Monday 11 June, 2007

மலர் மன்னன் திண்ணை கட்டுரை -9

Saturday November 4, 2006
சிறுபான்மை, பெரும்பான்மை, மதச்சார்பின்மை என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்...
மலர் மன்னன்
நமது அரசியல் சாசனத்தின் பிரகாரம் தற்சமயம் நம்முடைய தேசத்தின் அதிகார பூர்வமான பெயர் என்ன தெரியுமா? ஆங்கிலத்தில் இந்தியா, ஹிந்தி உள்ளிட்ட பிற பாரதிய மொழிகளில் பாரதம் என்கிற இரு பெயர் விசித்திரம் தவிர நமது அரசியலமைப்பின் இலக்கணத்தை உறுதி செய்யும் பெயரும் உண்டு (காலனி ஆதிக்கங்களிலிருந்து விடுபட்ட நாடுகள் அனைத்துமே தமது பாரம்பரியப் பெயரை திரும்பவும் சூட்டிக்கொண்டு தம் சுய மரியாதையையும் சுய கவுரவத்தையும் மீட்டுக் கொன்டுவிட்டன. நமக்கு மட்டுந்தான் அம்மாதிரியான சொரணை ஏதும் இல்லை).
இறையாண்மை பொருந்திய, மதச் சார்பற்ற, சமதர்ம இந்திய ஜனநாயகக் குடியரசு என்பதே நமது அரசியல் சாசனப்படி இன்று நம் நாட்டின் பெயர்.
1950ல் பாரத தேசம் ஒரு குடியரசாகத் தன்னை அறிவித்துக்கொண்ட சமயம் அதற்கிணங்கத் தான் மேற்கொண்ட அரசியல் சாசனத்தின் பிரகாரம் பாரதத்தின் பெயர் இறையாண்மை படைத்த இந்திய ஜனநாயகக் குடியரசு என்பதுதான். மதச் சார்பின்மை என்பது தனக்குத்தானே விதித்துக்கொண்ட கட்டுப்பாடாக சாசனத்தில் அறிவிக்கப்பட்டதேயன்றி, பெயரிலேயே அதற்கான உத்தரவாதம் ஏதும் சுட்டிக்காட்டப்படவில்லை. அதேபோலத்தான் சமதர்மம் என்கிற வார்த்தைப் பிரயோகமும்.
ஆட்சிப் பொறுப்பை மத்தியிலும் எல்லா மாநிலங்களிலும் ஏற்றிருந்த காங்கிரஸ் கட்சி நேருவிற்குக் கட்சியில் இருந்த அபரிமிதமான செல்வாக்கையொட்டி, அவரது லட்சியமான சோஷலிசத்தைத் தனது கொள்கையாக வரித்துக்கொள்ள நேர்ந்தது. ஐம்பதுகளின் தொடக்கத்தில் காமராஜர் மாநில முதலமைச்சர் பதவியை ஏற்ற பிறகு ஆவடியில் நடைபெற்ற காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில்தான் இக்கொள்கை சிறிது மாற்றத்துடன் அதிகாரபூர்வமான தீர்மானமாக அறிவிக்கப்பட்டது. யோசிக்கும் வேளையில் அந்த மாற்றம் சிறிது நகைப்பிற்கிடமானதுதான்.
சோஷலிசம் என்பதற்குப் பதிலாக சோஷலிச பாணி என்பதுதான் அந்த மாற்றம். காங்கிரசின் பொருளாதாரக் கொள்கை ஏற்கனவே தனியார் துறை பரவலாகவும் அரசினர் துறை கனரகத் தொழில்களுக்கும் நாடளாவிய தன்மைக்கும் ஏற்றதாகவும் என இரண்டு துறைகளும் ஒன்றோடொன்று பொருதிக் கொள்ளாமல் இணைந்து இயங்கத் தக்கதாக அமைந்திருந்தமையால் கட்சியின் மூத்த தலைவர்களின் மனப்போக்கிற்கு இசைவாகவும் அதே சமயம் நேருவின் விருப்பமும் நிறைவேறுமாறும் சோஷலிசம் என்பதற்குப் பதிலாக சோஷலிச பாணி என்ற சொற்பிரயோகம் உருவாக்கப்பட்டு அங்கீகாரம் பெற்றது.
மீண்டும் யோசிக்கும் வேளையில் இந்த சொற்பிரயோகம் மிகவும் அபத்தமானதுதான். பொருளாதார நிபுணர்கள் அதனைக் கேள்வியுற்று வியப்பும் குழப்பமும் அடைந்தனர். மாற்றுக்கட்சியினர் காங்கிரசை கேலியும் கிண்டலும் செய்து மகிழ்ந்தனர். சோஷலிசம் இல்லே, சோஷலிசம் மாதிரின்னா என்ன அர்த்தம்? பொங்கல் இல்லே ஆனா பொங்கல் மாதிரின்னா என்ன அர்த்தம் என்று அந்தக் காலகட்டத்தில் தி மு க பொதுக்கூட்ட மேடைகளில் ஏற்றமும் இறக்கமுமாகப் பேசி தரை மகா ஜனங்களைச் சிரிக்க வைப்பார், நெடுஞ்செழியன். குதிரை இல்லே, குதிரை மாதிரின்னா அது எது என்று மேலும் கேட்டு இன்னும் சிரிக்க வைப்பார்.சோஷலிச பாணி என்பது ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஒரு அரசியல் கட்சியின் பொருளாதாரக் கொள்கைதான். அன்றைய சோவியத் யூனியன் போல் நாடு நிரந்தரமாக ஏற்றுக் கொண்ட கோட்பாடல்ல. எனவே அரசியல் சாசனத்தில் நமது தேசத்தின் பெயரில் அதனைச் சேர்க்க வேண்டும் என்கிற யோசனை நேருவுக்கே கூட உதிக்கவில்லை. இந்திரா காந்தியின் காலத்தில்தான் வெகு ஜனக் கவர்ச்சியைப் பெற வேண்டும் என்பதற்காக சோஷலிசம் என்கிற சொல் போலியாகச் சேர்க்கப்படும் விதத்தில் அரசியல் சாசனம் திருத்தப்பட்டது. முழுமையான சோஷலிசக் கொள்கை தேசத்தின் நிரந்தரமான பொருளாதாரக் கொள்கையாக இல்லாதபோது தேசத்தின் பெயரில் அவ்வாறு ஒரு சொல்லைச் சேர்ப்பது போலிதானே? ஆனால் மக்களவையில் இருந்த என்ணிக்கை பலத்தைக்கொண்டு இவ்வாறு ஒரு போலித்தனம் நமது தேசத்தின் பெயரில் அமையுமாறு அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்துவிட்டார், இந்திரா காந்தி. இது நம் அரசியல் சாசனத்திற்கு ஒரு நிரந்தரத் தன்மை இல்லை என நாமே ஒப்புக்கொள்வது போலாகும். ஆனால் இதைப் பற்றியெல்லாம் யாருக்குக் கவலை?
இன்று பெரிய பெரிய பொதுத் துறை நிறுவனங்களைக்கூடத் தனியார் துறைக்கு விற்றுக் கைகளைக் கழுவிக் கொள்ளும் செயல் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. தாராளமயம், உலகமயம் என்கிற நிர்ப்பந்தங்கள் வந்தாயிற்று. ஆனால் நடப்பு நிலவரத்திற்குச் சிறிதும் பொருந்தாத சோஷலிசம் என்கிற சொல் அரசியல் சாசனப் பிரகாரம் நமது தேசத்தின் பெயரில் ஒட்டிக் கொண்டிருக்கிறது!
இறையாண்மை மிக்க ஜனநாயகக் குடியரசு என்பதுதான் நமது தேசத்திற்கு நிரந்தரமாகப் பொருந்தி வரக்கூடிய, நமது அரசியல் சாசனத்தை உருவாக்கிய நிர்ணய சபை விவாதித்து முடிவு செய்த பெயர். பிற்காலத்தில் அதனோடு கூடுலாகச் சேர்க்கப்பட்ட பெயர்கள் யாவும் ஒரு சிலரின் உள்நோக்கம், சுய லாபம் ஆகிய காரணங்களுக்காகவே சேர்க்கப்பட்டவைதாம்.
சோஷலிசம் என்கிற அபத்தத்தைச் சேர்த்தது போதாதென்று பின்னர் மதச் சார்பற்ற என்கிற பெயரையும் நமது தேசத்தின் அதிகாரப் பூர்வமான பெயரோடு இணையுமாறு அரசியல் சாசனத்தில் வலிந்து ஒரு திருத்தத்தைச் செய்தார்கள். ஆக, இப்போது நமது அரசியல் சாசனம் அறிவிக்கிற பிரகாரம் நம் நாட்டின் அதிகாரப்பூர்வமான பெயர் இறையாண்மை மிக்க மதச்சார்பற்ற சமதர்ம இந்திய ஜன நாயகக் குடியரசு என்பதுதான். அரசியல் சாசனத்திலேயே இவ்வாறு பிரகடனம் செய்துவிட்டால் பிறகு நம் தேசத்தின் ஏற்கப்பட்ட இயல்புத்தன்மையைப் பின்னால் வருகிற எவரும் மாற்றமுடியாது அல்லவா என்று எண்ணலாம். இப்போது நமது பொருளாதாரக் கொள்கை சோஷலிசம் என்ன, சோஷலிச பாணிகூட அல்லதான். பெயரில் மட்டும் சோஷலிசம் இருந்தென்ன லாபம்? அவ்வாறு இருப்பது புரட்டும் ஆகுமல்லவா?
அரசியல் சாசனத்திலேயே வாக்குறுதி அளிக்கப்பட்டு விட்டால் பின்னர் வரும் எவராலும் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை மீற முடியாது என்கிற நம்பிக்கையில்தான் மன்னர் மானியம் வழங்கும் உத்தரவாதத்தை சாசனத்திலேயே நிர்ணய சபையினர் சேர்த்தார்கள். ஆனால் முற்போக்குச் சாயத்தைத் தீற்றிக் கொள்வதற்காக இந்திரா காந்தி அதனை நீக்கி விடவில்லையா? தமது சுய நலத்தை முன்னிட்டு , பாரத தேசத்து அரசாங்கம் தரும் வாக்குறுதிக்கு நம்பகத்தன்மை இல்லை என்கிற அவப்பெயரை அவர் சர்வ தேச அரங்கில் தமது தாயகத்திற்குத் தேடித்தரவில்லையா?
பாரத நாடு இன்று நேற்றல்ல, காலங் காலமாக மதச் சார்பற்ற பெருந்தன்மையினை இயற்கையிலேயே பெற்று வந்துள்ள நிலப் பரப்பு. இங்குள்ள மக்கள் இயல்பாகவே சகிப்புத் தன்மையும் சமரசப் போக்கும் உள்ளவர்கள். தங்களுடையதான எதையும் பிறருக்காக எளிதில் விட்டுக் கொடுத்துவிடக் கூடிõயவர்கள். அதனால் பிறகு வரும் சங்கடங்களையும் பொறுத்துக் கொள்பவர்கள். மதச் சார்பற்ற தன்மை இங்குள்ள மக்களின் ரத்த ஓட்டத்திலேயே இருக்கையில் மதச் சார்பற்ற என்னும் சொல்லை சாசனப் பிரகாரம் நமது தேசத்தின் பெயரில் இணைக்க வேண்டியது அவசியந்தானா?
இன்றைக்கு நமது நாட்டில் சிறுபான்மையினராக இருந்தாலும் தங்கள் எண்ணிக்கையினை அதிவேகமாகப் பெருக்கி வருகிற நம் முகமதிய சகோதரர்கள் இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே பெரும்பான்மைமியினராக ஆகிவிடக்கூடும். அப்போது மக்களவையிலும் மாநிலங்களவையிலும் கூடுதலான இருக்கைகளைப் பெற்றுவிடும் அவர்கள் தங்களது சமயக் கட்டுப்பாட்டிற்கு இணங்க நாட்டின் அரசியலமைப்பை மாற்றிவிடலாகாது என்கிற முன்னெச்சரிக்கையின் காரணமாகத்தான் மதச் சார்பற்ற என்கிற சொற்பிரயோகத்தை சாசனத்தின் வாயிலாகவே உறுதிசெய்துள்ளோம் என்றுகூடச் சொன்னாலும் சொல்வார்கள். ஆனால் இதுபோன்ற சொற்பிரயோகங்களைச் சேர்ப்பது போலவே தூக்கி எறிவதற்கும் எவ்வளவு நேரமாகும்? அதிலும் தீவிர மதாபிமானம் உள்ள நம் முகமதிய சகோதரர்களுக்கு?
மதாபிமானத்தில் நம்முடைய கிறிஸ்தவ சகோதரர்களும் சளைத்தவர்கள் அல்ல. தங்கள் எண்ணிக்கையினைப் பெருக்கிக் கொள்வதில் அவர்களும் போட்டியிட்டு வருகிறார்கள். வர்த்தக நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தைப் பெருக்க இலக்கு நிர்ணயித்துக் கொண்டு வேலை செய்வதைப் போல, ஹிந்துக்களைக் கிறிஸ்தவர்களாக மத மாற்றம் செய்வதில் இலக்கு நிர்ணயம் செய்துகொண்டு கடுமையாக உழைத்து வருகிறார்கள். ஆசியா முழுமைக்கும் சிலுவைக் குறியிடுவதுதான் இந்த நூற்றாண்டுக்கான நமது பணி என்று கத்தோலிக்கர்களின் போப் பகிரங்கமாகவே அறிவித்துவிடவிலையா?
வட கிழக்கு மாநிலங்களில் பல்வேறு சிறு வனவாசி சமூகங்கள் துப்பாக்கி முனையில் கிறிஸ்தவத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றன. கிறிஸ்தவரான மிசோரம் மாநில முதல்வர் பகிரங்கமாகவே வலுக்கட்டாய மதமாற்றத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அருணாசலப் பிரதேச வனவாசிகள் ஹிந்துக்கள் அல்லவாம். எனவே அவர்கள் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்படுவதைக் கண்டிக்க ஹிந்துக்களுக்கு உரிமை இல்லையாம்!
கிறிஸ்தவராக மதமாற்றம் செய்யப்படுவதால் என்ன குடிமுழுகிப் போய்விடும் என்று அப்பாவித்தனமாகக் கேட்பவர்கள் இருக்கிறார்கள்.
வட கிழக்கு மா நிலங்கள் சர்வ தேச எல்லைக் கோடுகள் பலவும் சந்தித்துக்கொள்ளும் பகுதியில் இருப்பவை. எனவேதான் முகமதிய பயங்கர வாதம் பல வடிவங்களில் அவ்வழியே எளிதாக பாரதத்தினுள் வந்து சேரமுடிகிறது. மேலும், எங்கெல்லாம் ஹிந்து சமயத்தினர் எண்ணிக்கையில் குறைவாகவோ, பலவீனப்பட்டோ இருக்கிறார்களோ அங்கெல்லாம் பிரிவினை வாதம் வலுப்பெறுவதும், நாடு பிளவுண்டு போவதும் சாத்தியமாகியுள்ளது.
கிறிஸ்தவ அமைப்புகளுக்கும் தீவிரவாத மார்க்சிய அமைப்புகளுக்குமிடையே நிகழ்ந்துள்ள விசித்திரமான பொருந்தாத் திருமணமும் பாரதத்தில் நக்சலைட் வன்முறையைப் பரவலாக்கியுள்ளது. ஏசு கிறிஸ்து ஏழைப் பங்காளர்; ஆகவே நாங்கள் உங்கள் பக்கம் என்று சொல்லிக்கொண்டு வனவாசிகளையும் தலித்துகளையும் வன்முறை நடவடிக்கைகளில் இறங்க இவை தூண்டுகின்றன.
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மக்கள் மீது சர்ச்சின் பிடி தளர்ந்துபோய் விட்டதால் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலுமே தங்கள் அதிகாரம் செல்லுபடியாகும் எனப் புரிந்துகொண்டு இவ்விரு நிலப்பரப்புக:ளிலும் தங்களை ஸ்திரப்படுத்திக்கொள்வதில் மிகவும் தீவிரமாக உள்ளன, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த கிறிஸ்தவ பீடங்கள்.
மேலும், மேற்கத்திய ஏகாதிபத்தியம், மேற்கத்திய கலாசார மேலாதிக்கம் ஆகியவற்றின் நீடிப்புக்குத் துணை நிற்கும் அமைப்ப்புகளுள் கிறிஸ்தவ சர்ச்சுகள் முக்கிய பங்கு வகிப்பவை என்பது தெரிந்த செய்திதான். காலனி ஆதிக்க முறை தகர்ந்துவிட்ட நிலையில் தங்கள் பிடியை வளரும் நாடுகள் மீது தொடர்ந்து இறுக்கமாக வைத்திருக்க மேற்கத்திய வல்லரசுகள் கிறிஸ்தவ சர்ச்சுகளைத்தான் நம்பியுள்ளன. ஆகவே பாரதம் நெடுகிலும் இன்று முழு மூச்சில் நடை பெற்று வரும் கிறிஸ்தவ மத மாற்றம் ஆன்மிகம் அல்ல, முற்றிலும் அரசியலே என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.
பாரதத்தின் மக்கள் தொகையில் தாம் பெரும்பன்மையினராவதன் மூலம் பாரத தேசத்தைத் தன்வயப்படுத்திக்கொள்வதில் இன்று கிறிஸ்தவ, முகமதிய அமைப்புகளுக்கிடையே திரை மறைவில் பெரும் போட்டியே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களா தேஷ் ஆகியவறிலிருந்து மனித இறக்குமதி பெருமளவில் தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது. போதாக்குறைக்கு பிள்ளைப் பேறு என்கிற இயற்கையான எளிய வழியிலும் முகமதியரின் மக்கள் தொகைப் பெருக்கம் மும்முரமாக நடந்து வருகிறது. எங்கள் மதத்தில் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு அனுமதியில்லை என்று இதற்கு சாக்கும் சொல்லப்படுகிறது! நம்முடைய மதச்சார்பற்ற அரசும் தேச நலனைவிடச் சிறுபான்மையினரின் மத நம்பிக்கையினைப் பாதுகாப்பதுதான் முக்கியம் என்று குடும்ப நலப் பிரசாரத்தினை முகமதியர் மத்தியில் அடக்கி வாசிக்கிறது!
நமது மத்திய மாநில அரசுகளுக்கு உண்மையிலேயே நாட்டு நலனில் அக்கரை இருக்குமானால் ரோமன் கத்தோலிக்கர், முகமதியர் சமூகங்களில்தான் அதி தீவிர குடும்பக் கட்டுப்பாடு பிரசாரத்தைச் செய்யவேண்டும். ஆனால், குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதில் எவ்வித ஆட்சேபமும் இல்லாத ஹிந்துக்களிடையேதான் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரம் முழு வேகத்தில் நடைபெறுகிறது! யோசிக்கும் வேளையில் இது மிகுந்த பொருள் விரையமும் பொழுது விரையமும்தான் அல்லவா?
ஆக, ஹிந்துக்கள் பாரதத்தில் பெரும்பான்மையினராக இருக்கும்வரையில் மட்டுமே சாசனத்தின் பிரகாரம் அறிவிக்கப்பட்டுள்ள, தன் பெயரில் இருந்தாலும்இல்லாவிடினும் மதச் சார்பற்ற தன்மை பாரதத்தில் இயல்பாக இருந்துகொண்டிருக்கும். பிற மதத்தவர் தங்கள் மதத்தின் பெயராலேயே அரசியல் கட்சிகளை நடத்திக்கொண்டு, போலி மதச் சார்பின்மை பேசிவரும் கட்சிகளுடன் பேரம் பேசி மக்களவை, மாநிலங்களவை, மாநில சட்ட மன்றங்கள் முதலான மக்கள் பிரதிநிதித்துவ சபைகளில் இடங்களைப் பெறுவது ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக இருக்கிறவரைதான் சாத்தியமாகும். எந்த அடிப்படையில் இதைச் சொல்கிறேன் என்றால், கடந்த கால நிலவரம்பற்றி நன்கு அறிந்திருப்பதால்தான்.
பாகிஸ்தான் என்கிற தனி நாடு உருவாவதற்கு முன்பு, ஹிந்துஸ்தானமாக இருந்த அப்பகுதிகளில் காங்கிரஸ் மகாசபையும், ஹிந்து மகாசபையும் தமது கிளைகளின் மூலம் இயங்கி வந்தன. ஏன் ஆர் எஸ் எஸ் பேரியக்கம் கூடத் தனது ஷாகாக்களை அங்கெல்லாம் பெற்றிருந்தது. ஆனால் இன்று பாகிஸ்தானில் காங்கிரஸ் மகாசபை இல்லை. எனினும் பாகிஸ்தான் பிரிவினையை வற்புறுத்தி நேரடி நடவடிக்கை என்கிற பெயரில்பாரத தேசம் முழுவதும் மதக் கலவரத்தில் இறங்கி, ஹிந்துக்களைப் படுகொலை செய்தும், ஹிந்துக்களின் உடமைகளைச் சூறையாடியும், ஹிந்து பெண்டிர் மீது பாலியல் வன்முறைகளைப் பிரயோகித்தும் வெறியாட்டம் போட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகும் பாரதம் முழுவதும் கிளை பரப்பித் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது! ஆட்சியில் பங்குகூட அதனால் பெற முடிந்துள்ளது!
பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகான தொடக்க ஆன்டுகளில் பாரதத்தின் வட மாநிலங்களில் முஸ்லிம் லீக் முடங்கிப் போயிற்று. அதன் கிளைகள் கலைக்கப்பட்டு, அதன் முக்கிய உறுப்பினர்கள் காங்கிரசில் ஊடுருவினார்கள், பிற்காலத்தில் கம்யூனிஸ்டுகள் ஊடுருவியதுபோல! வடக்கே சொற்ப காலத்திற்கு முஸ்லிம் லீக் செயலற்றுக் கிடந்தது. தென் கோடியில் கேரளத்தில் மாப்பிள்ளமார் அதிக எண்ணிக்கையில் இருந்த காரணத்தால் அங்கு அது தனது காலை ஊன்றிக்கொண்டது. இதன் விளைவாகத்தான் இங்கேயிருந்த இஸ்மாயில் சாகிப் அதன் அகில பாரதத் தலைவராகவும் ஆக முடிந்தது. சென்னை பல்லாவரத்தில் இருந்துகொண்டு, மாப்பிள்ளமார் கூடுதலாக உள்ள மலபார் பகுதி தொகுதியொன்றில் முஸ்லிம் லீக் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்று, மக்களவையில் இடம் பெறவும் அவரால் முடிந்தது.
முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு அமைந்த மக்களவையில், பாகிஸ்தான் பிரிவினையை வலியுறுத்திய முஸ்லிம் லீக் பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகும் பாரதத்தில் நீடிக்க வேண்டிய அவசியம் என்ன என்கிற நியாயமான கேள்வி எழுந்தது. அப்போது, பிரதமரான பண்டித ஜவாஹர்லால் நேரு முந்திக் கொண்டு, இப்போதுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரிவினைக்கு முன்பு இருந்த முஸ்லிம் லீக் அல்ல, இங்குள்ள முஸ்லிம்களின் நலன் கருதும் சுத்த சுயம்பிரகாசமான புதிய அவதாரமெடுத்த முஸ்லிம் லீக் என்று சமாதானம் சொன்னார். உடனே இஸ்மாயில் சாகிப் எழுந்து நேருவின் முகத்தில் அறைகிற மாதிரி, இல்லையில்லை, எங்களுடையது பிரிவினைக்கு முந்தைய இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அறுபடாத தொடர்ச்சிதான்; எங்கள் பாரம்பரியத்தை இழக்க நாங்கள் விரும்பவில்லை என்று அறிவித்தார். பிரதமர் நேருஜி தம் முகத்தில் வழிந்த அசடைத் துடைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று!
பாரத தேசத்து மக்களுக்கு இயல்பாகவே அமைந்த சகிப்புத்தன்மையாலும் சமரச மனப்பான்மையினாலும் பிரிவினை கோரிய முஸ்லிம் லீக் பிரிவினைக்குப் பிறகும் பாரதத்தில் நீடிக்க முடிகிறது. பிரிவினை கோரிய அதே முஸ்லிம் லீகின் தொடர்ச்சிதான் நாங்கள் என்று அதன் தலைவர் மக்களவையிலேயே பகிரங்கமாக அறிவிக்கவும் முடிந்தது.ஆனால் பாகிஸ்தானிலோ மதச் சார்பற்ற காங்கிரஸ் மகாசபை பிரிவினைக்குச் சிறிது முன்பே கடையைக் கட்ட வேண்டியதாயிற்று!
பிரிவினைக்குப் பிறகான தொடக்க ஆண்டுகளில் வட பாரத மாநிலங்களில் செயல்படத் தயங்கிய முஸ்லிம்லீக், பாரத நாட்டவரின் பெருந்தன்மை, சகிப்புத்தன்மை ஆகியவற்றைத் தனக்குச் சாதகமாகப் பயன் படுத்திக்கொண்டு, வெகு விரைவிலேயே விறுவிறுப்பாக இயங்கத் தொடங்கிவிட்டது. மதச் சார்பின்மை பேசும் பாரதத்து அரசியல் கட்சிகள் உண்மையில் வாக்கு வங்கி தேடி அலையும் பதவி மோகிகளே என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கேற்பக் காய் நகர்த்தவும் இப்போது அதனால் முடிகிறது!
இதேபோலதான் நிஜாமின் ஹைதராபாத் சமஸ்தானத்தில் ரஜாக்கர் என்கிற குண்டர் படை தனிக் கட்சி நடத்திக்கொன்டு, பாரதத்திற்கு எதிராகவும் ஹிந்துக்களை வதைத்துக் கொண்டும் இயங்கி வந்தது. முகமதியர் ஆளுகையில் உள்ள ஹைதராபாத் சமஸ்தானம் பாகிஸ்தானோடு இணைய வேண்டும் என்று வற்புறுத்தி ரகளை செய்தது. அந்தக் கட்சி இன்றும் ஹைதராபாதில் நீடிக்கிறது; தேர்தல்களின்போது முகமதியர் மிகுதியாக உள்ள தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றியும் பெறுகிறது!
பாரதத்தில் மட்டுமே இதுபோன்ற தனது தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளும் விசித்திரம் சாத்தியமாகும். அதிலும், ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ளவரையில் மட்டுமே இந்த அபத்தம் சாத்தியமாகும்.
எல்லா ஜனநாயக நாடுகளிலும் மொழிச் சிறுபான்மையினர், சமயச் சிறுபான்மையினர், பண்பாட்டுச் சிறுபான்மையினர் ஆகியோருக்கு ஏட்டளவிலேனும் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பது உள்ளதுதான். ஆனால் பாரத்ததில் மட்டுமே சிறுபான்மையினருக்கு தனிக்காட்டு ராஜாக்களாக உலாவரும் அளவுக்கு விசேஷச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன!
இன்று பாரதத்தில் அரசுக்கு அடுத்தபடியாக பிரதான இடங்களில் அதிக அளவு நிலங்களைச் சொந்தமாக்கி, ஆண்டு அனுபவித்து வருபவை கிறிஸ்தவ சர்ச்சுகளும் கிறிஸ்தவ அமைப்புகளும்தாம். ஆங்கிலேய, போர்ச்சுகீசிய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்கள் பாரதத்தில் நிலவிய காலத்திலிருந்தே கிறிஸ்தவ சர்ச்சுகளும் அமைப்புகளும் பெற்ற சலுகை, அந்த ஏகாதிபத்தியங்கள் அகன்ற பிறகும் நீடிக்கிறது, சிறுபான்மையினர் உரிமைக்குப் பாதுகாப்பு என்கிற பெயரில்!
அண்மைக்காலமாக முகமதிய அமைப்புகளும் கிறிஸ்தவ அமைப்புகளுடன் போட்டிபோட்டுக் கொண்டு தங்களது உடைமைகளைப் பெருக்கி வருகின்றன, முகமதிய நாடுகளிடமிருந்து பெறும் கணக்குக் காட்ட வேண்டிய அவசியமில்லாத நன்கொடைகளின் வாயிலாக!
யோசிக்கும் வேளையில் நம் நாட்டைப் பொருத்தவரை இந்த சிறுபான்மை, பெரும்பான்மை வரையறை எவ்வளவு அபத்தமாக உள்ளது என்பது தெரியவரும்.
ஜம்முகாஷ்மீர் மா நிலத்தில் ஹிந்துக்கள் சிறுபான்மையினர். எனவே நமது அரசியல் சாசனம் அளித்துள்ள உத்தரவாதத்தின் பிரகாரம் அவர்களுக்கு சிறுபான்மையினருக்கான விசேஷச் சலுகைகள் தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் சலுகைகள் பெறுவதற்கு மாறாக, வீடு, வாசல், மாடு மனை எல்லாம் இழந்தது மட்டுமின்றி மானம், மரியாதையும் அழிந்து, அகதிகளாக அடித்து விரட்டப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் வீடு வாசல்களை காஷ்மீர் விடுதலைப் படை இயக்கத்தினரும், வன்முறையைக் கைவிட்டு விட்டதாகச் சரணடைந்தவர்களும் ஆக்கிரமித்துக்கொண்டு அனுபவித்து வருகிறார்கள். இதைக் கேட்பார் எவரும் இல்லை!
பாரதத்தின் வட கிழக்கு மாநிலங்களில் பெரும்பான்மையினராக இருப்போர் கிறிஸ்தவர்கள். ஆனால் அவர்கள் சிறுபான்மையினருக்கான விசேஷச் சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள்! சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மதமாற்ற நிர்பந்தங்களுக்கு ஆளாகி வருகிறார்கள்!
கேரளத்தில் முகமதியர் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில்பெரும்பான்மையினராகிவிட்டதால் அவர்களுக்கென்று அங்கு ஒரு தனி மாவட்டமே உருவக்கித் தரப்பட்டது, மலப்புரம் என்பதாக! சிறுபான்மையினர் பெரும்பான்மையினரானதற்கான சலுகை அது! அங்கு ஒரு குட்டி பாகிஸ்தானே காலப்போக்கில் உண்டாகிவிட்டது! கேரளத்தில் பெரும்பான்மையினராகப் போவது நீங்களா, நாங்களா என்று கிறிஸ்தவருக்கும் முகமதியருக்குமிடையே இன்று போட்டா போட்டி நடந்துகொண்டிருக்கிறது. ஒட்டு மொத்தமாகப் பார்க்கிற போது ஹிந்துக்கள் ஓரளவு பெரும்பான்மையினராக இருந்தாலும், பகுதி பகுதியாகப் பார்க்கிற பொழுது பல இடங்களில் சிறுபான்மையினராகத்தான் உள்ளனர். முகமதியர், கிறிஸ்தவர் இருவரையும் சேர்த்து ஒப்பிட்டுப்பார்க்கையில் ஹிந்துக்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகக் கானப்படுகின்றனர், பல பகுதிகளில். ஆனால் சிறுபான்மையினருக்குரிய சலுகைகள் எதையும் அவர்கள் கோர முடியாது!
பாரத தேசம் முழுவதையும் ஒட்டு மொத்தமாகக் கணக்கில் எடுத்து ஹிந்துக்களைப் பெரும்பான்மையினராகவும், முகமதியர், கிறிஸ்தவர் ஆகியோரைச் சிறுபான்மையினராகவும் அங்கீகரிப்பதால் ஹிந்துக்களுக்கு ஏற்பட்டு வரும் இழப்பு இது! முகமதியரோ கிறிஸ்தவரோ பாரதத்தில் ஒட்டு மொத்தமாகப் பெரும்பான்மையினராகும்போதாவது ஹிந்துக்களுக்கு இப்போது முகமதியருக்கும் கிறிஸ்தவருக்கும் உள்ள சிறப்புச் சலுகைகள் கிட்டுமா என்றால் நமது கடந்த கால நிகழ்வுகளின் அனுபவம் அதற்குச் சாதகமாக இல்லை!
யோசிக்கும் வேளையில் ஒரு தேசத்தின் மக்களைச் சிறுபான்மையினர் என்றும் பெரும்பான்மையினர் என்றும் பிரித்து வைப்பது அபத்தமும் மக்களிடையே தேவையின்றி மன மாச்சரியங்களைத் தூண்டுவதுமாகும். தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு சமயத்தினர் சிறுபான்மையினராகவோ பெரும்பான்மையினராகவோ இருப்பதால் இந்தப் பெரும்பான்மைசிறுபான்மை அளவுகோல் வெறும் மாயையே. பெரும்பான்மை, சிறுபான்மை என்கிற பாகுபாடு ஏதுமின்றிப் பொதுவாக அனைவருக்கும் வழிபாட்டு உரிமை, அவரவர் மொழி மற்றும் பண்பாட்டைக் காத்துக்கொள்ளும் உரிமை ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிப்பதுதான் தேச நலனுக்கு உகந்ததாக இருக்கும். நமது நாடு ரத்தக் களறிக்கிடையே துண்டாடப்பட்டதால் அச்சமயத்தில் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டுள்ள நிலையில் ஹிந்துக்கள் இருந்தனர். எனவேதான் அந்தச் சமயத்தில் அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் சிறுபான்மையினருக்கு நம்பிக்கையும் , அச்சமின்மையும் இருக்கவேண்டும் என்பதற்காகச் சாசனத்தில் பல விசேஷச் சலுகைகளைச் சிறுபான்மையினருக்கு உறுதியளித்தனர். அச்சமயம், அரசியல் நிர்ணய சபையில் அங்கம் வகித்த சில முகமதிய உறுப்பினர்களே கூட, எங்களைத் தனிமைப்படுத்திவிடாதீர்கள், அதன் விளைவாக எங்கள் மீது நிரந்தரமாக வெறுப்பு நீடிக்க இடந்தராதீர்கள் என்று சொல்லி, இட ஒதுக்கீடு போன்ற சலுகைகள் தேவையில்லை என்று வலியுறுத்தியதுண்டு! எனவே இன்றைய நிலையை கவனத்தில்கொண்டு, மக்களைப் பெரும்பான்மை, சிறுபான்மை என்று அரசே பிரித்துவைத்து மக்களிடையே பிளவு மனப்பான்மையை வளர்க்காமல் இருப்பதுதான் புத்திசாலித்தனமாகும். தேசத்தின் ஒற்றுமையினையும் இறையாண்மையையும் பாதுகாக்கும் ஓர் அரசின் எண்ணப்போக்கு இவ்வாறுதான் இருக்க முடியும்!
+++
malarmannan79@rediffmail.com

No comments: