Wednesday 8 October, 2008

நம்முடைய அரசே குற்றமுடையது!

அக்டோபர் 2ம் தேதி தினமணியில் வெளியான தலையங்கக்கட்டுரை இது
***********************

Dinamani Editorial 2 Oct 2008
நம்முடைய அரசே குற்றமுடையது!
பழ. கருப்பையா

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் தொடர்ந்து குண்டுகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு குண்டுவெடிப்பிலும் சங்கிலித் தொடர்போல, ஐந்து மணித்துளி இடைவெளிகளில் ஒரே ஊரில் பத்து இடங்களிலாவது குண்டுகள் வெடிக்கின்றன. தேர்ந்த திட்டமிடல் இது! ஒவ்வோர் ஊரிலும் இத்தகைய குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கணக்கானோர் மடிகிறார்கள்; ஆயிரக்கணக்கானவர்கள் ஊனமடைகிறார்கள்.

இவர்கள் செய்த குற்றம் என்ன? காலையில் மார்க்கெட்டுக்குக் காய்கறி வாங்கப் போனது குற்றமா? பேருந்து நிலையத்திற்குப் பேருந்து ஏறப் போனது குற்றமா? தொடர்வண்டி நிலையத்திற்கு வேண்டியவர்களை வரவேற்கப் போனது குற்றமா? பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பியது குற்றமா?

இரவோடு இரவாக ஏற்படுகின்ற ஆழிப் பேரலைகள் ஒரு குடியிருப்பையே அழித்து விடுவதுண்டு. வெடிக்கின்ற எரிமலைகள் ஓர் ஊரையே விழுங்கி விடுவதுண்டு. புயலால், வெள்ளத்தால் பெருஞ் சேதங்கள் விளைவதுண்டு. இவையெல்லாம் இயற்கை காரணமான பேரழிவுகள். பேராற்றல் வாய்ந்த இயற்கையின் முன்னால் மனிதன் ஆற்றலற்றவன்! ஆனால் வெடிகுண்டுகள் தாமாக வெடிப்பதில்லை; அவை மனித ஏற்பாடுகள்.

ஒருவன் இன்னொருவனைக் கொல்வதற்கு ஒரு நோக்கம் இருக்கும்; முந்தைய பகை இருக்கும்! அதுதான் உலக வழக்கம். ஆனால் இதிலே குண்டு வைத்தவன் யாரென்று செத்தவனுக்குத் தெரியாது. தன்னுடைய செயலால் எவன் சாகப் போகிறான் என்று குண்டு வைத்தவனுக்குத் தெரியாது. அரசாங்கத்தோடு பகை என்றால் அரண்மனைகளிலல்லவா குண்டு வெடிக்க வேண்டும். ஒரு நாட்டோடு பகை என்றால் அந்த நாட்டு ராணுவ முகாம்கள் அல்லவா குறி வைக்கப்பட வேண்டும். அவையெல்லாம் பாதுகாக்கப்பட்ட இடங்கள் என்பதால், பாதுகாப்பில்லாத மக்களைக் குறி வைப்பது நீசத்தனமான செயல்!

மும்பையில் வெடிகுண்டு வைத்தனர்; 209 பேர் செத்தனர். ஹைதராபாத்தில் 16 பேர்; ஜெய்ப்பூரில் 63 பேர்; பெங்களூரில் 2 பேர்; வாராணசியில் 9 பேர்; ஆமதாபாத்தில் 55 பேர். காயம்பட்டோரும், கைகால் இழந்தோரும் ஆயிரக்கணக்கில். அடுத்த இலக்குச் சிங்காரச் சென்னையாம்!

இந்தக் குண்டு வெடிப்புக்கெல்லாம் காரணம் சிமி போன்ற தீவிரவாத அமைப்புகள்தான் என்பது கண்டறியப்பட்டு வெகுகாலம் ஆகிவிட்டது. இந்த அமைப்பு 34 மாவட்டங்களில் விரிந்து பரந்து பரவியிருக்கிறது. இதில் 400 குரூரமான பயங்கரவாதிகள் இருக்கிறார்கள்! புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 2,000 புதியவர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த அமைப்புகள் செழித்துக் காலூன்றி இருப்பது உத்தரப் பிரதேசத்தில். அதற்குக் காரணம் சிமி அமைப்பினர் சற்புத்திரர்கள் என்று சான்றிதழ் வழங்கி நான்காண்டுகளுக்கு முன்னர் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், அந்த அமைப்பின் மீதிருந்த தடையை நீக்கி, அவர்களைச் சுதந்திரமாக நடமாட விட்டது இன்றைய காங்கிரஸ் கூட்டணி அரசுதான்.

குற்றவாளிகளிடம் மென்மை காட்டுவது குற்றங்கள் பெருகத் துணையாகாதா? கல்விச் சலுகை, கட்டணச் சலுகை, கடன் சலுகை என்று எவ்விதமான சலுகைகளையும் சிறுபான்மையோர்க்கு வழங்குவது நியாயம்! அது ஒரு நாகரிக நாட்டுக்கான இலக்கணம். ஆனால் குற்ற நடத்தையினரைக் கொலைகாரர்களைச் சிறுபான்மையினர் என்று பகுத்துச் சலுகை காட்டுவது, நாட்டைப் பாழாக்கி விடாதா? இது நாடாளுகின்றவர்கள் குறைமதியினர் என்பதைத்தானே குறிக்கிறது! சிமி போன்ற அமைப்புகளுக்குத் தேவையான செலவுகளுக்கும், குண்டு தயாரிப்பதற்கும், அதை எங்கெங்கே எப்போதெப்போது வைக்க வேண்டும் என்பதற்கும், நாடு முழுவதும் இவர்கள் ஏற்படுத்தியுள்ள பின்னலான அமைப்புகளைப் பராமரிப்பதற்கும், ஆடு வெட்டுகிறவன், தூக்கிலிடுபவன் போல எந்த உணர்ச்சியுமின்றிக் கொலை செய்வதற்கும் பழக்கப்படுத்தப்பட்டுள்ள கொலையாளிகளுக்கு லட்சக்கணக்கில் கொடுப்பதற்கும் தண்ணீராய்ச் செலவழிக்கப்படும் பல ஆயிரங்கோடி ரூபாய்களையும் கூடப் பாகிஸ்தான் தன்னுடைய அன்னியச் செலாவணிக் கையிருப்பிலிருந்து செலவழிப்பதில்லை. இந்திய ரூபாய் நோட்டுகளை நம்முடைய ரிசர்வ் வங்கியை விட மிகத் தேர்ச்சியாகப் பாகிஸ்தானில் அச்சிட்டு தீவிரவாத அமைப்புகளுக்கு வழங்குகின்றனர். இந்தியாவை நிர்மூலப்படுத்துவதற்குப் பாகிஸ்தானுக்கு ஆகும் செலவு அச்சிடுவதற்குத் தேவையான உயர் ரகத் தாள்களும், பல வண்ண மைகளுமே.

ஆமதாபாத் குண்டு வெடிப்புக்குப் பிறகு அவர்களின் அடுத்த இலக்கு தில்லி என்று கண்டறியப்பட்டு, மாநில அரசால் மத்திய அரசுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்படுகிறது. குண்டு வெடிப்பின் காரணமாக ஊர்ஊராகக் கேட்கும் நெஞ்சைப் பிளக்கின்ற ஓலங்களுக்குப் பாகிஸ்தான் மட்டுமே காரணமில்லை. முப்படைகளையும் வைத்துக்கொண்டு, வெறும் 800 கொலைகாரக் கும்பலை வேட்டையாட முடியவில்லை என்ற நிலையிலிருக்கும் அரசியல் உறுதிப்பாடற்ற நம்முடைய மன்மோகன் சிங்கின் அரசே பெருங்காரணம்.

அடுத்தது தில்லி என்று சொன்னார்கள். ""அட... சொன்னபடி நடக்கிறதே'' என்று சிவராஜ் பாட்டீல் மூக்கில் விரல் வைத்து வியந்து கொண்டிருந்தார். இப்போது சென்னை என்று சொல்லியிருக்கிறார்கள். சொன்னபடி நடக்கிறதா என்று கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருப்பார். சென்னையில் இரண்டாயிரம் காவலர்கள் முடுக்கிவிடப் பட்டிருக்கிறார்கள். ஊருக்கு உள்ளேயும் வெளியேயும் இரும்புத் தட்டிகள் வைத்துச் சாலைகள் மறிக்கப்படுகின்றன. நள்ளிரவிலும் வண்டிகளெல்லாம் நிறுத்திச் சோதனையிடப்படுகின்றன. வண்டியில் ஒன்றுமில்லை என்று தெரிந்தவுடன், ""சட்டைப்பையில் என்ன வைத்திருக்கிறாய்?'' என்று எட்டிப்பார்த்து ஏட்டையா கேட்கிறார். சட்டைப்பையில் குண்டு இருக்காது என்று பெரிய அதிகாரிகள் ஏட்டையாக்களுக்குச் சொல்லி அனுப்புவதில்லை போலிருக்கிறது. ஒரு வாரத்திற்குதான் இந்தக் கெடுபிடிகள் இருக்கும். மனிதர்கள் கூட்டம் கூட்டமாகச் சாவது நம்முடைய ஆட்சியாளர்களுக்கு ஒரு வெறும் நிகழ்வு. அவ்வளவுதான். ஆட்சியாளர்கள் குண்டு துளைக்காத கார்களிலல்லவா பயணம் செய்கிறார்கள். பிரச்னையே தங்கள் பாதுகாப்புக்கு மதத்தை ஒரு கவசமாகப் பயன்படுத்தும் சிமி போன்ற ஒரு சில தீய கும்பல்களுக்கும், அதன் மீது கை வைத்தால் சிறுபான்மையினரை நமக்கெதிராக அவர்கள் திருப்பி, அதன் மூலம் அவர்களுடைய வாக்கு வங்கியை இழந்து விடுவோமோ என்று அஞ்சும் குறைமதி உடைய அரசுக்கும்தான். உயிரில் சிறுபான்மையர் உயிர், பெரும்பான்மையர் உயிர் என்னும் வேறுபாடில்லை.

குற்றம் சிமி போன்ற சிறுகும்பலிடம் இல்லை.

நம்முடைய அரசே குற்றமுடையது!

No comments: