பகவத் கீதை - ஓர் எளிய மொழியாக்கம் - 3
எஸ் மெய்யப்பன் Thursday August 16, 2007
அத்தியாயம் நான்கு
ஞான யோகம்
புலன்களை அடக்கிப் பரம்பொருளை நினைப்பதே ஞான யோகம். கண்ணனின் அவதாரம் பெருமை மிக்கது. கர்மயோகத்தில் ஞான பாகமும் அடங்கியுள்ளது. அதனால் ஞான யோகத்தின் பலன்களை, கர்மயோகமும் கொடுக்க வல்லது. இக்கருத்துக்கள் இதில் விளக்கப்படுகின்றன.
இதில் 42 சுலோகங்கள் அடங்கியுள்ளன.
--------------
கண்ணன்: பகைவர்க்குப் பயங்கரனே, அழிவற்ற இந்தக் கர்மயோகத்தை முதலில் நான் சூரியனுக்குச் சொன்னேன். சூரியன் மனுவுக்கு மொழிந்தான். அவன் இச்வாகு மன்னனுக்கு உரைத்தான். இவ்விதம் வழிவழியாக வந்த இந்த யோகத்தை 1ராஜரிஷிகள் அறிந்தார்கள். பிறகு நாளடைவில் அது மறைந்து போய்விட்டது. நீ எனது பக்தன், நண்பன் என்ற காரணத்தால், இந்தப் பழமையான யோகத்தை இன்று உனக்கு எடுத்துச் சொன்னேன், இது சிறந்த இரகசியம்.
அர்ஜுனன்: கண்ணா, மணிவண்ணா, சூரியனுடைய பிறப்பு முந்தியது உனது பிறப்போ 2பிந்தியது. அப்படியிருக்க, முதலில் நீ சூரியனுக்கு உபதேசித்தவன் என்பதை எப்படி நான் நம்புவேன்?
கண்ணன்: அர்ஜுனா‚ எனக்கு எத்தனையோ 3பிறவிகள் கழிந்துவிட்டன. உனக்கும் அப்படித்தான் அவற்றை எல்லாம் நான் அறிவேன். ஆனால் நீ அறிய மாட்டாய்.
நான் பிறப்பும் இறப்பும் இல்லாதவன், எல்லா உயிர்க்கும் உள்ளானவன், இருந்தாலும் என் மாயா சத்தியால் இயற்கையை வசமாக்கிக் கொண்டு, புதிய புதிய பிறவிகளில் அவதரிக்கிறேன். தர்மத்தைச் சூது கவ்வும் போதெல்லாம் என் பிறப்பெனும் சம்பவத்தை நிகழ்த்துகிறேன். நல்லதைக் காக்கவும், தீயதைப் போக்கவும், அறத்தை நிலை நாட்டவும் ஒவ்வொரு யுகத்திலும் நான் அவதரிக்கிறேன். எனவே என் பிறப்பு தெய்வீகமானது, செயலும் தெய்வீகமானது. இதை உணர்ந்தவன் இறந்தால் மீண்டும் பிறப்பதில்லை. அவன் என்னுடன் சங்கமித்து விடுகிறான். மேலும் ஆசை, அச்சம், கோபம் ஆகியவை நீங்கிட என்னிடம் சரணடைந்து, ஞானதபசால் பரிசுத்தமாகி, என்னையே பலர் அடைந்திருக்கின்றனர். என்னை வழிபடுகிறவர்களுக்கு அவரவர் 4நினைத்தபடியே அருள் புரிகின்றேன். எனவே எங்குமுள்ள மனிதர்கள் என் வழியையே பின்பற்றி நடக்கிறார்கள்.
செய்யும் தொழிலில் வெற்றியை விரும்பும் மனிதர்கள், தேவதைகளை வணங்குகிறார்கள். ஏனெனில் இந்த உலகில் தொழில் செய்தால் விரைவில் பலன் கிடைக்கிறது. இந்தத் தொழிலை மக்களின் குணநலன்களுக்குத் தக்கபடி நான்காகப் பிரித்து, 5நான்கு வர்ணங்களையும் நான் தான் படைத்தேன். ஆனால் அதன் படைப்புக்குப் பொறுப்பாளி 6நானல்ல என்பதை நீ அறிந்து கொள்‚, ஏனெனில் எந்த செயலும் என்னைத் தீண்டுவதில்லை. அதன் பலனும் எனக்கு வேண்டுவதில்லை. இந்த உண்மையை அறிந்தவன் உலக பந்தங்களில் கட்டுப்படுவதில்லை மோட்சத்தை விரும்பிய முன்னோர்கள் இதை அறிந்து தான் செயல்பட்டார்கள். அவர்களின் அடிச்சுவட்டை நீயும் பின்பற்று‚
கர்ம மார்கம் எது, அது அல்லாத மார்கம் எது என்பதில் ஞானிகளும் தடுமாறுகின்றனர். கர்ம மார்கம் மிகவும் மர்மமானதுƒ புரிந்து கொள்ளக் கடினமானது. ஆகவே அதைப்பற்றி உனக்குக் கூறுவேன்‚ செய்ய வேண்டிய தொழில், விலக்க வேண்டிய தொழில், தொழிலின் இயல்பு நிலை, தொழிலைக் கடந்த நிலை ஆகிய அனைத்தையுமே நீ அறிந்து கொள்ள வேண்டும்ƒ இதை அறிந்து கொண்டால் தீமைகளிலிருந்து நீ விடுபடுவாய்‚
இயக்கத்தில் இயக்கமின்மை ஒளிந்திருக்கிறது. இயக்கமின்மையில் இயக்கம் மறைந்திருக்கிறது. இதனை அறிந்தவனே பேரறிஞன். ஆசையின் நிழல் படியாது, ஞானத்தீயால் புடமிடப்பட்ட செயலுக்குரிய அவனே அறிஞருள் அறிஞனாவான்ƒ எதிலும் அவனுக்கு ஆசை உண்டாகாதுƒ அவன் ஒரு செயலைச் செய்தாலும் கூட, அதைச் செய்தவனாக 7ஆகமாட்டான். அவன் செய்வது எல்லாமே தவம் செய்வது போலவே இருக்கும்ƒ அவன் அறிவால் ஆசையை அடக்கியவன், ஆத்ம சத்தியால் உடலையும் உள்ளத்தையும் மடக்கியவன், சொத்து சுகங்களைத் துறந்தவன்ƒ இன்ப துன்பம் முதலிய இரட்டைகளை மறந்தவன், கிடைத்ததைக் கொண்டே மகிழ்பவன், பொல்லாத பொறாமையை இகழ்பவன்ƒ அன்றாட சரீரத் தேவைக்காக மட்டுமே தொழிலைச் செய்பவன்ƒ காரியம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் சமமாக நினைப்பவன், தானாக இலாபம் வந்தாலும் அமைதியாக இருப்பவன்ƒ அறிவிலே மனத்தை ஆழ்த்தி, ஆசையை வெட்டி வீழ்த்தி, செய்யும் தொழிலை வேள்வியைப் போலவே செய்யக்கூடிய அவனுக்கு, முன் வினையெல்லாம் முற்றிலும் அற்றுப் போகும்.
இனி இந்தக் கர்மத்தால் நிகழும் யாகத்தைப் பற்றி விளக்குவேன், யாகத்தில் செய்யும் அர்ப்பணச் செயலும் பிரம்மமே, அர்ப்பவிக்கப்படும் அவிர்ப்பாகமும் பிரம்மமே, அதனை ஏற்கும் அக்கினியும் பிரம்மமேƒ பிரம்மமாகிய தலைவனால் செய்யப்படும் ஹோமமும் பிரம்மமேƒ „எல்லாம் பிரம்மமே… என்று நினைப்பவன் முடிவில் சேர வேண்டிய இடமும் 8 பிரம்மமே. சில யோகிகள் தேவதைகளுக்காக யாகம் செய்கிறார்கள். மற்றும் சிலர் இயற்கைத் தீயில் ஆத்மாவையே ஆகுதி செய்கிறார்கள். இன்னும் சிலர் செவி முதலிய புலன்களை அடக்கம் என்ற அக்கினியில் ஆகுதி செய்கிறார்கள். மேலும் சிலர் புலன்களாகிய நெருப்பில் ஆரவாரத்தைப் போட்டு எரிக்கிறார்கள். வேறுசில முற்றிய ஞானிகள் புலன்களின் சேட்டைகளையும் உயிரின் ஆட்டப் பாட்டங்களையும் மனக்கட்டுப்பாடு என்ற யோக நெருப்பில் போட்டு எரிக்கிறார்கள்.
சிலர் பொருள்களை அளிப்பதையே யாகமாகச் செய்கிறார்கள். சிலர் தவத்தால் யாகம் செய்கிறார்கள். சிலர் யோகத்தால் யாகம் செய்கிறார்கள். சிலர் கல்வியாலும் ஞானத்தாலும் யாகம் செய்கிறார்கள், இன்னும் சிலர் உண்ணும் உணவை ஒழுங்கு படுத்திக் கொண்டு, 9பிராணாயாமத்தின் மூலம் 10பிராண வாயுவில் 11அபான வாயுவையும், அபான வாயுவில் பிராண வாயுவையும் ஆகுதி செய்கிறார்கள், இன்னும் சிலர் இவ்விரண்டின் போக்கையும் கட்டுப்படுத்திக் கொண்டு, உயிரையே உயிரில் 12ஆகுதி செய்கிறார்கள். இவர்கள் அனைவருமே யாகத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்கள், அதில் மிஞ்சிய உணவான அமிர்தத்தை உண்டவர்கள், அதனால் புண்ணியம் கொண்டவர்கள். யாகம் செய்யாதவர்களுக்கு இவ்வுலகத்திலும் சுகம் இல்லைƒ அவ்வுலகத்திலும் சுகம் இல்லை. இவ்விதம் பலவிதமான யாகங்கள் வேதத்தின் முன்பகுதிகளில் கூறப்பட்டுள்ளன. கர்மம் என்பது இல்லை என்றால் எந்த யாகமும் இல்லை, இதை உணர்ந்துவிட்டால் உன்னை அலைக்கழிக்கும் மயக்கத்திலுருந்து விடுதலை பெறுவாய்‚
பாண்டவனே‚ பொருள்களைக் கொண்டு செய்யும் யாகத்தைக் காட்டிலும், ஞானயாகமே சிறந்தது. ஏனெனில் எல்லாக் கர்மங்களும் ஞானத்தில் தான் முடிவடைகின்றன. இந்த ஞானத்தை உயர்ந்த தத்துவ ஞானிகள் உனக்கு 13உபதேசிப்பார்கள். அவர்களின் திருவடிகளைத் தொழுதும், தொண்டுகள் புரிந்தும், அடிக்கடி கேள்விகள் கேட்டும், இந்த ஆத்ம ஞானத்தைக் கற்றுக் கொள், இந்த ஞானத்தை நீ பெற்று விட்டால், அனைத்துமே உனக்குள் அடங்கியிருப்பதை உணர்ந்து கொள்வாய், அவை எனக்குள் இருப்பதையும் கண்டு கொள்வாய்‚
நீ நீந்தும் பாவக்கடல் என்ன தான் பெரியதாக இருந்தாலும் ஞானத்தோணி உன்னை நிச்சயம் கரையில் சேர்த்துவிடும். கொழுந்து விடும் நெருப்பு, விறகுகளை எரித்துச் சாம்பலாக்கி விடுவது போல், ஞானக்கனல் உன் வினைகளை எல்லாம் எரித்துத் தள்ளிவிடும். உன்னைப் பரிசுத்தப்படுத்த உலகில் ஞானத்தை விடச் சிறந்தது ஒன்றுமில்லை. தகுந்த காலம் வரும்போது, யோகசித்தன் அதைத்தானே தனக்குள் அடையாளம் கண்டு கொள்கிறான். ஞான சம்பாத்தியத்தில் நாட்டமுள்ளவன், புலன்களை அடக்கும் ஆற்றலுள்ளவன் ஞானத்தை அடைகிறான்ƒ அமைதி மயமான மோட்சத்தை அடைகிறான். ஆனால் அறிவில்லாதவனும் அக்கரை இல்லாதவனும், சந்தேகப்பட்டவனும் அழிந்து போகிறான்ƒ சந்தேகப் பிராணிகளுக்கு மண்ணுலகிலும் சுகம் இல்லைƒ விண்ணுலகிலும் சுகம் இல்லை.
14தனஞ்ஜயனே‚ யோகத்தால் செயல்களை விலக்கி, ஞானத்தால் சந்தேகத்தைத் துலக்கி, அத்மாவை விருப்பம் போல் பழக்கியவனை முன்வினைகள் 15கட்டுப்படுத்துவதில்லை. ஆகவே அஞ்ஞானத்தில் பிறந்திருக்கும் உன் ஐயத்தை ஞான வாளால் துண்டித்துவிடு‚ எழுந்து நின்று எதிரிகளைத் 16தண்டித்துவிடு‚
(நான்காம் அத்தியாயம் நிறைவு பெற்றது)
1. பிராமணர்கள் சாங்கியநிஷ்டை பயின்று பிரம்ம ரிஷிகளாயினர், அரசர்களிற் சிறந்தவர்கள் கரும நிஷ்டை பயின்று ராஜாரிஷிகளாயினர்.
2. நீயோ இப்பொழுதுள்ள வசுதேவனுக்குப் பிறந்தவன் சூரியனோ சிருஷ்டித் தொடக்கத்தில் பிறந்தவன். - ஸ்ரீ சங்கரர்
3. உலகில் தோன்றிய அவதாரங்களெல்லாம் ஒரே ஈசுவரனே. அவன் பிரம்மமாகிய சமுத்திரத்தில் அமிழ்ந்து ஓரிடத்தில் கிளம்பும் போது கிருஷ்ணன் எனவும் இன்னோரு தரம் மூழ்கி வேரிடத்தில் கிளம்பும்போது கிறிஸ்து எனவும் அழைக்கப்படுகிறான். - ஸ்ரீ இராமகிருஷ்ணர்
4. அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவர் இறையவ ரெனஅடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் வழிவழி அடையநின் றனரே‚ - திருவாய்மொழி.
5. பிராமணன் ~த்ரியன், வைசியன், சூத்திரன்.
„செயல் திறத்தையும், தன்மையின் பகுப்புக்களையும் அடிப்படையாகக் கொண்டு நான்தான் நான்கு வருணங்களையும் உருவாக்கினேன்… என்று கண்ணன் சொல்லுகிறான். இந்த வாசகத்தை அடிப்படையாகக் கொண்டு, இம்முறையை என்றும் நிலைத்திருக்கும் உலகளாவிய ஒரு சமுதாய அமைப்பாக கீதை கருதியது என்ற முடிவிற்கு வந்துவிட முடியாது. பழம்பெரும் தத்துவ மேதைகளும் அவ்விதம் கருதவில்லை. மாறாக ஆதிகாலத்தில் நால் வருண முறை இருந்ததில்லை என்றும், பின் வரும் காலச்சக்கரத்தில் அது சிதறுண்டு போகும் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டனர். இருப்பினும் இந்த வாசகத்திலிருந்து நால் வருண முறை ஒவ்வொரு சமூகத்தினுடையவும் தனி மனிதனுடையவும் பொருளாதார மற்றும் மனோதத்துவத் தேவைகளில் ஒன்று கலந்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
- ஸ்ரீ அரவிந்தர், கீதைக் கட்டுரைகள். பரந்த மனப்பான்மை கொண்டவர்கள் அநீதியையும் கொடுமையும் பாகுபாடு காட்டும் தன்மையையும் வளர்க்கிறது என்று குற்றம் சாட்டி, இம்முறையை எதிர்த்து ஒட்டு மொத்தமாகக் குரல் எழுப்பியுள்ளனர். இருப்பினும் இயற்கை அமைப்பில் மனிதர்களும் பொருட்களும் பல்வேறுபட்ட செயல்களை நிறைவு செய்யும் பொருட்டு, வளர்ச்சியின் பல்வேறு மட்டங்களில் தோன்றியுள்ளன. எல்லாச் செடி கொடிகளும் மருந்தாகப் பயன் படுவதில்லை. எல்லா மரங்களும் வானளாவி வளர்வதில்லைƒ எல்லா நதிகளும் கம்பீரச் சலசலப்புடன் ஓடுவதில்லை. எல்லா மலைகளும் அதீத அழகு மிக்க பனிப்படலங்களைச் சூடிக்கொள்ளுவதில்லை. உண்மையில் சொல்லப் போனால் எல்லா மனிதர்களும் ஒரே தன்மையும், ஒரே வலிமையும், ஒரே தகுதியும் உடையவர்களாக இருந்தால் வாழ்க்கை என்பது சகிக்க முடியாத வகையில் எழுச்சியற்றதாகவும் கவர்ச்சியற்றதாகவும் ஆகிவிடும்.
- தீலீப்குமார் ராய், பகவத்கீதை ஓர் அருள் வெளிபாடு
6. மாயா சம்பந்தத்தால் நான் பொறுப்பாளியாக இருந்தாலும் உண்மையில் நான் பொறுப்பாளி அல்ல. - ஸ்ரீ சங்கரர்
7. எண்ணெயும் தண்ணீரும் போல் நிற்பவன். - கண்ணதாசன்
8. மூலப் பொருளுக்கு மூலம் தந்த பொருளைப் படைத்து, எல்லாம் அந்த மூலவனின் செயலே என்று அமைதி அடைந்தால் அந்த மூலவனை அடையலாம். - கண்ணதாசன்
9.பிராணாயாமம்: சாதரணமாக நாம் மூச்சுவிடும் போது 500 கன சென்டி மீட்டர் அளவுடைய காற்றைச் சுவாசிக்கிறோம் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுக் கூறுகிறார்கள். யோக சாதனையில் ஆழ்ந்து சுவாசிக்கும் போது ஒரே மூச்சில் 3700 கன சென்டி மீட்டர் காற்றைச் சுவாசிக்க முடிகிறது என்று சொல்லுகிறார்கள். நமது இரத்தத்திலும், உடலின் மற்ற பகுதிகளிலும் இருந்து உண்டாகிற விஷத்தன்மையைப் போக்கி, நரம்பு மண்டலத்தைத் தூய்மைப்படுத்தும் ஆற்றல் உடையது பிராணாயாமப் பயிற்சி. இது சளி பிடிக்கும் தொல்லையிலிருந்து நம்மைக் காப்பாற்றும். விஷ ஜீரம் போன்ற கொடிய நோய்கள் வராமல் தடுக்கும். மூக்குக்குள் ஏற்படும் மூச்சு அடைப்பு போன்ற தொந்தரவிலிருந்தும் பாதுகாக்கும். -சுவாமி சச்;சிதானந்தா
பிராணாயாமத்தினால் மனம் தூய்மையும், அமைதியும் அடையும். எதையும் கூர்ந்து கவனித்து அதைப் பற்றிக் கொள்ளும் மகத்தான ஆற்றலையும் மனம் பெறும். - பதஞ்சலி முனிவர்
10. நாசியில் உட்கொள்ளும் காற்று - இது பூரகம் எனப்படும்.
11. நாசியில் வெளிவிடும் காற்று - இது ரேசகம் எனப்படும்.
12. பிராணாயாமத்தின் மூன்று கூறுபாடுகளான பூரகம், ரேசகம், கும்பகம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. பூரகம் அல்லது ரேசகம் செய்த காற்றை உள்ளே அல்லது வெளியில் அடக்குதல் கும்பகம் எனப்படும்.
13. உண்மையாக குரு படகோட்டி. அவருடைய உபதேசம் ஒரு கரையிலிருந்து மற்றோரு கரைக்குக் கொண்டு செலுத்தும். மறு கரையில் காற்றில்லை, நெருப்பு இல்லை, நீர் இல்லை, வடிவங்கள் இல்லை. அங்கு இறைவன் இருக்கிறான். அங்கு குருவால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள், இறைவனுடன் ஒன்றி இசைக்கிறார்கள். அங்கு சென்ற பிறகு வருவதும், போதும் நிகழ்வதில்லை. ஏனெனில் இறைவனின் உபதேசத்தைத் தம் வாயால் சொல்பரே குரு. - குருநானக்;
14. அடைபட்ட செல்வத்தைச் சேகரிப்பவன்.
15. கடல் நீருக்குள்ளேயே இருக்கும் மீனின் உடலில், கடல் நீரில் கலந்திருக்கும் உப்பு ஏறுவதில்லைƒ உலக வாழ்வில் இருந்தாலும் உண்மை ஞானிகளின் உள்ளத்தில் ஆசாபாசங்கள் ஏறாது. - பாம்பன் சுவாமிகள்
16. கீதையின் மையக் கருத்து அகிம்சையே தவிர ஹிம்சையல்ல. 2-வது அத்தியாயத்தில் ஆரம்பித்து 18-வது அத்தியாயம் வரை மிகத் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. பிற அத்தியாயங்களில் காணப்படும் விளக்கங்களும் இதற்கு ஆதரவாகவே இருக்கின்றன. கோபம், வெறுப்பு, பற்றுதல் இருந்தால் தான் ஹிம்சை தோன்றும். கோபம், வெறுப்பு ஆகியவற்றுக்குக் காரணமான சத்வம், ராஜசம், தாமசம் ஆகிய குணங்களைக் கடந்து செயல்படுவதற்குத்தான் கீதை வழிகாட்டுகிறது.
- மகாத்மா காந்தி, யங் இந்தியா, நவம்பர் 12, 1925.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment