Friday 27 July, 2007

ஜடாயு கட்டுரை - மும்பை குண்டுவெடிப்பு தீர்ப்புகளும், கோவை எதிர்பார்ப்புகளும்

1993-ஆம் ஆண்டு விநாயக சதுர்த்தி என்னால் மறக்க முடியாத ஒன்று. அப்போது நான் புனே நகரில் பணிபுரிந்து வந்தேன். விநாயக சதுர்த்தியை 10 நாட்கள் சமூக விழாவாக மிக விமரிசையாகக் கொண்டாடும் கலாசாரம் தோன்றிய இடம் புனே. அதனால் நகரின் பல இடங்களில் விழாப் பந்தல்களில் அழகிய கணபதி அலங்காரங்களோடு, அந்தந்த வருடத்தின் முக்கியமான சமூக நிகழ்வுகளைப் பிரதிபலிப்பது போன்று சிறிய, பெரிய கண்காட்சிகள் மாதிரியும் அமைத்திருப்பார்கள். அந்த வருடம் எல்லாப் பந்தல்களிலும் ஒரே ‘தீம்’ தான் : மும்பை குண்டுவெடிப்புகள், அதற்கான சதித்திட்டம், அதில் ஏற்பட்ட மரணங்கள், மனித சோகங்கள். இவற்றை கோட்டோவியங்களாகவும், பொம்மைகளாகவும், வாசகங்களிலும் வெளிப்படுத்தியிருந்தார்கள். மரணமடைந்தவர்களின் ஆத்மாக்களுக்கு அமைதியும், இந்த பெரும் கொடுமையைச் செய்த தாவூத் இப்ராகீம், டைகர் மேமன் மற்றும் அவனது கூட்டாளிகளுக்கு கடும் தண்டனையும் விநாயகர் வழங்குவார் என்பதாகவும் சில காட்சிகள் இருந்தன.அந்த வருடம் மார்ச் மாதம் ஒரே நாளில் 12 இடங்களில் நடத்தப் பட்ட இந்த குண்டுவெடிப்புகள் 257 அப்பாவி மக்களின் உயிர்களைப் பலிகொண்டு, இன்னும் 800 பேரைக் காயப் படுத்தி அவர்கள் வாழ்க்கையை நாசம் செய்ததோடல்லாமல், நாட்டின் பொருளாதாரத் தலைநகரையே ஸ்தம்பித்து செயலிழக்கச் செய்தன.

14 ஆண்டு கால நீதிமன்ற வாசத்திற்குப் பின் இந்த வழக்கில் தீர்ப்புகள் இப்போது வரத் தொடங்கியிருக்கின்றன. மாஹிம் மீனவர் குப்பம் பகுதியில் கையெறி குண்டுகளை வீசி எறிந்து 3 பேர் இறப்பதற்குக் காரணமான 4 தீவிரவாத அடியாட்கள் உள்ளிட்ட 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. இவர்களில் ஒருவரான முகமது யூசுஃப் ஷேக் மத்திய மும்பையில் ஒரு ஸ்கூட்டர் நிறைய 15 கிலோ வெடிகுண்டுகளை நிரப்பி நிறுத்தியிருந்தார் – தெய்வாதீனமாக அவை வெடிக்கவில்லை. இருப்பினும், இந்த சமூக விரோத சதித்திட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததற்காக அவருக்கு அளிக்கப் பட்ட தண்டனை நியாயமானது தான் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கோடே குறிப்பிட்டுள்ளார்.

ஆயுள் தண்டனை வழங்கப் பட்டிருக்கும் 16 குற்றவாளிகளில் ஒருவரான சுங்கவரித்துறை அதிகாரி சோம்நாத் தாபா, ஆர்.டி.எக்ஸ் குண்டுகள் கடற்கரை வழியாக மும்பை நகரத்துக்குள் கடத்திக் கொண்டு வரப் பட்டதற்கு உடந்தையாக இருந்ததற்காக மரணை தண்டனை வழங்கப் படவேண்டியவர் எனினும் அவர் புற்றுநோயால் அவதிப் படுவதன் காரணமாக இது ஆயுள் தண்டனையாக்கப் பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானுக்குச் சென்று அங்குள்ள ஜிகாதி தீவிரவாத முகாம்களில் ஆயுதப் பயிற்சி பெற்ற, இந்தச் சதியின் முக்கிய குற்றவாளியான டைகர் மேமன் தப்பிக்க உதவிசெய்த ஜாகீர் ஹுசைன் ஷேக் உள்ளிட்ட 3 பேருக்கும் மரணதண்டனை வழங்கப் பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆஜர் படுத்தப் பட்ட 100 பேரில் இதுவரை 91 பேருக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு தரப்பட்டு விட்டது. மீதமிருக்கும் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கும் இதே போன்ற கடும் தண்டனைகள் தரப்படும் என்று எதிர்பார்க்கலாம். சில குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் 1992 டிசம்பரில் நிகழ்ந்த சர்ச்சைக்குரிய பாபர் மசூதி கட்டிட இடிப்புக்கு பழி வாங்குவதற்காகவே இந்தக் குற்றவாளிகள் குண்டுவெடிப்பு சதியில் ஈடுபட்டதாகவும், அதனால் அவர்கள் தரப்பில் இந்தப் படுகொலைகளுக்கான நியாயம் இருப்பதாகவும் வாதிட்டனர். இத்தகைய வாதங்களை போதிய ஆதாரமில்லாதவை என்று கூறி நீதிபதிகள் முற்றிலுமாக நிராகரித்தனர்.

தண்டனை பெற்றவர்கள் இந்த வழக்கை உச்சநீதி மன்றம் வரை எடுத்துச் சென்று வாதிடும் சாத்தியம் உள்ளது. இருப்பினும், சாட்சிகளும், நிரூபணங்களும் மிக வலுவாக உள்ளதால் உச்சநீதி மன்றம் மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்பையே வழிமொழியும்.

இந்த வழக்கு நடந்து வந்த காலங்களில், மும்பை பொதுமக்களும் சரி, ஊடகங்களும் சரி, இந்தச் சம்பவத்தையும், பாதிக்கப் பட்டவர்களின் சோகங்களையும் மறக்கவில்லை. அவை தொடர்ச்சியாக நினைவூட்டப் பட்டுக் கொண்டே இருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக அனுராக் கஷ்யப் இயக்கிய கறுப்பு வெள்ளி (Black Friday) என்ற குறிப்பிடத்தக்க இந்தித் திரைப்படமும், சில குறும்படங்களும் கூட வெளிவந்தன. 2004, 2005 ஆம் வருடங்களில் ஏற்பட்ட சில சிறு குண்டுவெடிப்புகளும், 2006 ஜூலை மாதம் 200-க்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொண்ட ரயில் குண்டுவெடிப்பும், இந்த தீவிரவாதத்தின் கோர முகத்தினை மீண்டும் மும்பை மக்களுக்கு வெளிப்படுத்தின.

இதன் தொடர்ச்சியாக, 1993 குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப் பட்டிருந்த 18 முக்கிய குற்றவாளிகளுக்காக வாதாடி வந்த இந்தியாவின் தலைசிறந்த கிரிமினல் வழக்கறிஞர்களில் ஒருவரான நிதீன் பிரதான் அவர்களுக்காக தான் வாதாடப் போவதில்லை என்று ஜூலை 2006ல் வெளிப்படையாக அறிவித்தார். ரிடீஃப்..காம் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் முதலில் மும்பையைச் சேர்ந்த முஸ்லீம் சமூகத் தலைவர்கள் தங்கள் சமூகம் அனியாயமாகக் குற்றம் சாட்டப் படுவதாகக் கூறியதைக் கேட்டு அதில் நியாயம் இருப்பது போலத் தோன்றியதால் அவர்கள் சார்பாக வழக்காட ஒப்புக் கொண்டதாகவும், பின்னர் அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு இந்தக் குற்றவாளிகளைப் பாதுகாக்க முயல்வது தெரியவந்ததும் அதிலிருந்து விலகுவதாகும் கூறினார்.

11 ஜூலை,2006 குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மும்பை பொதுமக்கள் பெருமளவில் திரண்டு அண்மையில் 11 ஜூலை, 2007 அன்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பெரும்பாலான ஆங்கில, இந்தி ஊடகங்கள் இந்த குண்டுவெடிப்பால் சிதறிய கனவுகளையும், தொலைக்கப் பட்ட வாழ்க்கைகளையும் மக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தன. இந்த கண்ணீர் அஞ்சலிகளுடன் இதற்காக குற்றம் சாட்டப்பட்ட ஜிகாதி தீவிரவாதிகள் “இந்த கொடுஞ்செயல் செய்ததில் தங்களுக்கு எந்தவிதமான குற்ற உணர்வோ, வருத்தமோ இல்லை” என்று கடுத்த முகங்களுடன் அளித்த வாக்குமூலத்தையும் ஊடகங்கள் தவறாமல் மக்களிடம் கொண்டு சென்றன. இந்த வழக்கும் விரைவில் விசாரிக்கப் பட்டு, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனைகள் வழங்கப் படலாம் என்று எண்ணுவதற்கு முகாந்திரம் இருக்கிறது.

இந்தப் பின்னணியில், 1998 கோவை குண்டுவெடிப்பு வழக்குக்கான தீர்ப்புகள் ஆகஸ்டு முதல் தேதி அன்று அறிவிக்கப் படும் என்று செய்திகள் வந்துள்ளன. இது பற்றி விவாதிக்க ஜூலை-27 அன்று ஒரு கூட்டம் நடைபெறும் என்று குற்றம் சாட்டப் பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் சி.அபுபக்கர் கூறியிருக்கிறார்.

1998-ஆம் ஆண்டு, பிப்ரவரி 14-ஆம் நாள் பா.ஜ.க. தலைவர் அத்வானியின் உயிரைப் பறிப்பதற்காகவும், பொதுமக்கள் கூடும் இடங்களில் அவர்களைக் கொலை செய்வதற்காகவும் திட்டமிட்டு நகரின் பல பகுதிகவைக்கப் பட்ட இந்த குண்டுகள் வெடித்ததில் 52 பேர் மரணமடைந்தனர், 200க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். 100 கோடிக்கு மேல் சொத்து நாசமடைந்தது. இந்த சதி தொடர்பாகக் கைது செய்யப் பட்ட 166 பேர்களில் பெரும்பாலர் அல்-உம்மா என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சார்ந்தவர்கள். இந்த சதியின் முக்கிய காரணகர்த்தர்களாக குற்றம் சாட்டப் பட்டு 8 ஆண்டுகளாக்ச் சிறையில் இருப்பவர்களில் கேரளத்தைச் சேர்ந்த அப்துல் நசீர் மதானி மற்றும் தமிழகத்தின் எஸ். ஏ பாட்சா, முகமது அன்சாரி ஆகிய தலைவர்களும் அடக்கம்.

தொழில் நகரமான கோவையின் அமைதிக்குப் பெரும் குந்தகம் விளைவித்த இந்த சம்பவம் நிகழ்ந்தவுடன், அதுவரை இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் முளைப்பதைக் கண்டும், காணாமலும் இருந்த தமிழக அரசும், காவல் துறையும் உடனடியாக செயலில் இறங்கி இந்த இயக்கங்களின் எல்லாத் தொடர்புகளையும் ஆணிவேர் வரை சென்று தீவிரமாக ஆராய்ந்து புலன்விசாரணை செய்து, குற்றவாளிகளைப் பிடித்து, இந்த இயக்கங்கள் செய்திருந்திருக்கக் கூடிய வேறு பல குண்டுவெடிப்பு உள்ளிட்ட பயங்கரவாதத் திட்டங்களையும் செயலிழக்கச் செய்தது மிகவும் பாராட்டுக்குரியது. அஸ்ஸாம், மும்பை, தில்லி என்று பல நகரங்களிலும் வலைவீசி குற்றவாளிகள் கைதுசெய்யப் பட்டிருக்கின்றனர். சமீபகால வரலாற்றில், இது போன்று மிகத் துல்லியமாக ஒரு சந்தேக இழையையும் விட்டுவைக்காமல் ஒரு பயங்கரவாதச் சதியில் ஈடுபட்ட அத்தனை பேரையும் கண்டுபிடித்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியற்கான உதாரணங்கள் மிகச் சிலவே உண்டு.

ஆனால், இப்படி ஆரம்பித்த இந்த விசாரணை, கால ஓட்டத்தில் மிக மோசமான அரசியல் நிர்ப்பந்தங்களை சந்தித்தது. வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மாற்றல்கள், அவர்களது சில சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் இவை இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின. ஒருவழியாக இந்த ஏப்ரல் மாதம் விசாரணைகள் முடிந்து, இப்போது தீர்ப்ப்புகள் வரப்போகின்றன.திரும்பிப் பார்க்கையில், கோவை மற்றும் தமிழக மக்கள் மற்றும் ஊடகங்கள் இந்த பயங்கரவாதச் செயலையும், அதன் பின்னணியையும், பற்றி ஒரேயடியாக மற்ந்து விட்டார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது. சிறையில் இருக்கும் தீவிரவாத குற்றவாளிகளுக்கு ராஜோபசாரம் நடப்பது பற்றிய செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.. மதானிக்கு சிறையில் ஆயுர்வேத மசாஜ், ஸ்பெஷல் கோழிக்கறி இவை வழங்கப் படுவது பற்றிய செய்திகள் வந்தன. கேரள சட்டசபை உறுப்பினர்கள் மதானி என்கிற இந்த குற்றவாளியை தமிழக சிறைகளில் “துன்புறுத்துவதாகவும்” அவரை விடுவிக்கவேண்டும் என்றெல்லாம் கூட கோரிக்கை வைத்தனர். இவ்வளவு சீரியஸான விஷயத்தை எதிர்த்து ஒரு கண்டனம், ஒரு அரசியல் பொதுக் கூட்டம் இங்கு நடத்தப் படவில்லை. மாறாக, சிறைகளில் “துன்புறும்” தீவிரவாதிகளது “மனித உரிமை”களுக்கு வக்காலத்து வாங்கி பொதுக்கூட்டங்கள் நடத்தப் பட்டன. சில முற்போக்குவாதிகள் அவைகளில் சென்று இந்த மனித மிருகங்களுக்கு தங்கள் பரிவையும், கனிவையும் தெரிவித்தனர்.

சட்டத்திற்கு அடங்கி நடக்கும் கோடிக் கணக்கான சாதாரண குடிமக்களின் பாதுகாப்பையும், நலவாழ்வையும் விட தீவிரவாதிகளுக்கு தரப் படும் வசதிகளும், உரிமைகளும் தான் முக்கியமானவையாக அரசும், அறிவுஜீவிகள் சிலரும் கருதும் ஒரு சமூகத்தில் இருக்கிறோம் என்ற உணர்வே பெரும் அச்சமூட்டுவதாக உள்ளது.

இந்த சூழலில் வரப் போகும் கோவை தீர்ப்புகள் மும்பை தீர்ப்புகளை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும் என்று இயற்கையாகவே ஒரு எதிர்பார்ப்பு உருவாகிறது. கோவையைக் கோரமாக்கிய கொடியவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை நீதிமன்றங்கள் வழங்கி, மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.

இதில் இன்னொரு சோகம் என்னவென்றால் கோவை குண்டுவெடிப்பில் பாதிக்கப் பட்ட அப்பாவி மக்களின் இழப்புகள், துயரங்கள், வேதனைகள் பற்றிய நினைவுகளோ, பதிவுகளோ தமிழக ஊடகங்களில் பெரிய அளவில் எடுத்துச் சொல்லப் பட்டதாகதவே தெரியவில்லை.

சமீபத்தில், “ஜிகாதி வெறிக்கு பலியான தமிழர்” என்ற இந்த வலைப் பதிவில் சுட்டியிருந்த வீடியோ சுட்டிகளைப் பார்க்க நேர்ந்தது.

பக்கத்தில் உள்ள மைதானத்தில் விளையாடச் சென்று, உடல் சிதறி இழந்த மகனைப் பற்றி மீளமுடியாத துயரத்துடன் நினைவு கூறும் தாய். திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற இடத்தில் குண்டு வெடித்ததால் அருமை அண்ணனை இழந்த சகோதரி. மகனையும், அவன் இறந்த சோகத்தால் மறைந்த கணவனையும் பறிகொடுத்து நிற்கும் அபலைப் பெண். இவர்களது வேதனையைப் பார்க்கையில் நெஞ்சு பதறுகிறது. இந்தக் கதி செய்தவர்களை சும்மா விடக் கூடாது, அவர்கள் உடல் சிதறி சாக வேண்டும் என்று ஆற்றாமையில் சாபமிடுகிறார்கள் இந்த அல்லலுற்றவர்கள்.

அந்த கண்ணீருக்குப் பதில் சொல்லும் பொறுப்பு வரப் போகும் நீதி மன்றத் தீர்ப்புகளுக்கு இருக்கிறது.

No comments: