Wednesday 20 June, 2007

விகடன் திரைப்பட விமர்சனம் - "ஓசாமா"

விகடன் திரைப்பட விமர்சனம் - "ஓசாமா"
Date: 7 June 2007

ஆண் குழந்தைகளுக்குப் பெண் வேஷமிட்டும், பெண் குழந்தைகளுக்கு ஆண் வேஷமிட்டும் அழகு பார்க்கிற வழக்கம் நம்மிடையே உண்டு. இதை ஒரு வேடிக்கையாகவும், சந்தோஷமாகவும்தான் நாம் செய்-வோம். ஆனால், தன் நாட்டில் நிலவும் சூழல் மற்றும் குடும்ப வறுமையினால் ஒரு தாய், தன் பெண் குழந்தைக்கு ஆண் வேஷமிடும் கதைதான் ‘osama!’

ஒரு சிறுவன், சிறிய டப்பாவில் சாம்பிராணிப் புகை போட்டு, எதிரில் வருபவர்களிடம், ‘‘இது உங்கள் துரதிர்ஷ்டத்தைப் போக்கிவிடும். பணம் கொடுங்கள்’’ என்று கேட்-கிறான். ஒரு அம்மாவும் அவளது 12 வயது மகளும் பர்கா அணிந்துகொண்டு வேகமாக நடந்து வருவதைப் பார்க் கிற சிறுவன், அவர்களிடம் காசு வாங்க ஓடுகிறான். ‘‘சில்லறை இல்லை, போ’’ என்கிற அம்மா, தன் மகளைக் கூட்டிக்-கொண்டு வேகமாக நடக்கிறாள்.

அப்போது அங்கு நீல நிற பர்கா அணிந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், ‘‘வேலை வேண்டும்’’ என்று கோஷமிட்டபடி ஊர்வலமாக வர, ஜீப்பில் துப்பாக்கிகளுடன் வரும் தாலிபான் இயக்-கத்தைச் சேர்ந்தவர்கள் சரமாரியாகச் சுடத் துவங்குகிறார்கள். கூட்டத்தைக் கலைக்க, தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கிறார்கள். ஊர்வலம் வந்த பெண்கள் ஓடத் துவங்க, பிடிபட்டவர்களைக் கைது செய்கிறார்கள். சாலையோரம் நின்று இதைப் பார்க்கும் அம்மாவும் மகளும் பயத்துடன் வேகமாக வீட்டுக்குள் ஓடி வந்து கதவை அடைக்கிறார்கள்.

தாலிபான்களின் ஆட்சியில் பெண்கள் வேலைக்குப் போகக் கூடாது. ஆண் துணை யில்லாமல் வெளியில் வரக் கூடாது. இத்தனை கட்டுப்பாடுகளுக்கு இடையே பாட்டி, அம்மா, மகள் எனப் பெண்களே மீதமிருக்கும் அந்தக் குடும்பத்தில் வருமானத்-துக்கு என்ன செய்வது?
பாட்டி, பேத்தியை மடியில் படுக்க-வைத்துக்கொண்டு கண் கலங்குகிறாள். அம்மா அடுப்பு பற்றவைத்துக்கொண்டே, ‘‘கடவுளே! என் கணவனை காபூல் போர்ல பறி கொடுத்தேன். அண்ணன் ரஷ்யா நடத்தின போர்ல இறந்துட்டான். இப்ப நான் என்ன செய்வேன்? இவளா-வது பையனாப் பொறந்திருந்தா, வேலைக்கு அனுப்பலாம். கடவுள் பொண்ணுங்களைப் படைக்காமலே இருந்திருக்கலாம்’’ என்று அழுகிறாள்.

பாட்டி ஆறுதல் சொல்லி, ‘‘உன் பொண்ணுக்கு முடியை ஒட்ட வெட்டி, பேன்ட்டும், குர்தாவும், தொப்பியும் போட்-டுட்டா, பையன் மாதிரியே தெரிவா’’ என்கிறாள்.

‘‘பாட்டி! என்ன சொல்றே? தாலி-பான்கள் பார்த்தா என்னைக் கொன்னுடுவாங்க’’ என்று பதறு கிறாள் சிறுமி, பயத்துடன்.

‘‘அவங்களுக்குச் சந்தேகமே வராது கண்ணு! நீயும் வேலைக்குப் போகலைன்னா நாம மூணு பேரும் பசியாலேயே செத்துரு-வோம்மா’’ என்று பாட்டி சொல்ல, அம்மா தன் கணவனின் பழைய சட்டையை எடுத்து மகளின் அளவுக்கு வெட்டு-கிறாள். குடும்ப நிலையையும், ஊர்வலத்தில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளையும் நினைத்துப் பார்க்கும் சிறுமி, தயக்கத்துடன் வேலைக்குப் போகத் தயாராகிறாள்.

அன்று இரவே, சிறுமியின் பின்னி முடிந்த இரண்டு சடைகளும் கத்தரிக்-கப்பட்டுக் கீழே விழுகின்றன. ஒட்ட வெட்டப்பட்ட தலைமுடி-யோடும், இறந்து-போன அப்பாவின் பழைய சட்டையோடும் பையன் போலத் தூங்குகிறாள் சிறுமி.

விடிந்ததும், அம்மா அவளை எழுப்பும்போது, மகளின் முகத்தில் அம்மாவின் கண்ணீர்த் துளிகள் உதிர்கின்றன. சிறுமி விழித்து எழுந்து, கண்ணாடியில் தெரியும் தன் முகத்தைச் சோகம் ததும்பப் பார்க்-கிறாள்.

பர்கா போட்டுக்கொண்ட அம்மா, பையனைப் போலத் தெரியும் மகளை அழைத்துக்கொண்டு, வேலை தேடிக் கிளம்புகிறாள். கையில் துப்பாக்கி-யோடு ஜீப்பில் ரோந்து வரும் தாலிபான்களைப் பார்த்து பயப்படுகிறாள் சிறுமி. அப்போது யாரோ அவள் தோளைப் பிடித்துத் திருப்ப... பயத்துடன் திரும்புகிறாள். புகை போடும் சிறுவன் அவளைப் பார்த்து, ‘‘யேய்! நீ பொண்ணு-தானே? ஏன் முடியை வெட்டிட்டே? எனக்குப் பணம் கொடு. இல்லேன்னா சொல்லிக் கொடுத்துடுவேன்’’ என்கிறான்.

அவனைச் சமாளித்து, இறந்து-போன தன் கணவனுடன் ராணுவத்-தில் வேலை பார்த்த ஒருவரின் கடைக்கு அம்மாவும் மகளும் வருகிறார்கள். அவரிடம் அம்மா தன் நிலைமையைச் சொல்கிறாள். ‘‘வெளி-யில என்ன நடக்குதுன்னு தெரியாம பொண்-ணுங்க ஏன் இப்படித் தனியா வந்தீங்க?’’ என்கிறார் அவர். ‘‘எங்க--ளுக்கு வேற வழியில்ல... உங்களை-விட்டா யாரும் எனக்குத் தெரியாது. நீங்கதான் உதவணும்’’ என்று சொல்ல, அவர் சிறுமியைத் தன் சிறிய தேநீர்க் கடையில் வேலைக்குச் சேர்த்துக்கொள்ளச் சம்மதிக்கிறார். ‘‘யார் கிட்டேயும் பேசாதே! குரல் காட்டிக் கொடுத்-துடும்’’ என்கிறார்.

அன்று மாலை, வேலை முடிந்து வீட்டுக்கு வரும் வழியில், தாலிபான் ஒருவன் அவளைக் கவனித்து, பின்-தொடர்கிறான். அவள் பயந்து-கொண்டே வேகமாக ஓடுகிறாள். அவளைப் பின்தொடர்ந்து, வீடு வரை வந்து வீட்டுக்கு வெளியில் நிற்கிறான். வீட்டுக்குள் ஓடி வரும் சிறுமி, ‘‘அம்மா! ஒரு தாலிபான் என் பின்னாடியே வர்றான். நான் பொண்ணுங்கிறதை அவன் கண்டுபிடிச்சுட்டான்’’ என்று அழுகிறாள். அம்மா மெதுவாக கதவைத் திறந்து பார்க்கிறாள். அவன் இல்லை.

அன்று இரவு, சிறுமி பயத்துடன் படுத்திருக்கிறாள். பாட்டி கதை சொல்லித் தூங்கவைக்கிறாள். மறு நாள் காலை, கடைக்கு வருகிறான் அந்தத் தாலிபான். ‘‘அவனை அனுப்புங்க’’ என்று கடைக்-காரரிடம் கேட்கிறான். ‘‘பாவம்! அவன் அநாதை. ரொம்ப ஏழை’’ என்று கடைக்காரர் சொல்ல, ‘‘ஏழைன்னா என்ன?’’ என்று சொல்லி, தாலிபான் அவளை அழைத்துப் போகிறான்.
அந்த ஊரிலிருக்கும் சிறுவர்களை எல்லாம் தாலிபான்கள் ஒரு இடத்-துக்கு அழைத்துப் போகிறார்கள். அதில் அவளும் உடன் நடந்து செல்-கிறாள். அந்தச் சிறுவர் கூட்டத்தில் புகை போட்ட சிறுவனும் இருக்-கிறான். அவன் அவளைப் பார்த்ததும் ‘‘எப்படி இருக்கே?’’ என்று கேட்கிறான். அவள், ‘‘நம்மை எங்கே அழைச்சுட்டுப் போறாங்க?’’ என்று கேட்கிறாள்.

‘‘போருக்காக நமக்குப் பயிற்சி கொடுக்-கப்போறாரு பின்லேடன்’’ என்கிறான் அவன்.
ஆயுதம் ஏந்திய தாலிபான்கள் காவலுக்கு இருக்க, பாழடைந்த கோட்டையின் உள்ளே எல்லாச் சிறுவர்களையும் அழைத்துச் செல்-கிறார்கள். எல்லோருக்கும் தலைப் பாகை கட்டிக்கொள்ள வெள்ளைத் துணி தருகிறார்கள். என்ன நடக்குது என்று அவள் புகை போடும் சிறுவ-னிடம் கேட்கிறாள். ‘‘நம்மை எல்லாம் தாலிபான்களாக மாற்ற தலைப்பாகை தருகிறார்கள்’’ என்கிறான். அவளுக்குத் தலைப்பாகையை அவன் கட்டிவிடு-கிறான். ஏறத்தாழ நூறு சிறுவர்கள் இருக்கும் அந்த இடத்தில் எல்லோருக்-கும் குரான் பயிற்றுவிக்கப்-படுகிறது. வகுப்பு முடிந்ததும் எல்லோரும் மகிழ்ச்சியாக விளையாடுகிறார்கள். அவள் மட்டும் சோகமாக இருக்கிறாள். அவளின் செயல்கள், அவளை அங்கு அழைத்து வந்த தாலிபானுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இஸ்லாமிய விதிப்படி உடலைச் சுத்தப்படுத்துவது எப்படி என்று அங்கிருக்கும் சிறுவர்களுக்கு ஒரு முதியவர் வகுப்பெடுக்கிறார். சிறுவர்-கள் எல்லோரும் சட்டை போடாமல் துண்டு கட்டிக்கொண்டு நிற்கி-றார்கள். இதை ஒளிந்திருந்து வேடிக்கை பார்க்கும் அவள், ஒரு கட்டத்தில் வேறு வழி இல்லாமல் தானும் அதில் கலந்துகொண்டு புத்திசாலித்தன-மாகத் தப்பிக்கிறாள். உருவத்தில் ஆணாக இருந்தாலும், அவனது செயல்கள் பெண்ணைப் போல இருப்பதாக அந்த முதியவர் சொல்-கி-றார். குளித்து முடித்து வெளியில் வந்ததும் சில சிறுவர்கள், ‘‘யேய்! இது பொண்ணு... பொண்ணு...’’ என்று சொல்லித் துரத்த, அவள் ஓடுகிறாள். புகை போடும் சிறுவன் அவளருகில் வந்து நிற்கிறான். ‘‘இவன் ஒண்ணும் பொண்ணு இல்ல, பையன்’’ என்கிறான்.
‘‘அப்படின்னா அவன் பேர் என்ன?’’

‘‘ஒசாமா!’’

மறுநாள் காலையில், குரான் வகுப்பு முடிந்து வெளியே வரும்-போது, இவளை சிறுவர்கள் சிலர் கூடி நின்று கேலி செய்கிறார்கள். ‘‘இது பொண்ணு. கையைப் பாரு, பொம்பள மாதிரி இருக்கு. குரலைப் பாரு...’’ என்று அவளைத் தள்ளி-விட்டுக் கேலி செய்ய, புகை போடும் சிறுவன் ஓடி வந்து காப்பாற்றுகிறான். ‘‘இவன் பையன்தான்... வேணும்னா பாருங்க’’ என்று அவளை அருகில் இருக்கும் மரத்தின் மீது ஏறச் சொல்கிறான். முதல் நாள் அவனுடன் அந்த மரத்தில் ஏறியிருந்த பழக்கத்தில் அவள் மரத்தின் மீது ஏறத் துவங்கு கிறாள். மரத்தின் மீது ஏறிய அவள், இறங்கத் தெரியாமல் விழிக்-கிறாள். அழுகிறாள்.

சிறுவர்கள் எல்லாம் கூடி நின்று வேடிக்கை பார்க்க... ஒரு முதியவர் வந்து ‘‘அவனைக் கீழே இறக்குங்க’’ என்கிறார். பயம் தெளிவதற்காக அருகி-லிருக்கும் கிணற்றில் அவளைக் கட்டித் தொங்கவிடுகிறார்கள். மற்ற சிறுவர்கள் குரான் வகுப்பில் இருக்க, அவள் மட்டும் கிணற்றில் தொங்கு-கிறாள். பயத்தில், ‘‘அம்மா... அம்மா...’’ என்று வாய்விட்டு அழுதுகொண்டே இருக்கிறாள். கொஞ்ச நேரம் ஆனதும், அந்த முதியவர், ‘‘போதும்’’ என்று சொல்ல, கயிற்றை இழுத்து அவளை மேலே தூக்குகிறார்கள். அழுது-கொண்டே இருக்கும் அவளது இடுப்பி-லிருக்கும் கட்டுக்களை விடுவிக்கும்போது, அந்த முதியவர் அவளை விநோதமாகப் பார்க்கிறார். அவள் பருவம் அடைந்-திருக்கிற விஷயம் அவருக்குத் தெரிகிறது. மேலோட்டமான சான்று-களைப் பார்த்து, ‘‘இவ பொண்ணு’’ என்று சொல்ல, அவள் அங்கிருந்து ஓடுகிறாள். சிறுவர்கள் துரத்த, ‘‘அவளைக் கைது செய்யுங்கள்’’ என்று ஒருவன் கத்து-கிறான்.
அன்றே சிறையில் அடைக்கப்படு-கிறாள். மறுநாள், ஒரு மைதானத்தில் பொதுமக்கள் கூடியிருக்க... தாலி-பான்-கள் கூடி, குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்குகிறார்கள். பெண்களின் ஊர்வலத்தைப் படம் பிடித்த ஒரு வெளிநாட்டு நிருபருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு, அங்கேயே சுட்டுக் கொல்லப்படுகிறார். இன்னொரு பெண், சாகும் வரை கல்லால் அடித்துக் கொல்லப்படுகி றாள். மூன்றாவதாக, ‘ஆண் வேடமிட்ட சிறுமி’ என்று அவளை அழைக்கிறார்கள். அவள் மதரஸாவில் இருந்த 70 வயதுக்கும் மேற்பட்ட முல்லா ஒருவரின் வேண்டு-கோளுக்-கிணங்க மன்னிக்கப்பட்டு, அவருக்கே அவளைத் திருமணம் செய்துவைப்பதாக அறிவிக்கப்படு-கிறது. அவள் ‘இவர்-கூடப் போக-மாட்டேன். அம்மா -கிட்ட போகணும்’ என்று அழுகிறாள். அதைப் பொருட்-படுத்தாமல், கிழவர் அவளை ஒரு மாட்டு வண்டியில் வைத்து, ஊருக்கு வெளியில் இருக்கும் ஒரு வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.

பூட்டிய அந்த வீட்டைத் திறந்து அவளை உள்ளே அனுப்பிப் பூட்டு-கிறார். அவள் சோகமாக வீட்டுக்குள் நுழைய, உள்ளே குழந்தை-களுடன் இருக்கும் கிழவரின் மூன்று மனைவிகள் அவளைச் சோகமாகப் பார்க்கிறார்கள்.

அன்று மாலை, அவளுக்கு வேறு உடைகள் கொடுக்கப்-படுகின்றன. கிழவரின் மனைவி-கள் அவளுக்கு அலங்கரித்-துக்கொண்டே, தங்களின் சோகக் கதையைச் சொல்கிறார்-கள். ‘‘நாமெல்லாம் அகதிகள். என் அண்ணனைக் கொன்-னுட்டு இந்த முல்லாவுக்குக் கட்டிவெச்சுட்டாங்க’’ என்-கிறாள்.

அன்று இரவு, கிழவர் புது மாப்பிள்ளை போல வருகிறார். அவளைக் கூட்டிக்கொண்டு தன் அறைக்குப் போகிறார். முதலிரவு முடிந்து வெளியே வரும் அவர் வெதுவெதுப்பான நீரில் குளிக்கிறார். இன்னொருபுறம், அவள் அழுது கொண்டே இருக்கி-றாள். அவள் 12 வயதுச் சிறுமியாக ஸ்கிப்பிங் ஆடும் காட்சிகள் தோன்றி மெள்ள மறைய... நெஞ்சை அழுத்தும் சோகப் பாட லுடன் திரையின் மீது எழுத்துக்கள் நகரத் துவங்குகின்றன.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம், நம்மை உறையவைக் கிறது. வெட்டப்பட்ட சடை முடியை அம்மா மகளிடம் கொடுப்பதும், அதை அவள் சிறிய மண் தொட்டியில் வைத்து நீரூற்றுவதும் சோகக் கவிதைகள். வானவில்லின் கீழ் நடந்து சென் றால் ஒரு பெண் ஆணாக மாறுவதாகப் பாட்டி சொல்லும் கதையும், தாலிபான் கள் பீய்ச்சியடிக்கும் நீரில் தோன்றும் வானவில்லின் கீழ் அவள் ஸ்கிப்பிங் ஆடுவதாக வரும் இடங்களும் அவள் பருவத்தின் குதூகலத்தைக் குறியீடாகச் சொல்-பவை.

இந்த ஆப்கானிஸ்தான் நாட்டுப் படம் 2003&ல் வெளியாகி, கோல்டன் குளோப் விருதையும், கேன்ஸ் விருதையும் பெற்றது. திரைக்கதை எழுதி, படத்தொகுப்பு செய்து இதை இயக்கியவர் சித்திக் பர்மக்.

உலகின் எந்த மூலையில் வன்முறை நடந்தாலும் அதில் அதிகம் பாதிக்கப் படுபவர்கள் பெண்கள்தான். பெண் ணின் சம்மதம் இல்லாமல் தாலிபான்கள் தண்டனையாகச் செய்துவைத்த திருமணம் போல, நம் ஊரில் மேள தாளத்துடன் விமரிசையாக நிறை வேற்றப்படும் தண்டனைகள்தான் எத்தனை? இன்றைக்கும் எத்தனை திருமணங்கள் பெண்ணின் விருப்பம் கேட்டுச் செய்யப்படுகின்றன? வாழ்க்கை யின் ஒவ்வொரு நிலையிலும், ‘நான் விரும்பியதை மட்டுமே செய்தேன்!’ என்று எத்தனை பெண்களால் சொல்ல முடியும்? முதல் படம்.. முதல் தர படம்! ஆப்கானிஸ்தானிலுள்ள பஞ்சிர் எனும் இடத்தில் 1962&ல் பிறந்தார் சித்திக் பர்மக். திரைப்படம் மீதிருந்த ஆர்வத்தால், மாஸ்-கோவுக்குப் போய் திரைப்படக் கலையைக் கற்று முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், ஆப்கானில் அரசு திரைப்பட நிறுவனத்தில் மேலாளராக நான்கு வருடங்கள் பணிபுரிந்தார். சில திரைக்கதைகளை யும் குறும்படங்-களையும் எடுத்துள்ள இவர், ஆப்கானில் குழந்தைகளுக் கான கல்வி மையத்தின் இயக்குநராக இருந்தார்.

தாலிபான்கள் அதிகாரத்துக்கு வந்த-தும், இவரது வீட்டில் புகுந்து இவரது 8னீனீ கேமராவையும், படங்களையும் அழித்தனர். எனவே, பாகிஸ்தானுக்கு தப்பித்துப் போய் ஆறு ஆண்டுகள் தங்கி இருந்தார். பின்னர், தன் நாட்டுக்குத் திரும்பி வந்து அவர் எடுத்த முதல் படம் ‘ஒசாமா’.



முகத்தில் அறையும் நிஜம்! ‘‘தேவதைகளாக, தெய்வங்களாகப் பெண்களைக் கொண்டாடுவதான கற்பனைகளை உலவவிடும் இந்த உலகம், உண்மையில் பெண்களை எப்படி நடத்துகிறது என்பதற்கு ஓர் உதாரணம்... ஒசாமா!
பார்வையிலேயே தன் சோகங்கள் அத்தனையும் படம் பிடித்துக் காட்டி விடுகிறாள், அந்தச் சிறுமி! சாம்பி ராணிப் புகை போடும் சிறுவன் முதலில், ‘உன்னைக் காட்டிக் கொடுத்துடுவேன், பணம் கொடு!’ என்று மிரட்டினாலும், பின்பு அவனே அவளைக் காப்பாற்றும் பொருட்டுத் தவிக்கும்போது, சிறுவர்-களின் கள்ளங்கபடற்ற தூய்மையான இதயம் பளிச்சென்று புரிகிறது.
டீக் கடையின் பனிபடர்ந்த கண்ணாடியில், சடையுடன் கூடிய ஒரு சிறுமியின் ஓவியத்தை அந்தச் சிறுமி வரைகிற இடத்தில், நம் கண்களிலும் கண்ணீர் கசிகிறது. 70 வயதான கிழவருக்கு அவள் கட்டிவைக்கப்படும்போது, நாம் உறைந்தே போகிறோம். யதார்த்தமான நிஜம் முகத்தில் அறைகிற படம்... ‘ஒசாமா’!’’
-&நடிகர், இயக்குநர் பொன்வண்ணன்

No comments: