Thursday June 7, 2007
கோயில்களில் பிறமதத்தார் - ஒரு முரண் பார்வை - பாகம் 1
ஐயன் காளி
அல்லும் பகலும் அயராதுழைத்து கொல்லும் வறுமைக்குள் குடும்பம் நடத்துகிறவர்கள் நாட்டில் செய்தி நிறுவனங்களின் தார்மீகக் கோபம் இந்துக் கோயில்களில் இறையை காண இயலாத கிருத்துவ, இஸ்லாமியருக்கு ஆதரவாய் கோயில் ஒழுங்குகளை எதிர்த்து நிற்கிறது.
அத்தனை செய்திகளும் இந்த புரட்சிக்கு ஆதரவாய் நிற்கையில், "இவர்தம் கேள்விகளில் முன்தெரியும் அறச்சீற்றம் எனும் புலிப் போர்வைக்குள்ளிருந்து பசுவதைப்போர்தம் பச்சாதாபக் குரல்களே கேட்கிறது" என்றொரு குரல் எழுமாயின் அஃதே முரண்பார்வை. அதுவே இக்கட்டுரையின் பார்வையும்.
பெயரளவுப் புரட்சியும், செயலளவு புரட்சியும்:
இந்தியாவிற்கென்று ஏற்கனவே நெய்யப்பட்டுவிட்ட தடத்திற்கு எதிரான இம்முரண்பார்வைகளை இகழ்ந்துவிட்டு, பிறந்து வளர்ந்து செத்தும்போய்விட்ட குறைப்பிரசவ குழந்தைக் கொள்கைகளுக்கு புதுமை என்று பெயர்சூட்டு விழா நடத்துவதுதான் புரட்சி என்றும், அழிவுக் கடவுளாய் அறியப்படும் சிவம் அழிப்பது பயன்படாத பண்டை கருத்துக்கள் என்பதும் அந்த பிணக்கருத்துக்களை எரித்த இடத்தில் நடக்கும் சிவத்தின் தாண்டவம் புதிய புவனங்களைப் புரிகிறது என்பது பிற்போக்குவாதம் என்று பேசுவதே முற்போக்கு என்பவர்கள் மத்தியில் இவர்தம் சமத்துவ வேடம்பற்றிய கேள்விகள்தாம் உண்மையில் புதுமைப்பார்வை, புரட்சிப்பார்வை.
எச்சரிக்கை:
இம்முழுக்கட்டுரையின் போக்கும் இப்படித்தான் இருக்கும் என்பதை மேலுள்ள பீடிகைகள் மெய்ப்பித்துவிட்டதால், புரட்சி என்று பிற்போக்கிற்கு பெயரிட்டு அதைச் சீராட்டுபவர்கள் இக்கட்டுரையை விடுத்துத் தங்களுக்கு பிடித்த வார்த்தைகளைப் பரப்பி நிற்கிற பக்கங்களுக்குப் பட்டென்று சென்றுவிடலாம்.
இத்தகையோர் பொய்மை வாழ்க்கையிலிருந்து இந்தச் சீராட்டுக் கனவுகள்தாம் அவரை காப்பாற்றுகின்றன என்கிற இரக்கத்தாலும், எமது நிலை என்ன என்பதை முதலிலேயே தெளிவாய் தெரிவிப்பது அறம் என்பதாலுமே கட்டுரையின் முன் நிறுத்தப்படும் இந்த "எச்சரிக்கை" அறிவிப்பும்.
ஏனெனில் ஒரு கருத்தை குறித்து உரையாடுபவர்தம் நோக்கம் தெளிவாய் தெரிந்த பின்னர் நடக்கும் உரையாடலில்தான் நேர்மை இருக்கும். கோயிலுக்குள் மாற்று மதத்தாரையும் அனுமதிக்கவேணும் என்போர்தம் நேர்மை குறித்தே இக்கட்டுரை. இக்கட்டுரை இப்பொய்யர்தம் வாதங்களை உண்மை என நம்புவோருக்கு எழுதப்பெற்றது.
வாதங்களும் அவற்றிற்கான வைத்தியங்களும்:
அகவறுமை கொண்டார் அறச்சீற்ற நடிப்பில் வந்துவிழும் வசனங்களில் ஒரு சில:
வாதம் 1. மாற்று மதத்தாரை கோயிலில் அனுமதிக்கக் கூடாதென்பது பார்ப்பனீய சாதி வெறி. பக்தி கொண்ட பாடகர் ஏசுதாஸை ஏற்காதவர்கள், பகல் கொள்ளையோடு விபச்சாரமும் செய்பவர் இந்து என்பதாலே அனுமதிப்பார்கள்.
வைத்தியம் 1: நிகழ்ந்த வரலாற்றனுபவங்களும், நிகழ்கிற அனுபவங்களும், அமைப்புக்களை நடத்த அவசியமாகிற சில பொதுமைப்படுத்தல்களுமே கோயில் ஒழுங்குகளுக்கும், அவற்றின் நடைமுறைப்படுத்தலுக்கும் காரணிகள்.
இந்துக்களாய் பிறந்த பெரும்பான்மையோர் பக்தி இல்லாவிட்டாலும்கூட ஒருவித மரியாதையோடுதான் கோயிலுக்குள் நுழைவார்கள். ஆனால் இந்துக்கள் வழிபடுகிற தெய்வங்களைப் பேய் வழிபாடு என்கிற மதத்தவர் இந்துக்கோயிலுக்குள் நுழைய நல்ல எண்ணங்கள் காரணமாயிருக்க முடியாது என வரலாற்றனுபவங்கள் சொல்கின்றன.
நம் கடவுளை தவிர்த்த மற்ற வழிபடு தலங்களும், வழிபடு முறைகளும் அழிக்கப்படவேண்டியவை என்பதை நம்புகிறவர் இந்துக் கோயிலுக்குள் வருகையில் கோயிலுக்கு வந்திருப்போருக்கும், கோயில் ஊழியருக்கும் என்ன மனநிலை ஏற்படும்?
தென் தமிழகத்திலும், பரந்த பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோயில் தெய்வங்களின் திருவுருவங்கள் உடைபடுவதும், வெடிகுண்டுகள் வீசப்படுவதாலும் காவலர் சோதனைக்குப் பின்பேதான் இறைக்காதலர் கடவுளை காணமுடிகிறது.
இச்சூழலில் இந்து வழிபாட்டு நம்பிக்கைகளை அழிக்கவேண்டும் என நம்பும் மதத்தவரை அனுமதிப்பது ஆபத்தானது என்று அவரை அனுமதியோம் என்று பொதுமைப்படுத்தலினால் ஏற்பட்ட விதி பாதுகாக்கிறது.
வைத்தியம் 2: விதிகள் பெரும்பான்மையை ஒட்டி எழும் பொதுமைப்படுத்தலில் இருந்தே எழும். குருவாயூர் கிருட்டிணனை பக்தியாய் வணங்கும் ஏசுதாஸும், இகழ் வாழ்வு நடத்தும் இந்துக்களும் அவர் சார்ந்த மதத்தின் விதிமீறுபவர். விதிமீறியவர்களின் நடத்தையை விதிகள் செய்ய பயன்படுத்த முடியாது.
வாதம் 2: உங்களது மத வழிபாட்டு உரிமையை நான் மதிக்கிறவன், ஆனாலும் பிற மதத்தவன் என்பதால் அனுமதிக்க இயலாது என்பது தவறல்லவா?
வைத்தியம் 1: வழிபாட்டு உரிமையை அனுமதிக்கும் மதிப்பிற்கும், வழிபடுதலை நம்புவதற்கும் ஆழி நீருக்கும், ஆற்று நீருக்கும் உள்ள சுவையொத்த வேறுபாடுண்டு. பக்தி என்பதை நம்பிக்கை என எடுத்துக்கொண்டால் அஃதில்லாதார் ஆலயம் ஏன் வரவேண்டும்?
வைத்தியம் 2: இந்து மதத்தின் மேலுள்ள உங்களின் மதிப்பை உரசிப்பார்த்து உண்மை நிர்ணயிப்பவர் யார் - கோயிலின் அதிகாரிகளா, அல்லது அந்த அதிகாரிகளை நியமிக்க, வேலையைவிட்டு துரத்தும் வல்லமையுள்ள அரசியல்வாதிகளா?
வாதம் 3: அதுதான் உங்களது கடவுளைப் பார்க்கவேண்டுமானால், இந்து மதத்திற்கு எதிரானவர் இல்லை என கையெழுத்துவிட்டுச் செல்லவேண்டும் என்கிற நடைமுறை சில கோயில்களில் இருக்கிறதே. கையெழுத்துப்போட்டுவிட்டு போகிறேன். அனுமதிக்கிறீர்களா?
வைத்தியம் 1: இந்து வழிபாட்டிற்கு எதிரானவர் இல்லை என்று கையெழுத்துப்போட மறுத்துவிட்டு, ஆனால் திருப்பதி கோயிலுக்குள் சென்ற சோனியாவால் திருப்பதி அறநிலையத்திற்கு என்ன நன்மை ஏற்பட்டது?
அறநிலையத்தின் அறங்காவலர் பொறுப்பிலிருந்து, கல்விநிலையங்களின் தலைமைப்பதவிவரை கிருத்துவர்களுக்குப் போயிற்று.
வைத்தியம் 2: உன் மனைவி எனக்கு தங்கை போல. அவளின் அழகைக்காணவே போர் தொடுத்தேன். காட்டினால் போர் நிறுத்துவேன் என்றவர்கள், கண்ட அழகைப் பெண்டாள கயமைகள் செய்தனரே. நமது மதத்தை வெற்றி பெறச் செய்ய என்ன பொய் வேண்டுமானாலும் சொல்லலாம் என்கிற மதத்தத்துவங்களின் பித்தத்திலுள்ளோரின் வெற்றுக் கையெழுத்தை எங்கனம் நம்புவது?
வைத்தியம் 3: சிதறுண்ட நெல்லிக்கனிகளின் எண்ணிக்கையில் பெரும்பான்மையினராய் இருக்கும் பலமற்ற இந்துக்களால் கையெழுத்துப்போட்டுவிட்டு அதை மீறுகிறவர்களை ஒன்றும் செய்ய இயலா நிலையில் கையெழுத்தாலும் என்ன பலன்?
வாதம் 4: நீதி மன்றங்களில் வழக்குத் தொடுங்கள். உங்களது சட்ட அமைப்பை நீங்களே நம்பவில்லையா?
வைத்தியம்: பலமுள்ள சிறுபான்மையினர் என்பதால் சட்ட அமைப்பின் சக்கரத்தை உங்கள் விரல்களில் அல்லவா சுழற்றுகிறீர்கள். உங்களுக்கு ஆதரவளிப்பதால் உங்களது சிவில் சட்டங்களை உங்களுக்கு மட்டும் ஏற்கும் நீங்கள், க்ரிமினல் சட்டத்திற்கு பொது நீதியே சரி என்கிறீர். சிவில் வழக்குகள் சிலவற்றிலும் உங்கள் செல்வாக்கு சட்ட அமைப்பையே மாற்றிய சதிகளைச் செய்தது.
மேலும், இந்தியாவின் நீதி மன்றங்கள் ஏதேனும் சடுதியில் நியாயம் உரைத்தனவா?
பணத்தாலும், பயமுறுத்தலாலும் விலைக்கு நீதியை வாங்கமுடியும் என்கிற உங்களது நப்பாசைகளையும் மீறி நல்லவர் சிலரால் நீதி மழை அவ்வப்போது பொழிகிறது.
மழை பொழிவதற்கு முன்னால் சோலையை பாலையாக்கிவிடும் "பலமுள்ள சிறுபான்மையோர்" மத்தியில் பாலையில் மழை பெய்து பலன் ஏது?
ஆங்காங்கே இருக்கும் பாலைவனச்சோலைகள் தயவில் "பலமற்ற பெரும்பான்மையோர்" மானம் துறந்துவிட்டாலும், உயிராவது தரித்திருக்கிறார்.
வாதம் 5: ஆலயங்களை பக்தியோடில்லை, கலைக்கூடமாய் காணுகிறேன். நான் வருவதில் என்ன தவறிருக்க முடியும்?
வைத்தியம்: கண்காட்சிக் கலைகளுக்கும், கடவுள்சார் கலைகளுக்கும் வேறுபாடு தெரியாததால் வந்த வினா இது. "அறியாமையால் வரும் வினை" என்கிற தமிழ் வாக்கிற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.
கடவுள்சார் கலைகள் வெளிப்படுத்தும் உன்னத உணர்வுகளையும், உண்மையையும் பார்க்க பக்தி என்றொரு தீப்பந்தம் வேண்டும். தாயினும் மேலான புனிதத்தை பக்தன் ஒரு பெண் சிலையில் காண்கையில், பக்தி இல்லா மாந்தர் வனப்புமிகு பெண்மையில் சொட்டும் கீழ்த்தர காமம் காண்பர். பக்தர் பாலூட்டும் சிலையில் தாய்மை காண்பர்; பதர்களோ "பார், என்ன வளமை பார்" என பரிகாசம் செய்வர்.
கலைமகளின் உலகிற்குள் விலைமகளிர் தெருவைக் காண்பவர் மத்தியில் கடவுளை வைக்க கோரிக்கை எழுப்புவது ஏன்?
வாதம் 6: எங்கள் மதத்தவராயினும், அதன் மகத்துவம் தெரியாமல் உங்கள் இறையின் முன் மண்டியிடுபவர் வந்தால், அவர் சென்றபின் கோயிலை சுத்தி செய்வதற்கு எதற்காக?
வைத்தியம்: கோயிலுக்கு வருவதற்கு முன்னரும் கோயில் விதிகள் தெரிந்தவையே. இக்கோயில் விதி தெரிந்தும், தன் தலைவிதி வினை தீர்க்கும் தெய்வம் இதுதான் என நம்பி வருவோர் கோயிலின் விதியையும் மதித்தே தீரவேண்டும்.
வாதம் 7: ஒரு மதத்தைச் சேர்ந்தார் பொல்லார் எனும் வாதம் மத வெறியன்றோ? இவ்வெறிக்குச் சொல்லும் சமாதானங்கள் சாதி வெறிக்கும் பொருந்துமன்றோ?
வைத்தியம்: பொருந்தா. பொல்லாச் செயல்களை புரி என்பதை நம்பிக்கையாய் கொண்டோரை மறுக்கக் காரணங்கள் அவர்தம் மதத்திலே உள்ளன. சாதிவெறி எனும் சாக்கடை இழிவிற்கு இந்து மதத்தில் இடம் இல்லை. இந்து மதத்தை வெறுப்பவரோ அவர்தம் வெறுப்பிற்கு அவர்தம் மத நம்பிக்கைகளை ஆதாரமாய் காட்டுகின்றனர். அவை மாற்றப்பட முடியாதவை என்கின்றனர்.
ஆனால், சாதி உயர்வு தாழ்வு பார்ப்பவர் எவரும் எந்த இந்து மத நூலையும் ஆதாரம் காட்டுவதில்லை. காட்டப்பட்டாலும் அவை ஆதார நூல்கள் இல்லை. ஆதார நூல்களையும்கூட அப்படியே ஏற்கவேண்டிய, பின்பற்றவேண்டிய அவசியமும் இந்து மதத்தில் இல்லை.
சாதி வெறுப்பு உலக சமுதாயத்தில் புரையோடிய சமூக-பொருளாதார புண். அதனாலேயே இந்து மதம் மட்டுமல்லாமல் சிறுபான்மை மதங்களிலும் அதன் கொடூரக் கூறுகளைக் காண்கிறோம்.
ஐயன் காளி
aiyan.kali@gmail.com
http://aiyan-kali.blogspot.com/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment