Wednesday 8 October, 2008

பெரியவர் மலர்மன்னன் காஷ்மீர் குறித்து எழுதிய திண்ணைக்கட்டுரை - 3

இவ்வார திண்ணையில் பெரியவர் மலர்மன்னன் காஷ்மீர் குறித்து எழுதிய கட்டுரை பாகம்-3 வந்திருக்கிறது.

*************************************


Thursday October 2, 2008
காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் - 3

மலர்மன்னன்

விருப்பத் தேர்வுகள் மூன்று

"நாங்கள் வெளியே வந்த மாத்திரமே காஷ்மீர் பாகிஸ்தானுடன் சேருவதா, இந்தியாவுடன் இணைவதா, அல்லது சுதந்திர ராஜ்ஜியமாக இருப்பதா என்கிற முக்கியமான கேள்விக் குறி எம்முன் நின்றது. ஏனெனில், தேசப் பிரிவினையின் காரணமாக, எங்களுக்கு மட்டுன்றி, எல்லா இந்திய சமஸ்தானங்களுக்கும் மூன்று விதமான விருப்பத் தேர்வுகள் இருந்தன. இந்தப் பிரச்சினை எங்களுக்குத் தீர்வு காண்பதற்கு மிகவும் சிரமமானதாக இருந்தது. எனினும், அது இரண்டாம் பட்சமானதுதான், முதலில் நாம் பதினேழு ஆண்டுகளாக எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் எதேச்சாதிகார மன்னராட்சியிலிருந்து விடுதலை பெறுவதுதான் இப்போது மிக முக்கியம் என்று நான் எங்கள் மக்களிடம் கூறினேன்

(பொதுவாக அன்று ஹிந்துஸ்தானத்திலிருந்த எல்லா சுயேற்சை சமஸ்தானங்களிலுமே மன்னராட்சி நீங்கி, மக்களாட்சி நிறுவப்பட வேண்டும் என்கிற வேட்கை இருந்து வந்தது. அது காஷ்மீருக்கும் பொருந்தும். மற்றபடி காஷ்மீர் தனித்து இயங்குவது அல்லது ஹிந்துஸ்தானத்துடனோ பாகிஸ்தானுடனோ இணைவது என்கிற கேள்வி அப்போது எழவில்லை என அப்துல்லா கூறுவதாக இதைப் புரிந்து கொள்ள வேண்டும்).

நாம் நமது லட்சியத்தை இன்னும் எய்தியாகவில்லை, எனவே முதலில் அதை எய்துவோம்; அதன் பிறகு, சுதந்திர மக்களாக நமது நலன் எதில் உள்ளது என்பதை நாம் முடிவு செய்வோம். எல்லைப்புற மாநிலமாக, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் எல்லைகளையும் கொண்டுள்ளதாகக் காஷ்மீர் இருப்பதால், இந்தியாவுடன் இணைதல், பாகிஸ்தனுடன் இணைதல், சுயேற்சையாக இருத்தல் ஆகிய மூன்று விருப்பத் தேர்வுகளிலுமே காஷ்மீர் மக்களுக்குச் சாதகங்களும் பாதகங்களும் இருப்பதை எடுத்துக் கூறினேன்.

"நான் ஏற்கனவே குறிப்பிட்டவாறு, முதலில் மன்னராட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற பிறகுதான் மிக முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்சினையில் இயற்கையாகவே ஒரு முடிவுக்கு வருவது சாத்தியம் என்பதாக எங்கள் நிலைப்பாடு இருந்தது. எனவேதான் "இணைப்பிற்கு முன் சுதந்திரம்' என்கிற கோஷத்தை நாங்கள் முன் வைத்தோம். பாகிஸ்தானிலிருந்து வந்த சில நண்பர்கள் என்னை ஸ்ரீநகரில் சந்தித்தார்கள். அவர்களிடம் மனம் விட்டு விவாதித்த நான், எனது கருத்தை அவர்களிடம் விளக்கினேன். கடந்த காலத்தில் எங்கள் விடுதலைப் போரட்டம் குறித்துப் பாகிஸ்தானின் நிலைப்பாடும் போக்கும் எவ்வாறாகவும் இருந்த போதிலும் அது எங்கள் முடிவின் மீது எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அவர்களிடம் தெளிவு படுத்தினேன். அதேபோல, நாற்பது லட்சம் காஷ்மீர் மக்களின் நலன் கருதி பாகிஸ்தானுடன் இணைய நாங்கள் முடிவெடுக்க வேண்டி வந்தால், பண்டிட் ஜவஹர்லால் நேருவுடனான நட்போ, காங்கிரசுடன் எமக்கு உள்ள உறவோ, அது எங்களுடைய விடுதலை இயக்கத்திற்கு அளித்த ஆதரவோ எங்கள் முடிவை பாதிக்காது என்றும் சொன்னேன்.

முடிவை வற்புறுத்தாதீர்

"முடிவு எடுக்குமாறு எங்களை வற்புறுத்த வேண்டாம் என்று அவர்களிடம் வேண்டியதோடு, எங்கள் போரட்டத்திற்கு ஆதரவு காட்டுமாறும் சொன்னேன். மன்னராட்சியிலிருந்து நாங்கள் விடுதலை அடைந்த பிறகு, இந்த முக்கிய முடிவை எடுப்பதற்கு எங்களுக்குச் சிறிது அவகாசம் கொடுங்கள் என்று மேலும் சொன்னேன். இந்தியா இக்கருத்தை ஏற்றுக் கொண்டு, இணைப்பா அல்லது சுயேற்சையா என்று முடிவு எடுப்பது குறித்து வற்புறுத்தவில்லை என்பதையும் அவர்களிடம் தெரிவித்தேன். உண்மையில், இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் நாங்கள் ஒருசேர எவ்வித முடிவுக்கும் வராத செயலற்ற நிலையைக் கடைப்பிடிப்பதாக ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தோம். ஆனால் பாகிஸ்தான் எங்களிடம் எப்படி நடந்து கொண்டது என்பது பற்றிப் பாதுகாப்புக் கவுன்சில் முன் இந்தியாவின் பிரதிநிதி ஏற்கனவே விளக்கிக் கூறிவிட்டார்.

"பாகிஸ்தானிலிருந்து வந்தவர்களுடன் நான் உரையாடிக் கொõண்டிருக்கும்பொழுதே என் சகாக்களில் ஒருவரை நான் பாகிஸ்தானில் உள்ள லாஹூருக்கு அனுப்பினேன். அங்கு அவர் பாகிஸ்தான் பிரதம மந்திரி லியாகத் அலிகானையும், மேற்கு பஞ்சாப் மாநில முக்கியஸ்தர்களையும் சந்தித்து, எனது கருத்தையே அவர்களிடம் தெரிவித்தார். இணைப்பு பற்றி முடிவு எடுக்குமாறு எங்களை வற்புறுத்துவதற்குப் பதில் நாங்கள் மன்னராட்சி யிலிருந்து விடுதலை பெறுவதற்கு ஆதரவு அளியுங்கள் என்று அவர் கேட்டுக் கொõண்டார். இவ்வாறு எங்களிடையே பேச்சு நடந்து கொண்டிருக்கையில், காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப்புற நகரமான முசபராபாத் மீது ஆக்கிரமிப்பாளர்கள் முழு அளவில் திடீரெனத் தாக்குதல் தொடுத்திருப்பதாக எனக்குத் தகவல் வந்தது.

"சிறையிலிருந்து விடுதலையானதும் நான் தில்லிக்குச் சென்று இந்தியாவுடன் காஷ்மீரை இணைப்பது குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தத் தொடக்கியதாகப் பாகிஸ்தான் பிரதிநிதி இங்கு கூறினார். அது உண்மையல்ல. சிறையில் நான் இருக்கும்போது, அகில இந்திய சமஸ்தான மக்கள் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டேன். எனவே விடுதலையானதும் அந்தப் பதவிக்குரிய பொறுப்பை ஏற்க நான் தில்லி சென்று விட்டேன். அதற்கு இணங்க, தில்லியில் அந்த மாநாட்டின் செயற் குழுக் கூட்டத்தைக் கூட்டினேன். இந்த விஷயத்தை பாகிஸ்தான் பிரதமரிடமும் தெரிவித்திருந்தேன். தில்லியிலிருந்து திரும்பியவுடன் அவரைச் சந்தித்து, எனது நிலைப்பாட்டை அவருடன் விவாதிப்பதாகவும் தகவல் கொடுத்திருந்தேன். காஷ்மீர் விஷயமாக எதுவும் பேசி முடிக்க நான் தில்லி செல்லவில்லை. ஏனெனில் விடுதலை செய்யப் பட்ட போதிலும் காஷ்மீர் அரசுக்கு ஒரு எதிராளியாகவே அப்போது நான் இருந்தேன்.
"காஷ்மீர் மாநில நிர்வாகத்தின் தலைவராகத் தற்சமயம் நான் இருப்பினும் அதன் பிரதமராக இல்லை என்பதைப் பாகிஸ்தான் பிரதிநிதிக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். அவசர கால நிர்வாகத் தலைவராகத்தான் நான் உள்ளேன் ( ஆக்கிரமிப்புச் சமயத்தில் ஷேக் அப்துல்லா அகில இந்திய சமஸ்தான மக்கள் மாநாட்டின் தலைவராகத்தாம் தேர்ந்தெடுக்கப்பட்டதைச் சாக்கிட்டு காஷ்மீருக்கு வெளியே பத்திரமாக இருந்து கொண்டார். காஷ்மீரில் ஆக்கிரமிப்பாளர் ஹிந்துஸ்தானத்தின் ராணுவத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பின் வாங்கத் தொடங்கியதும் இனி பயமில்லை என்பது உறுதியாகி, திரும்பி வந்த அப்துல்லாவுக்கு அவசர கால நிர்வாகி என்கிற அதிகாரத்தை நேரு வழங்கினார். இவ்வாறு அப்துல்லா மீது நேரு அளவு கடந்த சகோதர பாசத்துடன் பரிவு காட்டியது ஏன் என்று பலரும் வியந்தது உண்டு. இதுபற்றிப் பலவாறான தகவல்களும் காற்றில் மிதந்து வந்ததுண்டு. அவை இங்கு தேவைப் படாத விவகாரங்கள்!).

ஆக்கிரமிப்பாளர் அட்டூழியம்

"ஆக்கிரமிப்பாளர்கள் எங்கள் பிரதேச்திற்குள் நுழைந்ததும் ஆயிரக் கணக்கான மக்களைப் படுகொலை செய்தனர். கொல்லப் பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஹிந்துக்களும் சீக்கியர்களுமே என்றாலும் முஸ்லிம்களையும் அவர்கள் கொன்றார்கள். ஹிந்து, சீக்கியர், முஸ்லிம் என்கிற பேதம் இன்றி, ஆயிரக் கணக்கான பெண்களை அவர்கள் கடத்திச் சென்றனர். எங்கள் உடமைகள் அவர்களால் சூறையாடப் பட்டன. எங்கள் மாநிலத்தின் கோடை காலத் தலை நகரமான ஸ்ரீ நகரின் வாயிற்புறத்திற்கே ஆக்கிரமிப்பாளர்கள் வந்து விட்டனர். அதன் விளைவாக எங்கள் குடிமை, காவல், ராணுவ நிர்வாகங்கள் அனைத்தும் தோல்வியடைந்தன.

இரவோடிரவாக மன்னர் தன் பிரதானிகளுடன் தலைநகரைவிட்டு வெளியேறினார். எங்கும் குழப்பம் நிலவி, நிலைமையைக் கட்டுப்படுத்த எவரும் இல்லாது போனபோது, எங்கள் தேசிய மாநாடு பொறுப்பைத் தானாகவே கைப்பற்றிக் கொண்டது. இவ்வாறாக அதிகாரம் கைமாறியது. நாங்கள் அதிகாரப் பூர்வமற்ற நிர்வாகப் பொறுப்பாளர்களாக இருந்தோம். பிறகு மன்னர் அதற்குச் சட்ட அங்கீகாரம் அளித்தார்.

"ஷேக் அப்துல்லா பண்டிட் ஜவர்ஹர் லால் நேருவின் நண்பர் என்று சொல்லப் படுகிறது. அதை (ஷேக் அப்துல்லாவாகிய) நான் ஒப்புக் கொள்கிறேன். நேருவைப் போன்ற ஒரு பெருமகன் என்னைத் தமது நண்பர் என்று கூறிக் கொள்வதைப்பற்றிப் பெருமிதம் கொள்கிறேன். மேலும் அவர் எனது பிரதேசத்தைச் சேர்ந்தவரே ஆவார். அவரும் ஒரு காஷ்மீரி, ரத்தம் தண்ணீரைக் காட்டிலும் திடமானதுதானே. ஜவஹர் லால் எனக்கு அப்படியொரு அந்தஸ்தைக் கொடுப்பாரேயானால் அதற்கு நான் எதுவும் கூறுவதற்கு இல்லை. அவர் என் நண்பர். ஆனால் அவரது நட்பிற்காக, கடந்த பதினேழு ஆண்டுகளாக என்னோடு துன்பம் அனுபவித்த லட்சக் கணக்கான என் நாட்டவருக்கு என்னால் துரோகமிழைக்க இயலாது. எனது நாட்டின் நலனை அவரது நட்பிற்காக விட்டுக் கொடுக்கவும் என்னால் முடியாது. நான் அப்படிப் பட்டவன் அல்ல (காஷ்மீரின் நலன் கருதி ஒருவேளை அதனை பாகிஸ்தானுடன் இணைக்கவோ சுதந்திர ராஜ்ஜியமாக இருக்கச் செய்யவோ முடிவெடுக்க நேர்ந்தால் அதற்கு நேருவுடனான தமது நட்பு குறுக்கிடாது என்பதையே இவ்வாறு குறிப்பிடுகிறார்).

"சச்சரவு எப்படித் தொடங்கியது என்பதை நான் விவரித்து வந்தேன். பாகிஸ்தான் வலுக்கட்டாயமாக எங்களை அடிமை கொள்ள முற்பட்டது. எங்கள் விடுதலை பற்றி பாகிஸ்தானுக்கு அக்கறை ஏதும் இல்லை. பாகிஸ்தான் எங்கள் விடுதலை இயக்கத்தை எதிர்க்காமலிருந்திருக்கலாம். ஆயிரக் கணக்கில் என் நாட்டவர் சிறையிலிடப்பட்டபோதும் சுட்டுத் தள்ளப் பட்டபோதும் எங்களை அது ஆதரித்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. மாறாக, பாகிஸ்தான் தலைவர்களும் பாகிஸ்தான் இதழ்களும் துன்புற்றுக் கொண்டிருந்த எங்கள் மக்களைத் தூற்றிக் கொண்டிருந்தார்கள் (காஷ்மீரின் வெளியுலகத் தொடர்பு பாகிஸ்தானாகி விட்டிருந்த பகுதியின் வழியாக இருந்ததால் அதைக் காரணம் காட்டி மன்னர் ஹரி சிங்குடனும் பாகிஸ்தான் பேரம் பேசிக் கொண்டிருந்ததால் அச்சமயம் அப்துல்லாவை பாகிஸ்தான் ஆதரிக்கவில்லை ).

"இப்பொழுது திடீரெனப் பாகிஸ்தான் பிரதிநிதி இந்தக் கவுன்சில் முன்பு வந்து நின்றுகொண்டு, ஜம்மு காஷ்மீர் மக்களின் சுதந்திரம் பற்றிப் பேசுகிறார். உலகம் இதை நம்பலாம். ஆனால் எனக்கு அதை நம்புவது மிகவும் சிரமம்.
"பாகிஸ்தானின் பலவந்தம் செய்கிற தந்திரத்திற்கு அடிபணிய நாங்கள் மறுத்து விடவே அது முழு அளவிலான ஆக்கிரமிப்பை மேற்கொண்டது (பாகிஸ்தான் சாலைப் போக்குவரத்தை மறித்து, பொருளாதாரத் தடை விதித்ததைக் குறிப்பிடுகிறார்). வனவாசிகள் எங்கள் பகுதிக்குள் புகுந்து விருப்பம் போல அட்டகாசம் செய்ய அது ஊக்குவித்தது. பாகிஸ்தானின் ஊக்குவிப்பு இல்லாமல் அவர்களால் எங்கள் பகுதிக்குள் நுழையவே முடியாது. ஏனெனில் எங்கள் பகுதிக்குள் அவர்கள் நுழைய வேண்டுமானால் பாகிஸ்தானைத் தாண்டிக்கொண்டு தான் வர முடியும். நூற்றுக் கணக்கான டிரக்குகள், ஆயிரமாயிரம் கேலன் பெட்ரோல், ஆயிரக் கணக்கான துப்பாக்கிகள், குண்டுகள், என ஒரு பட்டாளத்திற்குத் தேவையான எல்லாவிதமான உதவிகளும் அவர்களுக்கு அளிக்கப் பட்டன. எங்களுக்கு அது தெரியும். ஏனென்றால் அது எங்களுக்குப் பழக்கமான பிரதேசம். பொருளாதரத் தடை மூலம் தன்னால் சாதிக்க முடியாததை முழு அளவிலான ஆக்கிரமிப்பு மூலம் சாதித்துக் கொள்ள பாகிஸ்தான் விரும்பியது.

"இன்று எங்கள் வேண்டுகோள் என்ன? பாதுகாப்பு கவுன்சில் தன் உறிப்பினர்கள் சிலரை அந்தப் பகுதிக்கு அனுப்பிவைத்து அங்கு என்ன நடக்கிறது என்பதை அவர்களே தெரிந்து கொள்ளட்டும் என்பதுதான்.

பாகிஸ்தான் சுய முடிவெடுக்க விடாது

"இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைந்தது சட்டப்படியானதா என்பதுதான் எங்கள் கேள்வி என்று பாகிஸ்தான் முன் வந்து கூறுமானால், அது பற்றி விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். எனினும் இப்பொழுது அவர்கள் (பாகிஸ்தான்) என்ன சொல்கிறார்கள் என்றால் "காஷ்மீர் மக்களுக்கு சுய நிர்ணயம் அளிக்கப் பட வேண்டும் என நாங்கள் வேண்டுகிறோம்' என்கிறார்கள். எதனுடன் இணைய வேண்டும் என்று சுதந்திரமாக முடிவு செய்யும் உரிமை காஷ்மீர் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு இன்னாருடன்தான் இணைய வேண்டும் என்கிற நிர்பந்தம் இருக்கக் கூடாது என்கிறார்கள்.

"இன்று பாகிஸ்தான் இப்படிச் சொல்வதற்குப் பல காலம் முன்பே அதை இந்தியாவின் பிரதமர் நேரு சொல்லிவிட்டார். அதிலும் காஷ்மீர் மிகவும் சங்கடமான நிலையில் இருந்த போது அவ்வாறு சொல்ல வேண்டிய அவசியம் இன்றியே அவர் அவ்வாறு சொன்னார் (பாகிஸ்தானின் மோசமான ஆக்கிரமிப்பைக் குறிப்பிடுகிறார்).

"பாகிஸ்தான் எங்களை சுயமான முடிவு எடுக்க ஒருபோதும் அனுமதிக்காது என்பதை நாங்கள் உணர்ந்தோம். வாளாவிருந்தால் முசபராபாத், பராமுல்லா, ஸ்ரீநகர் ஆகிய இடங்களிலும் அவற்றை ஒட்டிய கிராமங்கள், நகர்ப்புறங்களில் உள்ள எங்கள் சகோதர மக்களுக்கு பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பால் நேர்ந்த கதியைத்தான் நாங்களும் அனுபவிக்க நேரிடும்; வெளியில் உள்ள ஓர் அதிகார சக்தியின் உதவியைப் பெறுவதுதான் அத்தகைய நிலைமை ஏற்படாமல் இருப்பதற்கு உள்ள ஒரே வழி என அறிந்தோம்.

"இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மன்னரும் மக்களும் சேர்ந்தே இந்தியாவுடனான எங்கள் இணைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று இந்திய அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தோம். இந்திய அரசாங்கம் எளிதில் எவ்விதப் பேச்சும் இன்றி இணைப்பை ஏற்றுக் கொண்டிருக்கலாம். "சரி, உங்கள் இணைப்புக் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதற்கிணங்க உங்களுக்கு உதவி செய்கிறோம்' என்று இந்திய அரசாங்கம் சொல்லியிருக்கலாம். ஆனால் இந்தியாவின் பிரதம மந்திரி எவ்வித அவசியமும் இன்றியே, "காஷ்மீர் ஒரு சங்கடமான நிலையில் இருக்கும்போது அதைப் பயன்படுத்தி அதன் இணைப்புக் கோரிக்கையை ஏற்பது சரியல்ல. எனினும், காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாவது இந்த இணைப்பின் மூலம் சாத்தியப்படுவதால் அதன் அடிப்படையில்தான் அதற்கு ராணுவ உதவியினை அளிக்க இயலும் என்ற நிலைமையை உத்தேசித்து, இணைப்பை ஏற்கிறோம். கொலைகாரர்களும், கொள்ளைக்காரகளுமான ஆக்கிரமிப் பாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட பிறகு, இந்த இணைப்பிற்கு ஜம்மு காஷ்மீர் மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவோம்' என்று இந்தியாவின் பிரதம மந்திரி சொன்னார்.

"இணைப்பு குறித்துத் தங்களுக்குச் சுய நிர்ணய உரிமை வேண்டுமென்று பாகிஸ்தானிடம் காஷ்மீர் மக்களாகிய நாங்கள் சொன்னோம். ஆனால் ஆக்கிரமிப்புச் செய்த ஒரே வாரத்தில் ஜம்மு காஷ்மீர் முழுவதையும் வெற்றிகொண்டு விடலாம் என்றும் அதனையே ஓர் முடிந்து போன விவகாரமாக உலகின் முன் சாதித்துவிடலாம் என்றும் பாகிஸ்தான் கருதிவிட்டது. சிறிது காலத்திற்கு முன் ஐரோப்பாவில் இப்படித்தான் நடந்தது. அதே சூழ்ச்சி இங்கும் பின்பற்றப் பட்டது(ஹிட்லரின் ஜெர்மனியானது ஆஸ்திரியா, ஹங்கேரி, போலந்து எனக் கைப்பற்றிக் கொண்டே வந்ததைக் குறிப்பிடுகிறார்).

"ஆனால் அந்தச் சூழ்ச்சி தோல்வியுற்றதால் பாகிஸ்தான் உலகின் வழக்காடு மன்றமான இங்கு வந்து, "எங்களுக்கு ஒன்றும் வேண்டாம். தங்கள் விதியை நிர்ணயம் செய்துகொள்ள காஷ்மீர் மக்கள் சுதந்திரமாக இயங்க வழி செய்ய வேண்டும் என்று மட்டுமே நாங்கள் வேண்டுகிறோம். இதன் பொருட்டு அவர்களுக்குச் சுய நிர்ணய உரிமை அளிக்கப் பட வேண்டும்' என்று சொல்கிறது (காஷ்மீர் மக்களை அவர்களில் பெரும்பாலானவர்கள் முகமதியர் என்பதை வைத்து மத அடிப்படையில் அவர்களைத் தங்கள் மக்கள் என்று பாகிஸ்தான் சொல்லத் தொடங்கி விட்டதைக் குறிப்பிடுகிறார்).

பொருளற்ற பொது நிர்வாகம்

"அதன் பிறகு பாகிஸ்தான் தொடர்ந்து கூறுவது என்னவென்றால், "சுய நிர்ணயத்திற்கான ஏற்பாட்டை ஒரு பொதுவான நிர்வாகத்தின் பொறுப்பில் செய்தால்தான் அது நடுநிலையாகவும் நேர்மையாகவும் நடைபெற முடியும்' என்பதுதான். "பொதுவான நிர்வாகம் என்று சொல்வதன் மூலம் அவர்கள் என்ன குறிப்பிடுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. பொது நிர்வாகம் என்றால் என்ன அர்த்தம்?

"ஷேக் அப்துல்லா ஜவஹர் லால் நேருவின் நண்பர். அதனால் அவருக்கு காங்கிரஸ் மகாசபையின் மீது அனுதாபம் இருக்கும். அவர் இந்தியாவுடன் இணைந்து விட்டமைக்கு ஆதரவான கருத்தையும் தெரிவித்து விட்டார். மேலும், ஜம்மு காஷ்மீரின் அவசர கால நிர்வாகியாகவும் நியமிக்கப் பட்டிருக்கிறார். எனவே அவர் போய் விட வேண்டும்' என்று பாகிஸ்தான் பிரதிநிதி கூறுகிறார்.

"அவர் விரும்புகிற மாதிரி ஷேக் அப்துல்லா போய் விடுவதாக வைத்துக் கொள்வோம். அதன் பிறகு அவருடைய இடத்திற்கு யார் வருவார்கள்? ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நாற்பது லட்சம் மக்களிலிருந்து ஒருவர்தான் அந்த இடத்திற்கு வந்தாக வேண்டும். அவர் ஒரு நடுநிலையாளராக, இரு தரப்பிற்கும் பொதுவானவராக இருப்பார் என்று எப்படிக் கூற முடியும்? நாங்கள் மரக் கட்டைகளோ பொம்மைகளோ அல்ல. ஏதேனும் ஒரு கருத்தைக் கொண்டவர்களாக அவர்கள் இருந்தாக வேண்டும். இந்தியாவுக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ ஆதரவு காட்டுபவர்களாகக் காஷ்மீரின் மக்கள் இருந்தாக வேண்டும்.

"ஆக, நடு நிலை நிர்வாகம் என்றால் காஷ்மீர் மக்கள் தங்கள் மாநில நிர்வாகத்தின் மீது எவ்வித உரிமையும் இல்லாதவர்களாக இருந்தாக வேண்டும் என்று சொல்கிற நிலைப்பாட்டிற்குப் பாகிஸ்தான் வந்தடைகிறது. வேறு எவரோ அந்த இடத்திற்கு வர வேண்டும். இது நியாயம்தானா? காஷ்மீர் மக்கள் தமது சொந்த மாநிலத்தை நிர்வகிக்கும் அதிகாரத்தை இழந்து நிற்பதைத்தான் பாதுகாப்பு கவுன்சில் விரும்புகிறதா?

"சரி, விவாதத்திற்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நாற்பது லட்சம் மக்கள் தங்கள் தேசத்தின் நிர்வாகத்தில் தங்களுக்கு எவ்வித அதிகாரமும் வேண்டாம் என்று ஒப்புக் கொள்வதாகவே வைத்துக் கொள்வோம். அப்போது நிர்வாகப் பொறுப்பை யாரிடம் விடுவது? இந்தியா விடமா? இல்லை பாகிஸ்தானிடமா? உலகின் வேறு எந்த தேசத்திடமாவதா? அல்லது கடவுளிடமே காஷ்மீரின் இடைக் கால கட்ட நிர்வாகப் பொறுப்பை ஏற்குமாறு பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக் கொண்டாலும் அவராலும் கூட பட்சபாதமின்றி செயல்பட முடியாது. ஏதேனும் ஒரு தரப்பிற்குச் சாதகமாக அமையும்படியாகத்தான் அவரது முடிவு இருக்கும்.

"தற்சமயம் தொழிற் கட்சி அரசு அதிகாரத்தில் உள்ள பிரிட்டனில் நாளைக்கே பொதுத் தேர்தல்வருவதாக வைத்துக் கொள்வோம். பிரதமாராக உள்ள அட்லியிடம் நீங்கள் தொழிற் கட்சிக்காரராக இருப்பதால் அதற்குச் சாதகமாகத்தான் நடந்து கொள்வீர்கள். அதனால் பதவியிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். தேர்தல் நடந்து முடிகிற வரை வேறு ஒரு பொதுவான நபர் பிரதமராக இருக்கட்டும் என்று சொல்வது சரியாக இருக்குமா?
"எனினும் ஷேக் அப்துல்லா இந்தியாவுக்கு ஆதரவான கருத்தைத் தெரிவித்துவிட்டதால் அவர் இருக்கக் கூடாது. ஏனென்றால் அவரால் நடுநிலையுடன் வாக்கெடுப்பை நடத்த முடியாது என்று பாகிஸ்தான் சொல்லுமானால் இன்று காஷ்மீரின் நிர்வாகப் பொறுப்பில் ஷேக் அப்துல்லா இருப்பதற்குக் காரணம் அது மக்களின் விருப்பம் என்பதுதான். அவர்கள் விரும்பும் வரை நான் பொறுப்பில் இருப்பேன்.

"சுய நிர்ணய வாக்கெடுப்பு நடக்குமானால் அது சுதந்திரமான முறையில் நடைபெறும் என்று நாங்கள் அறிவித்துள்ளோம். யார் வேண்டுமானாலும், இந்தியா அளித்த புகாரின் பேரில் அமைந்த பாதுகாப்பு கவுன்சில் ஆணைக்குழுவே ஆயினும் அதனை மேற்பார்வை செய்யட்டும். வாக்கெடுப்பை எவ்வாறு நடத்த வேண்டும் என்று அது சொல்லட்டும். எப்படி நடத்தினால் வாக்கெடுப்பு நடுநிலை பிறழாமல் நடக்கும் என்று ஆலோசனை சொல்லட்டும். எனது நிர்வாகம் இம்மியளவும் பிசகாமல் அதற்கு இணங்க சுய நிர்ணய வாக்கெடுப்பை நடத்தி வைக்கும்.

இந்திய ராணுவம் விலகினால் ஆபத்து

"இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீரில் இருக்கும் வரை அங்கு சுதந்திரமான சுய நிர்ணய வாக்குப் பதிவு நடைபெறுவது சாத்தியமில்லை' என்று பாகிஸ்தான் கூறுகிறது. இந்நிலையில் எனது நாட்டில் என்ன நடக்கிறது என்பதை முழுமையாக விவரிப்பது எனக்கு மிகவும் சிரமமாக உள்ளது. அங்கு ஒரு பகுதி முற்றிலும் நாசமடைந்துள்ளது. சண்டை இன்னமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆயிரக் கணக்கான வனவாசிகள் ஜம்மு காஷ்மீரில் நிர்வாகம் எந்த விதத்திலாவது பலவீனப்பட்டால் அதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக உள்ளனர்.
"இன்று அத்து மீறும் கொடிய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து காஷ்மீரைப் பாதுகாக்க இந்திய ராணுவம் மட்டுமே உள்ளது. அது வெளியேறிவிட்டால் காஷ்மீர் மாநிலம் முற்றிலும் அழிந்து போவதற்குத்தான் இடமளிப்பதாகிவிடும்.

"இந்திய ராணுவத்தை விலகிப் போகும்படி நான் கூறினால் கொலையும் கொள்ளையும் பெண் களைக் கடத்திச் செல்வதுமாக அட்டூழியம் செய்யும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து எமது மக்களை என்னால் எவ்வாறு காப்பாற்ற இயலும்? அத்தகைய ஒரு கொடுமைக்குத்தானே கடந்த பல மாதங்களாக அவர்கள் இலக்காகி வந்திருக்கிறார்கள்? சுய நிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பு கிராமந்தோறும் நடக்கையில் அதில் இந்திய ராணுவம் தலையிடுவது சாத்தியமில்லை. அது எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில்தான் ஈடுபட்டுள்ளது. எங்கேயாவது ஊடுருவல் இருப்பதாக அழைப்பு வந்தால் அதனைத் தடுக்கும் பொருட்டு அங்கு மட்டுமே அது செல்கிறது.
"நிலைமையைக் கட்டுபாட்டில் வைத்திருக்க பாகிஸ்தானும் இந்தியாவும் அவரவர் ராணுவத்தைக் கொண்டு கூட்டாக பந்தோபஸ்து செய்யலாம் அல்லவா' என்று கேட்கப் படுகிறது. அது காஷ்மீருக்குள் நேர் வழியில் வர இயலாத பாகிஸ்தான் கொல்லைப் புற வழியாக நுழைவதற்குத்தான் வழி செய்வதாகும். காஷ்மீருக்குள் தனது ராணுவத்தைப் புகுத்தும் ராணுவம், இந்திய ராணுவத்துடன் போரிடத் தொடங்கும். ஆகவே அது இயலாத காரியம்.
"பாதுகாப்பு கவுன்சில் முன் உள்ள விவகாரம் ஜம்மு காஷ்மீர் மன்னருக்கு ராஜ்ஜியம் எப்படிக் கிடைத்தது என்பதோ, அந்த ராஜ்ஜியத்தை இந்தியாவுடன் இணைக்க அவருக்கு அதிகாரம் உள்ளதா என்பதோ அல்ல. அப்படியொரு வாதத்தை பாகிஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் முன் வைக்கிறது. ஆனால் அது மாதிரி விவாதிப்பதற்காகப் பாதுகாப்பு கவுன்சில் முன்னால் நாம் வரவில்லை. அவ்வாறாயின் காஷ்மீர் மன்னரும் மக்களும் சட்டப்படியும் அரசியல் சாசன ரீதியாகவும் இந்தியாவுடன் இணைந்துவிட்டோம்; அதைப் பற்றிக் கேட்க பாகிஸ்தானுக்கு உரிமை இல்லை என்பதைப் பாதுகாப்பு கவுன்சில் முன் நிரூபணம் செய்வது எங்கள் பணியாக இருக்கும். ஆனால் பாதுகாப்பு கவுன்சில் முன் நடைபெறும் விவாதம் அது பற்றியதல்ல.
"ஆக்கிரமிப்புச் செய்துள்ள வனவாசிகளைச் சமாளித்து, காஷ்மீர் மக்களுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வந்து அங்கு ஒரு ஜனநாயக அமைப்பை நிறுவ இந்திய ராணுவமும் காஷ்மீர் ராணுவமும் இணைந்து செயல் படுவது சாத்தியம். அதை எங்களால் பார்த்துக் கொள்ள முடியும். அதற்கு பாகிஸ்தானின் உதவி எங்களுக்குத் தேவையில்லை. உள்நாட்டு எதிர்ப்பைச் சமாளிக்கவோ, வெளியிலிருந்து நுழைந்த ஆக்கிரமிப்பாளர்களை விரட்டி யடிக்கவோ எங்களுக்குப் பாகிஸ்தானின் ஆதரவு தேவையில்லை. எனினும் பாகிஸ்தான் எங்களின் அண்டை நாடாக இருப்பதால் அதனுடன் நட்பாக இருக்கவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் எங்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிடவேண்டாம் என்று அதனிடம் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். "இந்தக் குழப்பத்தில் எங்கள் தலையீடு இல்லை என்று பாகிஸ்தான் இங்கு கூறுகிறது. அதன் தலையீடு உள்ளதா அல்லவா என்பதைநேரில் கண்டறிய பாதுகாப்பு கவுன்சிலை அழைக்கிறோம். அதன் தலையீடு இருக்குமானால் அதனைக் கைவிடுமாறு பாதுகாப்பு கவுன்சில் பாகிஸ்தானுக்கு அறிவுறுத்த வேண்டும். தலையீடு இல்லை எனில் அது பாகிஸ்தானால் நிரூபணம் செய்யப் பட வேண்டும்.

"எந்தத் தரப்பின் தலையீடும் இன்றி சுதந்திரமான சுய நிர்ணய வாக்கெடுப்பு நடத்தி அதன் மூலம் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தமைக்கு மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்ற கருத்தில் எமக்கு வேறுபாடு இல்லை. ஆனால் அதற்காகக் காஷ்மீரின் தற்போதைய நிர்வாகிகளை மாற்றிவிட்டுத்தான் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சொன்னால் அதனை ஒப்புக்கொள்ள முடியாது.

"எதிர் காலத்தில் என்னென்ன நிகழுமோ எனக்குத் தெரியாது. ஆனால் பாதுகாப்பு கவுன்சிலிடம் ஒன்றை மட்டும் என்னால் உறுதியளிக்க முடியும். முற்றிலும் எவ்விதப் பார பட்சமும் இல்லாத நிர்வாகத்தை நான் நடத்திச் செல்வேன். தற்சமயம் மாற்று முகாமில் உள்ள என் சகோதரர்களிடம் நான் கேட்பது இதுதான்: வந்து எனக்கு ஆதரவு தாருங்கள். இது என்னுடைய நாடு. உங்களுடையதும்தான். மாநிலத்தை நிர்வாகம் செய்யுமாறு நான் கோரப்பட்டுள்ளேன். எனக்கு உங்களுடைய ஆதரவினைத் தர மாட்டீர்களா? மாநிலத்தின் நிர்வாகத்தை வெற்றிகரமாகவும் சார்பு இன்றியும் நடத்திச் செல்லக் கடமைப் பட்டுள்ளேன். "இல்லை, சார்பற்ற நிர்வாகத்தை நாங்கள்தான் தருவோம்' என்று பாகிஸ்தான் சொன்னால், அதனை ஏற்க நான் மறுக்கிறேன். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்குப் பங்களிக்க நான் மறுக்கிறேன். காஷ்மீர் மக்களிடம் இப்படிச் செய், அப்படிச் செய் என்று சொல்ல பாகிஸ்தானுக்கு உரிமை இல்லை. பாகிஸ்தானின் போக்கைப் போதுமான அளவுக்கு நாங்கள் பார்த்தாயிற்று. முசபராபாத், பராமுல்லா, மேலும் அவை சார்ந்த நூற்றுக் கணக்கான கிராமங்கள் பாகிஸ்தானின் கதையை ஜம்மு காஷ்மீர் மக்களிடம் நன்றாகவே எடுத்துக் கூறியுள்ளன. அத்தகைய அனுபவம் இனியும் எங்களுக்கு வேண்டாம்.

வேண்டாத விஷயங்கள்

"முடிவாக நான் கூறுவது என்னவென்றால், காஷ்மீர் விவகாரத்தைத் தீர்த்து வைக்க வேண்டும் என்பதற்காகப் பாதுகாப்பு கவுன்சில் விஷயத்தைக் குழப்பிவிடலாகாது என்று கேட்டுக் கொள்கிறேன். வேண்டாத விஷயங்களையெல்லாம் இங்கு ஆராய இடமளிக்கத் தேவையில்லை. பாகிஸ்தானின் பிரதிநிதி விவகாரத்திற்கு அப்பாற்பட்ட ஜம்மு காஷ்மீரின் வரலாற்றையெல்லாம் இங்கு எடுத்துரைத்தார். இந்தியாவின் வைசிராய்கள் காஷ்மீர் மன்னருக்கு ஒழுங்காக நடந்து கொள்ளுமாறும் அறிவுரைகள் கூறுவதாகவும் சில கடிதங்களை அவர் படித்துக் காட்டினார். இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட சமஸ்தானங்கள் பலவும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் படைப்புகள்தாம். கடந்த 150 ஆண்டுகளாக அவற்றின் முறை கேடான ஆட்சியை ஆதரித்து வந்ததுதானே அது? காஷ்மீர் மன்னர் சட்டபூர்வமாகத்தான் அரசுரிமையைப் பெற்றாரா என்பது பற்றியெல்லாம் விவாதிப்பதற்காக நாம் இங்கு கூடவில்லை. அதெல்லாம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் கோட்பாட்டின் சதியாட்டம். எப்படியோ காஷ்மீரின் நிர்வாகம் இன்று நம் கைக்கு வந்துள்ளது. மன்னராட்சியின் போது காஷ்மீரில் நிர்வாகம் சீராக நடைபெற்றதா அல்லவா, இந்தியாவுடன் தனது சமஸ்தானத்தை இணைக்க மன்னருக்கு அதிகாரம் உண்டா இல்லையா என்பதெல்லாம் இங்கு பிரச்சினை இல்லை. பாகிஸ்தான் சர்வ தேச நியமங்களை அனுசரிக்க வேண்டும் என்றும் காஷ்மீரில் ஆக்கிரமிப்பாளர்களை ஆதரிக்கலாகாது என்றும் பாதுகாப்பு கவுன்சில் பாகிஸ்தானுக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதுதான் இங்கு வழக்கு.

"காஷ்மீருக்குள் நிர்வகத்திற்கு எதிராக நடைபெறும் உட்பூசலையும் பாகிஸ்தான் ஆதரிக்கலாகாது. தான் ஆதரிக்கவில்லை என்று அது கூறுகிறது. அது சரி பார்க்கப் பட வேண்டும். பாதுகாப்பு கவுன்சில் ஒரு குழுவை அனுப்பி எமது குற்றச் சாட்டு நியாயமானதா அல்லவா என்று பார்க்கச் செய்ய வேண்டும். குற்றச் சாட்டு நியாயமானதுதான் என்று தெரிய வருமானால் பாகிஸ்தான் அவ்வாறான குற்றத்தைச் செய்யாமலிருக்குமாறு பாதுகாப்பு கவுன்சில் பாகிஸ்தானிடம் கூற வேண்டும். இல்லையேல் இந்தியா தனக்குள்ள சாத்தியக் கூறுகளைப்பயன் படுத்தி பாகிஸ்தான் பக்கம்தான் குற்றம் உள்ளது என்கிற முடிவுக்கு ஏற்ப பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை எடுக்க அனுமதிக்கப் பட வேண்டும்.

"இந்தியாவின் சார்பில் நான் பேசுவதானால், ராணுவ உதவி எதையும் அது பாகிஸ்தானிடம் கோரவில்லை (காஷ்மீரில் நிலைமையைச் சீராக்குவதற்காக ). பாகிஸ்தான் அத்துமீறிய ஆகிரமிப்பாளர்களுக்குத் தனது இடத்தில் முகாம்களை அமைத்துக் கொடுக்கலாகாது என்றுதான் இந்தியா கோருகிறது. எல்லையை ஒட்டியுள்ள பாகிஸ்தான் முழுவதும் ஏராளமான ஆக்கிரமிப்பாளர் முகாம்கள் நிரம்பியுள்ளன. அவர்கள் பாகிஸ்தானின் பிரஜைகள்தாம். அவர்களைத் தனது பகுதியில் அனுமதிக்க வேண்டாம் என்றுதான் நாங்கள் பாகிஸ்தானிடம் கேட்டுக் கொள்கிறோம்.
"எல்லையில் முகாமிட்டுள்ள வனவாசிகளுக்கோ காஷ்மீருக்குள்ளேயோ சண்டை செய்துகொண்டிருக்கும் வனவாசிகளுக்கோ ஆயுதங்களையும் வெடி மருந்துகளையும் கொடுத்து உதவும் காரியத்தை பாகிஸ்தான் செய்யக் கூடாது. இவையெல்லாம் சர்வ தேச நெறிமுறைகளுக்கு முரணானவையாகும். அவ்வளவுதான்.

Copyright:thinnai.com 

No comments: