திபெத் விவகாரங்கள் குறித்த தகவல்களை சேமித்திருக்கிறேன். இந்த தகவல்கள் அடிப்படையில் நீண்ட கட்டுரையொன்றை எழுத ஆவல்.
**********************
தினமணி செய்தி (1)
**********************
Monday March 17 2008 00:00 IST
வன்முறைக்கு எதிராக மக்கள் யுத்தம்: சீனா அறிவிப்பு
திபெத்தியர்களுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கையைக் கண்டித்து, இமாசல பிரதேசம் தர்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற திபெத்தியர்கள்.
பெய்ஜிங், மார்ச். 16: திபெத்திய வன்முறையாளர்களுக்கு எதிராக மக்கள் யுத்தத்தை சீனா அறிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை திபெத் தலைநகர் லாஸôவில் நடந்த வன்முறை சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
"உலகின் கூரை' என்று அழைக்கப்படும் திபெத்திய தேசம் பல ஆண்டுகளாக சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
அந்நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து, 1959-ம் ஆண்டு ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
லாமாவிற்கு அடைக்கலம் கொடுத்ததன் விளைவாக, இந்திய-சீனா இடையிலான ராஜாங்க உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் சர்ச்சைகள் அரங்கேறிய போதும், தலாய் லாமா இந்தியாவிலேயே தங்கினார்.
சீனாவின் பிடியிலிருந்து திபெத்தை விடுவிக்கும் படி, பல்வேறு போராட்டங்களில் அவ்வப்போது புத்த பிக்குகள் ஈடுபட்டு வந்தாலும், அதனை இரும்புகரம் கொண்டு சீனா அடக்கி வந்தது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, வங்கிகள் கொள்ளையடிக்கப்பட்டன. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. வணிக வளாகங்கள் சூறையாடப்பட்டன.
போராட்டம் கலவரமாக உருமாறியதற்கு சில விஷமிகளின் தூண்டுதலே காரணம் என அரசு குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், கலவரக்காரர்கள் தாங்களாகவே வந்து சரணடைய, திங்கள்கிழமை வரை திபெத் அரசு கெடு விதித்துள்ளது. அவ்வாறு சரணடையாவிட்டால், கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அந்நாடு எச்சரித்துள்ளது.
இந்த கலவரத்திற்கு பின்னணியில் தலாய் லாமா இருப்பதாக சீனா கருதுகிறது.
சீனாவின் இந்தக் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துள்ள தலாய் லாமா, 1989-ம் ஆண்டு நடந்த மோசமான வன்முறைக்கு பிறகு, தான் முற்றிலும் அகிம்சை பாதைக்குத் திரும்பிவிட்டதாக தெரிவித்தார்.
தனது முடிவுக்கு சீன அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் சிலரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறிய லாமா, அவர்களது பெயரை வெளியிடவில்லை.
சீனா விடுதலை வழங்காவிட்டாலும், தன்னாட்சி அதிகாரத்தையாவது வழங்க வேண்டும் எனக் கூறினார்.
போராட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்த தனக்கு திபெத்தியர்களிடமிருந்து ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வருவதாகக் கூறிய அவர், இப்பிரச்னைக்கு இன்னும் தீர்வு காணப்படாமல் இருப்பதற்கு திபெத்தில் உள்ள சீன அதிகாரிகளே காரணம் என குற்றம்சாட்டினார்.
**********************
தினமணி செய்தி (2)
**********************
Monday March 17 2008 00:00 IST
திபெத் கலவரத்தில் 100-க்கும் அதிகமானோர் சாவு?: தலாய்லாமா அச்சம்
லண்டன், மார்ச். 16: திபெத் நாட்டில் நடைபெற்ற வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 100-க்கும் அதிகமாக இருக்கும் என அஞ்சுவதாக தலாய்லாமா தெரிவித்துள்ளார்.
திபெத் தலைநகர் லாஸôவில் புத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை நடத்திய போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.
இதில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. பள்ளி, மருத்துவமனைகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. பொதுச் சொத்துகள் சூறையாடப்பட்டன. இந்த மோதலில் 10 பேர் உயிரிழந்ததாக சீனா தெரிவித்தது. இது குறித்து கருத்து தெரிவித்த, புத்த மதகுரு தலாய்லாமா, திபெத்திய வன்முறையில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகி இருக்கக்கூடும் என தெரிவித்தார்.
திபெத்திய விவகாரத்தில் சீனா தனது கொள்கையை மாற்றி கொண்டாலன்றி இப்பிரச்னை தீராது எனக் கூறினார்.
இருப்பினும், சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.
லாமா கண்டனம்: திபெத்தில் நடைபெற்ற வன்முறையை, சீன ஆதரவு 11-வது பஞ்சன் லாமா கண்டித்துள்ளார்.
குறிப்பிட்ட சிலரால் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட நாசவேலை இது.
கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தேச நலனுக்கு மட்டும் குந்தகம் விளைவிக்கவில்லை, புத்தரின் நோக்கத்தையே சிதைத்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
வன்முறை நடந்த லாஸô நகரில் இயல்பு நிலை திரும்பி, விரைவில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் ஏற்படும் என தான் நம்புவதாக அவர் கூறினார்.
அமைதி திரும்பியது:
லாஸô நகரில் அமைதி திரும்பியதாக அந்நகர மேயர் டோஜி சிஜூக் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது சட்டம்-ஒழுங்கு நிலை சீராகியுள்ளது. எனவே, நெருக்கடி நிலை அமல்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றார்.
சீனாவிடம் விளக்கம் கோரியது அமெரிக்கா:
திபெத்திய விவகாரத்தில் சீனா தனது கொள்கையை விளக்கு வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கண்டோலிசா ரைஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதியாக நடைபெற்ற போராட்டத்தின் போது, திடீரென நிகழ்ந்த வன்முறை பலரது உயிரைக் குடித்துள்ளது வருத்தமளிப்பதாக உள்ளது எனக் கூறியுள்ளார்.
**********************
தினமணி செய்தி (3)
**********************
Wednesday March 19 2008 00:00 IST
திபெத் பிரச்னையில் இணக்கமான நிலைப்பாடு: இந்தியாவுக்கு சீனா பாராட்டு
பெய்ஜிங், மார்ச் 18: திபெத் பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு சீனா பாராட்டு தெரிவித்துள்ளது.
திபெத் போராட்டக்காரர்களை இந்தியா கையாண்ட விதம் பாராட்டுக்குரியது என்று சீனாவின் பிரதமர் வென் ஜியாபாவ் கூறினார்.
இரண்டாம் முறையாக பிரதமராக பதவியேற்ற பின் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
திபெத் பிரச்சினை இந்திய - சீன உறவில் மிகவும் சிக்கலான பிரச்னை என்றார் அவர்.
திபெத் பிரச்னையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தை இந்தியா பின்பற்றும் என்று நம்புவதாக வென் கூறினார்.
திபெத் விவகாரத்தில் இந்தியா மிகவும் கவனத்துடன் செயல்படுகிறது என்று இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தியாவில் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று திபெத்தியர்களை இந்திய அரசு கேட்டுக்கொண்டது.
**********************
தினமணி செய்தி (4)
**********************
Wednesday March 19 2008 00:00 IST
"திபெத் பிரச்னையில் ஐ.நா. தலையிடாது'
நியூயார்க், மார்ச் 18: திபெத் பிரச்னையில் ஐ.நா. தலையிடாது என்று கூறப்படுகிறது.
திபெத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கலவரங்களை அடுத்து அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போட ஐ.நா. சபை தலையிட வேண்டும் என்று திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஐ.நா. சார்பில் தன்னிச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். ஆனால் இந்த விஷயத்தில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் எந்த நடவடிக்கையும் எடுக்காது. சபையில் இது குறித்து விவாதமும் நடைபெறாது என்று கூறப்படுகிறது. திபெத் பிரச்னையால் சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை. எனவே இது குறித்து விவாதிக்கப்படாது. திங்கள்கிழமை கூட்டத்திலும் கூட இது குறித்து விவாதிக்கப்படவில்லை என்று ஐ.நா.வுக்கான சீனத் தூதர் தெரிவித்தார்.
ஐ.நா.வுக்கான ரஷியத் தூதர் விடாலி சுர்கின்னும் இதே கருத்தைத் தெரிவித்தார். மியான்மரில் ராணுவ அடக்குமுறையின்போது கூட ஐ.நா. தலையிடவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் போராட்டம்: ஆஸ்திரேலியாவில் உள்ள சீனத் தூதரகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திபெத்தியர்களை போலீஸôர் பலப் பிரயோகம் செய்து கலைத்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் சீனக் கொடியை தீயில் எரித்தனர்.
ஆஸ்திரேயாவில் சிட்னி நகரில் உள்ள சீனத் தூதரகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். திபெத் கொடியை அவர்கள் பிடித்திருந்தனர். சீனாவுக்கு எதிராக முழக்கமும் எழுப்பினர்.
**********************
தினமணி செய்தி (5)
**********************
Wednesday March 19 2008 00:00 IST
தலாய் லாமாவுடன் பேசத் தயார்: சீனா அறிவிப்பு
பெய்ஜிங், மார்ச் 18: தலாய் லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளோம் என்று சீனப் பிரதமர் வென் ஜியாபாவ் கூறினார்.
இரண்டாவது முறையாகப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
தனி நாடு கேட்பதைக் கைவிட்டு திபெத் சீனாவின் பகுதி என்று ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் அவருடன் பேச சீனா தயாராக உள்ளது.
தைவானும், திபெத்தும் சீனாவின் பகுதிகள். இதை அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
தனி நாடு கோரிக்கையை அவர் கைவிட்டுவிட்டால் பேச்சுவார்த்தைக்கு அவருக்கு கதவுகள் திறந்தே இருக்கின்றன என்றார் ஜியாபாவ்.
திபெத்தில் சீன அரசு கலாசார படுகொலையில் ஈடுபட்டுள்ளது என்று தலாய் லாமா சொல்வதில் சிறிதும் உண்மை இல்லை.
திபெத் தலைநகர் லாசாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு பின்னணியில் இருந்து தூண்டிவிட்டது தலாய் லாமாவும் அவரது ஆதரவாளர்களும்தான் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன என்றார் ஜியாபாவ்.
லாசா வன்முறைச் சம்பவங்கள் குறித்து உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், சீனாவில் முக்கியத் தலைவர்கள் அது பற்றி ஏதும் பேசாமல் மெüனம் காத்தனர்.
ஆனால் முதல் முதலாக வென் ஜியாபாவ், அதுபற்றி பேசி தலாய் லாமாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
**********************
தினமணி செய்தி (6)
**********************
Tuesday March 18 2008 00:00 IST
திபெத்துக்குச் செல்ல சீனா தடை
திபெத் விடுதலைப் போராட்டத்தின்போது சீன ராணுவத் தாக்குதலில் பலியான திபெத்தியர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தைவான் தலைநகர் தைபேயில் திங்கள்கிழமை மெழுகுவர்த்தி ஏந்தியபடி கூடிய பொதுமக்கள்.
பெய்ஜிங், மார்ச் 17: வெளிநாட்டவர் திபெத்துக்குள் நுழைய சீன அரசு தடை விதித்துள்ளது.
அதுபோல் தற்போது அங்கிருக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திபெத் பல ஆண்டுகளாக சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. சீனாவின் பிடியிலிருந்து திபெத்தை விடுவிக்கும் படி, பல்வேறு போராட்டங்களில் அவ்வப்போது புத்த பிக்குகள் ஈடுபட்டு வந்தாலும், அதனை இரும்புக்கரம் கொண்டு சீனா அடக்கி வந்தது.
அந்நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து, 1959-ம் ஆண்டு ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
லாமாவிற்கு அடைக்கலம் கொடுத்ததன் விளைவாக, இந்திய-சீனா இடையிலான உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இருப்பினும் தலாய் லாமா இந்தியாவிலேயே தொடர்ந்து தங்கினார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் திபெத் தலைநகர் லாசாவில் கடும் வன்முறை வெடித்தது. புத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை நடத்திய போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.
இதில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. பள்ளி, மருத்துவமனைகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. பொதுச் சொத்துகள் சூறையாடப்பட்டன. இந்த மோதலில் 10 பேர் உயிரிழந்ததாக சீனா தெரிவித்தது.
வன்முறையாளர்களை ஒடுக்க மக்கள் யுத்தத்தை நடத்தப் போவதாக சீனா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
இந்நிலையில் திபெத்துக்கு வெளிநாட்டவர் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் தற்போது அங்கிருக்கும் வெளிநாட்டுப் பயணிகள் வெளியேறவும் உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். லாசாவில் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டாலும் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. 20 வெளிநாட்டுப் பயணிகள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 3 ஜப்பானியர்கள் உள்பட 580 பேரை கலவரப் பகுதியிலிருந்து காப்பாற்றியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். கலவரத்தை ஒடுக்க சீன பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எந்த அடக்குமுறையும் ஏவப்படவில்லை என்று திபெத்திய பிராந்திய நிர்வாகம் மறுப்புத் தெரிவித்துள்ளது. போராட்டக்காரர்களை அடக்க துப்பாக்கிகளையோ அல்லது ஆயுதங்களையோ பயன்படுத்த வில்லை என்று திபெத் பிராந்திய அரசின் தலைவர் புன்கோக் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா கவலை: திபெத்தில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் கவலை தெரிவித்தார்.
**********************
தினமணி செய்தி (7)
**********************
Tuesday March 18 2008 00:00 IST
திபெத்தியர் போராட்டம் எதிரொலி: எவரெஸ்ட் சிகரம் ஏறத் தடை
காத்மாண்டு, மார்ச் 17: உலகிலேயே உயரமான சிகரமான எவரெஸ்ட்டில் ஏறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திபெத் வழியாக எவரெஸ்ட் சிகரம் செல்ல சீனா தடை விதித்துள்ளது. அதுபோல் நேபாளம் வழியாகச் செல்ல நேபாளம் அரசும் தடை விதித்துள்ளது. சீனாவின் வேண்டுகோளை ஏற்று நேபாள அரசு இத் தடையை அறிவித்துள்ளது.
திபெத்தியர்களின் போராட்டத்தை அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், திபெத்தியர்களால் பிரச்னை ஏற்படுவதைத் தவிர்க்கவே இந்தத் தடை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, சீனாவை எதிர்த்து நேபாளத்திலும் திபெத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காத்மாண்டுவில் உள்ள ஐ.நா. கட்டடம் எதிரே ஆயிரக்கணக்கான திபெத்தியர்கள் கூடி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திபெத்தில் படுகொலையை நிறுத்து என்று அவர்கள் முழக்கம் எழுப்பினர். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களின் கண்களில் நீர் வழிந்தது. அவர்கள் திபெத் கொடியை கையில் பிடித்திருந்தனர்.
ஆனால் போலீஸôர் அவர்கள் மீது திடீரென தடியடி நடத்தினர். இதில் போராட்டக்காரர்களில் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
"போராட்டம் அமைதியான முறையில்தான் நடைபெற்றது. நாங்கள் போலீஸôரை அழைக்கவில்லை. ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க போலீஸôர் தேவையில்லாமல் பலத்தை பிரயோகித்தனர்' என்று ஐ.நா. அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment