திண்ணை ஆசிரியருக்கு,வணக்கம்.
இரண்டு வாரங்களுக்குமுன் திண்ணையில் தாஜ் அவர்கள், மலேஷியாவில் துன்புறும் ரேவதி என்ற பெண்ணுக்கு ஆதரவாய் திரு அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாற்றுமுகமாக எழுதிய கடிதம் கண்டேன். எந்தஒரு சாதாரண மனிதனுக்கும் ஏற்படுகின்ற மனிதாபிமானத்தின் வெளிப்பாடே திரு அ.நீ அவர்கள் எழுதிய கட்டுரையின் சாராம்சம். அதற்கு இவ்வளவு அராஜகமான எதிர்வினை எழுதிய தாஜ் அவர்களின் கடிதம் கண்டு மிக்க வருத்தம். திண்ணையில் அழகிய கவிதைகளும் கட்டுரைகளையும் எழுதிவரும் தாஜ் போக இன்னொரு தாஜ்-ம் இருக்கலாமோ என்றொரு சந்தேகம் வேறு வந்து தொலைத்தது.
எனக்கு தெரிந்தவரையில், திரு அ.நீ அவர்கள் மிகுந்த சமுதாய உணர்வுகளுடன் சிந்தனையை தூண்டும் கட்டுரைகள் பலவும் எழுதிவரும் பண்பட்ட மனிதர். வெகு அபூர்வமாக ஒருசில தடித்த வார்த்தைகளை பிரயோகம் செய்து கண்டிருக்கிறேன். அதுகூட அவரது இணைய நண்பர்களால் கடுமையாக சுட்டிக்காட்டப்பட்டதையும் கண்டிருக்கிறேன். அனைத்து மதத்தைச்சேர்ந்த மனிதர்களுடன் அவர் இணக்கமாக பழகிவருவதை அவர் எழுதிய கட்டுரைகளை படித்தவர்களுக்கு புரியும். எந்தவித ஆதாயங்களுக்காகவும் யரையும் கண்மூடித்தனமாக வெறுத்தும் ஆதரித்தும் எழுதியதாக எனக்கு நினைவில்லை. தாஜ் அவர்களின் தவரான புரிதல்கண்டு வருத்தம். திரு அ.நீ அவர்கள் இம்மாதிரியான எதிவினை குறித்து ஏதும் இதுவரை எழுதவில்லை. படித்து, ஒதுக்கிவிட்டு போயிருக்கலாம்.
ஆனாலும், கடந்த வார திண்ணயில் இதுகுறித்து பெரியவர்கள் திரு மலர்மன்னன் அவர்களும், திரு வெ.சாமிநாதன் அவர்களும் எழுதிய கடிதங்கள் கருத்தாழமிக்கதும் சிந்தனையைத்தூண்டுவதாகவும் இருந்தது. அவர்களின் சிரத்தையான கடிதங்களுக்கு நன்றிகள் பல. அவர்களின் முயற்சிகளுக்கு பலன் கிடைக்க வேண்டும். ஒருசில மனங்களாவது நல்வழி திரும்ப இணைய வாசகர்களும் நம்மாலான முயற்சிகளை செய்வதே அந்த பெரியவர்களின் உழப்புக்கு நாம் செய்யும் பிரதிபலன்.
*********************************
திரு சி.ஜெயபாரதன் அவர்களின், ஜப்பானில் எழுந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அணுமின்சார நிலையம் குறித்து கட்டுரை எழுதவிருப்பதான அறிவிப்பு கண்டேன். மிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் "திண்ணை" இணையபக்கத்தை ஆவலுடன் திறந்து பார்ப்பதற்கு திரு சி.ஜெயபாரதன் அவர்களின் கட்டுரைகள்/கதைகள்/கவிதைகள் ஆகியவையும் ஒரு முக்கிய காரணி. மிக்க நன்றி.
இரண்டு வாரங்களுக்குமுன் செல்வி அவர்கள் எழுதியதைப்போல, "மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு பெயர்போன ஜப்பானில் இப்படியென்றால்" என்றே நானும் பலகாலம் நினைத்துக்கொண்டிருந்தேன். சமீபகாலமாக இங்கு பத்திரிக்கைகள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக வெளிவந்து உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளையும் உறுதிப்படுத்தபடாத ஊகங்களையும் பார்க்கும் போதும் படிக்கும்போதும், இது ஒரு பாதுகாப்பற்ற தொழில்நுட்பம் என்ற உணர்வே மேலோங்குகிறது.
அணுமின் தொழில்நுட்பம் குறித்து திரு சி.ஜெ அவர்கள் எழுதிய பல்வேறு கட்டுரைகளையும், அசுரன் போன்றோருக்கு பதிலிறுத்து எழுதிய கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன். அணுஆற்றல் தொழில்நுட்பம் என்பது முதிர்ச்சியானதா என்ற கேள்வி ஒருபுறமிருக்கட்டும், அதனை நடைமுறைப்படுத்தும் நம்நாட்டின் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இன்னபிற சம்பந்தபட்டவர்களும் இந்த தருணத்தில் முதிர்ச்சியானவர்களா என்ற கோணத்தையும் கவனத்தில்கொண்டு கட்டுரை எழுத வேண்டுகிறேன்.
மாற்று எரிபொருளுக்கான முயற்சிகள் உடனடியாக தேவையென்று எல்லோரும் ஒப்புக்கொள்ளும் அதேவேளையில், கடினமான தொழில்நுட்ப விஷயங்களையும் புள்ளிவிபரங்களையும் கொண்டுமட்டுமல்லாது இன்றய இந்தியாவின் அரசியல் மற்றும் சமூகநிலைப்பாடுகளையும் கவனித்தில்கொண்டு எழுதிய உங்கள் கட்டுரையைக்காண ஆவலுடன்.
R.பாலா
hikari_1965@yahoo.co.jp
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment