்து ‘தொழிலைப்’ பழகிக்கொண்டாரென அவரது பூர்வீகம் குறித்து நன்கு அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

1986&ல் இந்தியாவிலிருந்து துபாய்க்கு தப்பிச் சென்ற தாவூத், அங்கிருந்தபடியே மும்பையிலிருக்கும் தனது கடத்தல் சாம்ராஜ்யத்தை நிர்வகித்து வந்தார்.
சூதாட்டம், போதை மருந்து கடத்தல், விபசாரம் என சகலவிதமான
தொழில்களிலும் தாவூதின் கொடிதான் உயரப் பறந்தது. ஒருகட்டத்தில் பாலிவுட்டிலும் தனது தொடர்புகளை வளர்த்துக் கொண்டார் அவர். பிறகு பாலிவுட்டில் அவர் சொன்னதே சட்டமென்று ஆகியது. அவரது பணத்தில் பல இந்திப் படங்கள் தயாரிக்கப்பட்டன.
மும்பை குண்டு வெடிப்புக்குப் பிறகு இந்தியா, தாவூத்தை முழுமூச்சாக எதிர்க்கத் தொடங்கியது. வளைகுடா நாடுகள் பலவற்றோடு இந்தியா பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டிருப்பதால் அந்த நாடுகளில் தாவூத் தங்கியிருக்க முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே, அவர் பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்று விட்டாரென இந்திய உளவுத்துறையினர் கூறி வந்தனர். ஆனால், அப்படியரு நபர் தமது நாட்டில் இல்லவே இல்லை என பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

தாவூத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நமது அரசு வலியுறுத்தியபோதெல்லாம் அமெரிக்கா அதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப்பிறகு அமெரிக்கா அவசர அவசரமாக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. ‘‘நிர்வாக உத்தரவு எண்: 13224’’ என அழைக்கப்படும் அது பல்வேறு அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்புகளென அறிவித்தது. அதுமட்டுமின்றி பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் என்று 322 நபர்களைப் பட்டியலிட்டது. முதலில் அந்தப் பட்டியலில் தாவூதின் பெயர் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதில் ‘உலகமகா பயங்கரவாதி’ என்ற அடையாளத்தோடு தாவூதின் பெயரை அமெரிக்கா சேர்த்துக்கொண்டது.
‘‘அல்\கொய்தாவோடு தொடர்பு கொண்டவர், இந்தியாவை நிலைகுலையச் செய்யும் நோக்கத்தோடு பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு பணஉதவி செய்பவர்’’ என்று தாவூத்தை வர்ணித்த அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு போதை பொருட்களைக் கடத்தியதாகவும், தாவூத் தொடர்புகளை பின்லேடன் பயன்படுத்திக் கொள்வதாகவும் தெரிவித்தது. இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திவரும் ‘லஷ்கர்&இ& தொய்பா’ அமைப்புக்கு தாவூத் இப்ராகிம்தான் பணஉதவி செய்கிறார் என அமெரிக்கா கூறுகிறது. தாவூத்தைக் கைது செய்ய அமெரிக்கா எடுத்த முயற்சி எதுவும் வெற்றி பெறவில்லை. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலமாகவும்கூட அமெரிக்கா முயற்சித்துப் பார்த்துவிட்டது. இந்த நிலையில்தான் சில நாட்களுக்கு முன்னால் தாவூத்தை கைது செய்யுமாறு அமெரிக்கா மீண்டும் பாகிஸ்தான் அரசை வலியுறுத்தியிருந்தது.

கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானில் நடந்துவரும் அரசியல் நடவடிக்கைகளை உற்று நோக்கினால் அவை பெரும்பாலும் அமெரிக்காவின் நிர்ப்பந்தங்களால் நடக் கின்றன என்பது நமக்குப் புரியும். மசூதியைத் தாக்கி தீவிர வாதிகளை வெளியேற்றியது, பெனாசிர் பூட்டோவுடன் முஷ்ரப் ஒப்பந்தம் செய்து கொண்டது என அனைத்து விஷயங்களிலும் பின்னணியில் அமெரிக்காவே இருந்து வருகிறது. பாகிஸ்தானில் வேர் கொண்டுள்ள மத தீவிர வாதத்தை முஷ்ரப்பைப் பயன்படுத்தி பிடுங்கி எறிந்து விடலாமென்பது அமெரிக்காவின் திட்டம். தாவூத் கைது பற்றிய செய்திகளின் பின்னணியிலும் அமெரிக்கா இருக்கக்கூடும். ஏனென்றால், அமெரிக்க அதிபர் தேர்த லோடு இப்போது பாகிஸ்தான் பிரச்னை நேரடியாகப் பிணைக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளரான பாரக் ஒபாமா, பாகிஸ்தான் பிரச்னையைத் தனது பிரசாரத்தில் பயன்படுத்தி வருகிறார். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் தனது கூட்டாளியாக முஷ்ரப்பை, அமெரிக்க அதிபர் புஷ் பார்க்கிறார். ஆனால், அதற்கு நேர் எதிராகப் பேசிவருகிறார் ஒபாமா. தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள் மீது ராணுவத் தாக்குதல் நடத்துவேன் என அவர் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். இது பாகிஸ்தான் அதிபருக்கு பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈராக் யுத்தத்தில் புஷ் மேற்கொண்டுவரும் அணுகு முறையைக் கடுமையாக விமர்சித்து வருகின்ற ஒபாமா, தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் க்யூபா, வடகொரியா மற்றும் ஈரான் நாட்டு அதிபர்களை எந்தவித முன் நிபந்தனையும் இல்லாமல் சந்திப்பேன் என்று கூறி வருகிறார்.

அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஹிலாரி கிளின்ட்டன் ஒபாமாவின் பேச்சு ‘‘பொறுப்பற்றது, முதிர்ச்சி இல்லாதது’’ என விமர்சித்திருந்தார். ஒபாமாவின் அணுகுமுறை பயங்கரவாதத்துக்கு துணைபோவது என்ற ரீதியில் ஹிலாரி கிளின்ட்டன் விமர்சித்து வருவதை எதிர் கொள்வதற்காகத்தான் ஒபாமா இப்போது இவ்வளவு கடுமையாக பாகிஸ்தானை சாடுகிறார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பாகிஸ்தானில் முஷ்ரப் அதிபராக நீடிப்பதுதான் அமெரிக்க நலனுக்கு உகந்தது என்பதே புஷ்ஷின் நிலைப்பாடு. ஆப்கானிஸ்தானை மையப்படுத்தி வளர்ந்துவரும் மத தீவிரவாதத்துக்கு முஷ்ரப் மூலமாகத்தான் தற்காலிகமாகவாவது ஒரு தடையை ஏற்படுத்த முடியும் என புஷ் நிர்வாகம் நம்புகிறது. அது மட்டுமின்றி இந்தியாவை மிரட்டுவதற்கும்கூட முஷ்ரப்பை அமெரிக்கா பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே ஆயுதரீதியில் சமச்சீரற்ற நிலையை உருவாக்கி, ஒரு ஆயுதப் போட்டியைத் தூண்டுவதன் மூலம் லாபம் அடை யலாமென்ற உள்நோக்கமும் அமெரிக்காவுக்கு இருக்கும். எனவே, ஒபாமாவின் பேச்சால் புண்பட்டிருக்கும் முஷ்ரப்பிடம் தொலைபேசியில் புஷ் பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், முஷ்ரப் அதில் ஆறுதலடையவில்லை.

சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் வந்த அமெரிக்க செனட்டர் ரிச்சர்ட் டர்பின் என்பவரை சந்தித்தபோது முஷ்ரப் தனது அதிருப்தியை வெளிப் படுத்தினார். ‘‘பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் அரசு நடத்திவரும் யுத்தத்தை இத்தகைய பேச்சுக்கள் பலவீனப்படுத்திவிடும்’’ என முஷ்ரப் கூறியிருக்கிறார். பாகிஸ்தானுக்கு அமெரிக்கா செய்யும் உதவிகள் இனி பாகிஸ்தான் எந்த அளவுக்கு பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுகிறது என்பதைப் பொறுத்தே அளிக்கப்படும் என, அண்மையில் சட்டம் ஒன்றை அமெரிக்கா இயற்றியுள்ளது. இதுவும் முஷ்ரப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவை மட்டுமல்லாது இந்தியாவோடு அமெரிக்கா செய்து கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தைப் போல பாகிஸ்தானோடும் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுக்கொள்ளும்படி அமெரிக் காவை முஷ்ரப் வலியுறுத்தினார். அதை அமெரிக்கா ஏற்கவில்லை. இந்தச் சூழலில்தான் தாவூத் இப்ராகிமின் கைது பற்றிய செய்திகள் கசியவிடப்பட்டுள்ளன.

தாவூத் இப்ராகிம் குறித்த இந்தச் செய்தி எந்த நோக்கத்தோடு யாரால் பரப்பப்பட்டிருந்தாலும் இது இந்தப் பகுதியில் அமெரிக்காவின் பிடி இறுகிவருவதன் அடையாளமாகவே பார்க்கப்படவேண்டும்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முரண்பாட்டால் அதிகம் பயன்பெறுவது அமெரிக்கா தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது இருநாடுகளுக்கும் இடையே அதிகரித்திருக்கும் ஆயுதப் போட்டியில் அமெரிக்காவே மேலும் லாபம் அடையப்போகிறது.

இந்தியாவின் அணு ஆயுதத்திட்டங்களை பாகிஸ் தானைக் காட்டித்தான் இங்குள்ள அதிகாரவர்க்கத்தினர் நியாயப்படுத்தி வருகிறார்கள். தற்போது அமெரிக்காவுடன் செய்துகொள்ளப்பட்டிருக்கும் அணுசக்தி ஒப்பந்தமும்கூட அந்த விதத்தில்தான் நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த அணுகுமுறை இந்தியாவுக்கு மிகப்பெரும் பொருளாதார சுமையைத்தான் உருவாக்கி உள்ளது. ஆயுதப் போட்டியால் அமைதியை ஏற்படுத்த முடியாது என்பதை இந்தியாவும், பாகிஸ்தானும் புரிந்து கொள்ளாதவரை அமெரிக்காவுக்குத்தான் கொண்டாட்டம்.

தாவூத் இப்ராகிம் உள்ளிட்ட பயங்கரவாதிகள் தண்டிக் கப்படவேண்டும் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், பயங்கரவாதத்தை முறியடிக்க அமெரிக்க அணுகுமுறை மட்டும்தான் ஒரே தீர்வு எனப்பார்க்கத் தேவையில்லை. தாவூத் போன்ற பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான வழியைக் காண்பதோடு பாகிஸ்தானுடன் நல்லுறவை ஏற்படுத்தவும் இந்தியா முயற்சிக்க வேண்டும். அதுதான் நமது சுதந்திரத்தைக் காத்துக்கொள்வதற்கான அணுகுமுறையாக இருக்கும்.

No comments: