Friday, 20 June 2008

உலக வளங்கள் நோக்கி நீளுகின்ற சீனக்கரங்கள்

உலக வளங்கள் நோக்கி நீளுகின்ற சீனக்கரங்கள் குறித்த சிறிய பதிவொன்றை நேற்றுமுந்தினம் பதிந்திருந்தேன். இன்றய தினமணியிலும் இன்று வெளியான திண்ணையிலும் இதுகுறித்த மேலதிக புள்ளிவிபரங்க‌ளுடன் கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன.

இம்மாதிரியான விபரங்கள் சேரவேண்டியோரிடம் சேர்ந்து சரியான சமயத்தில் விழித்துக்கொள்வோம் என்று நம்புவோமாக. அதற்குமுன் இணைய வாசகர்கள் மத்தியிலும் இதுகுறித்த தகவல் பரிமாற்றங்களும் விவாதங்களும் ஏற்படவேண்டும் என்பது எனது ஆவல்.
**********************************************
Thursday June 19, 2008
சீனப்புலியும், ஆப்பிரிக்க ஆடுகளும்
நரேந்திரன்

"Quand la chine s'eveillera, le monde tremblera" (when China awakes, the world will tremble).
- Napoleon Bonaparte

கடந்த இருபது ஆண்டுகளில் சீனா பிரமிக்கத்தக்க வளர்ச்சி அடைந்திருக்கிறது. மனிதகுல வரலாறு இதுவரை கண்டிராத அளவிற்கு, மிகக் குறுகிய காலத்தில், ஏறக்குறைய 300 மில்லியன் சீனர்களை வறுமையிலிருந்து கரையேற்றி இருக்கிறது சீனா. ஒப்பீட்டளவில், ஐரோப்பியாவில் நிகழ்ந்த பெரும் தொழிற்புரட்சிக்குப் பின்னர், இதுபோன்ற முன்னேற்றம் காண ஐரோப்பிய நாடுகளுக்கு இரண்டு நூற்றாண்டுகள் பிடித்தன. அந்தவகையில் இது ஒரு மாபெரும் சாதனையே.

சீனப் பொருளாதாரம் உயர உயர, சீனர்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கேற்ற வகையில் அவர்களின் தேவைகளும் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. ஏறக்குறைய 1.3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட, உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒருபகுதி உடைய சீனா இன்றைக்கு உலகின் மிகப்பெரும் நுகர்வோர் சந்தையாக மாறிப்போயிருக்கிறது. அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவிற்கு இன்றைய சீனாவில் இயற்கை, மற்றும் கனிம வளங்கள் இல்லை.
சீனாவின் இன்றைய முன்னேற்றம் இதுபோலவே தொய்வில்லாமல் நிகழ்ந்தால், இன்றைக்கு $6500 டாலர்களாக இருக்கும் சீனர்களின் தனிநபர் வருமானம், இன்னும் இருபது ஆண்டுகளில் தென் கொரியாவின் தனி நபர் வருமானத்திற்கு நிகராக உயரும் சாத்தியங்கள் உண்டு. அவ்வாறு நிகழ்ந்தால், சீனாவின் அலுமினயம் மற்றும் இரும்பின் உபயோகம் இப்போது இருப்பதைப் விடவும் ஐந்து மடங்கு உயரும் எனக் கணக்கிட்டிருக்கிறார்கள். அத்துடன் நில்லாது, சீனாவின் எண்ணெய் உபயோகம் எட்டு மடங்காகவும், வெண்கலம் மற்றும் பிற உலோகங்களின் உபயோகம் ஒன்பது மடங்காகவும் உயரும். இன்றைக்கு சீனாவில் இருக்கும் இயற்கை வளங்களைக் கொண்டு அதனை சமாளிப்பது கடினம் என்பதால், சீன அரசாங்கம் அவ்வாறான உலோகங்கள் கிடைக்கும் ஏழை நாடுகளை, குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளைத் தனது பிடிக்குள் வைத்துக் கொள்ள முனைந்து கொண்டிருக்கின்றது.

வறண்டு கிடக்கும் மிகப்பெரிய ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனப்பகுதியில் 49 நாடுகள் இருக்கின்றன. உலகின் ஐந்தில் ஒருபகுதி நிலப்பரப்பு அந்தப்பகுதியில் இருக்கிறது. இருப்பினும் அந்தப் பகுதியின் மொத்தப் பொருளாதாரமும், அமெரிக்க ·புளோரிடா மாநிலத்தின் பொருளாதாரத்தை விடவும் மிகவும் சிறியது. ஏறக்குறைய 300-லிருந்து 400 மில்லியன் மக்கள் ஒவ்வொரு நாளும் $1 டாலருக்கும் குறைவான வருமானத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உலகின் மிகப்பெரிய சவக்குழியாக மாறிவிட்ட ஆப்பிரிக்கக் கண்டத்தில், 1960-ஆம் ஆண்டுகளை ஒப்பிடுகையில், ஏறக்குறைய இரண்டு மடங்கு ஐந்து வயதிற்கும் குறைவான குழந்தைகள் ஒவ்வொரு நாளும் நோயினால் மரித்துக் கொண்டிருக்கிறார்கள். உலக நாடுகள் இதுவரை அளித்துள்ள 500 பில்லியன் டாலர் உதவித்தொகை இக் கண்டத்தின் ஏழ்மையைச் சிறிதளவு குறைக்கவில்லை. தொடர்ச்சியான போர்களினாலும், எய்ட்ஸ் போன்ற நோய்களினாலும், உணவுப் பஞ்சங்களாலும் ஆப்ரிக்கா தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகமயமாக்கலினால் போட்டி அதிகரித்துக் கொண்டிருக்கின்ற இந்நாட்களில் ஆப்பிரிக்க நாடுகளின் பங்களிப்பு ஏறக்குறைய இல்லை என்றே கூறலாம்.
பணம், விவசாயம், முதலீடு, கட்டமைப்பு என்று எல்லாவிதத்திலும் பின் தங்கி இருக்கும் ஆப்பிரிக்க நாடுகள், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் திறனற்று இருக்கின்றன.

கடந்த கால காலனி ஆதிக்கம் அவர்களின் வளங்களைச் சுரண்டி ஒட்டாண்டிகளாக்கியது. இன்றைக்கு சீனா அதே செயலை மிகத் திட்டமிட்டு, திறனுடன் செய்து வருகிறது. உலகம் இதுவரை காணாத சுரண்டல் முறைகளைக் கையாண்டு ஆப்பிரிக்க நாடுகளை ஒட்டாண்டிகளாக்கும் சீனாவின் தந்திரங்கள் உலக நாடுகள் இதுவரை காணாத ஒன்று.
உலகின் மிக வலிமையான நாடாகிய அமெரிக்கா தனது சக்தியை இராக்கியச் சண்டையில் வீணாகச் செலவழித்துக் கொண்டிருக்கும் வேளையில், குறைந்து வரும் உலகின் இயற்கைச் செல்வங்கள் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில், அதுகுறித்து பொருளாதார வல்லுனர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகையில், கம்யூனிச சீனத் தலைமை உலகில் எந்தப்பகுதியிலும் கண்ணில் தட்டுப்படும் எந்த வித சந்தர்ப்பங்களையும் விடுவதாக இல்லை. துவங்கிய சில வருடங்களிலேயே, ஆப்பிரிக்காவில் முதலீடு செய்யும் மிகப்பெரிய நாடாக மாறியிருக்கிறது சீனா. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய மிகப்பெரும் "வணிக ஆக்கிரமிப்பு" இதுவே. உலகப் பொருளாதார வரைபடத்தினை மாற்றியமைக்க வல்லதாக ஆகியிருக்கின்றன சீனாவின் எதிர்கால நோக்கத்துடன் கூடிய அந்த முதலீடுகள். ஆப்பிரிக்காவின் பல பகுதிகள் இன்றைக்கு "சின்-ஆப்பிரிக்கா" என்றழைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நைஜீரியா, இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது அங்கு வாழ்ந்த பிரிட்டிஷ்காரர்களை விடவும் பலமடங்கு சீனர்கள் இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அங்கே. ஆப்பிரிக்க அரசுகளினால் நடத்தப்படும் தொழிற்சாலைகளிலில் துவங்கி, தனியார் தொழில் அமைப்புகள் வரை அனைத்து இடங்களிலும் சீனர்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏறக்குறைய 1 மில்லியன் சீனர்கள் நைஜீரியாவில் இருக்கிறார்கள். சீன அரசாங்கம் அறிவிக்கும் ஒவ்வொரு மெகா-தொழிற் திட்டத்தின்போதும் அதிர்வலைகள் நைஜீரியாவில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கூறுவதில் தவறில்லை.

பெய்ஜிங், 2006-ஆம் ஆண்டினை "ஆப்பிரிக்க வருடமாக (Year of Africa)" அறிவித்த பின் சீனத்தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆப்பிரிக்க நாடுகளுக்கு பிரயாணம் செய்தார்கள். அமெரிக்காவின் கனவான "ஜனநாயக இராக்" போர் போலல்லாது, சீனர்கள் தங்களின் நாட்டுப் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான மூலப் பொருட்களை சுரண்டுவதை மட்டுமே தங்களின் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இங்கே.

உலகின் ஆறு மிகப்பெரும் எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான "ராயல் டச் ஷெல்" நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வரிக்கை ஒன்று இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது. அடுத்த பத்து ஆண்டுகளில், உலக நாடுகள் பலவும் எரிபொருள், மற்றும் இயற்கைச் செல்வங்கள் (Natural Resources) கிடைக்கும் இடங்களைக் கைப்பற்ற முயலும் எனவும், அதன் காரணமாக உலகின் பல பகுதிகளில் போர்களும், சுற்றுச் சூழல் அழிப்பும் நடக்கும் என்கிறது அந்த ஆய்வறிக்கை. அம்மாதிரியான நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டுமெனில் உலக நாடுகள் பலவும் ஒன்று கூடி தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொள்வதனைத் தவிர நடக்கவிருக்கும் இப்பேரழிவிலிருந்து தப்ப வேறுவழியில்லை என்கிறது.

இப்போதைக்கு ஒன்றுமட்டும் உறுதி. இது பறக்கும் நேரம். சீனா அதனை மிகச் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறது. சீனாவின் உற்பத்தியில் 40% வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. அதில் பெரும்பகுதி அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே கூறியபடி, பெருமளவு அன்னிய செலாவனியினை ஈட்டித் தரும் அம்மாதிரியான ஏற்றுமதிகளுக்குத் தேவையான கச்சாப் பொருட்கள் சீனாவில் குறைந்து வருகிறது. எனவே தனது கவனத்தை உலகின் கனிம வளம் நிறைந்த, ஏழ்மையான ஆப்பிரிக்க நாடுகளை நோக்கித் திருப்பி இருக்கிறது சீனா.

இன்றைய நிலைமையில், மொசாம்பிக்கிலிருந்து மரமும், ஜாம்பியாவிலிருந்து வெண்கலமும், காங்கோவிலிருந்து பல்வேறுபட்ட கனிமங்களும், ஈக்குவெட்டாரியல் கினியாவிலிருந்து என்ணெயும் சீனாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. எதுவும் செய்ய இயலாத மேற்கத்திய நாடுகளின் முன், பணத்தில் மிதக்கும் சீன நிறுவனங்கள் வெகு வேகமாக அந்நாடுகளுடன் ஒப்பந்தங்களிட்டு தனக்குத் தேவையான எண்ணெய், மரம், இயற்கை எரிவாயு, ஸின்க், கோபல்ட், இரும்பு எனக் கண்ணில் தென்படும் அத்தனை கனிமங்களையும் வாயு வேகத்தில் கடத்திக் கொண்டிருக்கிறது.
2008-ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான நாட்கள் நெருங்க, நெருங்க, சீனா தனது வல்லமையை உலகிற்குக் காட்ட விழைகிறது. உண்மை, ஏறக்குறைய 300 மில்லியன் மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மிக வேகமாக உயர்த்திய சாதனையைச் செய்திருக்கிறது சீனா. அதே சமயம் சீனா உலகில் தயாராகும் போலிப் பொருட்களை (counterfeit products) தயாரிப்பதில் முன்னனியில் இருக்கிறது. அதேசமயம், ஆப்பிரிக்கா உலகின் போலிப்பொருட்களை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்குக் கடத்தும் வழித்தடமாக (transit point) மாறியிருக்கிறது. Transparency International's Bribe Payers Index -இன்படி உலகில் இந்தியாவிற்கு அடுத்தபடியாக "இலஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்கும் (Payola)" நாடுகளில் முதன்மையானதாக சீனா இடம்பிடித்து இருக்கிறது. உலக வங்கி ஏறக்குறைய 68 ஆப்பிரிக்க நாடுகளில் எடுத்த சர்வே ஒன்றின்படி ஏறக்குறைய 43% அரசாங்க ஒப்பந்தங்கள் "பரிசுகள்" மூலமே தீர்மானிக்கப்படுவதாக அறியப்படுகிறது.

ஒன்றுமட்டும் தெளிவு, உலக நாடுகளின் இயற்கை வளம் தீர்ந்து போகப்போகிறதோ இல்லையோ, சீனா அதனை உறுதியுடன் நம்பிச் செயல்படுவதாகத்தான் தெரிகிறது. அல்லது அதுபோல நடந்து கொள்கிறது. சீனாவின் இத்தகைய போக்கு உலக நாடுகளிடையே அச்சத்தைத் தோற்றுவிப்பதில் ஆச்சரியமில்லை. எனவே, உலகச் சுற்றுப்புறச் சூழல் மாசடைவது குறித்து யாரும் கவலை கொள்வதில்லை. சீனா எல்லாவற்றையும் அபகரிப்பதற்கும் முன் நாமும் சிறிதளவாவது அதனைக் கைப்பற்றி விடவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது இன்று.
இதனை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில், அமெரிக்காவின் இராக்கிய கைப்பற்றலும் இதற்கான ஒரு காரணமாக இருக்கக்கூடும். சதாம் தனது எண்ணெய்க் கிணறுகளை சீனா மற்றும் இந்தியாவிற்கு தாரை வார்க்குமுன் அவற்றை அபகரித்துக் கொள்வது அமெரிக்காவின் நோக்கமாக இருக்கலாம். "குளோபல் வார்மிங்" பாதிப்பின் பலனாக உலகின் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்குத் தேவையான உணவினை உற்பத்தி செய்வது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. உணவு தானிய விலைகள் சமீப காலங்களில் உயர்ந்து வருவது அதற்கான கட்டியமாக இருக்கக்கூடும். உலக நாடுகள் பலவும் அதுகுறித்தான கவலைகளை எழுப்பி வருகின்றன.

"சீனா விழிக்கையில் உலகம் அதிரும்" என்றார் ·பிரான்சின் நெப்போலியன் போனபார்ட்டெ. இன்று சீனா விழித்து எழுந்து கொண்டது மட்டுமல்லாமல், உலகையே தனது காலை உணாவாக மாற்றிக் கொண்டிருக்கின்றது. மிகக் குறைந்த காலகட்டத்தில் உலகின் மிகப்பெரிய மர நுகர்வாளராக (top consumer of timber) மாறியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் உலக உற்பத்தியில் 30% zinc, இரும்பு மற்றும் எ·கு 27%, அலுமினியம் 23%, வெண்கலம் 22%, மற்றும் ஈயம், தகரம், நிலக்கரி, பருத்தி, ரப்பர் என்று அத்தனை பொருட்களையும் விழுங்கிக் கொண்டிருக்கின்றது சீனா. ஒப்பீட்டளவில், ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் உபயோகிக்கும் எ·கின் அளவு, சீனா உபயோகிக்கும் எ·கில் இருபதில் ஒருபகுதி மட்டுமே. அத்துடனில்லாது உலகின் இரண்டாவது எண்ணெய் நுகர்வாளராக, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மாறிக்கொண்டிருக்கிறது.

முன்பே குறிப்பிட்டபடி, ஆப்பிரிக்காவில் சீனர்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி இருக்கிறார்கள். மொசாம்பிக்கின் மழைக் காடுகளை அழித்துக் கொண்டு, சூடானில் புதிய எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டிக் கொண்டு, ஜாம்பியாவில் வெண்கலச் சுரங்கங்களை அமைத்துக் கொண்டு, அங்கோலாவில் சாலைகளை அமைத்துக் கொண்டு என எங்கும் எதிலும் சீனர்களே.

நைஜீரியாவிலிருந்து சாட்டிலைட்டுகளை விண்ணுக்கு அனுப்பி இருக்கிறது சீனா. கானா மற்றும் சுற்றுப்புற நாடுகளில் தொலைத் தொடர்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மருத்துவ மனைகள், தண்ணீர் குழாய்கள் அமைத்தல், அணைகள், இரயில்கள், விமான நிலையங்கள், ஹோட்டல்கள், கால்பந்து மைதானங்கள், பார்லிமெண்ட் கட்டிடங்கள் என ஆப்பிரிக்க நாடுகள் அனைத்திலும் சீனாவின் கைவண்ணமே மிளிர்ந்து கொண்டிருக்கின்றது.

பில்லியன் கணக்கிலான டாலர்களை நிதி உதவியாக ஆப்பிரிக்க நாடுகள் சீனாவிடமிருந்து பெற்றிருக்கின்றன. எந்தவொரு சமயத்திலும் ஏறக்குறைய 800 சீன அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்கள் ஆப்பிரிக்காவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனம் ஏறக்குறைய 36 ஆப்பிரிக்க நாடுகளில் 300க்கும் மேற்பட்ட திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது இன்று. ஆயிரக்கணக்கான தனியார் சீன நிறுவனங்களும் அங்கே கால் பதித்திருக்கின்றன.

சின்னஞ் சிறிய ஆப்பிரிக்க நாடான லெசாத்தோவில் ஏறக்குறைய பாதிக்கும் மேற்பட்ட சூப்பர் மார்கெட்டுகள் சீனர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. சீனத் தொழிற்சாலைகள் நிறைந்த மொரீஷியசில், சீன மொழி பள்ளிப்பாடமாக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. ஆப்பிரிக்காவிற்கு அளிக்கப்பட்ட சீன உதவித்தொகையானது உலக வங்கியின் உதவித்தொகையை விடவும் அதிகமாகி இருக்கிறது.
உலகின் பல பாகங்களில் காணப்படும் இயற்கை வளம் ஏறக்குறைய தீர்ந்து போன நிலையில், ஆப்பிரிக்கா மட்டுமே இன்னும் வளங்களைத் தன்னகத்தே கொண்டதாக விளங்குகிறது. எனவே ஆப்பிரிக்க நாடுகளின் மீது சீனாவின் கண் பதிந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. உலகின் 90 சதவீத கோபால்ட்டும், 90 சதவீத பிளாட்டினமும், ஐம்பது சதவீத தங்கமும், 98 சதவீத குரோமியமும், 64 சதவீத மாங்கனீசும், உலகின் மூன்றிலொரு பங்கு யுரேனியமும் ஆப்பிரிக்காவில் இருக்கிறது. உலகின் மிகத் தூய்மையான மழைக்காடுகள் பலவும் ஆப்பிரிக்காவில் இருக்கின்றன. வைரங்களும், வட அமெரிக்காவை விட அதிகமான எண்ணெய் வளமும் ஆப்பிரிக்காவிற்கு உரித்தானது. ஏறக்குறைய 40% நீர் மின் நிலையங்கள் அமைப்பதற்கான நீர்வளமும் அங்கு உண்டு. சீனாவிற்குத் தேவையான எண்ணெயில் மூன்றில் ஒருபகுதி ஆப்பிரிக்காவிலிருந்தே செல்கிறது இன்று.

சீனாவின் இந்த அதிரடியான செயல்களைக் கண்டு செய்வதறியாது திகைத்து நிற்கின்றன மேற்கத்திய நாடுகள். சீன அரசாங்கத்தைத் தட்டிக் கேட்கும் துணிச்சல் அவர்களில் ஒருவருக்கும் இல்லை. அமெரிக்கா உட்பட.

**

சீனாவின் முன்னர் இந்தியாவின் நிலைமை பரிதாபகரமாக மாறியிருக்கிறது. இந்தியாவைச் சுற்றி நான்கு புறங்களிலும் நெருக்கடியை அதிகரித்திருக்கிறது சீனா. நேபாளத்தில் எந்தவித எதிர்ப்புமில்லாமல் மாவோயிஸ்ட்டுகளை வெற்றிகரமாக ஆட்சியில் அமர்த்தி இருக்கிறது எல்லைப்புற மாநிலங்களான பீஹார் மற்றும் சட்டீஸ்கர் நக்ஸலைட்டுகளின் அட்டகாசங்கள் இனி அதிகரிக்கும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

சீனாவின் பழைய கூட்டாளியான பாகிஸ்தான் மேற்குப்பகுதியிலும், பர்மா, பங்களாதேஷ் போன்ற சீன அடிப்பொடி நாடுகள் கிழக்குப்பகுதியிலும் இருக்கின்றன. தெற்கில் இலங்கை அரசாங்கம் புலிகளை அழிப்பது என்ற போர்வையில் பாகிஸ்தானிடமிருந்தும், சீனாவிடமிருந்தும் ஆயுதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றது. சரியான சமயத்தி சீனாவுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவின் கால்களை வாரிவிடத் தயங்காது இலங்கை அரசாங்கம். இந்திய-பாகிஸ்தான் போரின்போது தனது துறைமுகங்களையும், விமான தளங்களையும் பாகிஸ்தானின் உபயோகத்திற்குத் திறந்து விட்ட பெரும் பேறு அந்நாட்டிற்கு உண்டு என்பது வரலாறு.

காலத்திற்கு உதவாத, பிற்போக்குத் தனமான கம்யூனிச கந்தல் சட்டையைக் கழற்றி எரிந்து விட்டு முன்னேற்றப் பாதையில் சீனா சென்று கொண்டிருக்கும் இந்நேரத்தில், இந்திய கம்யூனிஸ்ட்டுகள் ஏறக்குறைய கோமாளிகளாக மாறியிருக்கிறார்கள். அமெரிக்க இந்திய அணு ஒப்பந்தத்திற்கு தேவையற்ற முட்டுக்கட்டைகள் இட்டுக் கொண்டிருப்பதன் மூலம். பாதகங்கள் சில இருந்தாலும், சாதகங்கள் அதிகம் இருக்கும் இந்த அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறுவது எதிர்கால இந்தியாவிற்கு மிகவும் அவசியம். இல்லாவிட்டால் சீனாவின் காலனி நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறிவிடும் அபாயம் இருக்கிறது. நமது 'காம்ரேட்கள்' இதனை உணருவார்கள் என்று நம்புவோம்.

narenthiranps@yahoo.com
Copyright:thinnai.com 

1 comment:

¸ñ½ý ÌõÀ§¸¡½õ said...

'காம்ரேடுகளி'ன் விருப்பமே அதுதானே. இந்த துரோகம் அவர்களின் பிறவி குணம். ஆனால் இதை அவர்கள், "சுரண்டலற்ற சமுதாயத்திற்கான புரட்சி" என்று சொல்லிக்கொள்வார்கள். Like Pan islam this is Pan Marxism or International communism.

நமது காம்ரேடுகள்
உடன் பிறந்தே கொல்லும் வியாதி

கண்ணன் கும்பகோணம்