Wednesday 8 October, 2008

பெரியவர் மலர்மன்னன் காஷ்மீர் குறித்து எழுதிய திண்ணைக்கட்டுரை - 4

இவ்வார திண்ணையில் பெரியவர் மலர்மன்னன் காஷ்மீர் குறித்து எழுதிய கட்டுரை பாகம்-4 வந்திருக்கிறது.

*************************************


Thursday October 2, 2008
காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் - 4
மலர்மன்னன்

பாகிஸ்தான் உதவி வேண்டாம்

"எங்களுக்குப் பாகிஸ்தானிடமிருந்து ஆயுத உதவி எதுவும் தேவையில்லை. உள்ளே புகுந்துள்ள ஆக்கிரமிப்பளர்களான வனவாசிகளை விரட்ட இந்திய ராணுவமே போதுமானது. பாகிஸ்தான் எங்கள் விஷயத்தில் தலையிடாமலிருந்தாலே போதும். மன்னருடனான எங்கள் சச்சரவை நாங்களே தீர்த்துக் கொள்வோம். இப்போது நடக்கும் அதிகாரப் பூர்வமற்ற சண்டை நீடிக்கும் வரை எதுவும் செய்வது மிகவும் சிரமமாக இருக்கும். எமது கைகள் கட்டப் பட்டுள்ளன.

"இப்பொழுது நடப்பது என்ன? எல்லைக்கு அப்பால் வனவாசிகள் பெருமளவில் குவிந்துள்ளனர். நான்காயிரம், ஐந்தாயிரம் என அவர்கள் உள்ளனர். எமது கிராமங்களுக்குள் புகுந்து அவற்றைத் தீக்கிரையாக்குகிறார்கள். பெண்களைக் கடத்திச் செல்கிறார்கள். எமது ராணுவம் அவர்களைக் கைப்பற்றச் செல்லும் போது, எல்லையைத் தாண்டித் தப்பிச் சென்று விடுகிறார்கள். அவர்கள் மீது சுட்டால் அது இரு நாடுகளுக்கிடையான பெரும் மோதலாகி விடும்.

"இந்திய ராணுவத்தால் வெகு எளிதாக எல்லையைக் கடந்து சென்று ஆக்கிரமிப்புச் செய்பவர்களின் முகாம்களைத் தாக்கி அழித்து விடமுடியும். ஆனால் அவை யாவும் பாகிஸ்தானின் பகுதியிலுள்ளன. ஆகவே அதனைச் செய்வதில்லை. பாதுகாப்பு கவுன்சிலுக்கு இதுபற்றிப் புகார் செய்வதுதான் முறை என்று நாங்கள் கருதுகிறோம்.

"இவ்வாறு புகார் தெரிவிக்கும்போது பாகிஸ்தானின் பிரதிநிதி அடாவடியாக அதனை மறுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆக்கிரமிப்பாளர்களுக்கு பாகிஸ்தான் எல்லாவிதமான உதவிகளையும் அளிக்கிறது. வெளியிலிருந்து ஊடுருவும் ஆகிரமிப்பாளர்களுக்கும் காஷ்மீரில் உள்ளேயிருந்து தொல்லை கொடுப்பவர்களுக்கும் பாகிஸ்தான் உதவி வருவது அனைவருக்கும் தெரியும். எனினும் பாகிஸ்தான் இதனை தைரியமாக மறுக்கிறது.

"இந்நிலையில் நான் என்ன செய்ய முடியும்? காஷ்மீர் மாநிலம் முழுவதும் உள்ள நிலைமையையோ, பாகிஸ்தான் எல்லை நெடுகிலும் ஆக்கிரமிப்பாளர்கள் குவிக்கப்பட்டிருப்பதையோ பாதுகாப்பு கவுன்சிலுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட என்னிடம் மாய விளக்கு எதுவும் இல்லை. எனவே பாதுகாப்பு கவுன்சில் உறுபினர்களே நேரில் சம்பவ இடத்திற்கு வந்து, யார் சண்டை செய்கிறார்கள், யார் அமைதியாக இருக்கிறர்கள் என்பதைக் காண வேண்டுகிறேன். அப்போது பாதுகாப்பு கவுன்சில் முன் நாங்கள் கொண்டு வந்த புகார் வார்த்தைக்கு வார்த்தை உண்மை என்பதை எங்களால் நிரூபிக்க இயலும்.'

இவ்வாறாகத் தனது நீண்ட உரையைப் பாதுகாப்பு கவுன்சிலில் நிகழ்த்தி முடித்தார், அப்துல்லா.

ஆக்கிரமிப்பாளர்கள் பற்றித் தொடக்க முதலே அப்துல்லா பதிவு செய்து வந்ததோடு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹிந்துஸ்தானத்துடன் இணைந்தது காஷ்மீர் மக்களும் சேர்ந்துஎடுத்த முடிவுதான் என்றும் அது முடிந்து போன சமாசாரம் என்றும் வலியுறுத்தி வரவும் தவற வில்லை. இது பற்றியும் சில பதிவுகளைத் தருகிறேன்:

1947 நவம்பர் 16 அன்று ஷேக் அப்துல்லா வெளியிட்ட தகவல்:
இந்த திடீர்த் தாக்குதல் நடத்தும் கொள்ளையர்கள் நமது நாட்டுக்குள் புகுந்து ஆயிரக் கணக்கான பெண்களைக் கவர்ந்து சென்றனர். அனைவரையும் அனைத்தையும் சூறையாடினர். இந்நிலையில் பாகிஸ்தான் திடீர் என்று உலகின் முன் தோன்றி, தன்னை காஷ்மீர் மக்களின் விடுதலைக்காக முன்னிற்பது போலக் காண்பித்துக் கொள்கிறது. உலகம் ஹிட்லரையும் கோயபல்ஸையும் கழித்துக் கட்டியாயிற்று. அனால் எனது நாட்டில் என்ன நடந்தது, இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பார்க்கிறபோது, அவர்களின் ஆவிகள் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்துவிட்டதாகவே நான் நம்புகிறேன்.

1947 நவம்பர் 19 அன்று அவர் சொன்னது:

இந்திய யூனியனுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இணைப்பது அரசியல், பொருளாதாரம் ஆகிய இரு வழிகளிலும் மாநிலத்திற்குப் பயன் தருவதாக இருக்கும். பொருளாதார ரீதியில் காஷ்மீர் தனது சந்தைக்குப் பாகிஸ்தானைக் காட்டிலும் இந்தியாவைக் கூடுதலாகச் சார்ந்துள்ளது. அரசியல் ரீதியாக இந்தியா பாகிஸ்தானைவிட முற்போக்கானது. எனவே காஷ்மீர் தனது சுயமான மதி நுட்பத்துடன் சுதந்திரமாக வளர்ச்சி பெற வேண்டுமானால் இந்திய யூனியனுடன் தன்னை இணைத்துக் கொள்வதன் மூலமாகவே அது கூடுதலான வாய்ப்பைப் பெற முடியும்.

1948 ஃபிப்ரவரி 5 அன்று சொன்னது:

நாங்கள் இந்தியாவுடன் இணந்தே பணியாற்றுவது, அதனுடன் சேர்ந்தே சாவது என்று முடிவு செய்துவிட்டோம். இந்த முடிவைக் கடந்த 1947 அக்டோபரில் அல்ல, 1944 லில் ஜின்னா எங்கள் நாட்டின் மீது கண் வைத்து முன்னேற முற்பட்ட போதே அதை நாங்கள் தடுத்து நிறுத்தி, இம்முடிவுக்கு வந்துவிட்டோம். அது முதலே எமது தேசிய மாநாடு ஜின்னாவின் (ஹிந்து முஸ்லிம் என்னும்)இரு தேசியக் கோட்பாட்டிலிருந்து விலகியே இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளது.

1948 அக்டோபர் 27 அன்று தெரிவித்தது:

திடீர்ப் படையெடுப்பாளர்கள் எம் பெண்டிரைக் கவர்ந்தனர். குழந்தைகளைப் படுகொலை செய்தனர். அனைவரையும் அனைத்தையும் கொள்ளை கொண்டனர். மசூதிகளை விபசார விடுதிகளாக மாற்றினர். இன்று ஒவ்வொரு காஷ்மீரியும் படையெடுத்து வரும் வனவாசிகளையும் அவர்களைத் தூண்டிவிட்டு அனுப்புபவர்களையும் வெறுக்கிறான். முஸல்மான்களே மிகப் பெரும்பான்மையினராக உள்ள எமது நாட்டில் இவ்வாறான பயங்கரங்கள் நிகழ்வதற்கு ப் பொறுப்பாளிகள் அவர்களே.

புது தில்லியில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசியது (ஸ்டேட்ஸ்மன் மார்ச் 07, 1948):

காஷ்மீர் மீது அத்துமீறி ஆக்கிரமிப்புச் செய்த பாகிஸ்தானுக்குக் காஷ்மீர் மக்கள் சுய நிர்ணய உரிமை பெற வேண்டும் என்று கோர எவ்வித அதிகாரமும் இல்லை. காஷ்மீரை ஆக்கிரமிப்புச் செய்ததன் மூலம் பாகிஸ்தான் ஓர் ஆக்கிரமிப்பாளர் என்கிற பெயரை நிரந்தரமாகச் சம்பாதித்துக் கொண்டு விட்டது. அதனோடு எங்களுக்கு எவ்வித உறவும் இல்லை. நாங்கள் எங்கள் தலைவிதியை இந்தியாவுடன் பிணைத்துக் கொண்டு விட்டோம். இனி எங்களை எதனாலும் பிரிக்க இயலாது.
ஸ்ரீநகர் பொதுக் கூட்டத்தில் பேசியது (ஹிந்துஸ்தான் டைம்ஸ் மே 26, 1948):
காஷ்மீர் கால காலத்திற்கும் இந்தியாவுடன்தான் இருக்கும். அதற்காக எத்தகைய தியாகம்செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். நாம் அனைவரும் இந்தியர்கள். இந்தியாவே நமது தாயகம்.

ஸ்ரீநகர் பத்திரிகையாளர் கூட்டம் (ஹிந்துஸ்தான் டைம்ஸ் மே 29, 1948):
ஜம்மு காஷ்மீர் மாநில மக்களாகிய நாங்கள் எங்கள் விதியை இந்திய மக்களுடன் பிணைத்துக் கொண்டது ஏதேனும் உணர்ச்சி வேகத்திலோ, கையறு நிலையிலோ அல்ல, பகிரங்கமான விருப்பத் தேர்வின் மூலமாகத்தான். சுதந்திரத்திற்கான பொது நோக்கிலும் கூட்டாக அனுபவித்த கொடுமைகளின் காரணமாகவும் நாங்கள் ஒன்றாகியுள்ளோம். இந்தியா மதச் சார்பற்ற தன்மையைக் கடைப் பிடிப்பதாக உறுதி பூண்டுள்ளது. நாங்களும் அதே கொள்கையைப் பின்பற்ற முனைந்துள்ளோம்.

செய்தியாளருக்கு அளித்த நேர்காணல் (நேஷனல் ஹெரால்டு, ஜூன் 19, 1948):
எங்கள் படகுகளையெல்லாம் நாங்கள் கொளுத்திப் போட்டு விட்டோம் (எங்கள் தனித் தன்மை என்பதையெல்லாம் கைவிட்டு விட்டோம் என்பது பொருள்). (பாகிஸ்தானைப் போன்ற) ஒரு எதேச்சாதிகார அமைப்புக்குக் காஷ்மீரில் இடமில்லை. இந்தியாவின் கவுரவத்திற்குக் காஷ்மீரால் இழுக்கு நேரும்படியாக எவர் கையிலும் ஒரு விளையாட்டுப் பொருளாக நாங்கள் இருக்க மாட்டோம்.

புது தில்லி பத்திரிகையாளர் சந்திப்பு (செப்டம்பர் 29, 1948):

இந்தியாவும் பாகிஸ்தானும் எதிர் எதிரான இருவேறு கொள்கைகளைக் கடைப் பிடிப்பவை.

அவ்விரண்டில் எதைத்தேர்ந்துகொள்வது என்கிற பிரச்சின எங்கள் முன் வந்தபோது, காஷ்மீரின் அரசியல், பொருளாதாரம், வளங்கள், கலாசாரம் ஆகிய அனைத்தும் வளர்ச்சி பெற வேண்டுமானால் இந்தியாவுடன் இணைந்திருந்தால் மட்டுமே அது சாத்தியம் என நானும் எனது சகாக்களும் எமது கட்சியின் செயற் குழுவில் முடிவு செய்தோம் (ஜம்மு காஷ்மீர் அனைத்துத் தரப்புப் பிரதிநிதிகளின் விசேஷக் கூட்டம் நடைபெற்று முடிந்தபின் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி).

செய்தியாளர்களிடம் பேசுகையில் (அக்டோபர் 14, 1948 தி ஹிந்து )

காஷ்மீர் இந்தியாவின் ஓர் அங்கமாக இருக்கும் என்று கடந்த ஆண்டு திரு. நேருவிடம் கூறியது இப்போது ஒரு நிரந்தரப் பிணைப்பாகவே ஆகிவிட்டது. இந்திய ராணுவமும், இந்திய மக்களும் நாங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெரும் சங்கடத்தில் சிக்கியபொழுது எங்களுக்கு அளித்த உதவியை என்றென்றும் எங்களால் மறக்கவே முடியாது. காஷ்மீர் மக்கள் பசி பட்டினியால் வாடிய போது இந்திய ராணுவ வீரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பங்கீட்டு (ரேஷன்) உணவையே கொடுத்து அவர்களைக் காப்பாற்றினார்கள். இந்தியாவின் போக்கு எவ்வாறு உள்ளது என்பதை ஒரு வருட காலம் பார்த்த பிறகே எமது எதிர் கால சந்ததியரும் ஏற்கத் தக்க வகையில் நிரந்தரமாக இந்தியாவில் இணைந்திருப்பது என நாங்கள் முடிவெடுத்தோம். இந்தியாவின் கொள்கையும் செயல் திட்டமும் எமது கொள்கை, செயல் திட்டங்களை ஒத்திருப்பதன் அடிப்படையிலேதான் இந்தியாவுடன் இணைவது என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு என்கிற சங்கடத்திலேயிருந்துது தப்பிக்க வேண்டும் என்பதற்காக அல்ல).

ஸ்ரீநகர் ஈத் பெரு நாள் கூட்டத்தில் ஷேக் அப்துல்லா (அக்டோபர் 16, 1948)
அண்மையில் ஸ்ரீநகரில் நடைபெற்ற மாநாட்டின் போது, காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்து விட்டதில் தமக்கு உள்ள நம்பிக்கையினை ஜம்மு காஷ்மீர் மக்கள் உறுதி செய்தனர். அவர்களின் உறுதிப்பாட்டிற்கு இதற்கு மேலும் ஆதாரம் வேண்டுமா?

ஸ்ரீநகர் செய்தியாளர் கூட்டம் (மே 18, 1949)

காஷ்மீர் மக்கள் யாருடன் இணைவது என்பது பற்றி(மன்னராட்சி அகன்று மக்களாட்சி அமைந்தபின் ) சுதந்திரமாக முடிவு செய்யட்டும் என நட்பு ரீதியில் நாங்கள் எடுத்துக் கூறியபோது பாகிஸ்தான் அதனை ஏற்கவில்லை. எனவே திடீர்த் தக்குதல்காரர்கள் விரட்டப்பட்டபின்னராவது காஷ்மீர் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை அளிக்கப்பட வேண்டும் எனக் கோருவதற்கு பாகிஸ்தானுக்கு உரிமை இல்லை.

நியூஸ் க்ராணிக்கிள் (மே 26, 1949):

பாகிஸ்தானிலிருந்து வந்த "இஸ்லாமிய விடுதலை வீரர்கள்' (முஜாஹிதீன்கள்) நிராயுதபாணிகளான காஷ்மீர் மக்கள் மீது நடத்திய கொடும் தாக்குதல், இஸ்லாமின் நற்பெயருக்கு நிரந்தரமாக இழைக்கப்பட்ட களங்கம் ஆகும். இந்த அத்துமீறிய அட்டூழியங்களை இஸ்லாமின் பெயராலும் அதன் புகழுக்காகவும் நடைபெறுவதாகக் கூறிக்கொள்வது கண்டிக்கப் பட வேண்டும்.

செய்தியாளர் கூட்டம் (நவம்பர் 5, 1949)

காஷ்மீரின் தலைவிதியை இந்தியாவுடன் பிணைத்துக் கொள்ளும் எங்கள் முடிவு பண்டித ஜவஹர்லால் நேரு தனிப்பட்ட முறையில் என் நண்பர் என்பதால் அல்ல, காஷ்மீரும் இந்தியாவும் ஒன்றே, ஒரே தன்மையவே என்பதால்தான் எடுக்கப்பட்டது. வகுப்புவாத உணர்வைக் களைவதற்கு எல்லாவிதமான முயற்சிகளையும் இந்தியா மேற்கொண்டு வருகையில், வகுப்பு வாத அடிப்படையிலேயே பாகிஸ்தான் உருவாகியிருப்பதால் பாகிஸ்தானுடன் ஏதேனும் ஒருவகையில் உறவு வைத்துக் கொள்வதைக் கூட காஷ்மீரால் நினைத்துப் பார்க்கவும் முடியாது.

ஸ்ரீநகர் ஜி.எம். கல்லூரியில் பேசியது, ட்ரிப்யூனில் வெளி வந்தவாறு (டிசம்பர் 4, 1949):

காஷ்மீர் மாநிலத்தில் ஏறத் தாழ பாதிப் பகுதியைத் தன்வசம் தனது ராணுவத்தின் கீழ் வைத்திருக்கும் பாகிஸ்தான் காஷ்மீர் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை தர வேண்டும் என்பது ஹிட்லரின் தந்திரப் பேச்சுக்கு ஒப்பானதாகும்.

சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியது (ஃபிப்ரவரி 12, 1950)
நான் முன்னரே சொன்னதற்கு இணங்க, இணைப்பு சம்பந்தமாக மாற்று யோசனை எதையும் காஷ்மீர் யோசிப்பதாகக் கூறுவது அபத்தமாகும். எங்கள் மக்கள் அமைதியான வாழ்வும் வளமும் பெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். சுதந்திரம் என்பது கவர்ச்சியான கோட்பாடுதான். ஆனால் நான் ஏற்கனவே கேட்டதுபோல அது நடைமுறைக்கு சாத்தியமானதாக இருக்குமா? காஷ்மீரைப் போல ஜீவாதாரங்கள் குறிப்பிட்ட அளவில் மட்டுமே உள்ள ஒரு சின்னஞ் சிறு பிரதேசம் தன்னைத் தானே கவனித்துக் கொள்வது சாத்தியமா? அதற்கான வாய்ப்புகளும் உத்தரவாதங்களும் உள்ளனவா?அல்லது காஷ்மீர் சம்பந்தப்பட்ட இரு நாடுகளின் (இந்தியா, பாகிஸ்தான்) இன்றைய அரசியல் சூழலில் காஷ்மீர் ஒரு சுதந்திர நாடாக இருப்பதற்கு அவை அனுமதிக்குமா? நாங்கள் தனி சுதந்திர நாடாக இருப்போம் என்று சம்பிரதாயமாக அறிவித்து, அதன் விளைவாகப் பழி பாவத்திற்கு அஞ்சாத வலிமை வாய்ந்த ஒரு நாட்டிற்கு உடனடியாக இரையாகிவிடும் கதி காஷ்மீருக்கு நேருமாறு செய்துவிடலாமா? எந்தக் குறிக்கோளுக்காக இத்தனை ஆண்டுகள் பாடு பட்டோமோ அதற்கு துரோகம் இழைப்பதாகவே அது இருக்கும். சொற்பொழிவு, ஏட்டளவிலான ஆய்வு ஆகியவற்றின் மாற்று ஏற்பாடாக சுதந்திரத்தை முன் வைக்கலாமேயன்றி அது அர்த்தமற்றதாகவே இருக்கும். இதுபற்றி நான் பலமுறை பல பத்திரிகையாளர்களுடன் பேசியாகிவிட்டது. அவற்றின் அடிப்படையில் இந்த (தனி நாடு என்கிற) விஷயத்தைப் படிக்கவோ புரிந்துகொள்ளவோ வேண்டும்.

பத்திரிகைகளுக்கு அளித்த தன்னிலை விளக்க அறிக்கை (மே 2, 1950):
காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம்களால், அவர்களுக்கு நண்பர்கள் இல்லாத நிலையில் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பைத் (தங்களின் சுய பலத்தின் மூலம் ) தடுத்து நிறுத்தியிருக்க முடியாதபோது அந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து இந்தியா அவர்களுக்கு உதவி செய்ததோடு, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆள் பலம், நிதி உதவி, தார்மிக ஆதரவு அளித்துவரும் நிலையில், காஷ்மீர் மக்களின் மனதில் ஏதேனும் மாற்றத்தை இந்தியாவில் எவர்தான் எதிர்பார்க்க முடியும்? இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் காஷ்மீருக்கு முழு அளவிலான உதவிகளை அளித்திருப்பதோடு, காஷ்மீர் மண்ணில் தங்கள் ரத்தத்தையும் சிந்தியிருப்பதால் காஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிணைப்பு இறுக்க மாகிவிடவில்லையா? மனிதப் பிறவிகள் அந்த அளவுக்கு நன்றி கெட்டவர்களாக இருப்பார்கள் என எவரும் கருதலாகாது. நாங்கள் என்றென்றும் இந்தியாவுடன்தான் இருப்போமேயன்றி ஒருபோதும் பாகிஸ்தானுடன் இருக்க மாட்டோம்.

ரேடியோ காஷ்மீர் இரண்டாவது ஆண்டு நிறைவுக் கூட்டம் (மே 2, 1950):
காஷ்மீரையும் இந்தியாவையும் பிணைக்கும் இணைப்பு, சட்டரீதியானது மட்டுமல்ல, மக்கள் சுதந்திரமாக எடுத்த முடிவுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்டதும் ஆகும். தங்கள் விருப்பம், அபிலாஷை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் உண்மையான வடிவமாக இந்தியா இருப்பதாலேயே அவர்கள் இந்தியாவுடன் இணையும் முடிவை எடுத்தார்கள். இந்திய மக்கள், காஷ்மீர் மக்கள் இருவருக்குமான மனப்பூர்வமான, ஆத்மார்த்தப் பிணைப்பு எக்காலத்தும் அறுபடவே செய்யாது.

காஷ்மீர் மாநிலம் டீட்வாலில் நடந்த கூட்டத்தில் (மே 24, 1950):

இந்திய மக்களுடன் தங்களைப் பிணைத்துக் கொண்டு, இருவருக்கும் உள்ள லட்சியங்கள் ஒன்று போல இருப்பதால் அவர்களுடன் சேர்ந்தே அவற்றை எய்துவதென காஷ்மீர் மக்கள் தாமாக முன் வந்து முடிவெடுத்துள்ளனர். அவர்களைக் கட்டுப்படுத்தும் இந்த ரத்த பந்தம் எல்லைக் கோடுகளால் நிர்ணயிக்கப்பட்ட இணைப்புகள், வர்த்தக ஆதாயங்கள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு, கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எந்தக் கோட்பாட்டிற்காகக் காஷ்மீர் மக்களும், கோடிக் கணக்கான இந்தியர்களும் போராடி வந்தார்களோ அதன் பொருட்டு உருவாகியுள்ளது. நமக்கிடையே உள்ள உறவு, ஆண்டான் அடிமை இடையே உள்ளது போன்றதல்ல. சுதந்திரமாக இரு பங்காளிகள் இருவர் நலனுக்கும் உகந்தத வகையில் சரிசமமான பலன் தரும் ஒரு கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தியாகிகள் தினக் கூட்டம் (ஹிந்துஸ்தான் ஸ்டான்டர்டு, ஜூலை 15, 1952)
ஆஜாத் காஷ்மீர் படை என்று சொல்லப் படுபவர்கள் கலைக்கப்படு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பி லுள்ள காஷ்மீரின் பகுதி மீண்டும் காஷ்மீருடன் சேர்க்கப்பட்டு ஆக்கிரமிப்புப் பகுதியில் பாகிஸ்தான் படையும் பாகிஸ்தான் குடி மக்களும் முற்றிலும் வெளியேற்றப்பட்டுவிட்ட பிறகே ஜம்மு காஷ்மீர் மாநிலம் சுய நிர்ணயம் பற்றி முடிவு செய்ய முடியும். இந்திய மக்களிடமிருந்து தங்கு தடையின்றியும், முணுமுணுப்பு ஒருசிறிதும் இன்றியும் சகலவிதமான உதவிகளும் கிடைக்கப் பெற்றிருக்காவிட்டால் காஷ்மீரில் இந்த அளவுக்கு எங்களால் எதுவும் சாதித்திருக்க இயலாது. இந்திய அரசாங்கம் நியாயமான நிலையில் நின்று, தானாகவே ஆட்களையும் பொருள்களையும் கொடுத்து உதவியதால்தான் எங்களால் மிகச் சிறந்த பாதுகாப்பை அமைத்துக் கொள்ள முடிந்தது. இந்திய ராணுவம் மட்டும் உரிய நேரத்தில் வந்திருக்காவிட்டால் எங்கள் கதி என்ன ஆகியிருக்கும் என்பது எனது கற்பனைக்கும் அப்பாற்பட்டதாகும்.

மத்திய அரசின் சட்ட அமைச்சகம் காஷ்மீர் இணைப்பு தொடர்பாகப் பிறப்பித்த ஆணையில், அதற்கு முகாந்தரமான நிலவரம் குறித்து ஷேக் அப்துல்லா அளித்த அறிக்கை (ஆணை எண் ஸி ஓ 44, நாள் நவம்பர் 15, 1952)
அத்துமீறி உள்ளே நுழைந்தவர்கள் மின்னல் வேகத்தில் தாக்கினார்கள். எங்கள் நிலத்தைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். எமது வீடுகளை இடித்தார்கள். நூற்றுக் கணக்கான கிராமங்களை அழித்தார்கள். பெண்களை மான பங்கம் செய்தார்கள். சுறுசுறுப்பாக இயங்கும் நகரங்களான முசபராபாத், ஊரி, பராமுல்லா, பாட்டன் ஆகியவையும் எமது தலைநகரை நோக்கிச் செல்லும் பெருவழிச் சாலைகளில் உள்ள வணிக மையங்களும், வெறும் புகை மண்டலங்களாகக் காணப்பட்டன். அவற்றில் எதுவும் மிஞ்சவில்லை. அவர்கள் (ஆக்கிரமிப்புச் செய்த திடீர்த் தாக்குதல்காரர்கள்)இஸ்லாமின் துரோகிகள்.
இவ்வாறாக, ஷேக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹிந்துஸ்தானத்துடன் இணைந்தது மன்னர் மட்டுமின்றி மக்களும் சேர்ந்தே எடுத்த முடிவு, அதில் மாற்றமில்லை, அது முடிந்து போன விஷயம் என்பதைப் பலவாறு உறுதி செய்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிரதமராக அப்துல்லா நியமனம் பெற்றபின், சிறுகச் சிறுக, மாநிலத்தைத் தமது பரம்பரைச் சொத்தாக பாவிக்கலானார். ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்காக மத்திய அரசு ஆண்டு தோறும் கோடிக் கணக்காகக் கொட்டிக் கொடுக்கும் ரூபாய்களைத் தமது விருப்பம் போலச் செலவிடலானார். மாநிலத்திற்கு வழங்கப் பட்ட தனி அந்தஸ்தைத் தனக்குரிய அதிகாரமாகப் பயன் படுத்திக் கொள்ளலானார். மத்திய அரசு இது பற்றிக் கேள்வி கேட்க ஆரம்பித்ததும், அவரது சுபாவம் மாறலாயிற்று. இதை அறிந்த பாகிஸ்தான், அவருக்கு வலை வீசத் தொடங்கியது. பாகிஸ்தான் தலைவர்களுடன் ரகசிய உறவு வைத்துக் கொள்ளத் தொடங்கிய ஷேக் அப்துல்லாவைப் பதவியிலிருந்து இறக்க வேண்டியதயிற்று. ஆயினும் அதற்காக முன்னர் தாம் சொன்ன ஆணித் தரமான வாதங்களை அவரால் மறுக்க இயலவில்லை.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லை தாண்டி வரும் பயங்கர வாதிகளால் மட்டுமின்றி, பாகிஸ்தான் ராணுவத்தாலும் திடீர்த் தக்குதல்களுக்கு உள்ளாவதும் இளம் இந்திய ராணுவ வீரன் அத் தாக்குதலிலிருந்து காஷ்மீர் மக்களைக் காக்கும் பொருட்டுத் தனது ரத்தத்தைச் சிந்துவதும், உறுப்புகளை இழந்து நிரந்தரமாக ஊனமடைவதும், உயிரையும் இழப்பதும், சமயங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கடத்தப்பட்டுக் கொடூரமான சித்திர வதைகளுக்கு உள்ளாகிக் குரூரமாகக் கொல்லப்பட்டு, சிதைந்து போன சடலமாக வீசி எறியப்படுவதும் இன்றளவும் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன.

ஜம்மு காஷ்மீர் பகுதியில் ரோந்துப் பணியிலும் காவல் பணியிலும் அமர்த்தப்படும் ராணுவ வீரர்கள் பெரும்பாலும் தமிழ் நாட்டையும் தென் மாநிலங்களையும் சேர்ந்தவர்களாவார்கள். காஷ்மீரின் தனித் தன்மை வாய்ந்த வீரியமான குளிர் அவர்களுக்குப் பழக்கமில்லை. ஆனாலும் அதனைப் பொறுத்துக் கொண்டு , ஈவிரக்கமற்ற பகைவனையும் தனது பாதுகாப்பி லுள்ள மாநிலத்தில் இருக்கும் துரோக சிந்தனையுள்ள மத வெறியர்களையும் சகித்துக் கொண்டு தமது கடமையைச் செய்து வருகின்றனர், ஹிந்துஸ்தானத்தின் தீரமிக்க ராணுவ வீரர்கள்.

எனது பேச்சை நான் இவ்வாறு முடித்த போது, கேட்டுக் கொண்டிருந்த இளைஞர்கள் அனைவரும் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு, தங்கள் படிப்பு முடிந்தவுடன் ஹிந்துஸ் தானத்தின் ராணுவத்தில் சேரப் போவதாக சபதம் செய்தனர்.

+++++ Copyright:thinnai.com  +++++++

No comments: