Friday, 17 August 2007

மூச்சுதிணறி சாகப்போகிறான் முஷ்ரப் - விகடன் கட்டுரை

மூச்சுத்திணறும் முஷ்ரப்!
ரவிக்குமார் எம்.எல்.ஏ. Junior Vikatan 19 Aug.2007

பாகிஸ்தானில் அவசரநிலை அறிவிக்கப்படுவது, இப்போதைக்குத் தள்ளிப் போயிருக்கிறது. அமெரிக்காவின் வற்புறுத்தல், பாகிஸ்தான் அதிபரின் கைகளைத் தற்காலிகமாகக் கட்டிப்போட்டிருந்தாலும் பாகிஸ்தானின் அரசியல் நிலைமை குழப்பமாகவே இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் தேர்தலை சந்தித்தாக வேண்டுமென்ற நிர்ப்பந்தத்தில் இருக்கும் முஷ்ரப், ராணுவ தளபதி மற்றும் அதிபர் ஆகிய இரண்டு பதவிகளையும் தக்கவைத்துக் கொள்ளவேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்.

பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி உச்சகட்டத்துக்கு சென்றுவிட்டது. தீவிரவாதிகளின் வன்முறை, பாகிஸ்தானில் இருக்கும் வெளிநாட்டவர்கள் குறிப்பாக சீனர்கள் மீது அதிகரித்துவரும் தாக்குதல், முஷ்ரப்பின் கட்டுப்பாட்டை மீறி செயல்படும் நீதித்துறை... இவை எல்லாவற்றையும்விட அமெரிக்காவின் தலையீடு போன்ற காரணங்களால் பாகிஸ்தான் அரசு விழி பிதுங்கிக்கொண்டிருக்கிறது. இதை சமாளிக்கவே அவசர நிலை என்ற
அஸ்திரத்தை எடுப்பதற்கு முஷ்ரப் திட்டமிட்டார். அவசரநிலையை அறிவித்தாலும், ஒரு ஆண்டுக்குமேல் அதை நீட்டிக்க முடியாது என்று பாகிஸ்தானின் அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. எனவே, என்ன தில்லுமுல்லு செய்தாலும் முஷ்ரப் ஒரு ஆண்டுக்கு மேல் பதவியில் நீடிப்பது சிரமம்.

1999 அக்டோபரில் அதிரடியான ராணுவப் புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய முஷ்ரப் கடந்த எட்டு ஆண்டுகளாக ராணுவம், சிவில் நிர்வாகம் ஆகிய இரண்டையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். சுமார் பதினாறு கோடி மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தான், நாடாளுமன்ற முறையைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டாலும்கூட பெரும்பாலும் ராணுவத் தளபதிகளாலேயே ஆளப்பட்டு வருகிறது. தளபதி முகமது அயூப்கான் என்பவரே அங்கு ராணுவ ஆட்சிக்கு விதை போட்டவர்.

1969&ல் அவர் ராணுவத் தளபதி யாகியா கானிடம் ஆட்சியை ஒப்படைத்தார். அதற்கு பிறகு நடத்தப்பட்ட தேர்தலில் கிழக்குப் பாகிஸ்தானில் எதிர்பாராதவிதமாக ஷேக் முஜிபுர் ரஹ்மானின் ‘ஆவாமி லீக்’ கட்சி வெற்றி பெற்றது.

அதை ஏற்க மறுத்த யாகியாகானின் கொடூரமான அடக்குமுறை காரணமாக, இந்தியாவின் ராணுவத் தலையீட்டால் கிழக்குப் பாகிஸ்தான் துண்டாடப்பட்டு வங்கதேசம் என்ற தனி நாடு உருவெடுத்தது. அதன்பின் பாகிஸ்தானின் ஆட்சி அதிகாரம் பூட்டோவிடம் கையளிக் கப்பட்டது. ஆனால், அது வெகுகாலம் நீடிக்கவில்லை. தளபதி ஜியா உல் ஹக் தலைமையிலான ராணுவப் புரட்சி, பூட்டோவின் பதவியைப் பறித்தது மட்டுமின்றி, அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றது. 1988&ல் ஜியா உல் ஹக் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதற்குப் பிறகு பெனாசிர் பூட்டோ பொறுப்புக்கு வந்தார்.

பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக் காததால், அவர் சிறுசிறு கட்சிகளின் உதவியோடு ஆட்சி அமைத்தார். அப்போது தற்காலிக அதிபராக இருந்த குலாம் இஷாக் கான் என்பவர் ராணுவத்தின் ஆதரவைப் பெற்றிருந்தார். தன்னை அதிபராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற முன் நிபந்தனையோடுதான் பெனாசிரை அவர் ஆட்சியமைக்க அழைத்திருந்தார்.

ஒரு ஜனநாயக முறையிலான ஆட்சி நடப்பதாகத் தோற்றமளித்தாலும்கூட ராணுவம்தான் அப்போது அதிகாரத்தைக் கையில் வைத்திருந்தது. அதிபர் குலாம் இஷாக் கான் மூலமாக அடிக்கடி ஆட்சி மாற்றங்களை ராணுவம் நிகழ்த்தி வந்தது. பெனாசிரை நீக்கிவிட்டு நவாஸ் ஷெரீப் தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சியை ஆட்சியில் அமர்த்தினார் இஷாக் கான். ஆட்சியைக் கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு இருந்தது. அந்த அதிகாரம் இருக்கும் வரை யாரும் நிலையான ஆட்சியை நடத்த முடியாது என்பதைப் புரிந்து கொண்டதால், 1997&ல் பெனாசிர் பூட்டோவும் நவாஸ் ஷெரீப்பும் ஒரு உடன்பாட்டுக்கு வந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைப்பதற்கு அதிபருக்கு அதிகாரமளிக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவை நீக்குவதற்கு அப்போது ஆட்சியிலிருந்த நவாஸ் ஷெரீப்புக்கு பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவளித்தது. இதனால் ஆத்திரமடைந்த ராணுவம், நவாஸ் ஷெரீப்பைக் கவிழ்க்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தது. இறுதியாக 1999 அக்டோபரில் அப்போது ராணுவத் தளபதியாக இருந்த தளபதி முஷ்ரப் அதிரடிப் புரட்சியை நடத்தி, ஆட்சியைக் கைப்பற்றினார்.

முஷ்ரப் அதிகாரத்துக்கு வந்ததற்குப்பிறகு பாகிஸ்தானின் மிதவாத அரசியல் தலைவர்களாக இருந்த பெனாசிர் பூட்டோவும், நவாஸ் ஷெரீப்பும் நாட்டைவிட்டு வெளி யேற்றப்பட்டனர்.
இஸ்லாமிய அடிப்படைவாத கட்சிகள் ஊக்குவிக்கப்பட்டன. 2002&ம் ஆண்டு ஒரு பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் பத்து சதவிகிதம் பேர்தான் வாக்களித்தனர் என்று எதிர்க்கட்சிகள் கூறின. அந்தத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பே முஷ்ரப் ஒரு ஆணையைப் பிறப்பித்தார்.

இரண்டுமுறை பிரதமராக இருந்தவர்கள், மூன்றாவது முறை பதவி வகிக்க அதன் மூலம் தடை விதித்தார். பெனாசிரும், நவாஸ் ஷெரீப்பும் திரும்பவும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அந்த ஆணையை முஷ்ரப் பிறப்பித்தார்.

கடந்த எட்டு ஆண்டுகளாக முஷ்ரப்பின் பிடியில் இருக்கும் பாகிஸ்தானில், எதிர்வரும் அக்டோபர் மாதம் பொதுத்தேர்தல் நடத்தப் பட வேண்டும். தொடர்ந்து பதவியில் நீடிக்க முஷ்ரப் பல்வேறு தந்திரங்களை முயற்சித்து வருகிறார். கடந்த மாதத்தில் இதற்காக அவர் பெனாசிர் பூட்டோவை அபுதாபியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அதிபராக மீண்டும் அவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்றால், ராணுவத் தளபதி என்ற பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டுமென்று பெனாசிர் அப்போது வலியுறுத்தியதாக செய்திகள் வந்தன. பாகிஸ்தான் அரசியலில் ராணுவத் தலைமைப் பொறுப்பே சக்தி வாய்ந்தது என்பதை உணர்ந்துதான் பெனாசிர் இந்த நிபந்தனையை முன்வைத்திருக்கிறார். ஆனால், முஷ்ரப் அதற்கு உடன்படப் போவதில்லை. அதனால்தான் அவசர நிலையைப் பிரகடனம் செய்யலாமா என்ற ஆலோசனையை அவர் நடத்தினார்.

அந்த முயற்சியை அமெரிக்கா இப்போது தடுத்து விட்டது. எனவே, அவர் வேறு வழிகளைக் கண்டறிந்தாக வேண்டும்.

பாகிஸ்தான் அதிபரை பொதுமக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுப்பதில்லை. செனட் மற்றும் நேஷனல் அசெம்ப்ளி எனப்படும் நாடாளுமன்றத்தின் உறுப் பினர்களும், அங்குள்ள நான்கு மாகாணங்களின் சட்டப் பேரவை உறுப்பினர்களும் சேர்ந்துதான் அதிபரைத் தேர்ந்தெடுப்பார்கள். 2002&ல் நடத்தப்பட்ட தேர்தலில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்புகளின் ஐந்து ஆண்டு ஆயுட்காலமும் டிசம்பரில் முடிவடைய உள்ளது.

அதற்குள் அதிபர் தேர்தலை நடத்தி அந்த உறுப்பினர்களைக் கொண்டு மீண்டும் அதிபராகத் தன்னை அமர்த்திக்கொள்ளும் யோசனை முஷ்ரப்புக்கு இருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் அதற்கு இணங்க வில்லை. புதிய அவைகளைத் தேர்ந்தெடுத்த பிறகே, அதிபர் தேர்தலை நடத்த வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்துகின்றன.

பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டப்படி, அதிபராக இருப்பவர் வேறு பதவி எதையும் வகிக்க முடியாது. ஆனால், அந்த விதியைத் தளர்த்தி 2007 டிசம்பர் வரை அதிபராகவும், ராணுவத் தளபதி யாகவும் இருப்பதற்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் முஷ்ரப்புக்கு சிறப்பு அனுமதியன்றை வழங்கி உள்ளது. அந்தக் காலக்கெடு முடிவதற்குள் மீண்டும் ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்து இப்போதுள்ள நிலையை நீட்டித்துக்கொள்ள முஷ்ரப் முயற்சிக்கிறார். ஆனால், இப்போது நீதித்துறை அவரது கட்டுப்பாட்டில் இல்லை. எனவே, இத்தகைய மோசடி நாடகங்களை முஷ்ரப் அரங்கேற்றினாலும், அதை நீதிமன்றம் தலையிட்டுத் தடுத்துவிடும் என்ற சூழல் நிலவுகிறது.

முஷ்ரப்புக்கு இருக்கும் அடுத்த வழி பெனாசிர் பூட்டோவுடன் சமரசம் செய்து கொள்வதுதான். அதைத்தான் இப்போது அவர் முயற்சித்துப் பார்த்தார். ஆனால், முஷ்ரப்புடன் எவ்வித உடன்பாடும் செய்து கொள்ளக்கூடாது என பெனாசிர் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆகவே, இதற்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த இரண்டு வழிகளும் சாத்தியமில்லாத சூழலில் கௌரவமாகத் தேர்தலை சந்திப்பது ஒன்றே முஷ்ரப்புக்கு இருக்கும் கடைசி வழியாகும். பாகிஸ்தானில் மீண்டும் ஜனநாயக ஆட்சி மலர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது முஷ்ரப்பை பொறுத்தமட்டில் ஒரு ‘அரசியல் தற்கொலை’தான். எனவே, அந்த வழியையும் அவர் தேர்ந்தெடுப்பது சந்தேகமே.

பாகிஸ்தான் அரசியலில் முக்கிய பங்கு வகித்துவரும் அமெரிக்கா, இப்போது என்ன செய்யப்போகிறது என்பதில்தான் முஷ்ரப்பின் எதிர்காலம் அடங்கியுள்ளது. பாகிஸ்தானின் எதிர்காலமும்கூட அதில்தான் உள்ளது. அங்கே வலுப்பெற்றுவரும் மத தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவது, தமது உள்நாட்டு பாதுகாப்புக்கு அவசியமென்று உணர்ந்துள்ள அமெரிக்கா, அதற்கு உதவக்கூடிய ஒரு ஆட்சி பாகிஸ்தானில் இருப்பதைத்தான் விரும்பும். அந்த அடிப்படையிலேயே இதுவரை முஷ்ரப்பை அது ஆதரித்து வருகிறது.

அமெரிக்காவைத் திருப்திப்படுத்துகிற அதேவேளை, தனது பதவியை தக்கவைத்துக்கொள்ள மத தீவிரவாத அமைப்புகளையும் முஷ்ரப் ஆதரித்து வருகிறார். பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாகாணத்தில் ஆட்சி நடத்தும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சில கட்சிகளுக்கு அல்&கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதுபோலவே பாகிஸ்தான் முழுவதும் பரவியுள்ள பத்தாயிரத்துக்கும் அதிகமான மதரஸாக்களும் முஷ்ரப்புக்குத் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன.

பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களில் எண்பது சதவிகிதம் பேர் ‘சன்னி’ பிரிவைச் சேர்ந்தவர்கள்... எஞ்சியவர்கள் ‘ஷியா’ பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்த இரு பிரிவினருக்கிடையே நடக்கும் மோதல், இன்னொரு சிக்கலாகும்.

வடமேற்கு எல்லை மாகாணத்தில் பெரும்பகுதியாக இருக்கும் ‘பஷ்டூன்’ இனத்தவர், இப்போது முஷ்ரப்பின் கட்டுப்பாட்டில் இல்லை. அவர்கள் தங்களுக்கென்று தனிநாடு வேண்டும் என்று கோரி வருகின்றனர். அப்படி ஒரு தனிநாடு அமைந்தால், அது பயங்கர வாதிகளின் புகலிடமாக மாறிவிடும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது.

பழங்குடியினர் வாழும் வடக்குப் பகுதிகளில் நேரடியான அரசாங்கம் கிடையாது. அவற்றைத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்க அமைப்பு நிர்வகிப்பதில்லை. நியமிக்கப்பட்ட சில நபர்களே அதை நிர்வகிக்கின்றனர். பாகிஸ்தானின் சட்டங்களோ, நீதிமன்றங்களோ அங்கே செல்லுபடியாவதில்லை. ‘ஜிர்கா’ எனப்படும் பழங்குடியினரின் சட்டங்களே அந்தப் பகுதிகளில் நடைமுறையில் உள்ளன. மத தீவிரவாதக் குழுக்களின் ‘லஷ்கர்’ என்ற படைகளே அங்கு ஆதிக்கம் செய்கின்றன.

தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவற்றோடு முஷ்ரப் சமரசம் செய்து கொண்டிருக்கிறார். இதனால் மேலும் மேலும் பாகிஸ்தானில் மத தீவிரவாதம் பெருகி வருகிறது.

இன்னும் ஒரு ஆண்டில் தேர்தலை சந்திக்கவிருக்கும் அமெரிக்காவில், ஏற்கெனவே பாகிஸ்தான் பிரச்னை ஒரு முக்கிய தேர்தல் பிரச்னையாக மாறியுள்ளது. அமெரிக்கத் தேர்தலுக்கு முன்பே பாகிஸ்தானில் தேர்தல் நடந்தாக வேண்டிய சூழல். அமெரிக்க அரசியலில் பாகிஸ்தான் பிரச்னை முக்கியத்துவம் பெற்றிருப்பதுபோல, பாகிஸ்தான் அரசியலில் அமெரிக்கப் பிரச்னை முக்கியத்துவம் பெற்றுள்ளது. அமெரிக்க எஜமானர்களைத் திருப்திப்படுத்துகிற ஒருவரே, இனிமேல் பாகிஸ்தானின் அதிபராக இருக்க முடியும் என்ற சூழல். தற்போதுள்ள நிலைமையில் முஷ்ரப் தொடர்ந்து பதவியில் நீடிப்பது சந்தேகம்தான். அவருக்கு மாற்றாக ஒரு நபரைக் கண்டுபிடித்து விட்டால், அமெரிக்கா முஷ்ரப்பை கைவிட்டுவிடும்.

உள்நாட்டு&வெளிநாட்டு நெருக்கடிகளில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் பாகிஸ்தானில் அவசர நிலை வருகிறதா அல்லது தேர்தல் வருகிறதா என்பது இன்னும் சிறிது காலத்தில் தெரிந்துவிடும். அதைத் தீர்மானிக்கப்போவது முஷ்ரப் அல்ல, அமெரிக்காவே!

No comments: