Friday, 3 August 2007

மலேஷிய ரேவதி விஷயமாய் திரு வெ.சாமிநாதன் - திண்ணை கட்டுரை

Thursday August 2, 2007
அராஜக சட்டமும், தனி மனித உரிமையும்
வெங்கட் சாமிநாதன்

ஹிந்து வாகப் பிறந்த ஒருவருக்கு ஹிந்துவாக வாழும் உரிமையை ஒரு அரசு சட்டம் இயற்றி மறுக்குமாயின், அது ஒரு அராஜக சட்டமே. அரசு சட்டமாக இருந்த போதிலும். இந்தியாவிலோ, அல்லது வேறு எந்த நாட்டிலும், கிறிஸ்துவம் நாட்டின் மதமாக பிரகடனப்பட்டிருந்தாலும் கூட, ஏன் இஸ்ரேல நாட்டில் கூட, ஒரு தனி மனிதனின் மதம் என்னவாக இருக்கவேண்டும் என்று அரசு சட்டம் இயற்றினால் அது அரசின் வன்முறை. இது முஸ்லீம் நாடுகளில் மாத்திரமே காணப்படும் வன்முறை. அராஜகம் தாண்டவமாடியதாக சொல்லப்படும் இராக்கில் கூட மதம் அரசின் வன்முறைக்குப் பயன்பட்டதில்லை. ஹிந்துவாகப் பிறந்து வளர்ந்த ஒரு பெண், அவளது குழந்தைப் பருவத்தில் பெற்றோரால் முஸ்லீமாக அடையாளப்படுத்தப்படுவது ஒரு வன்முறை. அரசின், பெரும்பான்மை முஸ்லீம் சமுதாயத்தின் சட்ட நிர்ப்பந்தங்கள் இல்லையெனில் இது நிகழ்ந்திருக்க முடியாது. டெங்கு அப்துல் ரஹ்மான் காலம் வரை மலேசியா முஸ்லீம் நாடாக பிரகடப்படுத்தப்படவில்லை. மஹாத்தீர் முகம்மது செய்த காரியம். சட்டம் இருக்கலாம். ஆனால் அது தனி மனித சுதந்திரத்தில் தலையிடும் அராஜகம் தான். அந்தப் பெண் ஹிந்துவாக வாழும் தன் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுவது, இந்த சட்டத்தால் அல்ல. அந்த சட்டத்தின் அராஜக நடைமுறையால் தான். அந்த அராஜக பரிமாணத்திற்கு அந்த சட்டத்தின் பரிமாணம் விஸ்தரிக்கப்படுவது ஒரு தீவிர முஸ்லீமுக்கு பரவசம் தருவதாக இருக்கலாம். ஆனால், ஒரு மனிதாபிமானமுள்ள முஸ்லீம், அந்தப் பெண் முஸ்லீமாக பலவந்தப் படுத்தப் படுவதையும், மாட்டுக்கறி கொடுக்கப்படுவதையும் வெறுப்போடு தான் பார்ப்பான். ஒரு தீவிர வாத முஸ்லீம் தான் இத்தகைய சட்டத்திற்கு அராஜக அங்கீகாரம் கொடுப்பான். கட்டாயம் என்ன, எவ்வழியிலும் மதம் மாற்றும் நோக்கமே தன் சரித்திரம் முழுவதிலும் கொண்டிராத ஹிந்துக்கள் பெரும்பான்மையில் வாழும், மக்கள் நாயக அரசில் வாழும் முஸ்லீம் தன் தீவிரத்திற்கு சட்டத்தைக் காட்டி பரவசம் அடையும் சுதந்திரம் பெற்றிருக்கிறான். அந்த ஜன நாயகத்திற்கு நன்றி சொல்லவேண்டும்.


எந்த ஒரு தனிமனிதனுக்கும் அவன் தன் சுயத் தேர்வில் எந்த மதத்தினனாகவும் தன்னை ஆக்கிக்கொள்ளும் சுதந்திரம் இந்த நாட்டில் உண்டு. அது வேறு., மறைமுக வன்முறையாலும், சலுகைகள் ஆசை காட்டியும், கூட்டம் கூட்டமாக மக்களை தம் மதத்திற்கு மாற்றுவதையே ஒரு திட்டமாகக் கொண்டுள்ளவர்கள், கட்டாய மதமாற்றத் தடுக்க ஜனநாயக முறையிலேயே சட்டம் கொணர்ந்த போது அந்த சட்டத்தை ஏன் எதிர்த்தார்கள்? மலேசியாவில் சட்டத்தை மதிக்கச் சொல்லிப் புளகாங்கிதம் அடைகிறவர்கள், கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக சட்டம் வந்தால் அதை எதிர்ப்பானேன். இதிலும் குறிப்பாகக் கவனிக்கப்பட வேண்டியது, இந்த சட்டத்தை எதிர்த்தவர்கள், கட்சிகள் எல்லாம், மிகக் கவனமாக கட்டாய என்ற வார்த்தையை ஒதுக்கி மதமாற்றத்தை எதிர்க்கும் சட்டம் என்றே பொய் பிரசாரம் செய்தார்கள். நன் நாட்டில் ஜனநாயக அரசு சட்டமன்றத்தில் கொணர்ந்து சட்டமாக்கிய ஒன்றை எதிர்க்கும் உரிமை வாடிகனில் இருக்கும் போப்புக்கு எங்கிருந்து வந்தது. உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ, இது உன் அதிகாரத்தில் இல்லை என்று போப்புக்கு பதில் அளிக்கப்பட்டது, இங்கிருக்கும் கத்தோலிக்கர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டு விடுகிறது.

சட்டம் அப்படி ஒன்றும் புனிதமானதல்ல. அதை எதிர்க்கும் உரிமை, குரல் எழுப்பும் உரிமை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உண்டு. அதை மாற்றும் உரிமையும் உண்டும். எல்லா மனித உரிமைப் போராட்டங்களுக்கும் அடிநாதன் சட்டத்தின் அராஜகத்தில் வதைபடும் மனித உரிமைகள் தான்.

வெ.சா.

No comments: