வினை விதைத்தவன் வினையறுப்பான்...
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்...
நம் கண்முன்னே இப்பழமொழிகள் மெய்பிக்கப்படுகிறது.
ஹிந்துஸ்தானத்துக்கு எதிராக எத்தனை பயங்கரவாதங்களை வன்முறைகளை இந்த நாடு ஏவியிருக்கும் ?
பல்வேறு உலக நாடுகளிடமிருந்து பிச்சையாக பெற்ற பணத்தைக்கொண்டு ஹிந்துஸ்தானத்தின் ஸ்திரத்தன்மைக்கு ஊறுவிளைவிப்பதையே தனது ஒரே குறிக்கோளாககொண்டு இயங்கிவந்த இந்த நாடு திவாலாவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
இந்த நாடு வாழ்ந்தாலும் வீழ்ங்தாலும் பாரதத்துக்கு ஆபத்துதான். இன்றய தினமணியில் வந்த இந்த தலையங்க கட்டுரையப்பாருங்கள்
*******************************
Oct.27, 2008 Dinamani Editorial
திவாலாகிறதா பாகிஸ்தான்?
எம். மணிகண்டன்
பாகிஸ்தானை இப்போது இரண்டு பிரச்னைகள் துரத்திக் கொண்டிருக்கின்றன. ஒன்று தீவிரவாதம்; மற்றொன்று பொருளாதார நெருக்கடி. இந்த இரண்டுமே தற்போது உலகின் அனைத்து நாடுகளுக்கும் இருக்கும் பிரச்னைதான். ஆனால், பாகிஸ்தானில் இவற்றின் வீரியம் அதிகம்.
பாகிஸ்தானின் அன்னியச் செலாவணி கையிருப்பு 400 கோடி அமெரிக்க டாலர்களாகக் குறைந்து விட்டது. இன்னும் 6 வார இறக்குமதிக்கே இது போதாது. கடன்பெறத் தகுதியுள்ள நாடுகள் பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் இருக்கும் அந்த நாடு, சர்வதேச கடன்களுக்கான தவணைகளைச் செலுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நாள்களில் 300 கோடி டாலர்கள் கிடைக்காவிட்டால் நெருக்கடி முற்றிப்போகும்.
கடந்த சில மாதங்களாகவே பிரச்னை இருந்து வந்தாலும், அதை யாரும் பெரிய அளவில் எடுத்துக் கொள்ளவில்லை. அமெரிக்க உளவு அமைப்பின் ரகசிய அறிக்கை ஒன்று பாகிஸ்தானில் நிலவும் சூழ்நிலையை, "பணம் இல்லை, எரிசக்தி இல்லை, அரசும் இல்லை' எனக் குறிப்பிட்டிருந்தது. இந்த அறிக்கை திட்டமிட்டே ஊடகங்களுக்கும் கசியவிடப்பட்டது. இதன்பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக பாகிஸ்தானின் உண்மையான நிதி நிலைமை வெளியுலகுக்குத் தெரிய வந்தது.
எனினும், பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு உதவி செய்து வருவதால், தேவையான பண உதவியை அமெரிக்கா செய்யும் என பாகிஸ்தான் நம்பி வந்தது. அதனால்தான், வடமேற்கு மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை ராணுவம் மேற்கொண்டது. நாட்டின் எல்லைப் பகுதியில் அமெரிக்க விமானங்கள் குண்டுமழை பொழிந்தபோதுகூட பெரிய அளவில் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை.
ஆனால், நிதிப் பிரச்னை தீவிரமாகி பணம் தேவை என்கிறபோது அமெரிக்கா கையை விரித்துவிட்டது. யாராவது நமக்கு உதவி செய்ய மாட்டார்களா என்பது போன்ற பரிதாப நிலைமையில் இருக்கும் அமெரிக்காவிடம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாதுதான். பாகிஸ்தான் வந்த அந்நாட்டு அமைச்சர் ரிச்சர்ட் பவுச்சர் அதை பாகிஸ்தான் பிரதமரிடம் நேரடியாகவே தெரிவித்து விட்டார்.
அமெரிக்காவிடம் இல்லாவிட்டாலும் சீனாவிடம் பணத்தைப் பெற்றுவிடலாம் என்றுதான் பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் நினைத்திருந்தார்கள். அதற்காகத்தான் அதிபர் ஜர்தாரி சீனாவுக்குச் சென்றார். அங்கு பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். பல திட்டங்களில் முதலீடு செய்வதற்கு சீனா சம்மதித்து. இரண்டு அணுமின் திட்டங்களை அமைப்பதற்கு உதவி செய்யவும் ஒப்புக் கொண்டது. ஆனால், பணம் தர முடியாது என்று கறாராகச் சொல்லிவிட்டது. கடன் கேட்டு ஒவ்வொரு நாட்டுக்காகச் செல்லாமல், முறையான பொருளாதாரத் திட்டங்களுடன் சர்வதேச நாடுகளை அணுகுமாறு அறிவுரையும் கூறியது. ஜர்தாரிக்கு இது மிகப்பெரிய ஏமாற்றம்.
உண்மையில் அமெரிக்காவும் சீனாவும் மட்டுமல்ல, உலகின் எந்த நாடும் பாகிஸ்தானை நம்பத் தயாராக இல்லை. இதற்குக் காரணம் "கடந்தகால' அனுபவங்கள்தான். இது தவிர, உலக நாடுகள் அனைத்தும் தங்களது நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், பாகிஸ்தானுக்கு உதவுவதில் விருப்பம் காட்டவில்லை.
சீனாவும் கைவிட்ட பின்னர்தான் பாகிஸ்தான் எவ்வளவு பெரிய சிக்கலான நிலையில் இருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். "அனைத்து வழிகளும்' அடைக்கப்பட்டுவிட்ட நிலையில், சர்வதேச செலாவணி நிதியத்தை பாகிஸ்தான் நாடியிருக்கிறது. ஆனால், கடன் தருவதற்கு அந்த அமைப்பு விதிக்கும் நிபந்தனைகள் மிகக் கடுமையானவை. எதற்கும் மானியம் தரக்கூடாது என்பது அவற்றில் முக்கியமானது. இதுபோன்ற நிபந்தனைகளால் ஏழைகள் இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவதுடன், அரசுக்கு எதிரான போராட்டங்களும் அதிகமாகும். இந்த முடிவுக்குப் போக வேண்டாம் என நவாஸ் ஷரீபும் எச்சரித்திருக்கிறார். எனினும், பணம் கிடைத்தால் போதும் என்ற நிலையில், எத்தகைய நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ளவதென பாகிஸ்தான் முடிவு செய்திருக்கிறது.
பாகிஸ்தானின் பொருளாதாரம் மிகப்பெரும் சரிவைச் சந்தித்ததற்கு முக்கியக் காரணங்கள் இரண்டு. முஷாரப் காலத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்துக்கும் மானியம் அளித்தது அவற்றுள் ஒன்று. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிக வேகமாக உயர்ந்தபோதும், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்தவில்லை. இரண்டாவது, பேநசீர் படுகொலையால் எழுந்த அரசியல் ஸ்திரமற்ற சூழல். இதனால், ரூபாயின் மதிப்பு சரிவு, பங்குச் சந்தை வீழ்ச்சி, பணவீக்கம் உயர்வு என பொருளாதாரம் பலவீனமாகிவிட்டது.
இந்த நெருக்கடியிலிருந்து தங்களைக் காப்பாற்ற சில நண்பர்கள் முயற்சித்து வருவதாக பாகிஸ்தானின் மூத்த அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
உண்மையில், அந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டியது உலகத்தின் கடமை. இப்போது பாகிஸ்தானுக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி அந்த நாட்டுக்குள்ளே அடங்கிவிடக் கூடியதல்ல. அது, உலகத்தையே பாதிக்கும் ஆபத்து இருக்கிறது. ஏனெனில் அங்கு அணுகுண்டும் இருக்கிறது, கூடவே அல்-காய்தாவும் இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment