Friday, 29 August 2008

காஷ்மீர் பிரிவினைவாதம் குறித்து...

காஷ்மீர் பிரிவினைவாதம் குறித்த ஜடாயு மொழிபெயர்த்து எழுதிய கட்டுரை ஒன்று இவ்வார திண்ணையில் படிக்கக்கண்டேன்.


http://www.thinnai.com/?module=displaystory&story_id=20808282&format=ஹ்ட்ம்ல்
நல்ல நடையில் மொழிபெயர்கப்பட்டுள்ள இக்கட்டுரை.... இணைய நண்பர்கள் அனைவரும் படிக்க வேண்டும்... விவாதிக்கவேண்டும்.... அதிகமானோரிடம் இதன் சாராம்சங்கள் சென்றடையவேண்டும்.

ஜடாயுவிற்கு நன்றிகள் பல.

பாலா

**************** Jadayu's post below **************


Thursday August 28, 2008
காஷ்மீர் பிரிவினைவாதத்தின் மொழியும், கண்ணன் வழியும்
மொழியாக்கம்: ஜடாயு
மூலம்: தருண் விஜய்*
தேவகி மைந்தன் கண்ணனின் அவதாரத் திருநாள் (23 ஆகஸ்டு 2008) அன்று இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கிறேன். கண்ணன் பிறந்த நேரத்தில் அவனது பெற்றோர் சிறையில் இருந்தனர். அவர்களுக்குப் பிறக்கும் மகனால் தான் உனக்கு மரணம் வாய்க்கும் என்ற தெய்வ அசரீரியால் பயந்து கொண்டிருந்த மன்னன் கம்சன் அவர்களைச் சிறையில் அடைத்திருந்தான். தேவகிக்கும், வசுதேவருக்கும் வாழ்வில் நம்பிக்கை என எதுவும் எஞ்சியிருக்கவில்லை. உற்ற நண்பர்களிடமிருந்தோ, உறவினர்களிடமிருந்தோ அல்லது அந்த நள்ளிரவிலும் விழித்துக் கொண்டிருந்த சில மதுரா நகர மக்களிடமிருந்தோ, பிருந்தாவன வாசிகளிடமிருந்தோ எந்த உதவியும் வருவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. அத்தனை பேரும் பயத்தால் பீடிக்கப் பட்டிருந்தனர். தேவகியின் அண்ணனான கம்சனின் ஆட்சியில் உயிருக்குப் பயந்து வாழ்ந்து வந்தனர்.
ஆயினும், கண்ணன் பிறந்தான், வளர்ந்தான். கம்சன் அழிந்தான்; குடிமக்கள் நிம்மதியாகவும், பாதுகாப்புடனும் வாழத் தொடங்கினர். பாம்புகளின் பேரரசனான காளிங்கனும் கண்ணனுக்கு அடிபணிந்தான்; யமுனைக் கரைகளில் வாழும் மக்களை மதித்து வாழ அறிவுறுத்தப்பட்டான். கண்ணன் புரிந்த போர்கள் பலப்பல; ஒவ்வொரு போருக்கு முன்னும், தவறு செய்த எதிரியை நல்வழிக்குக் கொண்டுவர அவன் பெரும் முயற்சி செய்தான். ஆனால் தீமைபுரிந்து வந்த பேரரசர்கள் வழிக்கு வரவில்லை என்று தெரிந்தவுடனேயே, அந்த அரக்க குணமுடையோரின் கூட்டத்தை அவன் வேரோடு அழித்தான். அறநெறியாகிய தர்மத்தை நிலைநிறுத்தினான்.
கண்ணன் ஒப்புயர்வற்ற பேரரசனாக விளங்கினான்; கோபிகைகளின் அன்பில் திளைத்து ராசலீலை என்னும் தெய்வீக நடனத்தை நிகழ்த்தினான். அவனது தெய்வலீலைகள் பலவிதம். ஆனால் தற்போதைய சூழலில் சுதர்சன சக்கரத்தை ஏந்திய கிருஷ்ணனே நமது ஆதர்சம். அந்தச் சக்கரம் ஏந்திய கண்ணன் தான் பயங்கரவாதிகளை அழித்து, அவர்கள் பூமியில் மிச்சம் மீதியில்லாமல் துடைத்தெறிந்தான்; தர்மத்தை நிலைநாட்டினான். அவன் நம் குல முன்னோன், அவனது பாரம்பரியத்திற்குப் பாத்தியதைப் பட்டவர்கள் நாம்.
அடங்காத வேகத்துடன் தன் இலக்கை நோக்கி வீரநடை போடும் ஜம்முவில் கண்ணனின் தரிசனத்தை நான் கண்டேன்; அங்கு பாயும் தாவி நதியே யமுனையாயிற்று; கண்ணனின் தோழர்களுக்கு அது மகிழ்ச்சியுடன் வழிவிட்டது.
ஆனால், தில்லியில் அமர்ந்து கொண்டு அதிகாரப் பீடத்தையும், ஊடகங்களையும் செலுத்தும் நாம், எல்லாம் தெரிந்த நாம் (அதாவது ஊடகத்தினர்), கண்ணனின் பாரம்பரியத்தைக் கட்டிக் காக்கிறோமா?
அரக்கர்களையும், பயங்கரவாதிகளையும் தயவுதாட்சண்யம் இல்லாமல் அழித்தொழிப்பதற்குப் பதிலாக, அவர்கள் விரும்புவதை, காஷ்மீர் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்துவிடவேண்டும் என்ற தொனியில் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். இத்தகைய வழிமுறைகள் மூலம் நமக்கு என்றுமே கிடைக்கச் சாத்தியமில்லாத அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்காக இதைச் செய்யலாம் என்கிறோம். ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும் : ஒரு கோழை முன்னிறுத்தும் சமாதான முயற்சிகளுக்கு யாரும் மரியாதை தருவதில்லை. கொடூர ஜிகாதிகள் கூட உறுதிகொண்ட, பின்வாங்காத எதிராளியின் வார்த்தைகளைத் தான் மதிப்பார்களேயன்றி பரபரப்பு செய்திகளுக்காகவும், சமாதான நல்லெண்ண எழுத்துக்கள் தரும் புகழுக்காகவும், தங்கள் தேசத்தின் மூவர்ணக் கொடியின் மானத்தைக் கூட அடகுவைத்துவிடக் கூடிய சொங்கி பத்திரிகையாளர்களின் வார்த்தைகளை மதிக்கமாட்டார்கள். அமைதி வரும் என்ற நம்பிக்கையில் முன்பு நமது தேசத்தைத் துண்டாட ஒப்புக்கொண்டோம்; ஆனால் அதற்குப் பதிலாக வந்தது என்ன? நான்கு போர்களும், அறுபதினாயிரம் இளம் படைவீரர்களின் கோர மரணமும் தான்!
இன்று ‘அமைதி’க்காக காஷ்மீரைக் கொடுக்கலாம் தான்; ஆனால் நாளை அவர்கள் ஹரியானாவையும், ஹிமாசலப் பிரதேசத்தையும், ஏன் தில்லியையும் கூடக் கேட்கப் போகிறார்கள். அப்போது என்ன செய்வது?
காஷ்மீருக்காகப் போராடி உயிர்நீத்த படைவீரனின் மனைவியையும், தாயையும் கேட்டுப்பாருங்கள் - அவர்கள் வெறும் ஊதியத்துக்காகத் தான் அந்தத் தியாகம் செய்தார்களா என்று. காஷ்மீரின் பிரிக்க முடியாத அங்கமாக இருந்தும், பொட்டுவைத்துக் கொண்டதற்காகவும், “சிவ சிவ” என்று தங்கள் இறைவனின் பெயரைச் சொல்லி வழிபட்டதற்காகவுமே, முஸ்லிம் ஜிகாதிகளால் துரத்தியடிக்கப் பட்ட காஷ்மீரி இந்துக்களைக் கேட்டுப்பாருங்கள் - அவர்களைத் தாக்கி விரட்டியவர்களிடமே காஷ்மீரைக் கொடுத்துவிடலாமா என்று. கற்பழிப்புக்கு இரையான பெண்ணை, அவள் இல்லாமல் தாங்கள் இருக்கமுடியாது என்று சொல்லும் கற்பழிப்பாளர்களிடமே திரும்பிப் போ என்று சொல்வது எப்படியிருக்கும் என்று உங்களையே கேட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
இதைக் கவனமாகப் படியுங்கள் -
“ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த அங்கமாகவே இருந்து வந்துள்ளது, இனியும் இருக்கும். அதனை தேசத்திலிருந்து பிரிக்க முயலும் அனைத்து செயல்பாடுகளும் தடுக்கப் படும். இதற்காக அனைத்து தேவையான வழிமுறைகளும் கையாளப் படும்.
தனது ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு ஆகியவற்றைக் குலைக்கும் அனைத்து சதிச் செயல்களையும் முறியடிக்கத் தேவையான உறுதியையும், சக்தியையும் இந்தியா கொண்டுள்ளது. தாக்குதல் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அது வெளியேற வேண்டும் என இந்தியா கோருகிறது.”
1994ஆம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி இந்தியப் பாராளுமன்றம் ஒருமனதாக இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியது. “இந்தத் தீர்மானத்தின் ஒவ்வொரு சொல்லும் வாக்கியமும் மிகக் கவனமாக அரசாலும், எதிர்க்கட்சியினராலும் பரிசீலக்கப் பட்ட பின்னரே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது” என்றும் மக்களவையில் சபாநாயகர் அறிவித்தார்.
ஒவ்வொரு கட்சியும் இதற்கு சாட்சியம் கூறியது, ஆதரவளித்தது. அதெல்லாம் வெறும் பாவனை தானா?
இப்போது, இந்தத் தீர்மானத்தின் ஒவ்வொரு சொல்லும் ஒரு ஜோக்; நேரத்தைக் கடத்தவும், சம்பளம் வாங்கவும் மட்டுமே தீர்மானங்கள் போடும் முட்டாள்களின் அர்த்தமற்ற செயல்பாடு என்ற அளவில் கருத்துக்கள் சொல்லப் படுகின்றன.
இந்திய தேசத்தின் பிரஜையாக இருப்பதனாலேயே பேரும், புகழும், பணமும் கொழிக்கும் சில இந்தியப் பத்திரிகையாளர்கள் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என்று அறிவுரை வழங்குகிறார்கள். தங்களை இந்தியர்கள் என்று அடையாளப் படுத்திக் கொள்ள விரும்பாதவர்கள் மீது இந்திய காலனி ஆதிக்கத்தைத் திணிக்கக் கூடாதாம், இவர்கள் சொல்கிறார்கள். இதெல்லாம் ரோமிலும், நியூயார்க்கிலும் உட்கார்ந்து கொண்டு படிப்பதற்கு மிக நன்றாக இருக்கும், ஆனால் இந்தியாவில், இந்தியராக வாழ விரும்பும் தேசபக்த காஷ்மீரிகள்? அவர்களது வீடுகளும், நிலபுலன்களும் இருப்பது காஷ்மீர் மண்ணில். அவர்களில் பல முஸ்லீம்களும் அடங்குவர் என்பது நினைவிருக்கிறதல்லவா?
பின்னர் இந்தியாவுடன் “வாழ விரும்பாத மக்கள்” என்று இந்த அறிவுஜீவிப் பட்டாளங்கள் யாரைத் தான் சொல்கிறார்கள்? ஜிகாதிகளையா? பாகிஸ்தானிய பிச்சையையும், இந்துக்கள் மீதும், இந்தியா மீதும் வெறுப்பு ஊறிய பிரசாரத்தையுமே தின்று வளர்ந்து, முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமான அல்லாவின் சாம்ராஜ்யமாக (நிஜாம்-ஏ-முஸ்தஃபா) காஷ்மீரை ஆக்கவேண்டி, மூவர்ணக் கொடியை எரிக்கும் ரத்தவெறிபிடித்த அந்த இந்திய தேசவிரோதிகள் தான் இந்த “மக்களா”? அவர்கள் தலைமைப் பதவிக்காக ஒருவருக்கொருவர் அடுத்துக் கொள்வதைத் தான் தினமும் பார்க்கிறோமே - மீர் வயிஸ்களும், கீலானிகளும், பட்களும், முஃப்திகளும், அப்துல்லாக்களும். பிரிவினைவாதம் பேசும் ஒரு முஸ்லீம் தலைவர் கூட இன்னொரு முஸ்லிம் “சகோதார போராளி”யோடு நல்ல பேச்சுவார்த்தையில் இல்லை! இப்போது தேசிய பாதுகாப்பு செயலர் நாராயணனே சொல்லிவிட்டார் – சமீபத்தில் முஜஃபராபாதை நோக்கி நடந்த பேரணியில் ஒரு பிரிவினைவாதியின் மரணத்திற்குக் காரணம் உள்ளுக்குள் நடந்த மோதல்கள் தான் என்று. ஆனால் தில்லியில், சந்தேகத்திற்குரிய நபர்களின் விருந்தோம்பலை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வரும் சில எழுத்தாள ஜன்மங்கள், இந்தப் பூமிப்பந்தில் தங்கள் தேசிய அடையாளத்தின் சின்னமாக இருக்கும் மூவர்ணக் கொடியையே எதிர்த்து கேவலமாக எழுதுகின்றன.
“காஷ்மீருக்கு விடுதலை” என்ற இந்தக் கருத்து வெளிப்பாடுகள் பொங்கி வரும் நேரமும், ஒத்திசைவும் கவனிக்கவேண்டியவை. இந்தக் கருத்துக்கள் அனைத்தும், தேசிய உணர்வு மற்றும் தேசபக்த செயல்வீரர்கள் ஆகியவற்றுடன் தொடர்புள்ள எதையும் வெறுக்கும் ஒரு குறிப்பிட்ட குழுமத்தில் இருந்து வருபவை. நம் நாட்டை அரசாள்வதற்கு அன்னிய சிந்தனை முறைகளையும், கொள்கைகளையும் ஏற்கும் ஒரு கூட்டம் தேசத்தில் ஆட்சி செய்யும்போது, இவர்கள் கருத்துக்கள் செலுத்தும் தாக்கம் புரிந்துகொள்ளக் கூடியது தான். அமர்நாத் போராட்டம் முன்னெப்போதும் காணாத வகையில், இவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் பேருருக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில், இந்துக்களை அரக்கர்களாக சித்தரிக்கவும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடக்கும் தேசவிரோத, இஸ்லாமிய மதவெறியர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு வலிமை சேர்க்கவுமே, இத்தகைய “காஷ்மீருக்கு விடுதலை” ஆதரவுக் குரல்கள் எழும்புகின்றன. இவற்றை எழுப்புபவர்கள் பெரிய அளவில் ஊடகங்களின் மூலம் தாக்கம் ஏற்படுத்தக் கூடியவர்கள், ஆனால் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.
இந்த “காஷ்மீருக்கு விடுதலை” கோஷங்கள், பள்ளத்தாக்கில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களின் இயல்பான எதிரொலி என்றே வைத்துக் கொள்வோம்; அதே அளவில், ஜம்முவின் தேசபக்த இந்தியர்களின் பேரெழுச்சி பற்றியும், அவர்களது பெருங்குரல்களைக் கவனிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் ஏன் கட்டுரைகள் எழுதப் படவில்லை? ஏன் இந்த ஊடகங்கள் அது பற்றி உரத்துச் சொல்லவில்லை? மூவர்ணக் கொடியேந்திப் போராடும் ஜம்மு மக்களின் குரல் மதிப்பில்லாத ஒன்றாக நிராகரிக்கப் படுகிறது; ஆனால் எல்லா நெஞ்சங்களும் பிரிவினைவாத ஊளைக்கூச்சல்களைக் கேட்க வேண்டும் என்று சொல்லப் படுகிறதே, அது ஏன்? காஷ்மீர் பள்ளத்தாக்கில் வெளிவரும் செய்தித் தாள்களின் முதல்பக்க தலைப்புச் செய்திகளைப் பார்த்தாலே போதும் இந்த ஊளைக்கூச்சல்களின் “மதச்சார்பின்மை” முத்திரை தெளிவாகத் தெரிந்து விடும்: “கீலானி கூறுகிறார் – இஸ்லாமும், பாகிஸ்தானுமே காஷ்மீர் போராட்ட இயக்கத்தின் மையப்புள்ளிகள்” (காஷ்மீர் டைம்ஸ், 19 ஆகஸ்டு 2008).
தங்கள் தில்லி அடுக்கு மாடிக் குடியிருப்பில் பக்கத்துவீட்டுக் காரனுக்கு ஒரு இஞ்ச் இடம் தருவதைப் பற்றி என்ணிக் கூடப் பார்க்க முடியாத ஜென்மங்கள் ரத்தவெறி பிடித்த பயங்கரவாதிகளுக்கு காஷ்மீரை தாரைவார்க்க வேண்டும் என்று உபதேசம் செய்கின்றனர். காஷ்மீர் பள்ளத்தாக்கு முஸ்லீம்களின் பிரிவினைவாதத்திற்குக் காரணம் தான் என்ன? பொருளாதாரமா அல்லது மதமா? வாய்ப்புகளும், பண உதவியும் மாநிலத்திற்கு சரியானபடி வந்துசேருவதில்லை என்று அவர்கள் நினைத்தால், அத்தகைய பொருளாதார பிரசினைகளை வேறுவகையில் தெளிவாகவே பேசித் தீர்த்துக் கொள்ள முடியும். திட்டக் கமிஷன் செயலர் அறையில் அவர்கள் வந்து உட்கார்ந்ததுமே கண்டிப்பாக அவர்களுக்குத் தெரியவந்து விடும் – நியாயமாகப் பார்த்தால், மொத்தப் பங்கில் இந்தியாவின் மற்ற பகுதிகள் அனைத்தும் காஷ்மீர் பள்ளத்தாக்குக்குத் தாங்கள் தரும் பங்கை விடக் குறைவான பங்கையே தங்களுக்காக எடுத்துக் கொள்கின்றன என்று!
1947க்குப் பிறகு, தற்போதைய நிலவரம் மத அடிப்படையிலான பிரிவினைக் கொந்தளிப்புக்கான ஆரம்பப் புள்ளியாகவே ஆகி விட்டிருக்கிறது. “நாங்கள் முஸ்லிம்கள். இந்து இந்தியாவுடன் எங்களால் வாழ முடியாது” என்பது தான் ஜின்னாவின் வன்முறைத் தொண்டர் படையின் கோஷமாக 1947க்கு முன் இருந்தது. அதைத் தொடர்ந்து direct action என்ற பெயரில் பெருமளவில் இந்துக்களைப் படுகொலை செய்த நிகழ்வுகள், கல்கத்தா கலவரங்கள், பச்சைக் கொடிகள் எல்லாம் வந்தன. இறுதியாக, காந்திஜி என்ற இந்து வைணவர் வளைந்து கொடுத்தார், “சரி, பாகிஸ்தானை எடுத்துக் கொள்ளுங்கள், எங்களை அமைதியாக வாழவிடுங்கள்” என்றார்.
நாம் சமரசம் செய்துகொண்டோம், நமது அகிம்சை கோழைத்தனம் என்று பரிகசிக்கப் பட்டது. நம் மீது போர்த்தாக்குதல்கள் நிகழ்ந்தன. உடனடியாக நாம் தேசத்தைப் பிரிவினை செய்தோம்.
இப்போது மீண்டும் சிலர் அமைதிக்காக காஷ்மீர் பிரிவினை செய்யப் படவேண்டும் என்பது போன்றதொரு சூழலை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். அது காஷ்மீருடன் முடிவடைவதல்ல, கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்று எல்லாப் பக்கங்களிலும் தனிநாடுகள் கேட்கும் பிரிவினைக் கோரிக்கைகளுக்கு இது தூபம் போட்டு விடும் என்பதாவது அவர்களுக்குப் புரிகிறதா?
என்.சி.எஸ்.எம்.மின் கோரிக்கையை ஏற்று தனி “நாகாலிம்” வரட்டுமா? யூ.எல்.ஏ.யின் அஸ்ஸாம் தேசம்? “எங்களுக்கும் தனிநாடு வேண்டும்; ஏனென்றால் நாங்கள் 1947 ஆகஸ்டு 15 என்று சுதந்திர தினம் கொண்டாடவில்லை” என்று மணிப்பூரில் சிலர் கூறுகிறார்கள். “இதுவரை ஒரு பெரிய பத்திரிகையாளரும் உங்களுக்கு விடுதலை வேண்டும் என்று சொல்லவில்லை; அதனால் பொத்திக் கொண்டு போங்கள், சொன்னபிறகு கண்டிப்பாக வாருங்கள்” என்று அவர்களிடம் சொல்லலாமா? ஒரு டஜன் தனிநாடு வேண்டும் கொந்தளிப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன என்று கூடச் சொல்லலாமே? தமிழ் தேசம்? நேபாளத்துடன் இணையத்துடிக்கும் மாவோ பிரதேசம்? இணையத்தில் ஏதோ ஒரு தளத்தில் “முகலிஸ்தான்” என்று அட்டகாசமான வரைபடம் ஒன்று இருக்கிறது, முழுப்பச்சை முஸ்லிம் ராஜ்ஜியம் என்று அது அறிவிக்கிறது , பாகிஸ்தான், காஷ்மீரில் தொடங்கி உத்திரப் பிரதேசத்தின் எல்லைகளைத் தொட்டு , லடாக், ஹிமாசலப் பிரதேசத்தையும் விழுங்கி அப்படியே அஸ்ஸாம் வரை போகும். இவை எல்லாவற்றையும் பார்த்து நாம் வேடிக்கையாகச் சிரிக்கலாம் தான், தற்போதைய காஷ்மீர் பிரிவினைவாதப் போராட்டம் நாம் அலட்சியப் படுத்த முடியாத அறிவுஜீவிகள், எழுத்தாளர்களிடமிருந்து இத்தகைய அப்பாவித்தனமான (?) கருத்தாங்களைத் தூண்டிவிடாமல் இருந்தால்! கெட்ட விஷயங்கள் திரண்டு வந்து இந்த அளவு உருக்கொள்வதற்கு நிரம்ப நேரம் பிடிக்கிறது என்பது நினைவிருக்கட்டும்.
அஸ்ஸாம் ஏற்கனவே பங்களாதேச முஸ்லிம்கள் பிடியில் உள்ளது. மதச்சார்பின்மை, மதப் பிரிவினைகளிலிருந்தெல்லாம் விலகி இருத்தல் என்றெல்லாம் என்னதான் சம்பிரதாயமாகச் சொன்னாலும், உண்மை என்னவென்றால் காஷ்மீர் கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு மதவாத எரிமலை; அஸ்ஸாமும் அப்படித் தான். அடிப்படையில் இது இந்து-முஸ்லிம் பிரசினை தான், அப்படியில்லை என்று உதாசீனப் படுத்திவிட்டுப் போவது நாளை தேசிய ஒருமைப்பாட்டுக்கே பெரும் ஊறுவிளைவிப்பதாகும். இந்தப் பிரசினைகள் வேண்டுமென்றே நெருக்கடிகளை உருவாக்கி திட்டமிடப்பட்ட அரசியல் முன் முடிவுகளை நோக்கி இட்டுசெல்லும் வகையில் வளர்க்கப் படுபவை. உதாரணமாக அஸ்ஸாமை எடுத்துக் கொள்ளுங்கள் . IMDT சட்டம் வெளிநாட்டு ஊடுருவல் காரர்களுக்கு உதவியாக இருந்தது; இருப்பினும் மத்திய அரசு அந்தச் சட்டத்தை ரத்து செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தது. பின்னர் உச்சநீதிமன்றம் அந்தச் சட்டம் செல்லாது என்று தீர்ப்புக் கூறியதும் கண்துடைப்புக்காக அது ரத்து செய்யப் பட்டு, பின்னர் பின்வாசல் வழியாக வேறு ஒரு பெயரில் அறிமுகப் படுத்தப் பட்டது!
காஷ்மீரில் மக்கள் தங்களை “இந்தியர்கள்” என்று உணரும்படியாக ஒன்றும் செய்யப் படவில்லை. 370வது பிரிவு என்ற தனிச் சட்டத்தின் கீழ் தனிமைப் படுத்துதல் நான் நிகழ்ந்தது. பிறகு, அவர்கள் இந்தியர்கள் போன்று நடந்து கொள்ளவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
தில்லியின் ஊடக அரசர்கள் தங்கள் உத்தரவு இல்லாமல் சூரியன் கூட உதிக்காது என்று என்ணிக் கொண்டிருக்கிறார்கள் போலும்! அவர்கள் அதிகாரத் திமிரை நுரைபொங்க அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பருகிக் கொள்ளட்டும், ஆனால் சூரியன் தானாகவே உதிக்கிறது, தனக்கு வேண்டிய அளவு தகிக்கவும் செய்கிறது !
ஜம்முவிலிருந்து இதனை எழுதுகிறேன். இங்கே மக்கள் இந்திய வழியில் தேசபக்தி என்றால் என்ன என்று காஷ்மீரின் முஸ்லிம்களுக்குக் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். சாலைகளும், தெருக்களுக்கும் வெறிச்சோடிக் கிடக்கின்றன, ஊரே அடங்கி விடுகிறது - எதிர்ப்பு ஊர்வலம் இல்லாத நேரங்களில் மட்டும்! தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கும் மேலாக வியாபாரிகள் தாங்களாகவே தங்கள் கடைகளை மூடிவைத்திருக்கிறார்கள். சிறுதொழில் முனைவோர், ஆட்டோக் காரர்கள், தொழிலார்களும் யாரும் பணி செய்வதில்லை. கடந்த மூன்று மாதங்களாகப் பள்ளிகள் மூடியிருக்கின்றன. கோடை விடுமுறையின் முடிவில் அமர்நாத் இயக்கம் தொடங்கி விட்டதால் அவை திறக்கப் படவே இல்லை. வங்கிகள் வேலை செய்யவில்லை, எஸ்.எம்.எஸ் செய்திகளுக்குத் தடை, பஸ்கள் ஓடவில்லை. ஒரு நெருக்கடிக் காலம் போன்று, கற்பனை செய்ய முடியாத கொடுங்கனவு.
ஆயினும், மக்கள் கவலை கொள்ளவில்லை. மக்கள் அனைவருக்கும் உணவளிப்பதற்காக, நகர் முழுவதும் பெரிய அளவில் பொது உணவுக் கூடங்கள் (லங்கார்) அமைக்கப் பட்டு விட்டன. சுமார் ஒரு லட்சம் மக்களுக்கு தினந்தோறும் உணவு வழங்கப் படுகிறது. இதற்காக ஒவ்வொரு நாளும் பத்து லட்சம் செலவாகிறது. ஜம்முவின் ஒவ்வொரு இல்லமும் இந்த உணவுக் கூடங்களை நடத்துவதற்கு முகம் சுளிக்காமல் நன்கொடை வழங்குகிறது!
ஆனால் வினோதம் என்னவென்றால், ஜம்முவுக்கும், காஷ்மீர் பகுதிக்கும் இடையே உள்ள வித்தியாசம், ஜம்முவின் ஊடகங்களுக்கும், *தில்லி* ஊடகங்களுக்கும் இடையே பிரதிபலிப்பது தான்! ஜம்முவின் முக்கிய செய்தித் தாள்கள் சொல்லும் விஷயங்கள் எதுவும் தில்லியின் செய்தித்தாள்களில், டிவி சேனல்களில் எதிரொலிப்பதில்லை; மாறாக, தங்கள் வகை மதச்சார்பின்மை மற்றும் தங்கள் வகை “நல்லிணக்கத்தின்” பாதுகாவலர்களாகத் தங்களைத் தாங்களே நியமித்துக் கொண்டுவிட்ட இவர்கள், ஜம்முவிலிருந்து வரும் உண்மையான செய்திகளை மறைத்து, அமுக்கி விட்டால், உடனடியாக அமைதி திரும்பி விடும்; மதவாதம் பரவாமல் இருக்கும் என்று எண்ணுகிறார்கள்.
தேசபக்தர்கள் போராடும்போது, அது வகுப்புவாதம் ஆகிறது; அந்தச் செய்தி மறைக்கப் படவேண்டும்; ஆனால் ஸ்ரீநகரின் மையமான லால் சௌக்கில், இந்திய மூவர்ணக் கொடி கொளுத்தப் பட்டு, பாகிஸ்தான் கொடிகள் ஏற்றப்பட்டு, “அல்லோஹோ அக்பர்”, “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” கோஷங்கள் ஒலித்தால் அது உடனடியான ‘நடுநிலைமையுடன்’ விரிவான செய்தியாக வந்துவிடவேண்டும். அதுவும் எப்படி? பிரிவினைவாதிகளின் உணர்ச்சிகள் கொஞ்சம் கூட புண்படாத வகையில், எந்த மறைத்தலும், திரித்தலும் இல்லாமல் முழுமையாக வரவேண்டும். என்ன வினோதமான தார்மீக நெறிமுறையோ இவர்கள் கடைப்பிடிப்பது!
தேவகி மைந்தன் கண்ணனால் சகித்துக் கொள்ளவே முடியாத இந்தச் செயல்பாடுகள், அவனது வழியைப் பின்பற்றுபவர்களாகத் தங்களைக் கூறிக் கொள்பவர்களால் இந்த நாட்டில் அனுமதிக்கப் படுகின்றன. கீதையின் உத்வேகத்தை முன்னிறுத்தி, அறப் போரில் வெற்றியடைய வேண்டிய நேரம் அல்லவா இது? உடல் மட்டுமே அழிகிறது; ஆன்மா என்றும் அழியாதது. ஓ பார்த்தனே, ஏன் அஞ்சுகிறாய் நீ?
பின்னுரை..
ஜம்முவின் கோரிக்கைகளை உதாசீனம் செய்து, இந்தப் போராட்டம் முழுவதுமே அரசியல் என்று முத்திரை குத்தப் பார்க்கும் தில்லியின் எண்ணப் போக்கு ஜம்முவில் கொதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு காங்கிரஸ் தலைவர் ஜம்முவின் தேசபக்த போராட்டத்தை, பிரிவினைவாத கட்சியான ஹுரியத்துடன் ஒப்பிடுகிறார். வேண்டுமென்றே காலம் தாழ்த்தி, பேச்சுவார்த்தைகளை இழுத்தடித்து, இந்த இயக்கத்தினரிடம் பெரும் களைப்பும் சலிப்பும் ஏற்படுத்தி, மக்களை மண்டியிடச் செய்வது போன்ற சீன தந்திரங்களை உபயோகிக்கலாம் என்று உள்துறை அமைச்சகம் எண்ணிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த அணுகுறை அங்கே எரியும் தீயில் எண்ணையை ஊற்றுவது தவிர வேறு எந்தப் பலனும் தராது; மேலும், ஜம்மு மக்கள் தங்கள் குரல் இன்னும் கேட்கப் படவில்லை என்றெண்ணி தீவிர வன்முறை வழிகளில் ஈடுபடுவதிலேயே கூடக் கொண்டு போய் விட்டுவிடும்.
தங்கள் பொறுமையை முற்றிலும் இழந்து கொண்டிருக்கும் ஜம்மு மக்களின் தீவிர தவிப்பை அங்கே போய் நேரில் தரிசித்தால் தான் அது புரியவரும், உறைக்கும். தில்லியில் உட்கார்ந்து கொண்டு, ஜம்முவின் தற்போதைய உண்மை நிலவரங்களின் சில துளிகளைக் கூடத் தொடமுடியாது. ஜம்முவின் சீனியர் பத்திரிகையாளர் ஒருவர் சில புள்ளிவிவரங்களை எனக்கு அளித்தார், எப்படி காலம் காலமாக ஜம்மு மக்கள் மிகவும் பாரபட்சமாக நடத்தப் பட்டிருக்கிறார்கள், இருப்பினும் எந்தப் போராட்டத்திலும் இறங்கவில்லை என்பதை விளக்கினார். “ஏன் நாங்கள் குப்பையில் கிடக்கவேண்டும்?” என்று அவர் கேட்கிறார். “இவ்வளவு காலம் தேசபக்தர்களாகவும், அமைதியை விரும்புபவர்களாகவும் இருப்பதற்காகவா? ஒரு பேச்சுக்காக, நாங்கள் தனி ஜம்மு நாடு கேட்டு பிரிவினைவாதக் கொடி பிடித்தால் தான், ஒட்டுமொத்த ஊடகங்களும், அரசும் எங்கள் பின்னால் வந்து எங்கள் கோரிக்கைகளைக் கேட்பார்களா, காஷ்மீர் பள்ளத்தாக்கின் முஸ்லீம்களுக்குப் பின்னால் அவர்கள் போவது போல?” – ரகுநாத்புராவில் கொதித்துப் போயிருக்கும் ஒரு சாஃப்ட்வேர் என்னிடம் தொடுத்த அபாயகரமான கேள்வி இது.
அவர் கேள்வியின் பின் உள்ள சுட்டெரிக்கும் நியாயத்தை நிரூபிக்கும் சில புள்ளி விவரங்கள் –
1) மொத்த சுற்றளவு: ஜம்மு 26,293 சதுர கிமீ. காஷ்மீர் 15,948 சதுர கிமீ.
2) மாநில வருவாய்க்குப் பங்களிப்பு: ஜம்மு 75%. காஷ்மீர் 20%
3) மொத்த வாக்காளர் எண்ணிக்கை: ஜம்மு 30,59,986. காஷ்மீர் 28,83,950
4) சட்டமன்றத் தொகுதிகள்: ஜம்மு 37. காஷ்மீர் 46.
5) ஒரு தொகுதியின் வாக்காளர்கள் எண்ணிக்கை (சராசரி) : ஜம்மு 66,521. காஷ்மீர் 49,728.
6) ஒரு தொகுதியின் சுற்றளவு (சராசரி): ஜம்மு 710.6 சதுர கிமீ. காஷ்மீர் 346.6 சதுர கிமீ.
7) பாராளுமன்ற தொகுதிகள்: ஜம்மு 2, காஷ்மீர் 3.
8) காபினெட் அமைச்சர்கள் (7 ஜூலை 2008 படி): ஜம்மு 5, காஷ்மீர் 14.
9) மாவட்டங்கள்: ஜம்மு 10, காஷ்மீர் 10.
10) ஒரு மாவட்ட சுற்றளவு (சராசரி): ஜம்மு 2629 சதுர கிமீ. காஷ்மீர் 1594 சதுர கிமீ.
11) வேலையில்லாதவர்கள் : ஜம்மு 69.70%, காஷ்மீர் 29.30%
12) மாநில அரசுப் பணிகளில் பங்கு: ஜம்மு 1.2 லட்சம் பேர்கள். காஷ்மீர் 3 லட்சம் பேர்கள்.
13) மாநில அரசு ஊழியர்களில் உள்ளூர் ஆட்கள் : ஜம்மு : 25% க்கும் குறைவு. காஷ்மீர் : 99%
14) மின் உற்பத்தி: ஜம்மு 22 மெகாவாட். காஷ்மீர் 304 மெகாவாட்.
15) ஒரு ஆண்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை: ஜம்மு: 80 லட்சத்திற்கும் மேல். காஷ்மீர் : 4 லட்சத்திற்கும் குறைவு.
16) மாநில வருவாயிலிருந்து சுற்றுலாத்துறை முன்னேற்றதிற்கான முதலீடு: ஜம்மு : 10%க்கும் குறைவு. காஷ்மீர்: 85%க்கு மேல்.
17) கிராமப்புற மின்சார வசதி: ஜம்மு : 70%க்கும் குறைவு. காஷ்மீர் : 100%
இதற்கு மேலும் சொல்வதற்கு வேறு ஏதாவது இருக்கிறதா? ஜம்மு, உன் போராட்டம் வெல்க!
http://jataayu.blogspot.com/
* - கட்டுரையாசிரியர் தருண் விஜய், தற்போது தில்லி, சியாமாபிரசாத் முகர்ஜி ஆய்வு நிறுவத்தின் இயக்குனர். “பாஞ்சஜன்யா” என்ற ஹிந்தி இதழின் ஆசிரியராக இருந்தவர்.
மூலக்கட்டுரை:
http://timesofindia.indiatimes.com/articleshow/msid-3396388.cms

No comments: