Friday 27 July, 2007

திரு. மலர்மன்னன் சி.பி.காம் கட்டுரை

பயங்கரவாதிகள் மீது காட்டும் பரிவால் நிகழவிருக்கும் பின்விளைவுகள்
மலர் மன்னன் SIFY.COM

செய்தித் தாள்களை கவனமாகப் படிப்பவர்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன்: சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் ஹிந்துஸ்தானத்திற்கு வந்த பாலஸ்தீனிய அதிபர் யாசர் அராபத், மாபெரும் இஸ்லாமிய நாடான இந்தியாவுக்கு வருவதில் தாம் மிகவும் மகிழ்வதாக அறிவித்தார். அதிர்ச்சியடைந்த செய்தியாளர்கள், மதச் சார்பற்ற எங்கள் நாட்டை இஸ்லாமிய நாடென்று அவர் எப்படிக் கூறலாம் எனக் கேட்டனர். அதற்கு யாசர் அராபத் மிகவும் அலட்சியமாக, உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் முகமதியர்கள் உள்ள நாடு இந்தோனேசியா. அதற்கு அடுத்த படியாக முகமதியர்களின் ஜனத்தொகை அதிகம் உள்ள நாடு இந்தியாதான். எனவே இந்தியாவை இஸ்லாமிய நாடு என்று குறிப்பிட்டதில் தவறேதும் இல்லை என்றார்.

யாசர் அராபத் ஹிந்துஸ்தானத்தை இஸ்லாமிய நாடு என்று வர்ணித்தமைக்கு நியாயப்படி நமது மைய அரசு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அராபத்தைக் கட்டித் தழுவி ஆலிங்கனம் செய்வதில் ஆரம்ப முதலே அதிக ஆர்வம் காட்டி வந்த நமது மைய அரசு, நாசூக்காகக்கூட அவர் பேச்சுக்குத் திருத்தம் சொல்லவில்லை. ஹிந்துஸ்தானத்தில் முகமதியரைக் காட்டிலும் ஹிந்துக்களின் தொகைதான் மிக மிக அதிகம்; ஆனாலும் எங்கள் தேசத்தை ஹிந்து ராஷ்டிரம் என்று அறிவிக்க நாங்கள் விரும்பவில்லை. அப்படி அறிவிப்பதே சிறுபான்மையினர் தம்மை அந்நியப்படுத்திக் கொள்ள இடமளிப்பது போலாகிவிடும் என அஞ்சுகிறோம் என்று அராபத்துக்கு முகம் கோணாமல் எடுத்துச் சொல்ல அன்றைய ஆட்சியாளருக்குத் துணிவு இருக்கவில்லை. விருந்தினராக வந்திருப்பபவர் மனம் வருந்த இடமளிக்கலாகாது என்கிற நல்லெண்ணம் உண்மையை எடுத்துச் சொல்லவிடாமல் அவர்களைத் தடுத்துவிட்டது. எல்லாம் 'அதிதி தேவோ பவ' என்கிற ஹிர்து தர்மப் பண்பாட்டால் வந்த வினை!


யாசர் அராபத் பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் என்கிற பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்த போதிலிருந்தே அதிகாரபூர்வமாக அவருக்கு ஆதரவு அ:ளித்து வந்த நாடுதான், நமது நாடு. இஸ்ரேலுக்கு எதிராக அந்த இயக்கம் நடத்திய பயங்கரவாதச் செயல்களுக்கு அளவே இல்லை. விளையாட்டில் அரசியல் கூடாது என்று உபதேசம் எல்லாம் செய்வர்கள். ஆனால் மேற்கு ஜெர்மனியில் ஒலிம்பிக் விளையாட்டுகள் நடந்த போது அவற்றில் பங்கேற்க வந்த இஸ்ரேல் விளையாட்டு வீரர்களின் கூடாரம் மீது வஞ்சகமாகக் குண்டு வைத்து அவர்களைக் கூண்டோ டு கொன்று குவித்தது, அராபத்தின் பாலஸ்தீனிய விடுதலை இயக்கம். அந்த இயக்கம் அரசியல் முகமூடி தரித்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டபோதிலும் முகமதிய மதத்தை முன்னிறுத்தி மதச் சார்புடன்தான் பயங்கரவாதச் செயல்களைச் செய்து வந்தது. சுற்றியிருக்கும் அரபு நாடுகளும் தாம் சார்ந்துள்ள முகமதிய மதத்தின் அடிப்படையில்தான் அராபத்தின் இயக்கத்தை ஆதரித்தன. பாலஸ்தீனிய விடுதலைப் படை, யூதர்களுக்கு எதிராக ஜிகாது செய்து வருவதாக!

அரசியலுக்கு ஒரு சிறிதும் தொடர்பில்லாத விளையாட்டு வீரர்களை அராபத்தின் பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் கொன்று குவித்த பிறகும் நமது மைய ஆட்சியாளர்கள் அராபத்தை மார்புறத் தழுவி அவரது பயங்கரவாத இயக்கத்தை ஆதரிக்கத் தவறவில்லை. ஹிந்துஸ்தானம் இந்த மரபினைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது என்கிற செய்தியைத் தமது செயலால் உலக நாடுகளுக்குப் பிரகடனம் செய்து வருகிறார், இன்றைய பிரதமர் மன்மோகன் சிங். ஹிந்துஸ்தானத்தின் பாரம்பரியம், வரலாற்றுப் போக்கு, சமூக அமைப்பின் உள் விவகாரம் ஆகியவறில் எல்லாம் சிறிதளவும் பரிச்சயம் இல்லாத, இவை பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற அக்கரையும் இல்லாத, ஹிந்துஸ்தானத்தில் ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமெனில் சிறுபான்மையினரின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்றிருந்தால் போதும் என்பதைத் தவிர வேறு ஏதும் தெரியாத, பிரதமராக இருந்தவரின் மனைவி என்கிற தகுதியைத் தவிர வேறு ஒரு சிறப்பும் இல்லாத அந்நிய தேசத்துப் பெண்மணி சோனியா காந்தியின் பினாமி என்கிற பிரபையைத் தாங்கியிருப்பவர்தான் மன்மோகன் சிங் என்னும் கருத்து வலுப் பெறுமாறுதான் அவரது போக்கு உள்ளது.


இன்றைக்குப் பல்வேறு நாடுகளுக்கும் செல்லும் ஹிந்துஸ்தானத்துப் பிரஜைகள் அங்கெல்லாம் பலவாறான சங்கடங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். சவூதி அரேபியா போன்ற சில தீவிர மதச் சார்பு நாடுகளில் மிகக் கேவலமாக நடத்தப்படுகிறார்கள். ஹிந்துஸ்தானத்தில் அண்மைக் காலத்தில் தோன்றி, உலகம் முழுவதும் சீடர்களைப் பெற்றிருந்த மிகச் சிறந்த சிந்தனையாளரும் தத்துவ ஞானியுமான ஆசாரிய ரஜனீஷ் என்கிற ஓஷோ அமெரிக்காவில் ஒரு குற்றவாளியாக அலைக்கழிக்கப்பட்டதும் நினைவிருக்கும். அனால் அந்தந்த நாடுகளில் ஆடம்பரமாக உல்லாச வாழ்க்கை நடத்திவரும் நம் நாட்டுத் தூதுவர்கள் இது பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்பட்டதில்லை. அவர்கள் தமது கடமையெனக் கருதுவதெல்லாம் ஹிந்துஸ்தானத்திலிருந்து வரும் அரசியல்வாதிகளுக்கு எல்லா வசதிகளும் செய்து தருவதும், படப்பிடிப்பிற்காக வரும் சினிமா நட்சத்திரங்கள் பின்னால் அலைவதும், சுதந்திர தினம் போன்ற சந்தர்ப்பங்களில் மதுபான விருந்து அளிப்பதும்தாம். நமது மைய அரசும் நம்முடைய தூதுவர்கள் இவ்வாறு பொறுப்பில்லாமல் இருக்கிறார்களே எனக் கவலைப்பட்டதில்லை.
ஓஷோ அமெரிக்காவில் கைதான போது கூட அவர் அகில உலகிலும் மதிக்கப்படும் சிந்தனையாளர்; அவரைக் கௌரவமாக நடத்துங்கள் என்று நமது மைய அரசு சொன்னதாக எனக்கு நினைவில்லை. ஆனால் நமது இன்றைய பிரதமர் மன்மோகன் சிங் ஆஸ்திரேலிய அரசிடம் மிகவும் உறுதிபடச் சொல்கிறார்: பயங்கரவாதத் தொடர்பு இருப்பதாகக் கருதி நீங்கள் காவலில் வைத்திருக்கும் ஹமீது எங்கள் நாட்டுப் பிரஜை; அவரது உடலுக்கோ, உள்ளத்திற்கோ எவ்வித ஊறும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்பதாக. நமது வெளியுறவுத் துறைத் தலைமை அதிகாரிகளும் அதையே திருப்பிச் சொல்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் உள்ள நமது தூதரகத்திற்கும் விசேஷ உத்தரவு அளிக்கப்பட்டிருக்கிறது: காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஹமீதுக்கு எவ்விதப் பாதிப்பும் வராதபடிப் பார்த்துக்கொள்ளுமாறு! ஆஸ்திரேலிய அரசாங்கமோ, பயங்கரவாத இயக்கத்தினருடன் தொடர்ந்து சகவாசம் வைத்திருப்பவர் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதால்தான் ஹமீதைக் காவலில் வைத்திருப்பதாகச் சொல்கிறது!

நமது வெளியுறவு அமைச்சகம் தில்லியிலுள்ள ஆஸ்திரேலிய தூதுவரை நேரில் அழைத்து ஹமீது விஷயத்தில் நல்லபடியாக நடந்துகொள்ளுமாறு வலியுறுத்தியிருக்கிறது. மன்மோகன் சிங்கின் அரசு முகமதிய பயங்கரவாதத் தீய சக்திகள் மீது காட்டும் பரிவு எல்லை மீறிவிட்டதை இது உறுதி செய்கிறது. இதன் விளைவை வெளிநாடு செல்லும் ஹிந்துஸ்தானத்துப் பிரஜைகள் அனைவரும் அனுபவிக்க நேரிடும். ஆனால் வாக்குகளுக்காக முகமதியரிடம் நல்ல பெயர் எடுப்பதிலேயே குறியாக உள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி ஆட்சிக்கு இது பற்றிக் கவலையில்லை!

பொதுவாக ஒரு நாட்டின் அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சகம் வேற்று நாட்டு தூதுவரை அழைத்துத் தனது கவலையை அல்லது சிரத்தையைத் தெரிவிக்கிறது என்றால் அது தேசத்தின் பொது நலன் சமபந்தப்பட்டதாகத்தான் இருக்கும், இருக்க வேண்டும். ஆனால் இந்த மரபுக்கு மாறாகச் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்படும் தனது நாட்டுப் பிரஜை ஒருவர் நல்ல முறையில் நடத்தப்பட வேண்டும் என்று சொல்வதற்காக நமது வெளியுறவு அமைச்சகம், ஆஸ்திரேலிய தூதுவரை வரவழைத்துப் பேசுகிறது. இவ்வாறு செய்வது வேற்று நாட்டின் சட்ட விமுறைகளில் தலையிடுவதாகும் என்கிற உணர்வு கூட நமது மைய அரசுக்கு இல்லை!
பாகிஸ்தானத்தில் தனது பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் பொருட்டு முகமதிய பயங்கரவாதிகள் மீது தயவு தாட்சண்யமின்றிக் மிகக் கடுமையாக முஷரப் நடவடிக்கை எடுத்ததன் பின் விளைவு, அவருக்குப் பயங்கரவாதிகளிடமிருந்து கூடுதல் பாதுகாப்பு அளிப்பதற்காக அமெரிக்கா மேலும் மேலும் அவர் மீது டாலர் மழை பெய்யச் செய்யும். அந்தப் பணத்தில் முஷரப்பும் அவரது சகாக்களும் செய்யும் கையாடல் போக எஞ்சுவது ஹிந்துஸ்தானத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடும் பாகிஸ்தான் உளவு நிறுவனத்தையும் காஷ்மீரைச் சாக்கிட்டு ஹிந்துஸ்தானம் முழுவதும் நாச வேலைகளைச் செய்துவரும் முகமதிய பயங்கரவாத இயக்கங்களையும் ஊக்குவிக்கப் பயன்படும்.

பயங்கரவாதக் குழுவுடன் இடைவிடாது தொடர்புகொண்டுள்ளமைக்கு ஆதாரம் உள்ளது என்று சொல்லி ஹமீது என்கிற ஹிந்துஸ்தனத்துப் பிரஜையைக் காவலில் வைத்து விசாரித்துவரும் ஆஸ்திரேலிய அரசிடம் ஹமீதை நல்ல விதமாக நடத்துங்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் சொல்வதன் பின் விளைவு எப்படி இருக்கும்?

இனிமேல் வெளிநாடுகளுக்குச் செல்லும் ஹிந்துஸ்தானத்துப் பிரஜைகள் அனைவருக்குமே தலைவலிதான். முதலில் அவர்களுக்கு வீசா கிடைப்பதிலிருந்தே சங்கடம் தொடங்கிவிடும். ஹிந்துஸ்தானத்து அரசாங்கமே பயங்கரவாதிகள் மீது பரிவு காட்டும் இயல்பு பெற்றிருப்பதால் அதன் பிரஜைகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற அணுகுமுறையை எல்லா நாடுகளும் வீசா பரிசீலனையின் போது அனுசரிக்கும். நமது நாட்டவர் போய் இறங்கும் வெளிதேசங்களில் விசாரணைகளும் பரிசோதனைகளும் மிகக் கடுமையாக இருக்கும். அவர்களின் நடமாட்டத்திற்கும் மறைமுகமான கட்டுப்பாடுகளும் கண்காணிப்புகளும் இருக்கும். வெளிநாட்டு மக்கள் நம் நாட்டவரை எப்போதும் சந்தேகப் பார்வையுடனேயே அணுகும் நிலை உருவாகிவிடும்.

ஹிந்துஸ்தானத்துப் பிரஜைகளை அவர்கள் சார்ந்துள்ள சமயத்தின் அடிப்படையில் அலசி ஆராய வேண்டிய கட்டாயம் ஏதும் வெளிநாட்டவருக்கு இல்லை. ஹிந்துஸ்தானத்திலிருந்து வரும் எவரும் பயங்கரவாதியாகவோ, பயங்கரவாத ஆதரவாளராகவோ இருக்கக் கூடும் என்கிற எண்ணம் அவர்களுக்கு எழுமானால் அதனை நம்மால் ஆட்சேபிக்க இயலாது. ஹிந்துஸ்தானத்து அரசாங்கமே முகமதிய பயங்கர வாதிகள் மீது பரிவு காட்டும் கொள்கையைக் கடைப்பிடிப்பதுதானே என்று ஒரே வரியில் நமது ஆட்சேபம் தூக்கி எறியப் பட்டுவிடும்.


முன்பெல்லாம் ஹிந்துஸ்தானத்திலிருந்து வருபவர்களை 'ஓ! புத்தர் பிறந்த தேசத்திலிருந்து வருகிறீர்களா?' என்று விமான நிலையத்திலேயே இன்முகத்துடன் வரவேற்பார்கள். சில சமயம் 'யோகா தேசமா' என்பார்கள். காந்தி திரைப்படம் வந்தபின் 'கேண்டி?' என்று வரவேற்பார்கள். இனி, 'ஓ! சொந்த நாட்டு பயங்கரவாதிகள் மீது பரிவு காட்டும் தேசத்திலிருந்து வருபவரா?' என்று மனத்திற்கு உள்ளாவது நினைத்துக்கொள்வார்கள். அதற்குத் தகுந்தவாறுதான் வரவேற்பும் இருக்கும்.

வெளிநாட்டு வங்கியில் முடக்கி வைக்கப்பட்ட பணத்தையெல்லம் எடுத்துக்கொள்ள குவாட்ரோச்சிக்கு வழிசெய்து கொடுத்தபோதே மன்மோகன் சிங் சோனியாகாந்தியின் பினாமி என்பது உறுதியாகிவிட்ட போதிலும், இப்போது ஹிந்துஸ்தானத்தின் மக்கள் நலன் குறித்துச் சிறிதளவும் கவலையின்றி வாக்கு வங்கி அரசியலுக்காக ஹிந்துஸ்தானத்தைச் சேர்ந்த, சந்தேகத்திற்குரிய முகமதிய பயங்கரவாதிகள் மீது பரிவு காட்டுமளவுக்கு அவர் துணிந்துவிட்டிருப்பது ஓர் அந்நிய சுய நலத் தீய சக்தியின் கைப்பாவைதான் மன்மோகன் சிங் என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.

மன்மோகன் சிங் பினாமி பிரதமராக உள்ள, கம்யூனிஸ்டுகள் ஆதரவில் நீடித்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ஒரு தேச விரோத அரசு. எவ்வளவு சீக்கிரம் அது போகிறதோ அவ்வளவு சீக்கிரம் ஹிந்துஸ்தானத்திற்கும் அதன் பிரஜைகளுக்கும் நல்லது.

No comments: