Monday, 18 June 2007

சீனா வீசிய ‘அருணாச்சல்’ குண்டு!

சீனா வீசிய ‘அருணாச்சல்’ குண்டு!
ரவிக்குமார் எம்.எல்.ஏ. ஜூனியர் விகடன் 20 June 2007

இந்தியாவின் அயலுறவுக் கொள்கைஎன்ன என்பது இப்போது மிகப்பெரும் கேள்விக் குறியாக எழுந்துள்ளது. நமது நட்பு நாடுகள் எவை? எதிரிகள் யார்? எதுவுமே புரியவில்லை. இலங்கைக்கு ஆயுதங்கள் தருவோம் என்று இந்திய அதிகாரிகள் சொன்னார்கள். ஆனால், ‘எங்களை நாட்டாண்மை செய்ய அனுமதிக்கமாட்டோம்’ என்று சிங்கள கட்சிகள் இந்தியாவை மிரட்டுகின்றன. அமெரிக்காவோடு நாம்தான் ரொம்ப நெருக்கம் என்பது போல காட்டிக்கொண்டோம். இப்போது அணுசக்தி ஒப்பந்தத்தில் அவர்களிடம் மாட்டிக் கொண்டு முழிக்கிறோம். சீனாவோடு கை குலுக்கினோம். அவர்களோ அருணாச்சலப் பிரதேசம் தங்களுடையது என் கிறார்கள். இவற்றைப் பற்றியெல்லாம் யாரும் கொஞ்சமும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இப்போதைய ஒரே கவலை, அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதுதான். அதில்தான் நாட்டின் அத்தனை முக்கிய அரசியல் இயக்கங்களும் மும்முரமாயிருக்கின்றன.

அருணாச்சலப் பிரதேசப் பிரச்னை சமீபத்திய ஜி.எட்டு மாநாட்டில் பெரிதாக வெடிக்கும் எனப் பலரும் எதிர் பார்த்தார்கள். ஆனால், அதுபற்றி இந்தியாவோ, சீனாவோ அங்கு பேசவில்லை. பேசாமல் விட்டது சீனாவுக்குத் தான் லாபம். குறைந்தபட்சம் நமது கண்டனத்தையாவது அங்கே நாம் தெரிவித்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் விட்டுவிட்டோம். அப்படி என்னதான் பிரச்னை?

அண்மையில் இந்தியாவிலிருந்து நூற்று ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சீனாவுக்கு ஒரு பயிற்சித் திட்டத்துக்காக செல்வதற்கு ஏற்பாடாகி யிருந்தது. அவர்கள் விசா வேண்டுமென விண்ணப்பித்தபோது நூற்றி ஆறு பேருக்கு விசா வழங்கப்பட்டது. அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து விண்ணப்பித்த அதிகாரிக்கு மட்டும் விசா வழங்க சீனா மறுத்து விட்டது. ‘‘அருணாச்சலப் பிரதேசம் சீனாவுக்கு சொந்தமானது. எனவே, அங்கிருந்து வருபவர்களுக்கு விசா தேவையில்லை’’ என்று சீனா கூறிவிட்டது.

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்களுக்கு விசா வழங்க சீனா மறுப்பது இது முதல்முறை அல்ல, மூன்றாவது முறை. சீனாவின் முரட்டுத் தனத்துக்குப் பதிலடி கொடுப்பது போல இப்போது அந்த பயிற்சித் திட்டத்தை மொத்தமாக இந்தியா ரத்து செய்துவிட்டது.
இதனால் சீனாவுக்குச் சென்று பெய்ஜிங்கிலும், ஷாங்காய் நகரிலும் பயிற்சி பெறுகிற நல்ல வாய்ப்பு பறிபோய் விட்டதென்ற வருத்தம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு நிச்சயம் இருக்கவே செய்யும். அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கணேஷ் கோயு என்ற அந்த அதிகாரிக்கு மட்டும் விசா கிடைத்திருந்தால் இந்தப் பிரச்னையே எழுந்திருக்காது.

அருணாச்சலப் பிரதேசத்தை சீனா சொந்தம் கொண் டாடும் பிரச்னை, இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்திய\சீன உறவு சற்றே மேம்பட்டு, சீன அதிபர் கடந்த ஆண்டு இந்தியா வந்த நேரத்திலும் இந்த சர்ச்சை எழுந்தது. இந்தியாவுக்கான சீனத் தூதர் சுன் யுக்ஷி, ‘‘அருணாச்சலப் பிரதேசம் முழுமையும் சீனாவுக்கே சொந்தம்’’ எனக்கூறி பெரும் கொந்தளிப்பை உருவாக்கிவிட்டார். அப்புறம் அது அமுங்கிப்போனது.

இந்தியாவுக்கும் சீனாவுக் கும் இடையிலான உறவு அவ்வளவு ஆரோக்கியமானதாக எப்போதும் இருந்ததில்லை. உலகில் வளர்ந்து வரும் நாடுகளில் சீனாவும், இந்தியாவும் முன்னணியில் இருப்பதும், சீனாவுக்கு எதிராக இந்தியாவை முன்நிறுத்த அமெரிக்கா செய்து வரும் முயற்சிகளும் இந்திய\சீன உறவை மறைமுகமாக பாதித்தே வருகின்றன.
1962&ம் ஆண்டு நடந்த இந்திய\சீன யுத்தத்தின் போது அருணாச்சலப்பிரதேசத்தின் பல பகுதி களை சீனா கைப்பற்றிக்கொண்டது. பிறகு நடந்த பேச்சுவார்த்தையின் காரணமாக கைப்பற்றிய இடங் களை விட்டு விட்டு அது பின்வாங்கிச் சென்றது.

சோவியத் யூனியன் சிதைந்ததற்குப் பிறகு உலகின் ஒரே வல்லரசாக அமெரிக்கா மாறிய சூழலில் சீனாவுடனான உறவை சீர்படுத்திக் கொள்வதன் மூலமே அமெரிக்கா ஆதிக்கத்தைத் தடுக்க முடியும் என்ற நோக்கோடு இந்தியா சீனாவிடம் நெருங்கிச் சென்றது.

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி சீனாவுக்கு 1988&ல் பயணம் மேற்கொண்டார். மெள்ள மெள்ள அந்த உறவு சீர்பட்டு 1996&ல் இரு நாடுகளும் தமது எல்லைப் பிரச்னை குறித்து ஒரு உடன் பாட்டுக்கு வந்தன. ஆனால், 1998&ல் இந்தியா அணுகுண்டு சோதனை செய்ததற்குப் பிறகு மீண்டும் இந்திய\சீன உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், மியான்மர் ஆகியவற்றை இந்தியாவுக்கு எதிராகத் தூண்டிவிடும் காரியத்தில் சீனா ஈடுபடத் துவங்கியது. இவற்றை யும் மீறித்தான் கடந்த ஆண்டு சீன அதிபரின் இந்திய விஜயம் நிகழ்ந்தது.

சீன அதிபரின் விஜயத்தைத் தொடர்ந்து இந்திய\சீன வர்த் தகத்தில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டது. 2010&ம் ஆண்டில் இந்திய\சீன வர்த்தகம் நாற்பது மில்லியன் டாலரை எட்டிவிடும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்ட நிலையில் சீனாவின் இந்தத் தலை கீழான அணுகுமுறையைக் கண்டு பொருளாதார நிபுணர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சீனாவின் இந்தத் திடீர் மனமாற்றத்துக்கான காரணம் இந்திய\அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்தான் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. இந்திய ராணுவம் மெள்ள மெள்ள அமெரிக்க மயமாகி வருவதாக அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் முப்பது மில்லியன் டாலர் பெறுமானமுள்ள ஆயுதங்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்கவிருப்பதை அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்தியாவுடனான உறவை வர்த்தக ரீதியில் மட்டுமின்றி ராணுவ ரீதியாகவும் சீனா நோக்குகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் துவக்கப்பட்ட குயிங்காங்\திபெத் ரயில் பாதையை இந்தியாவைச் சுற்றி நேபாளத்துக்கும், பூட்டானுக்கும் விரிவுபடுத்த சீனா திட்டமிட்டுள்ளது. அது நிறைவேறி விட்டால் சீனத் துருப்புகள் விரைவாகவும், எளிதாகவும் இந்தியாவின் எல்லைப் புறங்களில் நிலைகொள்ள முடியும். இந்தியாவின் அந்தமான், நிக்கோபர் தீவுகளையட்டியுள்ள மியான்மரின் கோகோ தீவுகளிலிருந்து இந்தியாவை சீனா கண்காணித்து வருவதாக கூறப்படுவதுண்டு. அருணாச்சலப் பிரதேசத்தைத் தனது பிடிக்குள் வைத்துக் கொண்டால் இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தை எளிதில் கட்டுப்படுத்தலாம் என்பது சீனாவின் திட்டம் என்று அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்திய\சீன உறவை மேம்படுத்தியதில் மறைந்த குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனுக்கு முக்கியப் பங்கு உண்டு. தூதராக இருந்தபோதும் குடியரசுத் தலைவராக இருந்தபோதும் சீன வரலாறு பற்றிய தனது ஆழமான அறிவைப் பயன்படுத்தி இந்திய\சீன நட்புறவை வளர்த்தவர் அவர். அதன் தொடர்ச்சியாகவே எரிசக்தித் துறையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டது. முன்னாள் எரிசக்தித் துறை அமைச்சர் மணிசங்கர் ஐயர் அந்த ஒப்பந்தத்தில் கடந்த ஆண்டு ஜனவரியில் கையெழுத்திட்டார். அதனைத் தொடர்ந்தே அவர் அந்த துறையிலிருந்து மாற்றப்பட்டார். அதற்கு அமெரிக்காவின் நிர்ப்பந்தமே காரணம் என்று சொல்லப்படுகிறது. சீனாவோடு இந்தியாவை நெருக்கமாக கொண்டு செல்ல யார் முயற்சித்தாலும் அதை அமெரிக்கா அனுமதிக்காது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
ஈரான் உள்ளிட்ட சர்வதேச பிரச்னைகளில் இந்தியாவை அமெரிக்க சார்பாளராக காட்டுவதன் மூலம் சீனாவுடனான இந்தியாவின் உறவை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது. அப்படித்தான் சீன&இந்திய வர்த்தகத்தை பெரும் அளவில் உயர்த்தும் நோக்கோடு திறக்கப்பட்ட நாதுலா பாதை விவகாரத்திலும் அமெரிக்கா செயல் படுகிறது. நேரடியாக இந்த பாதை திறப்பு விவகாரம் குறித்து தனது நிலைப்பாட்டை அமெரிக்கா சொல்லாவிட்டாலும், சர்வதேச நிலைப்பாடுகளில் தங்களுக்கு சாதகமாக இந்தியாவை நிர்ப்பந்தித்து பேச வைப்பதன் மூலம் சீனாவுக்கு எரிச்சல் மூட்டியே அமெரிக்கா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அணுசக்தி ஒப்பந்தம், ஈரான் விவகாரம் போன்றவைகளில் இந்தியாவின் நிலைப்பாடு நேரடியாகவே அமெரிக்காவின் சார்பாக இருப்பது இதற்கு உதாரணங்கள்.

இந்திய வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவுக்கு சாதகமாக மாற்றவிரும்பும் அதிகார வர்த்தகத்தினர், அதன் பொருட்டு இந்தியாவின் இறையாண்மையையே விட்டுக் கொடுக்கவும் தயங்க மாட்டார்கள் என்பதைத்தான் அணுசக்தி ஒப்பந்தம் எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவின் அமெரிக்க சார்பு நிலையைக் கட்டுப் படுத்தவே சீனா எல்லைப் பிரச்னையை எழுப்புகிறது. இந்தியாவுக்கு சொந்தமான முப்பத்தெட்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை காஷ்மீர் பகுதியில் சீனா ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதாக இந்தியாவும், அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியா எடுத்துக் கொண்டு விட்டதென சீனாவும் குற்றம் சாட்டிக் கொண்டாலும் தமக்கிடையே நல்லுறவு வளர வேண்டும் என்பதையே அவை விரும்பின. தமக்கு இடையிலான கூட்டுறவு உலகில் ஆதிக்க சக்தி களாகத் தம்மை மாற்றும் என்று அவை நம்பி வந்ததும் அதற்கு ஒரு காரணமாகும்.
இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட வேண்டும் என விரும்பு கிறவர்களும் அதைத்தான் எடுத்துக் காட்டுகின்றனர். சீனாவும் இந்தியாவும் சேர்ந்தால் உலக மக்கள் தொகையில் அது சுமார் முப்பத்தெட்டு சதவிகிதமாகும். ஆனால், தற்போது உலகின் மொத்த உற்பத்தியில் இந்த நாடுகளின் பங்கு வெறும் ஏழரை சதவிகிதம் மட்டுமே. 2025&ம் ஆண்டில் அது இருபது சதவிகிதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அப்படி உயர்ந்தால் உலக அரசியல், பொருளாதார சூழலில் பெரும் மாற்றம் ஏற்படும் என்பது அவர்களின் கணிப்பு. இதை உணர்ந்துதான் அமெரிக்கா வேகவேகமாக இந்தியாவிடம் நெருங்கி வருகிறது. எதிர் காலத்தில் தமது ஆதிக்கத்துக்கு சீனா மிகப்பெரும் தடையாக இருக்கும் எனக் கருதும் அமெரிக்கா, இப்போதே அதைத் தடுக்கும் நடவடிக்கையில் இறங்கி விட்டது.

நமது நாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகள் சீனாவைக் காட்டி அமெரிக்காவிடமும், அமெரிக்காவைக் காட்டி சீனாவிடமும் காரியம் சாதிக்கலாம் என்ற நோக்கோடு மாறிமாறி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், தமக்கு இடையேயான போட்டியில் சீனாவும், அமெரிக்காவும் இந்தியாவைப் பகடையாக உருட்டிக் கொண்டிருக்கின்றன என்பதே உண்மை. இந்த ஆட்டத்தில் அதிகம் பாதிப்பு அடையப்போவது இந்தியா தான். அமெரிக்காவின் விருப்பத்துக்கு மாறாக இந்தியா சீனாவிடம் நெருக்கம் காட்டினால் அணுசக்தி ஒப்பந்தம் என்ற சாட்டையை சொடுக்க அமெரிக்கா தயங்காது என்பதைத்தான் நாம் இப்போது பார்த்து வருகிறோம். அதுபோலவே, நாம் அமெரிக்காவிடம் நெருங்கிச் சென்றால் சீனா எல்லைப் பிரச்னை என்ற ஆயுதத்தைக் கையிலெடுக்கும் என்பதற்கு அருணாச்சலப் பிரதேசப் பிரச்னை ஒரு உதாரணம்.

அமெரிக்கா, சீனா இரண்டையும் தவிர்த்து சுயேச்சை யான அணுகுமுறையை இந்தியா மேற்கொள்ளமுடியாதா என்ற கேள்வி எழலாம். அதற்கான கூறுகள் நமது வெளியுறவுக் கொள்கையில் இருந்தன. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அவை அழிந்து வருகின்றன. நடுநிலையான நமது அணுகுமுறை இப்போது காணாமல் போய்விட்டது. சுயேச்சையான வெளியுறவுக் கொள் கையை பலவீனப்படுத்துவது நமது சுதந்திரத்தையே நெருக் கடிக்குள்ளாக்கி வருகிறது. இதனால் உலக அரங்கில் நாம் கேலிக்கு ஆளாகியிருக்கிறோம். அமெரிக்கா மட்டுமல்ல அருகாமையில் இருக்கிற இலங்கையும், பங்களாதேஷ§ம் கூட நம்மை மிரட்டக்கூடிய பரிதாப நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு நமது வெளியுறவுக் கொள்கை நீர்த்துப்போனதே காரணம். நமது இறையாண்மையை விட்டுக்கொடுக்காத வெளிப்படையான, நடுநிலையான வெளியுறவுக் கொள்கைக்கு மாறாக, சாதுர்யம் என்ற பெயரில் மீள முடியாத சிக்கலில் நமது நாட்டை ஆழ்த்தி வருகின்ற அதிகாரிகளின் போக்கு மாற்றப்பட வேண்டும். அணுசக்தி ஒப்பந்தமோ, அருணாச்சலப் பிரதேசமோ... இந்தியாவின் நலனுக்கு எதிரான எதற்கும் நாம் இணங்க மாட்டோம் என்பதை உலகுக்கு உரத்துச் சொல்ல வேண்டிய தருணம் இது. நமது ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இனியாவது மனம் திருந்தி அன்னிய நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து நிரந்தரமாக நம் நாட்டை மீட்டெடுப்பார்களா?

No comments: