ஜூனியர் விகடனில் ரவிகுமார் எம்.எல்.எ
திபெத்தில் துவங்கிய சீன ஒலிம்பிக்ஸ்!
ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி சீனாவில் நடக்குமா? திபெத்தில் நடந்து வரும் கலவரத்தை யட்டி எழுந்துள்ள மிகப்பெரும் கேள்வி இது. மார்ச் மாதம் பத்தாம் தேதியை 'திபெத் எழுச்சி நாளாக' திபெத்தியர்கள் கொண்டாடி வருகிறார்கள். 1959-ம் ஆண்டு தலாய்லாமா திபெத்திலிருந்து வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தது முதல் இப்படி 'திபெத் எழுச்சி நாள்' கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் அந்தக் கொண்டாட்டம் கலவரமாக மாறிய தில் நூற்றுக்கும் மேற்பட்ட திபெத்தியர்களை சீன போலீஸார் சுட்டுக் கொன்றுவிட்டதாக சொல்லப் படுகிறது.
இந்த ஆண்டு இப்படி திடீரென்று கலவரம் வெடிக் கும் என எவரும் எதிர்பார்க்கவில்லை. உலகின் பல்வேறு பகுதிகளிலும் திபெத்தியர்கள் இம்முறை தீவிரமான போராட்டங்களை நடத்தினார்கள். திபெத் தில் நிகழும் மனித உரிமை மீறல்களை உலகின் கவனத்துக்குக் கொண்டு போவதற்குத்தான் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டங்கள் இவ்வளவு தீவிரமாக இருப்பதற்கு சீனாவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளே முக்கியக் காரணம். ஏதென்ஸிலிருந்து புறப்படும் 'ஒலிம்பிக் ஜோதி' ஏப்ரல் மத்தியில் பாகிஸ்தானையும், இந்தியாவையும் கடந்து திபெத்துக்குப் போவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இதை திபெத்தியர்கள் விரும்ப வில்லை. சீன ஆதிக்கத்தை ஏற்க மறுத்து கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் போராடி வரும் அவர்கள், திபெத்தில் ஒலிம்பிக் ஜோதியை அனுமதிப்பது சீனாவின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்வதாகிவிடும் என்ற எண்ணத்தில் அதை மூர்க்கமாக எதிர்க்கின்றனர்.
திபெத் எழுச்சி நாளையட்டி நடந்த கலவரங்களில் எவ்வளவுபேர் கொல்லப்பட்டனர் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. லாசாவிலும், திபெத்தின் பிற பகுதிகளிலுமாகச் சேர்த்து நூறு பேருக்கு மேல் கொல்லப்பட்டிருப்பதாக திபெத்திய தரப்பில் சொல்லப்படுவதை சீனா மறுத்து வருகிறது. 'ரெட்கிராஸ்' முதலிய சர்வதேச அமைப்புகள் திபெத்துக்குள் சென்று உண்மை யைக் கண்டறிந்து உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும் என, அயல்நாடுகளில் வாழும் திபெத்தியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பதினாறாயிரம் அடி உயரத்தில் அமைந் திருக்கிறது திபெத். உலகிலேயே மிக உயரத்தில் அமைந்திருப்பதால் அதை 'உலகின் கூரை' என்று அழைக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் திபெத்தை பிரிட்டிஷ்காரர்கள் கைப்பற்றினார்கள். 1906-ம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சீனாவிடம் திபெத்தை அவர்கள் ஒப்படைத்தனர். ஆனால், சீனாவின் பிடியிலிருந்து 1912-ம் ஆண்டு திபெத் தன்னை விடுத்துக்கொண்டது. சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி ஏற்பட்ட பிறகு, திபெத் மீது சீனா படையெடுத்து அதை ஆக்கிரமித்தது. ஆனாலும், ராணுவ மற்றும் வெளியுறவுத் துறைகளை மட்டும் தன் கையில் வைத்துக்கொண்டு உள்நாட்டு நிர்வாகத்தை தலாய்லாமாவிடம் சீன அரசு ஒப்படைத்தது. தொடர்ந்து நடந்து வந்த ராணுவ அடக்குமுறைகளால் 1959-ம் ஆண்டு தலாய்லாமா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
சீனாவில் நடைபெற்ற கலாசாரப் புரட்சியின் தாக்கம் திபெத்திலும் வெளிப் பட்டது. நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பௌத்த மடாலயங்கள் இடித்து நொறுக்கப்பட்டன. பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டு, கட்டாயமாக மனமாற்றம் செய்யப்பட்டார்கள். தலாய் லாமாவோ, இப்போது இந்தியாவின் வடபகுதியில் அமைந்துள்ள தர்மசாலா என்னுமிடத்தில் தங்கியிருந்த படி போட்டியாக திபெத் அரசாங்கம் ஒன்றை நடத்தி வருகிறார்.
திபெத் கலாசாரத்தின்படி சிறு குழந்தையாக இருக்கும் போதே தலாய்லாமா யாரென்பதைத் தேர்ந்தெடுத்து விடுவார்கள். தற்போதுள்ள தலாய்லாமாவும் அப்படித் தேர்வு செய்யப்பட்டவர்தான். தலாய் என்றால் சமுத்திரம் என்று பொருள். லாமா என்பதற்கு குரு என்று அர்த்தம். இப்போதிருப்பவர் பதினான்காவது தலாய்லாமா ஆவார்.
சீன அரசாங்கம் திபெத் மீதான தனது ஆக்கிர மிப்பைத் தொடர்ந்து நியாயப்படுத்தி வருகிறது. அடிமைத்தனத்திலிருந்தும், நிலப்பிரபுக்களின்
ஆதிக்கத்திலிருந்தும் திபெத்தை 'விடுதலை' செய்திருப்பதாக சீனா கூறிக் கொண்டபோதிலும், திபெத்தின் வரலாற்றைப் படிப்பவர்களுக்கு சீனா கூறுவது பச்சைப் பொய் என்பது தெளி வாகிவிடும். திபெத்தின் தலைமைப் பொறுப்பை வகித்துவரும் தலாய்லாமா, சாதாரண மக்களிலிருந்தே தெரிவு செய்யப்படுகிறார். அது பரம்பரை பதவி அல்ல. அவருக்குக் கீழே பொறுப்பு வகித்த பௌத்த பிக்குகளும்கூட எளிய பின்னணியிலிருந்து வந்தவர்களாகவே இருப்பார்கள். சீன ஆக்கிரமிப்புக்கு முந்தைய திபெத்தில் பிச்சைக்காரர்கள் இருந்ததில்லை, மரண தண்டனையும் வழங்கப்பட்டது கிடையாது. நிலங்கள் யாவும் அரசாங்கத்துக்கு சொந்தமாக இருந்தன. பௌத்த மடாலயங்கள் வெறும் மத நிறுவனங்களாக இல்லாமல் பள்ளிகளாகவும், பல்கலைக்கழகங்களாகவும், திபெத்திய கலைகள், மருத்துவம், பண்பாடு ஆகியவற்றின் மையங்களாகவும் திகழ்ந்தன. அப்படி இருந்த நாட்டைத்தான், சீனப் படைகள் ஆக்கிரமித்துக் கொண்டன.
திபெத்தைக் கைப்பற்றிய பிறகு கொஞ்சம் கொஞ்சமாக திபெத்தியர்களை அகற்றிவிட்டு, அங்கெல் லாம் சீனர்கள் குடியேறத் தொடங்கி விட்டனர். இந்த நடவடிக்கையால் இப்போது திபெத்தில் திபெத்தியர்கள் சிறுபான்மை மக்களாக மாற்றப்பட்டு விட்டனர். தற்போது அங்கே அறுபது லட்சம் திபெத்தியர்களும் எழுபத்தைந்து லட்சம் சீனர்களும் வசிப்பதாகத் தெரியவந்துள்ளது.
திபெத்தில் தற்போது என்னமாதிரியான நிலைமை நிலவுகிறது என்பது எவருக்கும் தெரியவில்லை. அந்த நாட்டின் இன்டர்நெட், தொலைபேசி முதலிய தொடர்புகளை சீன அரசு துண்டித்து விட்டதால், அங்கு எவ்வளவுபேர் கொல்லப்பட்டார்கள் என்பது கூடத் தெரியவில்லை. அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ-வின் பணத்தில் நடத்தப்படுவதாகக் கூறப் படும், 'ரேடியோ ஃப்ரீ ஆசியா' மூலமாகத்தான் ஒருசில செய்திகள் வெளியே தெரியவந்துள்ளன. வலைப்பூக்கள் (Blogs) மூலமாகவும் சில செய்திகள் வெளிப்பட்டுள்ளன. திபெத்தின் தலைநகரான லாசா முழுவதும் கலவரங்கள் நடப்பதாகவும்; கார்களும், கடைகளும் எரிக்கப்படுவதாகவும், பள்ளிகள் செயல்படவில்லையென்றும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.
திபெத்தில் இவ்வளவுதூரம் அடக்குமுறைகள் ஏவப்பட்ட போதிலும் உலக நாடுகள் சீனாவைக் கடுமையாகக் கண்டிப்பதற்கு முன் வரவில்லை. 'பொறுமையைக் கடைப்பிடிக்கு மாறு சீனாவுக்கு அமெரிக்கா அறிவுரை கூறியிருக்கிறது. அதையே மற்ற ஐரோப்பிய நாடுகளும் வழிமொழிந்து விட்டன. சீனப் பிரதமர் வென் ஜியோபோ இதனால் மேலும் தைரியம் பெற்று, 'இந்தக் கலவரங்களுக்கு தலாய்லாமாவே காரணம்' என்று குற்றம் சாட்டியுள்ளார். ஐ.நா. சபையும்கூட இதில் தலையிடாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. 'அமைதியான முறையில் பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள வேண் டும்' என ஐ.நா. செயலாளர் பான் கி மூன் அறிவுரை கூறியிருக்கிறார். இதில் ஐ.நா. சபை தலையிடும் திட்டம் எதுவும் இல்லை எனவும் அவர் தெளிவு படுத்திவிட்டார். இந்தியாவின் நிலையும் மற்ற நாடுகளைப் போலத்தான் இருக்கிறது. திபெத் என்பது சீனாவின் அங்கம் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருப்பதன்மூலம் இந்தியா இந்த விஷயத்தில் சீனாவைப் பகைத்துக் கொள்ளவிரும்பவில்லை என்பதைத் தெளிவாக்கியுள்ளது.
இந்தியாவிலிருக்கும் திபெத் அகதிகளின் போராட் டத்தை உடனுக்குடன் ஒடுக்குவதன் மூலம் சீனாவின் பாராட்டுக்களை இந்தியா இப்போது பெற்றிருக்கிறது. இந்த வாய்ப்பையே பயன்படுத்தி திபெத் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சியில் இந்தியா ஈடுபட வேண்டும்.
தலாய்லாமாவும் சீன அரசும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்தியா களம் அமைத்துத் தருவதன் மூலம் ஆசியாவில் தனது வலிமையை அது வெளிப்படுத்திக்கொள்ள முடியும். அது மட்டுமின்றி, திபெத்தை சீனாவின் பகுதியாக அங்கீகரிப்பதற்குக் கை மாறாக அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் பகுதியென சீனா அங்கீ கரிக்கவேண்டும் என இந்தியா வலியுறுத்த வேண்டும். அதற்கு இதுதான் சரியான சந்தர்ப்பமாகும்.
சீனாவில் நடத்தப்படவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழாவைப் புறக்கணிக்கவேண்டும் என்ற கோரிக்கை இப்போது வலுவடைந்து வருகிறது. 'எல்லைகள் இல்லா செய்தியாளர்கள்' என்ற அமைப்பு உலக நாடுகளுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் இந்த யோசனையை வலியுறுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஃபிரான்ஸின் வெளியுறவு அமைச்சர், ''இந்த யோசனையை ஐரோப்பிய யூனியன் நாடுகள் பரிசீலிக்க வேண்டும். திபெத்தில் சீனா மேற்கொண்டுள்ள ஒடுக்குமுறைக்குக் கண்டனம் தெரிவிக்க இதுவே சரியான வழி'' என்று கூறியுள்ளார். ஆம்னஸ்டி இன்டர் நேஷனல் அமைப்பும்கூட, ''சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும், ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஆதரவு அளிக்கும் நிறுவனங்களும் மனித உரிமைகளை மதிக்குமாறு சீனாவை வலியுறுத்தவேண்டும்'' என தெரிவித்திருக்கிறது.
சீனா இப்போது பொருளாதாரத்தில் மட்டுமல்ல... ராணுவத்திலும் இந்தியாவைவிட பலமடங்கு கூடுதலான வலிமையைப் பெற்றிருக் கிறது. 2010-ம் ஆண்டு வாக்கில் வலிமையான ராணுவ அடித்தளத்தை அமைப்பது, அதற்கு அடுத்த பத்து ஆண்டுகளில் அந்தத் துறையில் பெரிய முன்னேற்றத்தை ஒட்டி, இந்த நூற்றாண்டின் மத்தியில் உலகின் மிகப்பெரும் ராணுவ சக்தியாக உருவெடுப்பது என்ற குறிக்கோளாடு சீனா தனது ராணுவ பட்ஜெட்டை அதிகரித்து வருகிறது. இப்படி சீனா வலுவடைந்தால் தற்போது உலக அளவில் அமெரிக்கா வகித்துவரும் இடம் கேள்விக் குறியாகிவிடும். அதை அமெரிக்கா உணர்ந்தே இருக்கிறது.
ராணுவத் துறையில் அதிகரித்துவரும் சீனாவின் வலிமை இந்தியாவுக்கும் சில நெருக்கடிகளை உருவாக்கும். ''தென் ஆசியாவில் தனது இடத்தை வலுப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு ஏற்படும். பிணக்குகளைத் தீர்த்துக்கொண்டு, தங்களோடு சுமுகமான உறவைப் பேணும்படி சீனா இந்தியாவை நிர்ப்பந்திக்கும். அதுமட்டுமின்றி சீனாவைவிடச் சிறந்த கடற்படை கொண்ட நாடாக இந்தியா உருவாகவேண்டிய தேவை அதிகரிக்கும்'' என இதுபற்றி ஆராய்ந்துள்ள டாக்டர் சுபாஷ் கபிலா என்ற நிபுணர் கூறுகிறார். இவற்றையெல்லாம் இந்திய வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் அதிகாரிகள் கவனத்தில் கொள்வதாகத் தெரியவில்லை. நமது நாட்டின் அயலுறவுக் கொள்கை, அரசியல் தலைமையால் தீர்மானிக்கப்படுவதைவிடவும் அதிகார வர்க்கத்தாலேயே முடிவு செய்யப்பட்டு விடுகிறதோ என்ற ஐயம் பரவலாக உண்டு. திபெத் பிரச்னையில் தெளிவாக முடிவெடுத்து இந்த சந்தேகத்தைப் போக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment