Friday, 15 June 2007

ஐயன் காளி அவர்களின் திண்ணை தொடர்: பாகம்-2

கோயில்களில் பிறமதத்தார் - ஒரு முரண்பார்வை - பாகம் 2
ஐயன் காளி Thursday June 14, 2007

வாதம் 8: பிற மதத்தவரை அனுமதியோம் என்பது ஒரு குறுகிய பார்வை அல்லவா. பன்னெடுங்காலம் முன்பு தோன்றிய மதத்தார் பதின்மவயது பார்வைகொண்ட சிறுபான்மை மதங்களின் பார்வையை ஏன் கொள்ள வேண்டும்?

வைத்தியம்: சரியான புரிதலால் வருவது தர்க்கம். தவறான புரிதலால் வருவதோ குதர்க்கம்.
கொல்லுகிறது விஷக்கிருமிகள் என்பதும், மனிதரைக் கொல்லுவதால் அவை வாழ்கின்றன எனபதும் ஒரு உண்மை நிலை.

அவற்றின் கொலை வெறி தவறு என்பது ஒரு வாதம். இங்கே முதல் வாதம்.
அவற்றை அழித்தால் பிழைக்கலாம் என்பது தெளிந்த மற்றொரு உண்மை நிலை.
இந்நிலையில், முதல் வாதத்தின்படி கொலை வெறி தவறென்பதால், விஷக்கிருமிகளைக் கொல்லுவதும் தவறு என்பது இரண்டாவது வாதம்.

இவ்விரண்டு வாதங்களும் தனித்தனியே கொண்டு செல்லும் முடிவுகள் எதிரானவையாகவே இருக்கும். மேலும் ஒரு வாதம் உண்மைநிலைக்கு எதிரானதாய் இருக்க முடியாது. உண்மை நிலைக்கு எதிரானதாய் இருக்கும் வாதத்தால் உண்மையை அறிய முடியாது. இப்புரிதலின்படி தவறைச் சரி செய்யும் எதுவும் தவறாய் இருக்க முடியாது. இதன்படி முதல்வாதம் மட்டுமே உண்மை. ஏற்றுக்கொள்ளப்படவேண்டியது.

வாதம் 9: இரண்டையும் ஏற்றுக்கொண்டு ஒரு வித சமாதானத்திற்கு வரலாமே?

வைத்தியம்: இரண்டாவது வாதம் முதல்வாதத்தோடு அமைதிபூண்டிருப்பதால் விட்டுக்கொடுக்க வேண்டும் என்றால் விஷக்கிருமிகள் மட்டுமே உயிர்வாழும். அவற்றின் வாழ்வு மனிதரின் அழிப்பால் நிகழ்வதால், மனிதர் அழிந்த பின் வாழ காரணிகள் இல்லாததால் அவையும் அழியும். விஷத்திற்கும் உணவிற்கும் உடன்பாடு ஏற்பட்டால், உணவும் விஷமாகும். இறுதியில் எதுவும் எஞ்சாது. எஞ்ச வேண்டுமானால் விஷக்கிருமிகள் அழிக்கப்படவே வேண்டும்.

வாதம் 10: இதனால்தான் எங்கள் மதத்திற்கு அடிமையாய் இருங்கள் என்கிறோம். உங்களை முற்றிலும் அழிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாய் உங்களின் உயிர் சத்தை உறிஞ்சி நாங்களும் வாழ்ந்துகொள்கிறோம், நீங்களும் வாழலாம் என்று பரந்த முடிவை உங்களின்மேல் இரக்கத்தோடு வைக்கிறோம். இதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்?

வைத்தியம்: எலியின் வேதனைக்குரல், பூனைக்கு வீணையின் நாதம். உங்களுக்கு எங்கள் உயிர்சத்தை கொஞ்சம் கொஞ்சமாய் கொடுத்து குற்றுயிரோடு வாழ்வது மரணத்தைவிட அதீத வேதனை தரும் நிகழ்வு. இவ்வேதனை எமக்கும், எம் குழந்தைகளுக்கும் வேண்டாம். மேலும், விஷக்கிருமிகளுக்குள்ளும் தூய விஷக்கிருமிகள், அந்த அளவு தூய்மையற்ற விஷக்கிருமிகள் என்கிற பாகுபாட்டை விஷக்கிருமிகளின் வேதங்களே பரப்புவதால் உங்களுக்குள்ளும் என்றும் வன்முறையும், வேதனையும், நரகமும் நிரந்தரம்.

வாதம் 11: இதைத் தீர்க்க என்ன வழி?

வைத்தியம்: ஒன்றல்ல. இரண்டுண்டு. இரண்டு மட்டுமே உண்டு.

முதல் வழி: தங்கள் மதம் தவிர்த்த மற்ற மதங்களும், வழிபாடுகளும், நம்பிக்கைகளும், ஆன்மீகப் பயிற்சிகளும் இகலோகத்தில் தண்டிக்கப்படவேண்டியவை, அழிக்கப்படவேண்டியவை; பரலோகத்தில் நரகத்தைத் தருபவை என்று இருக்கும் கருத்துக்களை அவர்களது மதப்புத்தகங்களிலிருந்து நீக்கிவிடவேண்டும். அங்கனம் செய்தால் அங்கனம் செய்த மதத்தினர் இந்துக்கோயில்களுக்கு வருவதை அனுமதிக்கலாம்.

இரண்டாம் வழி: முதல்வழி முடியாது என்றால், இந்து மதத்திற்கு மீண்டு வருபவர்களை மட்டும் அனுமதிக்கலாம். ஒரு இந்து எந்த தெய்வத்தையும் வழிபடலாம். எனவே கிருத்துவ இஸ்லாமிய மதங்களிலிருந்து மீண்டு வருபவர்கள் தங்களது விருப்ப தெய்வங்களான ஏசுவையும், அல்லாவையும் வழிபட எந்தத் தடையுமில்லை. அனைத்துத் தெய்வங்களையும் மதிக்கின்ற பண்பு இந்து மதத்திற்கு இருப்பதால் அந்த மதிப்பினை மற்றவர்கள், முக்கியமாக பிற மதத்தவருக்கு அனுமதியில்லை எனும் ஆலய நிர்வாகிகள், தெரிந்துகொள்வதற்கு இந்து மதத்திற்கு மீள்வது ஒரு அத்தாட்சியாய் அமையும்.

வாதம் 11: எல்லாம் இறையே என்பது இந்து மதக் கருத்தாயிருப்பின், எல்லாரையும் அனுமதிக்க வேண்டியதுதானே? மேலும், மரியாதை கொடுப்பவர் மரியாதை கொடுக்கட்டும், பக்தியுள்ளவர் பக்தியோடிருக்கட்டும், மதிக்காதவர்கள் மதிக்காமலேயே இருக்கட்டும். விதி செய்து சட்டத்தின் மூலமாய் மரியாதையை ஏன் தேடவேண்டும்?

வைத்தியம்: "எல்லாம் இறையே" எனும் கருத்தை மதிப்பவரை கோயில்கள் அனுமதிக்கின்றன. எங்கள் கடவுள் தவிர்த்த அனைத்தும் எங்களது நுகர்விற்கு எங்களது கடவுளால் படைக்கப்பட்டன என்பவர் அவரது கருத்தாலேயே இக்கருத்தை எதிர்த்தவர் ஆகிறார். அவர்களும், இந்துக்களும் விலகி இருக்கும்வரை இன்னல்கள் இல்லை. ஆனால், இருவரும் ஒன்றாய் சேரவேண்டும் என வற்புறுத்தினால், அவ்வற்புறுத்தலின் வலியால் மதிப்பவரும், மதிக்காதவரும் ஒன்று சேர்ந்தால் பிரச்சினைகள் வரும் என்பதாலேயே அவற்றைத் தவிர்க்க இவ்விதிகள்.

வாதம் 10: சமத்துவமும், சகோதரத்துவமும் சிறந்தவை என ஒத்துக்கொள்ளப்படும் இக்காலத்தில் மனித சமத்துவத்தை ஏற்றுக்கொள்ளுவது என்ன தவறு?

வைத்தியம் 1: சமத்துவம் என்பது எல்லா பிரிவினருக்கும் மத்தியில் வைக்கப்படவேண்டும். அங்கனம் இல்லாமல் ஒரு பிரிவினர் மட்டும் சமத்துவத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். மற்றையோர் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதை எதிர்ப்பது அவர்களது நம்பிக்கையிலும், உரிமையிலும் தலையிடுவது என்பது ஏற்றுக்கொள்ள இயலாதது.

வைத்தியம் 2: நீங்கள் சமத்துவம் என்று வைப்பது உண்மையில் சமத்துவம்தானா என்பது விவாதத்திற்குரியது. நீங்கள் சமத்துவம் பேசிய இடங்களில் சமத்துவம் இல்லை என்பதும், மிகப்பெரிய வன்முறைகளின்கீழ் மனிதத்தின் வேறுபட்ட பரிணாமங்கள் மறைக்கப்படுகின்றன என்பதும் ஏற்றப்பட்ட விளக்கின்கீழ் வெளித்தெரியும் உண்மை.

வாதம் 11: சமத்துவம் என்பதை ஏற்காத நம்பிக்கைகளை அழிப்பதால் என்ன தவறு?
வைத்தியம்: சமத்துவம் என்பதை ஏற்காமல் இருப்பதுதான் அக்கோயிலின் புனிதத்தை தெய்வ பலத்தை அளிக்கிறது என்று இவ்வமைப்பின் நிர்வாகத்தார் நம்புகிறார்கள். நம்பிக்கைகள் தவறென்றால் அவற்றினை மாற்ற நேர்மறை நடவடிக்கைகளையே நேர்மையாளர் கொள்வர். ஒரு கோட்டை சிறிதாக்க அதைவிட பெரிய கோடு வரைவதே உதவும்.

வாதம் 12: சிறிய கோடு அப்படியே இருக்குமே. அதை அழிக்க வேண்டாமா?

வைத்தியம்: பல பெரிய கோடுகள் சிறிய கோட்டை தானாகவே மக்களின் கண்களிலிருந்து மறைந்துவிடும். கண்களிலிருந்து மறைந்தால் மனத்திலிருந்து மறைந்துவிடும். மனத்திலிருந்து மறைவதே நிரந்தர மறைவு.

வாதம் 13: எதிர்மறைப்போக்கால் என்ன தவறு? சிறிய கோட்டை ஏன் அழிக்கக்கூடாது? சாதி மத வெறியை பரப்பும் இந்த அமைப்புக்களின் முதுகெலும்பை உடைப்பதால் ஜாதிமத வெறியை யும் அழித்துவிடலாமே?

வைத்தியம்: எதிர்மறைப்போக்கால் எதிர்ப்பவை மேலும் உரம்பெறவே வாய்ப்புண்டு. மேலும், இவ்வமைப்புக்கள் குறுகிய மனப்பான்மையோடு இருப்பினும், இக்குறுகிய மனப்பான்மையையும் தாண்டிய, மீறிய ஒரு மிகப்பெரிய சத்தியத்தையே இவை முன்வைக்கின்றன. இந்த சத்தியமே மக்களை இவ்வமைப்புக்களிடம் ஈர்க்கின்றன. இவற்றை அழித்தால் இச்சத்தியத்தை அணுகுவதற்கு மக்களிடம் இருக்கும் வாய்ப்பு பறிபோகும். இந்து மதத்தை அழிப்பதே தங்களது லட்சியம் என்று சொல்லுபவர்கள் இவ்வமைப்புக்களை அழிப்பதன்மூலம், மக்களை இந்த சத்தியத்தின் அணுக்கத்திலிருந்து அகற்ற விரும்புகின்றனர். இந்த அகற்றுதலால் மக்கள் இவர்தம் கொள்கைக்கு வருவார் என்று நம்பி நடக்கின்றனர்.

வாதம் 14: நேர்மறை அணுகுமுறை என்பது கானல் நீரைக்கொண்டு கரும்பு விளைவிக்கலாம் எனும் ஏமாற்றும் வேலை. நேர்மறை என்று ஏதேனும் இருக்கிறதா?

வைத்தியம்: இருக்கிறது. செய்ய வேண்டியது எல்லாம் இதுபோன்ற குறுகிய சாதி மத மனப்பான்மையை ஆதரிக்கிற தலங்களுக்கு மாற்றாக பரந்த மனப்பான்மையை ஆதரிக்கிற தலங்கள் பல்கவேண்டும். அதுவும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. மேல்மருவத்தூர் கோயில் முதல் ராமக்கிருட்டிண, சின்மயா, அம்ருதானந்த, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உள்ளீடாக இன்னும் எத்தனையோ இந்து அமைப்புக்கள் பரந்த தளத்தில் இந்து மத வழிபாட்டுத் தலங்களைப் பல்குகின்றன. அங்கே செல்லும் மக்கள்தொகை சாதி மத உயர்வு தாழ்வு பேசும் தலங்களைவிட மிக மிக அதிகம்.

வாதம் 15: பரந்த மனப்பான்மையுடைய இந்த புனிதத்தலங்கள் இருக்கும்போது, மத வேறுபாடுகள் பார்க்கிற தலங்கள் இருக்க வேண்டிய அவசியம் என்ன?

வைத்தியம்: மனிதம் பல பரிமாணங்களை உடையது. பன்முகத்தன்மையை அனுமதிப்பது என்பது மனிதவளத்தை மகத்தாய் பெருக்கும். இதை எதிர்த்து நடக்கும் அனைத்தும் தீவிரவாதம் மட்டுமே. குருவாயூர் கோயிலில் பிற மதத்தவர்கள் வரக்கூடாது என்பது ஒரு விதி. அதே போல மேல்மருவத்தூர் கோயிலில் யார்வேண்டுமானாலும், எந்த சூழலிலும் அருள்தரும் அன்னையை வணங்கலாம் என்பது விதி. இரண்டு விதிகளுமே மதிக்கப்படுவதுதான் பன்முகத்தன்மையை ஆதரிக்கும் செயல். உன் வழி உனக்கு. என் வழி எனக்கு.

நாளை ஒரு கோயில் கட்டப்பட்டு மீசை உள்ள ஆண்கள் மட்டுமே அங்கு வரவேண்டும் என்று விதித்தால், அதை மீசை இல்லாத ஆண்கள் ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.
அதை விடுத்து மேல்மருவத்தூர் கோயிலில் இந்துக்கள் மட்டும்தான் வரவேண்டும் என்று வற்புறுத்தினாலும், குருவாயூர் கோயிலிலிருக்கும் குழந்தைக்கு செருப்பு அணிவிக்கவேண்டும் என்பவர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தினாலும் அது தவறே.
இந்து மத கோயில்களில் எல்லோரும் வழிபடும் கோயில்கள் உண்டு. இந்துக்கள் மட்டும் வழிபடும் கோயில்கள் உண்டு. ஆண்கள் மட்டும் வழிபடும் கோயில்கள் உண்டு. பெண்கள் மட்டும் வழிபடும் கோயில்கள் உண்டு. தமிழில் மட்டுமே வழிபாடு நடக்கும் கோயில்கள் உண்டு. செம்மொழியில் (ஸமஸ்கிருதம்) வழிபாடு நடக்கும் இடங்களும் உண்டு. இரண்டு முறையிலும் வழிபாடு நடக்கிற தலங்களும் உண்டு. அரவாணிகளுக்கு சிறப்பு மரியாதை கொடுக்கும் கூத்தாண்டவர் கோயில் போன்றவையும் உண்டு. ஒவ்வொரு சாதியும் அவர்களுக்குக் கட்டிக்கொள்ளும் குலதெய்வ கோயில்களும் உண்டு. மற்ற மதத்தவர் இஸ்கான் கோயிலுக்கு வரலாம். ஐயப்பன் கோயிலுக்கு எந்த மதத்து ஆணும் விரதமிருந்து இருமுடி கட்டி வரலாம். மேல்மருவத்தூர் கோயிலுக்கு செவ்வாடை அணிந்து எந்த மதத்தவர் வேண்டுமானாலும் வரலாம். புட்டபர்த்திக்கு வருடம்தோறும் வரும் கிருத்துவரும், இஸ்லாமியரும், கம்யூனிஸ்ட்டுகளும் எண்ணிக்கையிலடங்கார்.
தங்களை அனுமதிக்காத சிவன் கோயில்களை புறங்கையால் ஒதுக்கிவிட்டு ஈழவர் கட்டிய கோயில்களிலும் சிவ நர்த்தனம் நடந்துகொண்டுதானிருக்கிறது. அக்கோயில்களுக்கு அனைத்து பிரிவினரும் சென்று அண்ணலின் அருளை அருந்திக்கொண்டுதானிருக்கிறார்கள்.
காபா எனும் கட்டிடத்திற்குள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை அனுமதிப்பதில்லை என்பதை நாம் எப்படி ஏற்றுக்கொள்கிறோமோ, திராவிடர் கழகத்தில் பார்ப்பனர் உறுப்பினராய் ஆகமுடியாது என்பதை நாம் எங்கனம் ஏற்றுக்கொள்கிறோமோ, கிருத்துவ தேவாலயங்களின் புனித நீரும் அப்பமும் கிருத்துவர்களுக்கு மட்டுமே என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளுகிறோமோ, அதுபோலவே இந்துக் கோயில்களின் விதிகளை ஏற்றுக்கொள்ளுவதும் மாற்று கருத்துக்களை அனுமதிப்பதும் பண்பாடு என்பதை உவப்போடு ஏற்றுக்கொள்ளும் உயர்ந்த செயல்.

அதைவிடுத்து, ஒரு குறிப்பிட்ட ஒற்றைப் பார்வைக்குள் அனைத்தும் பொருந்த வேண்டும் என்பது இயற்கைக்கு எதிரான மனித பன்முகத்தன்மைக்கு எதிரான வன்முறை. இதனால் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் தங்களை செதுக்கிக்கொள்ள இயலாதவர் வன்முறையில் இறங்குவர். வன்முறை பரப்புவர்.

வாதம் 16: குறிப்பிட்ட மடங்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும் சாதி அடிப்படையில் மரியாதை அளிக்கப்படுகிறதே. இது தவறல்லவா?

வைத்தியம்: அந்த மடங்களில் சென்று அவர்களின் செயலுக்கான காரணிகளை ஆராய்ந்தால் அந்த சாதியைச் சேர்ந்தோர் அந்த மடத்திற்கும், வழிபடு தலத்திற்கும் செய்திருக்கிற உழைப்பும், தியாகங்களும் அதீதமாய் இருக்கும். இக்காரணங்களாலேயே இவர்களுக்கு மரியாதை அளிக்கப்படுவதாக உங்களுக்குப் பதிலும் கிடைக்கும். சில மடங்களில் பார்ப்பனர்கள் முக்கியத்துவம் பெறுவதும், தமிழ்நாட்டு ஆதீன மடங்களில் வேளாள சாதியார் மரியாதை பெறுவதும், உயர்சாதி வெறி எதிர்த்துப் புறப்பட்ட நாராயண குருவின் மடங்களில் ஈழவர்களுக்கு மரியாதை அளிக்கப்படுவதும், திராவிடர் கழக மடங்களில் தலித்துகள் பார்ப்பனர்கள் அல்லாத உயர்சாதியார் மரியாதை பெறுவதும் இதன் காரணமாகவே நடைபெறுகின்றன.

ஆயினும், ஒரு மடம் அல்லது வழிபடு தலம் அனைவருக்கும் பொதுவானதாகத் தன்னைக் காட்டிக்கொள்ளுமாயின் அது அனைத்து சாதியாருக்கும் அனைத்து மதத்தாருக்கும் சமமான மரியாதையையே அளிக்கவேண்டும். மனிதரை அவர் பிறந்த சாதி மதம் சாராது அமைப்பிற்கு தரும் பங்களிப்பைப் பொறுத்து மரியாதை செய்யவேண்டும். அத்தகைய சம மரியாதையை இந்து அமைப்புக்களில் ராமகிருட்டிண-விவேகானந்த-சாரதா அமைப்புக்களிலும், சின்மயா அமைப்பிலும், ஆர் எஸ் எஸ் போன்ற இந்துத்துவா அமைப்புக்களிலும், மாதா அம்ருதானந்த மயி, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ரஜனீஷின் ஆசிரமங்களிலும், ஜேகேவை ஏற்றுக்கொள்கிற அமைப்புக்களிலும், ஷிர்டி மற்றும் புட்டப்பர்த்தி சாய்பாபா அமைப்புக்களிலும், ரமண ஆசிரமங்களிலும், வேதாத்திரி மகாரிஷியின் அமைப்பிலும், வள்ளலாரின் சீவ காருண்ய அமைப்பினராலும், இன்னும் நம் பார்வைக்கு வராத அமைப்புக்களாலும் நடந்துகொண்டுதானிருக்கிறது. ஆயினும், இந்த இடங்களிலும் வேறுபடும் விதிகள் உண்டு. இந்த விதிகளை ஏற்பவரே இந்த புனித இடங்களிலும் அனுமதிக்கப்படுகின்றனர்.
வாதம் 16: உலகில் எல்லாரும் எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சென்று என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று இருக்கும் சுதந்திரமான இடங்களே இல்லையா?
வைத்தியம்: முற்றிலும் வெற்றிகரமாக இல்லாவிட்டாலும், ஓரளவு இவற்றை வெற்றிகரமாய் செய்யக்கூடிய இடங்கள் இந்தியாவில் இருக்கின்றன.

வாதம் 17: அட, அவை எந்த இடங்கள்?

வைத்தியம்: இந்தியாவின் அனைத்து இலவச பொது கழிப்பறைகள், மற்றும் சட்டமன்றங்களும் பாராளுமன்றமும்.

ஐயன் காளி
aiyan.kali@gmail.com
http://aiyan-kali.blogspot.com/

No comments: