Tuesday, 22 January 2008

இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை குறித்து திண்ணைக்கட்டுரை


Thursday January 17, 2008
இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை - வி எஸ் நைபாலை முன் வைத்து
சேதுபதி அருணாசலம்


புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்கள், இந்தியாவுக்கு வந்தவுடன் முதலில் குறையாகச் கொள்வது பெரும்பாலும் இந்தியாவின் சுகாதாரமின்மை, மாசுக் கலப்பு, திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இவற்றைப் பற்றிதான். உண்மைதான் என்றாலும், இந்தக் குப்பைகளுடனே வாழ்ந்து அந்த பிரக்ஞையே இல்லாமற் போய்விட்ட நிலையில் நமக்குக் கேட்பதற்குக் கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட எண்ணம்தான் வி.எஸ்.நைபால் இந்தியாவைப் பற்றிய தன் எண்ணங்களைக் கூறும் இந்தக் கட்டுரையை மேலோட்டமாகப் படித்தபோது எனக்கு எழுந்தது. 'என்ன இவர், இந்தியா பெரும் வலியளிப்பதாக இருக்கிறது.. என் மனக் கனவுகளைத் தகர்த்து விட்டது என்றெல்லாம் புலம்புகிறார்.. இவரென்ன இந்தியாவைப் பற்றி கூறுவது? பிறந்து வளர்ந்ததெல்லாம் வெளிநாட்டில். சும்மா இங்கே சுற்றுப்பயணம் செய்ய வந்துவிட்டு ஒரே குறையாகச் சொல்கிறாரே' என்றுதான் எனக்கும் எரிச்சல் வந்தது.

ஆனால் மேலும் ஆழமாகப் படிக்கையில் தற்போது இந்தியாவில் வெளிப்படையாகக் காணப்படும் சில விஷயங்களைத்தான் நைபால் சாடுகிறார் என்பது எனக்குப் புரிந்தது.

நான் புரிந்து கொண்ட அந்த விஷயங்கள்:

1) ஸ்பானியப் படையெடுப்பகளில் மெக்ஸிக, பெரு கலாச்சாரங்கள் அழிந்தொழிந்தது போல், இந்தியா என்ற நீண்ட தொன்மையான பாரம்பரியம் கொண்ட நாட்டின் கலாச்சாரம் இஸ்லாமியப் படையெடுப்பகளில் சிதைந்து அழிந்தது. ஆனால் அப்படி ஒரு கலாச்சாரம் அழிந்ததன் மன வருத்தமோ, அதைப் பற்றிய பிரக்ஞையோ, ஒரு வரலாற்றுணர்வோ இன்றைய இந்தியர்களிடம் கிடையாது.


2) சுதந்திரப் போராட்ட இயக்கம் அறுநூறு வருடங்களாக நடந்த பேரழிவைப் பற்றிய கவனத்தை திசை திருப்பியது. சுதந்திரம் பெற்ற பின்னரும் இந்திய அரசியல் எண்ணங்களின் கற்பனை மயக்கங்களும், அலட்சியமும் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து மீண்ட இந்தியாவில் தன் பாரம்பரியத்தைப் பற்றிய பிரக்ஞையோ, பெருமிதமோ இல்லாத ஒடுக்கமான சமுதாயத்தைத்தான் உருவாக்கின.


'இஸ்லாமியப் படையெடுப்புகளுக்கு முந்தைய இந்தியா' - இப்படி ஒரு விஷயத்தைப் பற்றி இன்று நம்மால் 'இந்தியா'வில் ஒரு மத அடிப்படையாளர் என்று தூற்றப்படாமல் தைரியமாகப் பெருமிதத்துடன் பேச முடியுமா? இந்தியக் கலாச்சாரம், பூர்வகுடி மக்களின் நம்பிக்கைகள் பற்றியெல்லாம் பேசுவதே ஒரு பாவம் என்ற பிம்பத்தை போலி மதச்சார்பின்மையும், அரசியல் உள்நோக்கங்கள் கொண்ட ஊடகங்களும் இன்று நம்மிடையே ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த அளவுக்கு நம்முடைய சுய கெளரவம் செத்துப் போயிருக்கிறது. நைபால் சொல்வதைப் போல, பூர்வகுடி மக்களுக்கிருந்த தன்னம்பிக்கையும், பெருமிதமும் நமக்கு இன்று இல்லை. இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள் அழித்து மிச்சம் வைத்த கட்டுமானங்களையும், நம்பிக்கைகளையும் இன்றைய அரசியல், ஊடக சூழல்கள் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. மறைமுகமாக நம் கலாச்சாரம் மீது நமக்கே ஒரு வெறுப்புணர்வு தோன்றுமளவுக்கு இந்த அறிவுஜீவிகள் மாற்றியிருக்கிறார்கள். இதைப் பற்றியெல்லாம் வெளிப்படையாகப் பேசுவதே நம் 'இறையாண்மை'க்கு ஆபத்தான விஷயங்கள் என்ற உணர்வும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் 'இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்' என்று சொல்லலாம், பல நூறாண்டுகால நம்பிக்கைகளை காலில் போட்டு மிதிக்கலாம் நமக்கு வலிக்காது. எந்த பிரக்ஞையுமில்லாமல் கேட்டுக் கொண்டுதானிருப்போம். இவையெல்லாம், மாசுக் கலப்பு, திறந்தவெளிக் கழிப்பிடங்கள் போன்று நம் இருத்தலில் இரண்டறக் கலந்துவிட்ட விஷயங்கள். யாரோ ஒரு வெளிநாட்டுக்காரர் வந்து பார்த்து விட்டு வருத்தப்படப் போகிறார். அவ்வளவுதானே?


இந்தக் கட்டுரையில் என்னை ஆச்சரியப்படுத்தியிருக்கும் விஷயம் தன் படைப்புக்கான ஒரு இலக்கிய வடிவத்தைத் தேர்ந்தெடுக்க நைபால் எடுத்துக்கொள்ளும் சிரத்தை. ஒரு புதினம் எழுத இவ்வளவா யோசிப்பார்கள் என்று எண்ண வைக்கிறார். தனக்குத் தெரிந்த எல்லா விஷயங்களையும் எப்படியாவது புதின வடிவில் சொல்லி விடவேண்டும் என்று பிரயத்தனப்படுபவர்கள் இருக்கும் நம் நாட்டில், 'வரலாற்றுப் பிரக்ஞை இல்லாத இந்தியாவில் புதின வடிவில் மிக மேலோட்டமான விஷயங்களையே சொல்ல முடியும்' என்று அடித்துக் கூறுகிறார். மிகத் தொன்மையான கோயில்களையே ஒழுங்காகப் பாதுகாத்துப் பராமரிக்கத்தெரியாத நம்மிடம் ஒரு புதினத்தைப் படிப்பதற்கெல்லாம் வரலாற்றுப் பிரக்ஞையை எதிர்பார்ப்பது நல்ல வேடிக்கைதான்!
எழுதுவதும், படிப்பதும் - ஒரு சுய விவரிப்பு - வி.எஸ்.நைபால் கட்டுரையின் எழாம், எட்டாம் பகுதிகள்


[Seventh and Eigth parts of ‘Reading and Writing - A personal account’. An essay by V.S.Naipaul]


எனக்கு இந்தியா பெரும் மனக்காயம் அளித்தது. இந்தியா ஒரு போற்றிப் புகழப்பட்ட நாயகமான நாடு. அதே நாட்டின் பெரும் வறுமையிலிருந்துதான் என் முன்னோர்கள் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் தப்பித்து வெளியே ஓட வேண்டியிருந்தது. இந்த இரண்டு இந்தியாக்களும் வெவ்வேறாக இருந்தன. சுதந்திர இயக்கத்தைக் கொண்ட அரசியல் ரீதியான இந்தியா பெருமிதமளிக்கும் பெயர்களால் புகழாரம் செய்யப்பட்டிருந்தது. தனிப்பட்ட வாழ்க்கையுடன் தொடர்புடைய இன்னொரு இந்தியா வெளியுலகிலிருந்து ஒளிக்கப்பட்டிருந்தது; நினைவுகள் மங்கியபோது மறைந்தும்போனது. அந்த இந்தியாவைப் பற்றி நாம் படித்துத் தெரிந்து கொள்வது சாத்தியமில்லை. அது கிப்லிங்கோ, E.M.ஃபார்ஸ்டரோ அல்லது சாம்செட் மாமோ எழுதிய இந்தியா இல்லை. அந்த இந்தியா நேரு, தாகூர் போன்றவர்களால் அறியப்பட்ட வசீகரமான இந்தியாவிலிருந்து வெகு தொலைவிலிருந்தது. (பிரேம்சந்த் [1880-1936] என்றொரு எழுத்தாளர் இருந்தார். அவருடைய எழுத்துகள் நிஜமான கடந்தகால இந்திய கிராம வாழ்க்கையைக் காட்டியிருக்கும். ஆனால் நாம் மனிதர்களைப் பற்றி அப்படிப் படித்துத் தெரிந்து கொள்வர்களாயிருக்கவில்லை).


நேரம் வந்தபோது இந்த தனிப்பட்ட வாழ்க்கையுடன் தொடர்புடைய இந்தியாவுக்குதான் நான் சென்றேன்; பெருமிதமளிக்கும் பெயர்களால் புகழாரம் செய்யப்பட்ட இந்தியாவுக்கில்லை. ஆனால் இந்தியாவில் நான் பார்க்க நேர்ந்த அலட்சிய மனோபாவத்துக்கு (dereliction) எதுவும் என்னைத் தயார்படுத்தியிருக்கவில்லை. எனக்குத் தெரிந்த வேறெந்த நாடும் அத்தனை இழிநிலைகளின் (wretchedness) அடுக்குகளைத் தன்னகத்தே கொண்டதாயிருக்கவில்லை. எனக்குத் தெரிந்திருந்த நாடுகளில் சில நாடுகளே இந்தியாவுடன் ஒப்பிடும் அளவுக்கு மக்கள் அடர்த்தியைக் கொண்டதாயிருந்தன. உலகின் மற்ற பகுதிகளிலிருந்து தனித்து, ஒரு மர்மமான பேரழிவைச் சந்தித்த ஒரு கண்டத்திலிருப்பதைப் போல் இந்தியாவுக்குச் சென்றபோது நான் உணர்ந்தேன். ஆனால், நானறிந்த நவீன இந்திய, ஆங்கிலப் படைப்பு ஒன்றில் கூட, இந்தப் பேரழிவு ஒரு கருப்பொருளாக, முன்னணியில் இருந்திருக்கவில்லை என்ற விஷயம் எனக்கு மிகுந்த ஆச்சரியமளிப்பதாக இருந்தது. கிப்லிங் எழுதிய ஒரு ஆங்கிலக் காதல் கதையில் பின்னணியில் இந்தியாவின் பஞ்சம் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் பொதுவாகவே இந்திய, ஆங்கிலப் படைப்புகளில் இந்தியாவின் மிகப்பெரும் துன்பம் பின்னணியில் படிக்கப்படவேண்டிய ஒரு விஷயமாகவே கண்டுகொள்ளப்பட்டது. மேலும், எப்போதும் போலவே, இந்த இந்தியத் துன்பத்தில் ஒருவித சிறப்பான ஆன்மிகத் தன்மையைக் கண்டுகொள்பவர்களும் இருந்தார்கள்.


காந்தியின் சுயசரிதையான சத்தியசோதனையில்தான், தென்னாப்பிரிக்காவிலிருந்த பாதுகாப்பில்லாத இந்தியத் தொழிலாளர்களின் இழிநிலையைச் சொல்லும் பகுதிகளில், நேரடியாக இல்லாமல் மிகக்குறைந்த நேரம், இந்தியாவில் நானடைந்த மழுங்காத மனக்காயத்தின் வலி சொல்லப்பட்டிருப்பதைக் கண்டேன்.


அதன்பின் என் இந்தியப்பார்வையில் ஒரு புத்தகத்தை எழுதினேன். ஆனால், என் மனக்காயத்திலிருந்து என்னால் விடுபடமுடியவில்லை. பல்வேறு மனநிலைகளில் நிறைய எழுதியபின்புதான், தன் கடந்தகாலம் பற்றிய இந்தியாவின் உதாசீன மனப்பாங்கு மீதான என் மனவேதனையைத் தாண்டி என்னால் சிந்திக்க முடிந்தது. இந்தியாவின் கடந்தகாலம் பற்றிய இந்திய அரசியல் கொள்கைகளின் சார்புகளும், மனமயக்கங்களும் தந்த மனக்காயத்திலிருந்து விடுபட நேரம் பிடித்தது. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிரான சுதந்திரப் போராட்டம், பிரிட்டிஷ் வருகைக்கு முன்னால் இந்தியா சந்தித்த பேரழிவுகளை மறைத்து விட்டது. பேரழிவுகள் நடந்ததற்கான சாட்சியங்கள் மிக எளிதாக எல்லா இடங்களிலும் இருக்கின்றன. ஆனால் சுதந்திர இயக்கம் ஒரு மதம் போன்றிருந்தது; தான் பார்க்க விரும்பாத விஷயங்களை அது பார்க்கவில்லை.
கி.பி.1000-ஆம் ஆண்டுக்குப் பின், அறுநூறு வருடங்களுக்கும் மேலாக முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியத் துணைக்கண்டத்தைத் தன் இஷ்டம் போல் கொள்ளையடித்தார்கள்; பேரரசுகளையும், அரசாங்கங்களையும் ஏற்படுத்தினார்கள்; தங்களுக்குள்ளேயும் சண்டை போட்டுக்கொண்டார்கள். அவர்கள் வட இந்தியாவின் உள்நாட்டு மதங்களின் கோயில்களை அழித்தார்கள். தெற்கேயும் வெகுதூரம் பரவி கோயில்களை அழித்து அசிங்கப்படுத்தினார்கள்.


இருபதாம் நூற்றாண்டின் இந்திய தேசியத்துக்கு அந்த நூற்றாண்டுகளின் தோல்வி சங்கடம் அளிப்பதாக இருந்தது. வரலாறு திருத்தப்பட்டது. பிரிட்டிஷ் வருகைக்கு முன்பிருந்த ஆட்சியாளர்களும் - ஆட்சி செய்யப்பட்டவர்களும், நாட்டைக் கையகப்படுத்தியவர்களும் - அடிமைப்பட்டவர்களும், ஒரு மதத்தின் நம்பிக்கையாளர்களும் - அதில் நம்பிக்கையில்லாதவர்களும், ஒன்றாக ஒரே அணியில் சேர்ந்தனர். பெரும்பலம் பொருந்திய பிரிட்டிஷ் அடக்குமுறை முன்னால் அப்படி இணைந்தது ஒரு விதத்தில் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றாக இருந்தது. இருந்தாலும் பிரிட்டிஷ் வருகைக்கு முன்பான இந்தியாவின் தன்னிறைவான பூரணத்துவத்தைப் (wholeness) பிரகடனப்படுத்த இந்திய தேசிய எழுத்தாளர்கள், முஸ்லிம்களின் வருகைக்கு முன்னாலிருந்த ஐந்தாம், ஏழாம் நூற்றாண்டு இந்தியாவைப் பற்றிதான் எழுத வேண்டியிருந்தது. அந்த நூற்றாண்டுகளில் இந்தியா சிலருக்கு உலகின் மையமாக இருந்தது. சீனாவைச் சேர்ந்த புத்த மாணவர்கள் இந்தியாவின் புத்த கல்வி மையங்களுக்கு புனிதப் பயணமாக வந்தார்கள்.


14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, மொராக்கோவின் இஸ்லாமிய இறையியல் அறிஞரும், உலகப் பயணியுமான இபின் படுடா(Ibn Battuta) இந்த இந்திய பூரணத்துவத்துடன் எளிதாகப் பொருந்தவில்லை. இபின் படுடா உலகிலிருந்த அனைத்து முஸ்லிம் நாடுகளுக்கும் செல்ல ஆசைப்பட்டார். எங்கெல்லாம் அவர் சென்றாரோ அங்கு முஸ்லிம் மன்னர்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டு பதிலுக்குத் தன் தூய்மையான அரேபிய விசுவாசத்தைக் கொடுத்தார்.


முஸ்லிம்கள் கைப்பற்றிய நாடென்ற வகையில் இந்தியாவுக்கும் அவர் வருகை தந்தார். அவருக்கு ஐந்து கிராமங்களின் வருமானங்கள் (அல்லது தானியங்கள்) மானியமாகக் கொடுக்கப்பட்டன. பஞ்ச காலமாக இருந்தபோதும் மேலும் இரண்டு கிராமங்கள் அவருக்கு வழங்கப்பட்டன. மொத்தம் ஏழு வருடங்கள் அவர் இந்தியாவில் தங்கியிருந்தார். ஆனால், இறுதியில் அவர் தப்பித்துதான் ஓட வேண்டியிருந்தது. இபின் படுடாவின் புரவலர், தில்லி முஸ்லிம் பேரரசருக்கு ரத்தம், தினசரி மரணதண்டனை (மற்றும் சித்திரவதை) இதிலெல்லாம் பெரும் விருப்பமிருந்தது. தன் அவையினர் முன்னால் தண்டனையை நிறைவேற்றி மூன்று நாட்களுக்கு மனித உடல்களை அவையிலேயே விட்டுவைத்திருந்தார். இபின் படுடா உலகெங்குமிருந்த முஸ்லிம் கொடுங்கோலர்களைப் பற்றியும், அவர்கள் செய்கைகளைப் பற்றியும் அறிந்திருந்தாலும் அவருக்கே பயமேற்பட்டுவிட்டது. அவரைக் கண்காணிப்பதற்காக நான்கு காவலர்கள் நியமிக்கப்பட்டபோது தன் முறை வந்துவிட்டது என்று அவருக்குத் தெரிந்துவிட்டது. ஏற்கனவே அவர் பேரரசரை பல்வேறு பொருட்களை வேண்டி நச்சரித்துக் கொண்டிருந்தார். தனக்களிக்கப்படும் பரிசுப்பொருட்களை அவர் பெற்றுக்கொள்வதற்கு முன்னரே அரசு அலுவலர்கள் உருவிக்கொண்டுவிடுகிறார்கள் என்றெல்லாம் பாதுஷாவிடம் புகார் செய்து கொண்டிருந்தார். தற்போது, கொடுங்கோலரசர் மீதான பயத்தின் உத்வேகத்தில் உலக ஆசைகளைத் துறந்து நோன்பிருப்பதாகப் பிரகடனப் படுத்திக்கொண்டார்; ஐந்து நாட்கள் ஆகாரமின்றி விரதமிருந்து குர்-ஆனைப் படித்தார்; அடுத்த முறை அரசரை சந்தித்தபோது ஒரு யாசகரைப் போல் உடையணிந்திருந்தார். இபின் படுடாவின் கோலம் பாதுஷாவின் பாறை இதயத்தையும் இளக்கியது; உயரிய எண்ணங்களை நினைவூட்டியது. இபின் படுடா திரும்பிப்போக அனுமதிக்கப்பட்டார்.
இபின் படுடாவின் குறிப்புகளில் உள்ளூர் பூர்வகுடி மக்களைப் பற்றி ஏனோதானோவென்று ஒரு ஒப்புக்குதான் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவர்களெல்லாம் கிராமங்களிலிருந்த பண்ணையாட்களாகவோ (அரசர்கள் சொத்தான இவர்கள் இபின் படுடாவுக்குக் கொடுக்கப்பட்ட மானியங்களின் ஒரு பகுதி) அல்லது சாதாரண அடிமைகளாகவோ இருந்தனர். (இபின் படுடாவுக்கு அடிமைப் பெண்களுடன் பயணிப்பதில் விருப்பமிருந்தது). அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் (மத)நம்பிக்கைகள் தொன்மையானவை. ஆனால் ஒரு முஸ்லிம் இறையியல் அறிஞருக்கு அவற்றில் ஆர்வமிருந்திருக்கவில்லை. தில்லியில் அம்மக்களின் நாயகர்கள் தூக்கியெறியப்பட்டிருந்தார்கள். அந்த நாடு அம்மக்களுக்கு சொந்தமானதாக அதற்கு மேலும் இருந்திருக்கவில்லை. ஒரு வெளிநாட்டு அரசருக்கு அந்நாடு புனிதமானதென்றெல்லாம் தோன்றவில்லை.


தங்கள் கலாச்சாரம் மீதான இந்தியர்களின் உதாசீனம் மிகுந்த மனோபாவத்தின் தொடக்கத்தை இபின் படுடாவின் குறிப்புகளில் காண முடிகிறது. பதினேழாம் நூற்றாண்டின் பயணிகளான தாமஸ் ரோ, பெர்னியர் ஆகியோருக்கு மொகலாயப் பேரரசர்களின் அரண்மனைகளுக்கருகே, குடிசைகளில் வாழ்ந்த மக்களின் இழிநிலை, அரசாள்பவர்களின் படோபடத்தைப் பார்த்து பரிகசிப்பது போலிருந்தது. 1858, 1859-ஆம் வருடங்களில் இந்தியக் கலகத்தைப் பற்றி ‘தி டைம்ஸ்’ பத்திரிகைக்கு தகவல் சேகரித்து, கல்கத்தாவிலிருந்து பஞ்சாபுக்கு மெதுவாகப் பயணித்த வில்லியம் ஹோவார்ட் ரஸ்ஸல் (William Howard Russel) இந்தியா எங்கெங்கும் பழைய இடிபாடுகளில் இருந்தது என்று குறிப்பிடுகிறார். “அரைப் பட்டினியாக இருந்த (குழிவிழுந்த தொடையுடனிருந்த - “Hallow-thighed”) பொதுமக்கள் தம்போக்கில் அடிமைப்பாங்கான வேலைகளைச் செய்து கொண்டு, முந்தைய ஆட்சியாளர்களுக்கு சேவகம் செய்தது போலவே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும் சேவகம் செய்து வந்தார்கள்” என்றும் குறிப்பிடுகிறார்.
என் சிறுவயதில் சரியான வார்த்தை தெரியாவிட்டாலும் இந்தியாவின் ‘பூரணத்துவம்’ (wholeness) என்ற விஷயத்தில் எனக்கு நம்பிக்கை இருந்தது. ராம்லீலாவும், எங்களுடைய மதச் சடங்குகளும் அந்த பூரணத்துவத்தின் ஒரு பகுதியாக இருந்தன. அந்த பூரணத்துவத்தை நாங்கள் இந்தியாவில் விட்டுவிட்டு வந்திருந்தோம். பல ஆண்டுகள் கழித்து இந்தியப் பயணத்தில் எனக்குக் கிடைத்த ‘கடந்த காலத்தைப் பற்றிய கருத்து’, அந்த மயக்கத்தை உடைத்தெறிந்தது. ஸ்பானியப் படையெடுப்பாளர்கள் முன்னால் மெக்ஸிக, பெரு கலாச்சாரங்கள் எப்படி ஒன்றுமே இல்லாமல் போனதோ அதுபோல் முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்கள் முன்னால், இந்தியாவிலிருந்து வெகு தொலைவிலிருந்த எங்கள் காலனியில் பழமையானதும், சிதைந்து போகாததென்றும் நினைத்து நாங்கள் பல்வேறு விதமாக சிறந்த மரியாதை செலுத்தி வந்த எங்கள் தொன்மையான நாகரிகம் சிதைந்து போயிருந்தது; பாதி அழிந்து விட்டிருந்தது.


******

ஒவ்வொரு அனுபவத்தைச் சொல்வதற்கும் ஒரு முறையான வடிவம் (Form) இருக்கிறது. ஆனால் என்னுடைய இந்திய அனுபவத்தை என்ன விதமான புதினமாக எழுதியிருப்பேன் என்று எனக்குத் தெரியவில்லை. புனைகதை வடிவமானது, விதிகள் நன்றாக அறியப்பட்ட எல்லைகளுக்குட்பட்ட கலாச்சார, அறநெறித் தளங்களில் சிறப்பாக இயங்குகிறது. அந்தக் கட்டுப்பாடான தளத்தில் இயங்கும் புதினம், உணர்வுகளை, மனக்கிளர்ச்சிகளை, அறநெறி எதிர்பார்ப்புகளை மிகச்சிறப்பாக வெளிப்படுத்துகிறது. பிற இலக்கிய வடிவங்களில் இவ்விஷயங்கள் தொடமுடியாததாகவோ, முழுமையற்றதாகவோ இருக்கும்.


என்னுடைய அனுபவம் எனக்கென்று பிரத்யேகமாக ஏற்பட்டது. அதை ஒரு புதினமாக எழுதுவதென்றால், என்னைப் போன்ற ஒருவரை சிருஷ்டித்து, ஏதேனும் ஒரு காரணம் காட்டி அவரை இந்தியாவுக்கு எடுத்து சென்றிருக்க வேண்டும். கிட்டத்தட்ட என் உண்மையான அனுபவத்தை நான் பிரதிபலித்திருக்க வேண்டும். ஆனால் அதனால் பயனேதுமில்லை. செபஸ்டபோல் முற்றுகையை நெருக்கமாகக் காட்டி, மேலும் உண்மையாக நாம் உணர்வதற்காய் டால்ஸ்டாய் புனைகதை வடிவத்தைத் தேர்ந்தெடுத்தார். ஒருவேளை அத்தனை வித்தைகளையும் கைக்கொண்டு இந்தியாவைப் பற்றி நானொரு புதினம் எழுதியிருந்தால் அது ஒரு விலைமதிப்பில்லாத அனுபவத்தை பொய்யாக்கியது போலிருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அனுபவத்தின் மதிப்பு அதன் நுண்ணியமான தனித்தன்மையில் இருக்கிறது. அதை என்னால் முடிந்த அளவுக்கு நேர்மையாக வெளிக்கொணர வேண்டும்.
எளிதாகப் பின்பற்றமுடியும் என்பது போல் தோன்றிய, வசீகரமான பெருநகர (metropolitan) இலக்கிய வடிவமான புதினம், அகன்ற கல்விக்கான வாய்ப்பு, வரலாறு பற்றிய ஒரு கருத்து, சுய-அறிவைப் பற்றிய அக்கறை போன்ற சமுதாயத்தைப் பற்றிய பெருநகர அனுமானங்களக் கொண்டிருக்கிறது. இந்த அனுமானங்கள் தவறாகிப் போகும் இடங்களில், அகன்ற கல்வி அரைகுறையாகவோ, இல்லவே இல்லாமலோ போகும் இடங்களில், இந்தப் புதின வடிவத்தில் வெளிப்படையாகத் தோன்றும் புறக்காரணிகளைப் பற்றி சொல்வதைத் தாண்டி மேலே சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஜப்பானியர்கள் இந்தப் புதின வடிவத்தைக் கற்றுக் கொண்டு, தங்கள் வளமான இலக்கிய, வரலாற்றுப் பாரம்பரியங்களில் ஒன்றாகச் சேர்த்துக் கொண்டார்கள். எல்லாம் சரியாகப் பொருந்திப் போயின. ஆனால் கடந்த காலத்தைப் பற்றிய நினைவுகள் சிதைந்து போன, வரலாறைப் பற்றித் தெரிந்து கொள்ளாமலோ, தெரிந்து கொள்ளமுடியாமலோ, தடைசெய்யப்பட்டதாகவோ ஆகிப்போன இந்தியாவில், மேற்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்தப் புதின வடிவத்தால், இருட்டிலிருக்கும் அரைகுறை வெளிச்சமடிக்கும் ஜன்னலைப் போல, ஒரு அரைகுறை உண்மையைச் சொல்வதைத் தாண்டி வேறெதுவும் சொல்லமுடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.


நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முன்னால், இந்திய எழுத்தாளர்கள் அவ்வளவாகப் பொருட்படுத்தப்படாமலிருந்தபோது, எங்களைப் போன்ற எழுதுவதில் ஆர்வமிருந்தவர்களுக்கு (என் தந்தையும் இதில் அடக்கம்) ஆர்.கே.நாராயண் ஒரு ஆறுதலாகவும், எடுத்துக்காட்டாகவும் இருந்தார். இந்திய வாழ்க்கையைப் பற்றி நாராயண் ஆங்கிலத்தில் எழுதினார். அது உண்மையில் மிகவும் கடினமான விஷயம். நாராயண் அவ்வாறு எழுதுவதில் எழும் பிரச்சினைகளைக் கண்டு கொள்ளாமலிருந்ததன் மூலம் அவற்றுக்குத் தீர்வு கண்டார். அவர் இலேசாகவும், நேரடியாகவும், மிகக் குறைந்த சமுதாய விளக்கங்களுடனும் எழுதினார். அவருடய ஆங்கிலம் மனதுக்கு நெருங்கியதாகவும், எளிமையாகவும், சுத்தமாக ஆங்கிலேய சமுதாயத் தொடர்புகளுமற்று இருந்ததால் விசித்திரமானதாகத் தெரியவேயில்லை. அவர் எப்போதுமே தன்னுடைய கலாச்சாரத்துக்குள்ளிருந்தே எழுதுவது போல் தோன்றினார்.


அவர் ஒரு தென்னிந்திய சிறு நகர மக்களைப் பற்றி எழுதினார். சிறிய (எளிய) மக்கள். பெரிய பேச்சு, சிறிய (எளிய) செயல்கள். அங்கேதான் அவர் ஆரம்பித்தார். ஐம்பது வருடங்களுக்குப் பின்னும் அவர் அங்கேயேதான் இருந்தார். அது ஒருவகையில் நாராயணின் சொந்த வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக இருந்தது. அவர் எப்போதுமே தன்னுடைய பூர்விகத்தை விட்டு வெகுதூரம் இடம் பெயர்ந்து வசித்திருக்கவில்லை. நாராயண் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது 1961-இல் லண்டனில் அவரைச் சந்தித்தேன். அப்போது இந்தியாவுக்குத் திரும்பிப் போகவிருந்தார். தன் சொந்த ஊருக்குத் திரும்பி, கையில் வெயிலுக்குக் குடை பிடித்துக் கொண்டு தன்னுடைய கதாபாத்திரங்களுடன் உலவுவதற்காகக் காத்துக் கொண்டிருந்தார்.


உண்மையிலே அவர் தன் கதைகளின் உலகத்தைத் தன்னுடையதாகக் கொண்டிருந்தார். அது முழுமையானதாகவும், எப்போதும் அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தும் இருந்தது. உண்மையான வெளியுலகின் மாறுதல்கள் நாராயணின் உலகத்தை அடையும் முன்னரே அவை மடிந்து விடும் அளவுக்கு அந்த உலகம் வெளியுலகிலிருந்து வெகு தொலைவிலிருந்தது. 1930, 40-களில் சூடுபிடித்திருந்த சுதந்திரப் போராட்ட இயக்கம் கூட அவர் கதைகளின் உலகிலிருந்து தொலைவில்தான் இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் இருப்பு வெறும் இடப்பெயர்கள், கட்டடப் பெயர்களால்தான் சுட்டப்பட்டிருந்தது. நாராயணின் அந்த அக இந்தியா, தனக்குத்தானே மிகவும் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்த புற இந்தியாவைப் பழிப்பது போலிருந்தது; தன் போக்கில் போய்க்கொண்டிருந்தது.


“பேரரசுகள் எழுந்தன. வீழ்ந்தன. மாளிகைகளும், அரண்மனைகளும் தோன்றின, மறைந்தன. மொத்த நாடும் தீக்கிரையானது. ஆக்கிரமிப்பாளரின் வாளில் துண்டானது. ஸரயு நதி கரை புரண்டோடியபோது கழுவிவிடப்பட்டது போல் அழிந்து போனது. ஆனால் எப்போதும் அந்த நாடு மறுபிறப்பெடுத்து வளர்ந்தது”.


ஆர்.கே.நாராயணின் ஒரு ‘அகநிலை உணர்வு பெற்ற’(mystic) படைப்பில் வரும் இந்தப் பத்தியில் நெருப்பும், தோல்வியைச் சந்தித்த வாளும் ஒரு பொழிப்பாகத்தான் (abstractions) சொல்லப்பட்டிருக்கின்றன. உண்மையான துன்பம் சொல்லப்படவில்லை. மறுபிறப்பும் மாயமாக நடந்தது. நாராயண் படைப்புகளின் எளிய மனிதர்கள், முக்கியத்துவமில்லாத வேலைகளைச் செய்து, சொற்ப சம்பளத்தில் ஜீவனம் செய்தார்கள். தின வாழ்க்கையின் சடங்குகளே இவர்களை ஆட்சி செய்தன. அதிலேயே திருப்தியும் அடைந்திருந்த அவர்கள் வரலாறிலிருந்து பிரித்து வைக்கப்பட்டிருந்தார்கள். நெருங்கிப் பரிசோதிக்கையில் அவர்களுக்கு மரபுவழி என்று எதுவும் இருக்கவில்லை; அப்பா, தாத்தாவைத் தாண்டிய முன்னோர்களைத் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் தொன்மையான கோயில்களுக்குச் சென்றார்கள். ஆனால் அக்கோயில்களைக் கட்டியவர்களுக்கிருந்த தன்னம்பிக்கை அவர்களுக்கு இல்லை. அவர்களால் நீண்டு நிலைத்திருக்கும் எதையும் கட்ட முடியாது.


ஆனால் அவர்கள் வசித்த நாடு புனிதமானது. அதற்கென்று கடந்த காலம் என்ற ஒன்று இருந்தது. மேற்கூறிய அதே படைப்பில் ஒரு கதாபாத்திரத்துக்கு இந்தியாவின் கடந்த காலத்தை நிலைக்காட்சிகளாகக் (tableaux) காணும் ஒரு வரம் கிடைக்கிறது. முதல் காட்சி (கி.மு.ஆயிரமாவது ஆண்டுகளின்) இராமயணத்திலிருந்து வருகிறது. இரண்டாவது காட்சி கி.மு.ஆறாம் நூற்றாண்டின் புத்தர். மூன்றாம் காட்சி கி.பி.6-ஆம் நூற்றாண்டின் ஆதி சங்கரர். அதன் ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் நிகழும் பிரிட்டிஷ் வருகையை நான்காம் காட்சி காட்டுகிறது.


முஸ்லிம் படையெடுப்புகளையும், அவர்கள் ஆட்சிகளையும் கொண்ட நூற்றாண்டுகள் இந்த நிலைக்காட்சிகளிலிருந்து விடுபட்டிருக்கின்றன. நாராயண் தன் குழந்தைப்பருவத்தின் ஒரு பகுதியை மைசூர் மாகாணத்தில் கழித்திருந்தார். மைசூரை ஒரு ஹிந்து மகாராஜா ஆட்சி செய்து வந்தார். பிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்லிம் அரசரைத் தோற்கடித்து அந்த ராஜாவை அரியணையில் அமர்த்தியிருந்தது. அந்த ராஜா செல்வாக்கு மிகுந்த குடும்பத்திலிருந்து வந்தவர். அந்தக் குடும்பத்தினர் தென்னிந்தியாவின் கடைசி இந்துப் பேரரசில் மாகாண ஆளுநர்களாகப் பதவி வகித்தவர்கள். கி.பி.1565-இல் அந்தப் பேரரசு முஸ்லிம்களால் தோற்கடிக்கப்பட்டிருந்தது. அந்தப் பேரரசின் தலைநகரம் (அந்நகரம் செயல்படக்காரணமாக இருந்த அறிஞர்களைக் கொண்ட மனிதவளத்துடன் சேர்த்து) கிட்டத்தட்ட முழுவதுமாக அழிக்கப்பட்டது. இந்த இடத்திலிருந்தும் ஒரு பேரரசு தோன்றியிருக்கக்கூடுமா என்று எண்ணுமளவுக்கு அந்த இடம் சிதைந்தும், மனித ஆக்க சக்தியுமில்லாமலும் போயிருந்தது. கொள்ளை, வெறுப்பு, இரத்தம், மேலும் இந்துக்களின் தோல்வி ஆகியவற்றை நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னும் பறை சாற்றும் அந்நகரின் இடிபாடுகள் மைசூரிலிருந்து ஒரு நாளுக்குள்ளான பயணத்தொலைவில்தான் இருக்கிறது.


நாராயணின் உலகம் மேற்பார்வைக்குத் தெரிவது போல் வேர் கொண்டதோ(rooted), முழுமையானதோ இல்லை. அவருடைய எளிய மனிதர்கள் கடந்த காலமென்று தாங்களாக மனதில் நினைத்திருந்த விஷயத்தைப்பற்றி கனவு கண்டார்கள். அவர்களுடைய கடந்த காலத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றிடம் இருந்தது. அவர்கள் வாழ்க்கை சிறியதாக, ஒடுக்கமானதாக (small) இருந்தது. பிரிட்டிஷ் காலனிச் செயல்பாடுகளின் புதிய, எளிய கட்டமைப்புகளான பள்ளிக்கூடம், சாலை, வங்கி, நீதிமன்றம் போன்றவற்றைக் கொண்ட ஒடுங்கிய சமூகம்தான் பேரழிவின் இடுபாடுகள் நிரம்பிய சூழலிலிருந்து முளைத்து வர அனுமதிக்கப்பட்டது. நாராயணின் புத்தகங்களில், வரலாறைச் சொல்லும் இடங்களில், ஒரு அறிவார்ந்த, சாஸ்வதமான இந்து வாழ்க்கையைப் பற்றித் தெரிவதை விட, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து திரும்பக்கிடைத்த அமைதிதான் தெரிகிறது.


எனவே இந்தியாவில் பிரிட்டிஷ் அல்லது ஐரோப்பாவிலிருந்து பெற்றுக்கொண்ட புதின வடிவத்தைக் கொண்டு, மேலோட்டமான விஷயங்களைச் சொல்வதற்கு மிக நன்றாகக் கற்றுக்கொண்டாலும், அந்த வடிவத்தால் சில சமயங்களில் அந்த மேலோட்டமான விஷயங்களின் மையக்கருத்தைக்கூட (essence) சொல்லமுடியாமல் போக நேரிடும்.
என்னுடைய குடும்பப்பின்னணி, எங்களுடைய இடம்பெயர்வு, ஒரு தலைமுறை வாழ்வில் எங்கள் பாதி நினைவிலிருந்த இந்தியா, திரு.வார்ம் (Mr.Worm) எங்களுக்குப் பாடம் சொல்லித்தந்த பள்ளிக்கூடம், என் அப்பாவின் இலக்கிய இலட்சியம் ஆகியவற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் புனைகதை எழுத ஆரம்பித்த நாட்களில், என்னால் வெறும் புறக்காரணிகளைப் பற்றிதான் எழுத முடிந்தது. இன்னும் ஆழமாக எழுதுவதற்கு நான் வேறு வடிவங்களைத் தேடிப் பிடிக்க வேண்டியிருந்தது.
****
sethupathi.arunachalam@gmail.com

No comments: