Wednesday, 29 October 2008

ஜெயமோகன் அவர்களது "எனது இந்தியா" கட்டுரையும் எதிர்வினைகளும் -8

இந்தியா கடிதங்கள்
October 18, 2008 – 12:38 am

ஐயா,

உங்கள் இந்தியா கட்டுரைக்கு வந்த கடிதங்களைப்படித்தபோது சில கருத்துகள் (கல்வி என்ற பெயரில் சில பல கணினிக் குறியீடுகளை கற்றுக் கொண்டதன் மூலமும்) வந்திவிழுந்திருந்தன. அதுகுறித்தும் இந்தக்கடிதம்.
உடல் உழைப்பை மட்டுமே உழைப்பாக எண்ணிக்கொண்டிருக்கும் கூட்டம் என்று ஒன்று இன்னும் இருக்கிறது போலும். அவர்களுக்கு முன்னம் அரசு அதிகாரிகளையும், சினிமாக்காரர்களையும், மொத்தமாக பணக்காரர்களையும் கரித்துக்கொட்டுவது வேலையாக இருந்தது. இப்போது அதில் கணிப்பொறியாளர்களும் சேர்ந்துவிட்டனர்.

ஒருமுறை ஆட்டோக்காரர் ஒருவர் கேட்டார், “அவங்க எல்லாம் ஏசி ரூம்ல, குஷன் சேர்ல உக்கார்ந்து வேலை பார்க்குறாங்க. ஒரு நாள் இந்த ஆட்டோவுல உக்காந்து ஓட்டிப்பார்த்தால் எங்கள் கஷ்டம்தெரியும்” என்று. எனக்கு என்ன சொல்லுவது என்றே புரியவில்லை. நீங்கள் எப்போதாவது உணர்ந்ததுண்டா இரண்டுமணி நேரம் ஒரு தத்துவப்புத்தகத்தை வாசிப்பது அதே நேரம் ஒரு வாகனத்தை செலுத்துவதை விட அயர்ச்சி தருவது என்று? அதை எடுத்துச்சொல்வீர்கள் என்று நினைத்தேன்.

விவசாயம் கடினமான பணிதான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதற்காக உடலாலல்லாமல், அதிகமான அறிவு சார்ந்த பணிகளான ஆசிரியர் பணி முதல் கணிப்பொறி, ஐ.ஏ.எஸ் பணி வரை இருக்கும் மன அயர்ச்சியை (mental fatigue) புறங்கையால் தள்ளிவிடும் மனப்பான்மை இப்போதெல்லாம் வெகுவாக முன்வைக்கப்படுகிறது.

கணிப்பொறித்துறை வந்ததிலிருந்து கிராமப்புறத்திலிருந்து நகரம் வரை பெரும்பாலும் பற்பல சமூகங்கள் சார்ந்த மக்களும் பயன் பட்டிருக்கிறார்கள். பொதுவாக முழுமையாக வரி பிடித்தம் செய்யப்பட்ட சம்பளமே கணிப்பொறியாளர்களுக்கு வழங்கப்படும். ஒரு பேச்சுக்கு ஒரு கணிப்பொறியாளர் ஒருவர் மாதம் 1000 ரூ (எனக்குத்தெரிந்து 18 ஆயிரம் வரி செலுத்துபவர்களும் இருக்கிறார்கள்) செலுத்துகிறார் என்று வைத்துக்கொண்டால், சுமாராக தமிழ்நாட்டில் 5 லட்சம் கணிப்பொறியாளர்கள் இருக்கிறார்கள் என்றால் 5,00,000,000 ரூ வரி வசூலாகிறது. இதை வைத்து மக்களுக்கு அரசு ஏதேனும் நல்லது செய்திருக்கலாம்.

1. விதை நெல்லை இலவசமாக கொடுத்திருக்கலாம்

2. கிராமப்புரங்களில் குடிநீர்/நீர்ப்பாசன வசதிகள் செய்துகொடுத்திருக்கலாம்

3. இயற்கை உரங்கள் தயாரித்து, குறைந்த விலையில்
விநியோகித்திருக்கலாம்.

4. புதிய குளங்கள் ஏரிகள் கட்டமைத்திருக்கலாம்

5. காடு வளர்ப்பில் செலவிட்டிருக்கலாம்

6. கால்நடை பராமரிப்பில் செலவிட்டிருக்கலாம்.

7. சாலையோர மரங்கள் நடவும் செய்திருக்கலாம்

8. கிராமங்களில் சிமிண்ட் கட்டிட பள்ளிக்கூடங்கள் கட்டியிருக்கலாம்

9. ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகம் கொடுத்தாவது கிராமங்களில் பணிபுரிய வைத்திருக்கலாம்

10. மாநிலத்தின் உள்கட்டமைப்புகளை முன்னேற்றியிருக்கலாம்

11. அரசுத்துறைகளை கணினி மயப்படுத்தியிருக்கலாம்

12. இலவச மருத்துவ வசதிகளைப்பெருக்கியிருக்கலாம்.

இன்னும் பல செய்திருக்கலாம்… சட்டென தோன்றுவது இவையே….

இவையேதும் செய்யாமல் அரசு அப்பணத்தை இலவச கலர் டிவி, யானைகள் முகாம், சமத்துவபுரம் (இது ஒரு தோல்வியடைந்த திட்டம்) விளம்பரம், ஆடம்பரம் போன்றதில் செலவிட்டு, மக்கள் முன்னேற்றத்திற்கான முயற்சிகள் ஏதும் செய்யாமல் இருப்பது மிகவும் வருத்தத்திற்குறியது. உதாரணமாக, படம் இணைத்துள்ளேன் பார்க்கவும். எத்தனை கோடி. எத்தனைக் கேடு. ஒரே காசோலையில் இலவச டிவிக்காக கொடுக்கப்பட்டது. (என் வரிப்பணமும் இதில் இருக்கிறது. இதுவரை நான் எந்த விதத்திலும் ஒரு பைசாகூட வரி மிச்சப்படுத்தியதில்லல.. அரசு அனுமதித்திருந்தபோதும் பல்வேறு சேமிப்புக்காட்டி வரியை குறைத்ததும் இல்லை… எவ்வளவு வரி அசலாக இருக்கிறதோ, அத்தனையும் அப்படியே கொடுத்துவிடுவேன். நாடு முன்னேறும் என்ற நம்பிக்கை. அதற்கான என்னாலான பங்கு என்று. ) இதற்கு பதில் வீட்டிற்கொரு இயந்திரம், நெசவோ, குடிசைத்தொழிலுக்கு பயன்படுவதோ கொடுத்திருந்தால், அவர்களுக்கு வேலைவாய்ப்பாவது கிடைத்திருக்கும்.

ஆனால் தமிழ்நாட்டின் தலைவர் எவருக்கும் ஏழைகளையோ, கிராமங்களையோ முன்னேற்றவேண்டும் என்ற நோக்கம் சிறிதும் கிடையாது. மக்களை அரசாங்கத்தை மட்டும் நம்பியிருக்கும், கேவலமான நிலையிலே, இன்னும் சொல்லப்போனால், இலவசங்களை நம்பி வாழும் ஒரு அவல நிலையிலேயே வைத்திருக்கிறது. அவ்வாறு வைத்திருப்பதினால்தான் இவர்களால் ஓட்டு அறுவடையும் செய்யமுடிகிறது. ஏனெனில் இருவருக்கும் ஆதாயமிருக்கும் ஒரு நிலை அப்போதுதான் ஏற்படுகிறது. சொந்த உழைப்பில் நின்றுவிட்டால், அவர்களுக்கு இவர்களை நம்பிக்கிடக்கவேண்டிய நிலை இருக்காதே.

மேலும் இவர்கள் சாதியை ஒரு பிரிவினைவாத கத்தியாகவே பயன்படுத்தியும் வருகிறார்கள். சாதியை ஒரு சமூக முதலீடாக பார்த்த சமூகங்கள் அரசின் தயவு பெரிய அளவில் இல்லாமலே வளர்ந்துவிட்டனர். உதாரணமாக நாடார், கவுண்டர், ஜாட், படேல் சமூகங்கள் அரசிடம் பெரிய அளவில் இடஒதுக்கீடோ, இலவசங்களோ பெற்று வளர்ந்தவர்கள் இல்லை. சாதியை சமூக முதலீடாக இல்லாமல், பிரிவினைவாதத்திற்கு பயன்படுத்துபவர்கள், அனைத்திற்கும் அரசின் கையை எதிர்ப்பார்த்து நிற்கும் நிலையையும் பார்க்கிறோம்.

எனக்கென்னமோ… கோர்வையாக எழுத வரவில்லை… சொல்ல நிறைய இருந்தாலும் எழுத்தில் சொல்லத்தெரியவில்லை. எத்தனையோ இளைஞர்களின் உழைப்பும், ஆசைகளும், விவேகமும், வீணாகிக்கொண்டுதான் இருக்கிறது. எந்த ஒரு அரசும் இதை வேடிக்கைத்தான் பார்க்கிறது.
இந்நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று சத்தியமாகத் தெரியவில்லை.

-ராம்

*****************************

அன்புள்ள ராம்

உங்கள் கடிதத்தின் ஆதார உணர்ச்சியுடன் எனக்கு உடன்பாடே. பொதுவாக இப்போது கணனித்துறையில் இருப்பவர்கள்மேல் ஒரு வகை வெறுப்பு திட்டமிட்டு உருவாக்கபப்டுகிறது. அதன் அடிபப்டை பெரும்பாலும் பொறாமையும் காழ்ப்புமே ஆகும். எந்த சமூகத்திலும் உடல் உழைப்பு முக்கியமானதே. ஆனால் அதைவிட திறன் உழைப்பு முக்கியமானது. அதைவிட சிந்தனை உழைப்பு முக்கியமானது. அதுவே ஒரு சமூகம் முன்னேறுவதற்கான இயங்கியல். ஆக்கபூர்வமான சமூகங்கள் அனைத்துமே அவ்வாறுதான் இயங்குகின்றன. சிந்தனையை தொழில்திறனை வெறுக்கும் சமூகம் நாசத்தை தேடியே செல்கிறது.

இதேபோல இந்தியாவை விட்டு வெளியே செல்பவர்களைப்பற்றியும் ஒரு காழ்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏதோ இங்கே இருப்பவர்கள் எல்லாம் நாட்டுக்காக உயிரைக்கொடுத்துக்கொண்டிருப்பவர்கள் போல. அதுவும் வெறும் காழ்ப்பின் விளைவேயாகும். உள்ளூரில் ஒரு கடைவைத்து கூட்டுமுறைகேடும், வரி ஏய்ப்பும் செய்யும் வணிகர்க¨ளைப்பற்றி எவருக்கும் எந்த குறையும் இல்லை.

இந்தியா 80களில் வேலையில்லா திண்டாட்டத்தின் உச்சிக்குச் சென்றது. அது என் தலைமுறையினருக்கு தெரியும்.. தெரியாதவர்கள் பாலைவனச்சோலை போன்ற படங்களைப் பார்க்கலாம். சுப்ரமணிய ராஜூ போன்றவர்களின் கதைகளைப் படிக்கலாம். அந்த சிக்கலில் இருந்து இந்தியா மீண்டது நம் இளைஞர்கள் அவர்களின் திறனையே ஒரு ஏற்றுமதிப்பொருளாக ஆக்கியதன்மூலம்தான். இந்தியாவின் மானுவளமும் அறிவாற்றலும் ஒரு பெரும் தேசிய சொத்து என நிறுவியவர்கள் அவர்கள். அவர்களுக்கு இந்தியாவின் அனைத்து தளங்களும் கடன்பட்டிருக்கின்றன என்றே எண்ணுகிறேன்.

எதிர்காலத்திலும் இந்தியாவின் செல்வமாக நம் இளைஞர்களின் உழைப்பும் அறிவாற்றலுமே இருக்கப்போகிறது. இன்றைய இந்தியாவில் நம்பத்தக்க முதன்மைச்சக்தியே அவர்கள்தான்.

ஜெயமோகன்

8888888

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நீங்கள் பாரதம் எனக் குறிப்பிட்டது நிச்சயமாக இந்துத்துவ அமைப்புகளின் சித்தாந்தத்தின் அடிப்படையில் ஒரு அகண்ட நிலப்பரப்பு இல்லை என்கிற புரிதல் இருக்கிற போதும் நான் அப்படி ஒரு கேள்வி கேட்டதற்காக வருந்துகிறேன். உங்கள் சொல்லாடல்களும் அவர்களுடையதும் சம காலத்தில் இந்து மதத்தைக் குறிக்கிறவைகளாக இருக்கின்றன. நீங்கள் காணும் இந்து மதம் காந்தி கண்டதற்கு பெரிதும் வேறுபாடற்றது என நான் நம்புகிறேன். நவீன ஜனநாயகம் மதத்தைத் துறந்துவிட்டுத்தான் மேடேற முடியும் என்பது என் திட நம்பிக்கை. உலக மதங்கள் அனைத்துமே கீழைத்தேயத்தில் தோன்றியவை. தொழில்புரட்சியின் பிள்ளையான மேற்கு ஜனநாயகத்தில் மற்ற எந்த அமைப்புகளைக் காட்டிலும் தீமைகள் குறைவாகவே இருக்கின்றன. உலகமயமாக்கலுக்குப் பின் முதிர்ச்சியடைந்த என் சமகால தலைமுறை பெரிதும் மேற்கத்திய சாயலாக மாறிக் கொண்டிருக்கிற சூழலில் சமூகத் தளத்தில் பெரிதும் விவாதிக்கப்பட வேண்டியது பொருளியல், சமூகவியல், அரசியல் பிரச்சனைகளே அன்றி மதமல்ல.

உங்கள் இணையதளத்தில் நவீன வாழ்வு சந்திக்கும் மேற்கண்ட சிக்கல்கள் குறித்து விவாதங்களை முன்னடத்தி சென்றால் இளைய தலைமுறையின் நெருக்கடிக்கு பதில் கூறுவதாக இருக்கும்.

உங்கள் கருத்துகளிலிருந்து நான் பெரிதும் வேறுபட்டாலும் உங்களைத் தொடர்ந்து வாசிக்கிறவன் என்கிற தகுதியில் தமிழில் நேர்மையாக இயங்கக்கூடிய எழுத்தாளர் என்கிற மையலும் உங்கள் மேல் உண்டு.
தனக்கு பிடித்தமான எழுத்தாளன் தான் முன்னுரிமை கொடுக்கிற விசயங்களை எழுத ஆசைப்படுவது ஒரு வாசகனின் எளிய வாசிப்பு சார்ந்த ஆசைகளில் ஒன்று. ஆனால் எழுத்தாளருக்கு அவருடைய் தேர்வுகள்தான் முக்கியமானவை என்பதும் புரிந்துகொள்ள முடிகிறது.

கடுமை கூடின எனது பதில் எனது கருத்துகள் சார்ந்த மன எழுச்சியில் எழுதியவை. தனிப்பட்ட முறையில் உங்களுக்கு மன நெருக்கடி உண்டாக்கியிருந்தால் நான் குறைந்தபட்ச பொறுப்பே ஏற்க முடியும்.
விமர்சனங்களுடனும் பிரியங்களுடனும்

பாலசுப்ரமணியன்
பெங்களூர்

******

அன்புள்ள நண்பருக்கு,

தங்கள் கடிதம்.
ஐரோப்பா பற்றி நீங்கள் சொன்னமையால். தொழில்புரட்சி என்ற ஒற்றைச்சொல்லால் ஐரோப்பாவின் வெற்றியைச் சொல்லிவிடமுடியாது. தொழில்புரட்சி காலனியாதிக்கத்தைக் கட்டாயமாக்கியது–சந்தைகளுக்காகவும், மூலப்பொருட்களுக்காகவும். இன்றைய அமைதியான அழகான ஐரோப்பாவுக்குப் பின் ஆப்ரிக்க ஆசிய தென்னமேரிக்க நாடுகளை காலனியாக்கி ஒட்டச்சுரண்டி அவர்களை பட்டினியின் இருளுக்குள் தள்ளிய வரலாறு உள்ளது. அது வெறுமே அறிவியலின் வெற்றி மட்டுமல்ல, அது சுரண்டலின் வெற்றியும்கூட. அத்தகைய வெற்றி நமக்கும் தேவையா என்று கேட்டால் அதைவிட பட்டினி கிடப்போம் என்றே நான் சொல்வேன். காந்தி அதைச் சொல்லியிருக்கிறார். ஒரு பிரிட்டன் வல்லரசாக முப்பது நாடுகள் அடிமையாக வேண்டியிருந்தது. இந்தியா அதே போல ஆகவேண்டுமென்றால் உலகமே போதாது என்றார் காந்தி.

வளர்ச்சி பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் என்பது ஓர் உண்மை. ஆனால் தன் சமூக வன்மங்களையும் உள்மோதல்களையும் ஓரளவேனும் தீர்த்துக்கொண்ட சமூகங்களே வளர்ச்சி பெற முடியும் என்பதும் ஓர் உண்மை. அல்லது ஐரோப்பா போல சுரண்டிக் கொண்டுவந்த செல்வத்தால் சமூக முரண்பாடுகளை மழுங்கடிக்க வேண்டும். சமூக முரண்பாடுகளை நேரடி வன்முறைக்கும் அவநம்பிக்கைக்கும் கொண்டுபோகாமலிருந்தாலே போதும், அவை சமூகத்தை மூன்னே கொண்டுசெல்லும் முரணியக்க விசைகளாக ஆகும் என்றே நான் எண்ணுகிறேன். தென்மாவட்டங்களில் நாடார்- தேவர் மோதல் ஒருகாலத்தில் பெரும் அழிவுசக்தியாக இருந்தது. ஆனால் அந்த மோதல் வணிகப்போட்டியாக ஒரு கட்டத்தில் உருமாறியபோது தென்மாவட்டங்களை தொழில்மயமாக்கிய சக்தியாக அது மாறியது.

நீங்கள் சிந்தனைகளைப்பற்றிக் கொண்டிருக்கும் எண்ணமல்ல என்னுடையது. அறிவியல் இலக்கியம் கலைகள் தத்துவம் என எல்லா அறிவியக்கங்களும் ஒன்றுடன் ஒன்று பிணைந்தவையே. ஒன்றை இன்னொன்றுடன் இருந்து அர்த்த பூர்வமாக பிரித்துவிட முடியாது. ஒன்றுக்கொன்று நிரப்பும்தன்மை கொண்டவை அவை. மேலும் நான் என்னுடைய தனித்திறன் உள்ள தளத்திலேயே தீவிரமாகச் செயல்பட முடியும். அறிவியலைப்பற்றிஎழுது என்றால் எழுத எனக்கு அறிவு போதாது.

நட்புடன்ஜெ

88888888888888

அன்புள்ள ஜெ

இத்துடன் சில இணைப்புகள் அனுப்பியிருக்கிறேன். பாருங்கள்
இவர்கள் அனைவரும் வெவ்வேறு கருத்துத்தரப்பு உள்ளவர்களாக தங்களைக் காட்டிக்கொள்பவர்கள். புரட்சியாளர்கள் நடுநிலையாளர்கள். ஆனால் அனைவருமே ஒரே குரலில் பேசுகிறார்கள். அருந்ததி ராய்,[ சர்வதேச கிறித்தவ மத அமைப்புகளுடன் நெரூக்கமான தொடர்புடைய கிறித்தவர் இந்த பெயரைச் சூட்டிக்கொண்டிருப்பதில் ஒரு நுட்பமான மோசடி உண்டு] அரிந்தம் சக்ரவர்த்தி [சண்டே இண்டியன்] ஆகியோர் ஏதோ மாபெரும் தேசியப்பிரச்சினை போல காஷ்மீருக்கு விடுதலை என்று முழங்கியதுமே அத்தனை சிற்றிதழ்களும் ஒரே பெரிய திட்டத்தின் பகுதிகளைப்போல ஒரே குரலில் முழங்குவதைக் கவனியுங்கள். அனைவருடைய சொல்லாட்சிகளும் எப்படி மாறியிருக்கின்றன என்று பாருங்கள். பிரிவினைவாதம் அல்ல சுதந்திரப்போர். தீவிரவாதிகள் அல்ல போராளிகள். காஷ்மீர் போராட்டத்தில் உள்ள மதவெறியை, அதே மதவெறி இந்தியாமுழுக்க தூண்டப்படுவதை எப்படி இவை மறைக்கின்றன! இவர்கள் அனைவரையும் பல அமைப்புகள் காஷ்மீருக்கு கொண்டுசென்று ‘காட்டுகின்றன’ இந்த திட்டம் இந்தியாவுக்கு வெளியே போடப்படுவது, நம் அறிவுஜீவிகள் அதன் ஐந்தாம்ப்டையினர் என்பதை நாம் உணரவேண்டிய காலம் வந்துவிட்டது

www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1051&It…

www.kalachuvadu.com/issue-106/page12.asp

http://santhipu.blogspot.com/2008/10/blog-post_17.html

செல்வம்

சென்னை

ஜெயமோகன் அவர்களது "எனது இந்தியா" கட்டுரையும் எதிர்வினைகளும் -7

இந்தியா:கடிதங்கள்
October 17, 2008 – 1:33 am

அப்பாலும்…அன்புதகு ஜெ,

உடம்பின் பாற்பட்டு எழுதுபவன் நான். அப்படி இதுவரை உணர்த்தவில்லை என்றால் அறிவித்துக் கொள்கிறேன். இதை வேண்டுமென்றே செய்துவருவதாகவும் நம்புகிறேன். ஒரு சமன்பாட்டுக்காக இப்படி என்றும் கற்பித்துக் கொள்கிறேன்.

இந்த இயல்பு காரணம் உங்கள் ‘வலி’ எனக்கு நெருக்கமாக இருந்தது. கோமல் சுவாமிநாதனைப் பற்றி எழுதியதில் உள்ள நேர்த்தி அல்போன்ஸம்மாவைப் பற்றி எழுதியதில் கூடி வரவில்லை, ஆனால் அல்போன்ஸம்மாவைப் பற்றி எழுதியதே பயன்மேன்மை மிக்கதாக எனக்குப் பட்டது. நான் செயல்பட எடுத்திருக்கிறதாக நம்பும் நிலைபாடுக்கு இது அப்பாற் பட்டது.

கோமல் பட்டு உங்களில் விட்டுச் சென்ற பாடு, இனி வர இருக்கும் வலியை எல்லாம் ‘வ்பூ’வி விடலாம் என இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளும் சூத்திரத்தை அளிக்கிறது. ஆனால் அல்போன்ஸம்மாவின் வலி, ‘ஆன்மீகம்’ என்கிற சொல்லாடத் தயங்குவேனால், உடம்புக்கு அப்பால் எழுகிறது. மறக்கப்பட்ட அவர், குழந்தைகள் வழி எழுந்ததும் அல்லது எழுப்பித்த உங்கள் எழுத்தும் அதற்கு இசைகிறது.

அன்னை தெரேஸாவைப் புனிதராக்கக் கோரிய வரலாறும் அறிவேன். அவர்கள் அல்போன்ஸம்மாவைப் புனிதராகியதே பொருத்தம் என்கிற அறிவுத் தளத்துக்குப் போகிற திறமையும் எனக்கில்லை. இதுகளில் எல்லாம் அரசியல் கூட இருக்கலாம். ஆனால் ‘வறுமை எக்காலமும் உங்களோடு இருக்கும்; நான் இருக்கப் போவதில்லை’ என்றவர் என்பு தோல் போர்த்திய உடம்பில் இயேசு.

ஹிட்லர்-பஜ்ரங்தள் கட்டுரைத் தீ யணைப்புக் கட்டுரைதான் ‘எனது இந்தியா’ என்று தோன்றியது, ஆனால் பெங்களூர் நண்பருக்கு உங்கள் மறுபடி அப்படி இல்லை என்றாக்குகிறது. ஒரு தனித்த படைப்புக்குள் உங்கள் சமனிலை தோன்றாது; மொத்தமும் படிக்கவேண்டும் போலும். ‘ஒரு எழுத்தாளருக்கு எல்லாம் தெரியும்’ என்றொரு முற்று மதிப்பை அவர்மீது சுமத்துவதால் வரும் கோளாறுதானே இது? அவரும், ஆடும் துலாப் போல், எழுதி எழுதிச் சமநிலைக்கு வர முயல்பவர்தான் அல்லவா? என்ன, அல்போன்ஸம்மாபோல் அப்பாலும் எழும் தருணங்கள் அவருக்கு உண்டு.

அன்போடு
ராஜசுந்தரரஜன்

பி.கு. பதிப்பிக்க விரும்பினால் வேண்டாததை வெட்டிக்கொள்ள உரிமை தருகிறேன்.

********

எனது இந்தியா என்கிற உங்கள் கட்டுரைக்கு எதிர்வினையாக அல்லது உடன்வினையாக கடிதங்கள் அனுப்பிய வாசகர்களுக்கு நீங்கள் அளித்த பதில்களையும் உங்கள் கட்டுரையின் விடுபட்ட பகுதிகளாகவே சேர்த்து வாசித்தேன். இந்தக் கட்டுரை ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை அல்ல என நீங்கள் ஒப்புக் கொண்டிருப்பதுடன் ஆதாரங்களை சேகரித்து எழுத உங்களுக்கு அவகாசமோ மனமோ இல்லையென்றும், நீங்கள் அந்த மாதிரி கட்டுரைகளை நம்புவதும் இல்லையென்று சிறில் என்பவருக்கு அளித்த பதிலில் அறிவித்துள்ளீர்கள். உணர்வுப்பூர்வமாகவே நானும் இக்கட்டுரை குறித்து எழுத விழைகிறேன்.

இந்திய எதிர்ப்பு என்பதிலிருந்து நான் துவங்குகிறேன். “இதன் போலீஸ், நீதிமன்றம், அரசாங்கம், மதங்கள், பண்பாட்டு அமைப்புகள் அனைத்துமே அநீதியை மட்டுமே செய்துகொண்டிருப்பவை என இவை நேரடியாகவும், மறைமுகமாகவும் வாதிடுகின்றன. சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினர் போன்றவர்கள் இந்த தேசத்துக்கு எதிராக கிளர்ந்தெழவேண்டுமென இவை அறைகூவுகின்றன. இந்த தேசத்தின் இறையாண்மை என்பது தான் இந்த நாட்டுமக்களின் உண்மையான முதல் எதிரி என இவை பிரச்சாரம் செய்கின்றன”. நீங்கள் குறிப்பிடுகிற பத்திரிகைகள் குறைந்த அளவு ஜனங்களாலேயே வாசிக்கப்படக் கூடியவை. பெரும்பான்மையான மக்கள் மேற்படி அமைப்புகளை நன்றாகவே புரிந்தும் அவைகளுக்கு அடிபணிந்துமே தங்கள் சிந்தனையில் மாறாது தொடர்கிறார்கள். சிற்றிதழ் வாசகன் என்பவன் மைய இதழ்கள் அல்லது பத்திரிகைகள் கிடைக்காமல் சிற்றிதழ்களின் பக்கம் வருகின்றவன் அல்ல. மாறாக வெகுஜன ஊடகங்களைத் தாண்டியும் இன்னும் ஆழமாக அல்லது மாற்றுச்சிந்தனைகளைத் தெரிந்து கொள்ளவே அவன் இப்பக்கம் வருகிறான். இறையாண்மை குறித்த இந்தச் சிந்தனை அருந்ததி ராய் எழுதிய காஷ்மீர் பிரச்சினை குறித்த கட்டுரையிலிருந்து உங்களுக்கு எழுந்திருக்கலாம் என நம்புகிறேன். காஷ்மீர் பிரச்சனைதான் இந்தியாவில் வாழ்கிற ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களின் பிரச்சனை என்பதாக உங்கள் கட்டுரையிலிருந்து ஒருவர் புரிந்து கொள்ள இடமிருக்கிறது. இந்திய இறையாண்மையிலிருந்து விலகிச் செல்வதற்கான போராட்டத்தை நடத்திக்கொண்டிருப்பவர்கள் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். காஷ்மீர்ப் பிரச்சனையில் ஆரம்பத்திலிருந்தே மூன்று குரல்கள் உரக்கக் கேட்கின்றன. ஒன்று காஷ்மீரைப் இந்திய இணைப்பிலிருந்து பிரித்து பாகிஸ்தானத்தோடு சேர்ப்பது. இரண்டு காஷ்மீரத்தை இந்திய ஒன்றியத்தோடே தொடர்வது. மூன்று பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சேராமல் தனிப் பிரதேசமாகஅறிவித்துக் கொள்வது. இந்திய சுதந்திரத்திற்குப் பின்பு சில காலம் வரை காஷ்மீர பிரச்சனையின் முக்கிய நோக்கம் தனி நாடாக அறிவித்துக் கொள்வதாகத்தான் இருந்தது. அதற்கான அரசியல் நியாயங்களும் அக்காலகட்டத்தில் அம்மக்களுக்கு இருந்ததாகவே நம்பத் தோன்றுகிறது. இந்த மூன்று குரல்களில் பாகிஸ்தானோடு இணைவது என்கிற குரலுக்குத்தான் இந்தியாவும் பாகிஸ்தானும் எதிர்த்தும் ஆதரித்தும் முன்னுரிமை கொடுத்தன. அதையே ஊடகங்களும் வளர்த்தெடுத்தன. காஷ்மீரத்தில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கதே. ஆனால் அதற்குப் பின்தான் போராட்டம் தொடங்கியது என நீங்கள் எழுதியிருப்பது வரலாற்றை பூசி மெழுகுதல். அம்மண்ணின் மைந்தர்கள் பண்டிட்டுகள் என்றால் இஸ்லாமியர்கள் வந்தேறிகாளா? தனிக் காஷ்மீர் என்கிற குரலை ஒடுக்கியதில் இந்திய பாகிஸ்தானிய அரசுகளின் தேசியவாதங்களின் பங்கை நீங்கள் மறுக்கிறீர்களா?. இஸ்லாமியர்கள் ஒரு அரசை உருவாக்க முனைந்தாலே அது தாலிபான் அரசாகத்தான் இருக்கும் என்பதை எப்படி நம்புகிறீர்கள். எனில் ஏனைய இஸ்லாமிய நாடுகள் அனைத்துமே தாலிபான் நாடுகளா? தாலிபான்கள் ஆயுதபலத்தினாலே முறையான அரசமைப்பற்ற ஆப்கானிஸ்தானில் ஒரு பைத்தியக்கார இஸ்லாமிய அரசை உருவாக்கினர். இஸ்லாம் மட்டுமல்ல இந்து, பெளத்த, கிருத்துவ மதங்களின் அடிப்படையில் எந்த அரசுகள் அமைந்தாலும் அவையும் தாலிபான் அரசுகளே. காஷ்மீரத்தில் ஆயுதப் போராட்டம் எண்பதுகளுக்கு பின்பு எழுந்ததே. அதற்கு முன்புவரை அந்த மண்ணில் ஆயுதங்களை வைத்து போராடிக் கொண்டிருந்தது இந்திய பாகிஸ்தானிய அரசுகளே. இந்திய ராணுவத்தாலே காணமல் போகின்றவர்கள், கொலை செய்யப் படுபவர்கள், வன்புணர்ச்சிக்கு உள்ளாகிற பெண்கள், ஊனமுறுவோர் அனைவருமே தாலிபான் அரசமைக்கிற விருப்பமுள்ளவர்களா?இந்தக் குற்றங்களைச் செய்ததற்காக தண்டிக்கப்பட்ட இந்திய ராணுவத்தினர் எத்தனை பேர் என்பதை நீங்கள் கூறமுடியுமா? காஷ்மீரத்திலேபோலீஸ், நீதியமைப்பு, அரசாங்கம் ஆகியவை அம்மக்களுக்கு நீதிமட்டுமே செய்கின்றன என நம்புகிறீர்களா?. அதிகபட்ச எரிச்சலுக்குள்ளாகிற சமூகத்தின் எந்தப் பிரிவினரும் அந்த எரிச்சலுக்கு காரணமான சமூகத்திடமிருந்து பிரிந்து செல்லவே ஆசைப்படுவார்கள். நிலையற்ற அரசுகளாலும், பயங்கரவாத்தினாலும் சீரழிகிற பாகிஸ்தானோடு இணைவதைக் காட்டிலும் இந்திய ஒன்றியத்தில் ஐய்க்கியமாவது பொருளாதார, பாதுகாப்பு காரணங்களுக்காக உகந்த ஒன்று என காஷ்மீர மக்களுக்குச் சொல்ல இன்றைக்கு யார் இருக்கிறார்கள்? காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவை நீக்குவோம் என்பது மாதிரியான பதில்களே கிடைக்கின்றன.

வங்க தேச அகதிகள் குறித்து நீங்கள் பொத்தம் பொதுவாகச் சொன்னது ஆட்சேபத்திற்குரியது. இதுகாறும் பயங்கார நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்ட வங்க தேசவத்தவர் எத்தனை பேர்? இந்திய சமூகத்தில் பிறந்து வளர்ந்தவர் எத்தனை பேர்?. அவர்களிடம் கைக்காசு பெற்றுக் கொண்டு இந்திய நிலப்பரப்பிற்குள் அனுப்பி வைக்கிற இராணுவத்தினர் சிலரை முன்வைத்து இந்திய இராணுவமே தேசப் பாதுகாப்பு குறித்த பிரக்ஞையற்றது என்று சொல்வது மாதிரியிருக்கிறது வங்க தேசத்திலிருந்து வந்தவர்கள் அனைவருமே இந்தியாவுக்கெதிரான பயங்கரவாத்தில் ஈடுபடுகின்றனர் என்பது. அவர்களுடைய மதம் அப்படிக் கற்பிக்கிறது என எழுதுவது அப்பட்டமான பாசிஸவாதம். ஸ்டாலினின் வன்கொடுமைகளுக்குக் காரணமே கம்யூனிசம்தான் என நீங்கள் பின் தொடரும் நிழலின் குரலில் சொன்னது மாதிரித்தான் மொத்த இஸ்லாமிய மக்கள் தொகையில் சிலர் செய்யும் குற்றங்களுக்கு அந்த மதம்தான் காரணம் எனச் சொல்வதும். இந்துக்கள் வேற்றுமதத்தினரை கொலை செய்தால், கொள்ளை அடித்தால், வன்புணர்ச்சியில் ஈடுபட்டால் அந்த மதம்தான் அதற்குக் காரணம் எனச் சொல்வீர்களா? அப்படி அந்த மதம் அவர்களுக்கு போதிக்குமானால் இந்தியாவில் இருக்கிற அத்தனை முஸ்லீம்களும் இன்றைக்கு பயங்கரவாதிகளாகத்தான் ஆகியிருக்க வேண்டும். வேறு ஒருவருக்குச் சொன்ன பதிலில் சாதாரண உழைக்கும் முஸ்லீம்களை முல்லாக்கள்தான் அப்படி மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என சொல்லியிருக்கிறீர்கள்.
அருந்ததிராய் அவசர கதியிலோ அல்லது அவருடைய கருத்து நிலைப்பாட்டிலிருந்து பரபரப்புக்காக எழுதுகிறார் என நீங்கள் சொல்லி நிறுத்தியிருந்தால அதை வேறு தளத்தில் விவாதிக்கலாம். ஆனால் பயங்கரவாத நிறுவனங்களிடமிருந்து நிதியுதவி இருக்கும் என நம்பத் தோன்றவில்லை. இவர்களைப் பற்றி இவ்வாறு கருத்துச் சொல்ல எந்த இந்திய தேசபக்த அமைப்பிடமிருந்து நீங்கள் நிதியுதவி பெருகிறீர்கள்? அப்சல் குரு தூக்கிலடப்பட வேண்டும் என்பதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் அத்வானியைவிட அதிகமாக உள்ளது. இந்திய நீதி அமைப்பில் ஒருவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதே நீதி செய்யப்படுவது என நீங்கள் எழுதியிருப்பது நல்ல நகைச்சுவை. மூதாதையர் மரபு என எதைச் சொல்ல வருகிறீர்கள்? மூதாதை என்பவன் எந்தக் காலத்தைச் சேர்ந்தவன். மூதாதை, ஆதி, தொன்மம் போன்ற சொற்களின் மீதிருக்கும் obsession உங்களுக்கு எப்போது குறையும்? எந்த மூதாதையின் மரபை நாம் தூக்கிப் பிடிப்பது? ஜனநாயகம் நிதானமானது என நீங்கள் எழுதியுள்ளீர்கள். ஒடுக்குமுறைக்குள்ளாகிற சமூகப் பிரிவினரிடம் நிதானத்தைப் போதிப்பது அந்த ஒடுக்குமுறைக்கு கொடுக்கிற பதிலாக இருக்குமா? ஜனநாயகம் வளர்ச்சிப் போக்கில் செல்ல வேண்டுமானால் மதம் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும் என நீங்கள் உங்கள் வரலாற்றுப்போதத்திலிருந்து தெரிந்துகொள்ளவில்லையா? எல்லா மதங்களும் அவற்றைப் பின்பற்றுகிறவர்களின் வீட்டிற்குள்ளே அல்லது தத்துவ ஞான சபைகளுக்குள்ளே தீவிரமாகச் செயல்படட்டும். சமூக, அரசியல், பொருளியல் தளங்களில் தலையிடாமல் இருக்கட்டும். தேசபக்தி குற்றமாக்கப்படவில்லை. “பெரும்பான்மையினர் அடிப்படைவாதம் தேசபக்தியாகவும், சிறுபான்மையினரின் அடிப்படைவாதம் தீவிரவாதமாகவும் எடுத்துக் கொள்ளப்படும்” என நேரு சொன்னது பொருந்திப் போகிற சூழல் இன்றைக்கு நிலவுவதால் அப்படி ஆகிவிட்டது. “வெல்க இந்தியா” எனச் சொல்ல மாட்டீர்களா? வெல்க என்றால் யாரை அல்லது எதை?. நீங்கள் பாரதம் எனச் சொல்வது தற்போதைய இந்திய நிலப்பரப்பா? அல்லது rss காரர்களின் mapபா? உங்களுக்கு குறளின் மீதிருக்கும் ஈடுபாடு அறிந்ததே. “யாகாவராயினும் நாகாக்க” என்கிற பிரபலமான குறளை சற்றே மாற்றி உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன், “யாகாவராயினும் கைகாக்க”. எழுதியபின் எடிட் செய்யவும். தினமும் நீங்கள் இணையத்தில் எழுதிக் குவிக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஏதுமில்லை.

பால சுப்ரமணியன்

*****************************

அன்புள்ள நண்பருக்கு,

நான் ஏற்கனவே நீங்கள் எழுதியிருக்கும் விஷயங்களுக்கெல்லாம் தெளிவான விளக்கங்களைச் சொல்லியிருக்கிறேன். அவற்றுக்குப்பின்னும் எழுதப்பட்ட உங்கள் கடிதம் உங்கள் உணர்ச்சிகளை வெலிபப்டுத்துவதென்பதை நானும் புரிந்துகொள்கிறேன். துரத்தப்பட்ட காஷ்மீரி பண்டிட்டுகள் காஷ்மீர் மண்ணின் மக்கள் என்றால் முஸ்லீம்கள் அப்படி அல்லவா என்று கேட்பது, வெல்க பாரதம் என்றால் எவரை என்று கேட்பது போன்ற விவாதங்கள்தானே நம்மிடையே இரவுபகலாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

நான் சொல்லும் பாரதம் இந்திய மக்கள் பரவல்மூலம் இயல்பாக இந்நிலப்பகுதியில் உருவாகி சுதந்திரப்போராட்டம் மூலம் திரட்டப்பட்டு காந்தியாலும் நேருவாலும் உருவகிக்கப்பட்ட நவீன தேசியம் என்பதை பலமுறை சொல்லிவிட்டேன். அதில் மதத்துக்கு அரசியல் சார்ந்த மதிப்பு ஏதும் இருக்கலாகாது என்று திட்டவட்டமாகவே இதே இணைய தளத்தில் எழுதியிருக்கிறேன். இந்தியாவில் உள்ள எந்த ஒரு மத இன மொழி சமூகத்தினருக்கும் சமான உரிமை இல்லாத தேசிய உருவகம் இந்தியாவை அழிக்கும்.

நீங்கள் என் கட்டுரையை எப்படிப் புரிந்து கொண்டீர்கள் என்ற வியப்பு உருவாகிறது. அருந்ததி ராயும் பிறரும் எழுதுவது சிற்றிதழ்களில் அல்ல. இந்நாட்டின் சிந்தனையை வடிவமைக்கும் மைய ஊடகத்தில். அவற்றை பொறுப்பில்லாமல் மிகைப்படுத்தி எழுதி சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் மனதில் அவநம்பிக்கையினை உருவாக்குவதே நம் சிற்றிதழ்களின் ‘மாற்று; குரலாக இருக்கிறது. அதையே என் கட்டுரையில் சொல்லியிருதேன். அதை ஒரு அரசியல் சரியாக முன்வைத்து மாற்றுக்குரல்களையும் ஐயங்களையும்கூட முத்திரைகுத்தல் வசைபாடல்களுடன் அவர்கள் முன்வைப்பதனால் உண்மையான விவாதமே நிகழாமல் ஒற்றைப்படையாக இருக்கிறது நம் சிற்றிதழ் உலகம். இதைத்தான்நீங்கள் மாற்று என்கிறீர்கள்.

காஷ்மீரி மக்களின் அதிருப்தி ஒரு இஸ்லாமிய அரசிலேயே அவர்களால் இருக்க முடியும் என்பதை ஒட்டி மட்டுமே உருவானது. அதை அவர்களே மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். இந்தியாவின் பலநூறு இஸ்லாமிய இதழ்கள் ஒவ்வொரு இதழிலும் எழுதுகின்றன. அந்த மனநிலை இன்றைய நவீன தேசிய உருவகம் எதிலும் அடங்காததும் அழிவு உருவாக்குவதுமாகும். இந்த உண்மையைச் சொல்லி அதற்கான தீர்வு கானலாம், குறைந்தது விவாதமாவது செய்யலாமென்னும்போது ஏன் அது உங்களுக்கு சிக்கலைக் கொடுக்கிறது? அதை அவர்களே சொல்லும்போது நீங்கள் ஏன் மழுப்பத் துடிக்க வேண்டும்? தங்கள் சக மனிதர்களை கொன்று விரட்டிவிட்டு மதவெறிசார்ந்த அடிப்படைவாத அரசு ஒன்றுக்காக குரல்கொடுக்கும் காஷ்மீரிகள் தாலிபானிய அரசையன்றி வேறெதை நாடுகிறார்கள்?சவூதி அரேபிய சிரியா ஈரான் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் இருப்பது தாலிபானியத்தன்மை கொண்ட ஆட்சியே.

என் நோக்கில் பாரதம் இந்தியா எல்லாமே ஒரே சொற்கள்தான். வெல்க இந்தியா என்று சொன்னால் மட்டும் என்னுடன் சேர்ந்துகொள்வீர்களா என்ன? மாற்றுத்தரப்பு ஒன்றை முன்வைத்ததுமே நாவை அடக்கு என்ற குரல் எழும் ஜனநாயகத்தன்மை நம் சிற்றிதழ்ச்சூழலில் எபப்டி வந்தது? அதுவே என் வினா
நன்றி
*****************

அன்புள்ள ஜெயமோகன்,

உயிர்மை இதழ் தேசத்துக்கு ஊறுவிளைவிக்கும் கட்டுரைகளை வெளியிடுகிறது என்று நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள். ஆனால் அந்த இதக்ழ் தொடங்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை நீங்கள் அதில் எழுதும் முக்கியமான எழுத்தாளர். ஏன் இந்த முரண்பாடு?
செல்வம்
சென்னை

**********************

அன்புள்ள செல்வம்,

உங்கள் கடிதம் என்னை அவதூறு செய்து வரும் கடிதங்கள் அளவுக்கே என்னை பாதித்தது. நம் சூழலில் அரசியல் சார்ந்து எதைச்சொன்னாலும் அதன் பின் வருடக்கணக்காக அதையே விளக்கிக்கொண்டிருக்க வேண்டிய நிலை. இதுவே என்னை அரசியல் சார்ந்து எதையுமே சொல்லக்கூடதென தடுக்கிறது. ஒன்று சொல்லிக்கொள்கிறென். என்னுடிய நெருங்கிய நண்பரான மனுஷ்யபுத்திரனை நான் பல வருடங்களாக அணுக்கமாக அறிவேன். அவரது அறிவாற்றல் கவித்துவம் ஆகியவற்றில் எப்போதும் நம்பிக்கை எனக்கு உண்டு. அவர் என்னிடம் கடும் விரோதம் கொன்டிருந்த நாட்களில்கூட அவரை நான் என் நண்பராகவே எண்ணியிருக்கிறேனெ ந்பதை அவரே அறிவார். என்னுடைய சொந்த வாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும் நான் சந்தித்த சிக்கல்களின் போது என்னுடன் உறுதியாக நின்ற வெகுசில நண்பர்களில் அவரும் ஒருவர். இப்போது நான் நடுவயதை தாண்டிவிட்டேன். இனி எல்லா நட்புகளும் தவிர்க்க முடியாத கடைசித் தருணம் வரை நீடிக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன்.

மனுஷ்யபுத்திரன் இந்த தேசம் மீது அவநம்பிக்கை கொண்டவர் என்றோ அல்லது எதிர்மறையான செயல்களில் ஈடுபடுகிறவர் என்றோ நான் எண்ணவில்லை. நான் பேசியது பொதுவாக சிற்றிதழ்களைப் பற்றி. ஆங்கில மைய ஊடகங்களால் ‘பொலிடிகல் கரெக்ட்னெஸ் ‘ ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. அதை உருவாக்குபவர்களுக்கு இந்நாட்டின் மீது அரசியல் தாக்குதல் நிகழ்த்தும் சக்திகளுடன் மறைமுகத் தொடர்புகள் உள்ளன– அதற்கான ஆதாரங்களுடன் ஒரு கட்டுரையை நான் எழுதுவேன்.
அந்த அரசியல்சரியை அப்படியே ஏற்று நம்முடைய சிற்ற்தழ்கள் செயல்படுகின்றன. இதில் விதிவிலக்கான சிற்றிதழ்கள் குறைவே. இதற்குக் காரணம் அந்த அரசியல் சரியையே நம்முடைய ‘எலைட்’ வாசகர்கள் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அபப்டி எண்ணுவதே அறிவுஜீவித்தனம் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். கிட்டத்தட்ட 30 வருடக்கால தொடர்ச்சியான பிரச்சாரம் மூலம் உருவான ஒரு தரப்பு இது. உயிர்ம்மையின் கட்டுரைகளும் காலச்சுவடு கட்டுரைகளும் இந்த மனநிலையின் வெளிப்பாடுகளே. அதைப்பற்றி ஒரு வெளிபப்டையான விவாதத்தை நிகழ்த்த வேண்டிய காலம் நெருங்கிவிட்டது என்பதே என்னுடைய எண்ணமாகும்.அதையே என் கட்டுரையில் குறிப்பிட்டிருதேன்
என் கருத்துக்கு மாறாக கருத்துக்களைச் சொல்லக்கூடியவர்கள் என் பகைவர்களும் அல்ல. அவர்கள் என் நண்பர்கள். அவர்களிடம் விவாதம்செய்தே நான் என்னை மேம்படுத்திக் கொள்கிறேன். உயிர்மையில் நான் கடுமையாக நிராகரிக்கும் பல ஒருபக்க சார்புள்ள கட்டுரைகளை எழுதிய அ.முத்துகிருஷ்ணன் என்னுடைய நெருக்கமான நண்பர். சென்ற மாதம்கூட அவரது வீட்டுக்குச்சென்று ஒருநாள் தங்கியிருந்தேன். இளம் தலைமுறையில் அவரளவுக்குப் படிக்கக்கூடிய சிலரையே நான் கண்டிருக்கிறேன். அவரை நேர் எதிர் திசையில் இருந்து பார்க்கக்கூடிய என்னுடைய நண்பர் நீல கண்டன் அரவிந்தன் அவர்களில் ஒருவர். அடிபப்டையான விவாதங்களையே வெறுப்பில்லாமல் செய்ய இயலும்.
மனுஷ்ய புத்திரன் சென்ற காலங்களில் எழுதிய பல கட்டுரைகளில் இஸ்லாமின் பெயரால் நிகழூம் வன்முறைகளை கடுமையாகக் கண்டித்திருக்கிறார். இஸ்லாமிய மதத்தை ஒரு ஆன்மீக மார்க்கமாகவே பார்க்கவேண்டும், அரசியலாக அல்ல என்று வல்யுறுத்துபவர்களில் ஒருவராக இருக்கிறார். அதன்பொருட்டு அவரை இஸ்லாமிய அடிபப்டைவாத சக்திகள் வெறுக்கிறார்கள் என்பதையும் கண்டிருக்கிறேன். அவரைப்போன்ற அறிவுஜீவிகள் நம்முடைய பண்பாட்டின் பெரும் செல்வங்கள் என்றே நான் எண்ணுகிறேன். ஒரு விஷயத்தில் எனக்கு அவருடன் மாற்றுக்கருத்து உள்ளது என்றால் நான் என் நன்பரான அவரிடமிருந்து விலகிவிடவேண்டுமா என்ன?

பத்து வருடம் முன்பு எனக்கு அவருடன் ஒரு கருத்துவேறுபாடு வந்தபோது என் மனைவி சொன்னாள், கருத்துக்கள் இருக்கட்டும். உன் நண்பர்கள் இல்லாத வெட்ட வெளியில் கருத்துக்களை கட்டிப்பிடித்துக்கொண்டு என்ன செய்யப்போகிறாய் என்று. நான் அப்போதே அவருக்கு ஒரு கடிதம் எழுதி என் மாறாத அன்பை தெரிவித்தேன்.

உங்கள் தகவலுக்கு, வரும் உயிர்மையில் என்னுடைய குறுநாவல் வரப்போகிறது. நான் எழுதிய மிகச்சிறந்த கதைகளில் ஒன்று — ஊமைச்செந்நாய்

ஜெயமோகன்

****

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

முதலில் உங்கள் எழுத்தின் மீதான ஆழ்ந்த ஈடுபாட்டிற்கு இந்த இளைஞனின் மரியாதை கலந்த வணக்கங்கள், நான் உங்களைப் போலவே எழுத்து என்கிற ஒரு மிகப் பெரும் உந்து ஆற்றலைப் பயன்படுத்தி பல்வேறு சமூக அவலங்களைத் துடைக்க முடியும் என்று நம்புகிறவன். நாம் பல்வேறு தலங்களில் முரண்பட்டாலும் அவற்றை ஒரு சகோதரர்களுக்கு இடையிலான கருத்தியல் போராக மட்டுமே எண்ணுகிறேன்.

இந்த இளைஞனின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து உங்கள் விளக்கங்களை வழமை போல நீண்ட ஒரு கடிதத்தின் மூலம் நீங்கள் வெளிப்படுத்தி இருப்பது என்னை வியப்பில் மட்டுமில்லை, உங்கள் மீதான அன்பு அதிகரித்ததிலும் உறுதியாகிறது. நான் ஒரு வலைப்பூவை வடிவமைத்து அதில் எனது பதிவுகளை செய்து வருகிறேன், உங்களுக்கு நேரம் கிடைத்தால் அவற்றை படித்துப் பார்த்து உங்கள் மேலான கருத்துரைகளை வழங்கினால், அவை எம்மை மேலும் செம்மைப் படுத்தும்.

வலைப்பூவின் முகவரி:
http://tamizharivu.wordpress.com (தமிழ்)
http://kaiarivazhagan.wordpress.com (ஆங்கிலம்)

அருந்ததி ராயை மட்டும் வீட்டு விட்டீர்கள்? சரி அவர் தப்பிக்கட்டும்.

மரியாதை கலந்த நன்றிகளுடன்

கை.அறிவழகன்
***

அன்பு ஜெ சார்.

எனது இந்தியா கட்டுரை ஒரு மிகப்பெரும் விவாதத்திற்கு வழி கோலட்டும்.

நண்பர் அரிவழகனின் கடிதம் படித்தேன். ஒரு புறங்கை வீச்சில் உங்களைப்போன்ற பலரின் கவலைகளை காசு கொடுத்து வாங்கிய கல்வியாலும் கணிணிக் குறியீடுகளாலும் விளைந்ததாய் எழுதியது வேதனை. ஒன்று முதல் பட்ட வகுப்பு வரை அரசு பள்ளியிலும் கல்லூரிகளிலும் இலவசமாய்ப் படித்து உத்தியோகம் பெற்ற என்னைப்போன்ற பல்லாயிரவரின் உள்ளக்கிடக்கையே உங்கள் கட்டுரை. நான் பிறந்து வளர்ந்த நாடும் மதமும், இந்தியா, இந்து மதம். அதிர்ஷ்ட வசமாய் இவை உலகின் மிகச்சிறந்த தேசங்களில், மதங்களில், கலாச்சரங்களில், பண்பாட்டில் ஒன்றாக இருப்பதால் இவற்றை நாங்கள் மிகப்பெருமித்தத்துடன் அங்கீகரித்துள்ளோம். இவற்றில் குற்றங்கள்/குறைகள் உண்டு. ஆனால் குறைகள் உலகின் எல்லா மூலைகளிலும் எல்லா அமைப்புகளிலுமிருப்பதால் எம் நாட்டையும், மதத்தையும் கரித்துக்கொட்டவோ, அழித்துத்தீர்க்கவோ ஆத்திரம் எமக்கில்லை. குறைகளைக் களைய முயற்சிப்போம் - ஆனால் குத்து வெட்டு மூலம் இல்லை. குத்து வெட்டின் மூலம் எதையும் சாதித்ததில்லை. அமைப்புகளில் குறைகள் சராசரி மனிதனின் சராசரி குணங்கள் (சோம்பல், சுயனலம், பொறாமை, அகந்தை இன்ன பிற) அழியும் வரை இருந்தே தீரும். அது இந்து மதமோ, நாத்தீக கழகங்களோ, பொதுவுடமை கட்சிகளோ, அல்லது தலித் இயக்கங்களோ ஆகட்டும். இதற்கு கொந்தளிப்பதென்றால் இங்கு பல நூறு பிரளயங்களை உருவாக்குவோமா? பிறகு மீதம் என்ன? இங்கு அடிப்படையில் எல்லா தலைவர்களும் (மதம் உட்பட)அவர்தம் தொண்டர்களும் அவரவர் இயக்கங்களை சொத்து சுகம் சேர்க்கும் கற்பக மரமாய் பார்ப்பதை நிறுத்தட்டும். கை கால் சுகமாய் இருக்கும் அனைவரும் உழைத்தே சாப்பிடட்டும். எல்லா உயிர்களின் மேலும் எல்லையில்லா அன்போடும், கருணையோடும் இருக்கட்டும். மரம், மட்டை, குளம் குட்டை, மயில், குயில், கோழி என்று அனைத்தும் நம் உயிரோடு ஒன்றி விட்டால், அப்புறம் நாம் எங்கே பிற உயிரை அதுவும் மனிதரை (தலித்தோ, பார்ப்பனரோ, முஸ்லீமோ, ஏழையோ, யாரோ)வதைப்பது? இங்கே பிரச்சினைகள் வற்றாமல் இருந்தால்தான், தலைகள் வளமாய் இருக்க முடியும் என்று பார்க்கிறார்கள். இதற்காக பிற நாட்டின், மதங்களின், அமைப்புகளின் கைக்கூலிகளாக நாம் மாறினால் பிறகு ஏது விடிவு? மனிதன் தலையில் மலம் சுமப்பது, இன்றும் சில தினக்கூலிகள் சாக்கடையில் முங்கி முத்துக்குளிப்பது இவையெல்லாம் நம் நாட்டின் சாபங்கள். கண்டிப்பாய் வெட்கம். அவலம். ஆனால் இதற்கு யாரைக் கேள்வி கேட்பது? ஓட்டு ஒரு ஆயுதமா இல்லை அதை துருப்பிடிக்க விட்டோமா? இல்லை இதற்கு நாடையே அழிப்பேஎன் என்பதா தீர்வு? கேள்விகள் நிறைய. ஆனால் எந்தக் கேள்விக்கும் வன்மம், வன்முறை, அழித்தொழித்தல் பதிலே இல்லை -

அன்புடன் ரகு நாதன்.

****

இந்திய மண்ணில் வாழும் எல்லா மக்களும் இந்திய தேசியத்தின் இறையாண்மைக்கு அடிமைகளாக இருக்க வேண்டுமென்று சொன்னது யார்? அந்த இந்திய தேசியம் இந்து தேசியமே. அதை ஏற்க மறுக்கும் கருத்துச்சுதந்திரம் இங்கு ஒவ்வொரு சுதந்திர சிந்தனையாளனுக்கும் உண்டு. தமிழ் தேசியம் ஒருபோதும் இந்திய தேசியத்துக்கு அடிமையாகாது என்பதை நீர் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய இறையாண்மை பேசுபவர்கள் சொல்வது இந்து இறையாண்மையைத்தான். இந்து வெறியை மட்டுமே நீர் எழுதுகிறீர். எஸ்.வி.ராஜதுரையின் இந்து இந்தி இந்தியா என்ற நூலை நீங்கள் படித்துப்பார்க்க வேண்டும்.

[வசைகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன]

கரு. முத்துச்சண்முகம்
***********************

அன்புக்குரிய நண்பருக்கு,

மிக்க மகிழ்ச்சி. இம்மாதிரி முத்திரை குத்தி கடிதங்கள் நிறைய வருகின்றன. உங்களால் இதைத்தான் செய்ய முடியும். உங்கள் தரப்புக்காக இதை பிரசுரம்செய்கிறேன்.

நான் ஏற்கனவே சொல்லியதை சொல்லி முடிக்கிறேன். நவீ£ன தேசியங்கள் என்பவை ஒரு நிலப்பகுதியில் நீண்ட வரலாற்றுச்செயல்பாடுகளின் விளைவாக மக்கள் பரவி வாழ்ந்து மெல்லமெல்ல பொது அடையாளம் ஒன்று உருவாவதன் விளைவாக பிறக்கக் கூடியவை. இந்திய தேசியம் என்பது அவ்வாறு உருவான ஒன்று. இந்த மக்கள்பரவல் நாமறிந்த வரலாற்றுக்காலம் முழுக்க நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் எல்லா பகுதிகளிலும் எல்லா இன மத மொழி மக்களும் கலந்து வாழ்கிறார்கள். ஆகவே இது இந்தியா ஆகியது. இந்த உண்மையை உணர்ந்த தேசிய முன்னோடிகளால் உருவாக்கப்பட்டது இந்திய தேசியம். காந்தி ,நேரு போன்றவர்கள் இந்த நவீன தேசியத்தின் சிற்பிகள். அவர்கள் வகுப்புவாதிகளோ இனவாதிகளோ அல்ல . இன்றும் அவர்கள் உருவாக்கிய மத இன சார்பற்ற விழுமியங்கள் மேல்தான் இந்த நாடு கட்டப்பட்டுள்ளது. அப்படியேதான் அது நீடிக்கும் - மத மொழி இந வெறிகள் தலைதூக்காதது வரை.

இந்த நாட்டில் பக்தி இயக்கம் முதல் தலித் இயக்கம் வரை ஒரு அகில இந்திய தன்மையுடன் மட்டுமே உருவாகி இருக்கின்றன. இந்த நாட்டின் கருத்தியல் வளர்ச்சி எப்போதும் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளது. இதன் மக்களின் பொருளியல் பின்னிப்பிணைந்துள்ளது.

இந்த நவீன தேசியத்துக்கு மாற்றாக இங்கே முன் வைக்கப்படுபவை முழுக்கமுழுக்க மத மொழி இன அடிபப்டையிலான உபதேசியங்கள். அவை கோடானுகோடி மக்களை பிரித்து ஒருவரோடொருவர் போரிடச்செய்து அழிவுக்கே கொண்டுசெல்லும். பிரிவினையின் கொடுமையை நாம் நன்கறிந்தவர்கள். இந்திய இறையாண்மையை ஏன் வலியுறுத்துகிறேன் என்றால் அது அழிந்தால் இங்கே உருவாவது வெறுப்பின் அடிப்படையில் உருவகிக்கப்படும் நசிவு தேசியங்கள் என்பதனாம்லேயே.
காந்தியையும் நேருவையும் வகுப்புவாதிகளாகவும் சாதியவாதிகளாகவும் சித்தரிக்கும் எஸ்.வி.ராஜதுரையின் மோசடி நூலை நான் படித்திருக்கிறேன். அதே ஆயுதத்தை நான் எடுத்து ஈ.வே.ரா மீதும் திராவிட இயக்க முன்னோடிகள் மீது அவர் மீதும் போட முடியும் — உண்மையின் அடிப்படையில். எஸ்.வி.ராஜதுரை வாதிடுவது அவரது சாதி மேலாதிக்கம் பெறக்கூடிய, பல லட்சம் தலித்துக்களை அடிமையாக்கி, தெலுஙக்ர்களை கன்னடர்களை அகதிகளாக்கி, அதன்மீது அவரது சாதியின் வணிகக்கொடியை பறக்கவிட வழியமைக்கக்கூடிய, ஒரு தமிழ்த்தேசியத்துக்காக. அப்பட்டமான அந்த ·பாசிஸ்டுக்கு நேரு என்ற பேரை உச்சரிக்கும் தகுதியே இல்லை.காந்தி பற்றிய எஸ்.வி.ஆரின் அவதூறை அ.மார்க்ஸே இன்று ஏற்றுக்கொள்ளமாட்டார்.இந்தியாவுக்கு எதை நான் சொல்கிறேனோ அதையே மலேசியாவுக்கும் சொல்கிறேன் என நீங்கள் என் கட்டுரையை படித்தால் அறியலாம். இந்தியா போன்றே ஒரு நவீன பல்லினத் தேசியமாகவே மலேசியாவும் உருவகிக்கப்பட்டிருக்கிறது. அதில் இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பதனால் அவர்களின் மேலாதிக்கம் சற்றெ அங்கிருக்கலாம். அங்குள்ள இந்துக்கள்– தமிழர் தங்கள் உரிமைகள் பறிக்கப்படுவதாக உணர்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட அடையாளத்தால் அவர்களின் உரிமைகள் பறிக்கப்படும்போது அதே அடையாளத்தில் ஒன்று திரண்டு உரிமைகளுக்கான போராட்டத்தில் ஈடுபடுவது இயல்பானதே.
ஆனால் அது ஒருபோது அங்குள்ள மக்களுக்கு எதிரானதாக ஆகிவிடலாகாது. அங்குள்ள நவீன தேசியத்தை இனவாத தேசியத்தால் பிளப்பதாக ஆகிவிடக்கூடாது. தமிழர்களின் வாழ்க்கை அங்குள்ள இஸ்லாமிய மக்களுடன் பின்னிப்பிணைந்திருக்கிறது. அவர்களின் நம்பிக்கையை இவர்கள் ஒருபோதும் இழக்கக் கூடாது.ஆகவே முற்றிலும் நேர்நிலை நோக்கு கொண்ட அறவழிப்போராட்டமே அதற்குரியது. வெறி கிளப்பும் பேச்சுகளை நிகழ்த்தும் தமிழக சமநிலையில்லா தமிழிய, இந்துத்துவ அறிவுஜீவிகளை அவர்கள் அருகிலும் விடக்கூடாது.

இதையே நான் எங்கும் சொல்வேன். முரண்பாடுகள் மீது வெறுப்பையும் காழ்ப்பையும் கொட்டாதீர்கள். தங்கள் பலநூற்றாண்டு முரண்பாடுகளை தீர்த்துக்கொண்டு ஐரோப்பா முன்னேறுகிறது. இல்லாத முரண்பாடுகளை உருவாக்கி அவர்களிடம் ஆயுதம் வாங்கி நாம் போரிட்டு அழியத்தான் வேண்டுமா?

அவ்வளவுதான். இனி என்னிடம் சொற்கள் இல்லை.

ஜெயமோகன்

மலேசியா, மார்ச் 8, 2001

மலேசியா மறுபக்கம்

இந்தியா:கடிதங்கள்

ஜெயமோகன் அவர்களது "எனது இந்தியா" கட்டுரையும் எதிர்வினைகளும் -6

எனது இந்தியா ஒரு கடிதம், விளக்கம்
October 15, 2008 – 12:01 am

“எனது இந்தியா” என்கிற தலைப்பில் துவங்கி, “வெல்க பாரதம்” என்று முடித்து தன்னுடைய தேசப் பற்றை வெளிப்படுத்தி இருந்தார் நமது அன்புக்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள். இந்தியா தேசியத்தின் மீதான ஆழ்ந்த அவரது ஈடுபாட்டை அவரது வலைப்பூவில் எழுதுவது பற்றியோ, இந்தியா என்கிற கூட்டு இன தேசியம் சமூக, பொருளாதார முன்நகர்வுகளில் செல்வது பற்றியோ நமக்கு அவருடன் மாற்றுக் கருத்து இல்லை.

கல்வி என்ற பெயரில் சில பல கணினிக் குறியீடுகளை கற்றுக் கொண்டதன் மூலமும், மிகப் பெரும் முதலீடு செய்து, ஏறத்தாழ விலை கொடுத்து வாங்கப்பட்ட கல்விப் பட்டங்களின் மூலமும் மட்டுமே நீங்கள் வளர்க்கும் இந்திய தேசியம் உள்ளடக்கிய விவசாயம் என்கிற இழிதொழில் செய்கிற, கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்ட உழைக்கும் மக்களாகிய, இரண்டு வேலை உணவுக்கும் வழியற்ற எம் அதே இந்திய மக்களின் வளர்ச்சியில் இரட்டை வேடம் புனைவதில் தான் நாம் முரண்படுகிறோம். உலகில் இதுபோன்ற பொருளாதார, சமூக ஏற்றதாழ்வுகளால் அல்லாடும் மக்களின் வளர்ச்சி பற்றியும் நமக்கு மட்டுமல்ல, நேர்மையான எழுத்துக்களை, நடுவுநிலையோடு பதிவு செய்யும் யாருக்கும் இருக்கும், இருக்க வேண்டும்.

இருப்பினும் அவருடைய வாதங்களில் சில நமது கேள்விகளுக்கு உட்படுகின்றன….

தமிழ் இலக்கியச் சிற்றிதழ்கள் இந்திய இறையாண்மையை எதிர்க்கின்றனவா?
ஆம், மிகப் பெரும்பாலான சிற்றிதழ்கள் இந்திய இறையாண்மையை எதிர்க்கின்றன, நாமும் ஒப்புக் கொள்வோம், ஆனால், அதற்கான காரணிகளை நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும், நண்பர் ஜெயமோகன் அவர்களே, கிடைத்த நீதியை உரக்கச் சொல்லும், வெகு மக்கள் ஊடகங்களின் பக்கங்களில் கிடைக்காத நீதியை, முரசு கொட்டும் சமூக எதிர்வினைகள் தான் சிற்றிதழ் கட்டுரைகளும், நீங்கள் சொல்லும் இந்திய இறையாண்மை எதிர்ப்பும்.
தலித்தியக் குரல்களும், அவர்களுக்கான மறுக்கப்பட்ட நீதியையும் உங்களுக்குப் பட்டியல் போட்டுத் தர வேண்டுமென்றால், தொடர்ந்து இதுபோன்ற பல கட்டுரைகளை நான் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும், இருப்பினும், திண்ணியத்தில், மலம் தின்ன வைக்கப்பட்ட ஆதிக்க சாதி வெறியையும், இந்து (இந்திய) தேச நீதி அரசர்களால் பணத் தகராறாக புரிந்து கொள்ளப்படுகிற மன விகாரங்களில் இன்னுமும் வாழும் சாதீய வெறியை, வழங்கப்பட்ட நீதியின் தீராத வேதனைகளையும் தான் சிற்றிதழ்கள் உரக்கக் கூவுகின்றன.கயர்லாஞ்சிகளின் கொடுமைகளை, உத்தபுரங்களின் ஈனச் சுவர்களை, ஒரிஸ்ஸாவின் மரண ஓலங்களை, குஜராத்தின் இந்துத்துவா முகங்களின் கொடூரங்களை எழுத வக்கற்று, நீர்த்துப் போன வெகுமக்கள் ஊடக எழுத்தாளர்களை அவர்களின் கையாலாகாத் தனங்களைத் தான் நீங்கள் சுட்டிக் காட்டும் சிற்றிதழ்கள் செவ்வனே நிரப்புகின்றன. அவற்றை நீங்கள் இந்திய இறையாண்மைக்கு எதிரானதாக நீங்கள் நினைத்தால் அல்லது புரிந்து கொண்டால், உங்கள் புரிதலின் ஆழம் குறித்து நான் கவலை கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

அருந்ததிராய் ஒரு குருவி மண்டைக்காரரா?

ஒரு எழுத்தாளர் என்று ஒப்புக் கொள்ளப்பட்ட உங்கள் சக துறை சார்ந்தவரின், கருத்துரைகளுக்கான உங்கள் தெளிவான விளக்கங்களைக் கொடுப்பதை விடுத்து அவரது மண்டை குருவியைப் போன்றதா அல்லது கண் மீனைப் போன்றதா என்கிற ஆய்வுகள் ஒரு முதிர்வு பெற்ற எழுத்தாளருக்கான அடையாளங்கள் என்று பொருள் கொள்வது மிகக் கடினம். எனவே அருந்ததி ராய் மீதான உங்கள் குற்றச் சாட்டுகள் அனைத்தும் அவரைப் போல நம்மால் புகழடைய முடியவில்லையே என்கிற உங்கள் இயலாமையாகக் கொள்ளலாம். உங்களால் இயலும் என்று நம்புங்கள், அதற்கான நகர்வுகளை நோக்கி உங்கள் எழுத்தை எடுத்துச் செல்லுங்கள், உங்களைத் தவிர்க்க இயலாது என்கிற நிலையை உங்கள் ஆனித் தரமான எழுத்துக்களால் உறுதி செய்து இந்தியாவின் மிகப் பெரும் அச்சு ஊடகங்கள் என்று நீங்கள் கருதுகின்ற

“இந்தியா டுடே” இல் உங்கள் எதிர் வினையை பதியுங்கள். வாழ்த்துக்கள்.

இஸ்லாம் ஒரு தேசியக் கற்ப்பிதமா?

இந்துமதம் என்பது எப்படி ஒரு தேசியக் கற்ப்பிதமோ அதைப் போலவே இஸ்லாமிய வழியும் ஒரு தேசியக் கற்ப்பிதம், இன்று இந்துத்துவா வெறியர்களின் முகங்களான ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்க்தல், பாரதீய ஜனதா போன்றவை என்ன வழியை இந்துமதக் கூட்டத்திற்குக் கற்றுக் கொடுக்கிறதோ அதையே தான் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் எதிர்வினை செய்கின்றன. உலகெங்கும் நடக்கும் தீவிரவாதங்கள் வெவ்வேறு அடக்குமுறைகளின் வடிவங்களாகவே இருக்கிறது அல்லது கருத்தியல் சார்ந்த நெருக்கடிக்கு ஆளான மக்கள் குழுவின் ஒரு குறிப்பிட்ட செயலுக்கான எதிர் வினையாகவே இருக்க முடியும்.

ஆதலால், இந்தியாவில் நடக்கும் தீவிரவாதங்களுக்கும், உலகின் பல்வேறு நாடுகளில் நடக்கும் தீவிரவாத நிகழ்வுகளுக்கும் நீங்கள் முடிச்சுப் போட நினைப்பது எவ்வளவு சரி என்பது எனக்கு இன்னும் விளங்கவில்லை, அல்லது அதற்கான முழுமையான ஆய்வறிக்கைகளை நான் படிக்க வேண்டும், நீங்கள் அவ்வாறு படித்து, உலகெங்கும் நடக்கும் பல்வேறு நாடுகளின் தீவிரவாதமும், இந்தியாவில் நடக்கும் தீவிரவாதமும் ஒரே காரணத்துக்காக நடக்கிறது என்கிற முடிவுக்கு வந்திருந்தால் ஒரு வேலை உங்கள் கருத்து சரியானதாக இருப்பதற்கு, இருப்பதாக நம்புவதற்கு உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. வெகு மக்களை நம்ப வைப்பதில் இந்திய பார்ப்பனீய ஊடகங்கள் கண்ட வெற்றியை ஒரு தமிழ் எழுத்தாளரையும் நம்ப வைத்து இப்போது அவரது சுய சிந்தனையை மழுங்கடித்து இருக்கின்றன என்கிற ஒரு செய்தி கொஞ்சம் கவலைக்குரியது.

காஷ்மீர் இஸ்லாமியத் தீவிரவாத விளைநிலமா?

காஷ்மீர் பற்றிய வரலாற்று உண்மைகளை அறிவதில், அதன் உள்ளீடாக இருக்கிற ஒரு உண்மையான இன எழுச்சியை நீங்கள் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது உறுதியாக எனக்குப் புரிகிறது, 1846 ஆம் ஆண்டில் இருந்து குலாப் சிங் காலத்தில் துவங்கி ரன்பீர் சிங், பிரதாப் சிங் என்கிற கொடூர இந்துத்துவா முகங்களின் 1931 ஆம் ஆண்டு வரையிலான கொடும் அடக்குமுறைகள் மற்றும் படுகொலைகளின் எதிர்வினைகள் தான் இன்று வரை காஷ்மீர் மக்கள் சந்திக்கும் அவலம் என்பது காஷ்மீர் வரலாற்றைப் படிக்கும் யாருக்கும் மிக எளிதாகவே புலப்படும், உங்களுக்கு புலப்படுமா இல்லையா என்பது உங்கள் நடுவுநிலையின் மீதான நம்பகத்தன்மையின் கேள்வி. அதனை நீங்கள் தான் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

இறுதியாக தேசத்தின் மீதான அன்பு செலுத்துபவர்கள் பாவிகளா?

இல்லை, நானும் உங்களோடு சேர்ந்து இந்த தேசத்தின் மீது அன்பு செலுத்துகிறேன், ஆனால், ஒரு சமத்துவமான சமூக வாழ்நிலையை நோக்கிய சிந்தனைகளோடு, பொருளாதார பகிர்வுகளோடு, அனைவருக்குமான கல்வி என்கிற உயரிய நோக்கோடு என் தேசத்தை நானும் நேசிக்கிறேன், அந்த தேசம், எம் இனமக்களை கொல்வதற்கு ஆயுதங்கள் கொடுக்காத வரை, என்மொழியை ஆலயங்களில் அவமதிக்கின்ற மணியாட்டிகளின் பின்னால் செல்லாத வரை என்னுடைய நேசத்தில் உங்கள் அளவிற்கு ஆழம் இருக்காது.

நானும் உங்களைப் போல இந்த தேசத்தை நேசிக்கும் காலம் வர வேண்டும் என்கிற ஆசைகளுடனும், கனவுகளுடனும்….

தோழமையுடன்

கை.அறிவழகன்
பெங்களூரில் இருந்து.

அன்புள்ள அறிவழகன்,

நான் எழுதியிருப்பதில் இருந்து நீங்கள் அதிகமாக ஒன்றும் வேறுபடவில்லை. ஒரு கோபத்தைத்தவிர என்றே எண்ணுகிறேன். நான் என் அரசியல் சமூகவியல் நம்பிக்கைகளில் மிதவாதி என்று சொல்லிக்கொள்ள என்றுமே தயங்கியதில்லை. கொந்தளிப்புகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. எந்த ஒரு சமூக மாற்றமும் சீரான நீண்டகால கருத்தியல் செயல்பாடுகள் மூலம் மட்டுமே நிகழ முடியும் என்றும் அதுவே நிரந்தரமானது என்றும் நம்புகிறவன். எப்போதும் எதிலும் சமரசத்துக்கான ஒரு வாய்ப்பு இருக்கும் என்றும் மோதல் அழிவையே உருவாக்குமென்று உலகவரலாற்றை பலவருடங்கள் அமர்ந்து கற்று தெளிந்தவன். அறிவுஜீவிகள் பொறுப்பில்லாமல் உருவாக்கும் எதிர்மறை வேகங்கள் நீண்டகால அளவில் அழிவுகளை மட்டுமே உருவாக்கும் என்பதற்கு எனக்கு மீண்டும் மீண்டும் உதாரணங்கள் உள்ளன.

நீங்கள் குறிப்பிடும் ஒடுக்குமுறைகள், சமூக அநீதிகள் உங்கள் அளவுக்கே எனக்கும் மனக்கொந்தளிப்பை உருவாக்குகின்றன என்பதை மட்டுமே என்னால் ஆத்மார்த்தமாகச் சொல்ல முடியும். அத்தகைய அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுக்கவும் போராடவும் கூடியவனாகவே இருக்கிறேன். ஒரு போதும் தனிவாழ்வில் சாதி மத அடிப்படைகளுக்குள் நான் சிக்கியதில்லை.
நண்பரே, ஒடுக்கப்பட்டோர் ஒருங்குதிரண்டு அரசியல் சக்தியாக மாறி அதிகாரத்தை அடைவதற்கான வாய்ப்புகளை திறந்து விட்டிருக்கும் ஒன்றாகவே இந்த ஜனநாயகம் இன்றும் உள்ளது என்பதை மாயாவதியை மட்டும் வைத்தாவது நீங்கள் ஏற்பீர்கள் என நினைக்கிறேன். நம்மைச்சுற்றியிருக்கும் எந்த தேசத்திலும் இன்று இத்தகைய எளிய வாய்ப்புகூட இல்லை என்பதை மட்டும் உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.

இந்நிலையில் பிரச்சினைகளின் உண்மைநிலையை ஆராயவும் அதன் தீர்வுகளை நோக்கிச் செல்லவும் தேவையான சமநிலை கொண்ட ஆய்வு நோக்குக்குப் பதிலாக மக்களிடையே அவநம்பிக்கைகளை தூண்டிவிடவும் வன்முறைகளுக்கு தூபம் போடவும் கூடிய விதத்திலேயே நம் அறிவுஜீவிகள் எழுதுகிறார்கள். வரலாற்று நோக்கு கொண்ட எவருமே ஒரு மக்கள் திரளின் துயரங்களுக்குக் காரணம் இன்னொரு மக்கள் திரளே என்ற எண்ணத்தை விதைக்க மாட்டார்கள். அத்தகைய எண்ணங்கள் பேருருவம் கொண்டு இன்று ஆப்ரிக்கா போன்ற மூன்றாமுலக நாடுகளை உதிரத்தில் மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றன.

அத்தகைய முரண்பாடுகளை நம் நாட்டில் உருவாக்குவதற்கான சர்வதேசச் சதியின் ஒருபகுதியாக இவர்கள் கூலிபெற்று எழுதுகிறார்கள் என்பது என் உறுதியான எண்ணம். என்னிடம் நம் முற்போக்கு அறிவுஜீவிகள் சென்ற 10 வருடங்களில் எந்தெந்த ·பாசிச, இனவெறி, மதவெறி அமைப்புகளின் விருந்தினர்களாகச் சென்று வந்தார்கள், எங்கெங்கே நிதிவசதி பெற்றார்கள் என்பதற்கான ஆதாரங்கள் பல உள்ளன. தொகுத்து எழுதும் எண்ணம் உண்டு.

சிற்றிதழ்கள் சமூக அநீதிகளை தோலுரிக்கட்டும். போர்முரசுகளைக் கொட்டட்டும். ஆனால் ஒன்றுமட்டும் அவர்கள் உணரவேண்டும், இந்த நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் பிறரை ஒழித்துக்கட்ட சதா நேரமும் சதிசெய்துகொண்டிருக்கும் கொடூரக் கொலையாளிகள் அல்ல. மதக்கலவரம் வந்ததுமே மண்ணெண்ணை டப்பாவுடன் தெருவில் இறங்கும் மிருகங்களும் அல்ல. எளிய லௌகீக வாழ்க்கைக்காக ஒவ்வொருநாளும் வியர்வை சிந்துபவர்கள். அவர்களுக்கு மரபு உருவாக்கிக் கொடுத்த நல்லதும் தீயதுமான அனைத்திலும் மூழ்கி வாழ்பவர்கள். அவர்கள் மனசாட்சி உள்ளவர்கள்தான். சகமனிதர்களை விரும்பக்கூடியவர்கள்தான். தியாகமும் பெருந்தன்மையும் கொண்டவர்கள்தான். அவர்களை இழிவுசெய்யாதீர்கள். அவர்களை பிறரது எதிரியாக ஒவ்விரு முறையும் சித்தரிக்காதீர்கள், அவ்வளவுதான்

ஆம்,சிக்கலான வரலாற்று ,சமூகப்பின்புலம் கொண்ட இந்த நாட்டின் சடங்குகளில் ஆசாரங்களில் வாழ்க்கைமுறைகளில் சமூக வைப்புகளில் எத்தனையோ அநீதிகள் உள்ளன. அவை தொடர்ச்சியான கருத்தியல் போராட்டங்கள் மூலம் மாறி வருகின்றன. இன்னும் வெகுதூரம் செல்லவேண்டியுள்ளது. சக மனிதர் மேல் வெறுப்பில்லாமல் அதைச் செய்ய முடியும். இந்த மண்ணில் நாம் சேர்ந்து வாழ்ந்தாக வேண்டும். ஒருவரை ஒருவர் கொன்று குவித்து எவரும் விடுதலையை அடையப்போவதில்லை.

இந்த தேசம் ஒரு புனித கற்பனை என்று நான் எண்ணவில்லை. இந்த தேசத்தை இந்து தேசிய கற்பிதமாகவும் நான் எண்ணவில்லை. இந்த தேசியத்துக்கான மூலங்களை தொன்மையான பெருமிதங்களில் தேடவும் இல்லை. மாறாக சென்ற பத்து நூற்றாண்டுகளுக்கும் மேலாக இங்கே மக்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து வாழ்ந்ததன் மூலம் இயல்பாக இங்கே ஒரு தேச அமைப்பு உருவாகியிருக்கிறது. தமிழர் பெருங்கூட்டம் இல்லாத இந்தியப்பகுதி இல்லை. எந்த இந்திய நிலத்திலும் பலமொழி பல இன பல மத மக்கள் கலந்துதான் வாழ்கிறார்கள். இந்தப்பரவல் காரணமாக இயல்பாக உருவான ஒரு தேசியம் இது. பேதங்களை பெருக்கி இந்த தேசத்தை உடைத்தால் ஆப்ரிக்கா இன்று காணும் குருதிக்களத்தை நாளை நம் நாடும் காணும். அதற்காகவே காத்திருக்கின்றன ஆயுதம் விற்கும் நாடுகள்.

இந்திய தேசியம் இன்று ஒரு நவீன நிலம் சார் தேசியமாகவே முன்வைக்கபப்டுகிறது. காந்தியும் நேருவும் அம்பேத்கரும் உருவாக்கியளித்த இந்த நவீன தேசிய உருவகமே நமது பெரும் வலிமை. இதை இழந்தால் நாம் அழிவோம். இதை இந்து தேசியம் என்று முத்திரைகுத்தி இந்த தேசியத்துக்கு மாற்றாக முன்வைக்கப்படும் மொழிவழி , மதவழி தேசியங்கள்தான் முழுக்கமுழுக்க ·பாசிஸத்தில் வேரூன்றியவை. தொல்பழங்காலப் பெருமையில் ஊறியவை. சமீபத்தில் அருந்ததியர் பற்றிய ஒரு வினாவுக்கு தமிழ்த் தேசியவாதி ஒருவர் திட்டவட்டமாக பதில் சொன்னார், அவர்களுக்கு தமிழ் தேசியத்தில் இடமில்லை, அவர்கள் தமிழ்தேசியத்தின் அகதிகள்தான் என. இங்குள்ள 40 சதவீத தெலுங்கு மக்கள் துரத்தப்படவேண்டும் என. இந்த ·பாசிசத்த்தானே இந்திய தேசியம் என்ற நவீன உருவகத்துக்கு மாற்றாக நம் அறிவுஜீவிகளும் சிற்றிதழ்களும் முன்வைத்து வருகின்றன.

இந்த மண்ணில் சமூக மாற்றம் நிகழவேண்டுமானால், இந்த மண்ணில் பொருளியல் வளார்ச்சி சற்றேனும் நிகழ்ந்து இங்குள்ள கோடானுகோடி மக்கள் பட்டினியை உதற வேண்டுமானால் இது தன் முரண்பாடுகளை களைந்து கொண்டே ஆக வேண்டும். ஒரு சமூகமாக ஒருங்கிணைந்து முயன்றாக வேண்டும். அதற்கான வாய்ப்புகள் தேடி வரும் வேளை இது. அந்த வளர்ச்சி நிகழ்ந்துகொண்டும் இருக்கிறதென இந்நாடெங்கும் பயணம் செய்யும் என்னால் சொல்ல முடியும். இந்நிலையில் முரண்பாடுகளை பெருக்கவும் மோதல்களை வளர்க்கவும் செய்யப்படும் பொறுப்பில்லாத முயற்சிகள் என்னை கொதிக்கச் செய்கின்றன.

உரிமைகளுக்காக போராடுவதும் அதிகாரத்துக்காக திரள்வதும் இந்த தேசத்தை அழித்து, முந்நூறு வருட பழமை கொண்ட ·பாசிச மொழிவெறி மதவெறி தேசியங்களுக்கு உதவுவதாக அமைய வேண்டிய அவசியம் இல்லை. கயர்லாஞ்சி அல்லது திண்ணியம் என்றீர்கள். அந்த கொடுமைகளுக்கு எதிராக ஒரு மாபெரும் தேசியப் பெரும் சக்தியாக திரள்வதில் இருந்து உங்களை தடுப்பது எது? உங்களை விட ஒடுக்கப்பட்டிருக்கும் அருந்ததியரை அன்னியர் என்று வெளியே தள்ள உங்களுக்கே கற்பிக்கும் நசிவுவாத ·பாஸிச தேசிய உருவகம் எது? சிந்தியுங்கள் நண்பரே.

காஷ்மீரின் வரலாறு எனக்கும் தெரியும். நான் சொல்வதை நிரூபிக்கும் தகவலையே நீங்களும் சொல்கிறீர்கள். மதவெறியின் அடிப்படையில் தங்களை ஒரு தேசியமாக எண்ணும் காஷ்மீரி முஸ்லீம்களுக்கு அங்கே இருந்த மன்னராட்சி ஒரு கா·பிரின் கொடுங்கோல் ஆட்சியாக படுகிறது. இஸ்லாமிய விடுதலைக் கனவை அவர்கள் அந்தப் புள்ளியில் இருந்தே தொடங்குகிறார்கள். அதேபோல பார்த்தால், இந்தியாவைவே இஸ்லாமியர் பலநூறு வருடம் ஆண்டிருக்கிறார்கள். படையெடுப்புகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். வரலாற்றுச் சின்னங்களையும் வழிபாட்டு இடங்களையும் அழித்திருக்கிறார்கள். இந்து சாம்ராஜ்யக் கனவு கொண்ட ஒரு இந்துமதவாதி இந்துகள் இந்தியாவில் 900 வருடங்களாக ஒடுக்கப்பட்டிருந்தார்கள் என்று சொன்னால் நீங்கள் ஏற்பீர்களா? நான் ஏற்க மாட்டேன். அது வரலாற்றின் சென்ற பக்கம். அதிலிருந்து இன்றைய இந்தியாவை உருவாக்குவது ·பாஸிசம். இன்றைய இந்தியா இன்றைய தேவையின் அடிப்படையில் மட்டுமே உருவாகமுடியும். அப்படி உருவான ஒன்று இது.

இந்தியாவில் உள்ள எல்லா நிலப்பகுதிகளும் மன்னர்களால்தான் ஆளப்பட்டிருந்தன. அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒடுக்குமுறையாளர்களே. அவர்களில் நவாபுகள் பற்பலர். சுதந்திர இந்தியா அந்த காலகட்டத்தில் இருந்து மீண்டுதான் இன்றைய வளார்ச்சியை அடைந்திருக்கிறது. நவாபுகள் எங்களை ஒடுக்கினார்கள் அதனால் எங்களுக்கு இந்து தேசம் வேண்டும் என்று அவத் சம்ஸ்தான மக்கள் சொன்னால் நான் அதை பைத்தியக்காரத்தனம் என்பேன்.

காஷ்மீர் மக்கள் அவர்களே தெளிவாக மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள், அவர்கள் தேடுவது ஒரு இஸ்லாமிய அரசை, ஒரு தாலிபானிய அரசை என்று. தமிழ்க இஸ்லாமிய இதழ்கள் ஒவ்வொன்றும் அதை மீண்டும் மீண்டும் வழிமொழிகின்றன. நம் சிற்றிதழ்கள் மட்டும் ஏன் அதை ஒரு ஜனநாயக விடுதலைபோராட்டம் என்று பிடிவாதமாக விளக்க முனைகிறார்கள்?அதை மட்டுமே எளிய இந்தியக் குடிமகனாக நான் கேட்கிறேன்.

தலித்துக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்று சொல்லி இங்குள்ள எளிய இஸ்லாமிய இளைஞனின் நெஞ்சில் இந்த நாடு மீதும் இங்குள்ள பெரும்பான்மை மக்கள் மீதும் கடும் வெறுப்பை உருவாக்குவதா சிற்றிதழ் அறம்? அதன்மூலம் இங்கே சமூக வன்முறையை உருவாக்கி இங்குள்ள குறைந்த அளவு தொழில் வளர்ச்சியைக்கூட காவு கொடுப்பதா சிற்றிதழ்ச் சிந்தனை? பிகாரில் கயர்லாஞ்சியில் பசுவை உரித்த தலித்துக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று சொல்லி தமிழ்தேசியம் பேசி இங்கே பசுவைத்தின்னும் அருந்ததியரை அகதிகளாக துரத்த வேண்டும் என்று வாதிடுவதா சிற்றிதழ் அறம்? புரியவேயில்லை நண்பரே.

நான் காஷ்மீர் மக்களுக்காகவும் ஆழமாக வருந்துகிறேன். மதவெறி ஏற்றப்பட்ட எளிய மக்கள் அவர்கள் எந்த திசை நோக்கிச் செலுத்தபப்டுகிறார்கள் என்றே அறிவதில்லை. உதிரத்தில் மிதித்து நடந்து அறிவு ஜீவிகள் மறுபக்கம் சென்று விடுவார்கள். கீழே உள்ள மக்கள்தான் காலந்தோறும் அழிவார்கள். கா·பிரின் கீழ் வாழமுடியாது, இந்து தேசம் தங்களை அழிக்கும் என்று சொல்லபப்ட்டதை நம்பி இஸ்லாமிய தேசிய வெறியுடன் பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்த பிகாரி முஸ்லீம்கள் இன்றும் அங்கே ரத்தம் சிந்துகிறார்கள். ஏதாவது பாகிஸ்தானி நாளிதழை எடுத்து புரட்டிப்பாருங்கள்.

இந்த தேசம் இங்குள்ள ‘உங்கள் இன’ மக்களுக்கு எதிராக ஆயுதம் அளிக்கிறதா? எப்படி உங்கள் மனதில் அந்த சித்திரம் உருவானது? எவரால்? எந்த அடிப்படையில்? அந்தரங்கமாக ஒருகணம் சிந்தனை செய்து பாருங்கள், உங்களுக்கே உண்மை புரியும். அதன் பிறகு உங்கள் நடுநிலைமையும் நியாய உணர்வும் அனுமதித்தால் அதை வெளியே சொல்லுங்கள்.

போராடும் அனைவருக்கும் வாய்ப்புகளை அளிக்கிறது இந்த நாடு. பிகாரில் மாயாவதியின் வெற்றி ஓர் உதாரணம். இந்தநாடு மிகமிகச் சிக்கலானது. எண்ணற்ற சாதிகளும் உபசாதிகளும் கொண்டது. இதன் இயங்கியலில் தெரிந்தும் தெரியாமலும் பலநூறு சக்திகள் செயல்படுகின்றன. ஒவ்வொன்றும் இன்று விழித்தெழுந்து தங்கள் பங்குக்காக குரலெழுப்புகின்றன. அந்த மோதலின் இயங்கியல்தான் இப்போது நிகழ்வது. போராட்டத்தின் நீதிகளும் அநீதிகளும் உண்டு. ஆனாலும் அந்த போராட்டம் நிகழ்வதே வளர்ச்சியின் அடையாளம்தான்.

அந்த தேவை பலவகையான கருவிகளைக் கண்டடைகிறது. சிறந்த உதாரணம் ஆந்திரத்தில் சிரஞ்சீவி. ஆந்திரத்தில் காப்பு சாதியும் தலித் சாதியும் அரசியலதிகாரம் இல்லாது விடபப்ட்டிருந்தன. அவை ஒன்றாக திரண்டால் மட்டுமே அதிகாரத்தைக் கோரும் எண்ணிக்கை பலம் வரும். அது எளிதாக இல்லை. ஆனால் இப்போது படங்களில் தலித்தாக நடித்த ஒரு காப்பு அரசியலுக்கு வரும்போது சட்டென்று அந்த இணைவு சாத்தியமாகிறது. அதை ஆந்திரத்தில் கண்கூடாக காண முடிகிறது. தவறோ சரியோ இப்படித்தான் நண்பரே அதிகாரக் கையகப்படுத்தல் நிகழ்கிறது. உங்கள் கொள்கை முழக்கங்களின் அடிபப்டையில் அல்ல.

இந்த ஒட்டுமொத்த உரிமைப் போராட்டமும் இந்த ஜனநாயக அமைப்பு அளிக்கும் முடிவிலா சுதந்திரத்தின் மீது நிகழ்த்தப்படலாம். இந்த போராட்டம் வன்முறை இன்றி நிகழலாம். வெறுப்பில்லாது நிகழலாம். அதை நிகழ்த்தும் விதமாக எழுதுவதே எழுத்தாளனின் கடமையாக இருக்கமுடியும். தன்னை புரட்சிப்புயலாக காட்டிக்கொள்வதற்காக வெறுப்பை உமிழும் அரைவேக்காட்டுத்தனம் அல்ல எழுத்தாளனின் கடமை.

வரலாற்றை நீங்கள் புரிந்துகொள்ளும் முறை தவறு. முதிர்ச்சி இல்லாதது, கோபதாபங்களால் மட்டுமே உருவானது என்று சொன்னால் கோபித்துக் கொள்ளமாட்டீர்களே. ‘மணியாட்டி’களின் சாதியத்தைக் காணும் உங்களுக்கு நமது ‘தமிழியர்’களின் அதைவிட உக்கிரமான சாதிக்காழ்ப்பு கண்ணில் படவில்லை — உத்தப்புரத்துக்குப் பின்னரும் கூட.

நீங்களும் என்னுடன் சேர்ந்து இந்நாட்டின் மீது அன்புசெலுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சமத்துவத்துக்காக, தன்மானத்துக்காக, விடுதலைக்காக அந்த அன்பின் அடிப்படையில் ஒன்று திரண்டு முயல்வோம். அது எளிதாக, உடனடியாக இருக்காதென்றாலும் நம் குறிக்கோள் அதுவாக இருக்கட்டும். நம்மை எவரும் பிரிக்காமல் இருக்கட்டும். நூறாண்டுகால போராட்டத்தால் நாம் அடைந்தவற்றை சண்டையிட்டு இழக்காமல் இருப்போம்.
ஜெ

ஜெயமோகன் அவர்களது "எனது இந்தியா" கட்டுரையும் எதிர்வினைகளும் -5

எனது இந்தியா:கடிதங்கள்
October 14, 2008 – 11:59 pm

அன்புள்ள ஜெயமோகன்,

நீங்கள் எனது இந்தியா கட்டுரைக்கு எழுதிய விளக்கக் குறிப்பைப் படித்தபோது என்னுடைய பேராசிரியரின் ஒரு வரியை நினைவுகூராமல் இருக்க முடியவில்லை. கூறப்பட்ட தளம் வேறாக இருந்தாலும் இரு வரிகளுக்கு நடுவே உள்ள பொதுத்தன்மையைக் கண்டு நீங்கள் ஆச்சரியமடைவீர்கள் என்று நினைக்கிறேன். நான் எப்போதும் ஒரு கருத்து சார்ந்த உள்ளடக்கத்தையே தேடுகிறேன், தகவல் சர்ந்த உள்ளடக்கத்தை அல்ல. அது என் பேராசிரியரிடமிருந்து நான் கற்றுக்கொண்டது. அத்தகைய விஷயங்களை உங்கள் கட்டுரையில் கண்டேன், அது என்னை மிகவும் கவர்ந்தது.

‘There was one complaint voiced by everyone against my paper: that my thesis is not backed up by examples. My answer is that I am not aiming at a thesis or an idea as such. I am, on the other hand, recording an experience of mine because it is the result of my thought. It is easier to dismiss it than to disagree with it. I am sensible of the mischief of turning it into ‘ideas’ and of arguing, with some persuasive force, against it. The point of it is certainly self-evident, though it is not obvious if one is not false in one’s application of mind. I have not written anything which I didn’t feel at first, and contemplate later. You may not agree with me, but that is not because I am wrong but because you want things to be different from the way I want them to be.’
( http://www.angelfire.com/tv2/proftvs/indian_writing_in_english.htm )

I was reminded of that passage when I read this note of yours:

‘என் கட்டுரையின் இயல்¨ப்பபற்றி முதலில் தெளிவுபடுத்துகிறேன். அது ஆராய்ச்சிக்கட்டுரை அல்ல…அத்தகைய விவாதம் என்பது ஒரு தர்க்கப்பயிற்சி விளையாட்டு மட்டுமே.

என்னுடைய கட்டுரை உணர்வு சார்ந்தது. நான் அடைந்த மன எழுச்சியை மட்டுமே அதில் சொல்ல முயன்றிருக்கிறேன். ஓர் எழுத்தாளனாக, ஓர் இந்தியக்குடிமகனாக. இத்தகைய கட்டுரைகளுக்கு அதை வாசிப்பவர் எழுதியவரின் உணர்ச்சிகளை அடையாளம் கண்டுகொண்டால் மட்டுமே மதிப்பு. இல்லையேல் எந்த மதிப்பும் இல்லை. என் உணர்ச்சிகள் உண்மையானவை, நேர்மையானவை என்று உங்களுக்குத் தோன்றவில்லை என்றால் அக்கட்டுரையை நிராகரித்துவிட்டு செல்லலாம். அது வாசகனிடம் எதையும் விவாதித்து, ஆதாரம் காட்டி நிறுவ முற்படவில்லை.’

- vishvesh

***

அன்புள்ள ஜெயமோகன்,

எனது இந்தியா கட்டுரையை ஒரு நண்பர் எனக்கு அனுப்பிக்கொடுத்தார். அதன் பின்னர்தான் நான் உங்கள் இணையதளத்தை படித்தேன். அக்கட்டுரை பொதுவான பல்லாயிரம் வாசகர் மத்தியில் சென்றிருக்கிறது. நான் யாரிடமெல்லாம் அதைப்பற்றிபேசினேனோ அவர்கள் அனைவருமே அதைப் படித்திருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு கட்டுரை இந்த அளவுக்கு விரிவாக பேசபப்ட்டதில்லை. என் நண்பர்கள் சிலர் கூடி அதைப்பற்றி ஒரு விவாதம் நடத்தினோம். அரசாங்கத்தை எதிர்ப்பதும் சமூக அமைப்பை எதிர்ப்பதும் நம் நாட்டில் சட்டென்று அத்து மீறிச்சென்று நாட்டை எதிர்ப்பது அதன் மூலம் இந்த சமூகத்தின் எல்லா பிரிவுக்கும் இடையே அவநம்பிக்கையை உருவாக்கி சமூகத்தின் செயல்பாட்டையே குலைப்பது என்ற அளவுக்குச் சென்றிருக்கிறது. இதைப்பற்றிய கவலை எங்களுக்கு எல்லாமே உண்டு. அந்தக்கவலையை உங்கள் கட்டுரை பிரதிபலித்ததாலேயே அது இத்தனை பிரபலமாயிற்று என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்வதுபோல உங்களை முத்திரை குத்த சிற்றிதழ் எழுத்தாளர்கள் முயல்வார்கள்.
அவமானம்செய்வார்கள். ஆனால் நிலைமை மாறி வருகிறது என்பதை நம் சிற்றிதழ் எழுத்தாளர்களுக்குச் சொல்லக்கூடிய ஒரு முன்னோடி குரலாக உங்கள் கட்டுரை இருக்கிறது என்பதை அவர்கள் காலம் கடந்தாவது உணர்வார்கள்.

சிவசங்கரன்

[தமிழாக்கம்]

***

அன்புள்ள ஜெயமோகன்

உங்கள் கட்டுரை எனது இந்தியா இப்போதுதான் எனக்கு படிக்கக் கிடைத்தது. சமீபகாலமாக இத்தனை நேரடியான உணர்ச்சிபூர்வமான ஒரு கட்டுரையை படிக்க நேர்ந்தது இல்லை. நம்மை நாமே எப்படியெல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை காட்டிய கட்டுரை அது. நம்முடைய பத்திரிக்கையாளர்களைப்பற்றி நீங்கள் சொல்வது உண்மை என்றால் அது மிகமிக ஆபத்தான ஒன்றுதான்

சுப்ரமணியம் குமார்

அன்புள்ள நண்பருக்கு,

நம் இதழாளர்கள் குறிப்பாக முற்போக்கு என்று சொல்லிக்கொள்ளும் இதழாளர்களைப்பற்றி என்னால் இப்போது உறுதியாக பல தகவல்களைச் சொல்ல முடியும். அவர்களில் பலர் கீழ்த்தரமான இனவாதிகளாகவும் மதவாதிகளாகவும் மேலைநாடுகளிலேயே முத்திரை குத்தப்பட்ட அமைப்புகளுடனும் மனிதர்களுடனும் நேரடியாக தொடர்பு கொன்டவர்கள். அத்தகவல்களை எனக்கு இதழாளர்களே அனுப்பி உதவினார்கள்.அதை விரிவாக எழுதுவேன்.

ஜெயமோகன் அவர்களது "எனது இந்தியா" கட்டுரையும் எதிர்வினைகளும் -4

இந்தியா:கடிதங்கள்
October 12, 2008 – 3:09 am

அன்புள்ள ஜெயமோகன்

எனது இந்தியா என்ற உங்கள் கட்டுரையின் உணர்ச்சி வேகம் எனக்கு புரிகிறது. ஒரு தேசம் என்ற அளவில் நாம் நம்மை உணர்வதை மெல்லமெல்ல இழந்து வருகிறோம். நம்மை இனமாக மொழியாக மதமாக மட்டுமே பார்க்க பழகி வருகிறோம். இந்த நாட்டின் பொறுப்பில்லாத ஜனநாயகமே அதற்கு நம்மை முதலில் பழக்கியது. பொறுப்பில்லாத அறிவுவாதிகள் இப்போது அடுத்த அத்தியாயத்தை எழுதுகிறார்கள்.
ஒரு தேசமாக நாம் ஏன் இருக்கவேண்டும் என்றால் நாம் ஏற்கனவே ஒரு தேசமாக இந்த மண்ணில் பரவி விட்டிருக்கிறோம் என்பதனால்தான். தமிழன் இல்லாத இடமே இல்லை இந்தியாவில். மலையாளி இல்லாத இடமே இல்லை. நம்முடைய விதிஒன்றோடு ஒன்று பிணைந்துள்ளது. நாம் ஒன்றுபட்டு கைகோர்த்து நடந்தால் ம்ட்டுமே முன்னேற முடியும். வழ முடியும். பிரிந்தால் ஒருவரை ஒருவர் வீழ்த்துவோம். ஒருவரை ஒருவர் அழிப்போம்.

இந்தியாவை பிரிக்கும் எந்த ஒரு கோஷமும் பெரும் மக்கள்பெயர்ச்சிக்கும் பேரழிவுக்கும் மட்டும்தான் வழிகோலுகிறது. இருபத்தைந்து ஆண்டுக்காலம் முன்பு ஈழத்தில் ஒரு அறிவுஜீவிக்குழு தனிநாடு என்ற பிரிவினையை எழுப்பியது. ஒருநாடாகப்பிரியுமளவுக்கு அங்கே தமிழர்கள் உள்ளனரா, நிலப்பகுதி உண்டா, மக்கள் சேர்ந்து வாழ்கிறார்களா என்ற எந்த கணக்கும் பேசபப்டவில்லை. அந்த மக்கள் பெற்ரதென்ன? பேசிய அறிவுஜீவிகள் எவரும் அம்மண்ணில் இன்று இல்லை. அவர்கள் வெளிநாடுகளில் போய் வாழ்க்கையை அமைத்துக்கொன்டுவிட்டார்கள். அங்கே எளியமக்கள் ரத்தம் சிந்துகிறார்கள்.

அந்த நிலை இந்தியாபோன்ற ஒருநாட்டுக்கு வந்தால் அதுவே உலக வரலாற்றின் ஆகப்பெரிய மானுட அழிவாக இருக்கும். ஒன்று மட்டும் உறுதி, நம் விதிகள் சேர்ந்து கட்டப்பட்டுள்ளன. இந்து முஸ்லீம் கிறித்தவர்களின் விதிகள். தமிழர் தெலுங்கர் கன்னடர் வடைந்தியரின் விதிகள். நாம் சேர்ந்து சென்றால் வெல்லலாம். பொறுப்பற்ற அரைவேக்காட்டு அறிவுஜீவிகளை நம்பினால் கூண்டோடு அழிவோம். அவர்கள் இந்நாட்டின் ஆத்மாவில் செலுத்தபப்ட்ட விஷம் போன்றவர்கள். அவர்கள் இந்நாட்டை அழிக்கும் ஐந்தாம்படையினர். இந்த விழிப்பையே எளியமக்களான நாம் இன்றுஅ டைய வேண்டியிருக்கிறது

மாணிக்கம்சென்னை [தமிழாக்கம்]

***

ஜெயமோகன்,

காஷ்மீரை பற்றி பேசுபவர்கள், லடாக், ஜம்மு, வடக்குப் பகுதிகள் (Gilgit) பற்றி பேசுவதில்லை. ஏனென்றால் லடாக் மற்றும் ஜம்முவில் இந்திய அரசுக்கு எதிராக கோஷம் போடுவதில்லை. பாகிஸ்தான் வசம் இருக்கும் வடக்குப்பகுதி மக்கள் கண்டுகொள்ளபடுவதேல்லை. நாங்கள் எந்த முறையில் ஆட்சி செய்யப்படுகிறோம் எனக்கேட்டு அவர்கள் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இவர்கள், சீனாவின் திபேத், துருக்கி & ஈராக்கின் குர்து, ஆப்கானிஸ்தானின் ஹஸாரா, மலேசியாவின் சீன&தமிழர் என எதைப்பறறியும் பேசுவதில்லை. ஏன்? அதற்கு கொஞ்சம் முயற்சி செய்ய வேண்டும்.

நம்முடைய நாட்டை விமரிசிப்பவர்களிடம் நான் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்க ஆசைப்படுகின்றேன்.

இதற்கு தீர்வாக அவர்கள் எந்த ஆட்சிமுறையை/எதனை சொல்லுகிறீர்கள்?
வெறுப்பு உமிழும் கொளுகை பிரச்சாரம் எல்லாம் அட்டைகத்தி சமாசாரம் தான். யாரையாவது எதாவது வேலை செய்ய சொன்னால் தெரியும் அவர்கள் கொளுகை.

நல்லவைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கோவையில் சிறுதுளி, பழநியில் மலை பாதுகாப்பு இயக்கம்.. என ஒவ்வொரு மாவட்டதிலும், மாநிலத்திலும் யாராவது இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நல்லவைகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். பஞ்சாப்பில் ஒருத்தர் ஒரு நதியையே உயிர்பித்து இருக்கிறார். பக்கமாக வந்த தகவல் அறியும் சட்டத்தை கொண்டும் இயக்க முடியாத அரசு இயந்திரத்தை மக்களுக்காக இயக்குகிறார்கள். இவர்கள் வெறுப்பு உமிழும் அதே நேரத்தில் தான், மகாராஸ்டிராவில் கிராம மக்கள் சேர்ந்து அம்பானி குழுமத்தை ஓட்டுப்போட்டு வெளியே அனுப்புகிறார்கள்.

மேலே சொன்னவையெல்லாம் ஒரு சிறு துளி மட்டுமே. இந்தியா அழிந்து போகும் என எத்தனையோ பேர் எவ்வளவோ முறை ஆருடம் கூறிவிட்டார்கள். ஆனாலும் இந்தியா வாழ்ந்தது, வாழ்கிறது, வாழும், எந்த வரையறைக்குள்ளும் சிக்காமல்.

ராஜசங்கர்.

இதைப்பற்றி தேடிய பொழுது கிடைத்த சுட்டிகள்.

http://www.rediff.com/news/2007/apr/19bsp.htm
http://www.fourhourworkweek.com/blog/2007/12/11/how-to-negotiate-like-an-indian-7-rules/
http://timesofindia.indiatimes.com/Columnists/S_Tharoor_Indias_linguistic_diversity/articleshow/3346890.cms
***

அய்யா,உங்கள் சமிபத்திய “எனது இந்தியா” எனும் கட்டுரையை வாசித்தேன் அப்படியே எனது மன நிலையை படம் பிடித்தது போல உள்ளது நான் அரபு நாட்டில் பணி புரிந்து வருகிறேன் என்னுடன் கிட்ட தட்ட ஆசிய நாடுகளை சேர்ந்த அனைவரும் பணி புரிகின்றனர் மதியம் உணவு கூடத்தில் உணவு அருந்தும் வேளையில் தமிழன் தமிழனோடும் சீனன் சீனனோடும் பிலிபினோ பிளிபிநோவோடும் அமர்ந்து உணவு அருந்துவார்கள் இது மொழியால் ஏற்பட்ட இணைவு (same country /same vernacular) ஆனால் இஸ்லாமியர்கள் மட்டும் இந்தியா ஸ்ரீலங்கா பாகிஸ்தான் பங்களாதேஷ் இந்தோனோசிய மொழி நாடு பேதம் இன்றி அமர்ந்து உணவு அருந்துவார்கள் (religious unity)குறிப்பாக இவர்கள் அனைவருக்கும் இந்து மதம் பற்றி ஒரு ஏளன பார்வையும் இந்தியா துவேசமும் நிறைய உண்டு என்பதை கண்கூடாக கண்டிருக்கிறேன் நான் அடிக்கடி பங்களாதேஷ் நண்பர்களிடம் சொல்லுவதுண்டு உன் நாட்டை உருவாக்க இந்தியர்கள் தம் இன்னுயிரை தந்தனர் ஆனால் உனக்கு கொஞ்சம் கூட இந்தியாவின் மேல் விசுவாசம் கிடையாது இந்தியாவிலே கூட தினசரி பல்வேறு போராட்டங்கள் பல்வேறு பொது பிரச்சினைகளை மைய படுத்தி தினம் தோறும் நடந்து வருகிறது ஆனால் எங்காவது ஒரு இஸ்லாமியர் மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி நடத்தப்படும் போராட்டங்களை கலந்து கொண்டோ அல்லது ஆதரித்தோ இருப்பார்களா ?

thangaraj nagendran

**

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் கட்டுரை உணர்ச்சி வேகத்தால் சமநிலையை இழந்ததாக உள்ளது. இந்திய அறிவுஜீவிகள் தங்களை புரட்சியாலர்களாக காட்டிக்கொள்வதில்லை. லிபரலாக காட்டிக் கொள்கிறார்கள். அவர்களைப்பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சியின் மதவெறி அஜெண்டா என்பது இந்நாட்டைஅ ழிவுக்குக் கொண்டுசெல்லக் கூடியது. அதை எந்தவகையிலேனும் தடுத்து நிறுத்த வேண்டும். ஆகவே அதற்கு எதிரான நிலைபாட்டை அவர்கள் எடுக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சியின் மத அரசியலை தோலுரிக்கிறார்கள். அதற்கான சான்றாதாரங்களை சேகரித்து வெளிப்படுத்துகிறார்கள். பாப்ரி மஸ்ஜித் இடிப்பு , குஜராத் கலவரம் ஆகியவற்றைப்பற்றிய உண்மைத்தகவல்களை வெளிக்கொண்டுவந்தது அவர்களே. அவர்களின் பணி இந்தியச் சூழலில் போற்றத்தக்கதே. அவர்கள் இல்லாவிட்டால் இங்கே மதவெறி கட்டுக்கு மீறி சென்றுவிட்டிருக்கும். இதை நீங்கள் உணரவேண்டும்.

கணேஷ்குமார்மதுரை

***

அன்புள்ள ஜெ


உங்கள் கட்டுரையைப் படித்துக் கொன்டிருந்தேன். அருந்ததியின் கட்டுரைக்கு உடனடியாக நம்மூர் நகல்கள் உருவாகும் என்று எண்ணினேன். முடிக்கவில்லை. அதற்குள் இந்த மெயில் வந்தது. அதேதான் பாருங்கள்கண்ணன்

காசுமீரத்தை நசுக்கும் இந்துத்துவமும் இந்தியமும் - சில குறிப்புகள்: தியாகு

http://thamizhthesam.keetru.com/

ஜெயமோகன் அவர்களது "எனது இந்தியா" கட்டுரையும் எதிர்வினைகளும் -3

எனது இந்தியாவைப்பற்றி….
October 11, 2008 – 2:13 pm

அன்புள்ள ஜெயமோகன்

உங்கள் எனது இந்தியா கட்டுரை படித்தேன்.

சில கேள்விகள் எழுகின்றன. இந்திய இறையாண்மையை மறுக்கிறார்கள் எனும் பெரும் குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளீர்கள். ஆனால் அதற்கான முழுமையான சான்றுகளை குறிப்பிடத் தவறிவிட்டீர்கள் என்றே தோன்றுகிறது.//

ஆனால் இவை அனைத்துக்குமே பொதுவான ஒரு அம்சம் உண்டு. கண்மூடித்தனமான இந்திய எதிர்ப்பு. இந்த நாடு முழுக்க முழுக்க அநீதி மீது கட்டப்பட்டு ஒவ்வொரு நிமிடமும் அநீதியால் இயக்கப்படுவதென்பதில் இவர்களுக்கு ஐயமே இல்லை. இதன் போலீஸ், நீதிமன்றம், அரசாங்கம் , மதங்கள், பண்பாட்டு அமைப்புகள் அனைத்துமே முழுக்க முழுக்க அநீதியை மட்டுமே செய்துகொண்டிருப்பவை என இவை நேரடியாகவும் மறைமுகமாகவும் வாதிடுகின்றன. சிறுபான்மையினர், தலித்துக்கள், பழங்குடியினர் போன்றவர்கள் இந்த தேசத்துக்கு எதிராக கிளர்ந்தெழவேண்டுமென இவை அறைகூவுகின்றன. இந்த தேசத்தின் இறையாண்மை என்பது தான் இந்த நாட்டு மக்களின் உண்மையான முதல் எதிரி என இவை பிரச்சாரம் செய்கின்றன.// இந்தியாவில் இப்படி தன்னை கைவிடப்பட்டவர்களாக, ஒடுக்கப்பட்டவர்களாக எண்ணுகின்ற சமூகங்கள் இல்லை என்கிறீர்களா? அவர்களுக்காக எழும் குரல்கள் எல்லாமே இந்திய இறையாண்மையை எதிர்க்கின்றனவா? இறையாண்மையின் பலன் சட்டத்தின் ஆட்சி அல்லவா? அப்படி சட்டத்தின் ஆட்சி கலைந்த காலங்கள் இல்லையா? அவற்றை நீங்களே சுட்டிக்காட்டியுள்ளீர்களே. சிற்றிதழ்களை சமூகத்தின் விமர்சகனாக நான் காண்கிறேன்.

இந்தியாவை அதன் அரசியல் சமூக இயக்கத்தை விமர்சனம் செய்வது இந்திய இறையாண்மைக்கு எதிரானதா? இல்லை இதழாளர்கள் எல்லோருமே தீவிரவாத அறைகூவல் விட்டுக்கொண்டேயிருக்கிறார்களா? காஷ்மீரப் பிரச்சனை இன்று உலகளாவி வளர்ந்திருக்கும் தீவிரவாதப் போக்குகளுக்கு மிகவும் முந்தையதில்லையா? இன்னும் ஆதாரங்களுடன் மேற்கோள்களுடன் கட்டுரையை தந்திருக்கலாம் எனத் தோன்றியது.ஜனநாயகம் நிதானமாக இருக்கவேண்டியதன் அவசியம் என்ன?

நாம் இந்தியா வெல்க என மந்திரம் சொல்லிக்கொண்டேயிருந்தால் அது வென்றும் வாழ்ந்தும் விடாதே. ஜனநாயகத்தை துரிதப்படுத்த சிந்தனையாளர்களின் சாடல்கள் தேவையே என நினைக்கிறேன். இந்த மக்களால் என்ன செய்துவிட இயலும் எனும் எண்ணம் கொண்ட ஜனநாயகம் சவாதிகாரத்தைவிட மோசமானது.மதத்தின் பேரிலும் மற்ற பிரிவினைகளினாலும் நாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் நம் முன்னோர்களின் தர்மங்கள் கூட கைவிட்ட பல சமூகங்கள் இந்த நாட்டில் தங்களின் இடங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றன.

அவர்களிடம் ஜெய் ஹிந்த் சொல்லச் சொல்வது நாகரீகமானதாகத் தெரியவில்லை. மதக் கும்பல்களின் தாக்குதலுக்குப் பயந்து காட்டுக்குள் பதுங்கி வாழும் மக்களிடம் ஜெய்ஹிந்த் சொல்லச் சொல்வது சரியாகுமா? தன் நாட்டின் இராணுவமே தன் இளம் பெண்களின் கற்பை பறிக்கும்போது ஜெய்ஹிந்த் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? பாதுகாப்பான உயரங்களில் வாழும் நம்மால் மட்டுமே அப்படிக் கூறிவிட முடியும் என்பதை உணர்ந்துகொண்டே சொல்கிறேன்

‘இந்தியா வாழ்க!’‘இந்தியா வாழ்க!’

–Regards,Cyril Alex

http://www.cyrilalex.com
***

அன்புள்ள சிறில்

என் கட்டுரையின் இயல்¨ப்பபற்றி முதலில் தெளிவுபடுத்துகிறேன். அது ஆராய்ச்சிக்கட்டுரை அல்ல. இப்படி அரசியல் சார்ந்த விஷயத்தில் தகவல்களை தொகுத்து ஆராய்ந்து ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை எழுதுவதற்கு எனக்கு அவகாசமோ மனமோ இல்லை. நான் அத்தகைய கட்டுரைகளை நம்புவதும் இல்¨. நம் அச்சு ஊடகத்தில் அத்தகைய கட்டுரைகள்தான் நிரம்பிக் கிடக்கின்றன. நான் ஏராளமான மேற்கோள்களை காட்டி இக்கட்டுரையை ஒரு ஆய்வுக்கட்டுரையாக எழுதியிருந்தால்கூட அதற்கு அதேயளவுக்கு விரிவான மறுப்புக் கட்டுரையை எழுத ஒரு அரசியல் எழுத்தாளரால் முடியும். மேற்கோள்களை அவர் வேறு வகையில் வாசிக்கலாம், திரிக்கலாம். எதுவுமே சாத்தியம். அத்தகைய விவாதம் என்பது ஒரு தர்க்கப்பயிற்சி விளையாட்டு மட்டுமே.

என்னுடைய கட்டுரை உணர்வு சார்ந்தது. நான் அடைந்த மன எழுச்சியை மட்டுமே அதில் சொல்ல முயன்றிருக்கிறேன். ஓர் எழுத்தாளனாக, ஓர் இந்தியக்குடிமகனாக. இத்தகைய கட்டுரைகளுக்கு அதை வாசிப்பவர் எழுதியவரின் உணர்ச்சிகளை அடையாளம் கண்டுகொண்டால் மட்டுமே மதிப்பு. இல்லையேல் எந்த மதிப்பும் இல்லை. என் உணர்ச்சிகள் உண்மையானவை, நேர்மையானவை என்று உங்களுக்குத் தோன்றவில்லை என்றால் அக்கட்டுரையை நிராகரித்துவிட்டு செல்லலாம். அது வாசகனிடம் எதையும் விவாதித்து, ஆதாரம் காட்டி நிறுவ முற்படவில்லை.
நான் என் கட்டுரையில் எழுதிய விஷயங்களுக்குத் தேவையான தகவல்களை அந்தக் கட்டுரையிலேயே அளித்திருக்கிறேன். தமிழ்ச் சிற்றிதழ்களில்வெளிவந்த கட்டுரைகள், இஸ்லாமிய இதழ்களின் தலையங்கங்கள் முதலியவை. இக்கட்டுரைகளை அவை பயன்படுத்திக்கொள்ளும் விதம். ஒருவர் அந்த கட்டுரைகளை வாசித்து நான் சொல்லும் உணர்ச்சியை புரிந்துகொள்ள முடியும் என்று எண்ணுகிறேன். இவை எவையும் ரகசியமான, சிக்கலான தகவல்கள் அல்ல. பொதுவாக வாசகர்கள் அனைவருமே வாசித்திருக்கக் கூடிய விஷயங்கள் மட்டுமே. பெரும்பாலான கட்டுரைகள் இணையத்திலேயே கிடைக்கின்றன.
உங்கள் கடிதத்தில் நான் என் கட்டுரையில் சொல்லியிருக்கும் விஷயங்கள் மிகவும் விலகிப்போய் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதைக் காண்கிறேன். என் தரப்பை மட்டும் மீண்டும் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

1. இந்தியாவின் அரசமைப்புக்கு எதிராக கருத்துச் சொல்வதை அல்லது போராடுவதை அல்லது இந்திய அமைப்பை ஒட்டுமொத்தமாக மாற்றுவது குறித்த கனவை நான் ஒருபோதும் நிராகரிப்பவனல்ல. அத்தகைய அனைத்துப் போராட்டங்களையும் நான் ஏற்கிறேன் என்றே என் கட்டுரையில் திட்டவட்டமாகச் சொல்கிறேன். சூழலியல் சார்ந்து அத்தகைய பல கட்டுரைகளை நானே எழுதியிருக்கிறேன். சமூக வளர்ச்சியின் முரணியக்கத்தில் ஒவ்வொரு கருத்தியல்தரப்புக்கும் அதற்கான பங்களிப்பு உண்டு. சமூகஅமைப்பு மீதான எதிர்ப்பும், அரசு எதிர்ப்பும் எந்த ஒரு ஆக்கபூர்வமான சமூகத்திலும் இன்றியமையாதனவே ஆகும். அறிவுஜீவிகளோ சிற்றிதழ்களோ அரசாங்கத்தை விமரிசிக்கக் கூடாது என்று நான் சொல்வதாக நீங்கள் புரிந்துகொண்டிருப்பது சற்றே சோர்வளிக்கிறது.


ஒரு நாடு அல்லது சமூகம் கட்டப்பட்டிருக்கும் அறவியல் சமூகவியல் அடிப்படைகளை அதைவிட மேலான அறவியல்,சமூகவியல் அடிப்படைகளை முன்வைத்து சிந்தனையாளர்கள் மாற்றியமைக்க முயல்வது இன்றியமையாதது. எந்த ஒரு மேலான இலக்கியப்படைப்பும் அதையே செய்கிறது. ஆனால் இங்கே நடப்பது அது அல்ல. அறிவுஜீவிகள் எனப்படுபவர்கள் எந்தவிதமான அற அடிப்படையும் இல்லாமல் அழிவை மட்டுமே முன்வைக்கிறார்கள். வெளிப்படையான அறமின்மையை நியாயப்படுத்துகிறார்கள். அறிவுஜீவிகள் என தேசிய ஊடகங்களில் குரல்கொடுப்பவர்கலில் பெரும்பாலானவர்கள் கருத்துக்களின் அடிப்படை நேர்மையோ வரலாற்று நோக்கோ இல்லாத பரபரப்பு இதழாளர்கள். அவர்கள் உருவாக்கும் ஆபத்தைப்பற்றி மட்டுமே என் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். இந்த அமைப்பை அழித்து அவர்கள் உருவாக்க எண்ணும் அமைப்பு எது என்ற கேள்வியே என் கட்டுரையில் உள்ளது.

இந்த அமைப்பு புனிதமானது முழுமையானது என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் இந்த அமைப்பு அளிக்கும் சாத்தியங்களை விட மேலான ஒன்றை இவர்களால் கற்பனை செய்ய முடியவில்லை என்றே சொல்கிறேன். இனவெறி, மதவெறி ·பாசிச அமைப்புகளைத்தான் மாற்றாக வைத்து இவர்கள் பேசுகிறார்கள் என்கிறேன். இவர்கள் சொல்லும் முற்போக்குவாதம் ஒவ்வொன்றும் இந்த தேசத்தை இருளுக்கு இட்டுச்செல்லும் மதவெறிக்கு நேரடியாகவே ஆயுதமாகிறது என்பதை என் கட்டுரையில் குறிப்பிடுகிறேன். மீண்டும் மீண்டும் அதை சிற்றிதழ்களில் நான் கண்டுகொண்டிருக்கிறேன்.

2. இந்தியாவின் இறையாண்மை சர்வ வல்லமை மிக்கதல்ல. இந்தியா போன்று பலநூறு சக்திகளால் ஊடுருவப்பட்டு பல்வேறு பண்பாட்டு , வரலாற்று காலகட்டங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு தேசத்தில் சட்டத்தின் ஆட்சி என்பது சாதாரண விஷயமும் அல்ல. ஆனால் மிக நிதானமாக மிகச்சிக்கலான ஒரு விதத்தில் அது இந்தியாவில் வலுப்பெற்று வருகிறதென்றே நான் எண்ணுகிறேன். உதாரணம் நான் இருபது வருடம் முன்பு கண்ட ஆந்திராவுக்கும் இன்றைய ஆந்திராவுக்கும் உள்ள வேறுபாடு.
எந்த ஒரு அரசாங்கத்திற்கும் அடக்குமுறைக் குணம் என்ற ஒன்று உள்ளுறைந்து இருக்கும். முற்றிலும் அடக்குமுறை தன்மை இல்லாத அரசே இருக்கமுடியாது. அரசு என்பது அடக்குமுறையையும் சமரசத்தையும் மாறி மாறிச் செய்து கொண்டிருக்கும். அச்சமூகத்தில் இருக்கும் பல்வேறு அதிகார சக்திகள் நடுவே ஒரு நடுநிலைப்புள்ளியாக அரசு செயல்பட்டவாறிருக்கும். அரசு என்பதே அதுதான். ஆகவே ஒரு சமூகத்தில் அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் நடப்பதும் இயல்பானதே. அதுவும் அச்சமூகத்தின் இயங்கியலின் ஒரு பகுதிதான். எந்த அரசுக்கும் இது பொருந்தும். இங்கே மீண்டும் மீண்டும் அத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மீண்டும் மீண்டும் நீதிக்கான சீற்றக்குரல்கள் எழவும்செய்கின்றன.


இந்தியா போன்ற முரண்பாடுகள் மிக்க ஒருநாட்டில் மக்களுக்குள் கலவரங்களும் பூசல்களும் நடப்பதையும் வரலாற்று ரீதியாகவே புரிந்துகொள்ள வேண்டும். பதினேழாம் நூற்றாண்டு ஐரோப்பாவின் அல்லது அமெரிக்காவின் சூழல் இங்கே இன்று உள்ளது. [ஐரோப்பா பிற நாடுகளை காலனியாதிக்கம் மூலம் சுரண்டி தன் முரண்பாடுகளை அதில் மூழ்கடித்தது] இங்கே நம் நாட்டில் நூற்றாண்டுக்கால தூக்கத்தில் இருந்து விழித்தெழும் பலநூறு சமூகங்கள் அதிகாரத்திலும் வளங்களிலும் தங்களுக்கான பங்கை கோருகின்றன. ஆகவே முரண்பாடுகளும் மனக்கசப்புகளும் எப்போதும் வெடிக்கக் காத்திருக்கின்றன. அவநம்பிக்கைகள் மிக எளிதில் உருவாகின்றன.

அத்தகைய ஒரு மோதல் உருவாகும்போது எல்லாச் சந்தர்ப்பத்திலும் இந்திய அரசு திகைத்துச் செயலற்று நிற்பதையே நாம் காண்கிறோம். அதிநவீன ஐரோப்பிய அரசுகளில்கூட மக்கள் கலவரங்களில் இறங்குகையில் அரசு எளிதில் அதைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. இன்னும் நவீனமயமாதல் நிகழாத நிர்வாக அமைப்பு கொண்ட இந்தியாவில் அது மேலும் சிரமமாக ஆகிறது. இங்குள்ள மாபெரும் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது இங்குள்ள காவல் அமைப்பு கேலிக்கூத்து என்று சொல்லுமளவுக்குச் சிறியது. இங்கு இன்னமும் மக்கள் பல்லாயிரமாண்டுக்காமாக கடைப்பிடித்துவரும் சுய நிர்வாக அமைப்புகளால்தான் ஒழுங்கு பேணப்படுகிறது. ஆனால் அத்தனை சிக்கல்களையும் மீறி, பிந்தியானாலும் இங்கே சட்டம் அதன் பிடியை விட்டுவிடுவதில்லை என்றே நான் எண்ணுகிறேன்.

இப்படி பாதிக்கப்பட்டும் மக்கள் எல்லாம் இங்கே இந்திய அரசுக்கும் அமைப்புக்கும் எதிராக திரும்பிவிடுவதில்லை. அவர்கள் நீதி கேட்கிறார்கள் . போராடுகிறார்கள். அமைப்புகளை தங்களருகே கொண்டு வருகிறார்கள். அதற்கான பலநூறு வழிகளை இந்த அரசியல் அமைப்பும் சமூக அமைப்பும் முன்வைக்கத்தான் செய்கின்றன.

நான் கேட்பது எளிய வினா. இங்குள்ள அறிவுஜீவிகளில் பெரும்பான்மையினர் இத்தகைய ஒரு சூழலில் நீதிக்காகவும் புரிதலுக்காகவும் அமைதிக்காவும்தான் முயல்கிறார்களா? அவநம்பிக்கைகளை களைய முயல்கிறார்களா? குறைந்த பட்சம் தமிழ் சிற்றிடஹ்ழ்கள் இஸ்லாமியர்களின் அவநம்பிக்கையை வன்மத்தைக் களைய முயல்கின்றனவா? இல்லை என்பதையே நான் ஒவ்வொரு நாளும் கண்டுகொண்டிருக்கிறேன். முரண்பாடுகளை ஊதிவிடுகிறார்கள், ஐயங்களை பெருக்குகிறார்கள், கசப்¨ப்பம் கோபத்தையும் விரிவாக்குகிறார்கள். அனைத்துக்கும் காரணம் இந்த அமைப்பே என்று சுட்டிகாட்டுகிறார்கள். நதிநீர் தாவா, மத மோதல், போலீஸ் அத்துமீறல் அனைத்துக்கும் காரணம் இந்த அமைப்பு. இதற்கு எதிராக கிளர்ந்தெழவேண்டும் என்கிறார்கள்.


உதாரணம் சொல்கிறேன், பல்லாயிரம் பேருக்குச் சோறுபோடுவது நாமக்கல் கோழிபப்ண்னை உலகம். கடந்த ஐம்பதாண்டுக்காலத்தில் படிபப்டியாக ஊறி உருவான ஒன்று அது. ஓர் மத, இன, மொழி அதிருப்தியை தூண்டிவிட்டு நாமக்கல்லில் ஒரு பத்து வெடிகுண்டை வெடிக்கச்செய்ய நம் அறிவாளிகள் சிலரால் முடியும். அதன்பின் நாமக்கல் மீளவேண்டுமானால் பல ஆண்டுகள் பிடிக்கும். பல்லாயிரம் வயிறுகள் காயும். நம் அறிவுஜீவிகள், இதழ்கள் செய்துகொண்டிருப்பது இந்த வெறிகிளப்பும் வேலையை மட்டும்தானே? இதைத்தான் நான் கேட்கிறேன் . இந்த அமைப்பு அளிக்கும் அனைத்துச் சுதந்திரங்க¨ள்யும் பயன்படுத்தியே இதைச் செய்கிறார்கள். இது பொறுப்பின்மை மட்டுமல்ல இதைச்செய்பவர்கள் இதன்மூலம் பெரும் பொருளியல் லாபமும் பெறுகிறார்கள். இதன்மூலம் உருவாகும் அழிவுக்கு அவர்களே பொறுப்பு என்கிறேன்

அதைவிட, இந்த அமைப்பு அளிக்கும் வாய்ப்புகளில் நம்பிக்கை உண்டு என்று சொல்பவன் , இந்த மரபில் நம்பிக்கை கொண்டவன், இந்த நாடு சமரசமாக வாழமுடியும் முன்னேர முடியும் என்பவன் எப்படி இவர்களால் பிற்போக்குவாதி என்றும் மதவாதி என்றும் முத்திரையிடப்பட்டு பழிக்கப்பட்டவனாக, குரலற்றவனாக ஆனான் என்று நான் கேட்கிறேன். அந்த அரசியல் கெடுபிடி எந்த சக்தியால் உருவாக்கப்பட்டது என்று கேட்கிறேன். அந்த குரலுக்கே ஊடகங்களில் இடமில்லை என்று எப்படி ஆயிற்று? ஒரு சூழலின் அறிவுலகம் ஒட்டுமொத்தமாகவே எப்படி அவநம்பிக்கையின் நச்சாக ஆயிற்று?

3. காஷ்மீரப் பிரச்சினையின் வேர் நான் சொல்லிய இஸ்லாமிய உலக தேசியக் கனவுதான். இஸ்லாமை ஒரு மதமாக உருவகிக்காமல் அதை ஒரு தேசியக் கருத்தியலாக முன்வைக்கும் இஸ்லாமிய முல்லாக்களும் அரசியலாளர்களும்தான். அவர்கள்தான் தேசப்பிரிவினைக்குக் காரணம். அவர்களே காஷ்மீரிலும் ஆப்ரிக்கநாடுகளிலும் ருஷ்யாவிலும் எல்லாம் நிகழும் ஏராளமான ரத்தப் போராட்டங்களுக்குக் காரணம். இன்றைய தீவிரவாதப்பிரச்சினை எதுவும் இப்போது தோன்றியதல்ல, அனைத்துக்குமே நூறாண்டுகால வரலாறு உண்டு.

4. இந்த நாட்டின் ‘கைவிடப்பட்ட’ குடிமக்கள் இந்த நாட்டுக்கு எதிராக கிளர்ந்திருக்கிறார்கள என்ன? எந்த இடத்தில் நிகழ்ந்திருக்கிறது அது? அவர்கள் தங்கள் உரிமைக்காக போராடுகிறார்கள். அதுவே இயல்பானது. ஆனால் உங்களையும் என்னையும் விடவும் மிகமிக பாதுகாப்பான தந்த கோபுரத்தில் இருந்துகொண்டு நம் அறிவு ஜீவிகள் அவர்களுக்கு வெறியேற்றுகிறார்கள். அழிவை உருவாக்கும்படி ஆணையிடுகிறார்கள். அந்த அழிவு உருவான பின் இந்த அறிவுஜீவிகள் அந்த அழிவுக்கு அம்மக்களையே பொறுப்பும் ஆக்குவார்கள். அதுவல்லவா நடக்கிறது?


5. ஜனநாயகம் ஏன் மெல்ல நடக்க வேண்டும்? அது ஓடினால் நல்லதுதான். ஆனால் அது மெல்லத்தான் நடக்கிறது. வேறு வழி இல்லை. ஒற்றையின ஒற்றை மொழி ஒற்றை பண்பாடுகொண்ட சிறு சமூகங்களில் ஜனநாயகம் சற்றே வேகம் பிடிக்கக் கூடும். இந்தியா போல மிகமிகச் சிக்கலான முரண்பாடுகள் மிக்க சமூகத்தில் அது மிக மெல்லத்தான் செயல்பட முடியும். காரணம் ஒவ்வொருவருக்கும் இங்கே அவர்களுக்கான தேவை இருக்கிறது. எவரையுமே உதாசீனப்படுத்தமுடியாது என்பதே நடைமுறை. இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கு ஜனநாயகம் மட்டுமே மீட்பாகும். மிகப் பொறுமையாக, மீண்டும் மீண்டும் உரையாடலில் ஈடுபட்டு, மீண்டும் மீண்டும் சமரசம் செய்துகொண்டு, மெல்லமெல்லத்தான் இந்த நாடு முன்னகர முடியும். அந்த இணக்கம் எப்போது சற்று பிழைக்கிறதோ அப்போதெல்லாம் அழிவுதான் உருவாகும். நமக்கு குரூரமான முன் அனுபவங்கள் உள்ளன

*
இந்த இந்தியப்பயணத்தில் நான் இந்தியா எங்கும் உருவாகி வரும் திடமான சீரான வளர்ச்சிப்போக்கைக் கண்டேன். குறிப்பாக தென்மாநிலங்கள் மிகவேகமான வளர்ச்சிப்போக்கில் இருக்கின்றன. கிராமங்கள் விழித்தெழுந்திருக்கின்றன. வறுமையின் சாயல் மறைந்திருக்கின்றது. காரணம் தென்மாநிலங்கள் தங்கள் சமூக முரண்பாடுகளை பெருமளவில் தீர்த்துக் கொண்டிருப்பதுதான் என்று தோன்றியது

அதற்கு மறுபக்கமாக ஒரு அச்சமும் மனதிலெழுந்தது. இந்த வளர்ச்சியை அன்னிய சக்திகள் கண்டிபாக விரும்பாது. அவை இதற்குள் விஷம் செலுத்தவே முயலும். இந்தியா மட்டுமே இன்று உள்நாட்டுக்கலகங்கள் கட்டுமீறாத நிலையில் வளர்ச்சி நோக்கிச் செல்லும் ஒரே ஆசிய நாடு. ஆகவேதான் மீண்டும் மீண்டும் பெங்களூர் குறிவைக்கப்படுகிறது. அத்தகைய ஒரு செயல்பாட்டுக்கு கருத்தியல் முட்டுக்கொடுக்க அவர்கள் அறிவுலகக் கூலிப்படைகளையும் நாடுவார்கள். அது நம்மிடையே மிக மலிவு.
மேலும் இந்த வளர்ச்சி அனைத்துச் சமூகப்பிரிவுகளையும் பேராசை கொள்ளச் செய்கிறதென்றும் தோன்றியது. தென்மாநிலங்களில் சிறிய நகரங்களில்கூட கட்டுமானப்பணிகள் உச்சவேகத்தில் நிகழ்வதைக் கண்டால் நிலமும் வளங்களும் கடுமையாக மோதலுக்குப்பின்னரே பகிரப்படும் என்று தோன்றியது. எல்லா நகரங்களிலும் தெரிந்த பஜ்ரங் தள்ளின் ஆவேசம் என்னை மிகவும் அச்சுறுத்தியது. இந்த நகர்ப்புற லும்பன் அமைப்பு இப்போது சிறுநகர்களிலும் ஊடுருவி இருக்கிறது. வருகாலத்தில் இந்தியாவின் நகர்ப்புற கலகங்களில் இது பெரும்பங்கு வகிக்கும்

‘அடுத்த 25 வருடங்களில் இந்தியா ஒரு பொருளியல் வல்லமை ஆக மாறும் அல்லது உள்நாட்டுக்கலவரத்தால் அழியும்’ என்று சொல்லிக் கொண்டேன். வீடுதிரும்பி வந்து கிடந்த நாற்பதுக்கும் மேற்பட்ட இதழ்களை வாசித்தபோது இரண்டாவது எண்ணமே வலுப்பட்டது. ஒரு உள்நாட்டுக்கலவரத்தை தூண்ட என்னென்ன செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்ய அறிவுஜீவிகள் முயல்வதையே நான் கண்டேன். எந்தவித பொறுப்பும் இல்லாத வெறியேற்றும் கருத்துக்கள். சமநிலையற்ற தர்க்கங்கள்


மதவெறியால் இந்த நாடு பெரும் ரத்தத்தைக் காணக்கூடுமென்ற அச்சம் என்னை வாட்டுகிறது. இந்துத்துவ அமைப்புகளைப்போலவே அதைத் தூண்டி விடும் அழிவுச் சக்திகளாகத்தான் நான அருந்ததி ராய் போன்றவர்களையும் காண்கிறேன் .என் கட்டுரை அந்த உணர்ச்சியின் வெளிப்பாடே
இத்தகைய ஒரு கட்டுரைக்குபின் அதை திரித்து ஒடித்து வளைத்து விளக்கி முத்திரையடித்து மீண்டும் மீண்டும் எழுதப்படும். அந்த இயந்திரம் வேலையை இதற்குள் ஆரம்பித்திருக்கும். என் பதில் மௌனம் மட்டுமே

மிக அபாயகரமான ஒரு விளிம்பில் நிற்கிறது தேசம். சமரசம், மீண்டும் மீண்டும் சமரசம், பொறுமை, நம்பிக்கை, உரையாடல் மூலமே இந்த காலகட்டத்தை நாம் தாண்டிச்செல்ல முடியும். அவ்வாறே ஆகுக.

ஜெயமோகன்

ஜெயமோகன் அவர்களது "எனது இந்தியா" கட்டுரையும் எதிர்வினைகளும் -2

எனது இந்தியா:கடிதங்கள்

October 10, 2008 – 1:34 pm

அன்புள்ள ஜெ,

முதலில் இப்படி ஒரு கட்டுரை [ எனது இந்தியா ] எழுதியதற்காக எனது மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும். மனதின் ஆழம் சென்று தைக்கும் முத்தான வாக்கியங்கள் ஒவ்வொன்றும்.இந்த தேசத்தின் அடிப்படை பலம் இதன் அறவுணர்வு. புராணங்கள் , இதிகாச காலம் தொடங்கி இன்றும் அறுபடாது நம்மை இணைக்கும் , முன்னடத்தும் இழை அது.அநீதி இங்கு இல்லை என்பது இல்லை.ஆனாலும் , அறம் அதனை வென்றபடியே வந்திருக்கும் மிகச்சில தேசங்களில் தலையாயது இது.உங்கள் கட்டுரை அதனை தெளிவாக முன்வவைக்கிறது.உங்களோடு இணைந்து உரக்கக் கூவுவதில் பெருமிதம் கொள்கிறேன் “வெல்க பாரதம்”அன்புடன்,மதி
****

அன்புடன் ஜெயமோகனுக்கு

கடந்த வார குமுதம் இதழ் அரசு பதில்களில் தீவிரவாதிகள் பற்றிய இரு கேள்விகள்…

முதல் கேள்வியில் தீவிரவாதிகளிடம் சகோதரத்துவத்தையும் அன்பையும் கடைப்பிடிக்க வலியுற்த்தும் ஆசிரியர், அடுத்த கேள்வியிலேயே தீவிரவாதிகளை வெறி பிடித்த சைக்கோ என்று வர்ணிக்கிறார்… இத்தகைய முரண்பாடுகளை நம் எல்லா ஊடகஙளிலும் மீண்டும் மீண்டும் காண முடிகிறது.இது போன்ற எளிய முரண்பாடுகளைக் கூட கவனிக்க முடியாத அளவில் தான் பெரும்பாலான் வாசகர்கள் இருக்கிறார்கள் என்பது மிகவும் வருந்தத்தக்கது.

அருந்ததி ராயின் கருத்துக்களும், மேடைப் பேச்சுக்களில் ஒவ்வொரு கைத்தட்டலுக்கும் அவர் வெட்கப் படும் விதமும் ஒரு சிறுவயது பள்ளிச் சிறுமியின் தோற்றத்தையே ஞாபகப்படுத்துகிறது. (ஆனால்… நீங்கள் குறிப்பிட்டது போல் வெட்கப்படும் போதுதான் ஒரு பெண் மிகவும் அழகாக இருக்கிறாள்). பள்ளிச் சிறுமிக்கு PhD பட்டம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அதுதான் வேதனை.

‘படிப்பறிவில்லாத சமூகத்தில் ஜன நாயகம் என்பது கும்பல் அராஜகமாகவே முடியும்’ என்ற ப்ளேட்டோவின் கருத்துக்கு ‘படித்த அரசியல் வாதிகள் எல்லாம் அராஜகத்தில் ஈடுபடுவதில்லையா’ என்று பாமரத்தனமாக எதிர்வினையாற்றிய வாசந்தி போன்றவர்கள், அருந்ததி ராய், ஆர்,பி,வி.எஸ்.மணியன் போன்றோர் எல்லாம் அறிவுஜீவியாக வலம் வருவது மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம்.

ஆனாலும் உங்களைப் போன்ற சிந்தனையாளர்கள் மீதும், ஜக்கி வாசுதேவ் போன்ற ஆன்மீகவாதிகள் மேலும் எனக்கு அபார நம்பிக்கை உண்டு. 1000 ஆண்டு இருளை ஒரு தீக்குச்சி ஒரு நொடியில் அழித்துவிடும். 1000 கோணல் சிந்தனைகளை ஒரு உயர்ந்த சிந்தனை காலம் கழித்தேனும் நொறுக்கி விடும்.
வெல்க பாரதம்!

நன்றி

ரத்தன்
****

மதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

இந்திய சுற்றுபயணத்தில் இருந்தபோது எழுதிய பயண கட்டுரைகள் அனைத்தையும் தவறாமல் படித்து, உடன் பதில் எழுதினால் பயணத்திற்கிடையில் தங்கள் அதைவேறு படித்து தொலைய வேண்டும் என்பதால் தற்போது எழுதுகின்றேன்.

பயணம் முடிந்து திரும்ப வீடு வந்து சேர்ந்தவுடன் சென்ற பயணத்தைப் பற்றி புதிய எண்ணங்கள் தோன்றக் கூடும் அல்லவா? அவற்றை படிக்கவும் ஆவலாக இருக்கிறேன். உங்கள் பயணக் கட்டுரைகளை படிக்கும்பொழுது அதன் அடிப்படையில் எனக்கு தோன்றிய கேள்வி என்னவென்றால், தகுந்த பாதுகாப்பு இல்லாமல் இம்மாதிரி சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலையிலா நம் நாட்டின் மற்ற மாநிலங்கள் உள்ளன? தனியாக இம்மாநிலங்களை சுற்றி வரவே முடியாதா? புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் மட்டும் தான் பாதுகாப்பு கிடைக்குமா?

எனது இந்தியா கட்டுரை படித்தேன். நீங்கள் குறிப்பிடும் “குருவிமண்டை” மக்களுக்காக போராடி சிறைச்சாலையில் வாடிய கதையை நீங்கள் அறிந்ததுண்டா? அந்த தியாக மனப்பான்மையை புரிந்து கொள்ளவில்லையே நீங்கள்? கொள்கை குப்பையென்றாலும், அவரின் ஆங்கில எழுத்து நடை அற்புதமாக இருக்கும். அவரின் புக்கர் பரிசு வாங்கிய நாவல் நன்றாக இருக்குமென்றாலும், அந்த சமயத்தில் அதை விட சிறந்த நாவல்களும் இருந்தன. ஒருவேளை புக்கர் பரிசுக்கு அவைகள் போட்டி போடவில்லை போலும்.

அன்புடன்
Josh

******************
அன்புள்ள ஜோஷ்

ஒரு விஷயம் சொல்கிறேன். இந்தியாவின் மிகச்சில பகுதிகளை தவிர எங்கும் நீங்கள் எந்த பயமும் இல்லாமல் சென்றுவரலாம். பொலீஸ் பாதுகாப்பைச் சொல்லவில்லை. எந்த இடத்திலும் நீங்கள் காணும் அன்பான நட்பான மக்களை வைத்தே சொல்கிறேன். உங்களுக்கு வழி சொல்ல எட்டு பேர் பாய்ந்து முன்வருவார்கள். ஆலோசனைகள் சொல்வார்கள். கூடவந்து உதவுவார்கள். ஒப்பு நோக்க இந்தியா அளவுக்கு அமைதியான பாதுகாப்பான நாடே இல்லை. அதன் விரிந்த ஆளில்லா நிலங்கள் பொட்டல்கள் கைவிடப்பட்ட கிராமங்கள் என்று பார்க்கும் போது இந்த அமைதி மிக மிக வியப்பூட்டுகிறது. நிர்வாக எந்திரத்தின் பங்களிப்பு இல்லாமல் இயல்பாக நூற்றாண்டுக்கால கிராமிய வாழ்க்கையில் இருந்து உருவான அமைதி அது.
அருந்ததி ராய் சிறைசென்ற கதை எனக்கும் தெரியும். நர்மதா போராடம் உருவான நாள் முதல் அதில் எனக்கும் சிறு பங்கு உண்டு. மேதா பட்கர் போன்றவர்கள் அதில் அர்ப்பணிப்புடன் ஈடுபடுவதை , அவர்கள் அடையும் உலகப்புகழை கண்டு பாதியில் உள்ளே புகுந்து ஒஉ ‘ஷோ’செய்து ஊடகங்களில் அலம்பிவிட்டு விலகியவர் அருந்ததி. மேதா செய்த ஒரே பிழை அந்த போராட்டத்துக்கு உலக ஊடகங்களின் கவனம் கிடைக்கும் என்று என்ணி அவர் அருந்ததியை ‘தலைமை’தாங்க அழைத்ததுதான். நர்மதா பிரசினையின் உண்மையான சிக்கலை வெறும் பரபரப்பாக மாறிவிட்டு அடுத்த பரபரப்பை தேடிச்சென்றது குருவி

காந்தியப்போராடம் நீடித்து பிடிவாதமாக ஆர்ப்பாட்டமில்லாமல் மட்டுமே நிகழ் முடியுமென்ற ஆரம்ப பாடத்தை மேதா மீணும் கற்றுக்கொன்டர்
அருந்ததியின் நாவல் பற்றி நான் ஏற்கனவே ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறேன். ஆழமில்லாத அந்த போலி நாவல் இந்திய இலக்கியமென அடையாளம் காட்ட்ப்படுவது நம் துரதிருஷ்டம். நாம் எதை எழுதவெண்டுமென்றும் மேற்கு ஆணையிடுகிறது

ஜெ

***

அன்புள்ள ஜெயமோகன்,

சில கருத்துகள் தீவிரமாக இருந்த போதிலும், உங்கள் பதிவில் இருக்கும் மத, மொழி தாண்டிய நேர்மை சுடுகிறது. அத்தனையும் சத்தியம். போன வாரம் தன் சாரு நிவேதிதாவின் ‘இந்தியா குப்பை; தேறாது’ என்னும் பதிவை ஏறிட நேர்ந்தது.வயிறு எரிந்தது.

இன்னும் கொஞ்சம் ஆழ்ந்த தேடுதலோடு இந்த பதிவை நீங்கள் முன்னகர்த்த வேண்டும் என்பது என் விருப்பம்.கூறியிருக்கும் வெளி சக்திகள், ஆயுத பண பலங்கள், இங்கு குழி தோண்டும் ‘நமது சொந்த சகோதரர்கள்’, மற்றும் போலி அறிவு ஜீவிகள் அனைத்திற்கு நடுவிலும் ஒரே பலம், நாமும் நம்மை போன்ற என் நாட்டை நேசிக்கும், அதன் பண்பை விரும்பி போற்றும் மக்களே பெரும்பான்மை என்பதே. “ஒரு தேசத்தின் அறிவுஜீவிகளில் பெரும்பான்மை அந்த தேசத்தின் பாரம்பரியத்தை அழிக்க எண்ணுவதும் ,அதுவே முற்போக்கு என்று அங்கே நம்புவதும் வேறு எந்த தேசத்திலாவது உள்ளதா?” - ஒரு கொடுங்கோன்மை தேசத்திலோ அன்றி வறிய செயலற்ற அன்றி கருத்து சுதந்திரம் சிறிதும் அற்ற ஒரு நாட்டிலோ இவ்வகையான நிலை நீடிப்பதை புரிந்து கொள்ள முடியும்.

இந்நாடு அழிகிறது, அடக்குமுறை தாண்டவமாடுகிறது என்பதற்கு நேர்மையற்ற அழிவு சக்திகளால் என்ன ஆதாரம் கொடுத்து விட முடியும், அவர்களது “ஒருவரை ஒருவர் சொரிந்து கொள்ளும்’ சுகத்திற்காக செய்வதை தவிர?

மிக்க உணர்ச்சி பூர்வமாகவெல்லாம், “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை; ஆணை இட்டே யார் தடுத்தாலும் அலை கடல் ஓய்வதில்லை” என்றெல்லாம் கூவ வேண்டியதில்லை.

பொருளாதார, அரசியல் சமூக ரீதியின் படி பாரதம் இன்னும் இருபது வருடங்களில் உலகின் இரண்டாவது பெரிய வர்த்தக மையமாக திகழும் ( சீனத்திற்கு அடுத்தபடி) என்பதை ஐஎம்எப், உலக வங்கி, ஆசிய முன்னேற்ற வங்கி, யுஎன் எனும் கருத்து கூடங்களும், அமெரிக்கா உள்ளிட்ட (இவர்களுக்கு சொறிவதற்கு கூலி கொடுக்கும் முதலாளிகள் உட்பட) அனைவரும் ஏற்று கொண்ட ஒரு நிதர்சனம்.

இவர்களின் அறைகூவல்கள், சதி வேலைகள், பரப்பு கூலிகள் எல்லாம் கடந்த அறுபது வருடங்களாக தொடர்ந்த போதிலும், பாரதம் எவ்விதத்திலும் சளைக்கவில்லையே; நமது விஞ்ஞான, பொருளாதார வளர்ச்சி சுனங்கவில்லையே; இந்த சக்திகளை பாரதம் அடி பணிய செய்யும்.

அது காலத்தின் கட்டாயம்.

சரவணன்

*********
அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் ‘எனது இந்தியா’ கட்டுரையை இது வரை மூன்று முறை படித்துவிட்டேன். என் முனைவர் பட்ட ஆய்வுக்காக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தனித்தமிழ் தேசிய இயக்கத்துக்கும் வெளிநாட்டு மதமாற்ற மற்றும் அமெரிக்க ஐரோப்பிய அரசு சார்ந்த மற்றும் சாராத அமைப்புகளுக்கும் இருக்கும் தொடர்புகள் குறித்த பல ஆவணங்களையே வகைப்படுத்தி பகுத்தாய்ந்து கொண்டிருந்ததன் விளைவாக கிடைத்த மிகப்பெரிய மனச் சோர்வுக்கும் (கூடவே எழும் வெறுப்புணர்ச்சியையும் குறிப்பிடவேண்டும்) ஆத்திரத்துக்கும் மிகப்பெரிய மருந்தினை அளித்துள்ளீர்கள்.] ஒரு மிகச்சிறந்த ஆக்கப்பூர்வமானதும் அறம் சார்ந்ததுமான குரலை முன்வைத்துள்ளீர்கள். சக-மானுடத்தின் மீது நம்பிக்கை இழக்காமல் அதே நேரத்தில் யதார்த்தத்தையும் மறக்காமல் கூறப்படும் இந்த வார்த்தை விதைகள் இதனை படிக்கும் ஒவ்வொரு பாரத மனதிலும் நல்லெண்ணங்களையும் பரஸ்பர சகோதரத்துவத்தையும் அன்பையும் உருவாக்கட்டும். உங்களுக்கு தமிழர் சமுதாயம் கடமைப்பட்டுள்ளது. உணர்ச்சிகளை தூண்டிவிடும் சந்தர்ப்பங்களிலும் அன்பையையும் அறத்தையும் கைவிடாமல் உண்மையை கூறும் உங்களுக்கு ஒவ்வொரு இந்தியனும் கடன்பட்டிருக்கிறார்கள். நாளைக்கு இந்த தேசத்தின் குழந்தைகள் சர்வதேச அகதிகள் முகாம்களில் வளராமல் அன்பான வீடுகளில் வளர வேண்டுமானால், உங்கள் வார்த்தைகளை ஒவ்வொருவரும் (நான் உட்பட) உணர்ச்சிகள் பெருகும் தருணங்களில் உணர்ந்து நடப்பது நல்லது. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தங்கள் இணையதள வாசகர்களுக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.
பணிவன்புடன்அரவிந்தன் நீலகண்டன்

ஜெயமோகன் அவர்களது "எனது இந்தியா" கட்டுரையும் எதிர்வினைகளும் -1

ஜெயமோகன் அவர்களின் "எனது இந்தியா" கட்டுரையை சில காலம் முன்னர் படித்தேன். அதன்பின் அவரது கட்டுரையை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு எதிர்வினைகள் வந்து அவையாவும் தொகுக்கப்பட்டு ஜெயமோகன் அவர்கள் வலைப்பக்கத்தில் காணக்கிடைக்கிறது.


ஒரிஜினல் கட்டுரைகளை படிக்க விரும்புவோர் பின்வரும் சுட்டியை ...
http://jeyamohan.in/?p=744
************************

எனது இந்தியா

October 9, 2008 – 9:53 am


சென்னையில் இருந்து வெளிவரும் விழிப்புணர்வு என்ற சிற்றிதழை புரட்டிக் கொண்டிருந்தேன். அட்டையும் சரி உள்ள பக்கங்களும் சரி பளபளவென உயர்தரக் காகிதத்தில் அச்சிடப்பட்ட மாத இதழ் இது. அதன் பக்கங்கள் பெரும்பாலும் யாரென தெரியாதவர்களால் எழுதப்பட்டிருந்தன. அனேகமாக ஒருவரே எழுதியிருப்பாரோ என்று எண்ணவைக்கும் நடை. ஆசிரியர் கு.காமராஜ். சென்னையிலிருந்து ஏதோ தன்னார்வ அமைப்பு வெளியிடுவது.

ஒவ்வொரு மாதமும் இப்படி இருபது சிற்றிதழ்கள் என் பார்வைக்கு வந்துவிடுகின்றன. இவற்றில் பாதிக்குமேல் தமிழகத்தில் உள்ள வெவ்வேறு தன்னார்வக்குழுக்களால் நடத்தப்படுபவை. சுற்றுசூழல் பாதுகாப்பு, சட்ட சீர்திருத்தம், நுகர்வோர் பாதுகாப்பு, மனித உரிமைகள் பாதுகாப்பு போன்றவற்றில் ஏதாவது ஒன்று இவற்றின் கருவாக இருக்கும். எல்லாவற்றையும் கலந்துகட்டி அடிக்கும் இதழ்களும் உண்டு.

ஆனால் இவை அனைத்துக்குமே பொதுவான ஒரு அம்சம் உண்டு. கண்மூடித்தனமான இந்திய எதிர்ப்பு. இந்த நாடு முழுக்க முழுக்க அநீதி மீது கட்டப்பட்டு ஒவ்வொரு நிமிடமும் அநீதியால் இயக்கப்படுவதென்பதில் இவர்களுக்கு ஐயமே இல்லை. இதன் போலீஸ், நீதிமன்றம், அரசாங்கம் , மதங்கள், பண்பாட்டு அமைப்புகள் அனைத்துமே முழுக்க முழுக்க அநீதியை மட்டுமே செய்துகொண்டிருப்பவை என இவை நேரடியாகவும் மறைமுகமாகவும் வாதிடுகின்றன. சிறுபான்மையினர், தலித்துக்கள், பழங்குடியினர் போன்றவர்கள் இந்த தேசத்துக்கு எதிராக கிளர்ந்தெழவேண்டுமென இவை அறைகூவுகின்றன. இந்த தேசத்தின் இறையாண்மை என்பது தான் இந்த நாட்டு மக்களின் உண்மையான முதல் எதிரி என இவை பிரச்சாரம் செய்கின்றன.

விழிப்புணர்வு இதழில் அட்டையிலேயே அருந்ததி ராய் எழுதிய புரட்சிக்கட்டுரை உள்ளது ‘காஷ்மீருக்கும் மக்களுக்கும் விடுதலை’. அமர்நாத் குகைக்கோயில் சார்ந்து எழுந்த கிளர்ச்சியை ஒட்டி காஷ்மீரில் உருவான எதிர்க்கிளர்ச்சியை மாபெரும் மக்கள்புரட்சியாக நேரில் சென்று கண்டு ஆனந்த பரவசத்துடன் எழுதியிருக்கிறார் அருந்ததி ராய். அதை தமிழில் ஆதி என்பவர் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

‘அவுட்லுக்’ இதழில் வெளிவந்த அருந்ததி ராயின் ‘புகழ்பெற்ற’ கட்டுரையை வாசகர்கள் வாசித்திருக்கலாம். சுதந்திரம் கிடைத்த காலம் முதலே காஷ்மீர் மக்களின் குரலை ஒடுக்கவும் சிதைக்கவும் ‘இந்திய ஏகாதிபத்தியம்’ செய்த முயற்சியின் விளைவே காஷ்மீரின் சுதந்திரவேகம் என்று அருந்ததி வாதிடுகிறார்.ஆண்டுதோறும் பத்தாயிரக்கணக்கில் அப்பாவி மக்களின் படுகொலைகள் சித்திவரதைகள் கற்பழிப்புகள் அங்கே நிகழ்ந்து வருகின்றன என்று சொல்கிறார். தேசிய சுதந்திரத்துக்கான அந்த மக்கள் எழுச்சியை ஒருபோதும் ஓர் அடக்குமுறை அரசாங்கம் கட்டுப்படுத்தி விடமுடியாது என்றும் ஆகவே அவர்களுக்கு இந்திய அரசாங்கம் சுதந்திரம் கொடுத்துவிட வேண்டும் என்றும் வாதாடுகிறார்.

தன் கட்டுரையிலேயே அந்த மக்களின் கோஷங்களை கொடுக்கும் அருந்ததி அவர்களின் மனநிலையை தன்னை அறியாமலேயே காட்டிவிடுகிறார். ‘பிச்சை எடுக்கிறது நிர்வாண இந்தியா. பாகிஸ்தானில் வாழ்க்கை சந்தோஷமானது’. காஷ்மீர் மக்கள் தேடுவது சுதந்திரத்தை அல்ல, பாகிஸ்தானோடு இணைவதை மட்டுமே என்பது வெளிப்படை. பாகிஸ்தானில் இன்றுள்ள மாகாணங்களின் நிலையை வைத்து நோக்கினால் இன்று காஷ்மீருக்கு இருக்கும் அடிப்படை உரிமைகள் கூட இல்லாத ஒரு சர்வாதிகார அமைப்பின் கீழே சென்றுவிடத்தான் அவர்கள் ஆசைப்படுகிறார்கள்.

அந்த ஆசையின் அடிப்படை மதவெறிமட்டுமே. அது முல்லாக்களால் திட்டமிடப்பட்டு படிப்படியாக அங்கே உருவாக்கப்பட்டது. அதற்கு பாகிஸ்தானின் உளவமைப்புகளின் வெளிப்படையான ஆதரவும் பின்பலமும் இன்றும் உள்ளது. அந்த மண்ணின் மைந்தர்களான காஷ்மீரி பண்டிட்டுகளை கொன்று குவித்து அடித்து துரத்தியபின்னர்தான் அவர்களின் போராட்டம் ஆரம்பித்தது. காஷ்மீரிகள் தேடுவது எவ்வகையிலும் முற்போக்கான, மேலான ஒரு சமூக அமைப்பை அல்ல, மாறாக அவர்கள் தாலிபானிய அரசு ஒன்றை நாடுகிறார்கள். அவர்கள் இந்திய அரசை வெறுப்பது இது அடக்குமுறை அரசு என்பதனால் அல்ல, இது ஒரு தாலிபானிய இஸ்லாமிய அரசு அல்ல என்பதனாலேயே.

வங்கதேசத்தின் மிகமோசமான வறுமையில் இருந்து தப்பி லஞ்சம் கொடுத்து இந்திய நிலத்துக்குள் ஊடுருவிய வங்க அகதிகள் அவர்களுக்கு எதிராக போடோ மக்கள் கிளர்ந்தெழுந்த கணத்தில் தங்கள் காலனிகள் முழுக்க பாகிஸ்தானியக் கொடியை ஏற்றியதை நாம் இப்போது காண்கிறோம். இந்த நாடு முழுக்க குண்டுகள் வைத்துஅழிப்பதில் வங்கதேசத்து அகதிகளின் பங்கு மிகப்பெரியது என கண்டடையப்பட்டிருக்கிறது. வாழ்வு தந்த இந்த நாட்டின்மீது குறைந்தபட்ச விசுவாசமும் பிரியமும் கூட அவர்களிடம் இல்லை. ஏனென்றால் அவர்களின் மதம் அவர்களுக்கு அப்படிக் கற்பிக்கிறது.
காரணம் இஸ்லாம் என்பது அடிப்படையில் ஒரு தேசியகற்பிதம்– ஒரு மதமோ வாழ்க்கைமுறையோ மட்டும் அல்ல. அது பிற தேசிய கற்பிதங்களை ஏற்காது. அந்த தேசிய கற்பிதங்களுக்குள் தனித்தேசியமாக தன்னை உணர்ந்து அவற்றை உள்ளிருந்து பிளக்கவே முயலும். அது ஈழமானாலும் சரி இந்தியாவானாலும் சரி பிரிட்டனானாலும் சரி. இதுவே நிதரிசன உண்மை. எத்தனை தலைமுறைக்காலம் ஒரு நாட்டில் வாழ்ந்தாலும் சரி, அந்த நாட்டாலேயே மேன்மை பெற்றிருந்தாலும் சரி , அந்த நாட்டை மதநோக்கில் அழிக்க அவர்களுக்கு தயக்கம் இருக்காது என்பதைக் கண்டுகொண்டிருக்கிறது ஐரோப்பா.

இஸ்லாமில் உள்ள இந்த சுயதேசிய உருவாக்கத் தன்மையை ஒரு பழங்கால அம்சமாகக் கண்டு அதை நீக்கவும், தாங்கள் சிறுபான்மையினராக இருக்கும் நாடுகளிலாவது பிற தேசியங்களுடன் ஒத்துப்போகவும் அதற்குக் கற்பிப்பதே இன்று அவசியம். இஸ்லாமை ஒரு நெறியாக மட்டும், ஒரு ஆன்மீக அமைப்பாக மட்டும் முன்னிறுத்தும் மதச்சீர்திருத்தவாதிகள் இன்று தேவை. ஆனால் மேலும் மேலும் இஸ்லாமை அரசியல்படுத்தி உலகநாடுகளுக்குள் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளாக இஸ்லாமியச் சமூகத்தை மாற்றுவதற்கு ஜமா அத் எ இஸ்லாமி போன்ற பலநூறு அமைப்புகள் அல்லும் பகலும் முயன்றுவருகின்றன. கருத்துச் சுதந்திரத்தின் பகுதியாக அதை இந்தியா போன்ற நாடுகள் அனுமதித்து வருகின்றன.

இஸ்லாம் எந்த பிற தேசத்துக்குள்ளும் அடங்காது என்ற அடிப்படை உண்மையில் இருந்து பிறக்கிறது காஷ்மீரின் யதார்த்தம். இன்றைய இஸ்லாமின் அடிப்படைக்கட்டமைப்புக்குள்ளேயே இந்த சிக்கல் இருக்கிறது. அதை தீர்த்துக்கொள்ளாதவரை இஸ்லாமியர்கள் அவர்கள் வாழும் நாடுகளெங்கும் தீராத அதிருப்தியுடன், வன்மத்துடன், அந்த நாடுகளை அழித்து அதன் மீது தங்கள் இஸ்லாமிய நாடுகளை உருவாக்கும் கனவுகளுடன் மட்டுமே வாழ்வார்கள். ஆகவே அவர்கள் மீது பிற தேசங்களின் ஐயமும் நீடிக்கும். உழைத்து துன்புற்று வாழும் எளிய முஸ்லீம்களை நிம்மதியாக வாழ ஒருபோதும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் முல்லாக்களும் விடமாட்டார்கள். எளிய லௌகீக வாழ்க்கையின் துயர்களில் துணைவரும்படி இறைவனை தொழுவதற்காக ஒவ்வொரு முறைச் செல்லும்போதும் ஓர் இஸ்லாமிய நாட்டுக்காக போராளியாகும்படியான அறைகூவலை எதிர்கொள்கிறான் சாதாரண முஸ்லீம்.

இன்றைய உலகின் மையச்சிக்கல்களில் ஒன்று இது. சமரசம், விடிவெள்ளி போன்ற என்ற இஸ்லாமிய இதழ்களை நான் தவறாமல் படிக்கிறேன். பல்வேறு சொற்களில் அவை தங்கள் வாசகர்களான இஸ்லாமியர்களை நோக்கி இந்தியச் சமூக அமைப்பும் இந்திய அரசமைப்பும் இஸ்லாமுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரானவை, அநீதியானவை என்று சொல்கின்றன. அதற்கு ஆதாரமாக அருந்ததி ராய் முதல் அ.மார்க்ஸ் வரையிலாலனவர்கள் எழுதும் சமநிலையற்ற கட்டுரைகளை மறுபுரசுரம் செய்கின்றன. அதற்குத் தீர்வாக ஒரு இஸ்லாமிய அரசு மட்டுமே இருக்க முடியும் என்று சொல்கின்றன. ஒரு தாலிபானிய அரசில்மட்டுமே இஸ்லாமியர் நிறைவுடன் வாழமுடியுமென கற்பிக்கின்றன. மிதமான மொழியில் எப்போதும் பேசும் சமரசம் இதழின் ஒவ்வொரு தலையங்கமும் இப்படித்தான் முடிகிறது.
எங்கெல்லாம் இஸ்லாமியர் பெரும்பான்மை பெறுகின்றனர்களோ அங்கெல்லாம் இந்த இஸ்லாமியதேசம் பற்றிய ரகசியக்கனவு அடுத்த கட்டத்துக்குச் சென்று வெளிப்படையாக முன்வைக்கப்படுகிறது. அப்பகுதி மக்களிடம் கேட்டால் இந்திய அரசு தங்களை ஒடுக்குகிறது, ஒரு தாலிபானிய அரசிலேயே தங்களுக்கு சுதந்திரமும் அமைதியும் கிடைக்கும் என்றே சொல்வார்கள். அருந்ததியின் வாதங்களை பின்பற்றினால் அப்பகுதிகள் அனைத்துமே ‘விடுதலை’ அளிக்கப்படவேண்டும். இந்தியதேசத்துக்குள் குறைந்தது இருபது தனி தாலிபானியதேசங்கள் அனுமதிக்கபப்டவேண்டும். இது இந்தியாவுக்கு மட்டுமா இல்லை சீனாவுக்கும் ருஷ்யாவுக்கும் இதையே இந்த முற்போக்காளர் பரிந்துரைசெய்கிறார்களா தெரியவில்லை.
இந்தியா தன் மூலதனத்தில் பெரும்பகுதியை செலவிட்டு போராடிக் கொண்டிருப்பது காஷ்மீரி மக்களின் சுதந்திரக்கனவுடன் அல்ல, பெரும் காழ்ப்புணர்வுடன், உச்சகட்டப் பிரச்சார வல்லமையுடன் பரப்பப்படும் இஸ்லாமிய உலகதேசியக் கனவுடன்தான். ருஷ்யா, சீனா உட்பட இஸ்லாமியக் குடிமக்களைக் கொண்ட எல்லா நாடுகளும் அந்த கனவுடன் போரிட்டுகொண்டுதான் இருக்கின்றன. காஷ்மீருக்குச் சுதந்திரம் கொடுத்தால் அந்தப் போர் முடிந்துவிடவும் முடியாது. இந்நூற்றாண்டின் பெரும் சவால் அது. அதைச் சந்தித்தேயாகவேண்டும். இதை எளிமையாக வரலாற்றைப் பார்க்கும் எவரும் புரிந்துகொள்ளலாம். அப்படியும் புரியாவிட்டால் தொடர்ந்து அருந்ததி ராயை மறுபிரசுரம் செய்துவரும் ஏதேனும் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாத இதழை எடுத்துப் புரட்டினால்போதும். இதில் ரகசியமேதும் இல்லை, வெளிப்படையான அறைகூவலையே காணலாம். அடிப்படையான வரலாற்றுணர்வோ சமநிலையோ இல்லாத அருந்ததி போன்ற குருவிமண்டைகள் ஊடகங்களில் இன்றுபெறும் அதீத முக்கியத்துவம் மிகமிக ஆச்சரியமானது. கலை இலக்கியம் பொருளியல் அரசியல் எதைப்பற்றியும் கருத்து சொல்லும் ஒரு அனைத்துத்தளமேதையாக அவரை ஆங்கில ஊடகங்கள் முன்னிறுத்துகின்றன. அதற்கு பதிலாக அவர் அளிப்பது அவர்கள் நாடும் பரபரப்பை. அதற்கும் மேலாக இவர்களுக்குப் பின்னால் இந்த தேசத்தை அழிக்க எண்ணும் சக்திகளின் நிதியுதவிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதே என் எண்ணம். கருத்தரங்க அழைப்புகள், விருதுகள், தன்னார்வஅமைப்புகள் வடிவில் நேரடி நிதியுதவிகள் என இந்திய இதழாளர்களுக்கு வரும் லஞ்சங்களை இங்கே எவருமே கண்காணிப்பதில்லை. பெரும் தொழிலதிபர்களுக்குரிய இரவு வாழ்க்கை வாழ்பவர்கள் நம் இதழாளர்களில் பலர் என்பதைக் கண்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் இந்திய ஜனநாயகத்தின் புனிதப் பசுக்கள்.

அருந்ததியின் கட்டுரையின் மொழிபெயர்ப்பில் காஷ்மீரில் பாகிஸ்தானிய பிறைக்கொடி ‘பட்டொளி வீசி’ பறக்கிறது. ஆனால் ஜம்முவில் ‘இந்துத்துவ வெறியர்கள்’ கலவரம் செய்கிறார்கள். மகாராஜா ஹரிசிங் இந்தியாவுடன் சேர முடிவெடுத்ததை ‘பித்தலாட்டம்’ என்று குறிப்பிடுகிறது கட்டுரை. இதே இதழில் ச.பாலமுருகன் என்பவர் எழுதிய ‘ஊடகங்களில் முஸ்லீம்கள்’ என்ற கட்டுரையில் இந்தியாவின் அனைத்து அமைப்புகளும் முஸ்லீம்களை தீவிரவாதிகள் என்று சொல்லி ஒழித்துக்கட்ட முயல்வதாக எழுதியிருக்கிறார். இந்தக்கட்டுரைகளை அடுத்தமாதமே இஸ்லாமிய அடிப்படைவாத இதழ்களில் மறுபிரசுரமாக நான் படிக்க நேரும்.

தமிழின் பிரபலமான சிற்றிதழ்கள் உயிர்மை,காலச்சுவடு,தீராநதி,புதியபார்வை அனைத்துமே இந்த நிலைபாட்டையே பலகாலமாக முன்வைத்திருக்கின்றன. இந்த நாட்டின்மீது சிறிய அளவிலான நம்பிக்கையை முன்வைத்து ஒரு வரியையேனும் இவை எழுதியதாக நான் வாசித்ததில்லை. மாறாக ஒட்டுமொத்தமாகவே அழிக்கப்படவேண்டிய தீமைகளாகவே இந்த நாட்டின் அரசியல், நீதி அமைப்பை அவை காட்டுகின்றன. இந்த மண்ணின் நெடிய பாரம்பரியம் முழுமையாகவே தீமையில் வேரூன்றியது என்றே அவை வலியுறுத்துகின்றன.

அருந்ததி ராயின் கட்டுரையைப்படித்தபோது முன்பு அப்சல் குருவின் தூக்குத்தண்டனை பற்றி நம் சிற்றிதழ்கள் எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது. இந்தியப்பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுத்தமைக்காக கைதுசெய்யப்பட்டவர் அப்சல் குரு. அவரது வழக்கு இந்திய நீதிமன்றத்தின் வழக்கமான அனைத்துச் சம்பிரதாயங்களுடனும் படிப்படியாக நடத்தப்பட்டு மீண்டும் மீண்டும் மேல் முறையீட்டுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டது. அப்சல் குருவுக்கு ஆதரவாக கிளர்ந்தெழுந்த இந்திய இதழாளர்கள் ஒட்டுமொத்த இந்திய நீதியமைப்பே முழுமையாகவே அநீதியானது, மதவெறி கொண்டது என்றார்கள். அந்த விசாரணையின் எந்தப் படியிலும் அப்சல்குருவுக்கு எளிய முறையீட்டுக்குக்கூட வழி தரப்படவில்லை என்றார்கள்.
அந்த விசாரணை நடக்கும் காலம் முழுக்க இந்த தரப்பு சொல்லப்படவில்லை. ஏனென்றால் அரிதிலும் அரிதான வழக்குகளிலேயே இந்திய உச்ச நீதிமன்றம் தண்டனை வழங்கும் என்றும், அனேகமாக அப்சல்குரு சிறிய தண்டனையுடன் தப்பிவிடுவார் என்றும் இவர்கள் எதிர்பார்த்தார்கள். அதாவது கிலானி போல இவரும் விடுதலைசெய்யப்படுவார் என. கிலானியை உச்சநீதிமன்றம் விடுதலைசெய்தபோது அதை இவர்கள் இந்திய நீதிமன்றத்தின் சமநிலைக்கான ஆதாரம் என்று சொல்லவில்லை, அதை தங்கள் வெற்றியாகவே முன்வைத்தார்கள். கிலானி இந்தியா முழுக்க ஒரு பெரும் கதாநாயகனாக இன்று பவனி வருகிறார். இந்திய எதிர்ப்புப் பேட்டிகள் கொடுக்கிறார்.

தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவை சிறைக்குள் சென்று பேட்டி எடுக்கிறார் இந்திய இதழாளர். தண்டனைபெற்றவர் தனக்கு தன் சமூகத்தில் உள்ள தியாகிப்பட்டத்தை இழக்க விரும்பாமல் தான் குற்றம் செய்யவில்லை என்றுகூட திட்டவட்டமாகச் சொல்ல மறுக்கிறார். அல்லாவின் முன் தான் தவறுசெய்யவில்லை என்றே சொல்கிறார். இந்திய அரசையும் நீதியமைப்¨பையும் இந்து முத்திரை குத்தி, தனக்கு அளிக்கப்பட்ட தண்டனை ஒரு மத தண்டனை என்று சொல்ல முயல்கிறார். தன்னை ஒரு மதத்தியாகியாக காட்டிக் கொள்கிறார்.

அந்தப்பேட்டி இந்திய மொழிகள் அனைத்திலும் பிரசுரமாகிறது. தண்டனைபெற்றவரின் மனைவி இந்தியாவின் உச்ச அதிகார அமைப்புகளை நேரடியாகச் சென்று சந்தித்து கிட்டத்தட்ட மிரட்டும் குரலில் தண்டனை குறைப்பு கேட்கிறார். அதற்கு உச்சகட்ட ஊடக விளம்பரம் கிடைக்கிறது காஷ்மீரிலும் பிற பகுதிகளிலும் உள்ள இஸ்லாமியர்கள் நடுவே ஒரு நிரபராதி மத வெறுப்பால் அநியாயமாகக் கொலைசெய்யபடவிருக்கிறார் என்ற செய்தி பரப்ப்பபடுகிறது. போராட்டங்கள் நிகழ்கின்றன. அதை இந்த அரசமைப்பு கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் அனுமதிக்கிறது. அஞ்சி தண்டனையை முடிவிலாது ஒத்திப்போடுகிறது. ஆனால் ஒட்டுமொத்த இந்திய அமைப்பே இஸ்லாமியரின் குரல்களை அமுக்குகிறது என்கிறார்கள் அதே இதழாளர்கள் மீண்டும்.

தமிழில் ‘உயிர்மை’ இதழ் அப்சல்குருவின் பேட்டியை மொழியாக்கம் செய்து ஒரு மாபெரும் புரட்சியாளரின் படிமத்தை அளித்து வெளியிட்டது. காலச்சுவடு பாராளுமன்றத் தாக்குதலே இந்திய ராணுவத்தால் இஸ்லாமியரை தவறாகச் சித்தரிக்கும்பொருட்டு நிகழ்த்தப்பட்டது என்று ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டது. எஸ்.வி.ராஜதுரை அப்சல் குரு பெரும் நீதிமான், புரட்சியாளர் என்று எழுதினார். புதியகாற்று இதழில் அ.மார்க்ஸ் கொந்தளித்தார். அந்த அனைத்து எழுத்துக்களும் தமிழின் வெளிவரும் முப்பதுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத இதழ்களில் மீண்டும் மீண்டும் பிரசுரமாயின. இஸ்லாமியர்களில் பெரும்பாலானவர்கள் இவ்விதழ்களை மட்டுமே படிப்பவர்கள்.

ஆச்சரியமாக இருக்கிறது, இத்தனை வெறியூட்டல்களுக்குப் பின்னும் இங்குள்ள சராசரி இஸ்லாமியர் தங்கள் அன்றாடத்தொழில்களைச் செய்தும் பிற சமூகத்தவரிடம் வணிகத்தில் ஈடுபட்டும் ஒரு சமூக வாழ்க்கையை கடைப்பிடிப்பது. இந்திய சமூகம் இன்று அளிக்கும் வாய்ப்புகள் மூலம் மக்களில் பெரும்பகுதியினர் மெல்லமெல்ல நடுத்தரவற்கமாக உருவாகி வருகிறார்கள். இந்தியாவெங்கும் இந்த வளர்ச்சிப்போக்கைக் காணமுடிகிறது. இது ஒன்றுதான் இந்த வெறியூட்டல்களுக்கு எதிரான ஒரே சக்தியாக இருக்கிறது. லௌகீகக் கனவுகளால் மட்டுமே மக்கள் மதவெறியூட்டல்களை தாண்டிச்செல்கிறார்கள்.

இந்த இந்தியவெறுப்பு இன்று இங்கே ஒரு ‘அரசியல்சரி’ யாகவே நிலைநாட்டப்பட்டுவிட்டிருக்கிறது. ஒருவன் எளிய முறையில் ‘என் மூதாதையர் மரபின் மீது எனக்கு பிடிப்பு உண்டு’ என்று சொன்னால்கூட அவன் பிற்போக்காளனாக, பழமைவாதியாக, மத அடிப்படைவாதியாக முத்திரை குத்தப்பட்டுவிடுவான். அந்த முத்திரையை அஞ்சி தன் நம்பிக்கையையும் நிலைபாட்டையும் வெளிப்படுத்தத் தயங்குபவர்களாக எழுத்தாளர்கள் உருமாறிவிட்டிருக்கிறார்கள்.

ஒருதேசத்தின் அறிவுஜீவிகளில் மிகப்பெரும்பான்மையினர் அந்த தேசத்தின் மீது ஆழமான வெறுப்பை உருவாக்கிக் கொண்டிருக்கும் இன்றைய நிலை வேறு எங்காவது உள்ளதா? ஒரு தேசத்தின் அறிவுஜீவிகளில் பெரும்பான்மை அந்த தேசத்தின் பாரம்பரியத்தை அழிக்க எண்ணுவதும் ,அதுவே முற்போக்கு என்று அங்கே நம்புவதும் வேறு எந்த தேசத்திலாவது உள்ளதா? அப்படி நம்பாத அறிவுஜீவிகள் முத்திரைகுத்தப்பட்டு வேட்டையாடப்படும் சூழல் எங்காவது உள்ளதா?

ஆம், இந்த தேசத்தில் அநீதி உள்ளது. இங்கே ஒடுக்குமுறையும் சுரண்டலும் உள்ளது. இங்கே சமத்துவம் இன்னும் நிறுவப்படவில்லை. இங்கே இன்னும் சமூக வன்முறை நிலவுகிறது. இங்குள்ள பாரம்பரியத்தின் அழுக்குச்சுமைகள் இன்றைய வாழ்க்கையின் மீது சுமத்தப்பட்டுள்ளன என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்த நாடு ஊழலில், பொறுப்பின்மையில் சிக்கி மெல்ல ஊர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

ஆனால் இந்த நாட்டை விட மேலானதாக நீங்கள் சொல்லும் நாடு எது நண்பர்களே? பாகிஸ்தானா? தாலிபானின் ஆப்கானிஸ்தானா? சீனாவா? இதை அழித்து நீங்கள் உருவாக்க எண்ணும் நாடு எதைப்போன்றது?

இந்த நாடு இன்னும் ஜனநாயகத்தில் வேரூன்றியதாகவே உள்ளது என்றே நான் எண்ணுகிறேன். இங்கே இன்னமும் கருத்துக்களின் குரல்வளை நெரிக்கப்படவில்லை. இங்கே இன்னமும் சிந்தனைக்கு உரிமை இருக்கிறது. இது இன்னும் அடிப்படையான நீதியில் வேரூன்றியதாகவே உள்ளது. அந்த நீதி இந்நாட்டு எளிய மக்களின் நீதியுணர்வின்மீது நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த நாடு இதன் பல்லாயிரம் சிக்கல்களுடன் மெல்லமெல்ல வறுமையிலிருந்து மேலெழுந்து வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இங்கே கோடிக்கணக்காகனவர்கள் தங்கள் முந்தைய வாழ்க்கையில் இருந்து மேலெழுந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்த நாடு மானுட சமத்துவத்துக்கான வாய்ப்புகளை இன்னமும் முன் வைத்துக்கொண்டுதான் இருக்கிறது. அதற்கான எல்லா போராட்டங்களுக்கும் இங்கே இடமிருக்கிறது. ஒடுக்குமுறைக்கும் சமத்துவத்துக்கும் ஊழலுக்கும் சுரண்டலுக்கும் எதிராக இங்கே இன்னமும் ஒன்றுதிரண்டு சமராட வாய்ப்பிருக்கிறது. இந்த தேசத்தில் தன் உரிமைக்காக கிளர்ந்தெழும் ஒரு குரல் கூட முற்றிலும் உதாசீனம் செய்யப்படுவதில்லை. இங்கே ஒருங்கிணைந்து எழுந்த உரிமைக் கோரிக்கைகள் அனைத்தும் சற்றுப்பிந்தியேனும் எவ்விதத்திலேனும் நிறைவேறியுள்ளன என்பதை ஐம்பதாண்டுகால இந்திய வாழ்க்கையைக் கூர்ந்து கவனிப்போர் அறியலாம். இப்போது அரவானிகள் பெற்றுவரும் சட்ட அங்கீகாரத்தை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

காரணம் இது ஜனநாயகம். ஜனநாயகம் நிதானமானது. ஒவ்வொருவரின் நலனும் பிறர் நலனுடன் மோதுவது என்பதனால் ஒரு சிறு விஷயம்கூட ஒரு முரணியக்கத்தின் இறுதியில் ஒரு சமரசப்புள்ளியில் மட்டுமே இங்கே நிகழ முடியும். எதுவும் எளிதில் நிகழாதென்பதனால் எதுவுமே நிகழவில்லை என்ற பிரமையை அளிப்பது ஜனநாயகம். ஆனால் ஜனநாயகம் என்ற செயல்பாடு உள்ளவரை மக்களின் எண்ணங்கள் சமூகத்தையும் அரசையும் மாற்றியே தீரும் என்பதற்கான சான்றும் இந்தியாவே.

ஆகவே இந்த தேசம் வாழ்க என்று நீங்கள் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும் இந்த தேசத்தை வாழவைக்கும். இந்த மக்கள் மீளவேண்டுமென நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அவர்களுக்கு மீட்பாகும். இந்த நாடு அழியவேண்டுமென நீங்கள் எண்ணினால் இந்தநாட்டை அழித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

இந்தியா அழியவேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆகவே நீங்கள் என்னை இந்துத்துவர் என்று சொல்லி வசைபாடக்கூடும். ஆனால் நான் இந்த தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மேலும் வலிமை பெற வேண்டும் என்று எண்ணுகிறேன். இங்கே ஜனநாயக முறைப்படி உரிமை கோரி நிகழும் எல்லா போராட்டங்களும் இதன் மாபெரும் இயங்கியலின் பகுதிகளே என்று எண்ணுகிறேன். ஆகவே எல்லா ஜனநாயகப்போராட்ட அமைப்புகளும் மேலும் மேலும் வலுப்பெற வேண்டும் என்று எண்ணுகிறேன். இங்குள்ள எல்லா போராட்டங்களையும் நான் ஆதரிக்கிறேன்.

இந்த தேசம் ஒரு நவீன தேசியமாக நீடிக்கும் வரை இது மெல்ல மெல்ல வளர்ச்சிப்போக்கில்தான் செல்லும் என்று எண்ணுகிறேன். அப்படி உருவாகும் நிதானமான வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்று நான் நம்புகிறேன். இந்த நவீன தேசத்தில் எல்லா மதங்களும் ஒரு கருத்துத்தரப்பாக தீவிரமாக செயல்படவேண்டும் என்று விழைகிறேன். எனது இந்தியாவில் இந்துமரபும் பௌத்த சமண மரபுகளும் கிறித்தவ மரபும் இஸ்லாமிய மரபும் ஒவ்வொரு கணமும் உரையாடி தங்களை வளர்த்துக் கொண்டவாறிருக்கும். இந்த நாட்டில் இன்று ஆயிரம் பல்லாயிரம் சிக்கல்கள் இருக்கலாம், ஆனால் இதன் உறுதியான ஜனநாயகம் தன் குறைகளைக் களைந்து மெல்லமெல்ல மேலும் சிறந்த ஒரு சமூகத்தை சென்றடைய முடியும். உலகில் இந்த வாய்ப்புள்ள தேசங்கள் இன்று மிகமிகச் சிலவே உள்ளன.

நிதானமான திடமான வளர்ச்சி பெற்றுவரும் இந்த நாட்டுக்கு அண்டைநாட்டு எதிரிகள் அரசியல் விஷத்தை உள்ளே செலுத்திக் கொண்டே இருக்கிறார்கள். [இந்தியாவும் அதே விஷத்தை பிறநாடுகளுக்குச் செலுத்தியது என்பதை நான் மறுக்கவில்லை. இந்திராகாந்தி தொடங்கிவைத்த அந்தப்போக்கு அறமற்றது என்றே எண்ணுகிறேன்.] இந்தியாவில் இன்று உருவாகியிருக்கும் மாவோயிசக் குழுக்கள் போன்றவை பத்துசதவீத உண்மையான மக்கள் அதிருப்தியின் மீது தொண்ணூறு சதவீதம் சீன ஆயுத பணபலத்தால் கட்டி எழுப்ப்பபடுபவை. இங்குள்ள இஸ்லாமிய குழுக்கள் மதக்காழ்ப்பின்மீது பாகிஸ்தானிய ஆயுத பணபலத்தால் கட்டி எழுப்ப்பபடுபவை.
இந்த எளிய நேரடி உண்மையை மழுப்பவும் நியாயப்படுத்தவும் கூலிபெற்று கிளம்பியிருக்கும் ஒரு பெரும் குழுவால் கையகப்படுத்தப்பட்டுள்ளது இந்திய ஊடகத்துறை. தேசிய மைய ஊடகத்தளத்தில் உள்ள இந்த வலுவான தரப்பு மெல்ல மெல்ல சுயமாக சிந்தனை செய்தறியாத பிராந்திய மொழி ஊடகங்களையும் பாதிக்கிறது. எப்போதும் இதை நாம் காணலாம். நமது சிற்றிதழ்களை ஆங்கில நாளிதழ்களின் ஞாயிறு இணைப்புகளே தீர்மானிக்கின்றன. ஒரு எழுத்தாளரைப்பற்றி ஆங்கிலநாளிதழ்களின் ஞாயிறு இணைப்பில் கட்டுரை வந்தால் அடுத்தமாதமே தமிழ் சிற்றிதழ்களிலும் கட்டுரைகள் காணப்படும்.

இத்தனைக்கும் அப்பால் மனசாட்சியை நம்பும் வாசகர் சிலர் இருக்கிறார்கள் என்பதே என் நம்பிக்கை. இந்த நாட்டைப்பற்றிய உண்மையான கவலை கொண்டவன், இந்தச் சமூகத்தின் உண்மைநிலையை தன்னைச் சுற்றிப் பார்த்தே தெரிந்துகொள்பவன். அவனிடம் பேச விரும்புகிறேன்.
தேசபக்தியே பாவமென்றாகிவிட்ட இச்சூழலில், முத்திரை குத்தப்பட்டு வசைபாடப்பட்டு, அவமதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டு நின்றபோதும் உரக்கச் சொல்வோம் நண்பர்களே .’வெல்க பாரதம்!’