Wednesday 10 June, 2009

பாகிஸ்தான் குறித்த தினமணி தலையங்கம்

05 Jun 2009 தினமணியில் வெளியான தலையங்க கட்டுரை.

காங்கிரஸும் ஆட்சிக்கு வந்தாகிவிட்டது. அடுத்த குண்டுவெடிப்பு(ஜிஹாத்)க்கு ஆயத்தமாகவேண்டியதுதான்...

“”””””””””””””””

தலையங்கம்: பாகிஸ்தானின் பொய்முகம்!

First Published : 05 Jun 2009 12:13:00 AM IST
Last Updated : 06 Jun 2009 01:47:50 AM IST


"உங்கள் பிள்ளைகளில் நல்ல பிள்ளை யார்?' என்றால், "அதோ அங்கே கூரைக்கு தீ வைக்க கொள்ளிக்கட்டையோடு நிற்கிறானே அவன் தான்' என்று சொன்ன கதையாக இருக்கிறது பாகிஸ்தானில் ஜமாத்-உத்-தவா தலைவர் முகமது சய்யீத் விடுதலையாகியிருப்பது!

லஷ்கர்-இ-தொய்பா ஒரு தீவிரவாத இயக்கம் என்பது உலகம் முழுவதும் தெரிந்த விஷயம். இந்த அமைப்புக்கு நிதியுதவி வழங்கும் தாய் அமைப்பாக இருப்பது ஜமாத்-உத்-தவா என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதன் தலைவர் ஹஃபீஸ் முகமது சய்யீத் மட்டும் தீவிரவாதி அல்ல என்று சொல்ல முடியும் என்றால், அதை பாகிஸ்தான் தவிர யாராலும் கூச்சமின்றி சொல்லுதல் இயலாது.

முகமது சய்யீத் மீது போதுமான குற்றச்சாட்டை நிரூபிக்க எந்த விதமான ஆதாரத்தையும் அளிப்பதற்கு பாகிஸ்தான் அரசு இதுநாள்வரையிலும் எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதுதான், வீட்டுக்காவலில் இருந்த அவரை விடுதலை செய்ய அந்நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிடுவதற்கு ஒரேயொரு காரணம்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில், ஏற்கெனவே ஜமாத்-உத்- தவா அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று அறிவித்திருக்கிறது. மும்பை தாக்குதல் நடைபெற்றபோது, அதற்கு மூளையாக இருந்தது இந்த அமைப்புதான் என்று அமெரிக்காவும் வெளிப்படையாக உலகுக்கு அறிவித்தது. எல்லாருக்கும் இந்த அமைப்பு தீவிரவாத அமைப்பு என்று தெரிகிறது. ஆனால் அத்தகைய ஒரு அமைப்பின் தலைவருக்கு எதிராக ஒரேயொரு ஆவணத்தைக்கூட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய பாகிஸ்தானால் முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் அவர்களுக்கு மனமில்லை என்பதாகத்தான் இருக்க முடியும்.

தொடக்கத்திலிருந்தே, இந்தியாவுக்கு எந்த வகையிலும் உதவிடக்கூடாது என்பதுதான் பாகிஸ்தான் அரசின் முதல் நோக்கமாக இருந்துவருகிறது. மும்பைத் தாக்குதல் நடைபெற்று, செல்போன் மூலம் அவர்கள் பேசிய இடங்களை அறிந்த பிறகுதான், தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானியர்கள் என்று இந்திய அரசு அறிவித்தது. ஆனால் அதை பாகிஸ்தான் மறுத்தது.
அதிர்ஷ்டவசமாக உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி கசாபுவின் சொந்த கிராமம் பற்றிய விவரங்களை இந்திய அரசு வெளியிட, ஊடகங்கள் அவரது கிராமத்துக்குச் சென்று உறுதிப்படுத்தியபோதும்கூட, பாகிஸ்தான் அரசு ஏற்காமல் மறுத்துவந்தது. அதன்பிறகு போதுமான ஆவணங்கள் கொடுக்கவில்லை என்றது. எப்படியாவது தட்டிக் கழிக்க வேண்டும் என்பதில்தான் குறியாக இருந்தது என்பது ஊரறிந்த ரகசியம்.

அமெரிக்காவே வெளிப்படையாக இந்தத் தாக்குதலுக்கு காரணம் ஜமா-உத்-தவா என்று சொன்ன பிறகு, "பெரியஅண்ணன்' பேச்சுக்கு மறுபேச்சு பேச முடியாமல் அவரை கைது செய்தது பாகிஸ்தான் அரசு. ஆனால் இப்போதோ ஆவணங்களை கொடுத்து நிரூபிக்காமல் விடுதலையாகும் நிலையை உருவாக்கியுள்ளது. இதனால், உலக அளவில் அசிங்கப்பட்டு போவதையும் பொருட்படுத்தாமல் தீவிரவாதத்தை ஆதரிக்கும் தனது நிலைப்பாட்டினை அம்பலப்படுத்தியிருக்கிறது பாகிஸ்தான்.

முகமது சய்யீத் இதுவரை 4 முறை கைது செய்யப்பட்டு, நான்குமுறையும் எந்த ஆதாரங்களும் இல்லை என்று விடுவிக்கப்பட்டவர். இதற்குக் காரணம் அவர் உண்மையிலேயே தீவிரவாதி அல்ல என்பதல்ல. பாகிஸ்தான் அரசு அவரை செல்லப்பிள்ளையாக பாதுகாக்க விரும்புகிறது என்பது தான்.
இதன் மூலம், பாகிஸ்தான் அரசு தன்னிச்சையாக எதையும் செய்ய முடியாத நிலையில் இருப்பதும், தீவிரவாத அமைப்புகளின் கைப்பாவையாக மட்டுமே பாகிஸ்தான் அரசு செயல்படுகிறது என்பதும் வெளிப்பட்டுள்ளது.

இந்நிலையில், பயங்கரவாதத்தை தங்கள் நாட்டில் ஒழித்துக்கட்டுவோம் என்று பாகிஸ்தான் சொல்வது உலக நாடுகளுக்காகப் பேசப்படும் வீரவசனமே தவிர, வேறில்லை.

தற்போது சய்யீத்தின் விடுதலை, இந்தியாவில் மறைவில்
செயல்பட்டுக்கொண்டிருக்கும் தீவிரவாத அமைப்புகளுக்குக் கூடுதல் ஊக்கமாக அமையும். ஆகவே, பாகிஸ்தானை குறை சொல்லிக்கொண்டிருக்காமல், இந்திய எல்லைக்குள் தீவிரவாத அமைப்பின் செயல்பாட்டை ஒடுக்கி, அயல்நாட்டிலிருந்து பணம் வரும் வழிகளை அடைக்க வேண்டும். வாக்குவங்கியை மனதில் கொண்டு மெத்தனமாகச் செயல்பட்டால், இழப்புகளைச் சந்திக்கப்போவது இந்திய மக்களும் இந்திய அரசும் மட்டுமே என்பது நினைவிருக்கட்டும்!


copyright(c) Dinamani.com

No comments: