Wednesday, 27 August 2008

அடாவடி ஜிகாதிகளும் அப்பாவி பண்டிடுகளும்

இவ்வார திண்ணையில் கார்கில் ஜெய் எழுதிய கட்டுரை
******************************************

Thursday August 21, 2008
இந்திய தினமும் காஷ்மீரப் பாட்டியும்
கார்கில் ஜெய்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

பொதுவாக ஒவ்வொரு இந்திய சுதந்திர தினத்தின்போதும் நியூயார்க் நகரத்தில் 'இந்தியா டே பெரேட்' எனப்படும் சுதந்திர தின அணிவகுப்பு நடக்கும். ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பங்குபெரும் அந்த அணிவகுப்பை, இந்த வருடம் நானும் காணச் சென்றிருந்தேன்.

இந்த வருடம் மிக வித்தியாசமாக நடந்தது, புதிதாக முளைத்த ஹிந்து 'ஹிந்து மனித உரிமை' அமைப்பின் விழிப்புணர்வு அணிவகுப்பு.

அதிகமில்லை... வெறும் 30 பேர்தான். 'நாங்களெல்லாம் காஷ்மீரிகளா? அநாதைகளா? ஏன் எங்கள் பங்களாக்ககளை விட்டு கூடாரஙகளில் பிச்சைக் காரர்கள் போல் 18 வருடங்களாக தங்கி இருக்கிறோம்?', 'அமர்நாத் நிலத்தை திருப்பி கோவிலுக்கே கொடுங்கள்', 'அரசியல்வாதிகளே உங்கள் ஒட்டுவங்கியின் கொள்முதல் ஹிந்துக்களின் உயிரா?', 'அஹமதாபாத்தில் குண்டு வெடித்து 55 பேர் இறந்து இன்னும் இரண்டு வாரம் கூட ஆகவில்லை... அதற்குள் சிமி இயக்கத்துக்கு தடை நீக்கமா?'.. என்ற அளவில் பல போஸ்டர்கள் என களைகட்டியது.

ஹிந்து மனித உரிமை அமைப்பின் அணிவகுப்பில் அக்ஷர்தாம் கோவில், அஹமதாபாத் வெடிகுண்டு வைப்பு, அமர்நாத் புனித யாத்ரீகர்களின் உரிமை என ஹிந்துக்களை எதிர்நோக்கி இருக்கும் பல பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கப்பட்டு இருந்தாலும், மழைக்கு அஞ்சாமல் அணிதிரண்டிருந்த பார்வையாளர்களை உலுக்கி 'ஜெய் ஹிந்த்' என கோஷமிட வைத்தது காஷ்மீர ஹிந்துக்களின் நிலையை விளக்கிய புதினமே:

காஷ்மீர ஹிந்துக்களை சொந்த மண்ணை விட்டு ஓட ஓட விரட்டி அகதியாக்கி அலையவிடும் இஸ்லாமிய பயங்கரவாதமும், ஓட்டு வங்கி அரசியலையும் உள்ளங்கை நெல்லிக்கனியாக விளக்கிய அந்த புதினத்ததில் காஷ்மீரப் பண்டிதராக 'நடித்த' வரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

"சௌக்யமா? உங்கள் காஷ்மீர அகதி வேடம் நன்றாக பொருந்துகிறது".
" நன்றி. ஆனால் இது வேடமல்ல. உண்மை; காஷ்மீர அகதிதான் நான்”.

"ஒ.. மன்னிக்கவும். மிகுந்த வருத்தம்... உங்களை அறிமுகப் படுத்திக்கொண்டு எப்படி இந்த துயரம் நிகழ்ந்தது எனச் சொல்லுங்களேன் ?”

"என் பெயர் ரமேஷ் சுட்ஷி . 1988 ம் ஆண்டு காஷ்மீரப் பண்டிதரான என் தந்தையார், பூனாவில் படித்துக் கொண்டிருந்த என்னைச் சந்திக்க வந்திருந்தார். பின் அவர் காஷ்மீர் திரும்பிய போது அவரை இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஊருக்கு வெளியேயே தடுத்துத் திருப்பி அனுப்பினர். ஒரே நாளில், என்னை தோளில் தூக்கி அவர் நடந்த்த தெருக்கள், ஆண்டாண்டுகளாக எங்களுக்கு சொந்தமான குங்குமப் பூ தோட்டங்கள், அரண்மனை போன்ற பங்களா, எல்லாவற்றையும் விட்டு அவர் துரத்தியடிக்கப் பட்டார். அதைவிட அவரைக் கொன்றிருக்கலாம். அந்த நிலை மனித மனத்தால் புரிந்துகொள்ள இயலாதது. தெருவில் நடந்தால் அழைத்து மரியாதையுடன் இனிப்பும், தேநீரும் வழங்கப்பட்ட ரம்மியமான பள்ளத்தாக்கை விட்டு, வெருட்டும் பிரம்மாண்டமான, முகம் தெரியாத டெல்லித் தெருக்களில் கோணிப்பைகளால் ஆன கூடாரத்தில் வாழ நேர்ந்தது”.

“அரசாங்கம் உங்கள் தந்தையாருக்கு ஏதாவது வேலை வாய்ப்பு உதவி செய்ததா? “

"என் தந்தையார் ஏழாம் வகுப்பு வரையே படித்திருந்தார். அதனால் அவருக்கு எந்த வேலை வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. ஆனால் எங்களை விரட்டி விட்டு, எங்கள் சொத்துக்களை பகிர்ந்து கொண்டு அனுபவித்த பயங்கரவாதிகளுக்கு இந்திய அரசாங்கம் மான்ய விலையில் கிலோ அரிசி வெறும் 35-ந்தே பைசாவுக்கு 'வறுமையை நீக்கினால் திருந்திவிடுவார்கள்' என்ற விளம்பரத்துடன் வழங்கியது. இதர பொருட்களும் பத்தில் ஒரு பங்கு விலையில் ராஜ மரியாதையுடன் வழங்கப்பட்டது. இது பயங்கரவாதிகளுக்கு மேலும் மேலும் வளரவும், ஆயுதம் வாங்கவும் உதவியது"

"ம்ம்..மற்ற காஷ்மீர அகதி ஹிந்த்துக்கள் எல்லாம் எவ்வாறு பிழைத்தனர் ?அவர்களுக்காவது அரசாங்கம் ஏதாவது செய்ததா? ”

(தொண்டைக் குழிக்குள் துயரத்தை விழுங்க முயற்சி செய்து ஆசுவாசப் படுத்திக் கொள்கிறார்..தரையை வெறித்துப் பார்க்கிறார். நான் கேள்வியைத் மீண்டும் கேட்க எத்தனிக்கும் போது அவரே தொடர்கிறார்).

"இந்திய அரசாங்கம் மிகுந்த ராஜதந்திரமும் எதிர்காலத்தை பற்றிய தொலைநோக்கறிவும் கொண்டது. ஹிந்துக்கள் அகதிகளாகவோ, அடிமைகளாகவோ, ஏழைகளாகவோ, உணவில்லாமலோ இருப்பதைக் காரணம் காட்டி தீவிரவாதத்தில் ஈடுபட மாட்டார்கள் என்பது இந்திய அரசாங்கத்துக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அதனால் இழந்தவர்களுக்குக் கொடுக்காமல், எடுத்தவர்களுக்கே இந்திய அரசாங்கம் கொடுத்தது.”

"வேலை வாய்ப்பும் இல்லை, சொத்துக்களும் இல்லையென்றால் என்றால் வங்கி சேமிப்பை வைத்துத்தான் காலம் தள்ளினீர்களா?”

"இல்லை. அதுவும் இல்லை. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் நாங்கள் கணக்கு வைத்திருந்தோம். அடுத்த வேளை உணவுக்காகவும், என்னுடைய படிப்புக்காகவும் பணம் எடுக்க முயற்சிக்கையில் அந்த பாங்க் மேனேஜர் அனுமதி மறுத்துவிட்டார்"

"என்ன? அதிர்ச்சியூட்டும் வகையில் இருக்கிறதே? எதற்காக உங்கள் பணத்தை உங்களிடம் தர மறுத்தார்?”

"அந்தக் காலத்தில் இப்போது போல் தொலைபேசி வசதியில்லை. பலமுறை கடிதமெழுதினாலும், காஷ்மீரில் அமைதி நிகழ்வதாயும், அங்கே திரும்பி வந்து ஆனந்தமாக வாழும்படி அழைத்தும், அங்கே வராமல் பணம் பட்டுவாடா செய்ய இயலாது என்றும், பதில் எழுதுவாரே ஒழிய பணம் தர ஒப்புக் கொள்ளவேயில்லை. பிறகு டெல்லியில் இந்தியன் வங்கியில் கணக்கு ஆரம்பித்து அதில் எங்கள் கணக்கை மாற்றச் சொல்லி மன்றாடிப் பார்த்தோம். அடையாளங்கள், கையெழுத்து மாறுபடுவதாகவும் பணம் தவறானவர்களின் கைக்குச் செல்வதைத் தவிர்க்கவே பணத்தை பட்டுவாடா செய்யாமல் இருப்பதாகவும் சொல்லி அலைக்கழித்தார். டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தும், ஒரு வழியாகப் பணம் கிடைக்க 11 வருடங்கள் ஆகிற்று. என் தந்தையாரோ இதனால் மேலும் நொந்து போய், இடையிலேயே உடல் சுகவீனப் பட்டு காலமானார்"

அவர் குரல் உடைய, என் கண்கள் பனித்தன. அதற்கு மேல் கேள்வி கேட்க மனமின்றி அங்கிருந்து நகர்ந்தேன்.

"என்னுடைய வீட்டுக்கு தேனீர் அருந்த வாருங்கள்.. டெல்லி நீதிமன்ற வழக்குக் கோப்புகளை நான் காண்பிக்கிறேன்.”

"மிக்க நன்றி.. அவசியம் வருகிறேன்"

ரமேஷ் சுட்ஷியிடம் நான் அளவளாவிக் கொண்டிருந்தபோது, ஒரு உயரமான காஷ்மீர மூதாட்டி என்னை அடிக்கடி உற்று நோக்கிக் கொண்டிருந்தார். அவர் அணிவகுப்பில் கலந்து கொண்ட குழந்தைகளை தவறவிடாமல் கவனித்துக் கொள்ளவே வந்திருப்பதாக தோன்றியது. அக்குகுழந்தைகள் பிஞ்சுக் கைகளில் இருந்த பேனரை உயர்த்தி 'ஜெய்ஹிந்த்' என முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். அக்குழந்தைகளின் மார்பில் குத்தியிருந்த மூவர்ணக் கொடி மழையில் தொப்பலாக நனைந்து இருந்தது. அந்த மூதாட்டி மறுபடியும் என்னைப் பார்த்தவுடன், சற்றுத் தயங்கிப் பின் அவரிடம் சென்றேன். அருகில் சென்றவுடன் அவர் முகத்தில் கலவரத்தின் ரேகைகள் அழிக்க முடியாமல் ஆழமாகப் படிந்திருப்பது தெரிந்தது.

“வந்தனம் அம்மா.. நீங்கள் ஏதோ சொல்ல விரும்புவது போல் தோன்றுகிறதே?”

"மேரே தூஸ்ரா பேட்டா தேரே ஜெய்ஸெஹி தா"

"ஓ என்னைப் போலவா இருந்தார்? பலர் என்னைப் பார்த்து இவ்வாறு குழம்புவதுண்டு.... அப்படியானால் உங்கள் முதல் மகனுடன் தங்கியிருக்கிறீர்களா?"

ஓ.. வென அழ ஆரம்பித்தார்.

kargil_jay@yahoo.com

பி.கு: இந்த ஹிந்து மனித உரிமை அணிவகுப்பு நடந்த அதே நேரத்தில் ஸ்ரீநகரில், காஷ்மீர ஹிந்துக்களை கொன்றும், விரட்டியும், அவர்களின் சொத்துக்களைப் பகிர்ந்து எடுத்துக் கொண்ட அமைதி மார்க்கம் இப்போது 6000 பேரைத் திரட்டி பேரணி நடத்தி, பாகிஸ்தானிய கொடி ஏந்தி "நாங்கள் மதத்தால் உணர்வால் பாகிஸ்தானியரே!! எங்களுக்கு இந்தியாவில் இருந்து விடுதலை வேண்டும்" என நேரடியாகவே ஐ.நா. சபையின் அலுவலகத்தில் மனு கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அடித்து விரட்டப் பட்டவர்கள் 'நாங்கள் இந்தியர்' தேசப் பற்றுடன் அன்பு பாராட்ட, அனுபவித்தவர்கள் நாங்கள் பாகிஸ்தானியர் என அறிவித்துள்ளனர்.
Copyright:thinnai.com 

******************************************
ந‌ன்றி "திண்ணை"

No comments: