ஹிந்துஸ்தானத்தின் எல்லையோர பகுதிகளுக்கு எற்படும் ஆபத்துகள் குறித்து இன்றய தினமணியில் தலையங்க கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. இதுகுறித்த சிறு பதிவு ஒன்றை நேற்று பதிந்திருந்தேன். மேலும் அதிகமான விபரங்களை தருகிறது இந்த கட்டுரை.
******************************************
Friday June 20 2008 00:00 IST
எல்லையோர ஆபத்துகள்
வி. சண்முகநாதன்
அண்டை அயல் நாடுகளுடன் நட்புடனும் நல்லுறவுடனும் விளங்கவே இந்தியா முயன்று வருகிறது. இந்திய அரசு எந்த நாட்டுடனும் வலியப்போய் சண்டையைத் துவக்கியது கிடையாது. சமாதானத்தையே எப்போதும் விரும்பி வந்துள்ளோம்.
அண்மைக்காலமாக நமது நாட்டின் எல்லையோரத்தில் ஊடுருவல்கள் அதிகரித்து வருகின்றன. இந்திய எல்லைக் கோட்டுக்குள் சீனா மற்றும் பாகிஸ்தானிய ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்து வருகின்றனர். எந்த நேரத்திலும் எதுவும் நிகழலாம். இன்று நமது எல்லைகள் பாதுகாப்புடன் இல்லை. விழிப்புணர்வுடனும் முழுத் தயாரிப்புடனும் செயல்பட வேண்டிய காலம் இது.
ஆயிரக்கணக்கான கி.மீ. நீளமுள்ள எல்லைக் கோட்டை நாம், பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், சீனா, பர்மா, வங்கதேசம் ஆகியவற்றுடன் பகிர்ந்து கொள்கிறோம். பாகிஸ்தான் ராணுவத்தினர், நமது ஜம்மு - காஷ்மீர் மாநில எல்லைக்குள் அன்றாடம் புகுந்து அராஜகம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் கலாசார சிறப்புடன் கூடிய நட்புறவு நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. சமீபத்திய தேர்தலுக்கு முன்பும் பின்பும் மாவோயிஸ்டுகளின் பேச்சும் செயலும் இந்தியாவுக்குச் சாதகமானதாக இல்லை. இந்தியாவையும் இந்திய நலன்களையும் மாவோயிஸ்டுகளின் தலைவராகிய பிரசண்டா தாக்கி வருகிறார்.
இந்திய - சீன எல்லைக்கோடு 4,056 கி.மீ. நீளம் கொண்டது. இரு நாடுகளும் "லைன் ஆப் ஆக்சுவல் கண்ட்ரோல்' பற்றி இறுதி வடிவம் கொடுக்கப் பல அமர்வுகளாகப் பேச்சு நடத்தி வருகின்றன. "அக்ஷய் சீன்' என்று அழைக்கப்படும் 38,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை 1962-ஆம் ஆண்டு சீனா கையகப்படுத்திக் கொண்டுவிட்டது. காஷ்மீரின் வடபகுதியை ஆக்கிரமித்த பாகிஸ்தான், அதில் 5,180 சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதியை சீனாவுக்குத் தாரைவார்த்துக் கொடுத்தது. அக்ஷய் சீன் பகுதியையும் திபெத்தையும் இணைத்து சாலைப் போக்குவரத்து மேற்கொண்டுவிட்டது.
கடந்த ஆண்டு மட்டும் சீன ராணுவத்தினர் அருணாசலப் பிரதேசத்துக்குள் 270 முறை ஊருவியுள்ளனர். எல்லையோரம் வாழும் மக்கள் தங்கள் ஆடு, மாடுகளை எல்லைப்பகுதியில் மேய்ப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
அருணாசலப் பிரதேச எல்லையை ஒட்டிய இந்தியப் பகுதிக்குள் ஒரு புத்தர் ஆலயம் இருந்தது. உள்ளூர் மக்கள் புத்தரைத் தரிசித்து வழிபாடு நடத்தி வந்தனர். சமீபத்தில் அந்த புத்தர் சிலையை அகற்றியாக வேண்டும் என்று சீனக் கமாண்டர் கூறினார். ""புத்தர் சிலை இந்திய எல்லைக்குள் உள்ளது. அதை அகற்றும் பேச்சுக்கே இடமில்லை'' என்று நமது ராணுவத்தினர் கூறியுள்ளனர். சீனர்கள் இந்திய எல்லைக்குள் புகுந்து புத்தர் சிலையை வெடிவைத்துத் தகர்த்து விட்டனர். பிரதமர் மன்மோகன் சிங்கின் அருணாசலப் பிரதேச வருகையை சீனா எதிர்த்துள்ளது.
சீனர்கள் தங்களது வளர்ந்துவரும் பொருளாதார வலிமையை ராணுவ பலமாக மாற்றி வருகின்றனர். நிலம், கடல், வான்வழி தாக்கும் தளங்களை சீனா அமைத்து வருகிறது.
இந்தியா தம் பக்கத்து நாடுகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைப் புரிந்து கொள்ள வேண்டும். துரிதமாகச் செயல்படக்கூடிய எல்லையோரத் தயாரிப்புகள் இருக்க வேண்டும். அத்துமீறல்களை அடியோடு நிறுத்தும் ஆற்றல் வேண்டும். எல்லையோரத்துப் பதற்றங்களைத் தடுக்கவும், நிறுத்தவும், பதிலடி கொடுக்கவும் இந்திய அரசுக்கு ஒரு ஸ்ட்ராடிஜி தேவை. யுத்த தந்திரங்களும் உபாயங்களும் மிகவும் முக்கியமானவை. பலம் வாய்ந்த ராணுவம், நவீன போர் தளவாடங்கள், கருவிகள் அவற்றை உபயோகப்படுத்தும் பயிற்சிகள் அனைத்தும் தேவை.
இந்தியாவிடம் சுமார் 15 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். சுகோய் போர் விமானங்கள் விமானப்படைக்கு வந்துள்ளன. கப்பல் படையில் ஐசந ஜலேஷ்வா என்ற போர்க் கப்பல் சேர்க்கப்பட்டுள்ளது. அதே சமயம் சிக்கிம், அருணாசலப் பிரதேசம், பர்மா எல்லைப் பகுதிகளில் போக்குவரத்துக்கு உகந்த சாலைகள்கூட இல்லை. துரிதமான சாலைகள், ரயில், விமான வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.
நமது ராணுவத்தினருக்கு பல இடர்ப்பாடுகள் உள்ளன. அவர்களது சங்கடங்களைத் தீர்க்க வேண்டும். முப்படையிலும் அதிகாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. போர் விமானங்களில் பல பழசாகிப் போய்விட்டன. போர்க் கப்பல்களின் எண்ணிக்கையும் குறைவு. எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களுக்கு உகந்த தயாரிப்பு தேவை. புதிய தளவாடங்கள் வாங்குவதில் வெளிப்படையான திட்டமும் செயல்முறையும் இல்லை. ""தெஹல்கா'' மூலம் வெளியான ஊழல்களாலும் தவறான அணுகுமுறைகளாலும் புதிய முயற்சிகளில் தடுமாற்றம் தென்படுகிறது.
பாதுகாப்புத் தளவாடங்களை வாங்குவதிலும் மேலும் பல சிரமங்கள் உள்ளன. நாம் ஒரு "டாங்கு' வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்து தயாராகி வருவதற்குள் புதுப்புது யுக்திகளுடன் கூடிய அதி நவீன ரக டாங்குகள் வந்துவிடுகின்றன. விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சிகளைக் கவனத்தில் கொண்டு முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். பாதுகாப்புத் துறைக்குப் போதுமான நிதி ஒதுக்கீடும் அவசியம். நடப்பு ஆண்டில் 1,05,600 கோடி ரூபாயை இந்திய அரசு பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கியுள்ளது.
சீனாவும் பாகிஸ்தானும் அவர்களின் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கியதில் பாதி அளவுதான் இந்தியா ஒதுக்கீடு செய்துள்ளது.
இத்தகைய பல குறைபாடுகளுக்கு நடுவிலும் இந்திய ராணுவத்தினர் அடைந்து வரும் வெற்றிக்கு அவர்களது உறுதிமிக்க கட்டுப்பாடும், வீரம் செறிந்த தியாமும் தான் காரணம் என்பதை உலகம் அறியும்.
கார்கில் போரில் பெற்ற வெற்றி போற்றத்தக்கது. தொலைக்காட்சி மூலம் கார்கில் யுத்தத்தை உலகம் நேரடியாகப் பார்த்தது. பனிமலைச் சிகரங்களின் உச்சியில் இந்திய ராணுவத்தினர் தீரத்துடன் போரிட்டு வென்ற வீச சாகசங்களைப் பாராட்டாதவர்களே இருக்க முடியாது.
மலை உச்சியில் நடந்த சண்டைகளிலேயே "மாண்டே காஸினோ' யுத்தம்தான் உலகப் பிரசித்தி பெற்றது.
இரண்டாம் உலகப் பெரும் போரின்போது அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய யுத்தம் மாண்டே காஸினோ.
கார்கில் மலைச் சிகரங்களில் இந்திய ராணுவத்தினர் ஆற்றிய மயிர்க்கூச்செறியும் யுத்தம் மாண்டே காஸினோவையும் வென்றுவிட்டது என்று உலகின் ராணுவ நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.
எல்லையில் இந்திய வீரன் துப்பாக்கி ஏந்தி இரவு பகலாகக் கண்விழித்து, வெற்றி வேட்கையுடன் போரிடுகிறான். அவனது தியாகத்துக்கு இணையாக இந்திய அரசும் மக்களும் துணை நிற்க வேண்டும். முழுத் தயாரிப்பும் முதலீடும் செய்ய வேண்டும்.
(கட்டுரையாளர்: பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்).
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment